Friday, July 27, 2007

அய்யனார்க்கு ஒரு கடிதம்அன்புள்ள அய்யனார்,
எப்படி இருக்கீங்க? எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்தானா? நீங்கள் எட்டு விளையாட்டுக்குக் கூப்பிருந்தீர்கள். லாங் லாங் அகோ தமிழ்நதி அக்காவும் அழகு பற்றி எழுதச்சொலியிருந்தார்கள். இந்த விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வமில்லை. இருந்தாலும் எப்போதும் சீரியசாக எழுத நாமென்ன வயசானவர்களா என்ன? நாம் யூத்(மாதிரி)தானே?
ஆனால் எட்டு விளையாட்டுக்கான இலக்கணம் தெரியவில்லை. (ஆமா, நீ அறுசீர்கழிநெடிலடி விருத்தம் எழுதறே, தளை தட்டுதுன்னு வருத்தப்படுவதற்குன்னு நீங்கள் புலம்புவது கேட்குது). லக்கிலுக் வேற உன் பக்கத்திற்கு வந்தால் தாவு தீருதுங்கிறார். பொன்சும் எப்ப எழுதுவதை நிறுத்தப்போறேன்னு மிரட்டுறாங்க. அதனால ஒரு ஜாலியா அரட்டை.
********
'புரிகிற மாதிரி எழுது' புரிகிற மாதிரி எழுது என்றெல்லாம் அபயக்குரல்களைக் கேட்கும்போது ஒரு சம்பவம் நினைவிற்கு வரும்.
ராஜிவ்கொலையில் அப்பாவித்தமிழர்கள் 24பேர் சிறையில் தள்ளப்பட்டார்கள். ஆறுபேருக்கு மரணதண்டனை. அதில் ஒரு தோழர் பிணையில் வந்திருந்தார். அப்போது நான் பெரியார் தி.கவில் இருந்தேன். வெளியே வந்த தோழர் ரிலாக்சாக இருக்கட்டுமேன்னு ஒரு தோழர், இப்போது கருப்புப்பிரதிகள் பதிப்பகம் நடத்தும் நீலகண்டனிடம் எங்காவது அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்.
நீல்ஸ் அழைத்துப்போனதோ கோணங்கியின் பாழி நூல் விமர்சனக்கூட்டத்திற்கு. நம் இலக்கியவாதிகள் விட்டுவிடுவார்களா என்ன? 'இந்தப்பிரதியை இங்கிருந்தும் வாசிக்கலாம், அங்கிருந்தும் வாசிக்கலாம், இப்படியும் வாசிக்கலாம், அப்படியும் வாசிக்கலாம், தலைகீழாக வாசிக்கலாம்' என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த தோழரோ நீல்ஸிடம் கதறியிருக்கிறார், 'எனக்கு மரணதண்டனை கூட கொடுக்கட்டும் தயவுசெய்து இலக்கியக்கூட்டத்திற்கு மட்டும் கூட்டிட்டு வராதீங்க'.
*********
பின்நவீனத்துவம் பற்றி எழுதும் ஆரம்பகாலங்களில் அ.மார்க்ஸ் அடிக்கடி ஒரு வாக்கியத்தைத் திரும்பத்திரும்ப எழுதுவார். (ஆரம்பிச்சுட்டான்யா என்று நீங்கள் அலறுவது கேட்கிறது.) 'நான் எழுதும் 'அ'விற்கும் நீங்கள் எழுதும் 'அ'விற்கும் வித்தியாசம் இருக்கிறது'. வித்தியாசங்களின் அரசியல் பற்றியும் சொற்களைத் தாண்டி நிற்கும் அர்த்தங்கள் பற்றியும் விளக்கவே இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துவார். (இதற்குமேல் சீரியசாக எழுதினால் மண்டைகாயும்).
ஆனால் இப்போது ஜெசிலா எழுதும் 'அ'விற்கும் நான் எழுதும் 'அ'விற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறதா என்ன? எல்லாமே யூனிகோட் அ. ஃபாண்டும் வித்தியாசம் கிடையாது. அப்படியானால் வித்தியாசங்கள் தகர்ந்துவிட்டதா? அறிவுஜீவிகள்தான் பதில்சொல்ல வேண்டும்,.
நம்முடைய கையெழுத்தில் நம்முடைய படைப்புகளை இப்போதெல்லாம் எழுதிப்பார்க்க முடியவில்லை. அதிலும் வெள்ளைத்தாளில் கருப்புமையால் எழுதும் கையெழுத்து எனக்குப்பிடிக்கும். பொதுவாக எனக்குக் கருப்பு எப்போதும் பிடிக்கும். கருப்பு மை, கருப்புப் பேனா, கருப்புச்சட்டை, கருப்புப் பேண்ட், அப்புறம் கருத்தபெண்கள். கருத்தபெண்களுக்கு எப்போதும் கண்கள் அழகாக இருக்கும். ஒருவேளை முகம் முழுதும் கருப்பாக இருந்து கண்கள் மட்டும் தனித்து வெள்ளையாய் மிதப்பதாலோ என்னவோ? ஆனால் அந்தக் கண்கள் அழகு. அதுவும் கருத்தபெண்களின் கன்னங்கள் குண்டாய் இருந்தால் தேவதைகள்தான்.
