Monday, October 12, 2009

வரவணையானும் புத்தரின் மதுக்கோப்பையும்




தீபாவளி இரவு. நானும் வரவணையானும் ஒரு பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தோம். எங்களோடு மது அருந்திக்கொண்டிருந்த இன்னொரு நபர், தமிழ்மணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்கள், ரசிகர்மன்றங்கள், தற்கொலைப்படைகள், முன்னணிகள், பின்னணிகள், சங்கங்கள் ஆகியவற்றில் ஒரு குழுவின் தலைவர். இப்போதைக்கு நாட்டாமை என்று வைத்துக்கொள்வோம்.

நாட்டாமை 'தமிழ்மணத்தில் பேசப்படும் விசயங்களின் அடிப்படையில் 'பிளாக்கியம்' என்னும் ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கமுடியுமா' என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். வரவணையானோ " பிளாக்கியம் உருவானால் அடுத்த நாளே 'போலி பிளாக்கியம்' என்று ஒன்று உருவாகிவிடுமே" என்று பதட்டமடைந்தார். ஆனால் நான் பதட்டமடைந்ததோ வரவணையானைப் பார்த்துத்தான். அவர் எதிரில் இருப்பவர் மட்டையாகாமல் விடமாட்டார். அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை.

அதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'. நானோ கட்டிங் மட்டுமே அடிப்பவன். 'நைன்டி'தான் என்னுடைய அளவு. அந்த விசயத்தில் நான் ஒரு தீவிர மார்க்சியவாதி. 'அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்'.
இப்படியாக எங்கள் உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த பாரில் புதிதாக குடிக்க வந்த ஒரு நபர் நாட்டாமையைப் பார்த்து "நீங்கள் கேரளாக்காரரா?" என்று வினவினார். நாட்டாமைக்கோ ஒரே ஆச்சரியம். "என்னைவிட நீங்கள் சிவப்பாக இருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேரளாக்காரர் என்கிறாரே" என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.

அப்போது அந்த புதிய நபர் 'தன்னுடைய பெயர் பழனிச்சாமி' என்றும் 'தான் தமிழ்நாடு செக்போஸ்டிற்கும் கேரளா செக்போஸ்டிற்கும் இடையில் உள்ள கோவிந்தாபுரத்தில்' பிறந்ததாக குறிப்பிட்டார். கோவிந்தாபுரம் என்பது நாங்கள் குடித்துக்கொண்டிருந்த பாரிலிருந்து மூன்றாவது தெரு. நான் நாட்டாமையிடம் சொன்னேன் " காரல்மார்க்ஸிற்கு அடுத்து இவர் ஒரு சர்வதேசியவாதி. கோவிந்தாபுரம் கேரளாவிலிருந்தால் நீங்கள் கேரளாக்காரராக இருப்பதில் தவறே இல்லை'' என்று.

அப்போது பழனிச்சாமி, தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்றும் சொன்னார். எனக்கு இரண்டு சந்தேகங்கள் எழுந்தன.

1. 'பழனிச்சாமி' எப்படி பவுத்தராக இருக்கமுடியும்? 'புத்தம் சரணம் கச்சாமி'தானே, 'புத்தம் சரணம் பழனிச்சாமி' இல்லையே?

2. பவுத்தர்கள் குடிக்கலாமா? (இந்த கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதில் என்னைவிட வரவணையானுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு புத்தமதத்திற்கு மாறவேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அங்கே போனால் குடிக்கமுடியாதே என்ற சஞ்சலமும் உண்டு.)

பழனிச்சாமி சொன்னார். பழனிச்சாமி என்னும் சொல் பழங்கச்சாமி என்னும் பாலிமொழியிலிருந்து வந்ததாகவும் தமிழ்மொழியே பாலிமொழியிலிருந்து தான் வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் பாலிமொழியில் அந்த பெயருக்குப் பொருள் பழமையான துறவி என்றும் விளக்கினார். மேலும் பழனியில் இருப்பது முருகன் சிலை இல்லையென்றும் பவுத்தத்துறவிகளில் ஒருவரான ஆனந்தகீர்த்தரின் சிலையென்றும் கூறினார்.

அதேபோல குடிவிசயத்தை எடுத்துக்கொண்டால், புத்தரின் சீடர்களில் ஒருவரான அங்குலிமாலாவின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த சங்கநந்தன் என்னும் துறவி அசோகரையும் புத்தரையும் தந்தை மகனாகப் பாவித்து 'தம்மபுத்திரக்காப்பியம்' என்னும் காவியத்தை எழுதியிருப்பதாகவும் அதில் பல இடங்களில் புத்தரும் அசோகரும் மது அருந்தியபடியே உரையாடுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது புத்தர் சொல்வதாக வரும் ஒரு கவிதையைப் பாலிமொழியில் சொன்னார். (பழனிச்சாமிக்குப் பாலிமொழியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்)

அப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு புள்ளிகளும் குறுக்கே வெட்டிக் கொள்ளும் இடத்தில் ஒரு தமிழ்க்கவிதை எனக்குள் பிறந்தது. நிசயமாக உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று அது. இப்போது என் எதிரில் பழனிச்சாமி இல்லை. நாட்டாமையும் விடைபெற்றுப்போயிருந்தார்.

