Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன் - கனவின் மீதேறிப் பறக்கும் மாயக்கம்பளமும் போர்கள் மீதான விசாரணையும்


தமிழ்த்திரைப்பரப்பில் பேசப்படாத பல வெளிகளைத் திறந்துவைத்த பெருமை செல்வராகவன் படங்களுக்கு உண்டு. ‘துள்ளுவதோ இளமை’ விடலைத்தனத்தின் கொண்டாட்டங்களையும் மீறல்களையும் பதிவு செய்தது எனில், திருமணத்திற்கு முன்னான பாலியல் குறித்த குஷ்புவின் கருத்துகளுக்கெதிராய் தமிழ்க்கலாச்சார ஒழுங்கமைப்பாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தமிழ்வெளியில் மிக எளிதாக அதையே காட்சிப்படுத்தி சுலபத்தில் கடந்து மக்கள் ஏற்பையும் பெற்றது ‘7ஜி ரெயின்போகாலனி’. காதல்கொண்டேனும் புதுப்பேட்டையும் தமிழ்ச்சினிமாவின் உச்சங்கள். குழந்தைத்தொழிலாளர்கள் மீதான பாலியல்வன்முறை, ஒரு அனாதைச்சிறுவனின் சமூக இருப்பு மற்றும் அடையாளச்சிக்கல் குறித்த பதட்டத்தையும் வன்முறை மனத்தையும் பதிவுசெய்த காதல்கொண்டேன் தமிழின் சிறந்த படங்களில் ஒன்று எனலாம். புதுப்பேட்டை லும்பன் அரசியலின் வேர்களையும் அது எவ்வாறு வெகுமக்கள் விரோத - ரவுடி அரசியலாய் மாறி விடுகிறது என்பதையும் பகிடிவிமர்சனமாகச் சொன்னது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ செல்வாவின் நான்காவது படம்.

செல்வராகவன் படத்தின் கதைநாயகன்கள் எப்போதும் ஓரநிலைத்தொகுதி சார்ந்தவர்கள், பாலியல் குறித்த விழைவை வெளிப்படையாக வெளிப்படுத்துபவர்கள். கதைநாயகிகள் வழமையான தமிழ்ப்பெண்மையிச்ன் அடிப்படைகளாய்க் கட்டப்பட்ட அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இன்னபிற குணாம்சங்களைக் கடந்தவர்கள். நாயகன் உள்ளிட்ட ஆண்களின் பாலியல் விழைவுகளையும் முயற்சிகளையும் மீறல்களையும் அனாயசமாகக் கடந்து செல்பவர்கள், அல்லது சுயவிருப்பத்துடனே ஏற்பவர்கள். மீனவர் மகன், அனாதை இளைஞன், அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அடித்தட்டு சாதியைச் சேர்ந்த வாழ்வியல் நோக்கமற்ற விட்டேற்றி இளைஞன், ரவுடியாய் மாற்றப்படுகிற குப்பத்து இளைஞன் என்னும் வரிசையில் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தியும் சென்னை சேரியைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி. நாயகிகள் அனாயசமான துணிச்சல் கொண்டவர்கள், பாலியலை உள்ளிருந்து ஏற்றும் வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களுமானவர்கள். ஆனால் கலாச்சாரத்தளங்களிலான மீறல்கள், அதிர்வுகள், மறைபாதைகளிலூடான பயணங்கள் என தமது முந்தைய சினிமா பேசிய தளங்களிலிருந்து வேறுபட்டு, ஆனால் அதேநேரத்தில் அதன் சில அடையாள மிச்சங்களோடு கதைப்பரப்பில் பயணிக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்’.

முதலில் இரண்டு அம்சங்களிலிருந்து விடுபட விரும்புகிறேன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ கடந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான புதிர்வட்டப்பாதைகளினூடாய்ப் பயணிக்கிற ஒரு மாயப்புனைவு என்பதால் தர்க்கம் சார்ந்த கேள்விகளை முற்றிலுமாய்த் தவிர்க்கிறேன். இல்லையேல் ஒரே ஒரு கேள்வியால் படத்தை மொத்தமாய்க் காலி பண்ணி விடலாம். புதைகுழிகளையும் சர்ப்பங்களையும் பசியையும் தாகத்தையும் மனப்பிறழ்வையும் உண்டுபண்ணுகிற சோழர்களால் ஏன் வளமையையும் ஆட்சி அதிகாரத்தையும் அல்லது புதிதாய் ஒரு தேசநிலப்பரப்பையும் உண்டுபண்ண முடியவில்லை என்பதே அது. இன்னும் கவித்துவமாகக் கேட்பதென்றால் சோழர்கள் தம்மைப் பின்தொடர்பவர்களுக்கும் பகைவர்களுக்கும் எதிராக உண்டாக்கிய ஏழு தடைகளுள் ஒன்று பசி, அப்படியாயின் சோழர்களுக்குப் பசியை உண்டுசெய்தது யார்? எனவே தர்க்கங்களுக்குள் நுழைய விரும்பவில்லை.

