Wednesday, February 20, 2008

அந்நியன், ஜெமோ, அம்பி




தமிழச்சி விவகாரம் தொடங்கி ஜெயமோகன் பிரச்சினை வரை என் கருத்து என்ன என்று எழுதுமாறு அவ்வப்போது சிலநண்பர்கள் சொல்லிவருகிறார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்லி 'கருத்து கந்தசாமியாக' விரும்பாததால் அதைக் கொஞ்சநாட்கள் தவிர்த்துவந்தேன். ஆனால், சமீபத்தில் நண்பர் பைத்தியக்காரன் ஜெமோ பற்றி எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் போட்டதாக நினைத்திருந்தேன். ஆனால் போட மறந்துவிட்டேன் போல. அதனால் சில 'கருத்துக்கள்'.

பைத்தியக்காரனின் பதிவில் நண்பர் ஜ்யோராம்சுந்தர் போட்டிருந்த பின்னூட்டம் இது.

'ஒரு விஷயத்தில் சிறு பத்திரிகை - பெரும் பத்திரிகை வித்தியாசம் அழிந்து வருவது தெரிகிறது '

ஆனால் சுந்தரின் இந்தக் கருத்தை நான் வன்மையாக மறுக்கிறேன். உண்மையில் அந்த வாக்கியம் இப்படி அமைந்திருக்க வேண்டும்.

'ஒரு சில விசயங்களைத் தவிர சிறுபத்திரிகை - பெரும் பத்திரிகை வித்தியாசம் அழிந்துவருகிறது'.

இப்போது சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை என்பதற்கான கோடு அழிந்துகொண்டே வருகிறது. இதுபற்றி விரிவாக எழுதலாமென்றாலும் அயர்ச்சியாக இருக்கிறது. சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

பத்து வருடங்களுக்கு முன்பு வெகுஜன இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தவர்கள் எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திராசவுந்திரராஜன், புஷ்பாதங்கதுரை ..... (இந்த வரிசையில் சுஜாதாவைச் சேர்க்கமுடியாது. அவர் மத்தியதர வர்க்கத்து அசமஞ்சிகள், 'மிதவாத' சிறுபத்திரிகையாளர்கள், சயன்ஸ்பிக்சன் ரசிகர்கள் என்று பலதரப்பு வாசகர் வட்டத்தைக் கொண்டவர்.மேலும் இப்போதும் சிறுபத்திரிகைக்காரர்களைத் தாண்டித் தாக்குப்பிடித்திருப்பவர் ரமணிசந்திரன். சுவாரசியமான விசயம். ரமணி தன் படைப்புகளில் இயன்றவரை தனித்தமிழைப் பின்பற்றுவது.)

ஆனால் இப்போது குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் ராஜேஷ்குமார்களை ஜெயமோகன்களும் எஸ்.ராமகிருஷ்ணன்களும் இடம்பெயர்த்துவிட்டனர். இப்போது வெகுஜன இதழ்களின் வாசகர்கள் ஜெமோ வகையறாக்களின் படைப்புகளைப் படிக்கும் மனோநிலைக்குத் தயாரானவர்கள், அல்லது அவர்களின் மனோநிலைக்கு ஏற்ப எழுத்தாளர்களின் படைப்புகள் மாறிவிட்டன.

மேலும் ஆயிரக்கணக்கான நாவல்கள் எழுதியிருக்கும் ராஜேஸ்குமார், (10000 நாவல்கள் என்று நினைவு), ஒரு கவுன்சிலர் தேர்தலில் நின்று கூட அதிகாரத்தைச் சுவைத்தவரில்லை.

ஆனால் சிறுபத்திரிகை எழுத்தாளர்களில் இப்போது ஒருவர் எம்.எல்.ஏ, ஒருவர் எம்.பி, ஒருவர் சட்டமன்றத்க்தேர்தலில் நின்று தோற்றுபோனவர், இன்னொருவரின் பெயர் ராஜ்யசபா எம்.பிக்கான பட்டியலில் பரிந்துரையில் உள்ளது. அப்படியானால் அதிகாரமய்யங்கள் என்பவை எது, அல்லது யார்?

