Friday, July 27, 2007

அய்யனார்க்கு ஒரு கடிதம்



அன்புள்ள அய்யனார்,
எப்படி இருக்கீங்க? எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்தானா? நீங்கள் எட்டு விளையாட்டுக்குக் கூப்பிருந்தீர்கள். லாங் லாங் அகோ தமிழ்நதி அக்காவும் அழகு பற்றி எழுதச்சொலியிருந்தார்கள். இந்த விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வமில்லை. இருந்தாலும் எப்போதும் சீரியசாக எழுத நாமென்ன வயசானவர்களா என்ன? நாம் யூத்(மாதிரி)தானே?
ஆனால் எட்டு விளையாட்டுக்கான இலக்கணம் தெரியவில்லை. (ஆமா, நீ அறுசீர்கழிநெடிலடி விருத்தம் எழுதறே, தளை தட்டுதுன்னு வருத்தப்படுவதற்குன்னு நீங்கள் புலம்புவது கேட்குது). லக்கிலுக் வேற உன் பக்கத்திற்கு வந்தால் தாவு தீருதுங்கிறார். பொன்சும் எப்ப எழுதுவதை நிறுத்தப்போறேன்னு மிரட்டுறாங்க. அதனால ஒரு ஜாலியா அரட்டை.
********
'புரிகிற மாதிரி எழுது' புரிகிற மாதிரி எழுது என்றெல்லாம் அபயக்குரல்களைக் கேட்கும்போது ஒரு சம்பவம் நினைவிற்கு வரும்.
ராஜிவ்கொலையில் அப்பாவித்தமிழர்கள் 24பேர் சிறையில் தள்ளப்பட்டார்கள். ஆறுபேருக்கு மரணதண்டனை. அதில் ஒரு தோழர் பிணையில் வந்திருந்தார். அப்போது நான் பெரியார் தி.கவில் இருந்தேன். வெளியே வந்த தோழர் ரிலாக்சாக இருக்கட்டுமேன்னு ஒரு தோழர், இப்போது கருப்புப்பிரதிகள் பதிப்பகம் நடத்தும் நீலகண்டனிடம் எங்காவது அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்.
நீல்ஸ் அழைத்துப்போனதோ கோணங்கியின் பாழி நூல் விமர்சனக்கூட்டத்திற்கு. நம் இலக்கியவாதிகள் விட்டுவிடுவார்களா என்ன? 'இந்தப்பிரதியை இங்கிருந்தும் வாசிக்கலாம், அங்கிருந்தும் வாசிக்கலாம், இப்படியும் வாசிக்கலாம், அப்படியும் வாசிக்கலாம், தலைகீழாக வாசிக்கலாம்' என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த தோழரோ நீல்ஸிடம் கதறியிருக்கிறார், 'எனக்கு மரணதண்டனை கூட கொடுக்கட்டும் தயவுசெய்து இலக்கியக்கூட்டத்திற்கு மட்டும் கூட்டிட்டு வராதீங்க'.
*********
பின்நவீனத்துவம் பற்றி எழுதும் ஆரம்பகாலங்களில் அ.மார்க்ஸ் அடிக்கடி ஒரு வாக்கியத்தைத் திரும்பத்திரும்ப எழுதுவார். (ஆரம்பிச்சுட்டான்யா என்று நீங்கள் அலறுவது கேட்கிறது.) 'நான் எழுதும் 'அ'விற்கும் நீங்கள் எழுதும் 'அ'விற்கும் வித்தியாசம் இருக்கிறது'. வித்தியாசங்களின் அரசியல் பற்றியும் சொற்களைத் தாண்டி நிற்கும் அர்த்தங்கள் பற்றியும் விளக்கவே இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துவார். (இதற்குமேல் சீரியசாக எழுதினால் மண்டைகாயும்).
ஆனால் இப்போது ஜெசிலா எழுதும் 'அ'விற்கும் நான் எழுதும் 'அ'விற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறதா என்ன? எல்லாமே யூனிகோட் அ. ஃபாண்டும் வித்தியாசம் கிடையாது. அப்படியானால் வித்தியாசங்கள் தகர்ந்துவிட்டதா? அறிவுஜீவிகள்தான் பதில்சொல்ல வேண்டும்,.
