நேற்று மதியம் நண்பர் ஜ்யோராம்சுந்தரின் 'காமக்கதைகள்' பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன். (சுந்தர் முழுமையாக த.மணத்திலிருந்து நீக்கப்படவில்லை என்று நம்புகிறேன்.) சுந்தரிடம் பேசியபோது இதுகுறித்த முன்னறிவிப்பு மின்னஞ்சல்கள் தனக்கு எதுவும் தமிழ்மணத்திலிருந்து அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பின்போது தோழர்.பைத்தியக்காரன், 'தமிழ்மணம் ஒரு பதிவரை எந்த அடிப்படையில் நீக்குகிறது?, குறிப்பாகத் தமிழச்சி' என்று அச்சந்திப்பிற்கு வந்த தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவரான தோழர்.சங்கரப்பாண்டியனைப் பார்த்து வினவினார்.
அப்போது சங்கரப்பாண்டி, " ஒரு பதிவர் தன்னைத் தமிழ்மணத்தில் இணைக்கும்போது அளிக்கப்படும் விதிகளின் அடிப்படையிலேயே அவர் நீக்கப்படுகிறார்' என்றும் 'அவரது எழுத்துக்கள் குறித்து பெரும்பான்மையினரான பதிவர்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் வரும்போது நீக்கப்படுகிறார்' என்றும் தெரிவித்தார்.
ஆனால் பைத்தியக்காரனின் கேள்விக்கு முன்னால் ஒரு பதிவர் சுந்தருக்குத் தொடர்ச்சியான நெகட்டிவ் ரேட்டிங் விழுவது குறித்தும், வெகுஜன அபிப்பிராயம் என்ற அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடுவது சரியா என்னும் பொருள்பட ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக நானும் தமிழச்சி உள்ளிட்ட பல பதிவர்கள் வெகுஜன அபிப்பிராயத்தின் அடிப்படையில் மட்டுமே நீக்கப்படுவது என்பது எப்படிச் சரியாகும், உதாரணமாகப் பார்ப்பனியம் குறித்து ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார் என்றால், பல பார்ப்பனர்கள் அவர் குறித்து அதிகப் புகார்களை அனுப்பினால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது எப்படிச் சரியானதாக இருக்கும் என்று கேட்டேன். ஆனால் சங்கரப்பாண்டி 'தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் அந்தப் பதிவுகளைத் தான் படிப்பதாக'த் தெரிவித்தாரே தவிர, அவரளித்த பதில்கள் திருப்தியளிப்பதாயில்லை.
இப்போது சுந்தர் விவகாரத்திற்கு வருவோம். சங்கரப்பாண்டி சந்திப்பில் தெரிவித்ததைப் போல குறைந்தபட்சம் எச்சரிக்கைகளாவது சுந்தருக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும். எந்த முன்னறிவிப்புமின்றி பதிவர் நீக்கப்படுவது ஜனநாயகத்தின்பாற்பட்டதல்ல.
மேலும் வெகுஜனத்தளங்களில் எழுத விருப்பமில்லாதவர்கள்/ வாய்ப்பற்றவர்களே பெரும்பாலும் வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இது தணிக்கைமுறையினின்று தப்பிக்கும் சுதந்திரம். ஆனால் மீண்டும் அதே வலைப்பூக்களை வழக்கமான தணிக்கைமுறைகளைக் கொண்டே கழுத்தை நெறிப்பது எவ்வகையில் நீதி?
தமிழ்மணம் இதுகுறித்து தெரிவித்துள்ள விளக்கத்தில் 'தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.
'என்றும் 'தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.' என்றும் தெரிவித்துள்ளது. அப்படியானால் 'பக்தி' என்று தலைப்பிட்டு பதிவின் உள்ளே காமக்கதைகள் எழுதினால் பிரச்சினையில்லையா?
