Sunday, November 11, 2007

அலிபாபாவும் 39 திருடர்களும்


















"புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம், எதிர்கால ஈழத்தின் தாகம் கோக் பெப்சி பானம்" என்றுரைத்து, எப்படியும் அமெரிக்காவின் புண்ணியத்தில் தமிழீழம் மலரும் என்று நம்பும் சூரியகாந்தன் ஒரு ஈழத்து எழுத்தாளர்.

'வாலறுந்தால் முளைப்பது
பல்லிகளுக்கு மட்டுமல்ல
புலிகளுக்கும்தான்" என அவ்வபோது நறுக்குகளும் எழுதுவார்.

எல்லா மனிதர்களுகும் ஏதோ ஒரு வியாதி இருக்கிறது. புத்தகத்தை வாங்கியவுடன் முகர்ந்து பார்ப்பது, அடுத்தவர் வீடு மற்றும் அரசு நூலகத்தில் நூல்களைத் திருடுவது, யூ டியூபில் போய்ப் பழைய சிலுக்கு படங்களைப் பார்த்து ரசிப்பது என.. அப்படி சூர்யகாந்தனுக்கு இருக்கும் வியாதி, இலக்கியவாதிகளைச் சந்தித்து அளவளாவுவது. இலக்கியவாதிகளிடம் இரண்டுவருடம் பழகுவது ஆயிரம் கட்டுவிரியன் குட்டிகளுடுடன் ஒரு கண்ணாடி அறையில் வசிக்கும் சாகசத்திற்குச் சமம் என நான் தலையாலடித்துச் சொல்லியும் அவர் கேட்பதாயில்லை.

நாங்கள் அன்றைகுச் சந்தித்தது பிரபல எழுத்தாளரும் 'கௌ' பத்திரிகையின் ஆசிரியரும், அல்வாக்கடை வியாபாரியுமான சுந்தரேசன்கொங்கணன். நாங்கள் போனபோது வீடியோவும் கையுமாக புத்தக அலமரியில் சாய்ந்துகொண்டும், கன்னத்தில் கைவைத்து மோட்டுவளையில் ஊர்ந்துகொண்டிருந்த பல்லியை முறைத்துக்கொண்டும், இன்னும் பலவாறான போஸிலிமிருந்தார். என்னவென்று ஒருகணம் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது. அவரின் முன்னோடியும் 'உள்ளொளி' பத்திரிகையின் ஆசிரியரும் ஜவுளிக்கடை வியாபாரியுமான எழுத்தாளர் சூனாசாமி ஏற்கனவே புகைப்படக்கண்காட்சி நடத்தி முடித்ததால் கொங்கணனோ புதுமையாக வீடியோகண்காட்சி நடத்தத் திட்டமிருந்தார் என்பது.

அவர் இந்த இலக்கியப்பணியில் மும்மரமாக இருக்கும் வேளையில் நான் அவரது மேசையிலிருந்த இரண்டு தட்டச்சுப்பிரதிகளைத் திருடினேன். இலக்கியவாதிகளிடம் திருடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. அவர்களே எங்கிருந்தோ திருடத்தான் செய்கிறார்கள் என்றும் சமயத்தில் அவர்களிடமிருந்து நான் திருடி எழுதும்போது அவர்கள் எழுதியிருந்தால் வந்திருப்பதைவிட நன்றாகவே இருகிறதென்றும் சமாதானம் சொல்வேன் (கூசாமல்).