நான் சொல்ல வந்ததே வேறு. இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் கடிதங்கள் எழுதுவதில்லை. எல்லாம் மெயில்கள், எஸ்.எம்.எஸ்கள்தான். குடுகுடுப்பைக்காரர்களைப் போலவே தபால்காரர்கள் என்னும் இனமும் அழிந்துவருகிறது. ஆனால் கடிதங்களைப் படிப்பது அலாதியான விஷயம்தான். நான் திண்டுக்கல்லில் படிக்கும்போது என் அப்பா சென்னையில் ஒரு தோல்ஷாப்பில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இன்லேண்ட் லெட்டரில் எங்கள் வீட்டில் இருக்கும் அய்ந்துபேருக்கும் கடிதம் எழுதுவார். திருக்குறளை எல்லாம் கோட் பண்ணி அறிவுரைகள். (இப்போது நினைதால் தமாசாகத்தானிருக்கிறது. எந்த பையனும் அப்பாவின் அறிவுரைகளைக் கேட்டு உருப்பட்டதுமில்லை. காலம்போனகடைசியில் தன்மகனுக்கு அட்வைஸ் பண்ணத்தவறியதுமில்லை). நான் இப்போது சென்னையில் இருக்கிறேன். அப்பா ஊரில் இருக்கிறார். ஆனால் இருவருக்கிமிடையில் எந்தக் கடிதங்களுமில்லை. போன்தான். அதுவும் வீட்டிருந்து அவர்களாகப் பண்ணினால்தான் உண்டு.
அதேபோல் மறக்கமுடியாதவை சுகுணாவின் கடிதங்கள். சுகுணா எனக்கு எழுதும் கடிதங்களில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் இருக்கும். நான் பிழைகளைத் திருத்தி அவளிடமே வாசித்துக்காண்பிப்பேன். இப்போதுதான் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது தெரிகிறது. நான் அன்பு செய்வதை விட்டுவிட்டு வாத்தியார் வேலைபார்த்திருக்கிறேன் என்பது இப்போதுதான் உறைக்கிறது.
********************
பள்ளியில் கொஞ்சம் நன்றாகப் படித்துத்தொலைதத்தால் சகமாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பாவம் வந்து சேரும். அதுவும் நான் படித்தது கார்ப்பரேசன் பள்ளியில். எங்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஒருமுறை பிரிட்டிஷ் ராணுவத்திற்கும் பிரெஞ்சு ராணுவத்திற்குமிடையில் போர் நடக்கிறது என்பதை ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்.' ' என்று. போர் 'நடக்கிறதாம்'.
அதேபோல சத்தியமூர்த்தி அய்யரைப் பற்றித் தமிழில் ஒரு பாடம். அவர் ஆங்கிலேயர்களின் சட்டமன்றத்தில் சென்று ஆங்கிலத்திலேயே உரையாற்றியதைப் பற்றிப் பாடப்புத்தகத்தில் இப்படிக்குறிப்பிட்டிருப்பார்கள், 'சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன்பிடரியை உலுக்கியதுபோல'.
தேர்வில் உவமையைப் பொருளோடு பொருத்தி எழுதுக என்று இந்த வாக்கியத்தைக் கொடுத்துவிட்டர்கள். எழுதிய பையனுக்கோ சத்தியமூர்த்தியின் பெயரும் சிங்கமும் மட்டும்தான் ஞாபகம் இருந்தது. அவன் இப்படி எழுதியிருந்தான்,
" சத்தியமூர்த்தி அய்யர் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார், சிங்கம் சத்தியமூர்த்தியைப் பார்த்தது, சத்தியமூர்த்தி சிங்கத்தைப் பார்த்தார். சிங்கம் உறுமியது. மெதுவாக சிங்கத்தின் அருகில் சென்ற சத்தியமூர்த்தி அய்யர் அதன் பிடரியைப் பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கினார்'.
************
அதேபோல எங்கள் கல்லூரியில் எதைப் படித்தால் வேலைகிடைக்காதோ அந்த கோர்ஸையெல்லாம் பேப்பராக வைத்திருப்பார்கள். அப்படி ஒரு பேப்பர்தான் பைன் ஆர்ட்ஸ் - நுண்கலைகள். நல்ல பாடம்தான். ஆனால் ஆசிரியர் அரைவை மிஷின்போல ஆங்கிலத்தில் ஒருமணி நேரம் பேச எங்களுக்கோ ஒரு இழவும் விளங்காது. நல்ல அறிவாளி மாணவர்களுக்குக் கூட அந்தப் பாடத்தில் அரியர் விழும். ஏன் விழுமென்றெல்லாம் தெரியாது. இதனால் பலர் கோல்டுமெடலைக் கூட இழந்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர் விடைத்தாள்களைத் திருத்துவதைப் பற்றி இரண்டுவிதமான கதைகள் உலாவின. அவருக்குப் பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. பேப்பர், வெயிட்டாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்.
கதை1 : அவர் ஒரு பிரம்பை வைத்திருப்பார். பிறகு விடைத்தாள்களுக்கிடையில் செருகி தூக்கிப் பார்ப்பார். திருப்தியான வெயிட் இருந்தால் பாஸ்.
கதை 2 : எல்லா விடைத்தாள்களையும் மேஜையில் அடுக்கி பேனை புல்ஸ்பீடில் சுற்றவிடுவார். மேஜையிலிருந்து கீழே விழும் பேப்பர்கள் எல்லாம் பெயில். பல தடைகளைத் தாண்டி நிற்கும் பேப்பர்கள் மட்டும் பாஸ். தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்!
எங்களுக்கு இந்தியும் இரண்டு செமஸ்டர் இருந்தது. மேத்ஸ், பிஸிக்ஸ், ஹோம்சயன்ஸ், கெமிஸ்ட்ரி என்று நான்கு வகுப்புகளையும் ஒரு பெரிய ஹாலில் வைத்துத்தான் இந்தி ஜி பாடம் நடத்துவார். ஆனாலும் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் 'யக் கியா ஹை?' (இது என்ன?) மாதிரியான வார்த்தைகள்தான்.
ஒருமுறை நீண்டநாட்களாக இந்திவகுப்பிற்கே எட்டிப்பார்க்காத ஒரு மாணவன் வந்திருந்தான். அவனை எழுப்பி 'டீவார் பர் கியா ஹை?' என்று ஜி கேட்டார். அதாவது 'சுவரில் என்ன இருக்கிறது?' அதற்குச் சொல்லவேண்டிய பதில் 'டீவார் பர் கடி ஹை'. 'சுவரில் கடிகாரம் இருக்கிறது. அந்த மாணவனுக்கோ ஒரு இழவும் விளங்கவில்லை.