பொதுவாகவே கலைஞர்களும் எழுத்தாளர்களும் வெகுஜன அபிப்பிராயங்களுக்கும் பொதுப்புத்திக்கும் அப்பாற்பட்டவட்டவர்கள். பொதுப்புத்தியை அப்படியே பிரதிபலிக்க செய்தித்தாள் நிருபர் போதும், கலைஞர்களோ எழுத்தாளர்களோ தேவையில்லை. ஆனால் அத்தகைய எழுத்துக்களை மீண்டும் பொதுப்புத்தி அடிப்படையிலேயே மதிப்பிடுவதன் மூலம் தமிழ்மணம் 1, மாற்றுச்சிந்தனை எழுத்தாளர்களை உரையாடல் வெளியிலிருந்து அப்புறப்படுத்துகிறது அல்லது, மீண்டும் பொதுப்புத்திக்குத் தள்ளுகிறது. இது ஆரோக்கியமான எழுத்துக்களை வளர்க்காது. இங்கே இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். சுந்தர் நீக்கப்படும்போது படித்த அறிவுஜீவிகளிடமிருந்து வருகின்ற இக்கண்டனங்கள் தமிழச்சியை நீக்கப்படும்போது வராததையும் தொடர்ச்சியான கள்ளமவுனம் கடைப்பிடிக்கப்பட்டதையும் நாமறிவோம். குறிப்பாக பைத்தியக்காரன் போன்ற மாற்றுச்சிந்தனைகளை அறிமுகப்படுத்தி எம்போன்றவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பதிவர்களும் மவுனம் சாதித்தபோது அதிர்ந்த நான் நேரடியாகவும் பகிடியாகவும் ஒருமுறைக்குமேல் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
ஆனால் பதிவர் சந்திப்பின்போதாவது பைத்தியக்காரன் தமிழச்சி நீக்கம் குறித்துக் கேள்வியெழுப்பினார். ஆனால் கருத்துரிமை, பன்மைத்துவம், பெண்ணெழுத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நான் நம்பும் அய்யனார், சுந்தர், ஆடுமாடு போன்ற பதிவர்கள் இதுகுறித்துச் சின்னஞ்சிறு கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாதது வருத்தத்திற்குரியதே.
நானறிந்தவரை பின்நவீனம், மாற்றுச்சிந்தனைகளை முன்னிறுத்தும்/ ஆதரிக்கும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் பொதுவெளியில் திணிக்கப்படும் கருத்தியல் மற்றும் நேரடியான வன்முறைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றியே வந்திருக்கிறார்கள்.
மொழிவிளையாட்டு என்பது, மொழியின் அதிகாரத்தைக் கேள்விகேட்கும், அதிகாரத்தை உடைக்கும் நுண்ணரசியல் செயல்பாடு என்றே நான் நம்புகிறேன். அல்லாது அது வெறுமனே வடிவம் மற்றும் உத்தி சார்ந்த எழுத்துமுறையாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுமெனில் நாம் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் வாரிசாவோமேயல்லாது வேறொன்றில்லை. அது மீண்டும் விளையாட்டுகளைப் பார்த்து ரசித்து 'பலே' போடும் மேட்டுக்குடி அழகியல் பார்வைகளையே உற்பத்தி செய்யும்.
மாற்று அரசியல்/ இலக்கியம்/ சிந்தனை, அதிகாரமறுப்பு, பன்மைத்துவம் ஆகியவற்றை முன்வைக்கும் பதிவர்தோழர்கள் இனியாவது குறைந்தபட்சம் தாமியங்கும் வெளியாகிய வலைப்புலத்தில் அமுல்படுத்தப்படும் தணிக்கைக்கு எதிராகவாவது, (தணிக்கைக்கு உட்படுத்தப்படும் பதிவர் மற்றும் அவரது எழுத்துக்கள் தனக்கு உடன்பாடில்லையென்றபோதும்)குரல் கொடுக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய கேள்வி.
தணிக்கையை மறுப்போம். கருத்துரிமைக்காய் நிற்போம். கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
தமிழச்சி பிரச்சினையின் போதும் சரி, சுந்தர் பிரச்சினையின் போதும் சரி. ஒப்புக்கு சப்பாணியாய் என் தலை மட்டும் உருட்டப்படுகிறது என்பது எனக்கு வருத்தமே!
ஜட்டிக்கதைகளில் என்னதான் பிரச்சினையை கண்டார்களோ தெரியவில்லை. சிவ.. சிவா!!!
உங்கள் பதிவிற்கு நன்றி, சுகுணா.
