Friday, September 7, 2007

நரிக்குறவர்கள் - வாழ்வின் அசல்கள்

எப்போதாவது திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் வாய்ப்பு வந்தால் கவனியுங்கள், பேருந்து நிலையத்திற்கு முன்பு ஆர்.டி.ஓ பேருந்து நிறுத்தம் என்று ஒரு நிறுத்தம் வரும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம். அதற்கெதிரே விரிந்துகிடக்கும் மைதானத்தில்தான் 2000 ஆம் ஆண்டில் நரிக்குறவர்கள் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தனர்.

அப்போது நான் தன்னார்வத்தொண்டு நிறுவனம் என்னும் ஒரு ஏகாதிபத்திய அடிவருடி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். கல்லூரிப் படிப்பை முடித்திருந்த காலம். என்.ஜி.ஓக்களின் அரசியல் குறித்த அறிவில்லை. எனக்கான புராஜெக்ட் 'குழந்தை உழைப்பு ஒழிப்பு'. பாதியில் படிப்பை நிறுத்திய குழந்தைத் தொழிலாளர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மாலை நேரத்தில் குழந்தைத்தொழிலாளர்களுக்கு வகுப்புகள் எடுப்பது இவையே எனது பணி.

பெரும்பாலும் குழந்தைத்தொழிலாளர்களாக தலித்துகள் மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளே இருப்பார்கள். மாலை நேரங்களில் அவர்களுக்குக் கல்வி கற்றுத் தருவதைத் தருவதை விடவும் கே.ஏ.குணசேகரன் மற்றும் ம.க.இ.கவின் தலித்விடுதலை மற்றும் தீண்டாமை சாதியெதிர்ப்பு தொடர்பான பாடல்களைச் சொல்லிக் கொடுப்பதிலேயே காலம் கழிந்தது.

இந்த நேரத்தில்தான் நரிக்குறவர் குழந்தைகளுக்கு ஏன் கல்வி புகட்டக்கூடாது என்னும் எண்ணம் தோன்றியது. அப்போது எனக்கு உதவியவர் சாம்சன். நரிக்குறவர் சமூகத்தில் பிறந்து எம்.ஏ வரை படித்திருந்த சாம்சன், கிறித்துவ மதத்திற்கு மாறியிருந்தார். அவ்வப்போது ஏதேனும் தொண்டுநிறுவனங்கள் வருவதும் குழந்தைகளுக்கு ஒரு பேஸ்கட்பால் தந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் வாடிக்கையாயிருந்தன.

சிலகாலங்களில் நரிக்குறவர் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிப்பதைவிடவும் அவர்களது வாழ்முறை மற்றும் கலாச்சாரம் குறித்து அறியும் ஆவலே மேலோங்கியது. ஏனெனில் அதிகாரக் கறைபடிந்த நமது பாடத்திட்டங்கள் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்வைச் சூறையாடிவிடும் என்றே தோன்றியது.

குறவர்களைப் பொருத்தவரை உபரி என்கிற ஒன்று பெரும்பாலும் கிடையாது. உழைப்பு, குடி, கொண்டாட்டம் இவைதான் வாழ்க்கை. உணவிற்கும் உறைவிடத்திற்குமான கவலைகள் கிடையாது. அவர்களுக்கான மாபெரும் கேளிக்கை தமிழ்ச்சினிமா. மூன்று காட்சிகளும் படம் பார்க்க அவர்கள் தயங்குவதில்லை. அதிலும் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் கொள்ளைப்பிரியம்.

திரையரங்குகளில் அமர்ந்துகொண்டே பாசிமணி பின்னிக்கொண்டிருப்பார்கள். நம்பியார் எம்ஜிஆரை அடித்துவிட்டாலோ பதட்டத்தில் பாசிமணி பின்னும் வேகம் அதிகரிக்கும். நான் ஆடு. மாடு இவைகளைத்தாண்டி பல்வேறுவகையான மாமிசங்களை உண்ணப்பழகியது அங்குதான். அவர்களின் சமையலுக்கென்று ஒரு காட்டுருசி இருக்கும். அவர்கள் குழம்போ, ரசமோ வைப்பதில்லை.

கறியைச் சமைத்து அப்படியே சோற்றில் பிசைந்து சாப்பிடுவார்கள். (பின்னாளில் ஒரு ஈழத்தமிழ் நண்பரின் வீட்டில்சாப்பிடும்போது அவர்களும் இதேமுறையில் சாப்பிட நான் அசந்துபோனேன்). மாமிசமில்லாமல் அவர்களின் உணவு இல்லை.

