Tuesday, September 11, 2007

வேலூர் திருப்பத்தூர் நண்பர்களுக்கு...

அன்பு நண்பர்களுக்கு

இவ்வாண்டு தோழர் பெரியாரின் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் (வேலூர்) தூயநெஞ்சர்கல்லூரி செப்டம்பர் 16ம் தேதி முழுநாள் கருத்தரங்கமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அக்கருத்தரங்கில், 'பெரியாரின் போராட்டமுறைகள் - தற்கால அரசியல்சூழலிலிருந்து ஒரு மதிப்பீடு' என்னும் தலைப்பில் பேசவுள்ளேன். மேலும் பொ.வேல்சாமி, டி.தருமராஜன், ஸ்டாலின்ராஜாங்கம், பார்த்திபராஜா போன்ற பலரும் பேசவுள்ளனர். நேரமுள்ள நண்பர்கள் வரவும். என்னை தொடர்புகொள்ள : தொலைபேசி எண் : 9941910052

Friday, September 7, 2007

நரிக்குறவர்கள் - வாழ்வின் அசல்கள்

எப்போதாவது திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் வாய்ப்பு வந்தால் கவனியுங்கள், பேருந்து நிலையத்திற்கு முன்பு ஆர்.டி.ஓ பேருந்து நிறுத்தம் என்று ஒரு நிறுத்தம் வரும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம். அதற்கெதிரே விரிந்துகிடக்கும் மைதானத்தில்தான் 2000 ஆம் ஆண்டில் நரிக்குறவர்கள் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தனர்.

அப்போது நான் தன்னார்வத்தொண்டு நிறுவனம் என்னும் ஒரு ஏகாதிபத்திய அடிவருடி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். கல்லூரிப் படிப்பை முடித்திருந்த காலம். என்.ஜி.ஓக்களின் அரசியல் குறித்த அறிவில்லை. எனக்கான புராஜெக்ட் 'குழந்தை உழைப்பு ஒழிப்பு'. பாதியில் படிப்பை நிறுத்திய குழந்தைத் தொழிலாளர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மாலை நேரத்தில் குழந்தைத்தொழிலாளர்களுக்கு வகுப்புகள் எடுப்பது இவையே எனது பணி.

பெரும்பாலும் குழந்தைத்தொழிலாளர்களாக தலித்துகள் மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளே இருப்பார்கள். மாலை நேரங்களில் அவர்களுக்குக் கல்வி கற்றுத் தருவதைத் தருவதை விடவும் கே.ஏ.குணசேகரன் மற்றும் ம.க.இ.கவின் தலித்விடுதலை மற்றும் தீண்டாமை சாதியெதிர்ப்பு தொடர்பான பாடல்களைச் சொல்லிக் கொடுப்பதிலேயே காலம் கழிந்தது.

இந்த நேரத்தில்தான் நரிக்குறவர் குழந்தைகளுக்கு ஏன் கல்வி புகட்டக்கூடாது என்னும் எண்ணம் தோன்றியது. அப்போது எனக்கு உதவியவர் சாம்சன். நரிக்குறவர் சமூகத்தில் பிறந்து எம்.ஏ வரை படித்திருந்த சாம்சன், கிறித்துவ மதத்திற்கு மாறியிருந்தார். அவ்வப்போது ஏதேனும் தொண்டுநிறுவனங்கள் வருவதும் குழந்தைகளுக்கு ஒரு பேஸ்கட்பால் தந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் வாடிக்கையாயிருந்தன.

சிலகாலங்களில் நரிக்குறவர் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிப்பதைவிடவும் அவர்களது வாழ்முறை மற்றும் கலாச்சாரம் குறித்து அறியும் ஆவலே மேலோங்கியது. ஏனெனில் அதிகாரக் கறைபடிந்த நமது பாடத்திட்டங்கள் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்வைச் சூறையாடிவிடும் என்றே தோன்றியது.

குறவர்களைப் பொருத்தவரை உபரி என்கிற ஒன்று பெரும்பாலும் கிடையாது. உழைப்பு, குடி, கொண்டாட்டம் இவைதான் வாழ்க்கை. உணவிற்கும் உறைவிடத்திற்குமான கவலைகள் கிடையாது. அவர்களுக்கான மாபெரும் கேளிக்கை தமிழ்ச்சினிமா. மூன்று காட்சிகளும் படம் பார்க்க அவர்கள் தயங்குவதில்லை. அதிலும் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் கொள்ளைப்பிரியம்.

திரையரங்குகளில் அமர்ந்துகொண்டே பாசிமணி பின்னிக்கொண்டிருப்பார்கள். நம்பியார் எம்ஜிஆரை அடித்துவிட்டாலோ பதட்டத்தில் பாசிமணி பின்னும் வேகம் அதிகரிக்கும். நான் ஆடு. மாடு இவைகளைத்தாண்டி பல்வேறுவகையான மாமிசங்களை உண்ணப்பழகியது அங்குதான். அவர்களின் சமையலுக்கென்று ஒரு காட்டுருசி இருக்கும். அவர்கள் குழம்போ, ரசமோ வைப்பதில்லை.

கறியைச் சமைத்து அப்படியே சோற்றில் பிசைந்து சாப்பிடுவார்கள். (பின்னாளில் ஒரு ஈழத்தமிழ் நண்பரின் வீட்டில்சாப்பிடும்போது அவர்களும் இதேமுறையில் சாப்பிட நான் அசந்துபோனேன்). மாமிசமில்லாமல் அவர்களின் உணவு இல்லை.

குறவர்களிடத்தில் சாதியில்லை. ஆனால் இரண்டுபிரிவுகள் இருக்கின்றன. ஆடு சாப்பிடுகிற பிரிவு, மாடுசாப்பிடுகிற பிரிவு. ஆடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு அதே பிரிவைச் சேர்ந்த இன்னொருவர் பங்காளி முறை வேண்டும். அதேபோல மாடுசாப்பிடுகிற பிரிவினருக்கும்.

