Thursday, April 1, 2010

அங்காடித்தெருவை முன்வைத்து சில அரசியல் உரையாடல்கள்


பொதுவாக என்கவுண்டர் சினிமா ஸ்பெஷலிஸ்ட் கௌதம் வாசுதேவ்மேனனின் சினிமாக்கள் எனக்கு உவப்பானவையல்ல. ஆனால் அவரது ‘விண்ணைத்தாண்டி வருவாயா‘ எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ரசிக்கக்கூடிய படமாக இருந்தது. கிட்டத்தட்ட இதே கதையமைப்பைக் கொண்ட இன்னொரு படம் ‘முன்தினம் பார்த்தேனே’. ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடந்து போகும் காதல் அனுபவங்களை தமிழ்ச்சினிமாவின் வழக்கமான கதை சொல்லல் முறையிலிருந்து மாறுபட்டுச் சொன்ன படம். குறிப்பாக ஐ.டி வாழ்க்கை, பெண் சினேகிதிகள், டிஸ்கோத்தே, பப் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு இளைஞன், முதல் காதல் தோல்விக்குப் பிறகு இரண்டாவது பெண்ணைக் காதலிக்கிறான், ஆனால் அந்த இரண்டாவது காதலிக்கு ஒரு முன்னாள் காதல் இருக்கக்கூடாது என்று நினைக்கிற ஒரு பழமைவாத மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தது ‘முன்தினம் பார்த்தேனே‘.

ஆனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களும் சரி, ‘முன்தினம் பார்த்தேனே’ காதலர்களும் சரி புழுதி நிறைந்த தெருக்களில் ஒரு காட்சியில் கூட கால்வைக்காதவர்கள். காபிஷாப்பில் ஆரம்பித்து காபிஷாப்பில் முடிகிற காதல் அவர்களது காதல். ஆனால் கொளுத்துவேலை செய்பவர்களோடு நடைபாதையில் படுக்க, போலீஸின் தொந்தரவிலிருந்து தப்பிக்கும் மார்க்கமாக காலில் மண்ணைப் பூசி, நடைபாதை விபத்துக்களில் சிக்கிக்கொள்பவர்கள் ‘அங்காடித்தெரு‘ காதலர்கள். விண்ணைத்தாண்டி வருவாயாவில் த்ரிஷாவுடனான காதல், வலி, பிரிவு, ஊடல், இனம்புரியாத மயக்கம், குழப்பம் என தலா ஒவ்வொரு உணர்வுகளுக்கும் ஒவ்வொரு பாடல் ஃபாரினில் சென்று நடனமாடுவார் சிம்பு. ‘முன்தினம் பார்த்தேனே‘ கதாநாயகனும் அஃதே. ஆனால் ‘அங்காடித்தெரு‘ காதலர்களின் ஒரே ஒரு டூயட் ‘உன் பேரைச் சொல்லும்போதே‘ கூட மூடிக்கிடக்கும் ரங்கநாதன் தெரு, செந்தில்முருகன் ஸ்டோர்ஸ் கதவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. இந்தவகையில் அங்காடித்தெரு எனக்கு முக்கியமான படமாகத் தெரிகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒழிந்து விட்டதாய்க் கருதப்பபடும் கொத்தடிமை முறையின் நவீன முகம், பண்டிகை நாட்களில் குவியும் மக்கள் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி நசுங்கும் கடைப் பணியாட்களின் சின்னச் சின்ன உணர்வுகள், அத்தனை நெரிசலுக்கு இடையிலும் கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றிக்கொள்ளும் ரசவாதம் தெரிந்த எளிய மனிதர்கள் என்று வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் ‘அங்காடித்தெரு’ எந்தளவுக்கு முக்கியமான படம் என்பதை அழகியல்பூர்வமாக பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