/மொழிவிளையாட்டு என்பது, மொழியின் அதிகாரத்தைக் கேள்விகேட்கும், அதிகாரத்தை உடைக்கும் நுண்ணரசியல் செயல்பாடு என்றே நான் நம்புகிறேன். அல்லாது அது வெறுமனே வடிவம் மற்றும் உத்தி சார்ந்த எழுத்துமுறையாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுமெனில் நாம் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் வாரிசாவோமேயல்லாது வேறொன்றில்லை. அது மீண்டும் விளையாட்டுகளைப் பார்த்து ரசித்து 'பலே' போடும் மேட்டுக்குடி அழகியல் பார்வைகளையே உற்பத்தி செய்யும்./
வடிவ மற்றும் உத்திகள் ஏதும் இல்லாமல் மொழியில் செயல்படும் அதிகாரத்தை கேள்வி கேட்பதோ அல்லது உடைப்பதோ எங்ஙனம் சாத்தியமாகும்??
கலாச்சார ரவுடியா? பயந்தே போனேன்...என்ன சுகுணா கள்ளச்சாராய ரவுடியாகப் போகிறாரா என்று:-))
அது இருக்கட்டும்...நீங்கள் முத்தமிட விரும்பிய ஜான் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கிறாரே...
அப்பா, சிண்டு முடிஞ்சாச்சு:-)
//தணிக்கையை மறுப்போம். கருத்துரிமைக்காய் நிற்போம். கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!//
வழிமொழிகிறேன்
காமக் கதைகள் என்ற மொழியியல் மூலமாக எத்தகைய அதிகாரத்தை உடைத்து இருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா ?
தலையெழுத்துடா சாமீ, இதையெல்லாம் வாசிக்கணும் அப்படின்னு :)
காமக் கதைகளில் பின்நவீனத்துவக்கூறுன்னு ஒரு பதிவு போடுங்க
போங்கய்யா, நீங்களும் உங்க அறிவுஞீவித்தனமும்
இப்படிக்கு
மிடில் க்ளாஸ் மாதவன்
நல்ல பதிவு...!!!
நல்ல எழுத்தின் மீது தாகம் உள்ளவர்கள் கண்டிப்பாக உங்களைப்போல பதிவுசெய்யவேண்டும்...!!!
தைரியமிருந்தால் தமிழ்மணத்தை எதிர்த்துவிட்டு, அதிலிருந்து விலகுங்கள்.
சுந்தர்,
அதையேதான் நானும் சொல்கிறேன். உங்கள் புரிதலுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக. அதிகார மாற்றத்தை முன்வைத்த் கம்யூனிஸ்ட்கள். முதலாளித்துவத்திற்கான எதிரான புரட்சியையும் பாட்டாளிவர்க்க அரசையும் முன்வைத்தார்கள். ஆனால் பெரும்பாலான மாற்றங்கள் உள்ளடங்களில் நிகழ்ந்தனவேயன்றி, பழைய வடிவங்கள் அப்படியே தொடர்ந்தன. மீண்டும் அதிகாரம் தன்னைத் தகவமைத்துக்கொண்டது. ஆனால் பின்நவீனச்சிந்தனைகளோ உள்ளடக்கத்தில் மட்டுமின்றி வடிவத்திலும் மாற்றங்கள் வேண்டுமென்கின்றன. நான் - லீனியர் எழுத்து, மாற்றுக்கல்வி, இன்விசிபிள் தியேட்டர் ஆகிய முயற்சிகள் இத்தன்மை வாய்ந்தவையே. ஆனால் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அதிகாரமறுப்பு என்னும் நோக்கம் இருக்கிறது. வடிவமாற்றம் என்பதை நமக்குமுன்பே ஆத்மாநாம், பிரம்மராஜன் போன்ற பலர் எழுத்துக்களில் நிகழ்த்திக்காட்டியுள்ளனர். ஆனால் அவைகளுக்கு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. ஆனால் நமக்கு அப்படியல்ல. எனவே, அதிகார மறுப்பு/ எதிர்ப்பு என்பது நம் எழுத்துவடிவங்களில் மட்டுமல்லாது நம் எழுத்துச்செயற்பாடுகளிலும் தொடரவேண்டுமென்பது என் விருப்பம், குறைந்தபட்சம் நாம் இயங்கும் இந்த வலைப்புலத்திலாவது.