மேலும் ஜெமோ தன் எழுத்து பலரையும் பகிடி செய்வதாகக் குறிப்பிடுகிறார். யாராவது சௌகார்ஜானகி தமிழின் சிறந்த நகைச்சுவைநடிகை என்று சொன்னால் சொல்பவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? எப்படியோ, ஜெமோ தனது ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குப்பைகளை பின்நவீனத்துவ நாவல்கள் என்று நம்பி பேசி வருவதைப்போல, தான் செய்வது பகிடி என்று நம்பும் உரிமை அவருக்கு உண்டு.

(ஜெமோகன் வலையை நான் படிப்பதில்லை. ஆனல் அவர் வலையில் எழுதவந்தது சுற்றுச்சூழலை நேசிப்பவன் என்றவகையில் மகிழ்ச்சியே. எத்தனைக் காகிதங்கள், குப்பைகள், மரங்கள் தப்பித்தன?)


ஆனால் உண்மையில் ஜெமோவின் காமெடியான விசயம் ஒன்றுண்டென்றால் அது 'விகடன் என்னை அவதூறு செய்கிறது' என்பதுதான். ஏனெனில், 'அவதூறு' என்னும் வார்த்தையைப் பயன்படுத்த ஜெமோவிற்கு அருகதையே கிடையாது. நொண்டிநாய், பின் தொடரும்நிழலின் குரல், தொடங்கிப் பல உதாரணங்கள் நினைவில் வருகின்றன.

ஆனால் அவதூறு, அவதூறு என்று கூச்சல் போடும் சிறுபத்திரிகைக்காரர்களைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அவதூறு செய்வதற்காகவே நடத்தப்படும் பத்திரிகை தினமலர். அதனோடு எந்த கூச்சநாச்சமுமில்லாமல், உறவு வைத்துக்கொள்ளும் இவர்களை எதாலடிப்பது?

இறுதியாக தோழர்.நாகார்ஜுனன் குறித்தும் ஜெமோ கீழ்த்தரமாக எழுதியிருந்ததாக நண்பர்கள் கூறினார்கள். நாகார்ஜுனன் ஏதோ சினிமா வசனம் எழுதிக்கொண்டிருந்தவர் அல்ல, காத்திரமான சிந்தனைகளை அறிமுகப்படுத்தியர் மட்டுமல்லாது அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் நேரடியாகக் களத்திலிறங்கிப் போராடியவரும்கூட.


ஷகீலா படங்களீல் உள்ளொளித் தரிசனங்களைத் தேடும் ஜெயமோகனுக்கு இது புரிய நியாயமில்லை. அவரை 'அம்பி' என்று கிண்டல் செய்திருக்கிறார். ஆனால் விகடனுக்கு எதிராக வந்த முதல்குரலும் நாகார்ஜுனனுடையது. இந்த ஜனநாயக உணர்விற்காக நாகார்ஜுனனுக்குத் தலைவணங்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ஜெமோ வெட்கப்படவாவது கற்றுக்கொள்ளவேண்டும்.

சில குறிப்புகள்

1. ஜெயமோகன் தன்னைப் பற்றி எழுதியிருப்பதை மறுத்து சாரு 20 பக்கங்களுக்கு மேற்பட்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால் போலிடோண்டு பிரச்சினை பற்றியும் சாரு குறிபிட்டு எழுதியிருப்பது. ஜெயமோகனைத் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியுமோ அந்தளவிற்கு போலிடோண்டுவையும் தெரியும்போல.

2. புத்தாண்டையையொட்டி விஜய் டிவியில் நடைபெற்ற 'நீயா நானா' நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், சிறுபத்திரிகைக்காரர்கள் எவ்வளவு தன்முனைப்புக்காரர்கள் மற்றும், அந்தர் பல்டி அடிப்பவர்களென்று. உதாராங்கள்: சாருவின் புத்தாண்டு சபதம், ஞாநியின் பகுத்தறிவு ஆவேசம், ரவிக்குமார் சொன்ன '2006ன் மனதைப் பாதித்த நிகழ்ச்சி'. அந்நிகழ்ச்சிக்கு சில சினிமாக்காரர்களும் வந்திருந்தார்கள். உண்மையில் அவர்கள் இயல்பாக இருந்தார்கள்.