ஜி மீண்டும் கேட்டார், 'டீவார் பர் கியா ஹை', 'சுவரில் என்ன இருக்கிறது?' அந்தப் பையன் தயங்காமல் சொன்னான். 'சுண்ணாம்பு இருக்கிறது'.
************* உங்களைப் போன்ற இலக்கிவியாதிகளுக்கு சாரி, வாதிகளுக்கு சினிமாப்பாடல்கள் பிடிக்காது. ஆனால் எனக்கு ரொம்பப்பிடிக்கும். 'அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன், உதிர்ந்துபோன மலரின் வாசமா?' வரிகளில் கரைந்துபோகாமல் இருக்கமுடியவில்லை. நா.முத்துக்குமாரும் தாமரையும் நவீனகவிதையைத் திரைக்குக்கொண்டு வருகிறார்கள் என்பது என் கருத்து. எல்லோருக்கும் இருப்பதைப் போல எனக்கான பேவரைட் பாடல் ஜேசுதாசின் குரலில் 'பூவே செம்பூவே பொன்வாசம் வரும்'.
நீங்கள் எனக்குப் போன் செய்யும்போது என் காலர்டியூனில் ஒலிக்குமே, 'பருவமே புதியராகம் பாடு, இளமையின் பூந்தென்றல் ராகம்', அந்தப் பாடலும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல்
ஒருமுறை கல்லூரியில் நடனப்போட்டி அறிவித்திருந்தார்கள். நமக்கு நடனமெல்லாம் ஆடவராதுதான். ஆனால் அதற்காக அலும்பு பண்ணாமல் இருக்கமுடியுமா, என்ன? நானும் இன்னொரு நண்பரும் நடனம் ஆடத்தேர்ந்தெடுத்தது இந்த 'பருவமே புதியராகம் பாடு' பாடலைத்தான்.
உண்மையில் அந்தப் பாடலுக்கு நடனம் கிடையாது. 'நெஞ்சத்தைக்கிள்ளாதே' படத்தில் மோகனும் சுகாசினியும் ஜாகிங் போகும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல். நாங்கள் பாடலைப்போட்டுவிட்டு அது முடியும்வரை மேடையில் ஜாகிங் போய்க்கொண்டிருந்தோம். அந்த நடனத்திற்குப் பரிசு கிடைக்கவில்லை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா, என்ன?
******************
சினிமாப்பாடல்களில் உள்ள இலக்கணப்பிழை, காலப்பிழை, சூழல்பிழை ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு.
கண்ணதாசன் எவ்வளவு பெரிய கலைஞன். ஆனாலும் அவரது பாடல்களில் இரண்டு பிழைகளைப் பரவலாகச் சுட்டிக்காட்டுவார்கள்.
படம் ஆனந்தஜோதி என்று நினைக்கிறேன், 'மானல்லவோ கண்கள் தந்தது' பாடல். அதில் ஒருவரி வரும், 'பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது' என்று. ஆனால் பூக்கள் என்பது பன்மை. தந்தன என்றுதான் வரவேண்டும். மீட்டர் இடிக்கக்கூடாது என்பதற்காக தந்தது என்று எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.
அதேபோல அவரின் இன்னொருபாடல், 'கட்டோடு குழலாட ஆட...' அதில் ஒரு வரி. 'பச்சரிசிப் பல்லாட...ஆட'. கதாநாயகியோ பதினெட்டுவயது. பதினெட்டு வயதுப்பெண்னிற்கு எப்படிப் பல் ஆடும்? கிழவிக்குத்தான் ஆடும்.
எனக்குச் சமீபத்தில் இரண்டு பாடல்களில் தவறு இருப்பதாகத் தோன்றியது. அதில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது,
புலம்பெயரும் சூழலையும் போர்ச்சூழலையும் ஒலிக்கும் இரண்டு பாடல்கள், 'விடைகொடு எங்கள் நாடே, கடல்வாசல்தெளிக்கும் வீடே' (உண்மையில் வைரமுத்து கவிஞன்தான்). அதேபோல அரண்' படத்தில் வரும் 'யா அல்லா எங்கள் காஷ்மீர் அழகாய் மாறாதோ''..
அந்தப் பாடலில் ஒரு வரி இப்படி வரும், 'ஓ எங்கள் காஷ்மீரின் ரோஜாக்கள், விதவைகள் பார்த்து அழத்தானா?' ஆனால் உண்மையில் இந்துச்சமூகத்தில்தான் விதவைகள் பூச்சூடமாட்டார்கள். காஷ்மீரத்து முஸ்லீம்சமூகத்தில் அப்படியான பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் விதவைகள் பூக்களைப் பார்த்து அழவேண்டும்?
இன்னொரு பாடல், எம்டன்மகன் படத்தில் யுகபாரதி எழுதிய 'கோலிக்குண்டு கண்ணு, கோவைப்பழ உதடு...'. அதில் கதாநாயகன் நாயகியைப் பார்த்து பாடுகிறான், 'நீ எனக்குப் பிறந்தவ, ஏன் உசிரை வாங்குறே?' எனக்காகப் பிறந்தவள் என்றுதான் வரவேண்டும். எனக்குப் பிறந்தவள் என்றால் என்னுடைய மகள் என்று அர்த்தம்.
*****************
இப்போது தி.நகரிலிருந்து திருவான்மியூரெல்லாம் தாண்டி பாலவாக்கம் வந்துவிட்டோம். பரபரப்பான மக்கள் நிறைந்த பகுதியிலேயே வசித்துவந்து இந்த பகுதியில் வசிப்பது போரடிக்கிறது. கடல் இருக்கிறது அவ்வளவுதான். அப்புறம் எங்கள் பகுதிமுழுக்க ஏகப்பட்ட ஸ்பீடுபிரேக்கர்கள். ஸ்பீடுபிரேக்கர்கள் என்றால் மலைக்கோட்டைகளைக் கட்டி அதில் தார்பூசி வைத்திருக்கிறார்கள்.
