Monday, June 30, 2008

சிந்தாநதி?

முதலவதாக சுஜிபாலா புகைப்படம் தொடர்பான செய்தி சினிமநிருபர் வலைப்பூவில் இடம்பெறவில்லை, தமிழ்சினிமா வலைப்பூவில்தான் இடம்பெற்றது என்பதைப் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். தவறுக்கு வருந்தி வாசகர்களும் சினிமா நிருபரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தமிழ்சினிமா வலைப்பூவில் வெளியான செய்தி இங்கே.

http://tamilcineema.blogspot.com/2008/06/blog-post_9128.html



ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா என்னும் தலைப்பு ஆபாசமாக இருப்பதால் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்சினிமா பதிவர் தெரிவிக்கிறார். ஆனாலும் எனது முந்தைய பதிவின் கேள்விகள் இன்னமும் அப்படியே மிச்சமுள்ளன. 'ஆபாசம்' பற்றியல்ல, நமது வரலாற்றுப் பிரக்ஞை குறித்தவையே அக்கேள்விகள்.

ஆங்கிலேய ராணுவத்தால் தமிழ்ப்பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகவும் சில பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. நான் அச்செய்தியைப் படித்ததில்லை. வாய்ப்பிருந்தால் அதை வலையிலேற்றி நண்பர்கள் உதவலாம்.

ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை நியாயப்படுத்துவதல்ல எனது நோக்கம். மாறாக தேசபக்தி, தேஅச ஒற்றுமை, கலாச்சாரத் தேசியம், மதப்பெருமிதம் போன்ற பெருங்கதையாடல்களின் வழியாக வரலாற்றைத் திரிக்கும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே அஃது. ஆனால் பெருமளவில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைகளைச் செய்ததாக பேரளவில் ஆதாரங்களில்லை. அப்படியே இருந்தாலும் கூட அது நமது ஆதிக்கச்சாதி வெறியர்கள், இந்தியப் போலீசு மற்றும் ராணுவ 'வீரர்கள்' ஆகியோரோடு ஒப்பிட்டால் சுஜுபியாகத்தானிருக்கும்.

முந்தைய பதிவு தொடர்பாக நண்பர் சிந்தாநதி சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அது தொடர்பாக சில விளக்கங்கள்.

/
அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?/

இயக்குனரும் தயாரிப்பாளர்களும் கருத்தியல் ரீதியாக மாற்றுச்சிந்தனை உடையவர்கள் என்றோ அதற்காகத்தான் வைகுண்டர் பற்றித் திரைப்படம் எடுத்தார்கள் என்றோ அவர்களுக்கு 'கவர்ச்சி', உள்ளிட்ட வியாபார நோக்கங்கள் இல்லை என்றோ நான் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. மேலும் அத்திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் பின்னணி, கருத்தியல் பின்புலம் குறித்தும் கூட எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை வைகுண்டரை நாடார் சமூகத்தைச் சேர்ந்த 'மகானாக'ச் சுருக்கிச் சித்தரிக்கும் நோக்கமும் கூட அதற்கு இருக்கலாம். ஆனால் எனது அக்கறை அதன்பாற்பட்டதல்ல.

/ நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்./

பதிவெழுதும் இந்த நிமிடம் வரை அந்தப் படத்தையே பார்க்காத நான் அதை புரட்சிகரப்படம் என்று எப்படிக் கூற முடியும்? மேலும் எங்கே நான் அப்படிக் கூறியிருக்கிறேன்?

/வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. /

வைகுண்டர் 'பக்தர்கள்' மீது உங்களுக்கு இருப்பதைப் போலவே எனக்கும் விமர்சனங்களிருக்கின்றன. நான் எனது பதிவில் எங்கே அவரை மகானாகத் திருவுருவாக்கியிருக்கிறேன் என்பதைக் குறிப்பிடாமல் போகிறபோக்கில் அவதூறுகளைத் தெளித்துப் போவது நீதியல்ல.