12 comments:

குசும்பன் said...

'ஒரு விஷயத்தில் சிறு பத்திரிகை - பெரும் பத்திரிகை வித்தியாசம் அழிந்து வருவது தெரிகிறது '

பெரும் பத்திரிக்கையில் பல பக்கங்களை கிழித்துவிட்டால் அதுவும் சிறு பத்திரிகை ஆகிவிட போகிறது அதைவிட்டு ஏன் இந்த சண்டை:)

ஒன்னியும் புரியமாட்டேங்குது ஏன் சண்டை போட்டுகிறாங்கன்னு!!!

****************************

//ஜெயமோகனைத் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியுமோ அந்தளவிற்கு போலிடோண்டுவையும் தெரியும்போல.//

மன்னிக்கவும் ஜெயமோகனை விட போலி டோண்டு அதிகம் பேருக்கு தெரியும். எனக்கு சத்தியமாக ஜெயமோகனை பற்றி இந்த சண்டைகளுக்கு முன்பு ஒன்னும் தெரியாது, ஜெயகாந்தன் தான் தெரியும்.

Ken said...

ஜெமோ தன் எழுத்து பலரையும் பகிடி செய்வதாகக் குறிப்பிடுகிறார். யாராவது சௌகார்ஜானகி தமிழின் சிறந்த நகைச்சுவைநடிகை என்று சொன்னால் சொல்பவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? எப்படியோ, ஜெமோ தனது ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குப்பைகளை பின்நவீனத்துவ நாவல்கள் என்று நம்பி பேசி வருவதைப்போல, தான் செய்வது பகிடி என்று நம்பும் உரிமை அவருக்கு உண்டு.

(ஜெமோகன் வலையை நான் படிப்பதில்லை. ஆனல் அவர் வலையில் எழுதவந்தது சுற்றுச்சூழலை நேசிப்பவன் என்றவகையில் மகிழ்ச்சியே. எத்தனைக் காகிதங்கள், குப்பைகள், மரங்கள் தப்பித்தன?)

:)))))))))))))))))))))))))

பிரேம்ஜி said...

//ஆனால் உண்மையில் ஜெமோவின் காமெடியான விசயம் ஒன்றுண்டென்றால் அது 'விகடன் என்னை அவதூறு செய்கிறது' என்பதுதான். ஏனெனில், 'அவதூறு' என்னும் வார்த்தையைப் பயன்படுத்த ஜெமோவிற்கு அருகதையே கிடையாது//

சரியான அடி

மு. சுந்தரமூர்த்தி said...

அங்கதம்/நகைச்சுவை/பகடின்ற பேர்ல ஜெயமோகன் போட்ற மொக்கையைவே தாங்க முடியல. இதுல மத்தவங்க வேற அதப்பத்தி எழுதி ஏங்க வெறுப்பேத்தறீங்க. தயவு செஞ்சி சப்ஜெக்ட மாத்துங்க.

ஜெமோவுக்கு நகைச்சுவை எழுத்து கைவரவில்லை என்பதை இந்த ஒரு மாதத்தில் நிரூபித்துவிட்டார். எல்லா genreக்களிலும் எழுதி வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்ற செயற்கையான உந்துதலால் இப்போது "அங்கத எழுத்துச் சோதனை"யில் இறங்கியிருக்கிறார் என்பது என் அனுமானம். முன்பு "அறிவியல் புனைகதைகள்" என்ற சோதனையிலும் இறங்கினார்.

தன் குறைந்த வாழ்நாளில் சிறுகைதை என்ற ஒரு வடிவத்தை மட்டும் வைத்துக்கொண்டு எல்லா சாகசங்களையும் நிகழ்த்திக்காட்டியவர் புதுமைப்பித்தன். ஜெமோ எல்லா வடிவங்களையும் எடுத்து சோதித்துப் பார்ப்பதினாலேயே "ஆல் இன் ஆல் அழகுராஜா" ஆகிவிடமுடியும் என்று நம்புகிறவர் (அடுத்து கார்ட்டூன் வரையப் புறப்படமாட்டார் என்று நம்புவோம்).

