Thursday, April 30, 2009

போடுங்கம்மா ஓட்டு!

’’ஈழத்தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் & திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டுமானால் ஜெயலலிதா கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்’’ என்கிற ‘தர்க்கபூர்வமான’ முடிவை முன்வைக்கும் மின்னஞ்சல்களால் அஞ்சல்பெட்டி நிரம்பி வழிகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்தவனில்லை என்றபோதிலும் ஒருமுறை கூட இரட்டை இலைக்கு வாக்களிக்காதவன் என்ற காரணத்தாலோ என்னவோ ஒரு மனத்தடை இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதிமுகவிற்கு வாக்களிப்பது என்பது ஒரு உலகமகா பாவச்செயல் அல்ல, ‘‘விடிவுமில்லே, முடிவுமில்லே’’ என்ற ஈழமக்களின் ஓலம் கேட்டு மனம் பிசைபவர்கள் இத்தகைய முடிவு எடுப்பதில் ஒன்றும் தவறில்லைதான் என்பது பகுத்தறிவிற்குத் தெரிந்தே இருக்கிறது.

கருணாநிதி தன் வாழ்நாளில் இந்தளவுக்கு அம்பலப்பட்டிருப்பதோ, அசிங்கப்பட்டிருப்பதோ இதற்கு முன்னும் நடந்ததில்லை. இதற்குப் பின்னும் நடக்கப்போவதில்லை. ஜெயலலிதாவை மட்டுமே பாசிஸ்ட் என்று சொல்லிப் பழகிய நம்மைக் கருணாநிதி அரசின் பாசிசத்தனமான ஒடுக்குமுறைகள் நிறையவே யோசிக்க வைத்திருக்கின்றன. ஈழப்பிரச்சினை குறித்து நோட்டீஸ் கொடுத்தவர்கள், ராயப்பேட்டையில் அதிமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பெரியார் தி.க தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ப.சிதம்பரத்திற்கு எதிராக சிவகங்கையில் தேர்தலில் நிற்கும் மாணவர்கள் துண்டுப்பிரச்சாரம் கொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வேட்பு மனுத்தாக்கலின்போது, ‘ஸ்டாப் தி வார்’ பனியன் அணிந்து சென்றதைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டிருக்கிறார் கார்த்திக்சிதம்பரம். ஆக மொத்தம் அம்பலப்பட்ட பாசிஸ்டாகிய கருணாநிதியை எதிர்க்க, அறியப்பட்ட பாசிஸ்ட் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உந்தப்பட்டிருக்கிறார்கள்.

அப்பட்டமான உலகமயச் சார்பு எடுத்ததால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகள், தொகை தொகையாய் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ள அபாயம், பக்கத்து மாநிலமான கர்நாடகம் வரை வந்துவிட்ட இந்துத்துவப் பாசிசம் என பல பிரச்சினைகள் இருக்கும்போது, ஈழப்பிரச்சினை மட்டும்தான் இந்த தேர்தலின் மய்யப்பிரச்சினையா என்கிற கேள்வியைக் கூட ஒருபுறம் ஒத்திவைப்போம். ஆனால் ஈழப்பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு, சில எதார்த்த நிலைமைகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளோம்.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் சென்னை மாதிரியான பெருநகரங்கள் மற்றும் நமது இணையத்தளங்களைத் தாண்டி, தமிழகத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் இலங்கைப்பிரச்சினை தேர்தலின் தீர்மானகரமான பிரச்சினையாக இல்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. உண்மையிலேயே இலங்கைப்பிரச்சினை, தேர்தலில் வாக்குகளை வாங்கித்தரும்,. அல்லது வாக்குகள் விழுவதைத் தடுக்கும் என்பதுதான் எதார்த்தமென்றால் காங்கிரஸ் கூட்டணியை உதறித் தள்ளிவிட்டுக் கருணாநிதியும் ஈழ ஆதரவுப் பஜனைகளில் கலந்துகொள்வார் என்பதுதான் உண்மை.