ஒரே பங்காளிப் பிரிவிற்குள் பெண் எடுக்க மாட்டார்கள். எதிரெதிர்ப் பிரிவுகளில்தான் மண உறவுமுறைகள். அதேபோல் திருமண உறவுகளைத் தாண்டிய சுதந்திரமான பாலுறவுகள் குறவர்சமூகங்களில் உண்டு என்றாலும், ஒரு ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஆண், இன்னொரு ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த பெண்னோடு பாலியல் உறவுவைத்துக்கொள்ளமாட்டான்.

நரிக்குறவர் பெண்கள் அழகிகள். அவர்கள் மட்டும் குளித்து நாகரீக ஆடைகள் அணிந்தால் நமது பெண்கள் நிச்சயம் தோற்றுப்போவார்கள். ஆனால் எந்த ஒரு குறவர் பெண்னையும் நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிடமுடியாது, அதேபோல பெரும்பாலும் குறவர்பெண்கள் பாலியல்தொழிலிலும் ஈடுபடுவது கிடையாது. இதற்குக் காரணம் போதுமான பாலுறவு தங்கள் சமூகங்களுக்குள்ளேயே கிடைத்துவிடுவதால்தான் என்று கருதுகிறேன்.

பலாத்காரம் அல்ல, சாதாரணமாக ஒரு குறவர் பெண்ணின் கையைக்கூட நீங்கள் பிடித்து இழுத்துவிட முடியாது.எதிர்த்து நிற்கும் உடலுறுதி ஒரு காரணமென்றால், இன்னொரு காரணம் அவர்களின் கூச்சலிலேயே ஊர்கூடிவிடும். ஒருமுறை தாலுகா அலுவலகத்திலிருந்து குறவர்களுக்குப் பட்டா ஒதுக்கியிருந்தார்கள். ஆனால் அவர்கள் பட்டா ஒதுக்கிய நிலங்களோ அவர்களின் வேட்டையிடங்களிலிருந்து தொலைவிலிருந்தன.

பலமுறை முறையிட்டும் பலனில்லை. ஒருநாள் குறவர் கூட்டமே தாலுகா அலுவலகத்திற்குள் நுழைய, ஒரே கூச்சல், களேபரம். தாலுகா அலுவலகத்திலிருந்த எல்லா அலுவலர்களும் வெளியேறிவிட்டார்கள். தாசில்தார் மட்டும் மாட்டிக்கொண்டார். பிறகு தாசில்தார் சொன்னார், 'தயவுசெய்து நீங்கள் என் இடத்திற்கு வரவேண்டாம், நானே உங்கள் இடத்திற்கு வந்துவிடுகிறேன்'.

நமது அரசமைப்பின் முட்டாள்தனத்திற்கு ஒரு மகத்தான சான்று அரசின் சாதிப்பட்டியலில் குறவர்களுக்கான இடம். அரசின் வரைமுறைப்படி நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வருவர். உண்மையில் அவர்கள் பழங்குடியினர் பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவர்கள். ஒரு பிரமலைக்கள்லரும் எம்.பிசி, வன்னியரும் எம்.பி.சி, நரிக்குறவரும் எம்.பிசி. நமது வரையறுப்புகளின் கேடுகெட்டதனங்களுக்கு இதைவிடவும் சாட்சி வேண்டுமா?

எனக்குக் குறவர்களோடு இருந்த நான்குமாதங்களில் இரண்டு ஆசைகள் இருந்தன. ஒன்று அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும். இன்னொன்று அங்கு மேரி என்னும் பெண்னைத் திருமணம் செய்துகொள்லலாம் என்று நினைத்திருந்தேன். பாதியில் இடைநின்ற மேரியை நான் தான் மீண்டும் பள்ளியில் சேர்த்திருந்தேன்.

சாம்சனிடமும் விசாரித்தேன், குறவர் பெண்னைப் பிறசமூகத்தவர் திருமணம் செய்ய இயலுமாவென்று. அதிலொன்றும் தடையில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்னையும் மாப்பிள்ளையையும் தனது சமூகத்திற்குள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். அதேபோல மாலை ஆறுமணிக்குமேல் வீடுதிரும்பும் பெண்ணையும் விலக்கம் செய்துவிடுவார்கள். எல்லாப் பழங்குடிச் சமூகங்களைப் போலவே இனத்தூய்மை பேணும் சமூகம்தான் குறவர்சமூகமும்.

ஆனால் எனக்கும் அந்த தொண்டுநிறுவனத்திற்குமிடையில் பிரச்சினைகள் உருவாக வேலையை விட்டு நின்றுவிட்டேன். மூன்றுமாதங்களுக்குப் பிறகு சென்று பார்த்தபோது அங்கு சாம்சனுமில்லை, மேரியுமில்லை. குறவர்கள் வேறெங்கோ கூடாரம் அடிக்கக் கிளம்பியிருந்தனர்.

Wednesday, September 5, 2007

இறுதியாய்ச் சில வார்த்தைகள்

நண்பர்களே,
எனது 'போலிடோண்டு' பதிவிற்கு வரும் இதுவரை வெளியிடப்படாத சொச்சம் பின்னூட்டங்கள் ஒரேகுரலிலேயே சில கேள்விகளை முன்வைப்பதால் அவற்றின் சாராம்சம் மட்டும்.

1. நீ போலி டோண்டு ஆளா?

2. செந்தழல் ரவியின் அல்லக்கையா?

3. சமீபத்தில் பதிவெழுவதிலிருந்து விலகப்போவதாய் ஒரு நண்பர் சீன் போட்டதைப் பற்றி உன்னுடைய கருத்து என்ன?

நண்பர் என்று நினைக்கும் நண்பர்களுக்காகவும் எதிரி என்று நினைக்கும் நண்பர்களுக்காகவும் சில விளக்கங்கள்.

முதலில் நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.ஆனால் இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது.

போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை.

2. செந்தழல் ரவி சிலகாலங்கள் முன்புவரை கூட போலிடோண்டுவுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக போலி டோண்டுவே எழுதியிருக்கிறார். தரண் போன்றவர்களும் எழுதிவருகிறார்கள். ரவியும் இதை மறுக்கவில்லை. ஆனால் அது போலிக்கு ஆப்படிக்கும் யுக்தி என்கிறார். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை, லாஜிக் இடிக்கிறது என்றே கருதுகிறேன். இந்த கருத்தைச் சொல்வதால் எனக்கும் ரவிக்குமான தனிபட்ட நட்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்றே நம்புகிறேன். மறபடி ரவிதான் முடிவு செய்யவேண்டும்.

