Monday, October 26, 2009
பேராண்மை - மங்கிய புகை மூட்டமாய் மார்க்சியம்....
சிறுபத்திரிகைகள் மற்றும் வெகுஜனப்பத்திரிகைகளால் ‘மாற்றுசினிமாக்காரர்கள்’ என்று கொண்டாடப்படுபவர்கள் பட்டியலில் பாலா, அமீர், சேரன், சசிகுமார், தங்கர்பச்சான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் அளவிற்கு ஏனோ ஜனநாதனின் பெயர் இடம்பெறுவதில்லை. ஒருவேளை அவர் இவர்கள் அளவிற்கு தமிழ்த்தேசிய அரசியல் பேசாததாலா என்னவோ. ஆனால் தமிழின் புதிய பரிசோதனை முயற்சிகளை முன்வைப்பதிலும் அரசியல் சினிமாக்களை இயக்குவதிலும் ஜனநாதன் தனித்துவமான முன்மாதிரி என்பதே என் கருத்து.
அவரது ‘இயற்கை’ வெண்ணிற இரவுகளைத் தழுவிய காதல்சினிமாதான் என்றபோதும் ஒரு அசாதாரண அழகியல் படம் முழுவதும் கவிந்திருக்கும். கடலோர மனிதர்களின் கொண்டாட்டமும் எளியவாழ்க்கையும் இயல்பாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவரது இரண்டாவது படமான ‘ஈ’ மிக முக்கியமான அரசியல் சினிமா. மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களை மருந்துகளுக்கான பரிசோதனைக் களனாகப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்த படம். மேலும் ஒரு சேரி இளைஞனின் விளிம்புநிலை வாழ்க்கை இதற்கு முன் இவ்வளவு எதார்த்தமாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்யப்பட்டதில்லை. பார் டான்சராக வரும் முஸ்லீம் பெண், காதல் புனிதமானது என்றே சொல்லப்பட்ட தமிழ்கூறு நல்லுலக சினிமா வரலாற்றில் பணம் வாங்கி தன் காதலியை விற்க முனையும் இளைஞன், வெளிப்படையான நக்சல்பாரி போராட்ட அரசியல் என்று பல்வேறு கூறுகளை இணைத்த ஒரு அற்புதமான சினிமா. அதை விடவும் முக்கியமானது வேலுபிரபாகரன் மாதிரியான பிரச்சாரகர்கள் சினிமா என்னும் காட்சி ஊடகத்தை தெருமுனைக் கூட்டமாக மாற்றியபோது, பிரச்சாரத்தின் நெடியைக் குறைத்து அரசியலைக் கலைப்படைப்பாக மாற்றியவர் ஜனநாதன்.
ஆனால் பேராண்மை படத்தின் தோல்வியே ஜனநாதன் மேற்கண்ட அம்சத்திலிருந்து சறுக்கியது என்றுதான் நான் கருதுகிறேன். பல இடங்களில் வெளிப்படையான பிரச்சார நெடி. என்.சி.சி மாணவிகளுக்கு சரக்கு & பரிமாற்றம் & உற்பத்தி & உபரி & மூலதனம் என்றெல்லாம் கிளாஸ் எடுப்பது கொஞ்சம் ஓவர்தான். அதேபோல் போலீசு விலங்குகளால் பழங்குடி மக்களின் வீடுகளும் உடைமைகளும் தாக்கப்படும்போது, அந்த பழங்குடி பேசும், ‘‘உழைக்கும் மக்களோட சர்வதிகாரம் வந்துதான் தீரும்’’ என்கிற வசனமும் காட்சிக்கு வெளியே துருத்தி நிற்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒரு உயர்சாதிப் பெண் மலையின இளைஞன் துருவன் மீது பொய்ப்புகார் எழுதும்போது சக தோழியிடம் சொல்கிறாள், ‘‘அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி, இந்தியாவுக்கு ஒரு பாரம்பரியம் இருக்குடி’’. ஏனோ இந்த வசனம் அவ்வளவு உறுத்தலாக இல்லை. ஒரு பழங்குடி இளைஞனை ஆதிக்க சாதிக்காரர்கள், அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், தீண்டத்தகாதவனாக நடத்துகிற சாதிய மனோபாவம் குறித்த காட்சிகள் பிரச்சார வசனங்கள் இன்றி இயல்பாகவே பதிவுசெய்யப்படுகின்றன. ஆனால் அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்களை சென்சார் கத்தரித்து, ஆதிக்கசாதி மனோபாவத்தை அழகாகக் காப்பாற்றியிருக்கிறது. (இதற்காகவெல்லாம் நமது இனமான சினிமாக்காரர்கள் போராட மாட்டார்கள்)
ஆனால் படத்தின் பிரச்சினையே தோழர் மதிமாறன் சுட்டிக்காட்டுவதைப் போல ‘இந்தியத் தேசிய அரசியல்’தான். ஒரு பழங்குடி இளைஞனைக் கக்கூஸ் கழுவ வைக்க ஆசைப்பட்டு ரசிக்கும் உயர்சாதிப் பெண்ணின் ‘இந்தியப் பாரம்பரியம்’ நிறைந்த இந்தியத் தேசியம் எப்படி ஒரு பழங்குடி இளைஞனின் இந்தியத் தேசியமாகவும் இருக்க முடியும்? பழங்குடிகள் அதிகம் நிறைந்த வடகிழக்கு மாகாணங்களில் இந்திய தேசிய வெறியாட்டத்தைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?