மிகைப்படுத்தல், போலித்தனம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சாருவுக்கு பகடி இயல்பாகவே வருகிறது. படித்து நம்மையறியாமல் சிரிக்க முடிகிறது.(எக்சிஸ்டென்ஷியலிசமும், பேன்சி பனியனும் நாவலில் கூட பல பகுதிகள் படிக்கும்போது சிரிப்பை வரவழைக்கக்கூடியவை). சாரு சொல்கிற மாதிரி ஜெயமோகன் முதலில் சுயமோகத்தைக் கைவிட்டு சுயஎள்ளல் செய்துப் பழகவேண்டும். இல்லையென்றால் இருபது ஆண்டுகளுக்கு முன்பே கேட்டுப் புளித்துப்போன எம்.ஜி.ஆர்., சிவாஜி ஜோக்குகளை வைத்து மொக்கைப்போடத்தான் முடியும் (எம்.ஜி.ஆருக்கு 'தொப்பி' செல்லப்பெயர் மாதிரி சிவாஜிக்கு 'தொப்பை' என்ற செல்லப்பெயர் இருந்தது ஜெமோவுக்கு மறந்துவிட்டிருக்கிறது).

கொண்டோடி said...

நீங்கள் சொன்ன நீயா நானா வை நானும் இரசித்தேன்.

ஆனானப்பட்ட வேலு பிரபாகரன் ஒரு சொல் பேசவில்லை.
ஞானி சோதிடம் சொன்னவரைக் கலாய்த்தது எதிர்பார்த்தது; சாரு அங்கீகரித்தது எதிர்பாராதது (பாபா தரிசனத்தோடேயே எதிர்பார்த்திருக்க வேண்டுமோ?)

கே.என்.சிவராமன் said...

சுகுணா,

//ஆனால் இப்போது குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் ராஜேஷ்குமார்களை ஜெயமோகன்களும் எஸ்.ராமகிருஷ்ணன்களும் இடம்பெயர்த்துவிட்டனர். இப்போது வெகுஜன இதழ்களின் வாசகர்கள் ஜெமோ வகையறாக்களின் படைப்புகளைப் படிக்கும் மனோநிலைக்குத் தயாரானவர்கள், அல்லது அவர்களின் மனோநிலைக்கு ஏற்ப எழுத்தாளர்களின் படைப்புகள் மாறிவிட்டன.

மேலும் ஆயிரக்கணக்கான நாவல்கள் எழுதியிருக்கும் ராஜேஸ்குமார், (10000 நாவல்கள் என்று நினைவு), ஒரு கவுன்சிலர் தேர்தலில் நின்று கூட அதிகாரத்தைச் சுவைத்தவரில்லை.

ஆனால் சிறுபத்திரிகை எழுத்தாளர்களில் இப்போது ஒருவர் எம்.எல்.ஏ, ஒருவர் எம்.பி, ஒருவர் சட்டமன்றத்க்தேர்தலில் நின்று தோற்றுபோனவர், இன்னொருவரின் பெயர் ராஜ்யசபா எம்.பிக்கான பட்டியலில் பரிந்துரையில் உள்ளது. அப்படியானால் அதிகாரமய்யங்கள் என்பவை எது, அல்லது யார்?//

உண்மையிலேயே உரையாடலுக்கான விஷயங்கள் இவை. இதை குறித்து இன்னும் விரிவாக நீங்கள் உரையாடியிருக்கலாம்.

ஆனால், பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம் நெருடலாக இருக்கிறது.

//அவதூறு, அவதூறு என்று கூச்சல் போடும் சிறுபத்திரிகைக்காரர்களைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது. //

சிறுபத்திரிகையாளர்கள் சொல்வது இருக்கட்டும் சுகுணா... நீங்கள் இந்த அவதூறு, வார்த்தையை வளர்மதி குறித்த உரையாடலில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினீர்கள்?

பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்த நீங்கள் இருவரும் சில உரையாடல்களில் முரண்பட்டீர்கள். எந்த சாதியின் பிடியிலிருந்து நீங்கள் விலகி வருகிறீர்களோ அந்த சாதியை குறிப்பிட்டு வளர்மதி எழுதியிருப்பதாக உணர்ச்சிவசப்பட்டீர்கள். அந்த மனநிலையில் நீங்கள் எழுதிய பதிவு உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

அதுநாள்வரை நண்பராக இருந்த வளர்மதி மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களும், அவரை குறித்து நீங்கள் எழுதிய சொல்லாடல்களும் எந்த வகையானது? நண்பர்களாக இருப்பவர்களுக்குள் பணம் கொடுக்கல் - வாங்கல் இயல்பானது. அப்படியான ஒரு விஷயத்தை பதிவில் எழுதியது எந்தவகையான அறம்?

பதிவில் எழுதி, வலையுலக நண்பர்களின் ஒப்புதலை பெற்ற பிறகுதான் அப்போது உங்களுக்கு நண்பராக இருந்த வளர்மதிக்கு பணத்தை கொடுத்தீர்களா? இல்லையே... அப்படியில்லாதபோது முரண்பாடுகள் எழுந்ததும் அந்த நட்பின் பரிமாற்றத்தை பதிவில் எழுதி, வளர்மதி குறித்த பிம்பத்தை நீங்கள் சிதைத்து கட்டமைத்ததற்கு பெயர் என்ன?

தோழர் தமிழச்சிக்கும் வளர்மதிக்கும் முரண்பாடு எழுந்தபோது, தமிழச்சி எழுதிய பதிவுக்கான விஷயங்கள் நீங்கள் வளர்மதி குறித்து எழுதிய பிம்பத்தின் அடிப்படையில் அமைந்ததுதானே? வலையுலக நண்பர்களுக்கு இப்போது வளர்மதி குறித்த புரிதல் உங்கள் பதிவை ஆதாரமாக கொண்டுத்தானே இருக்கிறது?

அப்படியானால், 'அவதூறு' என நீங்கள் குறிப்பிடும் பெருங்கதையாடல் என்ன வகையானது என்பதை விளக்க முடியுமா?

சுகுணாதிவாகர் said...

தோழர் பைத்தியக்காரன்,

வேறு யாரும் இந்த பிரச்சினையை மீண்டும் எழுப்பிப் பின்னூட்டம் போட்டிருந்தால், நிச்சயமாக அதை நிராகரித்திருப்பேன். ஆனால், நீங்கள் என்பதால் மட்டும் சுருக்கமாய்...

/எந்த சாதியின் பிடியிலிருந்து நீங்கள் விலகி வருகிறீர்களோ அந்த சாதியை குறிப்பிட்டு வளர்மதி எழுதியிருப்பதாக உணர்ச்சிவசப்பட்டீர்கள்/

'அந்தச் சாதியைக்' குறிப்பிட்டு அவர் எழுதவில்லை. எனக்கு அந்த 'ஜாதிப்புத்தி' இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்ல, நண்பர் வரவணையானும் நானும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் அவர் என்னை ஆதரித்தார் என்று எழுதினார். இதன் மூலம் என்னை ஒரு சாதிப்பற்றாளன் என்று அடையாளப்படுத்தினார்.

/ நண்பர்களாக இருப்பவர்களுக்குள் பணம் கொடுக்கல் - வாங்கல் இயல்பானது. அப்படியான ஒரு விஷயத்தை பதிவில் எழுதியது எந்தவகையான அறம்?

பதிவில் எழுதி, வலையுலக நண்பர்களின் ஒப்புதலை பெற்ற பிறகுதான் அப்போது உங்களுக்கு நண்பராக இருந்த வளர்மதிக்கு பணத்தை கொடுத்தீர்களா? இல்லையே... அப்படியில்லாதபோது முரண்பாடுகள் எழுந்ததும் அந்த நட்பின் பரிமாற்றத்தை பதிவில் எழுதி, வளர்மதி குறித்த பிம்பத்தை நீங்கள் சிதைத்து கட்டமைத்ததற்கு பெயர் என்ன?/