நம்முடைய கையெழுத்தில் நம்முடைய படைப்புகளை இப்போதெல்லாம் எழுதிப்பார்க்க முடியவில்லை. அதிலும் வெள்ளைத்தாளில் கருப்புமையால் எழுதும் கையெழுத்து எனக்குப்பிடிக்கும். பொதுவாக எனக்குக் கருப்பு எப்போதும் பிடிக்கும். கருப்பு மை, கருப்புப் பேனா, கருப்புச்சட்டை, கருப்புப் பேண்ட், அப்புறம் கருத்தபெண்கள். கருத்தபெண்களுக்கு எப்போதும் கண்கள் அழகாக இருக்கும். ஒருவேளை முகம் முழுதும் கருப்பாக இருந்து கண்கள் மட்டும் தனித்து வெள்ளையாய் மிதப்பதாலோ என்னவோ? ஆனால் அந்தக் கண்கள் அழகு. அதுவும் கருத்தபெண்களின் கன்னங்கள் குண்டாய் இருந்தால் தேவதைகள்தான்.
நான் சொல்ல வந்ததே வேறு. இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் கடிதங்கள் எழுதுவதில்லை. எல்லாம் மெயில்கள், எஸ்.எம்.எஸ்கள்தான். குடுகுடுப்பைக்காரர்களைப் போலவே தபால்காரர்கள் என்னும் இனமும் அழிந்துவருகிறது. ஆனால் கடிதங்களைப் படிப்பது அலாதியான விஷயம்தான். நான் திண்டுக்கல்லில் படிக்கும்போது என் அப்பா சென்னையில் ஒரு தோல்ஷாப்பில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இன்லேண்ட் லெட்டரில் எங்கள் வீட்டில் இருக்கும் அய்ந்துபேருக்கும் கடிதம் எழுதுவார். திருக்குறளை எல்லாம் கோட் பண்ணி அறிவுரைகள். (இப்போது நினைதால் தமாசாகத்தானிருக்கிறது. எந்த பையனும் அப்பாவின் அறிவுரைகளைக் கேட்டு உருப்பட்டதுமில்லை. காலம்போனகடைசியில் தன்மகனுக்கு அட்வைஸ் பண்ணத்தவறியதுமில்லை). நான் இப்போது சென்னையில் இருக்கிறேன். அப்பா ஊரில் இருக்கிறார். ஆனால் இருவருக்கிமிடையில் எந்தக் கடிதங்களுமில்லை. போன்தான். அதுவும் வீட்டிருந்து அவர்களாகப் பண்ணினால்தான் உண்டு.
அதேபோல் மறக்கமுடியாதவை சுகுணாவின் கடிதங்கள். சுகுணா எனக்கு எழுதும் கடிதங்களில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் இருக்கும். நான் பிழைகளைத் திருத்தி அவளிடமே வாசித்துக்காண்பிப்பேன். இப்போதுதான் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது தெரிகிறது. நான் அன்பு செய்வதை விட்டுவிட்டு வாத்தியார் வேலைபார்த்திருக்கிறேன் என்பது இப்போதுதான் உறைக்கிறது.
********************
பள்ளியில் கொஞ்சம் நன்றாகப் படித்துத்தொலைதத்தால் சகமாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பாவம் வந்து சேரும். அதுவும் நான் படித்தது கார்ப்பரேசன் பள்ளியில். எங்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஒருமுறை பிரிட்டிஷ் ராணுவத்திற்கும் பிரெஞ்சு ராணுவத்திற்குமிடையில் போர் நடக்கிறது என்பதை ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்.' ' என்று. போர் 'நடக்கிறதாம்'.
அதேபோல சத்தியமூர்த்தி அய்யரைப் பற்றித் தமிழில் ஒரு பாடம். அவர் ஆங்கிலேயர்களின் சட்டமன்றத்தில் சென்று ஆங்கிலத்திலேயே உரையாற்றியதைப் பற்றிப் பாடப்புத்தகத்தில் இப்படிக்குறிப்பிட்டிருப்பார்கள், 'சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன்பிடரியை உலுக்கியதுபோல'.
தேர்வில் உவமையைப் பொருளோடு பொருத்தி எழுதுக என்று இந்த வாக்கியத்தைக் கொடுத்துவிட்டர்கள். எழுதிய பையனுக்கோ சத்தியமூர்த்தியின் பெயரும் சிங்கமும் மட்டும்தான் ஞாபகம் இருந்தது. அவன் இப்படி எழுதியிருந்தான்,