ஆனால் நான் இங்கு பேச வருவது தேசிய இனப்பிரச்சினைகளையோ மொழிவாரி தேசியத்தையோ கூட அல்ல. அம்பேத்கர் மொழிவாரித் தேசியங்களை ஆதரித்தவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் ‘மய்யப்படுத்தப்பட்ட மத்திய அரசு’ என்னும் கருத்தாக்கத்தை ஆதரித்தவரும்கூட. ‘மொழிவாரித் தேசியம் அல்லது அதிக அதிகாரம் வாய்ந்த மாநில அரசு என்னும்போது அங்கு இயல்பாகவே சிறுபான்மையினராகிப் போகும் தலித்துகளை இவ்விரண்டும் கீழாகவே நடத்தும்’ என்னும் அம்பேத்கரின் அச்ச உளவியலிலிருந்தே நாம் இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அம்பேத்கர் ஒரு இந்திய அளவிலான ஒன்றிணைப்பை வலியுறுத்தியபோதும் அது காங்கிரசு மற்றும் இந்துத்துவவாதிகள் முன்வைத்த பார்ப்பன இந்து தேசியத்திற்கு முற்றிலும் மாறாகவும் எதிராகவும் இருந்தது. ராமன், வினாயகன் தொடங்கி பாரதமாதா வரையிலான இந்திய தேசிய இந்துத்துவக் குறியீடுகளை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே துருவன் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக இந்தியத் தேசியத்தை நிராகரிக்க வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. ஏனெனில் தமிழ்த்தேசியம் என்பதும் இதுவரை மலைவாழ் மக்களை விலக்கி வைக்கிற மய்யப்படுத்தப்பட்ட அரசியலே. குணா என்னும் தமிழ்த்தேசிய ‘அறிஞர்’ படுகரை அன்னியர் என்று சொல்லி, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கச் சொல்லி எழுதியவர். ஆனால் இங்கு கேள்வியே துருவனின் இந்தியத் தேசியம், ‘தேசப் பாதுகாப்பு, அன்னியச் சதி’ என்கிற வழக்கமான ஆளும் வர்க்கப் பல்லவியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே என்பதுதான். பாகிஸ்தானுக்குப் பதிலாக அமெரிக்கா என்று மாற்றி விட்டால் அது மார்க்சியம் ஆகி விடுமா என்ன?
எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, அதுவும் இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்போகிறது?. அது மான்சோன்டாவின் துணையுடன் மரபணுக் கத்திரிக்காயைக் கொண்டு வர தீவிர முயற்சியில் இருக்கும்போது, ஜனநாதனின் இந்த கரு அபத்தமானதாகத் தோன்றவில்லையா? மேலும் செயற்கைக் கோள், அணு ஆயுதச் சோதனை, ராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்கிக் குவித்தல் ஆகியவற்றிற்கு தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை எடுத்துத்தானே அரசு செலவு செய்கிறது? தமிழக அரசால் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட 12,000 கோடி ரூபாயைச் செலவழிக்காமலே பல துறைகள் திருப்பி அனுப்பி விட்டதாக கூறுகிறது சமீபத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை. இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து அணுகும்போதுதான் பேராண்மை முன்வைக்க விரும்பும் மார்க்சிய அரசியலும் இந்திய தேசபக்தியும் ஒன்றுடன் ஒன்று இணையாமல் விலகி மிதக்கின்றன.