'ரவியிடம் ஓசித்தண்ணி வாங்கிக் குடிச்சியா, பிஸ்லெரி தண்ணி வாங்கிக் குடிச்சியா' என்றெல்லாம் வரும் பின்னூட்டங்கள் என்னை உளவியல்ரீதியாகத் தொந்தரவு செய்யும் என்று கருதினால், நண்பர்கள் மன்னிக்கவும், அத்தகைய பலவீனமான நிலையில் நான் இல்லை என்று சொல்ல நேர்வது தங்களுக்கு ஏமாறத்தை அளிக்கும் என்பதால் வருந்துகிறேன்.

மேலும் போலிடோண்டு ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர் என்று நம்பி ஏமாந்தோம் என்று சொன்னாலாவது அதில் ஒரு அர்த்தமும் அப்போதைக்கான நியாயப்பாடுமிருக்கிறது. ஆனால் அப்படியும்கூட நண்பர்கள் சொல்லத்தயாரில்லை. தமிழ்ச்சூழலில் புரட்சி என்ற வார்த்தை எவ்வாறு சீரழிக்கப்பட்டதோ, (சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஷாலின் பட்டம், 'புரட்சித்தளபதி'.) அதேபோல பார்ப்பன எதிர்ப்பு என்கிற பல ஆயிரம் பாரம்பரியம் கொண்ட ஒரு வீரியமிக்க சித்தாந்தம் தங்களின் சுயநல விளையாட்டுகளுக்காகவும் வேட்டைகளுக்காகவும் இங்கு சீரழிக்கப்பட்டது என்பதே எனது கருத்து.

உதாரணமாய் மாலனின் விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். மாலன் தனக்கேயுரிய பார்ப்பன இந்துதேசிய வன்மமனோபாவத்தோடேயே ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தினார். ஆனால் டோண்டுராகவன் போன்ற சோணகிரிப் பார்ப்பனர் 'முரளிமனோகர்' என்று பொய்ப்பெயரெழுதி மாட்டிக்கொண்டால் அடித்துத்துவைக்கும் ஓசைசெல்லாவோ மாலனை 'மதிப்புக்குரிய மாலனுக்கு' என்று விளித்தார்.

அது என்னங்க 'மதிப்புக்குரிய மாலனுக்கு'?. ஊடகத்துப்பார்ப்பனர் என்றால் மட்டும் அப்பீட் ஆவீர்களோ?

ரவியும் சென்சிட்டிவான ஈழத்தமிழர்கள் விவகாரத்தை 'மாலனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்' என்றெழுதி 'விளையாடி'னார். சென்சிட்டிவான விவகாரங்களை சீரியசாக அணுகாமல் விளையாட்டுத்தனமாகவே அணுகும் மனோபாவம் எப்போதுமே வாய்ப்பதில்லையே ரவி? உங்கள் குடும்பம் குறித்து கருப்புவும் போலிடோண்டுவும் எழுதியதுகூட சென்சிட்டிவான விஷயம்தான். ஆனால் அதற்குக் கோபப்படுகிற உங்களால், நாடிழந்து வீடிழந்து அவதியுறும் ஈழத்தமிழர்கள் மீது வீசப்பட்ட பார்ப்பன வன்மத்தை மட்டும் எப்படி உருட்டி விளையாடமுடிகிறது?

அதேபோல ஓசைசெல்லா பதிவெழுவதிலிருந்து விலகுகிறேன் என்று சொன்னபோது 'மீண்டும் எழுத வாருங்கள்' என்று அழைத்ததற்கு மிக முக்கியமான காரணம் அவர் தலித் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார் என்பதற்காகத்தான்

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். என்னுடைய முந்தைய பதிவிற்குக் காசி ஆறுமுகம் பெயரில் ஒருமையில் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தன. அது உண்மையான காசியா, அல்லது காசியின் பெயரில் வந்த போலிப்பின்னூட்டமா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையான காசியாக இருந்தால் அவர் கோபப்படுவதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன.

இப்போது செல்லா, தலித் கம்மனாட்டி என்று திட்டப்படுவதற்காக கோபம் கொள்கிற நான் காசி இதே வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்டபோது தெரிந்தோ தெரியாமலோ மௌனம் சாதித்திருக்கிறேன். என் தார்மீக அறமதிப்பீடுகளின் வீழ்ச்சி அங்கிருந்தே தொடங்கியதாகவே கருதுகிறேன். இதற்காக காசி போன்ற தலித்துகள் செருப்பாலடித்தால் வாங்கிக்கொள்வதற்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

செல்லா விவகாரத்திற்கு வருவோம். செல்லா விவகாரம் ஒரு தலித்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதியே பலபதிவாளர்களால் தார்மீக நியாய உணர்வோடும் அனுதாபத்தோடும் அணுகப்பட்டது என்று கருதுகிறேன். ஆனால் அவரோ பதிவெழுத வந்துவிட்டு தோழர்.தமிழச்சியின் புகைப்படம் போட்டு அவர் அழைத்ததால்தான் வந்தேன் என்று அவருக்காக கசிந்துருகிக் கண்ணீர் சிந்திய மற்ற அனைவரையும் கேணக்கிறுக்கர்களாக்கிவிட்டார்.

தற்போது தமிழ்மணத்தைத் திறந்தாலே தமிழச்சியின் புகைப்படம் தாங்கிக் குறைந்தபட்சம் இரண்டு பதிவுகளாவது வருகின்றன. இதுவரை பெரியாரின் எழுத்துக்களையோ பேச்சுகளையோ பதிவிடாதவர்கள், குறைந்தபட்சம் பெரியாரின் ஒரே ஒரே மேற்கோளைக்கூட காட்டாதவர்கள், திடீர் 'பெரியாரிஸ்ட்' ஆகிவிட்டார்கள்.
இப்படியாக இணையத்தில் பெரியாரியம் 'பரவிவருகிறது'. வாழ்க பெரியாரியத்தின் வெற்றி!.

