Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன் - கனவின் மீதேறிப் பறக்கும் மாயக்கம்பளமும் போர்கள் மீதான விசாரணையும்


தமிழ்த்திரைப்பரப்பில் பேசப்படாத பல வெளிகளைத் திறந்துவைத்த பெருமை செல்வராகவன் படங்களுக்கு உண்டு. ‘துள்ளுவதோ இளமை’ விடலைத்தனத்தின் கொண்டாட்டங்களையும் மீறல்களையும் பதிவு செய்தது எனில், திருமணத்திற்கு முன்னான பாலியல் குறித்த குஷ்புவின் கருத்துகளுக்கெதிராய் தமிழ்க்கலாச்சார ஒழுங்கமைப்பாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தமிழ்வெளியில் மிக எளிதாக அதையே காட்சிப்படுத்தி சுலபத்தில் கடந்து மக்கள் ஏற்பையும் பெற்றது ‘7ஜி ரெயின்போகாலனி’. காதல்கொண்டேனும் புதுப்பேட்டையும் தமிழ்ச்சினிமாவின் உச்சங்கள். குழந்தைத்தொழிலாளர்கள் மீதான பாலியல்வன்முறை, ஒரு அனாதைச்சிறுவனின் சமூக இருப்பு மற்றும் அடையாளச்சிக்கல் குறித்த பதட்டத்தையும் வன்முறை மனத்தையும் பதிவுசெய்த காதல்கொண்டேன் தமிழின் சிறந்த படங்களில் ஒன்று எனலாம். புதுப்பேட்டை லும்பன் அரசியலின் வேர்களையும் அது எவ்வாறு வெகுமக்கள் விரோத - ரவுடி அரசியலாய் மாறி விடுகிறது என்பதையும் பகிடிவிமர்சனமாகச் சொன்னது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ செல்வாவின் நான்காவது படம்.

செல்வராகவன் படத்தின் கதைநாயகன்கள் எப்போதும் ஓரநிலைத்தொகுதி சார்ந்தவர்கள், பாலியல் குறித்த விழைவை வெளிப்படையாக வெளிப்படுத்துபவர்கள். கதைநாயகிகள் வழமையான தமிழ்ப்பெண்மையிச்ன் அடிப்படைகளாய்க் கட்டப்பட்ட அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இன்னபிற குணாம்சங்களைக் கடந்தவர்கள். நாயகன் உள்ளிட்ட ஆண்களின் பாலியல் விழைவுகளையும் முயற்சிகளையும் மீறல்களையும் அனாயசமாகக் கடந்து செல்பவர்கள், அல்லது சுயவிருப்பத்துடனே ஏற்பவர்கள். மீனவர் மகன், அனாதை இளைஞன், அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அடித்தட்டு சாதியைச் சேர்ந்த வாழ்வியல் நோக்கமற்ற விட்டேற்றி இளைஞன், ரவுடியாய் மாற்றப்படுகிற குப்பத்து இளைஞன் என்னும் வரிசையில் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தியும் சென்னை சேரியைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி. நாயகிகள் அனாயசமான துணிச்சல் கொண்டவர்கள், பாலியலை உள்ளிருந்து ஏற்றும் வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களுமானவர்கள். ஆனால் கலாச்சாரத்தளங்களிலான மீறல்கள், அதிர்வுகள், மறைபாதைகளிலூடான பயணங்கள் என தமது முந்தைய சினிமா பேசிய தளங்களிலிருந்து வேறுபட்டு, ஆனால் அதேநேரத்தில் அதன் சில அடையாள மிச்சங்களோடு கதைப்பரப்பில் பயணிக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்’.

முதலில் இரண்டு அம்சங்களிலிருந்து விடுபட விரும்புகிறேன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ கடந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான புதிர்வட்டப்பாதைகளினூடாய்ப் பயணிக்கிற ஒரு மாயப்புனைவு என்பதால் தர்க்கம் சார்ந்த கேள்விகளை முற்றிலுமாய்த் தவிர்க்கிறேன். இல்லையேல் ஒரே ஒரு கேள்வியால் படத்தை மொத்தமாய்க் காலி பண்ணி விடலாம். புதைகுழிகளையும் சர்ப்பங்களையும் பசியையும் தாகத்தையும் மனப்பிறழ்வையும் உண்டுபண்ணுகிற சோழர்களால் ஏன் வளமையையும் ஆட்சி அதிகாரத்தையும் அல்லது புதிதாய் ஒரு தேசநிலப்பரப்பையும் உண்டுபண்ண முடியவில்லை என்பதே அது. இன்னும் கவித்துவமாகக் கேட்பதென்றால் சோழர்கள் தம்மைப் பின்தொடர்பவர்களுக்கும் பகைவர்களுக்கும் எதிராக உண்டாக்கிய ஏழு தடைகளுள் ஒன்று பசி, அப்படியாயின் சோழர்களுக்குப் பசியை உண்டுசெய்தது யார்? எனவே தர்க்கங்களுக்குள் நுழைய விரும்பவில்லை.