மேலும் தேசபக்தி என்பதை ஒத்துக்கொண்ட இந்திய மார்க்சிய லெனினியக்குழுக்களும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலையீட்டை மறுப்பதாகவும் இந்தியாவில் உள்ள அடித்தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாகவுமே தேசபக்தியை விளக்குகின்றனர். கருவேல மரத்தை இந்தியாவிற்குள் பரப்பி செயற்கை விதைகள் இந்திய விவசாய நிலங்களை மலடாக்குவது குறித்த ஆதங்கத்தில் இத்தகைய பார்வைகள் தெரிகின்றன. ஆனால் பின் அது பாதுகாப்பை முன்னிட்ட தேசபக்தி, வல்லரசு என்றெல்லாம் பெருங்கதையாடல்களை முன்வைக்கும்போது மார்க்சியத்திலிருந்து விலகி நிற்கிறது.
என்றபோதும் ஜனநாதனின் பேராண்மையை முற்றிலுமாக எதிர்மறையில் நிறுத்தி நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. பழங்குடி என்றாலே மொழி தெரியாத இளைஞன், அவனுக்கு ‘அ - அம்மா, ஆ - ஆத்தா’ என்று ஆனா ஊனா கற்றுத்தரும் கதாநாயகி என்றே பழங்குடியினர் குறித்த சித்திரங்களை உருவாக்கியுள்ள தமிழ்ச்சினிமாவில் அவர்களின் இயற்கையோடு இணைந்த இயல்பையும், ‘சுள்ளி பொறுக்கிறவனைக் கூட விடமாட்டோம்’ என்று திட்டமிட்டு அவர்களையும் காட்டையும் அழிக்கும் அதிகார எந்திரங்களையும் பதிவு செய்ததற்காக, ஆண்களிடத்தில் உறைந்திருக்கும் சாதியுணர்வு குறித்தே அதிகம் பேசப்படாத தமிழ்ச்சினிமாவில் பெண்களுக்குள்ளும் படிந்து போயிருக்கும் சாதியுணர்வை நுட்பமாகப் பதிவு செய்ததற்காக, பேராண்மை என்று பெயர் வைத்து பெண்களைக் கதைநாயகிகளாய் சாகசக்காரர்களாய் முன்வைத்ததற்காக, இறுதியில் பொன்வண்ணன் குடியரசுத்தலைவர் விருது பெறுவதுபோல் காட்சி வைத்து அதிகாரவர்க்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்ததற்காக ஜனநாதனுக்கு ரெட்சல்யூட்ஸ்!
சில குறிப்புகள்...
1. படத்தின் வடிவத்தில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்த விமர்சனம் எதுவும் பேசவில்லை. உள்ளடக்கம் குறித்தானதே. திரைக்கதை, இசை, ஜெயம் ரவியின் உழைப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு என பல விஷயங்கள் குறித்து பலரும் எழுதியிருக்கின்றனர். குறிப்பாக இதுகுறித்து கேபிள்சங்கர் எழுதியதுதான் என்னுடைய கருத்தும்.
2. தோழர் மதிமாறன் குறிப்பிட்டுள்ளதைப் போல் ஆதிக்கசாதிப் பெண் இறந்தபோது ஒலிக்கும் கந்தஷடிக்கவசத்தை அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்பது என் கருத்து. உயர்சாதிக் கடவுளால் காப்பாற்றப்படாமல் ஒரு பெண் இறந்து கிடக்கும்போது ‘காக்க காக்க’ கந்தசஷ்டிக்கவசம் ஒலிப்பது எவ்வளவு அழகான பகடி!
3. பாலிமர் தொலைக்காட்சியில் பாஸ்கி ஜனநாதனைப் ‘பேராண்மை’ தொடர்பாக நேர்காணல் செய்தார். அவரது முதல்கேள்வி, ‘‘நீங்க மயிலாப்பூரிலிருந்து வந்ததாச் சொன்னீங்க. (ஜனநாதனின் வீடோ அல்லது அலுவலகமோ மயிலாப்பூரில் இருக்கலாம்). மயிலாப்பூர்ன்னாலே ஜாலியா இருப்பாங்க. நீங்க எப்படி சீரியஸா படம் எடுக்கிறீங்க?’’. அந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஒரு நேயர் ஜனநாதனிடம் பகிர்ந்துகொண்டது, ‘ஜெயம் ரவியை நல்லா கிளாமரா காட்டியிருக்கீங்க சார். இது மாதிரி பார்த்ததே இல்லை’‘. இதையெல்லாம் பார்க்கும்போது கோபப்படாமல் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
3. மிக நுட்பமாக ‘பேராண்மை’ படத்தில் உள்ள சாதி எதிர்ப்பு அரசியல் மற்றும் அதிகார வர்க்க எதிர்ப்பு ஆகியவை நீக்கம் செய்யப்பட்டு இதை ஒரு தேசபக்திப்படமாகவே காட்சி ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பதிவுசெய்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். பேராண்மை படத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தபோதும், ‘உன்னைப் போல் ஒருவன்’ மாதிரியான படங்களின் கறையைக் கழுவுவதற்கு அவசியமானதுதான். இந்தியத் தேசியத்தை முன்வைத்தும்கூட, உன்னைப் போல் ஒருவனைக் கொண்டாடிய அளவிற்கு பேராண்மையை நமது தேசபக்த பதிவர்கூட்டம் கொண்டாடாதையும் கவனத்தில் நிறுத்துங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
பேராண்மை என்ற பரிசோதனை முயற்சியைப் பற்றி வலையுலகில் வெளிவந்த விமர்சனங்களில் இதுதான் நடுநிலையான விமர்சனம் என்று நினைக்கிறேன்.