ஏன் இத்தனை ஸ்பீடுபிரேக்கர்கள்? ஒருவேளை வண்டியில் வரும் காதலர்களின் வசதிக்காக இருக்கலாம். எப்போதாவது கடற்கரைக்குப் போனால் காதலர்கள் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்பி வெறுப்பேற்றுகிறார்கள். ஆனால் எப்போதும் ஏதேனும் நம்மைப்போலவே தனிமைப்பட்டுப்போன விடுபட்ட செருப்புகளைக் கடற்கரையில் கண்டுபிடிக்கலாம்.
என் அப்பா வேறு அடிக்கடி போன்செய்து, 'வீட்டை மாற்று, சுனாமி வரப்போகிறது' என்று கவலைப்படுகிறார். அவர் அந்தக் காலத்து ஆள். எனக்கோ சுனாமி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வராது என்றுதான் தோன்றுகிறது. சுனாமி வந்தபோது தமிழ்நட்டுக் கவிஞர்கள் செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சமா என்ன? குமுதத்திலும் விகடனிலும் போட்டோ போட்டு 'இயற்கைத்தாயே ஏனிந்த வஞ்சனை' 'தாயே குழந்தைகளைக் கொல்லலாமா' என்றெல்லாம் எழுதித் தள்ளிவிட்டார்கள். அதையெல்லாம் படித்த சுனாமி மீண்டும் வருமா என்ன? அதற்குத் தெரியாதா என்ன, மீண்டும் வந்தால் கவிஞர்கள் கவிதை எழுதி இம்சைபண்ண ஆரம்பித்துவிடுவார்கள் என்று.
ஆனால் ஒருவேளை சுனாமி வருவது உறுதியாகத் தெரிந்தால் அந்த நாளில் நாம் கடற்கரையில் வலைப்பதிவாளர் சந்திப்பை வைத்துக்கொள்வோம். அப்போதும் நம்முடைய கவிஞர்கள் சுனாமிக் கவிதைகளை விட்டுவிடுவோமா, என்ன? அப்படி எழுதினால் எப்படித்தான் இருக்கும்?
அய்யனார்
சுனாமியின் இசை
நான் கவிதை எழுதப்போகிறேன்சுனாமியே எட்டிநில்கடலின் குரல் கேட்கிறதா?போடா போடா புண்ணாக்குஒரு கவிஞனின் மடியில்கடல் சுருளும்போடாத தப்புக்கணக்குகாற்றைக் கிழித்து கவிதைகள் உருவாகும்.தொன்மங்களின் ஞாபகத்தில்கானகத்திலிருந்து புலி வரும்பலகிறுக்கு உனக்கு இருக்கு ஒன்றாய்ப் பத்தாய் நூறாய்க்கவிதைகளும் அலைகளும்நம்மைத் தழுவுகின்றன இப்ப என்னாதான் மனக்கணக்கு?
தமிழ்நதி
கடல்கரைந்தது
தீபாகுறிதவறாமல் பலூன்சுடக்கற்றுக்கொள். அது சில அய்ம்பதுரூபாய்களைச் சம்பாதிக்க உதவும்.அம்மாஎன் பால்யத்தின் ஞாபகத்தில் இன்று ஒருமுறை மட்டும் உடைக்கிறேனேமாங்காய் உள்ள இந்த பிளாஸ்டிக் பேப்பரை.
காயத்ரி]நெய்தல்திணை
கடற்கரையில் மொய்க்கும் ஈ உன்னையே ஞாபகப்படுத்துகிறது. உன்னை நினைக்கும்போதெல்லாம்மீன்கவுச்சி அடிக்கிறது.நாளையாவது நீ வருவாயாசுண்டல்வாங்கித்தர.
சுகுணாதிவாகர்
நிவேதனாவிற்குக் குட்நைட்
இப்போதெல்லாம் நிவேதனா இரவுகளில் கூடகுட்நைட் சொல்வதில்லை.ஆனால் அதிசயமாக மதியவெயிலில்கடற்கரையில் இருக்கும்போதுதூங்கப்போகிறேன் குட்நைட் என்கிறாள்.ஆனால் சுனாமி என்னைஅடித்துப்போகிறது. இன்றிரவு எனக்குப் பேட்நைட்நிவேதனாவிற்கோ குட்நைட்.
அப்புறமென்ன, ரோஸ்லீன் இன்று இரவு பார்ட்டிக்கு அழைத்திருந்ததாகச் சொல்லியிருந்தீர்கள். ஆனால் அளவாய்க்குடியுங்கள். உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் சேவை நாசமாய்ப்போன நாட்டிற்குத் தேவைதானே? எனவே குறைவாய்த் தண்ணியடியுங்கள், அதிகமாய்ச் சரக்கடியுங்கள். அப்புறமாய் அரட்டையடிப்போம்.
சுகுணாதிவாகர்.

ஒரு புரட்சிகர திராவிடச் சந்திப்பு

எச்சரிக்கை : இது செந்தழல் ரவிக்கு நேற்று இரவு வந்த கனவு. அடுத்தவர் அந்தரங்களைப் படிக்கக்கூடாது என்னும் நாகரீகம் உள்ளவர்கள் வேறு பக்கங்களுக்குச் சென்றுவிடலாம்.
( ஒரு காரில் வரவணையான் (எ) செந்தில், லக்கிலுக், பொட்டிக்கடை சத்யா ஆகியோர் டீக்கடை முன் இறங்குகிறார்கள்)
லக்கி : என்ன வரவணை, அசுரனைச் சந்திக்கப்போலாம்னு சொல்லிட்டு பெரியார்திடல் போகாமல் டீக்கடைக்கு வந்திருக்கீங்க?
வரவணை : ஓ, நீங்க ஆசியர் அய்யாவைச் சொல்றீங்களா? இப்ப நாம உண்மையான அசுரனைச் சந்திக்கப்போகிறோம்.
லக்கி : உண்மையான அசுரனா? அப்ப ஆசிரியர் போலியா?