ஏதோ குமுதத்தின் அட்டைப்படத்தில் நடிகையின் புகைப்படம் போடுவது போல் ஆகிவிட்டது தமிழச்சியின் பதிவுலகப் புகைப்படம். இதில் லேட்டஸ்ட் கண்றாவி லக்கிலுக்கின், 'தோழர்களின் வேண்டுகோளையடுத்து தோழர் தமிழச்சியின் புதிய படம் போடப்பட்டிருக்கிறது!' என்கிற 'திராவிட அறிவிப்பு' (தோழர்.தமிழச்சி என்னும் பதிவு), ஏதோ ரஜினியின் புதிய படம் ரிலீஸைப் போலவோ அல்லது டூரிங்டாக்கீசில் எழுதி ஒட்டுவார்களே, பழையபடம் புதிய காப்பி என்று, அதைப்போலவும்.


இதைத் தமிழச்சியும் மறைமுகமாக ரசிக்கிறார், அனுமதிக்கிறார் என்றே கருத வாய்ப்பிருக்கிறது. தமிழச்சியின் போராட்டத்தை 'வாழ்த்துகிற' பதிவுகளில் பெரும்பான்மை மறைமுகமாக வழிகிற விண்ணப்பங்களாகவே அமைகின்றன. வேறென்ன, தமிழச்சி தலைமையில் பெரியார் பணி 'முடிப்போம்' என்று தோழர்கள் கோசமிடாதது ஒன்றுதான் குறை.

ஆணோ, பெண்ணோ அழகை ரசிப்பது, சைட் அடிப்பது, ஜொள்விடுவது, இதெல்லாம் தனிமனித விவகாரங்கள். அதைத் தடுக்கும் கலாச்சாரப்போலீசின் கறார்த்தன்மையல்ல எனது மொழி. ஆனால் அதற்கு ஏன் நண்பர்களே பெரியாரைப் பயன்படுத்துகிறீர்கள்? அந்த ஈரோட்டுக்கிழவன் தன் 95ஆம் வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்து ரோடுரோடாகச் சென்றுபிரச்சாரம் செய்து கண்டநாய்களிடமும் செருப்பாலும் மலத்தாலும் அடிவாங்கியது நீங்கள் 'நூல் விடுவதற்கா'?

இறுதியாய்ச் சில வார்த்தைகள் என்று நான் சொன்னது இதைத்தான் : இனிமேல் கருத்தியலைத் தனது தனிமனித விவகாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்பவர்களை ஆதரிக்கப்போவதில்லை. மேலும் போலி டோண்டு விவகாரம் சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கிற முக்கியமான விவகாரமில்லை என்று நான் கருதுவதால் இனி போலிடோண்டு விவகாரம் பற்றிப் பதிவெழுதப்போவதில்லை. வேறு உருப்படியான காரியங்கள் இருக்கின்றன. நன்றி.

Tuesday, September 4, 2007

மதுரைப் பட்டறையிலுமா மாலன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?



சென்னைப் பதிவர் பட்டறை வெற்றிகரமாக நடந்து முடித்ததையடுத்து மதுரையிலும் அந்த கருமாந்திரத்தை நடத்தப்போவதாக தருமி எங்கோ சொன்னதாக ஞாபகம். அனேகமாக அது மதுரை அமெரிக்கன் காலேஜில் நடக்கலாமென்றும் அங்கேயும் 'சிறப்புறை ஆஆஆஆஆற்ற்ற்ற்ற்ற மாலன் அழைக்கப்படுவார் என்று லிவிங்ஸ்மைல் வித்யா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் மாலனின் சிறப்புரை குறித்து நம் கற்பனைக் கழுதையைத் தட்டிவிட்டோம். (கொள்ளுவாங்கிக் கட்டுபடியாகாததால் குதிரையை விற்றுவிட்டோம்)


மாலன் ( கோட்டைச் சரிசெய்தபடி...) : இப்போது சிவாஜிகணேசன் இறந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம். இதோ மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மாலை போடவருகிறார். பின்னாலேயே கவிஞர் வைரமுத்துவும் வருகிறார்.

கருமி : மாலன் சார், இழவு செய்தி சொல்ல இது சன்டிவி இல்லை. அங்கிருந்து நீங்க வெளியே வந்துட்டீங்க. இது பதிவர் பட்டறை.

மாலன் : ஓ, சாரி. சரி எனக்கு என்ன தலைப்பு?

தருமி : வலைப்பதிவாளர்களின் நன்னடத்தைகள்.

மாலன் : இதையேதானே சென்னையிலும் பேசினேன். போரடிக்குது. வேற தலைப்பு கொடுங்க.

தருமி : என்ன தலைப்பு வச்சிக்கலாம்?

மாலன் : ஏதோ ஒண்ணு, ஹிந்து ராம் நல்லவர், பெயரிலி மோசம்ன்னு பேசணும். அவ்வளவுதான்.

தருமி : என்ன பேசணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்புறமென்ன ஏதாவது தலைப்பில பேசுங்க.

மாலன் : அன்பார்ந்த பதிவுலகப் பெருமக்களே....

ஓசை செல்லா (உடனடியாக எழுந்து) : சார், அமெரிக்கன் காலேஜ் வாசலில் ஒரு அழகான காக்கா பார்த்தேன். பக்கத்துலயே ஒரு பாட்டி வடை சுடறதையும் பார்த்தேன். அதைப் போட்டோ எடுத்துட்டு அரைமணிநேரத்தில வந்திடறேன்.

மாலன் : ஏன் அதுக்கு இப்ப போறீங்க?

செல்லா : நீங்க ஏதாவது உளறிவைப்பீங்க. அவனவன் ஏன் எதிர்த்துக் கேள்வி கேக்கலைன்னு என்னைக் கேட்பான். இது தேவையா எனக்கு?

செந்தழல் ரவி : நான் காலையில கொரியபிகருக்குக் குட்மார்னிங் சொல்ல மறந்துட்டேன். போன்ல குட்மார்னிங் சொல்லிட்டு ஒரு மணிநேரத்தில வந்திடறேன்.