சின்னச்சின்ன பாத்திரங்களின் வழி விரியும் நுட்பமான உணர்வுகள் குறித்தும் காட்சிப்படுத்தப்படும் வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை குறித்தும் கூட பதிவுகள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. இன்னமும் சிலநாளைக்கேனும் தன் பாதிப்பின் தடயத்தை அழியவிடாமல் பார்த்துக்கொள்வதில் ‘அங்காடித்தெரு‘ என்னும் கலைப்படைப்பு வெற்றிபெற்றிருக்கிறது. நவ்வாப்பழம் விற்பவரிடம் உலகசதியையும் கேரள உணவுவிடுதி தொழிலாளர்களிடம் அலட்சியமனோபாவத்தையும் கண்டுபிடித்து தரிசித்து அம்பலப்படுத்திய ஜெயமோகன், இந்த படத்திற்கு உரையாடல் எழுதாமலிருந்தால், ‘சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களின் வாடிக்கையாளர்கள் மீது அக்கறையற்ற அலட்சியம்’ குறித்து ஒரு கட்டுரை நமக்குக் கிடைத்திருக்கும். இடைவேளைகளில் விற்கப்படும் பாப்கார்ன் போல போல்பாட் கொலைகள், மாவோவின் தவறுகள், ஸ்டாலினின் சதிகள் குறித்த விக்கிபீடியா இணைப்புகளுடன் கூடிய கே.ஆர்.அதியமான் மற்றும் நோ போன்றோரின் பின்னூட்டங்களும்கூட கிடைத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்காடித்தெருவின் உரையாடல் ஜெயமோகனுடையது. படத்தின் பெரும்பகுதி பலமாக ஜெயமோகனின் உரையாடல்கள் அமைகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். நீண்டநாளைக்குப் பிறகு திரைப்பட வசனங்களுக்காகப் பார்வையாளரின் கைதட்டல்களைப் பெற்ற படமாக அங்காடித்தெரு அமைந்ததை இரண்டுமுறை பார்த்தபோதும் கவனிக்க முடிந்தது. ‘அங்காடித்தெரு’ குறித்த பல உணர்வுபூர்வமான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த படம் எனக்கு எழுப்பிய இரண்டு அரசியல் கேள்விகளின் பக்கம் நகரலாம் என்று தோன்றுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்களாய்க் கருதப்பட்டவர்கள் எனில் காணத்தகாதாவர்களாய்க் கருதப்பட்டவர்கள் நாடார்கள். இன்னமும் ஆதிக்கசாதி முதியவர்களிடம் பேசினால், ‘சாணாப்பய‘ என்னும் அருவெறுக்கத்தக்க சாதியத்திமிர் எச்சங்கள் வார்த்தைகளாய் வந்துவிழுவதை நீங்கள் அவதானிக்கலாம். ஆனால் தற்போதைய நாடார்கள் நடைமுறையில் சாதி இழிவைக் கடந்துவந்து விட்டார்கள். சாதி இழிவை ஒழிக்க இட ஒதுக்கீடு, மதமாற்றம், நிலங்களைக் கைப்பற்றல் என பல்வேறு சாத்தியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடார்கள் இவை எதையும் கைக்கொள்ளாமலே வணிகத்தின் மூலமும் காமராஜர் என்கிற ஒரு அரசியல் அடையாளத்தின் மூலமுமே இதைக் கடந்து வந்திருக்கிறார்கள். இத்தகைய எளியவழி குறித்து நண்பர் ஒருவர் விவாதித்துக்கொண்டிருந்தார், ‘தலித்துகளும் வணிகத்தைக் கைப்பற்ற வேண்டும்’ என்பது அவரது கருத்து. ஆனால் நாடார்கள் எல்லாம் வணிகர்களாகவும் முதலாளிகளாகவும் மாறிவிட்டார்கள் என்கிற பிரமையை இந்த படம் உடைக்கிறது என்பது முக்கியமானது.

திருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட காடுகளில் வாழ்க்கையைத் தொலைத்துள்ள நாடார்கள் குறித்து அதிகம் தமிழ்ப்பொதுவெளியில் பேசப்பட்டதில்லை. நாடார்கள் என்றால் ஆதித்தனார், காமராஜர், சரத்குமார் என்றே பிம்பங்கள் நீள்கின்றன. இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து. ‘‘இங்கே வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் இல்ல, எச்சிக்கைய உதறினா ஆயிரம் காக்கா’’ என்கிறார் அண்ணாச்சி. ஆனால் உண்மையில் அண்ணாச்சியின் நோக்கம் சுயசாதியைச் சுரண்டலுக்குப் பயன்படுத்திக்கொள்வதே. இந்த படத்தின் காட்சிப்படுத்தலின் பிரதான குறைகளாக இரண்டைச் சொல்லலாம். தொழிலாளர்கள் மீதான வன்முறை மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்னும் வாதம், செந்தில்முருகன் ஸ்டோர்ஸை விட்டு அனுப்பப்பட்டால் சென்னையில் எங்கும் வேலை கிடைக்காது என்னும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பம். ஆனால் இரண்டாவது விஷயத்தில் நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, இத்தகைய கடைகளில் வேலைக்குச் சேர்வதற்கு முன்னால் சான்றிதழ்கள் வாங்கி வைக்கப்படும் என்பது. இது படத்தின் ஒரே ஒரு காட்சியில் போகிறபோக்கில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இது கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டிய விஷயம். கொத்தடிமைகளாய் நடத்தப்படும் திருநெல்வேலி நாடார் இளைஞர்களின் மீதான வன்முறை, பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்கள், சான்றிதழ் பறிப்புகள், தற்கொலைகள் குறித்து நாடார்சங்கங்கள் போராட முன்வராது என்பதுதானே அண்ணாச்சிகளின் தொடர்ச்சியான ஒடுக்குமுறை தைரியத்திற்கான காரணம்.

இரண்டாவதாக முதலீட்டியத்தின் உண்மையான முகம் எவ்வளவு கோரமானது என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நிலப்பிரபுத்துவத்தை விட முதலீட்டியத்தை முற்போக்கானதாகவும் ஆசுவாசம் அளிக்கக் கூடியதாகவும் பார்த்தது மார்க்சியம். குறிப்பாக பாட்டாளி வர்க்கம் என்னும் சுயேச்சையான வர்க்கத்தை உருவாக்கியதன் மூலம் முதலீட்டியம் தன் அழிவைத் தானே விரைவுபடுத்தியது என்பது மார்க்சியத்தின் கருத்து. நிலப்பிரபுத்துவத்தின் கொத்தடிமை நுகத்தடியிலிருந்து முதலீட்டிய சமூகத்தில் உழைக்கும் மக்கள் சில எளிய உரிமைகளைப் பெற்றனர். சங்கம் அமைக்கும் உரிமை, வரையறுக்கப்பட்ட எட்டுமணிநேர வேலைநேரம், போனஸ் போன்றவைகளை அடைவதற்கு பாட்டாளி வர்க்கம் சிந்திய ரத்தம் கொஞ்ச, நஞ்சமல்ல. சிகாகோ வீதிகளில் உழைக்கும் தொழிலாளர்கள் சிந்திய ரத்தம்தான் மேதினம் என்னும் சிவப்பு அடையாளமாய்ப் பூத்தது.

ஆனால் நவீன முதலீட்டியச் சமூகத்தில் இத்தகைய உரிமைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். ரங்கநாதன் தெரு மட்டுமில்லாமல் திருப்பூர் மற்றும் சிவகாசி தொழிற்சாலைகளும் கூட நிலப்பிரபுத்துவக் கொத்தடிமைத்தனத்தையே முதலீட்டியமாக மாற்றும் வித்தை தெரிந்தவை. இன்றைய உலகமயமாக்கல் சூழல் தொழிலாளர்களைப் பணிப்பாதுகாப்பு அற்றவர்களாகவும் அமைப்பற்றவர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களின் மேம்படுத்தப்பட்ட நவீன வடிவங்களாகத்தான் ஐ.டி ஊழியர்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களைப் போலவே இவர்களுக்கும் ஏ.சியும் அக்செஸ் கார்டும், அடையாள அட்டைகளும் உண்டு. அதேபோலவே அவர்களைப் போலவே இலக்கற்ற வேலைநேரமும் உண்டு. தொழிற்சங்கங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மந்திரச் சொல்லடுக்கு உதிரியாக்கப்பட்ட தொழிலாளர்களையே உற்பத்தி செய்கிறது. முதலீட்டியம் இப்போது நவீன தொழில்நுட்பங்களுடனான நிலப்பிரப்புத்துவத்துக்குத் திரும்பி விட்டதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இது வெறுமனே சரவணா ஸ்டோர்ஸிலும் ஐ.டி நிறுவனங்களிலும் மட்டும் உள்ள நிலைமை அல்ல, அரசின் மனோபாவமே இப்படியாக மாறியிருக்கிறது என்பதன் அடையாளம்தான் டாஸ்மாக் ஊழியர்கள். ‘அரசு வேலை’ என்கிற ஆர்வத்தில் வேலையில் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களின் இன்றைய நிலை என்ன? இலக்கற்ற வேலை நேரம், ஷிப்ட் இல்லை, தொழிற்சங்கங்களை அங்கீகரித்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சு வார்த்தை நடத்துவதில்லை. காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரையிலான 12 மணிநேர வேலைநேரத்தை அரசே அங்கீகரிக்கிறது, வழக்கமான அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இல்லை. ஆனால் டாஸ்மாக் வருமானத்தின் மூலம் அரசு ஈட்டும் வருவாய் அபரிதமானது.