" சத்தியமூர்த்தி அய்யர் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார், சிங்கம் சத்தியமூர்த்தியைப் பார்த்தது, சத்தியமூர்த்தி சிங்கத்தைப் பார்த்தார். சிங்கம் உறுமியது. மெதுவாக சிங்கத்தின் அருகில் சென்ற சத்தியமூர்த்தி அய்யர் அதன் பிடரியைப் பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கினார்'.
************
அதேபோல எங்கள் கல்லூரியில் எதைப் படித்தால் வேலைகிடைக்காதோ அந்த கோர்ஸையெல்லாம் பேப்பராக வைத்திருப்பார்கள். அப்படி ஒரு பேப்பர்தான் பைன் ஆர்ட்ஸ் - நுண்கலைகள். நல்ல பாடம்தான். ஆனால் ஆசிரியர் அரைவை மிஷின்போல ஆங்கிலத்தில் ஒருமணி நேரம் பேச எங்களுக்கோ ஒரு இழவும் விளங்காது. நல்ல அறிவாளி மாணவர்களுக்குக் கூட அந்தப் பாடத்தில் அரியர் விழும். ஏன் விழுமென்றெல்லாம் தெரியாது. இதனால் பலர் கோல்டுமெடலைக் கூட இழந்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர் விடைத்தாள்களைத் திருத்துவதைப் பற்றி இரண்டுவிதமான கதைகள் உலாவின. அவருக்குப் பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. பேப்பர், வெயிட்டாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்.
கதை1 : அவர் ஒரு பிரம்பை வைத்திருப்பார். பிறகு விடைத்தாள்களுக்கிடையில் செருகி தூக்கிப் பார்ப்பார். திருப்தியான வெயிட் இருந்தால் பாஸ்.
கதை 2 : எல்லா விடைத்தாள்களையும் மேஜையில் அடுக்கி பேனை புல்ஸ்பீடில் சுற்றவிடுவார். மேஜையிலிருந்து கீழே விழும் பேப்பர்கள் எல்லாம் பெயில். பல தடைகளைத் தாண்டி நிற்கும் பேப்பர்கள் மட்டும் பாஸ். தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்!
எங்களுக்கு இந்தியும் இரண்டு செமஸ்டர் இருந்தது. மேத்ஸ், பிஸிக்ஸ், ஹோம்சயன்ஸ், கெமிஸ்ட்ரி என்று நான்கு வகுப்புகளையும் ஒரு பெரிய ஹாலில் வைத்துத்தான் இந்தி ஜி பாடம் நடத்துவார். ஆனாலும் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் 'யக் கியா ஹை?' (இது என்ன?) மாதிரியான வார்த்தைகள்தான்.
ஒருமுறை நீண்டநாட்களாக இந்திவகுப்பிற்கே எட்டிப்பார்க்காத ஒரு மாணவன் வந்திருந்தான். அவனை எழுப்பி 'டீவார் பர் கியா ஹை?' என்று ஜி கேட்டார். அதாவது 'சுவரில் என்ன இருக்கிறது?' அதற்குச் சொல்லவேண்டிய பதில் 'டீவார் பர் கடி ஹை'. 'சுவரில் கடிகாரம் இருக்கிறது. அந்த மாணவனுக்கோ ஒரு இழவும் விளங்கவில்லை.
ஜி மீண்டும் கேட்டார், 'டீவார் பர் கியா ஹை', 'சுவரில் என்ன இருக்கிறது?' அந்தப் பையன் தயங்காமல் சொன்னான். 'சுண்ணாம்பு இருக்கிறது'.
************* உங்களைப் போன்ற இலக்கிவியாதிகளுக்கு சாரி, வாதிகளுக்கு சினிமாப்பாடல்கள் பிடிக்காது. ஆனால் எனக்கு ரொம்பப்பிடிக்கும். 'அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன், உதிர்ந்துபோன மலரின் வாசமா?' வரிகளில் கரைந்துபோகாமல் இருக்கமுடியவில்லை. நா.முத்துக்குமாரும் தாமரையும் நவீனகவிதையைத் திரைக்குக்கொண்டு வருகிறார்கள் என்பது என் கருத்து. எல்லோருக்கும் இருப்பதைப் போல எனக்கான பேவரைட் பாடல் ஜேசுதாசின் குரலில் 'பூவே செம்பூவே பொன்வாசம் வரும்'.
நீங்கள் எனக்குப் போன் செய்யும்போது என் காலர்டியூனில் ஒலிக்குமே, 'பருவமே புதியராகம் பாடு, இளமையின் பூந்தென்றல் ராகம்', அந்தப் பாடலும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல்