இரண்டாவதாக, இதை ஒரு ஈழ ஆதரவுப்பிரதியாகப் பார்ப்பது. புலிக்கொடி, ஈழத்தமிழொத்த சோழர்தமிழ், இறுதிப்போர், இந்திய ராணுவ அமைதிப்படையின் வன்புணர்வுமீறல்கள் என பல காட்சிகள் ஈழத்து நிகழ்வுகளை ஒத்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் பார்த்திபனைப் பிரபாகரனாகவும் ரீமாசென்னை சோனியாவாகவும் அப்படியே பொருத்திப்பார்த்து அதனூடாக விவாதங்களைக் கட்டியமைப்பது என்பது என்னளவில் உடன்பாடில்லை. அப்படியானால் கார்த்தி யார், எம்.ஜி.ஆரா? ஆம் என்றால் இனி ஈழத்தமிழர்களை மீட்கும் தூதுவனாய் எம்.ஜி.ஆர்தான் உயிர்ப்பிக்க வேணும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோழவம்சத்தைத் தேடிச்செல்லும் பாதையில் சோழர்கள் உண்டாக்கும் ஏழுதடைகள் என்பன செவிவழி பாட்டிக்கதைகளில் பயன்படும் ஏழுமலை, ஏழுகடல் புனைவம்சங்களை ஒத்திருக்கின்றன. அவை வெவ்வேறு வகையான குறியீடுகளாய் விரியவும் செய்கின்றன. கடல், காட்டுவாசிகள், காவல்வீரர்கள், புதைகுழி, சர்ப்பம், பசி/தாகம், மனப்பித்து என்பவை நவீனவாழ்க்கை மனிதசமுதாயத்தில் ஏற்படுத்தும் பல்வேறு சிக்கல்களையும் அழிவுகளையும் பதிலீடு செய்கிறது என்பதாகப் புரிந்துகொள்கிறேன். கடல், காடு, ஆதிவாசிகள் ஆகியவை இன்றைய மறுகாலனியாதிக்க மூலதனப்பசியால் முற்றிலுமாகச் சுரண்டப்பட்டிருப்பது, உலகமெங்கும் வியாபிக்கும் பொருளாதார நெருக்கடிகள் விளைவிக்கும் பட்டினிச்சாவுகள், நீர்க்கொள்ளை, சர்ப்பமாய்ச் சுற்றிவளைக்கும் பாலியல்பிரச்சினைகள், அறமற்ற நுகர்வுக்கலாச்சாரம் உற்பத்தி செய்து பரவ விட்டிருக்கும் மனச்சிதைவு என இவ்வாறாக ஏழுதடைகளைப் புரிந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.

ஆதிவாசிகளை வன்முறை நிறுவனங்களான ராணுவமும் பொலீசும் அரசு அதிகார இயந்திரவுறுப்புகளும் எவ்வாறு கையாளும் என்பதை செல்வா சரியாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆதிவாசிகளை கொன்றொழித்த அடுத்தகணமே அதன் வன்முறை ரீமா மற்றும் அழகம்பெருமாள் வழியாக உதிரிப்பாட்டாளியான கார்த்தியின் மீது பாய்வதை அவதானிக்கலாம். இவ்வாறாக முதல்பாதியின் மாயப்பாதை ஒருசில அரசியல் அர்த்தங்களை உண்டுபண்ணுகிறது. ஆனால் பாலைவனத்தின் மீது படரும் கூத்தாடும் நடராசர் சிலை நிழல்தான் பெரும் உறுத்தல். பிரபஞ்சம் நடராசர் நடனத்தையொத்ததாயிருக்கிறது என்று சொல்லும் பழமைவாதிகளின் குரலுக்கு வலுசேர்க்கிறது அக்காட்சி.

இரண்டாவது பாதி, சோழர்-பாண்டிய வம்சங்களுக்கு இடையிலான பகைமை மற்றும் போர்வெறி குறித்தது. பொதுவாக இந்த படத்தைப் புரிந்துகொண்டவர்கள் பார்த்திபன் தலைமையிலான சோழவம்சத்தை உடன்பாட்டுரீதியாகவும் ரீமாசென் மற்றும் எஞ்சிய பாண்டியர் எட்டுபேரை எதிர்மறையாகவுமே அணுகுகின்றனர். ஆனால் தொன்மப்பெருமிதங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட, தாயகக் கனவோடு வன்முறையைப் பொதிந்து வைத்திருக்கிற, நடப்பு மெய்ம்மை குறித்த எவ்விதப் புரிதலும் சமரசமும் அற்ற சோழர் வம்சத்திற்கும் வன்மம் கொண்ட பாண்டிய வம்சத்திற்கும் பெரிதாய் வித்தியாசங்கள் இல்லை என்றே கருதுகிறேன்.