லக்கிலுக் : சார், நான் ஒரு தம்மடிச்சுட்டு மதியத்துக்குள்ள வந்திடுறேன்.

வரவணையான் : சார், எனக்கு அர்ஜெண்டா ஒண்ணுக்கு போகணும். போயிட்டு ஈவ்னிங்க்குள்ள வந்திடறேன்.

மாலன் : நோ, நோ. இப்படி எல்லோரும் போயிட்டா நான் யார்கிட்ட பேசறது. தருமி, செல்லா போட்டோ எடுக்கணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து கேமராவைப் பிடுங்கிவைங்க.

தருமி : சரிங்க சார்.

மாலன் : ரவி போன் பேசணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து செல்போனைப் பிடுங்கிவைங்க.

தருமி : சரிங்க சார்.

மாலன் : லக்கி சிகரெட் குடிக்கப் போகணுங்கிறார். அவர்கிட்டயிருந்து சிகரெட் பாக்கெட்டைப் பிடுங்கிவைங்க.

தருமி : சரிங்க சார்.

மாலன் : வரவணையான் யூரின் பாஸ் பண்னணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து.....

வரவணை : நோஓஓஓஓஒ (அலறுகிறார்) நான் எங்கேயும் போகலை. இங்கேயே இருக்கேன்.

(அதற்கப்புறம் என்ன நடந்தது? மாலனின் உளறலை மதுரைப் பட்டறையில் காண்க).

Sunday, September 2, 2007

தோழர்.போலி டோண்டுவும் துப்பறியும் சாம்புகளும்


பரபரப்பாகப் பேசப்படும் எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் எதிர்வினை செய்வதோ, உடன் கருத்து சொல்வதோ அவசியமானதுதானா என்னும் ஆயாசம் மிஞ்சுகிறது என்றபோதும் இந்த போலி விவகாரம் குறித்து ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமென்று தோன்றுகிறது. அதற்குமுன் தோழர் டூண்டு (எ) போலி டோண்டுவிற்கும் எனக்குமான உறவு குறித்து ஒரு சில பகிர்தல்கள்.

வலையுலகில் எழுதவந்த ஆரம்பகாலங்களில் போலி விவகாரம் ஒரு சுவையான மர்மநாவலுக்கான ருசியையே ஏற்படுத்தியது. அதிலும் ஒவ்வொரு வலைப்பதிவாளர் சந்திப்புகளிலும் இதுகுறித்து அலசப்படுவதும், பக்கத்திலிருப்பவரே உண்மையே போலியா என்கிற பதட்டமும் சந்தேகமும் அனைவருக்கும் தொற்றிக்கொள்வதைப் பார்க்க மிகுந்த சுவாரசியமாயிருக்கும். அதிலும் ஒருசில நண்பர்கள் இந்த மர்மங்கள் குறித்த மாயசாகசங்களை விளக்குவதில் நிபுணர்கள்.

இன்னொருபுறம் இணையத்தில் கணிசமான ஆதிக்கம் செலுத்திவருபவர்களும், உலகமெங்கும் ஒரு விரிவான நெட்வொர்க் கொண்ட பார்ப்பனர்களே போலிடோண்டுவைப் பிடிக்கமுடியாமல் திணறுவதும், அதுகுறித்துப் புலம்புவதும் இன்னும் வேடிக்கை. மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் பரவலாகத் தேடப்பட்டு வந்தகாலத்தில் வீரப்பனோ மிக அனாயசமாக நாகப்பன், ராஜ்குமார் போன்றவர்களைக் கடத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். ஒருகூட்டத்தில் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இதைச் சுவைபடப் பேசினார். "வீரப்பனைப் பிடிக்க இவங்கெ போனா இவெங்களை வீரப்பன் பிடிசுட்டுப் போயிடுறான்'. அதேபோலத்தான் ஆப்பு, போலிடோண்டு யார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் தனது எதிரிகளின் புகைப்படங்கள், குடும்ப உறுப்பினர்கள், பணியிடங்கள், அவற்றின் முகவரிகள், மின்னஞ்சல்கள் ஆகிவயற்றை அனாயசமாகத் தோழர் ஆப்புவும் டூண்டுவும் தங்கள் பக்கங்களில் வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் வீரப்பன் விவகாரம் முடிவிற்கு வந்ததைப் போலவே தோழர் டூண்டு இவர்தான் என்று அவரது புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை, - பார்ப்பனர்களால்கூட வெளியிடமுடியாத 'ரகசியங்களை'- 'திராவிட' நண்பர்கள் வெளியிட்டிருக்கிறாகள். ஆனால் இதுகுறித்துச் சிலநாட்களாக மவுனம் சாதித்த திரு.போலிடோண்டுவோ இப்போது இதை மறுத்துத் தன் பக்கத்தில் எழுதியிருப்பது மட்டுமில்லாது இந்த 'ரகசியங்களை வெளிக்கொணர்ந்த' தோழர். செந்தழல்ரவியே போலிப்பக்கங்களில் பல காமக்கதைகளை எழுதியிருக்கிறார் என்று அவர் சில ஆதாரஙளை வெளியிட்டிருக்கிறார். சரி, எனக்கும் போலிடோண்டுவுக்குமான உறவு குறித்துச் சொல்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஆரம்பகாலங்களில் போலிடோண்டு மற்றும் ஆப்பு ஆகியோரின் பக்கங்களை ரெகுலராகப் படித்துவந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு தயக்கமுமில்லை. விடாதுகருப்பு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டபோது அதைக்கண்டித்தும், டூண்டுவைத் தோழர்டூண்டு என்று விளித்தும் கவிதை எழுதியுமிருக்கிறேன். (அந்தப் பதிவுகளை புதிதாக வலைப்பக்கங்களுக்குள் வந்திருக்கும் நண்பர்களுக்காகக் கீழே தந்திருக்கிறேன்.)

ஒருமுறை தோழர்.டூன்டுவேகூட தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுமிருக்கிறார். இதை அவர் பின்னூட்டமாகவுமிட்டிருந்தார். வேறுயாராக இருந்தால் பிரச்சுரிப்பார்களா என்பதுகூட சந்தேகமே. ஆனால் சமீபகாலமாக அவரது பக்கங்களை நான்போய்ப் படிப்பதில்லை என்பதற்குக் காரணம் அவரது கெட்டவார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்பதே தவிர வேறல்ல.