மேலும் குஷ்பு விவகாரம் தொடர்பான உங்களின் ஒப்பீடு ஆகப்பெரிய அபத்தமாகத்தானிருக்கிறது. 'சுஜிபாலா வைகுண்டரின் மனைவியாக நடிக்கக்கூடாது' என்றெல்லாம் நான் உளறவில்லையே, ஒருவேளை ஒப்பீட்டின் பொருத்தப்பாடு என் சிற்றறிவிற்குத்தான் எட்டவில்லையோ, என்னவோ!

6 comments:

Samuthra Senthil said...

//முதலவதாக சுஜிபாலா புகைப்படம் தொடர்பான செய்தி சினிமநிருபர் வலைப்பூவில் இடம்பெறவில்லை, தமிழ்சினிமா வலைப்பூவில்தான் இடம்பெற்றது என்பதைப் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். தவறுக்கு வருந்தி வாசகர்களும் சினிமா நிருபரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்//

மிக்க நன்றி சுகுணாதிவாகர். எனது தனிமடலுக்கு மதிப்பளித்து மேலும் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி...!

Anonymous said...

//எனவே வைகுண்டர் காலத்துப் பெண்ணாய் நடிக்கும் நடிகை திரு. சுஜிபாலா ஜாக்கெட் அணியாமல்தான் நடிக்கமுடியும். ஆனால் இத்தகைய வரலாற்று அவலத்தைக் கூட 'கவர்ச்சி விருந்து' படைக்க பயன்படுத்திக்கொள்வது அவமானகரமான விசயம்.//

சுகுணா திவாகர்

இது உங்கள் பதிவில் இருக்கும் வாசகம். பதிவின் தலைப்பு, வலைப்பதிவில் அந்தப் படத்தை வெளியிட்டவர் மீதுதான் உங்கள் விமர்சனம் என்பதை சொல்கிறது.

=

//நான் எனது பதிவில் எங்கே அவரை மகானாகத் திருவுருவாக்கியிருக்கிறேன் என்பதைக் குறிப்பிடாமல் போகிறபோக்கில் அவதூறுகளைத் தெளித்துப் போவது நீதியல்ல.//

இது உங்கள் சினிமா நிருபருக்கு ஒரு கவனக்குறிப்பு என் ற பதிவில் இருக்கும் வாசகம்

// உண்மையில் அது 'அய்யாவழி' என்னும் வைகுண்டத்தோப்பு சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் காட்சி. வைகுண்டர் ஒருகாலத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட நாடார்சமூகத்தில் பிறந்தவர். பார்ப்பன - இந்துப்பெருமத மரபிற்கெதிராக மாற்றுவழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர். அக்காலகட்டத்தில் நாடார் இனப்பெண்களுக்குத் தோள்சீலை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதும் அதற்கெதிராகத் தோள்சீலைப் போராட்டம் நடந்ததும் வரலாறு.//

சுகுணாதிவாகர் said...

சிந்தாநதி

'கவர்ச்சி விருந்து' படைக்கத்தான் அந்தத் திரைப்படமே எடுக்கப்பட்டதென்றால் எனது கண்டனம் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. மேலும் வைகுண்டர் சாதியக் கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிராக மாற்று வழிபாட்டுமுறையையும் கலாச்சார மதிப்பீடுகளையும் உற்பத்தி செய்தவர் என்கிற வகையில்தான் குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, மற்றபடி அவரை அற்புதங்களை உருவாக்கும் மகானாக அல்ல. பங்களிப்பை மதிப்பது வேறு, விமர்சனங்களற்று கேள்விகளற்ற திருவுருவாக்குவது வேறு. உண்மையில் வைகுண்டரும் அவரது வழிபாட்டு முறையும் இந்து மதத்திற்குள்தான் உள்ளிழுக்கப்பட்டன. இது அவருக்கு மட்டுமல்ல, நாராயணகுரு, அய்யன்காளி, வள்ளலார் போன்ற பலருக்கும் நேர்ந்த கதி. இன்னொரு வகையில் சொல்லப்போனால் வைகுண்டர், அய்யன்காளி போன்றோரின் செயல்பாடுகள் ஒடுக்கப்பட்ட சாதிகளை மதமாற்றத்திலிருந்து தடுத்தது என்றும் சொல்லலாம்.