வரவணை : எப்பய்யா நீ இந்த போலிப் பஞ்சாயத்திலிருந்து வரப்போறே? உன்னோட தாவு தீருது.
லக்கி : இந்த டயலாக்கை நான்தானே சொல்லணும்.
வரவணை : சரி, நீயே சொல்லித்தொலை. இப்ப நாம பதிவர் ம.க.இ.க அசுரனைச் சந்திக்கப்போகிறோம்.
(டீக்கடை வாசலில் அசுரன் அனைவரையும் செவ்வணக்கம் தெரிவித்து வரவேற்கிறார். டீக்கடைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக...)
லக்கி : தோழர், புரட்சி எப்ப வரும்?
அசுரன் : எப்ப வரும், எப்படி வரும்ன்னெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்திற்குக் கண்டிப்பா வரும்.
வரவணை : ஏன் நீங்க மட்டும் தனியாக வந்திருக்கீங்க? தோழர்கள் பாவெல், தியாகு இவங்கல்லாம் வரலையா?
அசுரன் : சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் வரும்.
வரவணை : அப்ப கூட்டமா வந்திருக்கிற எங்களைப் பன்னிங்கிறீங்களா? (டென்சனாகிறார்)
லக்கி : வரவணை, கூல். போனவாரம்தான் தோழர் அசுரன் 'நான் சிகப்பு மனிதன்' படம் பார்த்திருக்கிறார். அதனால் ரஜினி மேல கொஞ்சம் கிரேசா இருக்கிறார். இது ஒரு பிரச்சினையா, நீங்க சொல்லுங்க தோழர், புரட்சி எப்ப வரும்?
அசுரன் : வரும், வரும், இன்னும் கொஞ்ச சேரத்தில டீ வரும் அதை முதல்ல சாப்பிடுவோம்.
(டீ வருகிறது. டீ சாப்பிடும்போதே...)
லக்கி : தோழர், தமிழ்நாட்டிற்கு எப்ப புரட்சி வரும்?
அசுரன் : ஓ நீங்க தமிழ்த்தேசியப்புரட்சியைக் கேக்கிறீங்களா?.....................................................
லக்கி : தாவுதீருது, டவுசர் கிழியுது. ஒண்ணும் விளங்கலை. சரி, இந்தியா, தமிழ்நாடெல்லாம் பெரிய விஷயம்.. மடிப்பாக்கம் மூன்றாவது குறுக்குத்தெருவுக்கு புரட்சி எப்ப வரும்?
அசுரன் : (குழப்பத்துடன்) அங்க என்ன இருக்குது?
லக்கி : எங்க வீடு.
அசுரன் : (கோபத்துடன்) இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையா? புரட்சி என்ன கேஸ்கனெக்சனா, கேபிள் கனெக்சனா, உங்கவீட்டுக்கு வர? விட்டா எங்க கிச்சனுக்கு எப்ப புரட்சி வரும்ன்னு கேப்பீங்க போல...
லக்கி : சும்மா மழுப்பாதீங்க தோழர், உலகத்துல முதன்முதல்ல கோவை சாய்பாபா காலனியில்தான் புரட்சி வரும்ன்னு மார்க்சே எழுதிருக்கிறாராம்ல. நம்ம ஓசை செல்லா நேற்றுத்தான் 'நக்சல்களுக்கு நச்சுன்னு அஞ்சு கேள்விகள்ன்னு பதிவு போட்டிருந்தாரே?
அசுரன் : சாய்பாபா காலனியில புரட்சியா? (குழம்பிப்போகிறார்). மார்க்ஸ் எழுதியிருக்கிறாரா, எந்த மார்க்ஸ், அ.மார்க்சா?
வரவணை : அவர் சாய்பாபா காலனின்னு எழுதமாட்டாரே, காந்திபுரத்திலதானே புரட்சிவரும்ன்னு எழுதுவார்?
அசுரன் : சரியாச் சொன்னீங்க தோழர். நம்ம தோழர் பாவெல்கூட பதிவு போட்டிருந்தாரே, அவர் அ.மார்க்ஸ் அல்ல, அ.காந்தின்னு.
வரவணை : வந்ததிலேயிருந்து ரொம்ப சீரியசா பேசிட்டோம். சரக்கடிப்போமா தோழர், உங்களுக்கு வோட்கா ஓகேவா? காசு பத்தலைன்னா கவலைப்படவேண்டாம், ஓகை நடராஜனுக்குப் போன்பண்ணினா வந்திருவாரு.
அசுரன் : தோழர், நான் குடிப்பதில்லை, மக்களை நேசிப்பவன் தனிப்பட்ட போதைகளில் மூழ்கிக்கிடக்கலாமா? நாம் குடித்துவிட்டு மக்களிடம் போகமுடியுமா தோழர், மகிழ்ச்சி என்பது போராட்டம், போதையில்லை.லக்கி : அப்ப புரட்சி வந்தா டாஸ்மார்க்கெல்லாம் மூடிடுவீங்களா தோழர்?
வரவணை : இந்தாள் டார்ச்சர் தாங்கமுடியலையே!
அசுரன் : இந்த மாதிரிக் குடித்துக் கூத்தடிப்பதற்குத்தான் உங்கள் பின்நவீனத்துவ நாதாறி நண்பர் வெளியே மிதக்கும் அய்யா இருக்கிறாரே, அவரைக் கூப்பிட வேண்டியதுதானே!
வரவணை : கூப்பிட்டேனே, காலையிலே 7.30க்குப் போன் பண்ணினா நிவேதனா குட்நைட் சொல்லலைன்னு புலம்புறார். 7.30க்கு எப்படிய்யா குட்நைட் சொல்லுவாங்கன்னு சொன்னாலும் கேக்கமாட்டேங்கிறார். அவர் கொஞ்சகாலமா என்னோடு பேசுவதில்லை தோழர். என்னோடு மட்டுமில்லை, மனுசஜீவராசிகளோடேயே பேசுறதில்லை. தயாள், நிவேதனா, சௌகத்ன்னு அமானுஷ்யங்களோடேயே பேசிக்கிட்டிருக்கிறாரு, கிட்டத்தட்ட ஆவி அமுதா மாதிரி ஆயிட்டார்.