சுகுணா..நல்ல அலசல்.ஆனால் படம் தோல்வியில்லை.மெதுவாக பிக்கப் ஆகிறது.
அன்பின் சுகுணா,
'பேராண்மை' குறித்து இதுவரை வந்த விமர்சனங்களில் - வெகுஜன ஊடகங்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன் - முக்கியமான விமர்சனம் இது. 'உன்னைப் போல் ஒருவன்', 'பேராண்மை' என நுட்பமான விமர்சனம் தொடரட்டும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படத்தை பார்த்து முடித்ததும் இயக்குனரை கல்லால் அடிக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த்வதே பேராண்மை படத்தின் வெற்றி.
மிக நன்றாக,அழுத்தமாக பதிந்த பதிவு சுகுணா.
****
பழங்குடி என்றாலே மொழி தெரியாத இளைஞன், அவனுக்கு ‘அ - அம்மா, ஆ - ஆத்தா’ என்று ஆனா ஊனா கற்றுத்தரும் கதாநாயகி என்றே பழங்குடியினர் குறித்த சித்திரங்களை உருவாக்கியுள்ள தமிழ்ச்சினிமாவில்
****
:)- இது கலக்கல்.
கமல் இல்லை. அதுனால நாங்க எல்லாம் திட்டமாட்டோம் :)-
ஹலோ சார்,
பேராண்மை படம் மாதிரி ஒரு கொத்துப்படத்தப் பார்ததேயில்லை.
எவ்வளவுக்கெவ்வளவு சுவாரசியமா இருக்கணுமோ அவ்வளவுக்கு அவ்வளவு மொக்கை போடும் படம்.
நிறைய வசனங்கள் மியூட் செய்யப்பட்டதால் டைரக்டரில் எண்ணங்களுக்குப் பதிலாக நமது எண்ணங்களை அதில் நிரப்பிக்கொள்ளவேண்டியுள்ளது.
கம்யூனிஸ்டுகள் எல்லாம் இந்திய தேசியவாதிகள் ஆனால் இப்படித்தான் கேவலமாக இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தப்படம்.
கம்யூனிஸ்டுகளுக்கெல்லாம் இந்திய தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களுக்கு அது பழக்கமும் இல்லாத ஒன்று. இப்படித்தான் ஏப்பசாப்பையாக இம்போர்டட் தேசியத்தை (ரஷிய தேசியம்) இந்திய தேசியமாகக் உல்டா செய்து காட்டுவார்கள்.
மார்க்ஸையும் லெனினையும் துக்கிப்பிடிப்பவர்கள் மாஹாத்மா காந்தியின் கால் அழுக்கைக்கூடக் கழுவ அருகதையற்றவர்கள்.
மொத்தத்தில் மிகவும் 3ம் தரப் படம்.
கேபிளும் உங்கள் விமர்சனமும் படத்தினை நுட்பமாக அனுக முடிகிறது.
மதிமாறன் லிங் கொடுங்கள்.
போன வருடத்தில் படித்தது மாறனை.
//அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி, இந்தியாவுக்கு ஒரு பாரம்பரியம் இருக்குடி//
நிஜம் ஆனால் பகடியில் சேருகிறது பாருங்கள் (கொடுமை)
//அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்களை சென்சார் கத்தரித்து, ஆதிக்கசாதி மனோபாவத்தை அழகாகக் காப்பாற்றியிருக்கிறது// :)
//ஆண்களிடத்தில் உறைந்திருக்கும் சாதியுணர்வு குறித்தே அதிகம் பேசப்படாத தமிழ்ச்சினிமாவில் பெண்களுக்குள்ளும் படிந்து போயிருக்கும் சாதியுணர்வை நுட்பமாகப் பதிவு செய்ததற்காக//
இதை உயர்சாதி பெண்களிடம் மிக இயல்பாய் வெளிவ்ருவதை பார்த்துயிருக்கிறேன். bravo
>>பேராண்மை என்ற பரிசோதனை முயற்சியைப் பற்றி வலையுலகில் வெளிவந்த விமர்சனங்களில் இதுதான் நடுநிலையான விமர்சனம் என்று நினைக்கிறேன்.<<
i accept... especially the climax, i felt the way written in this blog,but others have questioned asking why didn't the girls tell the truth or why is dhuruvan accepting and still loving country etc.. what i feel is, people are still accepting their defeat or they don't realize they are being ripped off and still try to be the so called patriotic..etc.. director has tried portraying it only.. perspectives differ..all the silent censored dialogues has ripped this film a lot :-(
இன்னும் படம் பாக்கலை... விமர்சனங்களே படிச்சது மட்டும் தான்...