வெளிப்படையாகச் சொல்லப்போனால் நான் மிகவும் உடைந்துபோன மனத்தோடும் நிதானம் மீறியும் எழுதிய பதிவுதான் இது. இன்றுவரை மீண்டும் அந்தப் பதிவை ஒருமுறை கூட திருப்பிப் படித்ததில்லை. ஆனால் உணர்ச்சிவசப்பட்ட பதிவு என்பதற்காகவே அது அவதூறுகள் நிரம்பியது என்று அர்த்தமில்லை. என்னைச் சென்னையில் வேலை வாங்கித்தருகிறேன் என்று அழைத்தவர் உங்கள் நண்பர். பிறகு என் கையிலிருந்த பணமும் இல்லாமல் போனது. பிறகு தட்டுத்தடுமாறி நானே என்னை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துவிட்டபிறகு, இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக, 'ஜாதிவெறியன்' என்று எழுதுவது எந்த வகை அறம்? அதற்கான கோபத்தின் எதிர்வினைதான் அது.

மேலும் இந்தப் பிரச்சினையை நான் ஆரம்பிக்கவில்லை. அவர்தான் தமிழச்சி பதிவில், அந்தப் பதிவில் பேசப்பட்ட விசயத்திற்கு சம்பந்தமில்லாதபோதும், என்னை சில்லறை என்றெல்லாம் பின்னூட்டம் போட்டார்.

இணைய உலகில், குறிப்பாக தமிழ்மணத்தில் எவ்வளவோ விவாதங்கள் நடப்பது உங்களுக்கே தெரியும். ஆனால் இந்த விவாதங்கள் எதிலும், அது அரசியல் சார்ந்ததோ, அல்லது தனிநபர் சார்ந்ததோ உங்கள் நண்பர் அவ்விவாதங்களில் தலையிட்டதில்லை. ஆனால் திடீரென்று என்னை 'அம்பலப்படுத்துகிறேன்' என்று இரண்டு கட்டுரைகள் எழுதினார்.

இந்தப் பதிவுலகிற்கே தொடர்பில்லாத ஒரு நண்பரின் தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு, அவர் கருத்தை நான் திருடிக்கொண்டேன், வேண்டுமானால் உறுதி செய்துகொள்ளுங்கள் என்று எழுதினார். ஆனாலும் அந்த இரண்டு கட்டுரைகள் வெளிவந்தபோதும் நான் எதுவும் அவரைப் பற்றி எழுதவில்லை.

ஆனால் மிக மோசமான முறையிலும், மனத்தைப் புண்படுத்தும் வகையிலும் 'ஜாதிப்புத்தி', 'ஜாதிவெறியன்' என்று எழுதியபிறகுதான் நான் எதிர்வினை புரிந்தேன், ஆத்திரத்தோடு. ஆனால் அதிலிருக்கும் விசயங்கள் எல்லாம் அடிப்படையில் உண்மையானவை. பணவிசயத்தைப் பொறுத்தவரை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், 'ஜாதிப்புத்தி' என்பது அவதூறா, இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

/தோழர் தமிழச்சிக்கும் வளர்மதிக்கும் முரண்பாடு எழுந்தபோது, தமிழச்சி எழுதிய பதிவுக்கான விஷயங்கள் நீங்கள் வளர்மதி குறித்து எழுதிய பிம்பத்தின் அடிப்படையில் அமைந்ததுதானே? /

பொதுவெளியில் ஒரு விசயம் வந்தபிறகு, அதைப் பலரும் 'உபயோகப்படுத்திக் கொள்வது' தவிர்க்க முடியாதது. இதன் இன்னொரு விளைவையும் நீங்கள் சேர்த்து யோசிக்க வேண்டும். அவர் எழுதும் முன்பு வரை, நான் பிறந்த சாதி என்னவென்று யாருக்கும் வலையுலகில் தெரியாது. ஆனால் அதற்குப் பிறகு என்னைப் பிள்லைமார் என்றும் அதனோடு பல கெட்டவார்த்தைகள் அடைமொழிகள் சேர்த்தும் பல பின்னூட்டங்கள் வந்தன. ( தமிழச்சியின் இடைப்பட்ட காலத்திய பதிவுகளில் தேடிப்பாருங்கள், அப்படியான பின்னூட்டங்கள் நிறைய இருக்கும்.) நாந்தான் அவருக்கு 'எதிரி'. ஆனால் சம்பந்தமில்லாமல் செந்திலையும் ஜாதி குறிப்பிட்டு எழுதியிருந்ததால் அவருக்கும் அப்படியான பின்னூட்டங்கள் நிறைய வந்தன. இதை ஒன்றும் செய்ய முடியாது.