அசுரன் : நானும் கவனித்தேன். பின்நவீனத்துவம் மாதிரியான கழிசடைச் சீரழிவுத்தத்துவம் தனிநபர்வாதத்திற்குத்தான் கொண்டுபோகும். அமைப்பாக்காது. அவர் சமீபமா அரசியல் கவிதையே எழுதலை பார்த்தீங்களா, நேற்று என்னடான்னா குஞ்சம்மா குச்சி ஐஸ் வாங்கித்தரலைன்னு வருத்தப்பட்டுக் கவிதை எழுதிவச்சிருக்காரு. அவர் அய்யனார் மாதிரியான நவீன இலக்கிய வியாதிகளோடு சேர்ந்து 'கலை கலைக்காக'ன்னும் சொன்னாலும் சொல்லுவாரு. (சற்று உரக்க) கலை கலைக்காக அல்ல (அல்ல, அல்ல என்று டீக்கடைச்சுவர்களில் எதிரொலிக்கிறது. டீக்கடைக்காரர் ஜெர்க் ஆகிறார். அசுரனோ இன்னும் உரக்க) கலை மக்களுக்காக.
(அதுவரை பேசாமல் இருந்த பொட்டிக்கடை சத்யா ஆர்வமாக..) கலைன்னா யாரு கலைச்செல்வியா?
( அசுரன் டென்சனாகிறார். ஆனால் அப்போது புதிதாக டீக்கடைக்குள் நுழைந்த கருப்புச்சட்டை போட்ட நபர் அசுரனிடம் கைகுலுக்கிவிட்டு அவர் பக்கத்தில் அமர்கிறார். அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்புகிறது.)
வரவணை : யார் இவர்?
அசுரன் : இவர்தான் ...மாமா.
வரவணை : மாமா,,,வா? தோழர் நீங்கள் உங்கள் புத்தியைக் காட்டிவிட்டீர்களே, ஒரு திராவிடக் குலக்கொழுந்தை அவமானப்படுத்திவிட்டீர்களே, கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.
பொட்டிக்கடை : என்னது இது, கோத்ரேஜ் பூட்டு விளம்பரமா?
வரவணை : இனத்துரோகி, இது நமது ஆசிரியர் அய்யா அடிக்கடி சொல்வது. எனக்குத் தெரியும் தோழர். நீங்கள் சந்தேகத்துக்குரிய பார்ப்பனத்தலைமை... (சொல்லிக்கொண்டிருக்கும்போதே வரவணையின் செல்போன் ஒலிக்கிறது) பார்த்தீங்களா, பார்ப்பனத்தலைமைன்னு சொன்னவுடனே உங்கள் தோழர்கள் போன் பண்ணி மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. (ஆனால் அதற்குள் செல் ஒரு ரிங்கோடு கட்டாகிவிடுகிறது.) மிஸ்ட்கால். இந்த மிஸ்ட்காலுக்குப் போன் பண்ணி நான் மிரட்டலை வாங்கணுமா? இது உங்களுக்கே ஓவராத் தெரியலை?
அசுரன் : இல்லை தோழர் வந்து...
லக்கிலுக் : (ஆவேசமாக) இருந்தாலும் தமிழர்தலைவர் மானமிகு அய்யாவை நீங்க அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. வீரமணி அய்யா நல்லவர்.
அசுரன் : அப்படியா?
லக்கி : தினமலர் ரமேஷ் சார், ரொம்ப நல்லவர்
அசுரன் : அப்ப சங்கராச்சாரியாரும் நல்லவரா? அப்ப யார்தான் கெட்டவர்?
லக்கி : டோண்டுராகவன்
வரவணை : அதை விடுங்க, சந்தேகத்துக்குரிய... (மீண்டும் போன் அடிக்கிறது), வார்த்தையையே முடிக்கலை, போன் பண்ணி மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க பார்த்தீங்களா, (எதிர்முனையில் இருப்பதோ பாலபாரதி)
வரவணை : (மிகவும் பவ்யமாக) வணக்கம் தோழர்.
பாலபாரதி : ஹாஹாஹா, இன்னும் உனக்கு பீதி தெளியலையா? நான்தான் பாலபாரதி பேசறேன்.
வரவணை ((தனக்குள்)இந்தாள் வேறயா...) சொல்லுங்க.
பாலா : புதுசா அரைவிளையாட்டுனு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன். கடைசியா நடந்த ஜாக்பாட் நிகழ்ச்சியில குஷ்பு போட்ட ஜாக்கெட் கலர் என்னான்னு உங்களுக்குக் கேள்வி கேட்டிருக்கேன். நான் கேள்வி கேட்ட அரைமணி நேரத்தில நீங்கள் பதில் பதிவு போடணும். அப்புறம் நீங்க லக்கிலுக்கிட்ட மொக்கையா ஏதாவது கேள்வி கேட்கணும். லக்கிலுக் அசுரன்கிட்ட 'கிழக்குப்பதிப்பகத்தில் எப்பப் புரட்சி வரும்?'ன்னு கேட்பார். அசுரன் நம்ம சுகுணாகிட்ட ஏதாச்சும் கேள்விகேட்பார். அந்தாள் வழக்கம்போல பதில் சொல்லமாட்டான், அப்புறம் விளையாட்டு முடிஞ்சுடும்.
வரவணை : என்னாது அரைமணி நேரத்தில பதிவு போடணுமா? ஏங்க நீங்கதான் கிழக்குப் பதிப்பகத்துல சும்மா இருக்கீங்க, போரடிச்சுதுன்னா எவனுக்காவது போன் பண்ணி மொக்கை போடறீங்க, இல்லன்னா உண்மைத்தமிழன் பேரில அஞ்சு கமெண்ட் போடுறீங்க. அதுவுமில்லாம லேப்டாப் வச்சிருக்கீங்க. இங்க நான் பிரௌசிங் சென்டர்தான் போகணும். போனமாசம் பண்ணின பிரௌசிங்கிற்கே காசெல்லாம் தீர்ந்து இந்தமாசம் வீட்டிலிருந்து கலர்டிவியை வித்துக் காசு அனுப்பியிருக்காங்க.