இரண்டாவதாக, இதை ஒரு ஈழ ஆதரவுப்பிரதியாகப் பார்ப்பது. புலிக்கொடி, ஈழத்தமிழொத்த சோழர்தமிழ், இறுதிப்போர், இந்திய ராணுவ அமைதிப்படையின் வன்புணர்வுமீறல்கள் என பல காட்சிகள் ஈழத்து நிகழ்வுகளை ஒத்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் பார்த்திபனைப் பிரபாகரனாகவும் ரீமாசென்னை சோனியாவாகவும் அப்படியே பொருத்திப்பார்த்து அதனூடாக விவாதங்களைக் கட்டியமைப்பது என்பது என்னளவில் உடன்பாடில்லை. அப்படியானால் கார்த்தி யார், எம்.ஜி.ஆரா? ஆம் என்றால் இனி ஈழத்தமிழர்களை மீட்கும் தூதுவனாய் எம்.ஜி.ஆர்தான் உயிர்ப்பிக்க வேணும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோழவம்சத்தைத் தேடிச்செல்லும் பாதையில் சோழர்கள் உண்டாக்கும் ஏழுதடைகள் என்பன செவிவழி பாட்டிக்கதைகளில் பயன்படும் ஏழுமலை, ஏழுகடல் புனைவம்சங்களை ஒத்திருக்கின்றன. அவை வெவ்வேறு வகையான குறியீடுகளாய் விரியவும் செய்கின்றன. கடல், காட்டுவாசிகள், காவல்வீரர்கள், புதைகுழி, சர்ப்பம், பசி/தாகம், மனப்பித்து என்பவை நவீனவாழ்க்கை மனிதசமுதாயத்தில் ஏற்படுத்தும் பல்வேறு சிக்கல்களையும் அழிவுகளையும் பதிலீடு செய்கிறது என்பதாகப் புரிந்துகொள்கிறேன். கடல், காடு, ஆதிவாசிகள் ஆகியவை இன்றைய மறுகாலனியாதிக்க மூலதனப்பசியால் முற்றிலுமாகச் சுரண்டப்பட்டிருப்பது, உலகமெங்கும் வியாபிக்கும் பொருளாதார நெருக்கடிகள் விளைவிக்கும் பட்டினிச்சாவுகள், நீர்க்கொள்ளை, சர்ப்பமாய்ச் சுற்றிவளைக்கும் பாலியல்பிரச்சினைகள், அறமற்ற நுகர்வுக்கலாச்சாரம் உற்பத்தி செய்து பரவ விட்டிருக்கும் மனச்சிதைவு என இவ்வாறாக ஏழுதடைகளைப் புரிந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.

ஆதிவாசிகளை வன்முறை நிறுவனங்களான ராணுவமும் பொலீசும் அரசு அதிகார இயந்திரவுறுப்புகளும் எவ்வாறு கையாளும் என்பதை செல்வா சரியாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆதிவாசிகளை கொன்றொழித்த அடுத்தகணமே அதன் வன்முறை ரீமா மற்றும் அழகம்பெருமாள் வழியாக உதிரிப்பாட்டாளியான கார்த்தியின் மீது பாய்வதை அவதானிக்கலாம். இவ்வாறாக முதல்பாதியின் மாயப்பாதை ஒருசில அரசியல் அர்த்தங்களை உண்டுபண்ணுகிறது. ஆனால் பாலைவனத்தின் மீது படரும் கூத்தாடும் நடராசர் சிலை நிழல்தான் பெரும் உறுத்தல். பிரபஞ்சம் நடராசர் நடனத்தையொத்ததாயிருக்கிறது என்று சொல்லும் பழமைவாதிகளின் குரலுக்கு வலுசேர்க்கிறது அக்காட்சி.