வரவணயான் மட்டும் மண்புழு, மண்வெட்டி, மண்பாண்டம் போன்ற மண் மற்றும் மண்சார்ந்த விசயங்கள் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானோ கவிதையில் கரைந்திருந்தேன். அந்த கவிதை உருவாகியபோது என் நரம்புகளெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஒரு பூக்காட்டில் குழந்தையைப் போல வாடைக்காற்று தழுவிக்கொண்டிருக்க நான் நிர்வாணமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் மதுக்கோப்பையில் புத்தர் தெரிந்தார். சில்வியாமரிக்கோமா என்னும் லத்தின் அமெரிக்கப் பெண்கவிஞர் சொன்னார் " நிச்சயமாக ஒரு நல்ல கவிஞரால் அய்ந்து நல்ல கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனாலும்கூட ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதினாலும் கூட அவர் நிச்சயம் ஒரு நல்லகவிஞர்தான்" என்று. தமிழை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லப்போகும் அந்த கவிதை இதுதான்.

சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்?

13 comments:

Unknown said...

அஆஆஆ...

அதுக்குள்ள அடுத்த பதிவா?

சுகுணாதிவாகர் said...

இந்த ஆஆஆ கமல் அழுவதைப் போலவே இருக்கிறதே, ஒரு உள்குத்தும் இல்லையே?

Unknown said...

<<<
அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை. அதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'.
>>>

ஹிஹி...

சுகுணா, புத்த மதத்திற்கு மாறுவது இருக்கட்டும்... இந்து மதம் குடிப்பதை அனுமதிக்கிறதா? குடிப்பதை தீமை என்றுதானே சொல்கின்றன அனைத்தும் மதமும்? உங்கள் வசதிக்கு ஏற்ப ஏதாவதை மாற்றி கொண்டு மததை குறை கூறுவது ஏனொ?

குடிப்பவர் எங்கிருந்தாலும் குடித்தே தீருவார். அவர் மாற வேண்டியது மதம் அல்ல, அவரின் மனது.

Unknown said...

ஹிஹி... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை :D கமலை விட்டு வரலையா இனனும்?

சுகுணா, உங்களது பதிவில் ஏன் அப்பதிவை வாசித்தவர்களின் எண்ணிக்கையை காட்ட கூடாது?

பார்க்கவும்
http://mastanoli.blogspot.com/2009/10/page-view-counter.html

Ashok D said...

சொட்டு சொட்டாய்
என்றாலே பல சொட்டுகள் என்று தான் பொருள் படும்.
ஒரு சொட்டு - சொட்டியது என்றே முடிக்கலாம், சொட்டு சொட்டாய் என்றல்ல.

(ஆனாலும் 90க்கு நல்லதொரு வார்த்தை விளையாட்டு)

பழங்கசாமி, பாலி, புத்தர், பழனி சிலை - Interesting, இதுல எவ்வளவு உண்மைங்க.

அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்.nice

கவிதைக்கு முன்னாடி, கடைசி இரண்டு பேரா மப்பு ஆகிட்டீங்கன்ன்னு தெரியுது. எனக்கே மங்கலாயிடுச்சு.

வால்பையன் said...

புத்தருக்கு போதி மரத்தடி!
நமக்கு bara!?

முரளிகண்ணன் said...

மீள் வாசிப்பும் சுகமே.

பரிசல்காரன் said...

கவிதையைப் படித்ததும் எனக்கும் டாஸ்மாக்கை நோக்கி ஓடவேண்டும் போலவே இருக்கிறது ஜி...

கபிலன் said...

"சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்? "

அடடா......எங்கயோ போய்ட்டீங்க போங்க...

ரவி said...

அற்புதமான மீள்வாசிப்பு.

ராஜா சந்திரசேகர் said...

"சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்? "

...எவ்வளவோ யோசிக்க வைக்கும் வரிகள்.

சுரேகா.. said...

அனுபவம் அருமை!

'பழங்கச்சாமி' - சொல்லவே இல்ல!?

உண்மையிலேயே
கவிதை உலகத்தரம்தான்!

கலக்குங்க சார்!

Chan said...

"அப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன."

gabriel garcia marquez ippadi novel ezuthinaara? allathu veru aagila peyar ullatha intha novelukku?
thelivupaduthavum
nanri