Anonymous said...

//'கவர்ச்சி விருந்து' படைக்கத்தான் அந்தத் திரைப்படமே எடுக்கப்பட்டதென்றால் எனது கண்டனம் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல.//

படம் கவர்ச்சி விருந்து படைக்கத் தான் எடுக்கப் பட்டதாக நானும் கருதவில்லை. ஆனால் படத்தின் வியாபார நோக்கங்களுக்கு அந்த கவர்ச்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சி சற்று விரசமாக இருப்பதாகக்கூட செய்தி இருக்கிறது...

சமூகப்புரட்சியாளர் என்ற நோக்கிலேயே படத்தை எடுத்திருப்பதாக இயக்குநரின் பேட்டிகள் இருந்தன. ஆனால் படத்தை பக்தியை முதன்மையாக்கி
எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தங்கள் கொடுக்கப் பட்டதாகவும் செய்திகள் உண்டு.

படம் பார்க்காத்தால் எப்படி வந்திருக்கிறது என்று சொல்ல இயலாது. ஆனால் பக்த்ர்கள் பக்திப் படமாகவும் சாதாரண சனங்கள் இது போன்ற கவர்ச்சியை எதிர்பார்த்தும் படத்தை பார்க்கலாம்.

வைகுண்ட ராஜா said...

"வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார்."

வைகுண்டர் புரட்சியாளர் என்று யார் கூறியது உங்களிடம்?

19 - ஆம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய வைகுண்டர் வரலாற்றில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளாரா? சாத்தான் என்றும் பேயன் என்றும் வசை பாடும் சில LMS அறிக்கைகளை தவிர்த்து அவர் வரலாற்றில் வாழ்ந்தார் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை.

இதற்கு மாற்றாக அவர் பற்றிய செய்திகளை குறிப்பது அய்யாவழியின் புனித நூலான ஆகிலத்திரட்டு மட்டுமே. அதை நீங்கள் கண்ணால் கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை. இல்லையேல் இவ்வாறான ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் வார்த்தை படையெடுப்பு நடத்தியிருக்க மாட்டீர்கள். நான் யூகிக்கிறேன் - நீங்கள் வைகுண்டர் பற்றி அறிந்திருப்பதெல்லாம் ஏதோ பல்கலைக்கழக ஆய்வு புத்தகங்கள் வாயிலாக மட்டும் தான் இருக்க முடியும்; சந்தேகமே இல்லை. அதன் விளைவு தான் இந்த அகில மஹா குழப்பம் அல்லது அறிவீனம்.

நண்பரே! 'ஆகிலத்திரட்டு ஆம்மானை' (அனேகமாக இது தமிழின் மிகப்பெரிய அம்மானை நூலாக இருக்கலாம்) என்று ஒன்று உண்டு; தேடிப்பாருங்கள், கிடைத்தால் அதை சற்றே பார்த்துவிட்டு பின் வாருங்கள், வைகுண்டரை பற்றி பேசலாம்.

அதற்கு முன்பு கீழ்க்காணும் URL வைகுண்டர் அல்லது அய்யாவழி பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து கொள்ள உதவலாம்.


http://en.wikipedia.org/wiki/Ayyavazhi

ம்ம்ம் "மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். " நண்பரே, வார்த்தைகள் விளம்புவதற்கு முன்னால் சற்றே சிந்தித்தல் நன்று;

Sara Suresh said...

நன்றாக சொன்னீர்கள்Anonymous வைகுண்ட ராஜா