இரண்டாவது பாதி, சோழர்-பாண்டிய வம்சங்களுக்கு இடையிலான பகைமை மற்றும் போர்வெறி குறித்தது. பொதுவாக இந்த படத்தைப் புரிந்துகொண்டவர்கள் பார்த்திபன் தலைமையிலான சோழவம்சத்தை உடன்பாட்டுரீதியாகவும் ரீமாசென் மற்றும் எஞ்சிய பாண்டியர் எட்டுபேரை எதிர்மறையாகவுமே அணுகுகின்றனர். ஆனால் தொன்மப்பெருமிதங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட, தாயகக் கனவோடு வன்முறையைப் பொதிந்து வைத்திருக்கிற, நடப்பு மெய்ம்மை குறித்த எவ்விதப் புரிதலும் சமரசமும் அற்ற சோழர் வம்சத்திற்கும் வன்மம் கொண்ட பாண்டிய வம்சத்திற்கும் பெரிதாய் வித்தியாசங்கள் இல்லை என்றே கருதுகிறேன்.

பசியாலும் தாகத்தாலும் உழன்று சிதைந்த தம் குடிமக்கள் இத்தணூண்டு இறைச்சிக்கும் சில எலும்புகளுக்குமாய்ப் பாயும்போது தடுத்து தாக்குகிற சோழப்பேரரசன் அம்மக்களுக்கான பொற்காலத்தை உண்டுபண்ணுகிற லட்சியக்கனவோடும் இருக்கிறார். எத்தனை வறுமையில் இருந்தபோதும் எலும்பும் தோலுமாய் வற்றிப்போன மக்களைப் பொருதவிட்டு ரத்தவேடிக்கை பார்ப்பதில் மகிழவே செய்கிறார் சோழமன்னன். சாம்ராஜ்யங்கள் இடிந்து விழுந்த பின்னும் பெண்களை ஏவலாட்களாய் பணிப்பெண்களாய் மட்டுமே பயன்படுத்துகிறார். அயல்நாட்டுப் பெண் தன்னோடு ‘கூட விரும்புவதே’ (அதுவும்கூட தவறான புரிதலோடு) அவளுக்கான வரம்போலவும் பேறு போலவும் பாவிக்கிறார். ஆக அதிகாரத்தின் மீதான பெருவிருப்பமும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் மட்டுமே கொண்ட அந்த ‘தாயகம் மீளும் கனவிற்கு‘ச் சிறப்புகளோ நியாயப்பாடுகளோ இல்லை. சோறற்று நீரற்று வாழ்ந்தாலும் போரற்று வாழ விரும்பா வன்முறை மனோபாவமே அது.

அந்த மனோபாவத்தின் உச்சம்தான் அந்த ரத்தப்பந்து காட்சி. களத்தில் இருத்தப்பட்ட எல்லோரையும் பழி வாங்கி மீண்டும் மீண்டும் ரத்தம் வேண்டும் வேட்கையோடு வருகிறது அந்த பந்து. ரத்தமும் பிணமும் சுவைத்தபின்னும் பசிதணியாத அந்த பந்து என்பது யுத்தமும் அதிகாரமும்தான். எல்லாம் முடிந்தபின் எஞ்சியிருக்கும் கார்த்தியை எலும்பும் தோலுமாய் இருக்கும் அந்த சிறுவன் அடித்துச் சொல்கிறான், ‘‘போ, போய்ச் சண்டை போடு’’. இது அந்த ரத்தப்பந்தை விட வன்முறையான வார்த்தைகள்.

திரைப்படத்தில் மூன்றுவிதமான ராணுவமும் மூன்றுவிதமான வன்முறைகளும் தொழிற்படுகின்றன. பழியும் வன்மமும் கொண்ட பாண்டிய வன்முறை, பசியையும் தாகத்தையும் புறக்கணித்து அதிகாரத்தின்பாற் பற்று கொண்ட சோழ வன்முறை, நிறுவனமயமாக்கப்பட்ட இந்திய ராணுவ வல்லாதிக்க வன்முறை. இந்த மூன்று வன்முறைகளினூடாகத்தான் எண்ணூற்று சொச்சம் பேரின் வாழ்வும் அழிவும். இப்படியாக இந்த பிரதியை நான் புரிந்துகொள்வதில் பலருக்கும் கருத்துமாறுபாடிருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியங்கள் பிரதியில் உள்ளன என்றே கருதுகிறேன். இனி ஆயிரத்தில் ஒருவனின் பிரச்சினைகளுக்கு வருவோம்.

