Tuesday, September 1, 2009

அறிஞர் அண்ணாவும் தம்பி பிரபாகரனும் கடைசிவரை பாம்பை வெளியே எடுக்காத தமிழவனும்

‘அண்ணா உருவாக்கிய தமிழரசியல்’ என்ற பேராசிரியர் தமிழவனின் கட்டுரையை தீராநதி ஆகஸ்ட் 2009 இதழில் படிக்க நேர்ந்தது. இது கட்டுரையின் நான்காம் பாகம். முதல் மூன்று பாகங்களைப் படிக்கும் கெடுவாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. கட்டுரையின் இரண்டாம் பத்தியிலேயே தமிழவனின் அதிரடி ஸ்டேட்மெண்ட் ஒன்று.

‘அண்ணாதுரை அவர்கள் சந்தேகமில்லாமல் தமிழர்களின் வரலாற்றில் புதிய அரசியல் தன்மையைக் கொண்டு வந்தார். இன்று பிரபாகரனையும் அப்படி பார்க்கலாம்.’ எனவே அண்ணாவின் தமிழரசியல் மற்றும் பிரபாகரனின் தமிழரசியலுக்கும் உள்ள கருத்தியல் அடிப்படைகள் குறித்து தமிழவன் பேசுவார் என்று கருதி கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தேன். (ஏற்கனவே நீ நான் என்றெல்லாம் பாடம் நடத்தி தமிழ் அறிவுலகைக் கதிகலங்க வைத்தவராயிற்றே!) ஆனால் நான்கு பக்கங்கள் உள்ள இந்த கட்டுரையில் இரண்டரை பக்கம் வரை தமிழவன் பாம்பை வெளியே எடுக்கவேயில்லை. சரி, அந்த இரண்டரை பக்கத்திலும் தமிழவன் அப்படி என்னதான் வித்தை காட்டியிருக்கிறார் என்று பார்த்தால் அதுவும் பிஸ்கோத்துதான்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் ஏன் அண்ணா ‘திராவிட’ பெயரையே சுமந்து திரிந்தார், கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் திராவிட அரசியலில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்று வழக்கமான கதைதான். சரி நம் அறிவுஜீவிகள் சமையல் குறிப்பு, ஜாதகக் கட்டம், சங்கக்கவிதை, லத்தீன் அமெரிக்க கவிதை, கிரேக்க புராணம், குறுக்கெழுத்துப்போட்டி, ஆயா பாயா தயாரித்த கதையெல்லா எழுதி விட்டுத்தானே மேட்டருக்கு வருவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். அப்போதுதான் அண்ணா பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது குறித்து எழுதியிருந்த எழுத்தில்தான் தமிழவனின் நகைச்சுவை உணர்வை அறிய நேர்ந்தது.

‘பிரிவினையைக் கைவிடும்போது அது ஒரு தந்திரோபாயம் என்றுதான் கட்சி கூறியது என்று சார்லஸ் ரியர்ஸன் அந்தோணி என்ற அமெரிக்க ஆய்வாளர் கூறுகிறார். திமுக பற்றிய முனைவர் பட்ட ஆய்வேட்டை சார்லஸ் ரியர்ஸன் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்கும்போது இக்கருத்து அந்த ஆய்வேட்டில் இருந்தது’ என்கிறார் தமிழவன். அண்ணா தமிழ்ச்சமூகத்தின் முக்கியமான அரசியல் ஆளுமை. நாற்பதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி ‘கோரிக்கைதான் கைவிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன’ என்று அண்ணா குறிப்பிட்டதைக் கருணாநிதியே பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் இதைச் சொல்வதற்கு தமிழவனுக்கு டோக்ரா மோக்ரா கம்பெனியிலிருந்து ஆள் வர வேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண நிகழ்வைக் கூட பல பெயர்களைப் போட்டு எப்படி நம் அறிவுஜீவிகள் மிரட்டுகிறார்கள் என்பதற்குத் தமிழவனின் இந்த பாம்பு ஒரு உதாரணம். அதுசரி, நம் சிந்தனையாளர்கள் சிவகாசி ஜெயலட்சுமி பற்றிய கட்டுரையைக் கூட கிரேக்கப் புராணத்திலிருந்துதானே ஆரம்பிப்பார்கள்.!