ஜனநாதன் மீது ரொம்பவே மரியாதை உண்டு.
பாலா,அமீர், மிஷ்கின், சசிகுமார் எல்லாம் வேற கோஷ்டி. யதார்த்தத்தை தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுவதோடு கழண்டுக்குவாங்க.தன் குரல் (அரசியல்) வெளிப்படத் தேவையில்லாத கதைகளாகத் தேர்வு செய்து படமாக்குவதில் கெட்டிக்காரர்கள். பாலாஜி சக்திவேல் கொஞ்சம் முயற்சி செய்து, கல்லூரி மாதிரி முயற்சி செய்தாலும், அதிலும் தன் குரல் ரொம்ப feeble ஆக இருக்கும் படி - பிரச்சனை வராமல் இருக்க - பார்த்துக் கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொண்டார். படம் வெற்றியடைந்திருந்தால், மற்றுமொரு ட்ரெண்ட் கிளம்பியிருக்கும்.
இந்த புதிய அலை- play safe- இயக்குனர்களிடையே, ஜனநாதன் போன்றவர்கள் வரவேற்புக்குரியவர்கள்.
எங்கே சறுக்கிவிடுகிறது என்றால், ஜனநாதன் தேர்வு செய்த கதையில்.
தன் ஸ்கோப்புக்கு மிகவும் அப்பாற்பட்ட இம்மாதிரி கதையைப் படம் பிடித்தால், என்னதான் பவர்ஃபுல்லாக அரசியல் சமூக விமர்சனங்கள் செய்து படம் எடுத்தாலும், கடைசியில். சங்கபரிவாரங்கள், இதற்கு தேசிய ஒற்றுமை வர்ணம் பூசி, டிராக் மாற்றிவிடுவார்கள் என்பதை உணராமல் இருப்பதுதான் ஜனநாதனிடம் நான் கண்ட குறை.
நாயகன் காப்பாற்ற முயற்சி செய்யும் ராக்கெட்டின் பெயர் 'பசுமை' என்று எங்கோ விமர்சனத்தில் படித்தேன். விவசாயத்துக்கென்று ராக்கெட் விடுவது கூட சாத்தியம், ஆனால், அதற்கு பசுமை என்று சுத்தத் தமிழ் பெயர் வைப்பது நடக்குமா? இது போன்ற தர்க்கக் சிக்கல்களையும், செயற்கையான சம்பவங்களையும் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக படத்தை ஓரங்கட்டுபவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகவாவது கதைத் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.
நான் மிகவும் மதிக்கும் இயக்குனர் மணிவண்ணன் செய்த அதே தவறுகளை ஜனநாதன் செய்யாமல் இருக்க, ரஜினிகாந்த் அருள் புரியட்டும்.
//
எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, அதுவும் இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்போகிறது?.//
நியாயமான கேள்வி :)
மிகவித்தியாசமான பதிவு சுகுணா.
enna thaanya solla varra? Desia unnarvae irukkak koodaatha?
இந்திய சென்சாரை எவ்வளவு கேவலமாக வேண்டும் என்றாலும் திட்டலாம்... 'ங்கோத்தா'வை அனுமதிக்கலாம் ஆனா 'அம்மாவையோ' ‘ஐயாவையோ' திட்டக்கூடாது... பன்னாடைங்க.. (அட, திட்டு சரியா பொருந்திப் போகுது. பன்னாடையில கள்ளு வடிக்கையில் கள்ளைவிட்டு அதில் இருக்கும் அழுக்குகளைத் தானே பிடித்துக்கொள்ளும்)
இந்த படத்திர்க்கான உங்களின் விமர்சனத்திர்க்கு காத்திருந்தேன். இனி படம் பார்க்க வேண்டும்.
//உன்னைப் போல் ஒருவன்’ மாதிரியான படங்களின் கறையைக் கழுவுவதற்கு அவசியமானதுதான்.//
உண்மைதான்.
