Wednesday, September 24, 2008

கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி 2














கவுண்டமணி குறித்த பதிவில் சில பின்னூட்டங்கள் கவுண்டமணியைச் சிலாகிப்பதாகவே அமைந்திருந்தன. எனது நோக்கம் அதுவல்ல. அவர் நகைச்சுவையில் தெரியும் வேறு சில கூறுகளைச் சுட்டிக்காட்டுவதே. ஒரு கலைஞனைச் சாதிய ரீதியாக அணுகலாமா என்பது குறித்த அதிருப்திகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியச்சமூகம் ஒரு சாதியச்சமூகம். ஒருவேளை சாதி ஒழிந்துவிட்டால் நாம் அதைப் பற்றிப் பேசுவதற்கோ சாதிய ரீதியான கட்டவிழ்ப்புகளை நிகழ்த்துவதற்கு வாய்ப்பிருக்காதுதானே ((-.

பிரபுராம் கவுண்டமணியின் நகைச்சுவையில் உள்ள ஆணாதிக்க மற்றும் அதுபோன்ற பாதகமான அம்சங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். உண்மைதான். கவுண்டமணி முழுக்க முழுக்க ஒரு எதிர்க்கலாச்சாரக்காரர் என்றோ, மாற்று அரசியலை முன்வைப்பவர் என்பதோ என் கருத்தல்ல. ( அவரே சாப்ளினையும் தாண்டியவர் கவுண்டமணி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.)மாறாகக் கவுண்டமணியைக் குறித்து அதிகம் பேசப்படாத அம்சங்களை எழுதிச் செல்லவே விருப்பம்.

அவர் தமிழ்ச்சினிமாவின் வெளி மட்டுமல்ல உள்மரபுகளையும் கவிழ்த்தவர் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்து...

தமிழ்ச்சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று தலைமை வழிபாடு, பிம்பகட்டுருவாக்கம். காத்திரமான சிந்தனையாளர் என்று பலரால் கொண்டாடப்படும் கமல் வரை இதற்கு விதிவிலக்கல்ல. உலகநாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று மற்றவர்களை வைத்துத் துதி பாடுகிற அருவெறுப்பு தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

பெரும்பாலும் இந்தக் கதாநாயகன்களின் பிம்பக்கட்டுமானத்திற்கும் புகழ்பாடுவதற்கும் அல்லைக்கைகளாகப் பெரிதும் பயன்படுத்தப்படுபவர்கள் துணைநடிகர்களும் நகைச்சுவை நடிகர்களும். இப்போது அப்பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர் விவேக். ஆனால் எனக்குத் தெரிந்தவரை கவுண்டமணி அப்படியான 'பில்டப்களை'க் கொடுப்பதில்லை. மாறாக இந்தப் பிம்ப விளையாட்டுகளைத் தலைகீழாய்க் கவிழ்த்துப்போட்டு எள்ளி நகையாடுவார்.
சேனாதிபதி திரைப்படம். சத்யராஜுக்கு இணையான பாத்திரம் விஜயகுமாருக்கு. அவர் சத்யராஜின் வீட்டுக்கு வருவார். கிட்டத்தட்ட 'இரண்டாவது கதாநாயகனான' விஜயகுமார் வரும்போது கவுண்டமணி சொல்வார், 'இவன் ஓவராப் பேசுவானே!'.

அதேபோல் ரஜினியின் 'பாபா' வெளியான காலகட்டம். ரஜினி ஒரு முக்கியமான அரசியல் தீர்மான காரணியாக மதிக்கப்பட்ட காலம். அவர் யாரை ஆதரிப்பார், யாருக்காக வாய்ஸ் கொடுப்பார் என்கிற பரபரப்புகள் ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்கள் இடையும் நிலவிவந்தது.

ரஜினியோ ப.சிதம்பரம் சாயலில் ஒருவரை, 'இவர்தான் முதல்வர்' எனப் பாபாவில் கைகாட்டுவார். ஆனால் கொஞ்சமும் தயக்கமில்லாமல் கவுண்டமணி சொல்வார், '' போயும் போயும் இந்த ..... மண்டையனா முதலமைச்சர்?'.

ரஜினி என்னும் மாபெரும் பிம்பம் குறித்தோ அவருக்குப் பொதுவெளியில் இருக்கும் அரசியல் மதிப்பு குறித்தோ கொஞ்சமும் கவலைப்படாமல் சினிமாவிலிருந்து கொண்டே அதேசினிமாவில் நிலவும் இத்தகைய போலித்தனங்களைக் காலி செய்யும் துணிச்சல் கவுண்டமணிக்கே உண்டு.

அதனாலேயோ என்னவோ ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பெருநட்சத்திரங்கள் தங்கள் படங்களில் கவுண்டமணியைத் தவிர்க்கவே செய்கின்றனர். விதிவிலக்கு சத்யராஜ் மட்டுமே. ஏனெனில் பிம்பம் பற்றிக் கவலைப்படாத இன்னொரு கவிழ்ப்பாளர் சத்யராஜ்.

( தொடரும்...)

14 comments:

சென்ஷி said...

:)) நல்ல விரிவான அலசல்

முரளிகண்ணன் said...

நல்ல அலசல். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்

Anonymous said...