அதோடு விட்டாரா தமிழவன்? ‘கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் மோகன்குமாரமங்கலம் துணையுடன் திராவிடக் கட்சியை இரண்டாகப் பிளப்பதற்கு இந்திராகாந்தி துணிகிறார்’ என்று அடுத்த காமெடிக்குண்டைச் சளைக்காமல் வீசுகிறார். மோகன்குமாரமங்கலம் கம்யூனிஸ்ட் சிந்தனையாளராம்! அப்படியானால் ஆன்டனிகிராம்ஷி, அல்தூசரையெல்லாம் தமிழவன் எப்படி குறிப்பிடுவார் என்று தெரியவில்லை. 34ம் வட்ட சி.பி.எம் கவுன்சிலர் முத்துசாமி கூட தமிழவனுக்கு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்தான் போலும்.
இப்படி தானே பல காமெடிகளை நிகழ்த்தியும் ஆறுமுகநாவலரின் தமிழரசியலையும் அண்ணாவின் தமிழரசியலையும் விவஸ்தைகெட்டதனமாக முடிச்சு போடும் தமிழவன்தான் ‘அண்ணாவை இப்படித்தான் உயிரோட்டமுள்ள மதிப்பீடுகள் அணுகும். அண்ணாவுக்கு மூக்குப்பொடி கொடுத்தவர் யார் யார் என்று தரங்கெட்ட ஆராய்ச்சிகள் வரக்கூடாது’ என்று மற்றவர்களை வேறு கண்டிக்கிறார்.

இப்படியான காமெடி ஷோவின் இறுதியில் விட்டகுறை தொட்டகுறையாக அண்ணாவும் பிரபாகரனும் சங்க இலக்கிய வீரமும் மார்க்ரெட் ட்ராவிக். பீட்டர் ஷால்க் என்ற வெள்ளைக்கார ஆய்வாளர்களும் என அதகளம் பண்ணியிருக்கிறார். அண்ணா ஒரு அரசியல் வகைப்போக்கை உருவாக்கியதைப் போலவே பிரபாகரனு ஒரு அரசியல்வகைப்போக்கை உருவாக்கினார் என்பது உண்மைதான். இன்றளவும் பல தமிழர்களிடத்தில் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைதான் பிரபாகரன். தமிழர்களின் சுயமரியாதைக்கும் வீரத்திற்கும் குறியீடாகக் கருதப்படுபவர் பிரபாகரன்.

ஆனால் அன்ணாவின் அரசியல் ஒரேநேரத்தில் அறிவு மற்றும் உணர்வுத்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. அண்ணா காலத்திய அறிவு மய்யங்கள் இரண்டு. தேசியத்தையும் பார்ப்பனீயப்பிரதிகளையும் ஒன்றிணைத்த பார்ப்பன அறிவு மய்யம். சைவ வேளாளப் பிரதிகள் வழியே பார்ப்பன எதிர்ப்பு & தமிழ்ப்பெருமிதத்தை முன்வைத்த வெள்ளாள அறிவு மய்யம். அண்ணா பார்ப்பனப் பிரதிகளை எதிர்த்தது மட்டுமில்லாது சைவப்பிரதிகளிலிருந்து விலகிய தனக்கேயான தமிழ்ப்பெருமிதத்தைக் கட்டமைத்து வெற்றி கண்டவர். அண்ணா கம்பராமாயணத்தை மட்டுமல்ல, பெரியபுராணத்தையும் எரிக்கச் சொன்னவர். கருணாநிதி தூக்கிப்பிடித்த கண்ணகியும் குண்டலகேசியும் பவுத்த சமணப்பிரதிகளில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் என்பவை கவனத்திற்கொள்ளத்தக்கது. அதேநேரத்தில் பெரியார் முன்வைத்த கருத்துருவங்களிலிருந்தும் விலகியே அண்ணா தனக்கான தமிழ் அரசியலைக் கட்டமைத்தார்.