உங்க விமர்சனம் சிறப்பானது. இந்த விமர்சனத்தின் பின்னராக பேராண்மையை பார்க்கும் போது வித்தியாசமாக இருந்தது.
உன்னைப்போல் ஒருவன் காமன் மேனின் சிந்தனை இதுதான் என்பதை திணிக்கின்றது. அதற்கு பக்கபலமாக அதிகாரவர்க்க மீடியாக்கள் இருக்கின்றது. மக்கள் அதிகாரவர்க்கத்துக்கு ஏற்புடைய படங்களையே ரசிக்கவேண்டும் அவ்வாறான ஒரு பாதையிலேயே செல்லவேண்டும் என்றொரு நிலை உருவாகிவிட்டது. மக்களும் அவ்வாறே பழக்கப்படுகின்றனர்.
விஜய் ரிவியின் கடந்து போன மக்கள் விருது குறித்து பார்த்தீர்களானால் சுப்பிரமணியபுரத்தை பின்தள்ளி வாரணம் ஆயிரத்தை முதன்மைப்படுத்த படாத பாடு பட்டார்கள். அதற்காக ஒரு முன்னோட்ட நிகழ்ச்சி வைத்து அதில் கலந்து கொண்டவர்கள் வராணமாயிரத்தை முதன்மைப்படுத்தினார்கள். மக்களின் தேர்வு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற திணிப்பு மிக மோசமானது. இவ்வாறான சூழ்நிலைகளை கடந்துதான் சில கருத்துக்களை சொல்லவேண்டியுள்ளது அந்தவகையில் பேராண்மை போற்றப்பட வேண்டியது.
குறிப்பாக பழங்குடிமக்களின் மீதான வன்முறை (வீரப்பன் வேட்டை என்ற பெயரில் எல்லைப்புற மக்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூருகின்றது) அவர்கள் படிக்கும் புத்தகங்களை எரிக்கும் காட்சி. கதாநாயகன் சூ பாலிஸ் போட எடுத்துச்செல்வது. கழுவித்துடைப்பது அதைப்பார்த்து நகைப்பது. போன்ற அதிகாரவர்க்க நடைமுறையை காட்சிப்படுத்தியது சிறப்பு.
பேராண்மை ஏற்கனவே மெதுவாக எல்லா ஊர்களிலும்பிக்கப் ஆகியிருக்கும் இந்த வேளையில் உங்களால் ஆனா இன்னொரு ப்ளஸ் இந்த விமர்சனம்..
நல்ல அலசல்
original of paeraanmai'
http://en.wikipedia.org/wiki/The_Dawns_Here_Are_Quiet
உங்களது சில குறிப்புகள்... ஆழ்ந்த கவனிப்பின் வெளிப்பாடு. வெகு அருமை.
சினிமாவானது தொழில்நுட்பம் சார்ந்ததும் கூட என்றே கருதுகிறேன். அரசியல், சமூக சிந்தனை ஆகியவற்றுடன் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பார்வையையும் பதிவு செய்திருந்தால் விமர்சனம் இன்னும் முழுமையடைந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது்.
ரவி,
நீங்கள் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை.
பழைய வலைப்பதிவர்,
உங்களுக்குப் படத்தை விமர்சிக்க வேண்டும் என்பதை விட கம்யூனிஸ்ட்களின் மீதான காழ்ப்புணர்வுதான் தெரிகிறது.
அசோக்,
உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? அந்த வசனத்தைப் பகிடியாக யார் பார்ப்பது? பார்வையாளர்கள் அப்படியாகப் புரிந்துகொள்கிறார்களா என்ன?
மதிமாறன் மற்றும் வினவில் வெளியாகியுள்ள பேராண்மை விமர்சனக்களுககன சுட்டிகள் :
http://mathimaran.wordpress.com/2009/10/22/article-246/
http://www.vinavu.com/2009/10/27/peranmai-masala/
உண்மைதான் அய்காரஷ் பிரகாஷ். ஜனநாதன் இன்னும் திரைக்கதையில் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். நம்பகத்தன்மை பலவீனாமாக உள்ளது.
பிரகாஷ், என்னுடைய விமர்சனத்திற்காகவெல்லாம் காத்திருந்து படம் பார்க்கிறீர்களா, ஆச்சரியம்தான்.
சரியாகவே கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள அனானி நண்பரே, பெயரை வெளிப்படுத்துவதில் என்ன தயக்கம்?