பாலா : அப்ப என்ன பண்ணலாம்? பேசாம ஒருமணி நேரமா எக்ஸ்டெண்ட் பண்ணிடலாமா? என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்?
வரவணை : ம்..? போனைக் கட்பண்ணலாம். (கட்செய்கிறார்)
அசுரன் : நான்தான் சொன்னேனே எங்கள் தோழர்கள் ராணுவக்கட்டுப்பாடு உள்ளவங்கன்னு.
( இப்போது மீண்டும் வரவணையின் போன் ஒலிக்கிறது)
வரவணை : பார்த்தீங்களா, இப்ப சந்தேகமே இல்லாமல் உங்க தோழர்கள்தான், (ஆனால் எதிர்முனையிலோ முத்துதமிழினி)
முத்துதமிழினி : பிரீயாத்தான் இருக்கேன். எதுவும் பிரச்சினை இருக்கா?
வரவணை : நீங்க எப்ப ரிட்டயர்ட் ஆவீங்க?
முத்து : ஏன்?
வரவணை : இல்ல, தலைவர்கிட்ட சொல்லி விசாரணைக் கமிஷனுக்கு தலைவராப் போடச்சொல்லலாம்னுதான். எப்ப பார்த்தாலும் என்ன பிரச்சினை, என்ன பிரச்சினைன்னு. இப்பதான் மாமா போன் பண்ணி கழுத்தறுத்தார்.
முத்து : நீங்களும் அசுரன் பக்கத்துல இருக்கிறதனால ஆசிரியரை அப்படியே சொல்ல ஆரம்பிச்சீட்டீங்களா? ஆசிரியர் உங்களுக்குப் போன் பண்ணியெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாரா, அவ்வளவு நெருக்கமா, போனமுறை திடலுக்குப் போட்டோ எடுக்கப் போனபோதுதான் என்னைக் கூட்டிட்டுப் போகலை (குரல் தழுதழுக்கிறது)
வரவணை : ஒண்ணும் கவலைப்படாதீங்க. திருப்பிப் பிரச்சினை வரும்போலிருக்கு. கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன். கண்ணைத் துடைச்சுக்கங்க.
முத்து : ஆமா, ஆசிரியர் பிளாக்கெல்லாம் ரெகுலரா படிக்கிறதாச் சொன்னீங்களே?
வரவணை : ஆமாமா, போன வாரம்கூட செந்தழல்ரவி பதிவுக்கு மூணு அனானி கமெண்ட் போட்டிருந்தாரு. ஆனா இப்ப என்கிட்ட போன்ல பேசினது ஆசிரியர் இல்லை. பாலபாரதி மாம்ஸ்.
முத்து : என்ன பாலபாரதி மாமாவா? வரவணை நீங்க கொள்கைக்கு நேர்மையா இல்ல. நீங்கதானே சொன்னீங்க இயக்கத்தில் முக்கியப்பொறுப்பில இருக்கிறவங்களை மாமான்னு சொல்லக்கூடாதுன்னு. அமுக, பாகச மாதிரி இயக்கங்களில முக்கியப்பொறுப்பில இருக்கிற பாலாவை மாமான்னு எப்படிச் சொல்லலாம்? இதை உடனே கண்டிச்சு பதிவு எழுதணுமே, நான் பிளாக்கில எழுதறது கிடையாது. சரி சுகுணாதிவாகர் பாஸ்வேர்ட் தெரியும் எனக்கு. அதிலபோய் 'பிறப்பால் மாமாவா?' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டிடறேன். அப்படியே ம.க.இ.க.காரங்க எல்லோரையும் ஓவராத்திட்டுறாங்க, அவங்க முதல்ல திமுக பாமக் அரசியலைப் பண்ணட்டும்னு சொல்லி எழுதறேன். அசுரனை லக்கிகிட்ட சொல்லி திமுகவிலே சேர்த்துடலாம், பாவெலை குழலிகிட்ட சொல்லி பாமகவில சேர்த்துடலாம். ஆமாம், பிரீயாத்தான் இருக்கேன், பிளாக்கர்மீட்டிங் ஏதாவது இருக்கா?
(அதற்குள் கிராஸ்டாக்கில் கிராஸாகும் பாலபாரதி) இருக்கு இருக்கு 32ந்தேதி மதியம் நடேசன்பார்க்கில.
முத்து : எத்தனை மணிக்கு?
பாலா : 4 மணிக்கு
முத்து : அப்ப 3 மணிக்கே பார்க் வாசல்ல வந்துடறேன்.
(வரவணை கடுப்புடன் போனைக் கட்பண்ணுகிறார். திரும்பிப்பார்த்தால் லக்கிலுக், டீக்கடைக்காரரிடம், 'வீரமணி அய்யா நல்லவர், ரமேஷ் சார் ரொம்ப நல்லவர், ருக்மாங்கதன் அய்யர் நல்லவரா, கெட்டவரா' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார், 'பக்கத்துல தினகரன் ஆபிஸ் எங்க இருக்கு?' என்றும் விசாரிக்கிறார். இவ்வளவு களேபரங்களுக்கும் நடுவில் பொட்டிக்கடை சத்யா மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாரிடமோ சிரித்துச் சிரித்து கடலைபோட்டுக்கொண்டிருக்கிறார்.)
பொட்டிக்கடை : நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க, நேற்று நீங்க போட்டிருந்த கிரீன் டி-ஷர்ட் சூப்பர், உங்க சிரிப்பு எனக்குப் பிடிக்கும், நான் என்ன பண்றேன்னா கேட்டீங்க, இப்ப உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன், ஹாஹாஹா, என்ன இந்த மாதிரி ஜோக்கை நீங்க எங்கேயும் கேட்டதில்லையா? ஹாஹாஹா
வரவணை : (கடுப்புடன்) யோவ், இங்க என்னா பஞ்சாயத்து ஓடிக்கிட்டிருக்கு, நீ என்னடான்னா கடலை போட்டுகிட்டு இருக்கே?