முதலில் இருந்தது கல்யாணமன்னன் ஹைதர் அலியைப் பற்றி 'ஆதிக்குகை' பத்திரிகைக்கு அவர் எழுதியிருந்த கட்டுரை, 'தமிழ்ச்சமூகத்தில் பாலியல் ஒடுக்கமும் பலதாரமணமும்'. அதே கட்டுரையிலிருந்த சில வார்த்தைகளை நீக்கிவிட்டு 'ஜேப்படிபையன்' என்ற பெயரில் 'தினப்பூ - வாரப்பூ' பத்திரிகைக்கு 'ஜல்சா மன்னனின் சரச லீலைகள்' என்னும் தலைப்பில் ஒரு கிளுகிளுப்பான கட்டுரையை வரைந்திருந்தார். என்னை அவ்விரு கட்டுரைகளும் ஈர்க்கவில்லை. அவர் அடுத்து எழுதவிருந்த ஒரு நாவலுக்கான குறிப்புகளே என்னை ஈர்த்தன. இனி இந்த நாவலை நானும் நீங்களும் சேர்ந்து எழுதலாம். நான் மூலக்குறிப்புகளிலிருந்து பலவற்றை மாற்றியிருக்கிறேன். அவர் எழுதியிருக்கும் சில பொய்களுக்குப் பதிலாக நான் வேறுசில பொய்களை எழுதியிருக்கிறேன். கொங்கணன் நாவலுக்கு வைத்த தலைப்பு 'குரங்குகள் ஆண்கள் பெண்கள்'. நான் தலைப்பை மாற்றிவிட்டேன்...

-------------------------------

14ம் நூற்றாண்டில் பாண்டிநாட்டின் பள்ளியூர் என்னும் குக்கிராமத்தில் வசித்துவந்தவன் விமலநந்தன். அவன் புதிதாய் ஒரு மார்க்கத்தைக் கற்பித்துவந்தான். அம்மார்க்கத்தின் பெயர் விமலாதீகம் என்றழைக்கபட்டது. குழந்தைமையே உன்னதம் என்பதே அக்கோட்பாட்டின் அடிப்படை. குழந்தை பிறந்து ஆறுமாதங்கள் வரை மட்டுமே பவுத்திரமாக இருக்கிறது. அதற்குப் பின் மற்றவர்களின் கருத்துக்கள் ஏற்றப்பட்ட கழுதையாக மாறிவிடுகிறது. எனவே மனிதாயம் என்பதும் வன்முறையற்ற பேரன்பும் அறியாமையும் ஆறுமாதங்கள் வரை மட்டுமே சாத்தியம். விமலநந்தன் இருபத்தாறு குழந்தைகளைப் பெற்றெடுத்தான். நாற்பத்திரண்டு குழந்தைகள் வரை தத்தெடுத்து வளர்த்துவந்தான். ஆனால் குழந்தைகள் ஆறுமாதம் வளர்ந்தபிறகு அக்குழந்தைகளைக் கொன்றுவிடுவான். இவ்வாறாக குழந்தைமையின் புனிதத்தைக் காத்துவந்தான். இருபத்தாறு குழந்தைகளைப் பெற்றுக் கொல்வதற்குள் விமலநந்தனுக்கு தொண்ணூறு வயதாகிவிட்டது. இனி கொல்வதற்குக் குழந்தைகள் இல்லை,இப்போது தானே ஒரு குழந்தையாய் இருப்பதை உணர்ந்தான், ஆறுமாதத்தில் இழந்த தனது உன்னதமான குழந்தைமையை தொண்ணூறு வயதில் பெற்றிருந்தான். இதற்கு 89 வருடங்களைக் கடந்துவரவேண்டியிருந்தது. விமலன் வடக்கிருந்து உயிர்துறந்தான் என்றும் தீர்த்தங்கரர் மலையுச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டான் என்றும் கொலைகள் செய்த குற்றத்திற்காக அரசனால் தண்டிக்கப்பட்டான் என்றும் பல்வேறு கதைகள் உலவி வருகின்றன.
------------------------------------------


எழுத்தாளர் சுருளியாண்டி சமீபத்தில் வந்த இயக்குனர் சிற்றரசுவின் 'எருமைக்காரன் பாளையம்' என்னும் திரைப்படத்திற்கான விமர்சனத்தை எழுதி, அதற்கு 'தமிழ்நிலப்பரப்பில் ஒரு விளிம்புக்குரல்' என்று தலைப்பிட்டு உகாண்டா நாட்டுத் திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக விளிம்புநிலை மக்களின் குரலை மிகச்சரியாகப் பதிவு செய்தது 'எருமைக்காரன் பாளையம்'தான் என்று எழுதி தனது நண்பர் சாலமன் நடத்தும் 'தொன்மநிழல்' பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். இடையில் என்ன மேஜிகல் ரியலிசம் நடந்ததோ சாலமனின் கைகளுக்குப் போய்ச் சேரும்போது அந்த கடிதம் கீழ்க்கண்டவாறு இருந்தது.

