Monday, October 12, 2009

மாம்சம்




"வார்த்தைகளே மாம்சங்களாகவும்
மாம்சங்களே வார்த்தைகளாகவும்
மாறித்திரியும் நிலப்புலத்தில்
சிந்திச் சிதறிக்கிடக்கும்
மாம்ச மற்றும் வார்த்தைத்
துண்டுகளை என்ன செய்வது அதீதா?"

"மனிதர்கள் யாருமற்ற
வனாந்திரங்களில்
பூக்கும் பூக்களே
அழகாயிருக்கின்றன கலாபன்"

" வண்ணத்துப்பூச்சிகள் சிறகுதிர்க்கும் ஒரு மாலைப்பொழுதில் உன்னைச் சந்திக்கும்போதெல்லாம் எப்போதும் மழையை நினைவுபடுத்துகிறாய், அதீதா"

"உன் புயங்களிலிருந்து உள்ளங்கைகளுக்குப் பரவும் நடுக்கத்தை உணர்ந்தால் நீ சொல்வது உண்மைபோலத்தான் தோன்றுகிறது கலாபன்"

"பூனைக்குட்டிகளைப் பதுக்கிவைத்திருக்கும் உன் மார்புக்கூட்டுக்குள்ளும் சமயங்களில் மழையின் ஓசையை உணர்கிறேன். நீ பூனை மாமிசம் உண்டிருக்கிறாயா அதீதா?"

"என்ன இது, கனவில் கொலை நிகழ்த்துதல்போல. பூனை என்பது மென்மையின் சதை, பட்டுக்கன்னங்கள், குழந்தைகள்"

"முயல் மாமிசமாவது சாப்பிட்டிருக்கிறாயா?"

"ம். முயல்மாம்சம் மெதுமெதுப்பானது மட்டுமல்ல, வெதுவெதுப்பனதும் கூட. என் அடிவயிற்றுக்குள் கதகதப்பான வெப்பம் பாவுவதை உணர்ந்திருக்கிறேன். சமயங்களில் யோசிப்பேன், இந்த முயல் எத்தனை பச்சைப்புல்லைப் புசித்திருக்குமென்று. முயலை உண்னும்போது நானே பசும்புல்லாகிறேன், சமயங்களில் வனமாகவும்"

"சிரிப்பதைத் தவிரவும் வேறு வழியில்லை அதீதா, மேல்தோலை உரித்துவிட்டால் பூனைமாமிசமும் முயல்மாமிசமும் ஒன்றுதான்"

'நீ ஏன் இப்போது மாம்சம் பற்றிப் பேசுகிறாய்?"

"தெரியவில்லை. ஆனால் சமீபமாக என் கனவின் அறைகளில் மாம்சத்தின் வாசனை கமழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு மழைநாளின் மறுநாளில் தயாள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள், என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு நான் உண்மையாக இருப்பதில்லையென்றும் யார்மீதும் மரியாதை செலுத்துவதில்லையென்றும். கூடுதலாய்ச் சொன்னாள் என்னை நினைக்கும்போதெல்லாம் குத்துச்சண்டைக்காரனின் பிம்பமே விரிவதாய். நான் இப்படியாகப் பதில் அனுப்பினேன், 'நான் நரமாமிசம் சாப்பிடுபவனில்லை நம்பு' என்று"

"தயாளுக்கும் மாம்சம் பிரியமோ?"

"இல்லை. அவள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லை. மாமிசம் உண்ணாதவர்கள் மீது எனக்கு மரியாதையில்லை அதீதா. மாமிசம் உண்ணப்படாத ஞாயிறு தன் பெயரின் அர்த்தத்தை இழக்கிறது"

"எப்போதிலிருந்து மாமிசம் உனக்குப் பரிச்சயம்?"

