Monday, December 1, 2008

பூ - தமிழின் மகத்தான சினிமா





இதுவரை ஆண்கள் மட்டுமே ஆட்டோகிராப் வரைந்துகொண்டிருந்த தமிழ்ச்சினிமாப் பரப்பில் முதன்முறையாக ஒரு பெண்ணின் அதுவும் திருமணமான கிராமத்துப்பெண்ணின் காதல் நினைவுகளைத் தைரியமாய்ச் சொல்லும் படம்தான் பூ. திருமணமான பிறகும் பொங்கலுக்குத் தன் பழைய காதலன் வருவான் என்று பனைமரத்தினடியில் காத்திருக்கும் காதலியிடம் தோழி கேட்கிறாள். ''நீ இன்னும் தங்கராசுவை மறக்கலியா?''. கதை நாயகியின் பதில், அல்லது எதிர்க்கேள்வி இதுவரை தமிழ்ச்சினிமா கேட்டறியாதது, ''ஏன் மறக்கணும்?''. இப்படியான அரசியல் காரணங்களுக்காக மட்டுமின்றி, ஒரு அசல் சினிமாவின் பல்வேறு சாத்தியங்களையும் எத்தனித்திருக்கிறார் இயக்குனர். தமிழ்ச்சினிமாவில் அதிகம் பேசப்படாத சிவகாசி நாடார்களின் வாழ்வியலைப் பேசும் படம். முகத்தில் இத்தனை உணர்ச்சிகளைக் காட்டுவதில் கதைநாயகி பார்வதி தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஷோபா. சமகாலச் சாம்பார் சிறீகாந்த், சில செயற்கையான காமெடிக் காட்சிகள், படத்தில் ஒட்டாது தனித்துத் தெரியும் பரவை முனியம்மா பாடல்காட்சி இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இயக்குனர் சசி ஒரு மகத்தான சினிமாவைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். படம் பற்றி இன்னும் கூடுதலாக எழுதினால் அது தந்த பரவசத்தை இழந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். நீங்களும் பாருங்கள்.