//நல்ல எழுத்தின் மீது தாகம் உள்ளவர்கள் கண்டிப்பாக உங்களைப்போல பதிவுசெய்யவேண்டும்...!!!//
ரவி! எந்த மாதிரியான ‘தாகம்' என்று நாற்பது வரிகளில் கட்டுரை எழுதுக :-)
கலகம் செய்பவர்கள் ஒப்பாரி எல்லாம் வைப்பதில்லை.
காமக்கதை என்பதே ஆண்மய்யச் சிந்தனைதான். என்னதான் ஒரு முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்ணாக நான் இருந்தாலும், காமக்கதை என்று தலைப்பிட்டிருக்கும் பதிவுக்குள் நுழையத் தயக்கமாகத்தான் இருக்கிறது. கதை வேண்டுமானால் பாலியல் விடுதலை குறித்ததாக இருக்கலாம். ஆனால், அதைச் சுற்றி எழுப்பப்படும் விவாதங்கள்? இளைஞர்களின் பரிபாஷைகள்?
கலகம் என்ற பெயரிலே இவர்கள், ஒரு சேவல் பண்ணை போல, மதுக்கடை போல, பெண்களை தமிழ்மணம் போன்ற பப்ளிக் ஃபோரத்தில் இருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
கடந்த ஒரு வருடத்தில் நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பில் எத்தனை பெண்கள் கலந்து கொண்டார்கள்? இவர்கள் செய்வதாகச் சொல்லும் கலகம், பாலியல் வார்த்தைகளை உபயோகித்து, நடுத்தர வர்க்கத்துப் பின்னணி கொண்ட எம் போன்ற பெண்களை, embarass செய்து activities இல் இருந்து ஒதுக்கி வைப்பதிலேயே குறியாகச் செயல்படுகிறது என்று நான் சொன்னால் ஜ்யோவராம் சுந்தர், பைத்தியக்காரன், சுகுணா திவாகர், வளர்மதி உள்ளிட்டவர்களின் பதில் என்ன?
பாலியல் விடுதலை வேட்கை என்பது தேவைதான். ஆனால், கிளர்ச்சிக்காக மார்புகளையும், தொடைகளையும் வார்த்தைகளில் தேடித் திரியும் கொழுப்பெடுத்த விடலைகள் இருக்கலாம் என்று நினைக்கிற இடத்தில், காமத்த்தை வெளிப்படையாக விவாதிக்கக் கூடிய நிலைமை இன்னும் வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வயதும் சூழ்நிலையும் கற்றுக் கொடுத்த கூச்ச நாச்சத்தை எல்லாம் களைந்து விட்டுச் செய்வதுதான் கலகம் என்றால், அதிலே பெண்களின் பங்கு என்ன
தோழி,
/காமக்கதை என்பதே ஆண்மய்யச் சிந்தனைதான்/
இப்படிப் பொத்தாம்பொதுவாக அடையாளப்படுத்துவதை என்னால் ஏற்க இயலவில்லை.
/ கதை வேண்டுமானால் பாலியல் விடுதலை குறித்ததாக இருக்கலாம். ஆனால், அதைச் சுற்றி எழுப்பப்படும் விவாதங்கள்? இளைஞர்களின் பரிபாஷைகள்?
/
இது யோசிக்கத்தக்க விசயம்தான். ஆனால் அதற்காக, நீங்கள்,
/கலகம் என்ற பெயரிலே இவர்கள், ஒரு சேவல் பண்ணை போல, மதுக்கடை போல, பெண்களை தமிழ்மணம் போன்ற பப்ளிக் ஃபோரத்தில் இருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்./
என்று 'இது ஏதோ திட்டமிட்ட சதி' என்னும் ரீதியில் எழுதுவதெல்லாம் அபத்தம்.