மேலும் அண்ணா முன்வைத்த திராவிடநாடு கருத்தாக்கம் மற்றும் தமிழர் வரையறை எவ்வளவு நெகிழ்வுத்தன்மை வாய்ந்தன்மை, தேசியத்தைப் பாசிசமாக மாற்றாமல் காப்பாற்ற முனைந்தவை என்கிற ஆய்வுகளை ஏற்கனவே நிறப்பிரிகை முன்வைத்திருக்கிறது. ஆனால் பிரபாகரன் கட்டமைத்த தமிழ்த்தேசியம் எத்தன்மை வாய்ந்தது, அதற்கும் அண்ணா கட்டமைத்த தேசியத்திற்குமான கருத்தியல் ஒற்றுமைகள் மற்றும் விலக்கங்கள் குறித்து தமிழவன் எழுதியிருந்தால் அது உருப்படியான ஒரு ஆய்வாக இருந்திருக்கும். ஆனால் பிரபாகாரன் பற்றி யாராவாது கோக்ரான் மேக்ரான் வெள்ளைக்காரர் கொல்மபியா பல்கலைக்கழகத்தில் ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க வேண்டுமே. அதுவரை தமிழவன் காத்திருக்க வேண்டுமல்லவா?

18 comments:

யுவகிருஷ்ணா said...

//தேசியத்தைப் பாசிசமாக மாற்றாமல் காப்பாற்ற முனைந்தவை என்கிற ஆய்வுகளை ஏற்கனவே நிறப்பிரிகை முன்வைத்திருக்கிறது.//

ஒட்டுமொத்தமாக நிறப்பிரிகை எத்தனை பிரதிகள் வந்தது?

Dr.Srishiv said...

நல்ல ஒரு கருத்தாழம் மிக்க கட்டுரை, தொடர்க , வாழ்க வளமுடன்
ஸ்ரீஷிவ்....திருவருணையிலிருந்து...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தமிழவன் நான் நீ என்று பாடம் நடத்தினார் என்று நீங்கள் சொல்வது எந்தக் கட்டுரையை? நான் x நீ என்று கவிதைகளில் உருவாகும் எதிர்வுகளைப் பற்றிய தமிழவனின் கட்டுரையா? அது படிகளில் வந்ததுதானே...

சுகுணாதிவாகர் said...

பதிவில் ஏகப்பட்ட பிழைகள். மன்னிக்க வேண்டுகிறேன்.

சுகுணாதிவாகர் said...

லக்கி,

எத்தனை பிரதிகள் என்றால் எத்தனை காப்பிகள் என்று கேட்கிறீர்களா, எத்தனை இதழ்கள் என்று கேட்கிறீர்களா? இதழ்கள் என்றால் பத்து.

ஆம் சுந்தர்.

படிகளில் வந்த கட்டுரைதான். x விடுபட்டுவிட்டது.

Anonymous said...

Many silly comedians are there in tamil 'intellectual' world today.Time and again they go on proving that they are silly, stupid and have no sense of logic.
Yet each has a group of faithful followers.Suguna is with one of them (A.Marx) and is against
one of them (Carlos aka Tamilavan).

'தேசியத்தைப் பாசிசமாக மாற்றாமல் காப்பாற்ற முனைந்தவை என்கிற ஆய்வுகளை ஏற்கனவே நிறப்பிரிகை முன்வைத்திருக்கிறது'

Does A.Marx still agree with this view. Today he is an ardent supporter of global islamic
umma and islamic fundamentalism.
He is someone who supports TMMK uncritically and still claim that he is for human rights and freedom of expression. What a great transformation is this.How many
politicians can really do this.

யுவகிருஷ்ணா said...

//எத்தனை பிரதிகள் என்றால் எத்தனை காப்பிகள் என்று கேட்கிறீர்களா, எத்தனை இதழ்கள் என்று கேட்கிறீர்களா? இதழ்கள் என்றால் பத்து.//

எத்தனை இதழ்கள் என்றுதான் கேட்டேன். நண்பர் ஒருவர் மொத்தமாக மூன்று இதழ்களே வந்ததாக சொன்னார். மூன்று இதழ்களில் இவ்வளவு பெரிய தாக்கத்தை இலக்கிய உலகில் ஏற்படுத்த முடியாது என்று வாதிட்டிருந்தேன்.

ஆனால், பதிமூன்று இதழ்கள் கவிஞர் லீனா மணிமேகலையிடம் இருப்பதாக தோழர் ஒருவர் சொல்கிறார். அதைவிட அதிக இதழ்கள் வந்திருக்கலாம், முழுமையாக அ.மா.விடமே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.