முதலாவதாக பிரதியின் அடிப்படைப் பலவீனமே சோழப்பேரரசு, பாண்டிய வம்சம் என்னும் அடையாளப்படுத்தல். இதுவே படத்தின் மீதான இப்போதைய சர்ச்சைகளுக்கும் அர்த்தப்படுத்துவதற்கான சாத்தியங்களின் வெளியைக் குறுக்குவதற்குமான காரணமாயுள்ளது. சோழப்பேரரசு என்பது நிறுவனமயமான பேரரசு. ஆனால் படத்தில் காட்டப்படுவதோ இனக்குழு வாழ்க்கை. வேலன் வந்து வெறியாடுதல் முதலான சங்ககாலத்திய சடங்குகள், தாய்த்தெய்வ வழிபாடுகள் என புலிக்கொடி தவிர்த்த மற்றவை அனைத்தும் சோழர்காலத்திற்குத் தொடர்பற்றவையாய் உள்ளன.

குறிப்பாக சோழர்கள் தமிழ் என படம் சொல்லும் தமிழ். இது பெரும்பாலும் ஈழத்தமிழை ஒத்திருக்கிறது என்பது உண்மைதான். (ஒருவேளை சேரப்பேரரசு இப்படியான ஈழத்தமிழ் பேசினால்கூட பரவாயில்லை, மலையாளத்திற்கும் ஈழத்தமிழுக்குமான ஒற்றுமைகள் பல உள்ளன. ))- ) சோழர்காலக் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தமிழை வடிவமைத்ததாக செல்வா கூறியிருக்கிறார். முதலாவதாக கல்வெட்டுகளில் உள்ள தமிழ் பெரும்பாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழ். படத்தில் பேசப்படும் தமிழோ தரப்படுத்தப்பட்ட தமிழாயுள்ளது. இரண்டாவதாக அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்படும் மொழிதான் மக்கள்மொழியாக இருக்கும் என்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. உதாரணமாக கல்வெட்டுகளைப் போல நாம் தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பதிவுப்பத்திரங்களை எடுத்துக்கொள்ளலாம். சுயாதீனமாக, பிதிரார்ஜுதம், கிழமேல் போன்ற பத்திரங்களில் பயன்படுத்தப்படும் தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? துறைசார்ந்த மொழி என்பதும் மக்கள்மொழி என்பதும் எப்போதுமே வெவ்வேறாகவே உள்ளன. மேலும் ஒரு மக்கள் குழுமம் முழுவதும் ஒரே மாதிரியான மொழியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே சோழப்பேரரசு என்று படத்தில் கட்டமைக்கப்படும் அடிப்படைகளே பலவீனமாக உள்ளன.

மேலும் முதலில் சோழப்பேரரசு, பாண்டிய வம்சம் என்னும் கதைசொல்லலே இந்த பிரதிக்கு அவசியம்தானா என்னும் கேள்வி எழுகிறது. ஏன் வரலாற்று அடையாளங்களற்ற ஒரு ‘அ’ அரசுக்கும் ‘ஆ’ வம்சத்திற்கும் இடையிலான பிரச்சினைகளாக இது இருக்கக்கூடாது? மேலும் நான் முன்பு சொன்னதைப் போல போர்வெறி குறித்தும் அதிகாரவிருப்பம் குறித்தும் இந்த பிரதி பேசுகிறது என்றால் இறுதியில் மீண்டும் அது அதிகாரத்திற்குத்தானே இட்டுச் செல்கிறது? ‘சோழன் பயணம் தொடரும்’ என்றால் அது மீண்டும் வறுமையிலும் பசியிலும் மக்களை இருத்தி தாயகக் கனவிற்கான களங்களை அமைக்குமா? அந்த வன்முறையை விட என்ன மாதிரியான அடிமைத்தனத்தைத் தாயகமற்ற தன்மையில் அம்மக்கள் அனுபவித்துவிடப் போகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் பிரதியை நோக்கி இருந்தாலும் செல்வராகவன் உள்ளிட்ட கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தகுந்ததே. சோழராசா ஆடும் தொன்ம நடனமும் உதிரிப்பாட்டாளியான கார்த்தி ஆடும் லோக்கல் டப்பாங்குத்துவும் ஒரு புள்ளியில் ஒத்திசைவது, ரீமாசென்னின் அபாரமான நடிப்பு, ‘ஓ ஈசா’ பாடலின் மாயக்குறியீடுகள் என பல அம்சங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழின் முக்கியமான படம்தான்.