/வலையுலக நண்பர்களுக்கு இப்போது வளர்மதி குறித்த புரிதல் உங்கள் பதிவை ஆதாரமாக கொண்டுத்தானே இருக்கிறது?

அப்படியானால், 'அவதூறு' என நீங்கள் குறிப்பிடும் பெருங்கதையாடல் என்ன வகையானது என்பதை விளக்க முடியுமா/

அவதூறு என்பது பெருங்கதையாடலா, சின்னக்கதையாடலா என்று கேட்டால், எனக்குத் தெரியாது. நான் அவரைப் பற்றிச் சொன்னதைப் பலரும் ஏற்றக்கொண்டனர், ஆனால் அவர் என்னைப் பற்றிச் சொன்னதை யாரும் ஏற்றுக்கொள்லவில்லை என்றால் - இதற்கான காரணத்தை நீங்கள்தான் தேடவேண்டும்.

அவர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் என்னை ஆதரித்தவர்கள் எல்லாம் என் நட்புவட்டம் என்கிற ரீதியில் எழுதியிருந்தார். எனக்கு அப்படியான நெருக்கமான நட்பு - ஒருசிலரைத் தவிர- யாரிடமும் கிடையாது. சாட் செய்வது, அனுப்பும் மின்னஞ்சல்களுக்குப் பதில் அனுப்புவது, அவ்வளவு ஏன், பதிவில் 'கருத்து' சொன்ன கந்த சாமிகளுக்கும் - மாமிகளுக்கும் நன்றி சொல்வது, பின்னூட்டங்களுக்களில் கேட்கப்படும் கேல்விகளுக்குப் 'பொறுப்பாக'ப் பதில் சொல்வது, நண்பர்கள் என்பதாலேயே பின்னூட்டம் போடுவது - இவையெல்லாம் எனக்குப் பிடிக்காதா, அல்லது சோம்பேறித்தனமா என்று தெரியவில்லை. ஆனால் 'முறைப்படி' செய்தது கிடையாது. என்னை அந்தப் பிரச்சினையில் ஆதரித்த டோண்டுவிற்கும் எனக்கு ஏழாம்பொருத்தம். எனவே அவர் சொன்ன காரணம் மிகுந்த வேடிக்கையானது.

முடிவாக, இந்த விசயத்தை மீண்டும் மீண்டும் பேசுவது போரடிக்கிறது, (கடலை போடப்போற நேரத்தில பழசையெல்லாம் ஞாபகப்படுத்தியதற்கு என் கடும் கண்டணங்கள்.). மேலும் என்னதான் இருந்தாலும் இந்தப் 'பிறவிக்கு' அல்லது 'ஜந்துவிற்கு' அவர் 'முன்னாள் நன்பர். இதை மீண்டும் மீண்டும் பேசுவதால் இருபக்கமும் கசப்பே அதிகரிக்கும். அது அதிகரித்து ஒன்றும் சாதிக்கவும் போவதில்லை. வேண்டுமானால் தமிழ்மணத்தின் சூடான இடுகைகள், பொழுதுபோகல் ஆகியவற்றிற்கான கச்சாப்பொருட்களாகலாம்.

எனவே - என் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலும்கூட - மீண்டும் இந்த அல்லது இந்த மாதிரியான கேள்வியைக் கேட்காதீர்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக வரும் வேறு எவரின் பின்னூட்டமும் அனுமதிக்கப்படாது.

நன்றி.

Koothu said...

