Monday, May 12, 2008

நன்றி!

ஒருவழியாக அந்த 'திருமணம் என்கிற கிரிமினல் குற்றம்' நடந்துமுடிந்துவிட்டது. நேற்று ( 11.05.2008 அன்று ) திண்டுக்கல்லில் எனக்கும் ஜெயந்திக்கும் திருமண நிகழ்வு அரங்கேறியது. பறையொலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது (ஒலிநாடாதான்). வருவதாய்ச் சொன்ன ஆதித்தமிழர்பேரவைத் தலைவர் அதியமானும் கவிஞர்கள் விஜயபத்மாவும் தய்.கந்தசாமியும் வெவ்வேறு காரணங்களால் வரமுடியவில்லை. தமிழ்ச்சூழலில் புதிய சிந்தனைகளைத் தொடங்கி வைத்தவரும் எத்தனையோ சண்டைகளுக்கு மத்தியிலும் கண்ணியமான நட்பைத் தொடர்பவனுமாகிய கிழட்டுப் போக்கிரி அ.மார்க்ஸ் தலைமையேற்றார். மணமக்களாகிய நாங்களிருவரும் மாலைமாற்றிக்கொண்டு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றோம். தாலி கட்டுவது என்கிற அதி ஆபத்தான பார்ப்பனீயச் சடங்கு பறையிசையின் பின்னணியோடு நடந்தது ஒரு வரலாற்று முரண்நகைதான். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.பாலபாரதி, பெரியாரியல் முன்னணி அமைப்பாளர் தோழர்.தமிழ்முத்து, புதியதடம் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் மேகவண்ணன், திண்டுக்கல் கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாவட்ட அமைப்பாளரும் அவ்வப்போது சித்தாந்த ரீதியாக மோதிக்கொள்பவருமான தோழர்.விச்சலன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் இலக்கியம், அரசியல், தொழிற்சங்கம் எனப் பரந்துபட்ட களங்களில் ஆர்வங்கொண்டவரும் இளைஞர்களுடனான நட்பை எப்போதும் விரும்பக்கூடியவருமான தோழர். சந்தானம், ஆரம்பகாலத்தில் நான் முரட்டுத்தனமாகக் கவிதைகள் எழுதியபோது அந்தக் கவிதைகளின் அரசியலுக்காய் என்னை ஊக்குவித்தவரும் என்னை நவீனத் தமிழிலக்கியக் களத்திற்கு அழைத்து வந்த இரட்டையர்களான யவனிகாவின் இன்னொருவருமான நண்பன் செல்மா பிரியதர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாகப் பெரியாரின் குடியரசுத் தொகுப்பைக் கொண்டுவருகிற பணியில் தன் நாளைக் கழித்துக்கொண்டிருக்கும்பொழுதும் எனது அழைப்பினைத் தட்டாமல் வந்திருந்து சிறப்புரை வழங்கினார் பெரியார்திராவிடர்கழகத்தின் தலைவர் கொளத்தூர்மணி. உறவினர்களின் கூட்டத்தைவிடவும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையாலாயே அரங்கம் நிரம்பி வழிந்தது. எல்லாத் திருமண விழாக்களையும் போலவே இந்த மணவிழாவிலும் பேசப்பட்ட கருத்துக்கள் எவ்வளவுதூரம் முன்னிருந்த மக்களைச் சென்றடைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் வாழ்வு என்பது எத்தனமின்றி வேறென்ன?. வலையுலகத்தினின்று பிரிய நண்பன் வரவணையான்(எ) செந்தில் 'வயிற்றெரிச்சலுடன்' வாழ்த்துக்களை வழங்கினான். உடனிருந்த நண்பர் நமது வலைச்சுனாமி லக்கிலுக். செந்தழல் ரவி மனைவியோடு வந்திருந்தார். அய்யனார் உள்ளிட்ட ஒருசில வலையுலக நண்பர்கள் தொலைபேசி அழைப்பின் வழியாகவும் குறுஞ்செய்திகளின் வழியாகவும் வாழ்த்துக்களை அனுப்பினர். எல்லோருக்கும் நன்றிகளைச் சொல்லிக்கொள்வதைத் தவிர வேறென்ன? நன்றி.