மதிப்பிற்குரிய இயக்குனர் எவரெஸ்ட் சிற்றரசுவிற்கு,

தங்களின் 'எருமைக்காரன் பாளையம்' திரைப்படம் பார்த்தேன். மிகச்சிறந்த படம். அதிலும் குறிப்பாக நீங்களே எழுதியிருந்த பாடலான

'ஙொம்மாவும் எங்கம்மாவும் சேரமுடியுமா
ங்கொப்பாவும் எங்கப்பாவும் கூடமுடியுமா'

என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. நான் இருபத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறேன். பல்வேறு இலக்கியச்சண்டைகளிலும் பங்குபெற்றிருக்கிறேன். எனவே உங்கள் அடுத்தபடத்திலாவது எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களென்று நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள
சுருளியாண்டி.

===================================================================

அழகிய தமிழ்மகன் - சிறுகுறிப்பு வரைக.

எனக்கு விஜய்யைப் பிடிக்காது, ஸ்ரேயாவைப் பிடிக்கும். நேற்று இரவு அழகிய தமிழ்மகன் படம் பார்த்தேன். வலைத்தளங்களில் காதலின் பிரிவும் பிரிவின் நிமித்தமும் எழுதப்படும் புலம்பல் கவிதைகளைவிட மொக்கையாக இருந்தது. ஸ்ரேயா படம் முழுக்க அழகாக சிரிக்கிறார், ஆனால் நடிக்கவில்லை. திறந்த மனது கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஸ்ரேயா படம் முழுக்க திறந்த முதுகுக்காரராக வருகிறார். நமீதாவைப் பார்க்கும்பொதெல்லாம் நாளை மதியம் சமையலுக்கு எத்தனை கிலோ கறி வாங்க வேண்டும் என்னும் கேள்வியே அடிக்கடி வருகிறது. வழக்கம்போல ரகுமானின் இசையில் பாடல்கள் தியேட்டரில் புரியவில்லை, எப்.எம்மிலோ கேசட்டிலோ கேட்கும்போது புரியலாம்.'பொன்மகள் வந்தாள்' பாடல் சூப்பர். 'கெட்ட விஜய்' ரஜினி போல நடிக்க முயன்று தோற்றிருக்கிறார். இந்த வில்லன் வேடத்தில் உண்மையிலேயே ரஜினி நடித்திருந்தால் அசத்தியிருப்பார், (மூன்றுமுடிச்சை மறக்கமுடியுமா?). இதேமாதிரியான ஆன்டி ஹீரோ சப்ஜெக்டில் விஜய் 'பிரியமுடன்' படத்தில் நன்றாகத்தானே நடித்தார்? எந்தக் கல்லூரியில் 'அழகிய தமிழ்மகன்', 'அழுகிய தக்காளி மகன்' என்றெல்லாம் விருதுகள் தருகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கள் கல்லுரியில் எல்லாம் எனக்கு 'அழகிய அரியர்ஸ் மகன்' விருதுதான் தந்தார்கள். இந்த ஈ.எஸ்.பி என்றால் என்ன? எதிர்காலத்தில் நடபதை அறிகிற சக்தி. அதுசரி? எதிர்காலத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, ஆக்சிடென்ட் இந்த மாதிரியான எழவுகளை மட்டுமே ஒளிபரப்பும் தனியார் சானலா அது? எதிர்காலத்தில் கல்யாணம், காதுகுத்து, சடங்கு இதெல்லாம் நடக்காதா, இதையெல்லாம் ஈ.எஸ்.பி சொல்லாதா? ஸ்ரேயாவை விஜய் குத்திவிடுவதைப்போல ஈ.எஸ்.பி பிரமை வந்து, பிரச்சினைகள் முடிந்து சுபம் போடுகிறார்களே, 'நல்ல' விஜய்க்கும் ஸ்ரேயாவிற்கும் கல்யாணம் முடிந்தபிறகு ஸ்ரேயாவையோ, ஸ்ரேயாவின் அப்பா, விஜய்யின் அப்பா, அம்மா, கஞ்சாகருப்பு இவர்களில் யாருக்கோ கத்திகுத்து, டிரெய்ன் ஆக்சிடெண்ட், குச்சிமிட்டாய் சாப்பிடும்போது தொண்டையில் அடைத்து சாவு - இப்படி எந்த எழவும் விழாதா? அதைக் கல்யாணத்திற்கப்புறம் ஈ.எஸ்.பி சொன்னால் விஜய் என்ன செய்வார்?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இறுதித்தீர்ப்பின் மறுநாளில்
பிணங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பெருவெளி.
மைதானமெங்கும் வெறும் அமைதியே சூழ்ந்திருந்தது.
ஒரே ஒரு அழகிய இளைஞன் மட்டும் உழைத்து அழகிய கறுத்த உடலுடன் புன்னகை மாறாமல் திரிந்துகொண்டிருந்தான். அவன் கையில் குழலும் பறையுமிருந்தன. பல்வேறு கனிகளைப் புசிப்பவனாயிருந்தான். தயங்கித் தயங்கி அலிபாபா கேட்டான், "நீங்கள் யார்?" இளைஞனோ கைகுலுக்குவதற்காய் கைகளை நீட்டினான். எதேச்சையாய் அலிபாபாவின் கரங்கள் தானாகக் கூப்பின.