‘அங்காடித்தெரு’ என்னும் சினிமா வேண்டுமானால் ரங்கநாதன் தெரு ஊழியர்களைக் குறித்ததாய் இருக்கலாம். ஆனால் முதலீட்டியத்தின் கொடூரக் கரங்கள் அங்காடித்தெருக்களைத் தாண்டியும் நுழையும் வலிமை பெற்றவை.

19 comments:

கோவி.கண்ணன் said...

திவாகர்,

ஜெ கம்யூனிசத்தை விமர்சனம் செய்வதை நிறுத்தினாலும் நீங்க ஜெ வை விமர்சனம் செய்வதை விடுவது போல் தெரியவில்லை.

இன்னிக்கு சாப்பாடு சுவையாக இருந்தாலும் போனவாரம் குழம்புல உப்பு இல்லை என்பதையும் சேர்த்து சொல்வது விமர்சன அரசியலா ?

:)

*****

அங்காடி தெரு குறித்த உங்கள் விமர்சனம் அருமை.

மணிஜி said...

சுகுணா . எனக்கு உங்கள் விமர்சனம் மிகவும் பிடித்திருந்தது. நன்றி.. விகடன் விமர்சனமும் கூடத்தான்..

enRenRum-anbudan.BALA said...

சிந்திக்க வைத்த, பல கேள்விகளை எழுப்பிய, நேர்த்தியாக எழுதப்பட்ட ஒரு விமர்சனம், நன்றி.

//சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களின் மேம்படுத்தப்பட்ட நவீன வடிவங்களாகத்தான் ஐ.டி ஊழியர்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
//
நானும் புழங்கும் இடம் என்பதால், நிலைமையை சரியாக அவதானித்து இருக்கிறீர்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும்.

எ.அ.பாலா

நேசமித்ரன் said...

எவ்வளாவு நுட்பமான பார்வை !
நல்ல விமர்சனம் சார்

Ahamed irshad said...

உங்கள் பார்வை அருமை...

Unknown said...

சுகுணா ஏன் சினிமாவே பற்றியே எழுதுகிறீர்கள்?
"நிறையப் பேசுவேன்" என்று சொல்லிவுள்ளீர்கள், உங்களிடம் இருந்து நாங்கள் அதிகமா பேசுவதை எதிர்பார்க்கிறோம்...

இங்கு நீங்கள் எழுதியதை படிக்கவில்லை... (?) எனது எண்ணத்தை தெரிவிக்கவே பின்னூட்டம், அதிகதிகம் எழுதுங்கள்...

சுகுணாதிவாகர் said...

மஸ்தான்,

நளினி விடுதலை, பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவிய விவகாரம், லீனாமணிமேகலை பிரச்சினை, வைக்கம் போராட்டம் குறித்த ஜெயமோகனின் அவதூறுகள் என்று பல விஷயங்கள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன். மேலும் இது வெறுமனே சினிமா விமர்சனமும் அல்லவே!

Unknown said...

@சுகுணாதிவாகர், அதையும் படித்து கொண்டுதான் வருகிறேன்... எந்த சினிமா வந்தாலும் விமர்ச்சித்து எழுதிக்கொண்டே வருகிறீர்கள், படம் எடுக்கும் அனைவரும் என்னதான் செய்துவிட்டார்கள்? ஏதோ ஒரு வகையில் மற்றவர்களின் சிந்தனையை காப்பி அடித்து கொண்டிருக்கிறார்கள். பைத்தியகாரன் சொல்வது போல் சிந்திக்க ஏதுவும் இல்லையென்றால் இவர்களால் எதுவும் இயக்க முடியாது... இன்னும் சினிமா என்பது அதே போல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அதாவது வேறு தலைமுறையை நோக்கி செல்லவே இல்லை.