மற்றபடி தன்னை எதிர்க்கும் பதிவர்களின் குடும்பங்கள் குறித்து கெட்டவார்த்தைகளில் எழுதுகிறார்தான். ஆனால் மற்றவர்களின் குடும்பங்கள் வசைபாடப்படும்போது விலகிப்படிக்கிற மனோநிலை தன்னைப் பற்றியோ தன் குடும்பம் குறித்தோ அமையும்போது அவ்வாறு அமைவது அனைவருக்கும் சாத்தியமாயில்லாதயாயிருக்கிறது. 'ங்கோத்தா நீ யாருடா என் அம்மா பற்றிப் பேச என்று கோபமாய் வெளியாகிறது. (இதுவே என்ன முரண்நகை?).

ஆனால் நீண்டநாட்களுக்குப் பின் ஓசைசெல்லாவிற்கும் டூண்டுவிற்குமான மோதல்தான் என் கவனத்தில் பட்டது. அவர் கெட்டவார்த்தைகளை விடவும் மோசமானது செல்லா ஒரு தலித் என்பதால் பறப் பு...., பள்ளப் பு.... என்றெல்லாம் திட்டியிருந்தார். இது என்ன ஒரு தலித்விரோத ஆதிக்கசாதித் திமிர்? பார்ப்பனீயம் என்பது டோண்டுராகவனுக்கு மட்டும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதில்லை என்பதைப் போலி டோண்டுவும் நிரூபித்திருந்தார்.

பார்ப்பனீயம் என்பது வெறுமனே பார்ப்பனர்களிடம் மட்டும் இருப்பதில்லை, நமக்குள் இருக்கும் பார்ப்பனீயத்தைக் களையவேண்டும். போலிடோண்டுவிடம் பார்ப்பனீயம் இல்லையென்றால் ஒரு தலித்சாதியை இழிவாய் வசைபாடும் மனோபாவம் வந்திருக்காது. அதேபோல உண்மைத்தமிழனைப் பொறுத்தவரை அவரது மொழிநடையும் அவர்து கருத்துக்களும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை. ஆனால் அவரது உடல் ஊனத்தைக் குறிப்பிட்டும் அவரது வறுமை குறித்தும் வசைபாடி போலிடோண்டு எழுதியது அவர் இதுவரை பயன்படுத்திவந்த கெட்டவார்த்தைகளை விடவும் கொடூரமானது.

அதேபோல டோண்டுவின் பதிவிற்கு யாரும் பின்னூட்டமே இடக்கூடாது என்னும் அவரது பிடிவாதம் ஜனநாயகமற்றது மட்டுமல்ல, சிறுபிள்ளைத்தனமானதும்கூட. டோண்டுவின் சஞ்சய்தத் பற்றிய பதிவில் நான் ஒரு பின்னூட்டமிட்டிருந்ததைத் தொடர்ந்து தோழர்.டோண்டு என்னைக் குறித்தும் அவர் பக்கத்தில் எழுதியிருந்தார். மேலும் சர்வேசன் பதிவில் நான் இட்டிருந்த பின்னூட்டம் தொடர்பாகவும்.

ஆனால் ஒன்றும் பெரிதாக என்னைப் பற்றி மோசமாகவோ அசிங்கமாவோ எழுதவில்லை. ஆனால் டோண்டுராகவன் கருத்தாகச் சிலவற்றைப் பட்டியலிட்டு, (ஆண் முறைதவறிய பாலுறவில் ஈடுபட்டால் பெண்களும் ஈடுபடலாம்... இப்படியாக) இதையெல்லாம் நீ ஒத்துக்கொள்கிறாயா? என்று கேட்டிருந்தார்.

உண்மையிலேயே இதையெல்லாம் டோண்டுராகவன் சொல்லியிருந்தால் அதெல்லாம் வரவேற்கத்தக்கதுதான். பெரியார் சொன்னதற்கெல்லாம் மேலாக ஒன்றும் அதிர்ச்சிகரமாக, புரட்சிகரமாகவெல்லாம் டோண்டு சொல்லிவிடவில்லை. ஆனால் இதைச் சொன்னால் தோழர்.டூண்டு அடுத்து என்னைப் பார்த்து கேட்கும் கேள்வி, 'அப்படியானால் உன் வீட்டுப் பெண்களுக்குக் காண்டம் வாங்கிக் கொடுத்து ஊர்மேய அனுப்புவாயா' என்பதாகத்தானிருக்கும். (ஏனெனில் செல்லா போன்ற பலருக்கும் இந்தப் கேள்வியையே ரெடிமேடாக வைத்திருக்கிறார்.)

அப்படியானால் பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளராகவோ, பேச்சாளராகவோ, போராளியாகவோ இருந்திருக்கமுடியாது. தோழர்.டூண்டுவின் கருத்துப்படி பெரியார் திருச்சியிலோ, சென்னையிலோ, ஈரோட்டிலோ தன் வீட்டுப் பெண்களுடன் சாலையோரத்தில் நின்று ரேட் பேசும் ஒரு மாமாவாகத்தானிருந்திருக்க முடியும் என்பதைத் தாண்டியும் வேறென்ன சொல்வது?

தோழர்.டூண்டுவும் விடாதுகருப்பும் ஒன்றுதான் என்று முன்பும், இப்போதும் சொல்லப்படுகிறது. அது உண்மையா, பொய்யா என்று தெரியாவிட்டாலும் ஒன்றுமட்டும் தெளிவாகச் சொல்லமுடியும். இருவரின் எழுத்துக்களிலுமே ஆண்மய்யப் பார்வைகள்தானிருக்கின்றன. இப்போது நடப்பது தர்மயுத்தமா, சகோதரயுத்தமா என்பது தேவையில்லாத ஒரு சர்ச்சைதான் என்று நினைக்கிறேன்.