நிறப்பிரிகை இதழ்களை மொத்தமாக தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிட வேண்டிய அவசியம் இருக்கிறது. நானெல்லாம் ஒரு இதழை கூட படித்ததில்லை :-(

சுகுணாதிவாகர் said...

எனக்குத் தெரிந்து நிறப்பிரிகை மொத்தம் பத்து இதழ்கள்தான். பின்னூட்டத்திற்கு நன்றி ரவிசீனிவாஸ்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நிறப்பிரிகை இதழ்கள் நிச்சயம் பத்திற்கு மேல் இருக்குமென்று நினைக்கிறேன். என்னிடமே ஒரு 7 - 8 இதழ்கள் இருக்கும். வளரிடம் விசாரித்ததில் 10 main issuesம் 4 literary supplementsம் வந்ததாகச் சொல்கிறார்.

வெரிஃபை செய்து பார்த்ததில் அந்தக் குறிப்பிட்ட தமிழவனின் கட்டுரை மேலும் இதழில் வெளியானது - தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும் என்ற புத்தகத்தில் இருக்கிறது. தர்சனம் உள்ளொளி என்று வெ.சா போன்றவர்கள் எலக்டிரிசிட்டி சமாச்சாரங்களைச் சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்ததை ஆய்வு ரீதியான அணுகுமுறைக்கு மடைமாற்றியதில் முக்கியப் பங்கு தமிழவனுக்கும் குறிப்பாக இந்தக் கட்டுரைக்கும் உண்டு. தமிழில் பலர் x போட்டு எழுத ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் :)

தமிழவன் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவரது பங்களிப்பை ஒரேயடியாகப் புறக்கணிக்க முடியாதென்பதே என் எண்ணம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் இங்கு பிரஸ்தாபித்துள்ள தமிழவனின் கட்டுரைத் தொடரை நான் வாசிக்கவில்லை. அதனால் அது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நான்கு பாகங்கள் கொண்ட கட்டுரையில் ஒரு பகுதையை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வளவு காட்டமாக விமர்சித்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.

யுவகிருஷ்ணா said...

//நிறப்பிரிகை இதழ்கள் நிச்சயம் பத்திற்கு மேல் இருக்குமென்று நினைக்கிறேன். என்னிடமே ஒரு 7 - 8 இதழ்கள் இருக்கும். வளரிடம் விசாரித்ததில் 10 main issuesம் 4 literary supplementsம் வந்ததாகச் சொல்கிறார்.//

தகவலுக்கு நன்றி!

நீண்டநாள் ’கர்நாடக முரசு’ கோரிக்கையை மீண்டும் கொஞ்சம் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கோருகிறேன். உரையாடல் அமைப்பு என்னைப்போன்ற ஏழைகளுக்கு கர்நாடக முரசை ஜெராக்ஸ் எடுத்து ஸ்காலர்ஷிப் வழங்கலாம்!

Anonymous said...

//கருணாநிதி தூக்கிப்பிடித்த கண்ணகியும் குண்டலகேசியும் பவுத்த சமணப்பிரதிகளில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் என்பவை கவனத்திற்கொள்ளத்தக்கது.//

கலைஞர் குண்டலகேசியைப் பற்றி எழுதிய நூல் அல்லது கதை-வசனம் எழுதிய திரைப்படம் இருந்தால் அருள் கூர்ந்து குறிப்பிடவும். படிக்க/பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி.

iniyavan said...

சார்,

தெரியாத பல விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.

பகிர்தலுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//‘கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் மோகன்குமாரமங்கலம் துணையுடன் திராவிடக் கட்சியை இரண்டாகப் பிளப்பதற்கு இந்திராகாந்தி துணிகிறார்’ என்று அடுத்த காமெடிக்குண்டைச் சளைக்காமல் வீசுகிறார்.//

இந்திரா காந்தி அம்மையாரின் அரசியலுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.அப்போதைய காலகட்டத்தில் தி.மு.க வை உடைப்பதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டிருக்ககூடும்.

ROSAVASANTH said...

மேலே ̀ரவி ஶ்ரீனிவாஸ்' எழுதியுள்ள பின்னூட்டத்தின் உள்ளடக்கம்+தொனி+பிண்ணணியுடன் எனக்கு ஒப்புதல் இல்லையெனினும், அதில் ஒரு கருத்துடன் வேறு பார்வையில் பகிர்வு உண்டு.