உங்களது எழுதும் திறமையை பார்த்து வியந்திருக்கிறேன், ஆனா சினிமாவுக்காக அதிகமா எழுதனுமா???

அதிகப்பிரசங்கி போல் பேசி இருந்தால் மன்னிக்கவும், வேண்டியவர்களிடம் இருந்த்துதான் பெற முடியும் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை சுகுணாதிவாகர்

Unknown said...

நல்லதொரு விமர்சனம் சுகுணா.

PRABHU RAJADURAI said...

”சாதி இழிவை ஒழிக்க இட ஒதுக்கீடு, மதமாற்றம், நிலங்களைக் கைப்பற்றல் என பல்வேறு சாத்தியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடார்கள் இவை எதையும் கைக்கொள்ளாமலே வணிகத்தின் மூலமும் காமராஜர் என்கிற ஒரு அரசியல் அடையாளத்தின் மூலமுமே இதைக் கடந்து வந்திருக்கிறார்கள்”

இட ஒதுக்கீட்டின் அதிகபட்ச பலனை அனுபவித்தது நாடார்கள்தான். நீங்கள் கூறியபடி நாடார்கள் அனைவரும் வியாபாரிகள் அல்லர்...நடுத்தர வர்க்க நாடார்கள் எளிதாக கிடைத்த கல்வியாலும், இட ஒதுக்கீட்டாலும்தான் அரசு அதிகாரத்திலும் தங்களுக்கான இடத்தினை பெற முடிந்தது. அனால், சாணார்கள் நாடார்களாகிப் போன பின்னர் ‘இட ஒதுக்கீடா, அது என்ன?’ என்பார்கள்.

இத்தகைய எளியவழி குறித்து நண்பர் ஒருவர் விவாதித்துக்கொண்டிருந்தார், ‘தலித்துகளும் வணிகத்தைக் கைப்பற்ற வேண்டும்’

தலித்துகளுக்கு தமிழக அரசு மறுக்கும் உரிமை http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_22.html

ramalingam said...

ஐ.டி. ஆட்களுக்கு பொருளாதார சுதந்திரம் உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ராம்ஜி_யாஹூ said...

அருமை, எல்லாரும் பயந்த ஒரு விஷயத்தை தைரியமாக தொட்டு உள்ளீர்கள்.

நாடார்கள், செட்டியார்கள் கடைகள் மட்டும் அல்ல, மார்வாடி கடைகளில் கொத்தடிமை தனம் இன்னும் கொடுமை.

தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று மன்மோகன் சிங் போன ஆட்சியிலேயே கமிட்டி அமைத்தார்., அப்படியே நின்று விட்டது.

என்றுதான் இன்போசிஸ் இலும், ஆரக்களிலும், சரவணா ஸ்டோரிலும், நல்லி கடையிலும், இம்மனுவேலும், காசிம் பாயும், தலித்துக்களும் வேளையில் அமர்வார்களோ.

Ashok D said...

ஒரு நாலு வருடங்களுக்கு முன்னால் *** ஸ்டோர் சென்றுள்ளேன்.. அங்கே பணிபுரிபவர்களிடம் customer satisfaction அடையாதவன் நான்... அதாலால் அந்த பக்கம் தலைவைத்து படுப்பதில்லை.

அப்புறம் வேலை பார்க்கும் இடத்தில் முதலாளியோ அல்லது மேல்நிலை ஆளோ பெண்களிடம் சில்மிஷம் மேற்க்கொளவது... என எல்லா படங்களிலும் காட்டுவ்து பைத்தியகாரதனமானது.. உண்மையில் உங்களிடம் வேலை பார்க்கும் பெண்களிடம் முறையான அன்பு செலுத்தினால் மட்டுமே நம் வியாபர்ரம் சிறக்கும் சுகுணா.. ஏனென்றால் 14 வருடமாய் வியாபாரம்தான் செய்கிறேன்.. எங்களிடத்திலும் பெண்கள் வேலைசெய்கிறர்ர்கள்.