>>(அவரே சாப்ளினையும் தாண்டியவர் கவுண்டமணி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.)<<
ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஊடகத்தை சிறப்பாகக் கையாளும் புலமை போன்றவற்றையெல்லாம் நான் சொல்லவில்லை. (என் மேலுரை இப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளும்படி பொதுப்படையாக இருப்பதை உணர்கிறேன்)

நம்மை அதிர்ந்து சிரிக்க வைப்பதில் கவுண்டமணி நிகரற்றவர் என்பது தான் என் கருத்து. கண்ணீர் வருமளவு, வயிறு வலிக்க என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், நிஜமாக எனக்கு நிகழ்ந்தது திரைப்பட நடிகர்களில் கவுண்டமணியிடம் மட்டும் தான்.

ஒரு நகைச்சுவைக் கலைஞனுக்கு அதுவே பொருத்தமான அளவுகோல் என்றும் நினைக்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

அலச வேண்டிய விடயம்....

நல்ல அலசல்...

வெட்டிப்பயல் said...

கமல் பொதுவா இந்த ஒரு காரணத்துக்காவே கவுண்டரை சேர்த்துக்க மாட்டார். இந்தியன்ல கூட அவரை சேர்த்துகிட்டது ஷங்கருக்காக.

பாபால இன்னொரு முக்கியமா விஷயமிருக்கு. எல்லாரும் ரஜினியை ஓவரா புகழ்ந்து பேசிட்டு இருப்பாங்க.

நீ மட்டும் “ஹூம்”னு ஒரு வார்த்தை சொல்லு பாபானு கூட இருக்குற அல்லக்கை சொல்லும் போது கவுண்டர் தான் “ஹூம்”னு சொல்லு பாபா என்ன நடக்குதுனு பார்க்கலாம்னு சொல்ல சொல்லி, அப்படி ஒண்ணும் நடக்கலையே, அப்பறம் ஏண்டா இப்படி பில்ட் அப் கொடுக்கறீங்கனு சொல்லுவார்.

இதை எல்லாம் அவரை தவிர வேற யாராலும் சொல்ல முடியாது. பஞ்ச் டயலாக்கை கூட ஒரு படத்துல கிண்டல் பண்ணிருப்பார்.


சிங்கார வேலன்ல கமல் வரும் போது மனோ யார் வந்திருக்கா பாரு, கருவாடு வந்திருக்குனு சொல்லுவார்.

அடுத்த பகுதிக்கு ஆவலுடன் :)

nagoreismail said...

கரகாட்டக்காரன் படத்தில் பிறந்த நாள் கொண்டாடும் நடிகர்களை கிண்டல் அடிப்பார். நல்ல நகைச்சுவை.

Anonymous said...

சாட வேண்டிய அனைத்தையும் தன் பாணியில் வேகத்துடன் சாடியவர் அவர்.தேர்ந்த கலைஞன்.
உங்களில் யாருக்காவது பின் வரும் காட்சி ஞாபகம் இருந்தால் அதன் பட பெயரை எழுத முடியுமா?
செந்திலை புலி வேஷம் போட வைத்து ஒரு அறையில் அடைத்து காட்சி பொருளாக்கி மக்களிடம் வசூல் பண்ணி வசனத்தில் பின்னி எடுப்பாரே.......ப்ளீஸ் யாராவது பட பெயரை எழுதுங்கள்.நன்றிகள்

புருனோ Bruno said...

ஒரு சிறு சந்தேகம்

இவர் பேசும் வசனங்கள் வசனகார்த்தா எழுதியாத அல்லது இவரே எழுதுவதா

Anonymous said...

//ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பெருநட்சத்திரங்கள் தங்கள் படங்களில் கவுண்டமணியைத் தவிர்க்கவே செய்கின்றனர். விதிவிலக்கு சத்யராஜ் மட்டுமே.//

கார்த்திக்குடன் சேர்ந்தும் பல படங்களில் நடித்திருக்கிறார்..

சென்ஷி said...

//Bhanu said...
சாட வேண்டிய அனைத்தையும் தன் பாணியில் வேகத்துடன் சாடியவர் அவர்.தேர்ந்த கலைஞன்.
உங்களில் யாருக்காவது பின் வரும் காட்சி ஞாபகம் இருந்தால் அதன் பட பெயரை எழுத முடியுமா?
செந்திலை புலி வேஷம் போட வைத்து ஒரு அறையில் அடைத்து காட்சி பொருளாக்கி மக்களிடம் வசூல் பண்ணி வசனத்தில் பின்னி எடுப்பாரே.......ப்ளீஸ் யாராவது பட பெயரை எழுதுங்கள்.நன்றிகள்
//

பாடும் பறவைகள்.. இது ஒரு மொழிமாற்று படம். கவுண்டமணி, செந்திலின் நகைச்சுவையை இடையில் மீண்டும் இணைத்தனர்.

PRABHU RAJADURAI said...

சாருநிவேதிதா, கவுண்டமணியுடனான தனது சந்திப்பு ஒன்றினைப் பற்றி எழுதியிருந்தார். கவுண்டமணியை நான் புரிந்து கொள்ள காரணமான ஒரு சம்பவம்!

Anonymous said...

பட பெயரை எழுதியமைக்கு நன்றிகள் பல.

வால்பையன் said...

//பிம்பம் பற்றிக் கவலைப்படாத இன்னொரு கவிழ்ப்பாளர் சத்யராஜ்.//

உடன்படுகிறேன்

Anonymous said...

கரகாட்டக்காரன் படத்தில் பிறந்த நாள் கொண்டாடும் நடிகர்களை கிண்டல் அடிப்பார்.

This is one of the nice comedies of Mr.Goundamani.The only wise comedian after chandrababu is Mr.Goundamani.

Jaldra adikkatha Nalla Manithan.Mr.Goundamani

Vaazhga Pallaandu