இந்த தீவிர புலி ஆதரவு கட்டுரை என்பது எந்த விமர்சனமும் இல்லாமல், புலிகளின் கொடூர கொலைகள் மற்றும் எல்லாவகை கொடூர மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி, அதை பற்றி பேசும் அனைத்தையும் துரோகத்தனம் என்று புள்ளிவைப்பது; அவ்வாறு இல்லாமல் இன்னொரு சாராரின் அரசியல் புலிகளின் பாசிசத்தை ஒப்புகொண்டு, ஆனால் அது பேச வேண்டிய முக்கிய விஷயமல்ல என்ற பார்வையில் மற்றவற்றை பேசுவது; (மார்க்ஸ் இந்த வகையினரையும், இந்த வகையில் கூட அடங்காதபோது, தன் தீவிர புலி எதிர்ப்பு பார்வைக்கு ஒத்து வராதவர்களையும் கூட தீவிர புலி ஆதரவாளர்கள் என்பார். ) மார்க்ஸ் இந்த இரண்டாவதாக நான் குறிப்பிட்ட வகையினரை போல இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிப்பவர். தீவிர இஸ்லாமிஸம், வஹாபிஸம் மற்றும் தஸ்லீம மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீது அவருக்கு நிச்சயம் விமர்சனம் இருக்கும். ஆனால் அது அவர் மனசுக்குள் மட்டும் இருக்கும். மிஞ்சி போனால் நண்பர்களுடன் அந்த விமர்சனத்தை தனிப்பட்டு பகிர்ந்து கொண்டு, ̀அதை விட மற்ற விஷயங்கள்தான் முக்கியமாக எதிர்க்கப்பட வேண்டியது' என்பார். ஆனால் எழுத்தில் வாஹாபிஸம் உட்பட்ட அனைத்தையும் நியாயப்படுத்தும் தர்க்கத்தை குழைத்து தருவார். அதன் பிண்ணணியில் இருப்பது -தேசியவாதத்திற்கு இணையான அடைப்படைவாதம் கொண்ட- அவரது கற்பிதவாத அரசியல். இதே அணுகுமுறையை தேசியத்தை பொதிவாக பார்ப்பவர்கள் கைக்கொள்ளும்போது அதற்கு பாசிசம், இந்துத்வம் இன்னும் தூர தேசியம் என்று பல முத்திரைகளை தருவார்.

சுகுணாதிவாகர் said...

சுந்தர்,

வாய்ப்பு கிடைத்தால் மற்ற மூன்று பாகங்களையும் படித்துப் பார்க்கிறேன். ஆனால் ஆரம்ப காலத்திலேயே பெரியார் மற்றும் திராவிட இயக்கம் குறித்து தமிழவன் முன்வைத்த கருத்துகள் அபத்தமானது என்றுதான் நினைக்கிறேன்.

அனானி நண்பரே

கருணாநிதி குண்டலகேசி குறித்து வசனம் எழுதிய படம் மந்திரிகுமாரி.

ரோசா,

அ.மார்க்சின் 'காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?' புத்தகம் படித்தீர்களா?

ROSAVASANTH said...

//அ.மார்க்சின் 'காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?' புத்தகம் படித்தீர்களா?//

இல்லை. அதில் அரசியல் இஸ்லாம் குறித்த விமர்சனம் ஏதாவது உள்ளதா? (அவர் ஜெயமோகனுக்கு எழுதிய தீராநதி எதிர்வினை படித்தேன்.)

Anonymous said...

//கருணாநிதி குண்டலகேசி குறித்து வசனம் எழுதிய படம் மந்திரிகுமாரி.//

நன்றி சுகுணா. ஐம்பெரும்காப்பியங்களுள், வளையாபதி, குண்டலகேசி இரண்டும் முழுமையாக கிடைக்கவில்லை. பத்து, பதினைந்து பாடல்களே கிடைத்துள்ளன. எப்படி அது குறித்து கலைஞர் எழுதியிருப்பார் என்ற வியப்பில் தான் கேட்டேன். மந்திரி குமாரி திரைப்படம் நான் பார்த்ததில்லை.