கருணாநிதியைச் சற்றுத்தள்ளி வைப்போம். தேர்தலுக்கு முன்பே ஈழப்பிரச்சினை குறித்துக் கதையாடிய சி.பி.அய், பா.ம.க, மதிமுக, வி.சி ஆகிய அமைப்புகள் கூட ஈழ ஆதரவை மய்யமாக வைத்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிட முன்வரவில்லை என்பதிலிருந்தே ஈழப்பிரச்சினைக்காக விழும் வாக்குகளின் சதவிகிதம் மிக மிகக் குறைவுதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆகக்குறைந்தது ஈழப்பிரச்சினையை ஒரு தேர்தல் பிரச்சினையாகக் கூட மாற்ற இயலாத குற்றம் யாருடையது? முத்துக்குமாரின் மரணத்தின்பின் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சிகள் நாம் மறக்கக்கூடியவையல்ல. அத்தகைய எழுச்சிகளைத் தமிழகம் கண்டே நெடுநாட்களாகிவிட்டன. இனி காண்பதற்கான காலமும் அருகில் இல்லை. குறிப்பாக மாணவர்களும் வழக்கறஞர்களும் தமக்கான அடையாளங்களோடு இப்போராட்டங்களில் பங்குபற்றினர். இவ்விரு தரப்பினரின் போராட்ட உணர்வுகளைச் சிதறடித்து ஒடுக்குவதற்காக திமுக அரசு ‘சிறப்பாகவே’ திட்டம் தீட்டியது.

மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்காகக் கல்லூரிகளை இழுத்து மூடியது. வழக்கறிஞர் போராட்டங்களை ஒடுக்க உயர்நீதிமன்ற வளாகத்திலேயே போலீசை ஏவியது. ஆனால் இன்று ஈழத்தமிழருக்காய் வீராவேச வேசம் போடும் வீராதி வீரர்கள் வைகோ, நெடுமாறன், திருமா, ராமதாஸ் யாரும் கல்லூரிகள் மூடப்பட்டதையோ உயர்நீதிமன்றத் தாக்குதலை எதிர்த்தோ ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்கவோ போராட்டங்களை நிகழ்த்திக்காட்டவோ தயாராக இல்லை.

மாறாக கோபால கிருஷ்ண கோகலே வாரிசாக, தூதரகங்களுக்கு மனுப்போடுவது, மனிதச்சங்கிலிப் போராட்டம், மயிரு சங்கிலிப்போராட்டம் என்று மக்கள் எழுச்சிகளைக் காட்டிக்கொடுத்து போராட்டங்களை மொன்னையாக்கினார்கள். தங்களது அரசியல் நலன்களைத் தாண்டி மாணவர்களும் வழக்கறிஞர்களும் போராட்டச் சக்திகளாக உருமாறுகிறார்கள் என்பதைத் தாங்கமுடியாததும் தடுக்க முயன்றதுமே இந்த கருங்காலிகளின் சதிகளுக்குக் காரணம். தங்களின் அரசியல் கயவாளித்தனத்தைத் தாண்டி எப்போதுமே போராட்டங்கள் உருப்பெற்று விடக்கூடாது என்பதிலே நெடுமாறன் தொடங்கி வைகோ வரை விழிப்போடு இருந்தார்கள். மாணவர் மற்றும் வழக்கறிஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் கருணாநிதி அரசுக்கு ஒருபங்கு இருக்கிறது என்றால் இத்தகைய கருங்காலிகளுக்கு மறுபங்கு இருக்கிறது.