இப்போது உரக்கச் சிரித்த இளைஞன், "பிறரைத் தீண்டுவதைத் தவிர்க்கும் தந்திரம்தான் உங்கள் கைகூப்பிய வணக்கம். எனக்கு அத்தகைய மனத்தடைகள் கிடையாது" என அலிபாபாவை ஆரத்தழுவிக் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே இளைஞன் சொன்னான் 'நான் தான் சாத்தான்"

அலிபாபா ஒரு கணம் திகைத்துப் போனான்.

மேலும் தொடர்ந்தவன் " பல்வேறு காலங்களில் பல்வேறு பெயர்கள் சித்தார்த்தன், மகாவீரன், கம்யூனிஸ்ட், நக்சலைட் என இப்படி. கையாலாகாத கடவுளின் அதிகாரம் குறித்துத் தொடர்ந்து கேள்வியெழுப்பும் கலகக்காரன் நான்"

"நீ கொடியவனில்லையா?"

இப்போது சாத்தான் இன்னும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினான், "அலிபாபா, நான் கொடியவனாயிருந்தால் இந்நேரம் நீ கேள்விகேட்டிருக்க முடியாது. காமம் என்னும் அழகிய உணர்வைக் கேவலம் ஒரு ஆப்பிளுக்குள் ஒளித்து வைத்த முட்டாள் கடவுள். நான் தான் சின்னஞ்சிறு கனியிலிருந்து காமத்தை விடுதலை செய்தேன், மனிதர்களையும். இந்த உலகம் காதலாலும் அன்பாலும் நிரப்பப்பட்டிருக்கிறதென்றால் அது என்னால்தான்"

"உனக்கு அழிவு கிடையாதா?"

"மீண்டும் மீண்டும் கேள்வி. நல்லது. கடவுளின் ராஜ்ஜியத்தில் நீ கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவதில்லை. சாத்தானின் அருகாமையில் மட்டுமே நீ கேள்விகளை எழுப்பலாம், விமர்சிக்கலாம். கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தார் என்று உனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறதே அலிபாபா, என்னைப் படைத்தது யாரென்று சொல்லப்பட்டிருக்கிறதா? கடவுளின் மரணத்தைச் சொன்னவன் நீட்ஷே. கடவுளுக்குத்தான் மரணம் உண்டு. அளவற்ற அன்புடையவனும் தோழமையுணர்வில் ஊறித்திளைப்பவனும் சமத்துவத்தையும் அறத்தையும் நேசிப்பவனுமான சாத்தானுக்கு மரணமில்லை"

12 comments:

குட்டிபிசாசு said...

//பிறரைத் தீண்டுவதைத் தவிர்க்கும் தந்திரம்தான் உங்கள் கைகூப்பிய வணக்கம். எனக்கு அத்தகைய மனத்தடைகள் கிடையாது//

அருமை!