ஒருமுறை கல்லூரியில் நடனப்போட்டி அறிவித்திருந்தார்கள். நமக்கு நடனமெல்லாம் ஆடவராதுதான். ஆனால் அதற்காக அலும்பு பண்ணாமல் இருக்கமுடியுமா, என்ன? நானும் இன்னொரு நண்பரும் நடனம் ஆடத்தேர்ந்தெடுத்தது இந்த 'பருவமே புதியராகம் பாடு' பாடலைத்தான்.
உண்மையில் அந்தப் பாடலுக்கு நடனம் கிடையாது. 'நெஞ்சத்தைக்கிள்ளாதே' படத்தில் மோகனும் சுகாசினியும் ஜாகிங் போகும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல். நாங்கள் பாடலைப்போட்டுவிட்டு அது முடியும்வரை மேடையில் ஜாகிங் போய்க்கொண்டிருந்தோம். அந்த நடனத்திற்குப் பரிசு கிடைக்கவில்லை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா, என்ன?
******************
சினிமாப்பாடல்களில் உள்ள இலக்கணப்பிழை, காலப்பிழை, சூழல்பிழை ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு.
கண்ணதாசன் எவ்வளவு பெரிய கலைஞன். ஆனாலும் அவரது பாடல்களில் இரண்டு பிழைகளைப் பரவலாகச் சுட்டிக்காட்டுவார்கள்.
படம் ஆனந்தஜோதி என்று நினைக்கிறேன், 'மானல்லவோ கண்கள் தந்தது' பாடல். அதில் ஒருவரி வரும், 'பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது' என்று. ஆனால் பூக்கள் என்பது பன்மை. தந்தன என்றுதான் வரவேண்டும். மீட்டர் இடிக்கக்கூடாது என்பதற்காக தந்தது என்று எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.
அதேபோல அவரின் இன்னொருபாடல், 'கட்டோடு குழலாட ஆட...' அதில் ஒரு வரி. 'பச்சரிசிப் பல்லாட...ஆட'. கதாநாயகியோ பதினெட்டுவயது. பதினெட்டு வயதுப்பெண்னிற்கு எப்படிப் பல் ஆடும்? கிழவிக்குத்தான் ஆடும்.
எனக்குச் சமீபத்தில் இரண்டு பாடல்களில் தவறு இருப்பதாகத் தோன்றியது. அதில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது,
புலம்பெயரும் சூழலையும் போர்ச்சூழலையும் ஒலிக்கும் இரண்டு பாடல்கள், 'விடைகொடு எங்கள் நாடே, கடல்வாசல்தெளிக்கும் வீடே' (உண்மையில் வைரமுத்து கவிஞன்தான்). அதேபோல அரண்' படத்தில் வரும் 'யா அல்லா எங்கள் காஷ்மீர் அழகாய் மாறாதோ''..
அந்தப் பாடலில் ஒரு வரி இப்படி வரும், 'ஓ எங்கள் காஷ்மீரின் ரோஜாக்கள், விதவைகள் பார்த்து அழத்தானா?' ஆனால் உண்மையில் இந்துச்சமூகத்தில்தான் விதவைகள் பூச்சூடமாட்டார்கள். காஷ்மீரத்து முஸ்லீம்சமூகத்தில் அப்படியான பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் விதவைகள் பூக்களைப் பார்த்து அழவேண்டும்?
இன்னொரு பாடல், எம்டன்மகன் படத்தில் யுகபாரதி எழுதிய 'கோலிக்குண்டு கண்ணு, கோவைப்பழ உதடு...'. அதில் கதாநாயகன் நாயகியைப் பார்த்து பாடுகிறான், 'நீ எனக்குப் பிறந்தவ, ஏன் உசிரை வாங்குறே?' எனக்காகப் பிறந்தவள் என்றுதான் வரவேண்டும். எனக்குப் பிறந்தவள் என்றால் என்னுடைய மகள் என்று அர்த்தம்.
*****************
இப்போது தி.நகரிலிருந்து திருவான்மியூரெல்லாம் தாண்டி பாலவாக்கம் வந்துவிட்டோம். பரபரப்பான மக்கள் நிறைந்த பகுதியிலேயே வசித்துவந்து இந்த பகுதியில் வசிப்பது போரடிக்கிறது. கடல் இருக்கிறது அவ்வளவுதான். அப்புறம் எங்கள் பகுதிமுழுக்க ஏகப்பட்ட ஸ்பீடுபிரேக்கர்கள். ஸ்பீடுபிரேக்கர்கள் என்றால் மலைக்கோட்டைகளைக் கட்டி அதில் தார்பூசி வைத்திருக்கிறார்கள்.