ஆனால் இத்தகைய சக்திகளை அம்பலப்படுத்தத் தொடங்கினாலே நமது சுடலைமாடன் மாதிரியான தோழர்கள், ‘‘நீங்கள் ஏன் கொளத்தூர்மணியை விமர்சிப்பதில்லை, நெடுமாறனை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கழுத்திலே துண்டு போடத்தவறுவதில்லை. கொளத்தூர்மணியும் பெரியார் தி.கவும் தமிழகம் முழுவதும் இரட்டைக்குவளைகள் அமுலில் உள்ள டீக்கடைகளைக் கணக்கெடுத்து அங்கெல்லாம் போய்க் கலகம் செய்கிற அதேவேளையில்தான் ஈழத்தமிழர்கள் பற்றியும் பேசுகிறார்கள். என்றைக்காவது நமது ‘தமிழர் தலைவர்’ நெடுமாறன் ஒடுக்கப்படுகிற தலித்துகளுக்காய் நின்றதுண்டா, தலித்தெல்லாம் தமிழனில்லையா?

ஆக இத்தகைய கேள்விகளை முன்வைத்தால் அடுத்து வைக்கிற பிலிம் ‘பிரியாரிட்டி பாலிடிக்ஸ்’. அட தமிழ்த்தேசியப் பாடுகளா, இதற்குத்தான் பிரியாரிட்டி, இதற்கு பிரியாரிட்டி இல்லை என்று தீர்மானிக்கிற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? என்றைக்காவது அதை எங்களுக்குத் தந்திருக்கிறீர்களா? தலித்தின் வாயில் பீ திணிக்கப்படுவது எல்லாம் உங்களுக்குப் பிரியாரிட்டி பிரச்சினைகளே இல்லையா, தாமிரபரணிப் படுகொலைகளோ மேலவளவு முருகேசன் கொலைகளோ என்றைக்காவது தேர்தல் பிரச்சினைகளாகப் பேசப்பட்டிருக்கிறதா?

இந்த லட்சணத்தில் ‘‘திருமாவளவனுக்கு சாதியவிடுதலை அளித்தது ஈழப்பிரச்சினைதான்’’ என்று அருள்வாக்கு அளிக்கிறார் தோழர்.ஆழியூரான். என்ன சாதிய விடுதலை கிடைத்துவிட்டது திருமாவிற்கு? திருமாவிற்கு வன்னியர்களும் கள்ளர்களும் லட்சக்கணக்கில் ஓட்டு போடத் தயாராகிவிட்டார்களா? ஈழப்பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்த இந்த ஆறுமாத காலங்களில் செந்தட்டிப் பிரச்சினை, விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்பட்டில் சிவராத்திரியன்று கோயிலில் வழிபட்ட அருந்ததியர்கள் கட்டிவைத்து உதைக்கப்பட்டது, தஞ்சைப் பெரியகோயிலில் சுத்தம் செய்யப்போன தலித் மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து டீ குடித்ததற்காக ஒரு தலித் முதியவர் அடித்து உதைக்கப்பட்டது என பத்துக்கும் மேற்பட்ட தலித் எதிர்ப்புச் சம்பவங்கள் நடைபெற்றுத்தான் இருக்கின்றன. எனவே திருமாவளவன் சாதியத்தலைவர் என்னும் அடையாளத்திலிருந்து பொது அடையாளத்திற்குச் செல்வதற்குத்தான் ஈழப்பிரச்சினையும் தமிழ்த்தேசியமும் உதவியிருக்கிறது. அவர் ஒரு தலித் தலைவராக இருந்து தலித் பிரச்சினைகளைப் பேசுவதை ஆதிக்கச்சாதித் தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்களே தவிர தமிழ்த்தேசியம் பேசுவதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் தலித் பிரச்சினைகளைக் காட்டி ஈழத்தமிழர் துயரங்களைப் பின்னுக்குத் தள்ளுவதல்ல இப்பதிவின் நோக்கம். தேர்தல் என்பது ஒரு போராட்ட வழிமுறையாகக் கருதக்கூடியவர்கள் தங்களது காங்கிரசுக்கு எதிரான வாக்குகளாகப் பதிவு செய்வது என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆக மொத்தம் ஈழத்தமிழர் துயரங்களில் பங்கெடுத்துக்கொள்பவர்கள் முன் இரு வாய்ப்புகள்தான் முன்நிற்கின்றன, தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பது. எதார்த்தத்தின் கொடூரம் இப்படியாய் இளிக்கிறது, ‘ஓட்டுப் போடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, ஓட்டுப் போடாமல் இருப்பதால் ஒரு மயிரும் ஆகப்போவதில்லை’.