/பாலியல் விடுதலை வேட்கை என்பது தேவைதான். ஆனால், கிளர்ச்சிக்காக மார்புகளையும், தொடைகளையும் வார்த்தைகளில் தேடித் திரியும் கொழுப்பெடுத்த விடலைகள் இருக்கலாம் என்று நினைக்கிற இடத்தில், காமத்த்தை வெளிப்படையாக விவாதிக்கக் கூடிய நிலைமை இன்னும் வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
/
இதே வாதத்தைத்தான் பாலியல்கல்விக்கு எதிராகப் பொதுப்புத்தியும் முன்வைக்கிறது. முதிர்ச்சி என்பது பயிற்சியிலிருந்துதான் வருகிறதே தவிர, பேசாமலே மறைத்துவிடுவதாலேயே 'முதிர்ச்சி' வந்துவிடுவதில்லை. வலைப்பதிவாளர் சந்திப்பில் பெண்கள் பங்கெடுப்பிற்கும் காமக்கதைக்குளுக்கும் நீங்கள் போடும் முடிச்சு நல்ல கற்பனை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? இலக்கிய மற்ரும் அரசியல் கூட்டங்களுக்கு தொகை தொகையாய்ப் பெண்கள் வந்து பதிவர் சந்திப்பிற்குப் பெண்கள் வராமலிருந்தால் நீங்கள் சொல்வதை ஏற்கலாம். ஆனால் எல்லாவிடன்ம்க்களிலுமே பெண்களின் பங்களிப்பு குறைவாகத்தானிருக்கிறது என்றால் அதற்க்லான பல காரனங்கள் இருக்கின்றன. 'காமக்கதைகள்' எழுதுபவர் வருவதாலேயே பெண்கள் சந்திப்பிற்கு வரப்பயப்படுகிறார்கள் என்கிற தொனியிலேயே உங்கள் பின்னூட்டமிருக்கிறது.
///காமக்கதை என்பதே ஆண்மய்யச் சிந்தனைதான்/
இப்படிப் பொத்தாம்பொதுவாக அடையாளப்படுத்துவதை என்னால் ஏற்க இயலவில்லை.//
விளக்கமாகவே சொல்கிறேன். இன்றைக்கு சந்தைப் படுத்தப்படும் பாலியல், பெண்களை ரா மெடீரியலாகவும், ஆண்களை நுகர்வோராகவும் வைத்துத்தான் தயாரிக்கப்படுகின்றன. உள்ளாடைகளுடன் நிற்கும் பெண்ணின் படத்தைப் போஸ்டரில் போட்டு, ஆண்களை இழுக்கும் உலகில்,
ஜட்டியுடன் நிற்கும் ஆண்களை போஸ்டர்களில் பார்க்க இயலுமா? பாலியல் கதைகளானாலும் சரி, திரைப்படங்களானாலும் சரி, அவை ஆண்களின் கிளர்ச்சியைப் பூர்த்தி செய்வதற்காகவே செய்யப்படுகின்றது. (அவற்றைப் பெண்கள் பயன் படுத்துவதில்லை என்று சொல்ல வரவில்லை.)
ஆண்களின் தேவையை மட்டும் தீர்த்துவைப்பதற்காக இயங்கும் பாலியலின் ஓர் அம்சமான காமக்கதைகள் , ஆண்மய்யச் சிந்தனை இல்லாமல் வேறு என்ன?
//என்று 'இது ஏதோ திட்டமிட்ட சதி' என்னும் ரீதியில் எழுதுவதெல்லாம் அபத்தம்//
எதுதான் திட்டமிட்ட சதி? எல்லாமே இயல்பாக நடப்பவைதான். இளவயதில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த அய்யர் பாட்டியைப் போல உதவி செய்யும் மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், ஈகைக் குணத்தையும், பிறர் நோவைத் தன் துயராக எண்ணுபவளைப் போல இன்னொரு பெண்மணியைப் பார்த்ததில்லை. ஆனாலும், வீட்டுக்குப் போனால், தனித்தம்ளரில் தான் 'தூத்தம்' தருவாள்.
அவள் இயல்பு அது. அவளுக்கு எப்படிச் சொல்லித் தந்தார்களோ, அதிலிருந்து சிறிதும் பிறழாமல் செய்தாள். செய்கிற விஷயத்தின் காரண காரியம் புரியாத வரையிலும், பொதிந்திருக்கும் நுண்ணரசியல் புத்திக்கு உறைக்காத வரையிலும் எதுவுமே திட்டமிட்ட சதி அல்ல.