பொட்டி : வரவணை, எனக்கும் பிரச்சினை மேல அக்கறை இருக்கு. பிரச்சினையைத் தீர்க்கத்தான் போன்ல பேசிக்கிட்டிருக்கேன்,
வரவணை : யார்கூட பேசறே?
பொட்டிக்கடை : மாமாகூட ச்சே, மகாலெட்சுமிகூட
வரவணை : எந்த மகாலெட்சுமி?
பொட்டி : சன்மியூசிக் மகாலெட்சுமி.
வரவணை : அவங்ககிட்ட என்ன பேசறே?
பொட்டி : இங்க ஒரே பிரச்சினையா இருக்கு, எல்லாரையும் கூல் பண்ண 'அழகிய அசுரா' பாட்டு பாடச்சொல்லிக் கேட்கறேன், (போனில்) என்னாது, பழைய பாட்டுதான் போடுவீங்களா, அப்ப அந்த 'மாமா, மாமா' பாட்டைப் போட்டுடுங்க.
அசுரன் (தாங்கமுடியாமல்) தோழர்............ (என்று அலறுகிறார்). ஒருநிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க. இவர் உண்மையிலேயே எனக்கு மாமாதான். எங்க அக்காவீட்டுக்காரர். பேரு திராவிடமாமன், ச்சே, திராவிடமாறன். தஞ்சாவூர்ல திகவில கோட்டச்செயலாளரா இருக்காரு.
வரவணை : இதை நீங்க முதல்லேயே சொல்லியிருக்கலாமே தோழர்.
அசுரன் : நீங்க எங்க சொல்லவிட்டீங்க? பீஸ்கட்டணும், கலெக்ஷன் காசு என்னாச்சுன்னு கௌதம் போன்பண்ணினாக்கூட 'ம.க.'இ..ககாரங்க போன்பண்ணி மிரட்டுறாங்க'ன்னு பீதியைக் கிளப்புனீங்க. பொதுவாக நக்சலைட்டுகளிடம் அரசாங்கம் ஆயுதங்களைத்தான் ஒப்படைக்கச்சொல்லும். ஆனா, எங்களைச் செல்போன், லேண்ட்லைன் இதெல்லாம் ஒப்படைக்கச் சொல்லி அரசு உத்தரவு போடப்போறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு.
வரவணை: சாரி தோழர், மன்னிச்சுக்கங்க தோழர்.
லக்கி : என்னையும் மன்னிச்சுக்கங்க தோழர், ஆமா நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவேயில்லையே, மடிப்பாக்கம் மூன்றாவது குறுக்குத்தெருவுக்கு புரட்சி எப்ப வரும்?
அசுரன் : (கடுப்புடன்) அங்க ஒரு எதிர்ப்புரட்சிகரச்சக்தி ஒண்ணு இருக்கு. அதைப் போட்டுத்தள்ளிட்டா புரட்சி வந்துடும்.
( இப்போது லக்கிலுக்கின் முகத்தில் பயரேகை)
-------------------------------------------------------------------
செந்தழல் ரவி வியர்த்து, விறுவிறுத்து கனவுகலைந்து எழுகிறார், 'ச்சே, தூங்குறதுக்கு முன்னாடி இந்த வீணாப்போன சுகுணாதிவாகர் கவிதையைப் படிக்காமல் தூங்கணும். ஒண்ணு கனவுல யாராவது கெட்டவார்த்தை சொல்லித்திட்டுறாங்க, இல்லன்னா யாராவது யாரையாவது கொலை செய்யப்போறேன்னு மிரட்டுறாங்க" என்றபடியே பாட்டிலிலிருந்து தண்ணீரை மடக் மடக்கென்று குடிக்கிறார். 'தூக்கத்துலகூட இந்தப் பன்னாடைங்க நம்மளை விடமாட்டேங்கிறாங்களே' என்று புலம்பியவர், படுத்ததும் கண்களை மூடித்தன் அருகிலிருந்த ரிமோட்டை எடுத்து பட்டனை அழுத்துகிறார்.
கனவு மாறுகிறது.. ரவியின் முகத்தில் இனம் தெரியாத பரவசம்.
இப்போது கனவில் ரவி வெள்ளை விக் வைத்து ஆளே பயங்கர சிகப்பாக மாறிவிட பக்கத்தில் கொரியபிகர் தன் உதடுகளைக் குவிக்கிறது. ரவி ஆட ஆரம்பிக்கிறார்,
"ஒருகூடை சன்லைட்...ஒருகூடை மூன்லைட்...'

அன்பு நண்பர்களுக்கு....
கடந்த இரண்டரை வருடங்களாக 'மிதக்கும்வெளி' என்னும் வலைப்பக்கத்தின் வழியாக உங்களோடு உரையாடிவந்தேன். ஆனால் சமீபகாலமாக அப்பக்கத்தில் பதிவு எதையும் பதிவிட முடியவில்லை. பிளாக்கர்.கொம் என்னுடைய பிளாக்கை 'ஸ்பாம் பிளாக்' என்று அடையாளம் கண்டிருப்பதால் பின்னூட்டங்களை வெளியிட முடிகிறதேயல்லாது பதிவிட முடியவில்லை. இதன் பின்னணியிலிருப்பது பார்ப்பனச்சதியா, ஏகாதிபத்தியச்சதியா, பில்லிசூனியமா என்று தெரியவில்லை ((-. எனவே கீழ்க்கண்ட மூன்று வலைப்பக்கங்களின் வழியாக உங்களைச் சந்திக்கலாமென்றிருக்கிறேன்.
உரையாடுவோம்.


பிரியங்களுடன்...சுகுணாதிவாகர்.