ஏன் இத்தனை ஸ்பீடுபிரேக்கர்கள்? ஒருவேளை வண்டியில் வரும் காதலர்களின் வசதிக்காக இருக்கலாம். எப்போதாவது கடற்கரைக்குப் போனால் காதலர்கள் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்பி வெறுப்பேற்றுகிறார்கள். ஆனால் எப்போதும் ஏதேனும் நம்மைப்போலவே தனிமைப்பட்டுப்போன விடுபட்ட செருப்புகளைக் கடற்கரையில் கண்டுபிடிக்கலாம்.
என் அப்பா வேறு அடிக்கடி போன்செய்து, 'வீட்டை மாற்று, சுனாமி வரப்போகிறது' என்று கவலைப்படுகிறார். அவர் அந்தக் காலத்து ஆள். எனக்கோ சுனாமி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வராது என்றுதான் தோன்றுகிறது. சுனாமி வந்தபோது தமிழ்நட்டுக் கவிஞர்கள் செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சமா என்ன? குமுதத்திலும் விகடனிலும் போட்டோ போட்டு 'இயற்கைத்தாயே ஏனிந்த வஞ்சனை' 'தாயே குழந்தைகளைக் கொல்லலாமா' என்றெல்லாம் எழுதித் தள்ளிவிட்டார்கள். அதையெல்லாம் படித்த சுனாமி மீண்டும் வருமா என்ன? அதற்குத் தெரியாதா என்ன, மீண்டும் வந்தால் கவிஞர்கள் கவிதை எழுதி இம்சைபண்ண ஆரம்பித்துவிடுவார்கள் என்று.
ஆனால் ஒருவேளை சுனாமி வருவது உறுதியாகத் தெரிந்தால் அந்த நாளில் நாம் கடற்கரையில் வலைப்பதிவாளர் சந்திப்பை வைத்துக்கொள்வோம். அப்போதும் நம்முடைய கவிஞர்கள் சுனாமிக் கவிதைகளை விட்டுவிடுவோமா, என்ன? அப்படி எழுதினால் எப்படித்தான் இருக்கும்?
அய்யனார்
சுனாமியின் இசை
நான் கவிதை எழுதப்போகிறேன்சுனாமியே எட்டிநில்கடலின் குரல் கேட்கிறதா?போடா போடா புண்ணாக்குஒரு கவிஞனின் மடியில்கடல் சுருளும்போடாத தப்புக்கணக்குகாற்றைக் கிழித்து கவிதைகள் உருவாகும்.தொன்மங்களின் ஞாபகத்தில்கானகத்திலிருந்து புலி வரும்பலகிறுக்கு உனக்கு இருக்கு ஒன்றாய்ப் பத்தாய் நூறாய்க்கவிதைகளும் அலைகளும்நம்மைத் தழுவுகின்றன இப்ப என்னாதான் மனக்கணக்கு?
தமிழ்நதி
கடல்கரைந்தது
தீபாகுறிதவறாமல் பலூன்சுடக்கற்றுக்கொள். அது சில அய்ம்பதுரூபாய்களைச் சம்பாதிக்க உதவும்.அம்மாஎன் பால்யத்தின் ஞாபகத்தில் இன்று ஒருமுறை மட்டும் உடைக்கிறேனேமாங்காய் உள்ள இந்த பிளாஸ்டிக் பேப்பரை.
காயத்ரி]நெய்தல்திணை
கடற்கரையில் மொய்க்கும் ஈ உன்னையே ஞாபகப்படுத்துகிறது. உன்னை நினைக்கும்போதெல்லாம்மீன்கவுச்சி அடிக்கிறது.நாளையாவது நீ வருவாயாசுண்டல்வாங்கித்தர.
சுகுணாதிவாகர்
நிவேதனாவிற்குக் குட்நைட்
இப்போதெல்லாம் நிவேதனா இரவுகளில் கூடகுட்நைட் சொல்வதில்லை.ஆனால் அதிசயமாக மதியவெயிலில்கடற்கரையில் இருக்கும்போதுதூங்கப்போகிறேன் குட்நைட் என்கிறாள்.ஆனால் சுனாமி என்னைஅடித்துப்போகிறது. இன்றிரவு எனக்குப் பேட்நைட்நிவேதனாவிற்கோ குட்நைட்.
அப்புறமென்ன, ரோஸ்லீன் இன்று இரவு பார்ட்டிக்கு அழைத்திருந்ததாகச் சொல்லியிருந்தீர்கள். ஆனால் அளவாய்க்குடியுங்கள். உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் சேவை நாசமாய்ப்போன நாட்டிற்குத் தேவைதானே? எனவே குறைவாய்த் தண்ணியடியுங்கள், அதிகமாய்ச் சரக்கடியுங்கள். அப்புறமாய் அரட்டையடிப்போம்.
சுகுணாதிவாகர்.