மேலும் மூர்த்தியாக இருந்தாலும் விடாதுகருப்புவாக இருந்தாலும் போலிடோண்டுவாக இருந்தாலும் அவரை மனநோயாளி என்று குறிப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எல்லோருக்குமே மனநோய் இருக்கிறது, அதன் சதவிகிதம்தான் மாறுகிறது என்பது உளவியலின் அடிப்படை. போலிடோண்டு மனநோயாளி என்றால் டோண்டு, இதுவரை போலிடோண்டுவோடு இருந்தவர்கள், அல்லது போலிடோண்டு பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள், தமிழ்மணத்தைத் திறந்தவுடனே இன்றைக்குப் போலிடோண்டு பற்றி யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதித் தேடிப்படித்து (மற்ற பதிவுகளுக்கெல்லாம் இரண்டாம்வாய்ப்பே அளித்துவிட்டு) படிப்பவர்கள், எனது இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்து உள்வந்து இதைப்படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், எழுதிக்கொண்டிருக்கும் நான் எல்லோருமே மனநோயாளிகள்தான்.

இரண்டுவிசயங்களை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த போலி(ஸ்) திருடன் விளையாட்டின் நேர்மறையான (அ) எதிமறையான சுவாரசியம் பிடித்துப்போன யாரும் இந்த விளையாட்டை அவ்வளவாக முடிவிற்குக் கொண்டுவந்துவிடமாட்டார்கள். எனவே மர்மநாவல் முடிந்துவிட்டதா அல்லது தற்காலிக இடைவேளையா, அல்லது முதல்பாகம் மட்டும்தான் முற்றுப்பெற்றிருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.

ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது இணையஎழுத்து என்பது ஏதோ படிப்பது, எழுதுவது, உரையாடுவது, தனக்கான நட்புவட்டத்தை உருவாக்கிக்கொள்வது என்பதைத் தாண்டி யார் யார் என்ன அய்.பியில் எழுதுகிறார்கள் என்று புலனாய்வது, கண்டுபிடிப்பது, அம்பலபடுத்துவது என்கிற மாயச்சாகசவேட்கை பலருக்கும் பிடித்தமாயிருக்கிறது. இதில் சிக்கிக்கொள்ளாமல் கும்மியடிப்பவர்களே பாக்கியவான்கள்.







பதிவு 1

தோழர் டூண்டு


வன்மத்தின் மொழியிலிருந்து
வார்த்தைகளை உருவுகிறாய்.
வன்மத்தின் திசையிலிருந்து
விலகவே விரும்புகிறேன் நான்.
ஆனாலும் வன்மத்தின் ஆதி
உன்னிலிருந்து தொடங்கியதில்லை
என்பதை உணர்கிறேன் நான்
மெய்யாலும் மெய்யாலுமே..
காற்றைக்கிழிக்கும்
உன் இரைச்சலினூடே
எத்தனை ஓசைகள்
எனக்குக்கேட்கின்றன?
கணவாய்களில் கனைக்கும்
ஆடுகளின் மேய்ச்சல் ஓசை,
கருப்பு ரத்தங்களால் நிரம்பி வழியும்
ஆதி மதுக்குடுவைகள்
உடைந்து நொறுங்கும் ஓசை,
ஸ்வஸ்திக் ஒரு காற்றைப் போல்
ஆம் காற்றைப் போலவே
திசைகளை விழுங்கும் வேளை
தென் திசையில் மண்டியிட்டு
அன்னியப் பாதங்களுக்கு
முததமிட்ட ஓசை
இன்னமும்..இன்னமும்
ஆனாலும் நான்
உன் காலடிகளைப் பின்பற்றமுடியாது
மெய்யாலும் மெய்யாலுமே
நீ வெற்றிபெற்ற கணம்தான் எது?
உன்னோடு கைகுலுக்கலாமா
வேண்டாமா என்று நான் குழம்பிய கணமா?.

பதிவு2

உங்களுக்கு commonsense இல்லையா?



சமீபகாலமாக வலையுலகில் பொதுப்புத்தி குறித்து அதிகமும் பேசப்பட்டது, குறிப்பாக அப்சல் விவகாரத்தில். ஆனால் commonsense என்றழைக்கப்படும் பொதுப்புத்தி குறித்து ஆழமான புரிதலின்றி மேலோட்டமாகவே கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பொதுவாகவே புத்தி என்பதே இயற்கையானதல்ல, மாறாகக் கட்டமைக்கப்பட்டதே. மொழி என்பது சொற்களாலானது, சொற்கள் அர்த்தங்களால் ஆனவை என்ற வழமையான மொழியியல் புரிதலிலிருந்து விலகி சொற்கள் அர்த்தங்களைப் பதிலீடு (subtitute) செய்வதில்லை, மாறாகக் குறியீடு (signify) மட்டுமே செய்கிறது என்னும் சிந்தனையின் அடிப்படையில் குறியீடு, குறிப்பான் ஆகிய கருத்தாக்கங்களை முன்வைத்தது பின்நவீனம்.

பொதுப்புத்தி என்பது சமூகத்தில் ஆதிக்கத்தைக் கைக்க்கொண்ட பெருங்கதையாடல்களால் கட்டமைக்கப்படுவது. நம்சூழலில் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் தமிழ்ச்சினிமாவில் கள்ளக்கடத்தல் வில்லன்களின் பெயர்கள் பீட்டராகவோ முஸ்தபாவாகவோ இருப்பது, தலித்துகள் உணர்வற்ற அடிமைகளாகச் சித்தரிக்கப்படுவது எனப் பலவற்றைச் சொல்லலாம். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், பால்மீறிகள், நாடோடிகள், பழங்குடிகள் என விளிம்புநிலையினர் குறித்து பெருங்கதையாடல்கள் கட்டமைக்கும் பிம்பங்களே பொதுப்புத்தியாக உருமாற்றமடைகிறது.