பசியாலும் தாகத்தாலும் உழன்று சிதைந்த தம் குடிமக்கள் இத்தணூண்டு இறைச்சிக்கும் சில எலும்புகளுக்குமாய்ப் பாயும்போது தடுத்து தாக்குகிற சோழப்பேரரசன் அம்மக்களுக்கான பொற்காலத்தை உண்டுபண்ணுகிற லட்சியக்கனவோடும் இருக்கிறார். எத்தனை வறுமையில் இருந்தபோதும் எலும்பும் தோலுமாய் வற்றிப்போன மக்களைப் பொருதவிட்டு ரத்தவேடிக்கை பார்ப்பதில் மகிழவே செய்கிறார் சோழமன்னன். சாம்ராஜ்யங்கள் இடிந்து விழுந்த பின்னும் பெண்களை ஏவலாட்களாய் பணிப்பெண்களாய் மட்டுமே பயன்படுத்துகிறார். அயல்நாட்டுப் பெண் தன்னோடு ‘கூட விரும்புவதே’ (அதுவும்கூட தவறான புரிதலோடு) அவளுக்கான வரம்போலவும் பேறு போலவும் பாவிக்கிறார். ஆக அதிகாரத்தின் மீதான பெருவிருப்பமும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் மட்டுமே கொண்ட அந்த ‘தாயகம் மீளும் கனவிற்கு‘ச் சிறப்புகளோ நியாயப்பாடுகளோ இல்லை. சோறற்று நீரற்று வாழ்ந்தாலும் போரற்று வாழ விரும்பா வன்முறை மனோபாவமே அது.

அந்த மனோபாவத்தின் உச்சம்தான் அந்த ரத்தப்பந்து காட்சி. களத்தில் இருத்தப்பட்ட எல்லோரையும் பழி வாங்கி மீண்டும் மீண்டும் ரத்தம் வேண்டும் வேட்கையோடு வருகிறது அந்த பந்து. ரத்தமும் பிணமும் சுவைத்தபின்னும் பசிதணியாத அந்த பந்து என்பது யுத்தமும் அதிகாரமும்தான். எல்லாம் முடிந்தபின் எஞ்சியிருக்கும் கார்த்தியை எலும்பும் தோலுமாய் இருக்கும் அந்த சிறுவன் அடித்துச் சொல்கிறான், ‘‘போ, போய்ச் சண்டை போடு’’. இது அந்த ரத்தப்பந்தை விட வன்முறையான வார்த்தைகள்.

திரைப்படத்தில் மூன்றுவிதமான ராணுவமும் மூன்றுவிதமான வன்முறைகளும் தொழிற்படுகின்றன. பழியும் வன்மமும் கொண்ட பாண்டிய வன்முறை, பசியையும் தாகத்தையும் புறக்கணித்து அதிகாரத்தின்பாற் பற்று கொண்ட சோழ வன்முறை, நிறுவனமயமாக்கப்பட்ட இந்திய ராணுவ வல்லாதிக்க வன்முறை. இந்த மூன்று வன்முறைகளினூடாகத்தான் எண்ணூற்று சொச்சம் பேரின் வாழ்வும் அழிவும். இப்படியாக இந்த பிரதியை நான் புரிந்துகொள்வதில் பலருக்கும் கருத்துமாறுபாடிருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியங்கள் பிரதியில் உள்ளன என்றே கருதுகிறேன். இனி ஆயிரத்தில் ஒருவனின் பிரச்சினைகளுக்கு வருவோம்.

முதலாவதாக பிரதியின் அடிப்படைப் பலவீனமே சோழப்பேரரசு, பாண்டிய வம்சம் என்னும் அடையாளப்படுத்தல். இதுவே படத்தின் மீதான இப்போதைய சர்ச்சைகளுக்கும் அர்த்தப்படுத்துவதற்கான சாத்தியங்களின் வெளியைக் குறுக்குவதற்குமான காரணமாயுள்ளது. சோழப்பேரரசு என்பது நிறுவனமயமான பேரரசு. ஆனால் படத்தில் காட்டப்படுவதோ இனக்குழு வாழ்க்கை. வேலன் வந்து வெறியாடுதல் முதலான சங்ககாலத்திய சடங்குகள், தாய்த்தெய்வ வழிபாடுகள் என புலிக்கொடி தவிர்த்த மற்றவை அனைத்தும் சோழர்காலத்திற்குத் தொடர்பற்றவையாய் உள்ளன.