10 comments:

காயத்ரி சித்தார்த் said...

:))))) ஆச்சர்யமா படிச்சிட்டே வந்தேன்.. அட நமக்கும் கூட புரியுதேன்னு.. சில இடங்களில் புன்னகை.. சில இடங்களில் சிரிப்பு..
காபி பேஸ்ட் பண்ணி பாராட்ட நினைச்சது முடியாம போய்டுச்சு! அய்யனார்... தமிழ்நதி.. அடப்பாவி நானுமா மாட்டியிருக்கேன்!!! :))

பயப்படாதீங்க சுகுணா புரியற மாதிரி கூட எழுதுவார்னு பத்து பேருக்கு சொல்ற மாதிரி எழுதினதுக்கு நன்றி சுகுணா. :)))

Ayyanar Viswanath said...

உங்க அட்டகாசம் தாங்கல சுகுணா எள்ளலான நடை கலக்கல் :)

Jazeela said...

'அ' ஏதாவது யாருக்காவது வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்கள். :-))

அமீரகம் வந்த புதிதில் என் நாட்குறிப்பை கடிதமாக ஏழு நாள் செய்தியை மொத்தமாக வார இறுதியில் பெற்றோருக்கு அனுப்பி தபால் துறையின் வருமானத்தைக் கூட்ட மிகவும் பாடுபட்டவள் நான். உங்க பதிவை படித்த போது அது நினைவுக்கு வந்தது.