லக்கிலுக் said...

கும்மி என்று ஓடோடி வந்த என்னை இப்பதிவில் வீசும் பின்நவீனத்துவ நெடி குபீரென்று நாசியைத் தாக்க டமாலென்று மயக்கம் போட்டு விழுகிறேன்!

முரளிகண்ணன் said...

\\யூ டியூபில் போய்ப் பழைய சிலுக்கு படங்களைப் பார்த்து ரசிப்பது\\
\\அதைக் கல்யாணத்திற்கப்புறம் ஈ.எஸ்.பி சொன்னால் விஜய் என்ன செய்வார்?
\\
ha ha ha ha ha

Ayyanar Viswanath said...

சிற்றறரசுக்கு சிறந்த கதாசிரியர் விருது மட்டும் கொடுத்தது தமிழின துரோகம்.அவருக்கு சிறந்த திரைக்கதையாசிரியர்,மிகச்சிறந்த இயக்குநர்,அருமையான பாடலாசிரியர் போன்ற விருதுகளெல்லாம் ஏன் தரப்படலைன்னு உட்ன்பிறப்புகளாகிய நாம் குரல்கொடுக்கலாம்..

மிஸ்ஸான ஒரு திருடன் யார் சுகுணா :)

Anonymous said...

டவுஸர் கிழிந்து தாவு தீருகிறது...இந்த பதிவை 80 கோடி இந்துக்களும் சேர்ந்து எதிர்ப்போம்...

Anonymous said...

தோ வந்துட்டேடேடேன்...!!!!

அழகிய தமிழ்மகனில் விஜய்க்கு எஸ்.பி.பி வியாதியா ? எஸ்.பி.பி னா பாட்டு பாடறவர் தானே ? அதுல என்ன பிராப்ளம் ?

சிறந்த பின்னவீனத்துவ பிரிண்டவுட் பதிவு..!!!

:)

தமிழ்நதி said...

"காமம் என்னும் அழகிய உணர்வைக் கேவலம் ஒரு ஆப்பிளுக்குள் ஒளித்து வைத்த முட்டாள் கடவுள். நான் தான் சின்னஞ்சிறு கனியிலிருந்து காமத்தை விடுதலை செய்தேன், மனிதர்களையும். இந்த உலகம் காதலாலும் அன்பாலும் நிரப்பப்பட்டிருக்கிறதென்றால் அது என்னால்தான்"

அடடா!சாத்தான் அற்புதமாகப் பேசியிருக்கிறது. (சாத்தானைத்தான் சொன்னேன்) நீங்கள் தேவதைகளிடம் காட்டும் பிரியத்தைக் காட்டிலும் சாத்தான்களிடம் பிரியமாயிருப்பதைப் போல தெரிகிறதே:)

காயத்ரி சித்தார்த் said...

என்ன கொடுமை சார் இது????!!

theevu said...

தமிழ்மணத்தில் நையாண்டியாக எழுதுவதில் செந்தழலார் கொழுவி போல் என்னை கவர்ந்த எழுத்தர்களில் நீங்களும் ஒருவர்.

மதுரையில் மாலன் கட்டுரையிலே சொல்ல நினைத்தேன்.பின்னூட்டம் போட்டேனோ தெரியாது

தமிழ் கம்னூற்றி அல்லது கம்மனாட்டி
சார்பில்(இதை யார் எங்கே சொன்னார்கள் என சந்தர்ப்பம் கூறி விளக்குக.)

-தீவு -

அரை பிளேடு said...

:)

வால்பையன் said...

//இந்த ஈ.எஸ்.பி என்றால் என்ன? எதிர்காலத்தில் நடபதை அறிகிற சக்தி. அதுசரி? எதிர்காலத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, ஆக்சிடென்ட் இந்த மாதிரியான எழவுகளை மட்டுமே ஒளிபரப்பும் தனியார் சானலா அது?//

சரியான கேள்வி தான்!
:)

வால்பையன் said...

இறுதி தீர்ப்பின் மறுநாள் ரசிக்கும்படி இருந்தது.