"என் பன்னிரண்டாவது வயதில். முதல் பரிச்சயமாமிசம் மாட்டிறைச்சி. ஒரு தலித்தாகவும் முஸ்லீமாகவும் பிறப்பதற்கான பேறுபெற்றிலன் நான். ஆனாலும் வறுமை எனக்கு மாம்சமாய் மாட்டுமாமிசத்தையே அறிமுகப்படுத்தியது. ஒரு முஸ்லீம்குடும்பம்தான் எங்கள் குடும்பத்தைப் பராமரித்துவந்தது. மாட்டுமாமிசத்திலேயே அழகானதும் சுவையானதும் உப்புக்கண்டம். மூன்றுநாட்கள் கொடியில் காயும் உப்புக்கண்டம் நான்காம்நாள் தன் சாற்றில் ருசி ஊற்றியிருக்கும். மாட்டுமாமிசம் உண்ணக்கூடாது என்பவர் யாராயிருந்தாலும் மரியாதையாக இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதே மானமுள்ள காரியமாகும் என்கிறார் பெரியார். பின்னாளில் ஒரு அரசியல் கூட்டத்துண்டறிக்கையில் 'கோமாதா விருந்து உண்டு' என்று அச்சிட்டதற்காக உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு ஆளானேன் அதீ"

" கலாபன், நீ உரையாடலின் சமநிலையைக் குலைக்கிறாய். திடீரென்று எதார்த்தத்திற்குத் தாவுகிறாய், அரசியலும் பேசுகிறாய்"

"மீண்டும் சிரிக்கத் தூண்டுகிறாய். எதார்த்தமே அரசியலாயும் அரசியலே எதார்த்தமாயும் இருக்கிறது போலும். நீ விரும்பிப் புசிக்கும் முயலைப்போலவே வளைக்குள் பதுங்க முனைகிறாய்"

"நீ ஏன் என்னைத் தரையிறக்குகிறாய்? உன் காமமே மாம்சவேட்கையாய் மாறுகிறது கலாபன். நீ விரும்பிச்சுவைக்கும் என் இதழும் மார்பும் கூட மாமிசம்தானே?"

"இருக்கலாம். ஆனால் உன் கண்களை அப்படிச் சொல்லமுடியாது. அது சதைக்கோளங்களினின்று நழுவி ஓடுவது, வான், வெளி, பிரபஞ்சம் போல முடிவிலி உன் கண்கள். உன்னுடலின் உயிர்ப்புள்ள ஒரே பகுதியும்கூட"

"அப்படியானால் இப்படிச் சொல்லலாம், கண்கள் என்பவை பாதரச மாமிசம்"

"தெரியவில்லை. எனக்கு ஒரு முத்தம் தரமுடியுமா?"

"இல்லை, முடியாது. அதற்கான மனநிலை இல்லை. புத்தன் கடைசியாய்ப் புசித்த பன்றி மாமிசம் இருக்கிறது. பகிர்ந்துகொள்வோம்"

5 comments:

Unknown said...

என்ன சுகுனா இது?

யாரை குறி வச்சுருக்கீங்க?

மணிஜி said...

சுகுணா..எனக்கு முற்றிலும் மாறுபட்ட தளம்..ரசித்து வாசித்தேன்..நுண்ணரசியல் ஏதும் இருக்கா?

சுகுணாதிவாகர் said...

அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை தல, இது ஒரு பழைய பதிவு. பலரும் படிக்கட்டும் என்றுதான்.

சிவக்குமரன் said...

அய்யா சாமி, தானாகவே ஒலி எழுப்புற வானொலிய எடுத்துருங்க சாமி. நான் அலுவலகத்துல நேரம் கெடைக்கும் போது படிக்குறவன்.

Ashok D said...

//'கோமாதா விருந்து உண்டு' என்று அச்சிட்டதற்காக உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு ஆளானேன் அதீ//

அப்போ உங்களுக்கு பின்னோட்டம் போட்ற எங்க கதி.

நீங்கள் ’பேறு’ என்னும் ’இடத்தில்’ பிறந்தும் மாம்சம் பிடிப்பதில்லையே?