>>1. ஜெயமோகன் தன்னைப் பற்றி எழுதியிருப்பதை மறுத்து சாரு 20 பக்கங்களுக்கு மேற்பட்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
Is this available online? If it is, could you please share the URL here? Thanks!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பெரும் பத்திரிகைகளில் வரும் சிறு பத்திரிகைகாரர்களில் எழுத்துகள் பெரும் பத்திரிகை எழுத்துகளே அன்றி வேறில்லை :)

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறு பத்திரிகையிலிருந்து பெரும் பத்திரிகைகளுக்கு நிறைய எழுத்தாளர்கள் மாறியே வந்துள்ளார்கள். ஜெயகாந்தன், பாலகுமாரன், சுப்ரபாரதி மணியன் தொடங்கி ஒரு நீண்ட வரலாறு உண்டு அதற்கு. அதனால் எஸ்.ராவோ அல்லது ஜெமோவோ எழுதுவது ஒன்றும் விஷயமேயில்லை.

நான் சொல்ல வந்தது : சிறு பத்திரிகைகளுக்கும் பெரும் பத்திரிகைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்பதே; பூக்கோ போன்றவர்களைப் பற்றியோ அல்லது வேறு காத்திரமான கட்டுரைகளோ ஒரு போதும் பெரும் பத்திரிகைகளில் வராது. கதை / கவிதைகளும் பெரும் பத்திரிகைகளுக்கு ஏற்றவாறு தான் இருக்கும்.

ஒரு பதிவெழுதினால் அதற்கு வரும் பின்னூட்டக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே குறைந்த பட்ச நியாயம். பதில் சொல்லாமல் இருப்பதையே பெருமையாகக் (!) கருதினால் ஒன்றும் சொல்வதற்கில்லை :)

பின்னூட்டம் போடுவதும் போடாததும் அவரவர் விருப்பம். நண்பர்கள் என்பதற்காக அல்ல; படித்தவற்றில் பிடித்திருந்தாலோ அல்லது வேறுபட்டாலோ பின்னூட்டம் இடுவது தான் நான் அறிந்து பலரின் வாடிக்கை.

இன்னும் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் நீங்கள் கடலை போடும் மூடில் இருப்பதால் நிறுத்திக் கொள்கிறேன் :)

Mohandoss said...

//ஒரு பதிவெழுதினால் அதற்கு வரும் பின்னூட்டக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே குறைந்த பட்ச நியாயம். பதில் சொல்லாமல் இருப்பதையே பெருமையாகக் (!) கருதினால் ஒன்றும் சொல்வதற்கில்லை :)//

சுந்தர், அவர் சொன்னதை நீங்க வேற காண்டெக்ஸ்டில் புரிஞ்சிக்கிட்டிருக்கிறீர்காள் என்று 'நான்' நினைக்கிறேன்.

//பின்னூட்டம் போடுவதும் போடாததும் அவரவர் விருப்பம். நண்பர்கள் என்பதற்காக அல்ல; படித்தவற்றில் பிடித்திருந்தாலோ அல்லது வேறுபட்டாலோ பின்னூட்டம் இடுவது தான் நான் அறிந்து பலரின் வாடிக்கை.//

இதை பொதுப்புத்தி சார்ந்த ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா ;) (ஸ்மைலி போட்டிருக்கிறேன்)

Anonymous said...

janaranjagamai ezhuthivarum vaniga ezhuthalargal ivargalai madhiri kuzhayadi sandai pottu kolvathillai.oruvari oruvar izhivai pesi kondum naaan parthathillai. indha ilakkiya medhaigal mattume ippadi Keezhtharamai veri naygal pola kudari kondu, pinnaveenathuvathaiyum kizhikkiraragal!

சுகுணாதிவாகர் said...

/'அவதூறு' என நீங்கள் குறிப்பிடும் பெருங்கதையாடல் என்ன வகையானது என்பதை விளக்க முடியுமா/

அவதூறு என்பதைக் கதையாடல் என்று சொல்ல முடியுமா, தெரியவில்லை. ஏனெனில் கதையாடல், சொல்லாடல் ஆகிய சொற்களை அதன் உண்மையான அர்த்ததுடந்தான் பயன்படுத்துகிறோமோ, தெரியவில்லை. ஆனால் சகட்டுமேனிக்கு ஆளாளுக்கு சொல்லாடல்., கதையாடல் என்று எழுததொடங்கிவிட்டார்கள். இனி கும்மிக்கதையாடல், மொக்கைச்சொல்லாடல் என்றெல்லாம் எழுதவேண்டியதுதான் பாக்கி.