குறவர்களிடத்தில் சாதியில்லை. ஆனால் இரண்டுபிரிவுகள் இருக்கின்றன. ஆடு சாப்பிடுகிற பிரிவு, மாடுசாப்பிடுகிற பிரிவு. ஆடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு அதே பிரிவைச் சேர்ந்த இன்னொருவர் பங்காளி முறை வேண்டும். அதேபோல மாடுசாப்பிடுகிற பிரிவினருக்கும்.

ஒரே பங்காளிப் பிரிவிற்குள் பெண் எடுக்க மாட்டார்கள். எதிரெதிர்ப் பிரிவுகளில்தான் மண உறவுமுறைகள். அதேபோல் திருமண உறவுகளைத் தாண்டிய சுதந்திரமான பாலுறவுகள் குறவர்சமூகங்களில் உண்டு என்றாலும், ஒரு ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஆண், இன்னொரு ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த பெண்னோடு பாலியல் உறவுவைத்துக்கொள்ளமாட்டான்.

நரிக்குறவர் பெண்கள் அழகிகள். அவர்கள் மட்டும் குளித்து நாகரீக ஆடைகள் அணிந்தால் நமது பெண்கள் நிச்சயம் தோற்றுப்போவார்கள். ஆனால் எந்த ஒரு குறவர் பெண்னையும் நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிடமுடியாது, அதேபோல பெரும்பாலும் குறவர்பெண்கள் பாலியல்தொழிலிலும் ஈடுபடுவது கிடையாது. இதற்குக் காரணம் போதுமான பாலுறவு தங்கள் சமூகங்களுக்குள்ளேயே கிடைத்துவிடுவதால்தான் என்று கருதுகிறேன்.

பலாத்காரம் அல்ல, சாதாரணமாக ஒரு குறவர் பெண்ணின் கையைக்கூட நீங்கள் பிடித்து இழுத்துவிட முடியாது.எதிர்த்து நிற்கும் உடலுறுதி ஒரு காரணமென்றால், இன்னொரு காரணம் அவர்களின் கூச்சலிலேயே ஊர்கூடிவிடும். ஒருமுறை தாலுகா அலுவலகத்திலிருந்து குறவர்களுக்குப் பட்டா ஒதுக்கியிருந்தார்கள். ஆனால் அவர்கள் பட்டா ஒதுக்கிய நிலங்களோ அவர்களின் வேட்டையிடங்களிலிருந்து தொலைவிலிருந்தன.

பலமுறை முறையிட்டும் பலனில்லை. ஒருநாள் குறவர் கூட்டமே தாலுகா அலுவலகத்திற்குள் நுழைய, ஒரே கூச்சல், களேபரம். தாலுகா அலுவலகத்திலிருந்த எல்லா அலுவலர்களும் வெளியேறிவிட்டார்கள். தாசில்தார் மட்டும் மாட்டிக்கொண்டார். பிறகு தாசில்தார் சொன்னார், 'தயவுசெய்து நீங்கள் என் இடத்திற்கு வரவேண்டாம், நானே உங்கள் இடத்திற்கு வந்துவிடுகிறேன்'.

நமது அரசமைப்பின் முட்டாள்தனத்திற்கு ஒரு மகத்தான சான்று அரசின் சாதிப்பட்டியலில் குறவர்களுக்கான இடம். அரசின் வரைமுறைப்படி நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வருவர். உண்மையில் அவர்கள் பழங்குடியினர் பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவர்கள். ஒரு பிரமலைக்கள்லரும் எம்.பிசி, வன்னியரும் எம்.பி.சி, நரிக்குறவரும் எம்.பிசி. நமது வரையறுப்புகளின் கேடுகெட்டதனங்களுக்கு இதைவிடவும் சாட்சி வேண்டுமா?

எனக்குக் குறவர்களோடு இருந்த நான்குமாதங்களில் இரண்டு ஆசைகள் இருந்தன. ஒன்று அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும். இன்னொன்று அங்கு மேரி என்னும் பெண்னைத் திருமணம் செய்துகொள்லலாம் என்று நினைத்திருந்தேன். பாதியில் இடைநின்ற மேரியை நான் தான் மீண்டும் பள்ளியில் சேர்த்திருந்தேன்.

சாம்சனிடமும் விசாரித்தேன், குறவர் பெண்னைப் பிறசமூகத்தவர் திருமணம் செய்ய இயலுமாவென்று. அதிலொன்றும் தடையில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்னையும் மாப்பிள்ளையையும் தனது சமூகத்திற்குள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். அதேபோல மாலை ஆறுமணிக்குமேல் வீடுதிரும்பும் பெண்ணையும் விலக்கம் செய்துவிடுவார்கள். எல்லாப் பழங்குடிச் சமூகங்களைப் போலவே இனத்தூய்மை பேணும் சமூகம்தான் குறவர்சமூகமும்.