கவியரசு பாடல் வரிகளிலே விட்டுப் போயிருக்கும் சில தவறுகளையும் சுட்டிக்காட்டி பெயர் வாங்கும் கூட்டம் பெருகிவிட்டதால்தான் இன்றைய கவிஞர்கள் பிழை பொறுக்க முடியாது அளவுக்கு கன்னாபின்னாவென்று எழுதி தள்ளுகிறார்களாம் :-)

பாமரன் பாணியில் ஒரு கடிதமா? :-))

Boston Bala said...

செமையா இருக்கு... நன்றி

Anonymous said...

வாவ்.... என்னாலும் உங்க ரேஞ்சுக்கு எழுத முடியும்டான்னு காட்டுவதற்காக எழுதினீர்களோ. கொஞ்சம் கூட யோசிக்கவே விட வில்லை. படித்து முடித்த விநாடிகளில் அர்த்தங்கள் நெஞ்சில் முட்டிக் கொண்டு நிற்கின்றன.

//'அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன், உதிர்ந்துபோன மலரின் வாசமா?' வரிகளில் கரைந்துபோகாமல் இருக்கமுடியவில்லை. //

ஷ்ரேயாகோஷலின் குரலில் இந்த வரிகளைக் கேட்க கேட்க என்னமோ செய்யும் உள்ளே.

//'விடைகொடு எங்கள் நாடே, கடல்வாசல்தெளிக்கும் வீடே' (உண்மையில் வைரமுத்து கவிஞன்தான்).//

வைரமுத்து மோசம். சூப்பரு. நல்லா எழுதறாரு. தமிழைக் கெடுக்கறாரு. ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும். இந்த பாடல் சொல்லும் வலிகள் இருக்கிறதே.... அய்யோ.

அப்படியே ஃபார்மேட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

Pot"tea" kadai said...

சிவன் கோயில் குல நாசம்

ப்லொக்கர் சுகுணாவை ரிவிட் எடுத்தா
ஒன்னுக்கு மூனா போட்டு இப்படி நாஸ்தி பண்ணுவார்...

அய்யனாரின் போடா போடா புண்ணாக்கு ரொம்ப நாசம்....

மெய்யாலுமே கொட்டிவாக்கத்துக்கு தான் வந்துட்டீங்களா இல்ல யாரு வீட்டிலாவது போய் ஒரு இரவு மீன் கறி சோறு துன்னுட்டு இப்படி டகால்டி காமிக்கிரீங்களா...

கொட்டிவாக்கம் கடற்கரை எனக்கு பிடித்தமானது ...பல இரவுகளும் பகல்களும் அவள் துணையோடு கழிந்தாலும் அலைகளின் துணை தான் எங்கும் என்றும் நிலையானது

சென்ஷி said...

semma kalakkal pathivu..

vazhthukkal

senshe

from sharjah

பொன்ஸ்~~Poorna said...

அதானே பார்த்தேன்.. ஆரம்பிச்சது நீங்க தானா! ம்... என்னத்தச் சொல்ல.. எல்லாம் அந்த ப்ளாக்கரால வந்தது..

அருண்மொழி said...

//" சத்தியமூர்த்தி அய்யர் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார், சிங்கம் சத்தியமூர்த்தியைப் பார்த்தது, சத்தியமூர்த்தி சிங்கத்தைப் பார்த்தார். சிங்கம் உறுமியது. மெதுவாக சிங்கத்தின் அருகில் சென்ற சத்தியமூர்த்தி அய்யர் அதன் பிடரியைப் பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கினார்'.
//

Supppppppperrrrrrrrrrrrrrrrrr

கையேடு said...

உங்களின் மிதக்கும்வெளியில் மட்டுமே அடிக்கடி வந்து மிதக்க முயற்சி செய்து தலை சொறிந்துவிட்டு ஏதோ எல்லாம் புரிந்துகொண்டதுபோல் பின்னூட்டம் வேறு போட்டுவிட்டுச் சென்றுவிடுவேன். உங்களுடைய சின்னஞ்சிறு கதைகளைப் படித்துவிட்டுப் பல இடங்களில் வெடித்துச் சிரித்து அருகிலிருக்கும் நபர்களிடம் அடிக்கடி வழியவேண்டியதாய்ப் போயிற்று.