மற்றபடி உங்கள் பதிவு சுவைதான், வழக்கபோல. நல்ல சிலம்பாட்டம் :)

K.R.அதியமான் said...

///நானும் புழங்கும் இடம் என்பதால், நிலைமையை சரியாக அவதானித்து இருக்கிறீர்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும்.

எ.அ.பாலா
//

Is it so Bala ? Can you compare your standard of living, working conditions, oppurtunites for better jobs with that of your elder generation ? You are lucky to be working where you are.

K.R.அதியமான் said...

முதலீட்டியம் என்பதை சரியாக define செய்யாமல், பொத்தாம் பொதுவாக பிரயோகிக்கப்படும் சொல். மே.அய்ரோப்பியாவில், தென் கொரியாவில், ஜப்பானில், கனடாவில் இருப்பது முதலீட்டியம் தான். இந்தியாவில் இருக்கும் அமைப்பிற்க்கும் அதே பெயர். ஃபிரான்சில் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைவு. வாரத்திற்க்கு 40 மணி நேரம், அதையும் இன்னும் குறைக்க வேண்டுகோள்கள். வேலையில்லாதவர்களுக்கு உதவி தொகை உண்டு.

இந்தியா போன்ற நாடுகளின் நிலையை கொண்டு முதலீட்டியத்தின் விளைவுகள் என்று ஒரு முடிவுக்கு வருவது சரியான புரிதல் அல்ல. மிக அதிகமான ஜனத்தொகை மற்றும் ஜனத்தொகை வளர்சி விகிதம், பெரும் ஊழல், பருவ மழையை நம்பிய விவசாயம், 40 ஆண்டுகள் அமலான சோசியலிச பாணி பொருளாதார கொள்கைகளின் தொடர் விளைவுகள் : இவற்றையும் சேர்த்துதான் இந்திய வறுமை அளவு, இந்திய தொழிலாளர்களின் நிலை பற்றி மதிப்பிட வேண்டும்.

தாரளமயமாக்கலை ‘எதிர்க்கிறீர்கள்’. சரி, அப்ப அதற்க்கு முன் கடைபிடிக்கப்பட்ட லைசென்ஸ் ராஜிய கட்டுபாடுகள் தாம் சரியான கொள்கைகளா ? அவை தொடர்ந்திருந்தால், இன்று நம் நிலை என்ன ? இவை பற்றி இதுவரை நீங்கள் ஆழமாக எழுதியதில்லையே ? கற்றது கைமண் அளவு என்பது நம் அனைவருக்கும் பொருந்தும். சில விசியங்களில் உங்களுக்கு ஆழந்த ஞானம் உண்டு. ஆனால் பொருளாதார வரலாறு பற்றி அப்படி இல்லை.

Economic and Political Weekly என்ற முக்கிய, மிகவும் மதிக்கப்படும் இடதுசாரி பொருளாதார பத்திர்க்கையில் சமீபத்தில் இந்திய வறுமை அளவை பற்றிய கட்டுரை இது :
http://epw.in/epw/uploads/articles/14445.pdf

சுகுணா,
ஸ்டாலின், மாவோ காலத்து கொடுமைகளை பற்றி நான் எழுதியதை விட, இரண்டாம் உலகப்போரில் முற்றாக அழிந்த நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, தைவான் போன்ற நாடுகள், சில தசாமசங்களில் முன்னேறிய நாடுகளாக வளம் பெற்ற வரலாற்றை பற்றி மிக அதிகம் எழுதியுள்ளேன். அந்நாடுகள், வறுமையை மிக மிக குறைத்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத என்ன சித்தாந்தத்தை அமலாக்கின என்று விவாதித்திருக்கிறேன். உபரி மதிப்பு பற்றி ஒரு முக்கிய பதிவு எழுதியிருக்கிறேன். அன்னிய செலவாணி பற்றாக்குறை, 1991இல் ஏற்பட்ட பேரபாயம் அய்.எம்.எஃப் கடன், ருபாயின் மதிப்பு, அதை ஒட்டிய விலைவாசி உயர்வு விகிதங்கள் பற்றி சில முக்கிய பதிவுகள் எழுதியுள்ளேன். 1991 வரை இந்தியாவில் நிலவிய கொள்கைகளின் விளைவுகள் மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி விரிவாக பல பதிவுகள் எழுதியுள்ளேன். இவற்றை ஒட்டி பல இடங்களில் பின்னூட்டங்களும் எழுதியுள்ளேன். வெறும் ஸ்டாலின், மாவோ பற்றி எழுதியவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் எழுதிய மற்ற முக்கிய விசியங்கள் பற்றி இதுவரை நாம் இணையத்தில் நேரடியாக விவாதம் செய்ததில்லை.