Friday, April 17, 2009

ஷகீலா திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்


இது சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, இதே ஏப்ரலில் பதிவிட்ட பதிவு. நிலைமை அதே மாதிரியாக இருக்கிறது என்பதை விடவும் அதைவிட மோசமாகியிருக்கிறது என்பதே உண்மை. சாதாரண சினிமா ரசிகர்கள் தங்களுக்குத் திரைப்படம் பிடித்திருந்தால், ‘படம் சூப்பர்’ என்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் நம் எழுத்தாள ரசிகர்களோ, தங்களுக்குப் பிடித்த படங்களையெல்லாம் ‘பின்நவீனத்துவப் படங்கள்’ என்று திடீர் & திகில் பட்டங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். இது வெறுமனே ரசனை சார்ந்தது மட்டுமல்ல, வேறு நலன்கள் சார்ந்ததும்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுக்கு அடுத்து மிகவும் மலிவாகக் கிடைப்பவை இந்த பின்நவீனத்துவப்பட்டங்கள். இந்தச் சூழலில் இந்தப் பதிவை மீள்பதிவு செய்யலாமென்று தோன்றியது


சமீபத்தில் ஏப்ரல் தீராநதி இதழில் எம்.ஜி.சுரேஷின் 'தமிழ்த்திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இறுக்கமான இலக்கியச்சூழலில் மனம்விட்டுச் சிரிக்க உதவுபவை சுரேஷின் கட்டுரைகள். இந்தக் கட்டுரையும் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த பின்நவீனத்துவத் திரைப்படங்களாக சுரேஷ் குறிப்பிடும் படங்கள் அலைபாயுதே, ஆயுத எழுத்து, வேட்டையாடுவிளையாடு, காக்க காக்க.

இதில் வேட்டைவிளையாடு, காக்க காக்க திரைப்படங்களில் கதை என்கிற ஒன்று இல்லை (அ) எதிர்க்கதை /கதையற்ற கதை இருக்கிறது. எனவே அவை பின்நவீனத் திரைப்படங்கள் என்கிறார் சுரேஷ்.

அலைபாயுதே படத்தின் தொடக்கக்காட்சியில் கதாநாயகியைத் தேடி ரயில்நிலையத்திற்கு வருகிறான் நாயகன். ஆனால் அவள் வரவில்லை. நாயகனின் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. காட்சியமைப்புகள் முன்பின்னாக மாற்றப்பட்டிருப்பதால் அது ஒரு பின்நவீனத்துவத் திரைப்படம் என்கிறார் சுரேஷ். புல்லரித்துப்போய் உட்கார்ந்திருந்தபோது தினத்தந்தியில் ஷகீலா நடித்த ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது.

சீன் படங்கள், பிட்படங்கள், பலான படங்கள் என்றழைக்கப்படும் பாலியல் திரைப்படங்களை உங்களில் எத்தனைபேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. (பெண்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை). ஆனால் அவை சுரேஜின் லாஜிக்படி பார்த்தால் நிச்சயமாக பின்நவீனத்துவத்திரைப்படங்கள்தான்.