நான் படம் பார்க்கவில்லை.இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களும்,தலித்களும் தங்களுக்கு இங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை அறிவார்கள்.அதற்காக தேசத்திற்கு எதிரான சதி என்றால் அதை ஆதரிப்பார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா.தலிபன் ஆதரவுடன் பாகிஸ்தானிய
ராணுவம் இந்தியா மீது போர் தொடுத்தால் அதை வரவேற்க
சுகுணா திவாகர்,மதிமாறன் தயாரக
இருக்கலாம்.எல்லோரும் அப்படி இருக்க வேண்டுமா என்ன?. தேசபற்று என்பது முட்டாள்த்தனமானது அல்ல. இந்திய தேசியம் = இந்த்துவ தேசியம் என்பதும் உண்மை அல்ல. இயற்கை
வேளாண்மைக்கு செயல்திட்டம் அமைத்து சில நூறு கோடிகளை ஒதுக்கிறது கர்நாடக அரசு.பாஜக
ஆட்சியில் இது நடக்கிறது. இயற்கை வேளாண்மை= பார்பனியம் என்று மதிமாறன் அல்லது சுகுணா திவாகர் எழுதக் கூடும்.
சுகுணா மிக நியாயமான, நடுநிலையான விமர்சனம் இது. மதிமாறன் அவர்களாது விமர்சனத்தில் நான் கண்ட குறைகளை இதில் என்னால் காண முடிய வில்லை. இது போன்ற படத்திற்கும், குறிப்பாய் ஜனநாதன் போன்ற இயக்குநர்களுக்கும் இப்படி ஒரு விமர்சனம் கண்டிப்பாய் தேவை. தொடருங்கள்.
இதை ஒரு தேசபக்தித் திரைப்படமாக பொதுமக்கள் சிலரும் புரிந்து கொள்வது கவலையே.
எனக்கென்னவோ துருவனின் தேசம் சார்ந்த கருத்துகள் இந்த மண், மக்கள், அவர்களின் முன்னேற்றத்தைக் காப்போம் என்பதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய ஒன்றியம் என்ற அதிகார அமைப்பைக் காப்போம் என்று புரிந்து கொள்ளவில்லை.
சாதி குறித்த விமர்சனங்களை தணிக்கை செய்திருந்தாலும் புரிந்து கொள்ள முடிகிறது. தணிக்கை செய்யாமல் விட்டால், தங்கள் சாதியை அவமானப்படுத்தி விட்டதாக யாரும் வழக்கு போட்டாலும் வியப்பதற்கு இல்லை.
தன்னை அடக்கியாளும் அதிகாரியை எதிர்த்தோ வேலையை விட்டோ துருவன் போராடி இருக்கலாம். ஆனால், அதிகார அமைப்புக்குள் இருந்து தன் மக்களுக்கு சில நன்மைகளைப் பெற முயன்றிருக்கலாம். (கல்வி, பாதுகாப்பு, இருப்பிட உறுதி போல..)
இயக்குநரின் முதற் படம் இயற்கை மிக அருமையானது. ஆனால், அவ்வளவாக ஓடவில்லை. எனவே, வணிக சமரசங்களுக்கு உட்பட்டு தன்னால் இயன்ற வரை இந்தப் படத்தில் தன் கருத்தைச் சொல்லி இருக்கிறார். இந்த மாதிரி படங்களில் logic பார்க்காமல் பாராட்டுவது நன்று.
பதிவு "தெளிந்த வானமாய் நிமிர்கிறது."
NANRI SUKUNA AVL,
PADAM PARKUM MUN POTHUVAKA NAAN VIMARSANAM PADIPPATHILLAI, INTHA PADATHIN MUKKIYATHUVATHAI SONNA VITHAM ARUMAI.ATHUNAL NAAN VIMARSANAM PADITHEN...
PADATHAI PARTHU VITTU MEENDUM PATHIVU SEIKIREN....
IYARKAI PADATHAIYUM PARKIREN...
//இயற்கை
வேளாண்மைக்கு செயல்திட்டம் அமைத்து சில நூறு கோடிகளை ஒதுக்கிறது கர்நாடக அரசு.பாஜக
ஆட்சியில் இது நடக்கிறது. இயற்கை வேளாண்மை= பார்பனியம் என்று மதிமாறன் அல்லது சுகுணா திவாகர் எழுதக் கூடும்.//
ஹா... ஹா.. பன்னாட்டு கம்பேனிகளுக்கு விளை நிலங்களை கூட்டிக் கொடுப்பதில் கர்நாடாகாதான் முன்னணியில் இருக்கிறது.
பூ முதல் பல்வேறு விளை பொருட்கள் மக்களுக்கு பிரோயசனம் இல்லாதவற்றை விளைவிக்க தனி அமைச்சகத்தையே உருவாக்கியுள்ளது கர்நாடகா.