ஆனால் எனக்கும் அந்த தொண்டுநிறுவனத்திற்குமிடையில் பிரச்சினைகள் உருவாக வேலையை விட்டு நின்றுவிட்டேன். மூன்றுமாதங்களுக்குப் பிறகு சென்று பார்த்தபோது அங்கு சாம்சனுமில்லை, மேரியுமில்லை. குறவர்கள் வேறெங்கோ கூடாரம் அடிக்கக் கிளம்பியிருந்தனர்.

12 comments:

ஜோ/Joe said...

நரிக்குறவர்கள் பற்றி நிறைய தகவல்கள் .நன்றி.

அவர்கள் பூர்வீகம் ,மொழியின் பூர்வீகம் என்ன?

கோவி.கண்ணன் said...

சுகுணா,

அசத்தலாக இருக்கு, இந்திய சமுகத்தில் அனைத்துச் சாதிகளும் போராடி முன்னேற முடியும் என்று எழுந்துவந்துவிட்டாலும். நரிக்குறவர் சமூகம் எந்தவித போராட்டத்தையும் நடத்தாமல் இருக்கிற வாழ்க்கையில் திருப்தி அடைந்துவிடுகிறார்கள் போல. அனைத்து சமூகங்களும் அவர்களை கேலிப்பொருளாகத்தான் பார்க்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் நரிக்குறவர்களை 'சாமியோ கோஷ்டி' என்பார்.

கடைசியில் ஒரு மெல்லிய ஒருதலைக்காதலை வைத்து 'உச்' கொட்ட வைத்துவிட்டீர்கள்.

ராஜ நடராஜன் said...

முந்தைய பதிவு ஒன்றினைக் காண்கையில் எழுத்தும் பொருளும் விவாதத்திற்குரியதாக இருந்தது.ஆனால் இங்கே வாழ்வும் எழுத்தும் அப்படியே அசல்.கூடவே எனது நண்பர் ஜெயச்சந்திரன் கூட இப்படித்தாங்க பொதுச் சேவையின்னு வால்பாறைக் காட்டுக்குள் சுத்தித் திரிந்தாரு.சமுதாயப் பார்வை கொண்ட நிறைய பேரு இப்படித்தாங்க அடையாளமே தெரியாம தமிழ் நாட்டுக்குள்...

மாசிலா said...

நல்ல அனுபவம்.

பாண்டிச்சேரியில் நரிக்குறவர்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இவர்களில் சிலர் கடற்கரை பீச் ரோட்டில் பலூன் விற்று வயிற்றை கழுவுகிறார்கள். கருவடிகுப்பம் இலாசுப்பேட்டை போன்ற சிற்றூர்களில் இவர்கள் வசிப்பது.

நான்கூட அவர்களிடம் எந்த பாரபட்சமும் இன்றி பழகுவேன்.

இவர்களைப்பற்றி மரக்காணம் பாலா எழுதிய இந்த பதிவை கொஞ்சம் படித்துப்பாருங்க. நிறைய புதுபுது விசயம் கிடைக்கும்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுகுணாதிவாகர்.

ச.மனோகர் said...

அந்த ஏரியாவில் 'அமைதி' யாக இருந்தீர்களா?

கையேடு said...

குறவர்கள் என்றில்லை பல பழங்குடியினத்தவருக்கு நல்வாழ்வு அளிக்கும் போர்வையில் அவர்களின் வாழ்வையும் வாழ்க்கை முறையையும் நசுக்கி அவர்களையும் நகர வீதிகளில் கட்டடக் கூலிகளாகவும், கைவண்டி இழுப்போராகவும் மாற்றியது நவீனவாழ்க்கை வாழும் நாம் செய்த சாதனைகளில் ஒன்று.

நம்முடைய வாழ்க்கைமுறைதான் மேம்பட்டது என்ற அராஜகப் போக்கின் வெளிப்பாடாக அவர்களிடமிர்ந்து கற்கவேண்டிய பலவற்றை இழந்துவிட்டோம்.

அவர்களுடைய மொழிபற்றிய தங்களின் ஆர்வத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் - ஆனால் அந்த முயற்சியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி விரிவாக எதுவும் சொல்லவில்லையே. நேரமிருந்தால் அதைப்பற்றி ஒரு தனி பதிவு எழுதுங்களேன்.

K.R.அதியமான் said...