இத்தகைய போக்கிற்கு எதிரான எதிர்வினைகளும் எழாமலிருப்பதில்லை. அத்தகைய மனநிலைகளைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். உதாரணமாக நம் இளைஞர்களிடையே உலவும் பாலியல்கதைகளில் பெரும்பாலான கதைகளின் நாயகர்களாக எம்.ஜி.ஆரும் காந்தியும் இருப்பது. இவர்கள் இருவரும் திருஉரு(icon)க்களாக்கப்பட்டவர்கள். இந்த திரு உருக்களின் மீதான எரிச்சலே பாலியல்கதைகளாக மாறுகிறது. இன்னொரு உதாரணமாகக் கேரளச்சமூகத்தில் வழக்கத்திலுள்ள தெறிப்பாட்டைச் சொல்லலாம். நம் வலைப்பூக்களிலும் இத்தகைய உதாரணங்களைச் சொல்லமுடியும்

பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள், சாதி என்பது இயற்கையானதுதான், இந்துமதமே உண்மையான மதம், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழ்நாடே கெட்டுப்போனது அதற்கு முன் இங்கிருந்த ஒரே பிரச்சினை பாலாறும் தேனாறும் ஓடியதால் ஏற்பட்ட ஈ மற்றும் கொசுத்தொல்லைப் பிரச்சினை மட்டுமே என்பதாகவே பொதுப்புத்தியின் போக்கிலிருந்து பேசுபவைதான் ஹரிஹரனின் எழுத்துக்கள். இதுபோன்ற போக்குகளுக்கு எதிர்வினையாகவே விடாதுகருப்பு, டூண்டு(எ) போலிடோண்டு ஆகிய தோழர்களின் எழுத்துக்கள் அமைகின்றன.

இவர்களின் எழுத்துக்களில் 'கெட்ட'வார்த்தைகள் இருக்கின்றதா என்றால் 'ஆம்'. ஆனால் கெட்டவார்த்தை, நல்லவார்த்தை என்பதே பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டதுதான். அவைகள் கெட்டவார்த்தைகள் என்றால் பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களை தஸ்யூக்கள், சூத்திரர்கள், வேசிமக்கள் என்று குறிப்பிடும் இந்துமதப் பிரதிகளைக் கொளுத்தி விட பார்ப்பனர்கள் தயாராக இருக்கிறார்களா?


மேலும் வியாசர்பாடியில் வசிக்கும் ஒரு தலித்துக்கு 'ஙோத்தாபாடு' என்பது சாதாரணமான வார்த்தை. நிச்சயமாக திருவல்லிக்கேணி பார்ப்பான் அந்த வார்த்தையை உச்சரிக்கமாட்டான். அதற்காக அந்த பார்ப்பான் நல்லவன் என்று சொல்லிவிட முடியுமா? கெட்டவார்த்தைகளை விட மோசமானவை சாதிய அதிகாரம் நிறைந்த வார்த்தைகள்.
(ஹரிஹரனின் எழுத்துக்கள் போலிடோண்டு மற்றும் விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்களை விடவும் நாகரீகமானவை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உண்மையில் போலிடோண்டு, விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்கள் தடைசெய்யப்படவேண்டியவை என்றால் நிச்சயமாக ஹரிஹரனின் எழுத்துகளும் தடைசெய்யப்படவேண்டியவைதான்.
டூண்டு, விடாதுகருப்பு எழுத்துக்களில் ஆணாதிக்க, ஆண்மய்ய மற்றும் ஆண்நோக்குப் பார்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதுகுறித்து எனக்கும் கடுமையான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நான் கருத்துமாறுபடுவதாலேயே அல்லது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன என்பதாலேயே ஒரு எழுத்தைத் தடை செய்யவோ தணிக்கை செய்யவோ கோருவது நியாயமாகாது. தணிக்கை, தடை, தண்டனை ஆகிய கருத்தாக்கங்களை மனித உரிமை ஆர்வலர்களும் நவீனச்சிந்தனையாளர்களும் கேள்விக்குள்ளாக்கிவரும் சூழலில் விடாதுகருப்பு, போலிடோண்டு, ஹரிஹரன் ஆகிய யாருடைய எழுத்துக்களாக இருந்தாலும் தடை செய்வதோ அல்லது தணிக்கை செய்வதோ நீதியாகாது. )

ஒரு வசதிக்காக ஹரிஹரனின் எழுத்துக்களைப் பெருங்கதையாடல்கள் என்றும் விடாதுகருப்பு, டூண்டு ஆகியோரின் எழுத்துக்களை சிறுகதையாடல்கள் என்றும் பிரித்துக்கொள்ளலாம்(ஒரு வசதிக்காக மட்டுமே). ஆனால் இத்தகைய இருவிதமான அணுகுமுறைகளுமே ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு உதவாது. இரு போக்குகளுமே பிடிவாதமான முன் தீர்மானங்களைக் கொண்டவை.

அப்படியானால் இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது? பொதுவாக நாம் ஒரு பிரதியை அணுகும்போது உடன்பாட்டு வாசிப்பு, எதிர்மறை வாசிப்பு என்கிற இருவிதமான வாசிப்புகள் வழியாகவே அணுகுகிறோம். இது முன் தீர்மானங்களின் அடிப்படையில் அணுகுவது. இது உங்களுக்கு எதையும் புதிதாக கற்றுத் தராது. அறிந்தவற்றிலிருந்து விலகும்போதுதான் நாம் புதிய அர்த்தங்களைச் சென்றடையமுடியும், மேலும் கண்டடைய முடியும்.

விவாதம் என்பது நீங்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்தை மறு உறுதி செய்வதுதான். 'என்னுடைய கருத்து மட்டுமே சரியானது" என்னும் புள்ளியிலிருந்தே இது தொடங்குகிறது. ஆனால் இதற்கு மாறாக உரையாடல் என்பது "என் கருத்திலும் தவறு இருக்கலாம்" என்னும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது.

உரையாடல் மட்டுமே நமக்குப் புதிய புரிதல்களை உருவாக்க உதவும். பொதுப்புத்தியிலிருந்து விலகுவதுமட்டுமே இதற்கான வழி.
எனவே, இனி யாராவது "உனக்கு commonsense இருக்கிறதா?" என்று கேட்டால் தயங்காமல் "எனக்கு commonsense இல்லை" என்று பெருமிதத்தோடு கூறுங்கள்.

அறிந்தவற்றிலிருந்து விலகுங்கள், அறியாமையிலிருந்து தொடங்குங்கள், உரையாடப் பழகுங்கள். உரையாடுவோம்