அவைகளுக்கான கோட்வேர்ட் 'சாமிப்படங்கள்'. (கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை தியேட்டர் கவுண்டரில் 'சாமிப்படம்'தான் ஓடுகிறதா என்று கவுண்டரில் உறுதிப்படுத்திக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் அமர்ந்தால் உண்மையிலேயே 'சரணம் அய்யப்பா' படம் ஓட அலறியடித்து ஓடிவந்தது தனிக்கதை). இதன்மூலம் புனித அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

படத்தின் அறிமுகத்தில் ஒரு பெண் நடித்துக்கொண்டிருப்பார்.ஆனால் சம்பந்தமேயில்லாமல் சில காட்சிகளுக்குப் பிறகு 'பிட்' அல்லது 'சீன்' என்றழைக்கப்படும் பாலுறவுக்காட்சியில் 'நடித்துக்கொண்டிருக்கும்' பெண்ணின் அறிமுகக் காட்சியே இடைவேளைக்குப் பின் தான் வரும் அல்லது வராமலே கூடப் போகலாம். மூன்றாவது காட்சி ஆறாவது காட்சியாகவும் ஆறாவது காட்சி பதினொன்றாவது காட்சியாகவும் முன்பின்னாக மாற்றப்பட்டு ஓட்டப்படும். இதன்மூலம் சீன்படங்கள் பிரதியின் ஒழுங்கைக்குலைக்கின்றன.

அதேபோல சமயங்களில் பிட்டில் இடம்பெறுபவர்களுக்கும் படத்திற்குமே சம்பந்தமிருக்காது. இப்படியாக இப்படங்களில் நான்லீனியர் தன்மை அமைந்திருக்கின்றன. சிலவேளைகளில் தமிழ்ப்படங்களில் இங்கிலீஸ் பிட் ஓடும், இங்கிலீஸ் படங்களில் தமிழ் பிட் ஓடும். ஆகமொத்தம் பிட்கள் மொழி, தேசம் ஆகிய எல்லைகளைத் தகர்க்கின்றன.

ஒருசில படங்களில் சென்சார் போர்டு பிரச்சினைக்காக ஆங்கில வசனங்களை இந்தியநடிகர்கள் பேசி நடித்திருப்பார்கள். இவர்களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டால் நிறுத்தி நிதானமாக பள்ளிகளில் essay ஒப்பிப்பதைப் போல ஆங்கிலம் பேசுவார்கள். இவை ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ்களாக இருப்பதால் தமிழர்கள் இந்தப் படங்களுக்குத் தொடர்ந்து போய்த் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

இந்தப் படங்களில் கதை என்கிற ஒன்று பெரிதாகத் தேவைப்படாது.ஆனால் கடைசியில் ஏதேனும் ஒரு 'நீதி' சொல்லப்படும். கட்டாயமாக கடைசிக்காட்சியில் யாராவது யாரையாவது துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் இந்தக் காட்சிகளைப் பார்க்க தியேட்டரில் யாரும் இருக்கமாட்டார்கள். 'சீன்' முடிந்தவுடனே பலர் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

ஆனால் எப்படியாவது இன்னும் சில 'சீன்'கள் ஓட்டப்படாதா என்கிற பேராசை உள்ளவர்கள் மட்டுமே தியேட்டரில் இருப்பார்கள். இன்னும் சிலபேர் யாராவது தெரிந்தவர்கள் வந்து அவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே எல்லோரும் போகட்டும் என்று காத்திருப்பார்கள்.

ஆகமொத்தம் இத்தகைய பின்நவீனக்கூறுகள் கொண்ட பின்நவீனத்துவத் திரைப்படங்களில் ஷகீலா, ஷகீலாவின் தங்கை ஷீத்தல், மரியா, ரேஷ்மா, பிட்பிரதீபா ஆகிய பின்நவீனத்துவ நாயகிகள் நடித்திருப்பார்கள். (இந்தப் படங்களில் நடிக்கும் ஆண்நடிகர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது அல்லது அதுபற்றிக் கவலையில்லை.)

என் நினைவிலிருந்து தமிழில் வெளியான பின்நவீனத்துவத் திரைப்படங்கள்.

1. சாயாக்கடை சரசு
2. மாயக்கா
3. அவளோட ராவுகள்
4. அஞ்சரைக்குள்ள வண்டி
5. காமதாகம்
6. மாமனாரின் இன்பவெறி
7.....
8....
9......
.
.
.