இயற்கை விவசாயம், மாட்டு மூத்திரம் என்று இந்துத்துவ ஜிகினா வேலையெல்லாம் ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே.
@ சுகுணா விமர்சனம் அருமை, ஜனனாதனை முற்றிலுமாக நிராகரிக்கும் மதிமாறனிடம் வேறுபட்டதாக இருந்தது உங்கள் விமர்சனம்.
@ பின்னூட்டம் இடும் பலரும் தேசியத்தை வலியுறுத்துவதை பார்க்கமுடிந்தது. இவர்களின் தேசப்பக்தியை பார்க்கும் போது, பெரியார் அடிக்கடி கூறும் ஒரு வாசகம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. "தேசப்பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம்" என்பது தான் அது.
//எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, அதுவும் இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்போகிறது?.//
@ இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்படுகிறது என்பதே எவ்வளவு அழகான கற்ப்பனை, நடக்காது என்பது ஒருபுறம் இருந்தாலும்.
// தேசபற்று என்பது முட்டாள்த்தனமானது அல்ல. இந்திய தேசியம் = இந்த்துவ தேசியம் என்பதும் உண்மை அல்ல. இயற்கை
வேளாண்மைக்கு செயல்திட்டம் அமைத்து சில நூறு கோடிகளை ஒதுக்கிறது கர்நாடக அரசு.பாஜக ஆட்சியில் இது நடக்கிறது.//
@ சுகுணா நீங்கள் உண்மையிலேயே பெருமை பட்டுக்கொள்ளலாம். ஆர். எஸ்.எஸ் காரர்கள் கூட உங்கள் பிளாக்கை பார்க்கிறார்கள் என்று.
@ சேரன், அமீர்,சசி போன்றோரெல்லாம் கமலுக்கு காவடி தூக்குவதால் ஜனனாதனை கண்டுகொள்ள நேரம் இருக்காது.
சேரனும், தங்கர் பச்சானும் மாற்று சினிமாக்காரர்களா? இதென்ன புதுக்கதை!
//அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்களை சென்சார் கத்தரித்து, ஆதிக்கசாதி மனோபாவத்தை அழகாகக் காப்பாற்றியிருக்கிறது. (இதற்காகவெல்லாம் நமது இனமான சினிமாக்காரர்கள் போராட மாட்டார்கள்//
வினவில் படித்துவிட்டு இங்கு வந்தேன். பேராண்மை போன்ற படங்களை இது போன்ற விமர்சனங்களே சரியாக எடை போட முடியும்.
//
பழைய வலைப்பதிவர்,
உங்களுக்குப் படத்தை விமர்சிக்க வேண்டும் என்பதை விட கம்யூனிஸ்ட்களின் மீதான காழ்ப்புணர்வுதான் தெரிகிறது.
//
ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் பார்ப்பானீயம் என்று பெனாத்துவது போல் என்னப்போல் ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் கம்யூனிஸ்டுகளை திட்டுவதே வேலையாகத் திரிபவர்கள்.
படத்தைத் தான் பலர் விமர்சித்துவிட்டார்களே. அதுவும் வினவு என்ற கம்யூனிஸ்டு மன நோயாளியும் அவனது மன நோயாளிகளின் காப்பகத்து வாசகர்கள் விமர்சித்தது தான் டாப் விமர்சனம்.
இன்றும் சொல்வேன், கம்யூனிஸ்டுகளுக்கு இந்திய தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. இனியும் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே அவர்கள் ஒழியும் வரை அவர்களை வெறுத்தொதுக்கும் என்னைப்போன்றவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள்.
விமர்சனங்கள், எதிர்வினைகள், கருத்துக்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனால் பேராண்மை படம் முழுதும் ஒரு பக்கா நாடகத் தன்மை. இயற்கையில் இழையோடிய யதார்த்தம் இதில் மிஸ்ஸிங். என்னதான் எதார்த்தத்துக்காக மஞ்சள் ஜட்டி, கோவணம் என்று காட்டினாலும் அந்த அம்மணங்களைத் தாண்டியும் படம் முழுக்க சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது செயற்கைத் தனம். ஜெகன்நாதன் ஆக்ஷன் அல்வாவில் மீன் குழம்பை மிக்ஸ் செய்ததில் வந்த சிக்கல் இது ! எந்தக் கருத்தைச் சொல்லப் போகிறோம் என தீர்மானித்து அதற்கேற்ற கதையை அடுத்த முறை இயக்குனர் வழங்க வாழ்த்துகிறேன் !
Post a Comment