அங்காடி தெரு படம் எனக்கு பிடித்திருந்தது. மிகைபடுத்துதல் மட்டும் ஏற்க்க முடியவில்லை. சரியாகவே அதை சுட்டிக்காட்டியிருந்தீர்கள்.

நம் நாட்டின் வறுமையை ஒழிக்க சுலபமான, நடைமுறையில் சாத்தியமான கொள்கை எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இங்கு இருப்பது உண்மையான ஜனனாயகமும் இல்லை. உண்மையான சந்தை பொருளாதாரமும் இல்லை. அரைகுறைதான். ஜனத்தொகை 60 கோடிகளாக இருந்து, அரசின் வெட்டி செலவுகள் (முக்கியமாக ராணுவ செலவு) மிக மிக குறைந்து, கட்டுபடுத்தப்பட்டு, ஊழல் இல்லாமல் நலத்திட்டங்கள் ஒழுங்காக அமலாக்கப்பட்டால், நம் தொழிலாளர்களின் நிலை எப்படி இருக்கும் ? அவர்களின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கும் ? அங்காடி தெரு எப்படி இருந்திருக்கும் ? அதாவது ஃபின்லாந் நாடு போன்ற ஒரு நிலை. அப்பவும் அந்த அமைப்பிற்க்கு பெயர் முதலீட்டியம் தான். இங்கு பல இதர விசியங்களின் விளைவுகளை ‘முதலீட்டியம்’ என்ற பதத்தின் மீது அறியாமல் சுமத்துவதால் இந்த குழப்பம். மேலும்…

சுகுணாதிவாகர் said...

அதியமான்,

அவகாசத்துக்குப் பின் உங்களுடன் உரையாடல்.

Unknown said...

@சுகுணா, நான் எனது முந்திய பின்னோட்டத்திற்காக வருத்தம் தெருவிக்கிறேன். இப்போதுதான் அங்காடிதெரு பார்த்தேன், உடனே உங்களது விமர்சனத்தைதான் (இப்போதுதான்) படித்தேன்...

விமர்சனம் மிகவும் நன்று.

எனது மனதை பாதித்த படங்களில் இதுவும் ஒன்று,இன்னும் பலவடிவங்களில் கொத்தடிமைதனங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறது என்றால் அது மிகையல்ல... வருத்தமான விசயமே, ஏன் இப்படியே எதுவுமே மாறாமல் இருக்கிறது என்பதுதான். :( நான் ஒவ்வொரு தடவை ரங்கனாதன் தெருவில் நடக்கும் போதும் கவனிப்பேன் அங்கு விற்பனை செய்யும் அனைவரும் ஒரு கட்டமைக்பட்ட ஒன்றில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

நாடு வல்லரசு ஆகிறது ஆகிறது என்பவர்கள் தெருவில் இன்னும் பலகோடி மக்கள் வசிப்பதை மறந்து விட்டார்கள் :(

<<<
நவீன வடிவங்களாகத்தான் ஐ.டி ஊழியர்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
>>>
உண்மைதான்... முகம் தெரியாத யாருக்கோ உழைத்து கொண்டிருக்கிறோம்

Unknown said...

<<<
ராம்ஜி_யாஹூ said...

என்றுதான் இன்போசிஸ் இலும், ஆரக்களிலும், சரவணா ஸ்டோரிலும், நல்லி கடையிலும், இம்மனுவேலும், காசிம் பாயும், தலித்துக்களும் வேளையில் அமர்வார்களோ
>>>

ராம்ஜி, இப்போது தாராளமாக சேர்ந்திருக்கிறார்களே... ஆனாலும், இன்போசிஸ் இலும், ஆரக்களிலும், சரவணா ஸ்டோரிலும் ஜாதி பாசம் இருக்கதான் செய்கிறது.