///அப்போது நான் தன்னார்வத்தொண்டு நிறுவனம் என்னும் ஒரு ஏகாதிபத்திய அடிவருடி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன்///

why do say that ? something is better than nothing ; and the beneficairies of aid will not care for such idealogy as they will be grateful for the little aid they get while they suffer in dire poverty. while we Indians are incapable of helping them or are indifferent to their sufferings.
what harm do those NGOs do (apart from coversions)

Athiyaman

thiagu1973 said...

சமூக மதிப்பெனும் சவுக்குக்கு பயப்படாத ஒரே சமூகம் குறவர்கள்தான் போலும் .

சரி சுகுணா மேரிக்கு ஒரு கவிதை எழுதிடுங்க ;)

வவ்வால் said...

வித்தியாசமான ஒரு பதிவிட்டமைக்கு ஒரு பாராட்டு , ஆனால் எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமலே ஒரு முடிவுக்கு வருவது உங்கள் பழக்கம் போல,

//அரசின் வரைமுறைப்படி நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வருவர். உண்மையில் அவர்கள் பழங்குடியினர் பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவர்கள். ஒரு பிரமலைக்கள்லரும் எம்.பிசி, வன்னியரும் எம்.பி.சி, நரிக்குறவரும் எம்.பிசி. நமது வரையறுப்புகளின் கேடுகெட்டதனங்களுக்கு இதைவிடவும் சாட்சி வேண்டுமா?
//

இந்த நரிக்குறவர்கள் தமிழ் நாட்டை பூர்வீகமாக சேர்ந்தவர்கள் அல்ல, ராஜஸ்தான் மாநிலம் தான் சொந்த ஊர் , அவர்கள் பேசுவது தமிழும் ஹிந்தியில் உள்ள ஒரு வட்டார வழக்கும் சேர்ந்த கலவை.குற்றாலக்குறவஞ்சி போன்ற தமிழ் இலக்கியத்தில் வரும் குறவர்கள் வேறு!

மலைக்கொரவர்கள் என ஒரு வகை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் அட்டவணை இனத்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.இவர்கள் எண்ணிக்கையில் வெகு குறைவு, அவ்வளவு எளிதாக சான்றிதழ் கிடைக்காது அவர்களுக்கு.

மு. சுந்தரமூர்த்தி said...

இதில் மேலும் ஆர்வமுள்ளவர்களுக்காக, நரிக்குறவர்களைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த நூல்:

தலைப்பு: நரிக்குறவர் - இனவரைவியல்
ஆசிரியர்: கரசூர் பத்மபாரதி
பதிப்பாளர்: தமிழினி
ஆண்டு: 2004
விலை: ரூ. 160

இந்நூலைப் பற்றி வெங்கட் ஒரு பதிவு எழுதியிருந்தார். domesticatedonion.net இல் தேடினால் கிடைக்கும்.

நரிக்குறவர் சமூகத்தில் எருமை பலியிடுவோர், ஆடு பலியிடுவோர் என்று இரண்டு பெரும்பிரிவுகளும், அதில் உட்பிரிவுகளும் உள்ளதாகச் சொல்கிறது இந்நூல்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் (1981-83 வாக்கில், வன்னியர்கள் 20% இடஒதுக்கிடு கேட்டு போரடியதற்கு முன்னரே) பிற்பட்டவர்கள் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்று ஊர்வலம் நடத்தி கோட்டைக்குச் சென்றார்கள். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான இவர்கள் தங்கள் கோரிக்கையைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்ட குஷியில் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள் என்று சொல்லப்பட்டது.

சிவபாலன் said...

Good Post! Good Write up!


//சமூக மதிப்பெனும் சவுக்குக்கு பயப்படாத ஒரே சமூகம் குறவர்கள்தான் போலும்//

Wow..

சுகுணாதிவாகர் said...

நண்பர் வவ்வால்,

நான் நரிக்குறவர்கள் குறித்து ஆராய்ச்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே அவர்களுடன் பழகிய நான்குமாத அனுபவங்களைக் கொண்டே இதை எழுதினேன். அதனால் மலைக்குறவர்கள் மற்றும் நரிக்குறவர்கள் இவர்களுக்கிடையேயான நுட்பமான விஷயங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. நரிக்குறவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் குறைந்தது ஒரு நூற்றாண்டாவது இங்கேயே தங்கி வாழ்பவர்கள் என்றே கருதுகிறேன். சாதிய அடிப்படையில் அவர்கள் இட ஒதுக்கீடு கோரமாட்டார்கள் என்றபோதும் அவர்களது வாழ்வியல், பொருளாதார மற்றும் சமூக நிலைகளின் அடிப்படையில் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்கள் என்பதே என் கருத்து.