நீங்கள் வலப்பதிவுகளில் அளவளாவும் உங்கள் எதிர்பால் தோழர்களிடம், எப்போதாவது, பிற கவிதைகளையும், அரசியல் விடயங்களையும்
கலந்துரையாடுவது போல, இந்த காமக்கதைகள் குறித்துப் பேசியிருக்கிறீர்களா? இது குறித்து, தமிழ்மணம் என்கிற பொது மேடையைப் பயன் படுத்தும் பெண்களின் அபிப்ராயம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அக்கறை கொண்டிருக்கிறீர்களா? அப்படி ஏதாவது சிந்தனை கிளர்ந்திருந்தாலும், ' இதுல என்னப்பா இருக்கு, சும்மா ஜாலிக்காக' என்று நினைத்து அத்துடன் விஷயத்தை விட்டிருந்தால், அந்த அலட்சியம்
குறித்ததே என்னுடைய இந்த மறுமொழி.
//இதே வாதத்தைத்தான் பாலியல்கல்விக்கு எதிராகப் பொதுப்புத்தியும் முன்வைக்கிறது. முதிர்ச்சி என்பது பயிற்சியிலிருந்துதான் வருகிறதே தவிர,
பேசாமலே மறைத்துவிடுவதாலேயே 'முதிர்ச்சி' வந்துவிடுவதில்லை. வலைப்பதிவாளர் சந்திப்பில் பெண்கள் பங்கெடுப்பிற்கும் காமக்கதைக்குளுக்கும் நீங்கள் போடும் முடிச்சு நல்ல கற்பனை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? இலக்கிய மற்ரும் அரசியல் கூட்டங்களுக்கு தொகை தொகையாய்ப் பெண்கள் வந்து பதிவர் சந்திப்பிற்குப் பெண்கள் வராமலிருந்தால் நீங்கள் சொல்வதை ஏற்கலாம். ஆனால் எல்லாவிடன்ம்க்களிலுமே பெண்களின்
பங்களிப்பு குறைவாகத்தானிருக்கிறது என்றால் அதற்க்லான பல காரனங்கள் இருக்கின்றன. 'காமக்கதைகள்' எழுதுபவர் வருவதாலேயே பெண்கள்
சந்திப்பிற்கு வரப்பயப்படுகிறார்கள் என்கிற தொனியிலேயே உங்கள் பின்னூட்டமிருக்கிறது.//
பாலியலை, மூன்றாந்தரக் காமக்கதைகளில் இருந்து கற்றுக் கொண்டு 'முதிர்ச்சி' பெற விரும்பவில்லை என்பதே இதற்கு பதிலாக அமையும். யார், எதை என்ன காரணத்துக்காக, எப்படிச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இதோ எழுதுகிறேன் பார் என்று முன்கூட்டியே நாற்பத்து ஐந்து என்று முடிவு செய்து, பில்ட் அப் எல்லாம் கொடுத்து, கூட்டத்தைக் கூட்டுவதற்காகத்தான் இத்தனை முயற்சி என்று தோன்றுகிறது.
சகோதரி பெருந்தேவி எழுதியிருந்த பதிவு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. வெள்ளமெனப் பொங்கி வரும் எழுத்தில் எத்தனை இயல்பாக, பெண்ணின் அந்தரங்க உறுப்பு வார்த்தை இடம் பெறுகிறது? அந்தக் கரிசனையை, இன்னதுதான் செய்கிறோம் என்றறியாமல், காமக்கதைகள் எழுதும் கூட்டத்தில் இருந்து எதிர்பார்க்க முடியாதுதான்.
வலைப்பதிவுக் கூட்டத்துக்கு மட்டுமல்ல, தமிழ்மணத்துக்கே பெண்கள் அதிகம் வராமல் ( முன்பு இருந்த அளவுக்கு), இதுவும் ஒரு காரணம் என்ற அளவில் தான் சொல்லி இருக்கிறேன்.
//உள்ளாடைகளுடன் நிற்கும் பெண்ணின் படத்தைப் போஸ்டரில் போட்டு, ஆண்களை இழுக்கும் உலகில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களை போஸ்டர்களில் பார்க்க இயலுமா? //
Please visit Bangalore's Maruthi Nagar Main Road; between Gangotri Circle and Hosur Main road junction.
Post a Comment