குறிப்பாக சோழர்கள் தமிழ் என படம் சொல்லும் தமிழ். இது பெரும்பாலும் ஈழத்தமிழை ஒத்திருக்கிறது என்பது உண்மைதான். (ஒருவேளை சேரப்பேரரசு இப்படியான ஈழத்தமிழ் பேசினால்கூட பரவாயில்லை, மலையாளத்திற்கும் ஈழத்தமிழுக்குமான ஒற்றுமைகள் பல உள்ளன. ))- ) சோழர்காலக் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தமிழை வடிவமைத்ததாக செல்வா கூறியிருக்கிறார். முதலாவதாக கல்வெட்டுகளில் உள்ள தமிழ் பெரும்பாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழ். படத்தில் பேசப்படும் தமிழோ தரப்படுத்தப்பட்ட தமிழாயுள்ளது. இரண்டாவதாக அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்படும் மொழிதான் மக்கள்மொழியாக இருக்கும் என்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. உதாரணமாக கல்வெட்டுகளைப் போல நாம் தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பதிவுப்பத்திரங்களை எடுத்துக்கொள்ளலாம். சுயாதீனமாக, பிதிரார்ஜுதம், கிழமேல் போன்ற பத்திரங்களில் பயன்படுத்தப்படும் தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? துறைசார்ந்த மொழி என்பதும் மக்கள்மொழி என்பதும் எப்போதுமே வெவ்வேறாகவே உள்ளன. மேலும் ஒரு மக்கள் குழுமம் முழுவதும் ஒரே மாதிரியான மொழியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே சோழப்பேரரசு என்று படத்தில் கட்டமைக்கப்படும் அடிப்படைகளே பலவீனமாக உள்ளன.

மேலும் முதலில் சோழப்பேரரசு, பாண்டிய வம்சம் என்னும் கதைசொல்லலே இந்த பிரதிக்கு அவசியம்தானா என்னும் கேள்வி எழுகிறது. ஏன் வரலாற்று அடையாளங்களற்ற ஒரு ‘அ’ அரசுக்கும் ‘ஆ’ வம்சத்திற்கும் இடையிலான பிரச்சினைகளாக இது இருக்கக்கூடாது? மேலும் நான் முன்பு சொன்னதைப் போல போர்வெறி குறித்தும் அதிகாரவிருப்பம் குறித்தும் இந்த பிரதி பேசுகிறது என்றால் இறுதியில் மீண்டும் அது அதிகாரத்திற்குத்தானே இட்டுச் செல்கிறது? ‘சோழன் பயணம் தொடரும்’ என்றால் அது மீண்டும் வறுமையிலும் பசியிலும் மக்களை இருத்தி தாயகக் கனவிற்கான களங்களை அமைக்குமா? அந்த வன்முறையை விட என்ன மாதிரியான அடிமைத்தனத்தைத் தாயகமற்ற தன்மையில் அம்மக்கள் அனுபவித்துவிடப் போகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் பிரதியை நோக்கி இருந்தாலும் செல்வராகவன் உள்ளிட்ட கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தகுந்ததே. சோழராசா ஆடும் தொன்ம நடனமும் உதிரிப்பாட்டாளியான கார்த்தி ஆடும் லோக்கல் டப்பாங்குத்துவும் ஒரு புள்ளியில் ஒத்திசைவது, ரீமாசென்னின் அபாரமான நடிப்பு, ‘ஓ ஈசா’ பாடலின் மாயக்குறியீடுகள் என பல அம்சங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழின் முக்கியமான படம்தான்.

33 comments:

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் பார்வையில் விமர்ச்சனம் நல்லாயிருக்குங்க...

Bruno said...

நல்ல நடை.

சொல்ல வந்ததை தெளிவாக கூறியுள்ளீர்கள்

ஜோ/Joe said...

மாறுபட்ட பார்வை.

iniyavan said...

சுகுணா சார்,

நானும்தான் படம் பார்த்தேன். நான் சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை. ஆனால் சில சமயம் சில கருத்துக்களை சினிமா பற்றிய என் பார்வைகளை பதிவதுண்டு.

உங்களால் மட்டும் எப்படி சார் துல்லியமாக இப்படியெல்லாம் பார்த்து எழுத முடிகிறது.

சினிமாவை இதுவரை நான் ஒரு பொழுது போக்காக மட்டுமே பார்த்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன்.

அதே போல் உங்களுடைய தமிழ்!!! என்னால் அவ்வாறு எழுத முடியாது சார்.

நான் உங்களுடைய எல்லா பதிவுகளையும் சமீப காலமாய்த்தான் படிக்கிறேன்.

எல்லாவற்றிலும் உங்களுடைய அணுகுமுறை மட்டும் வித்தியாசமாய்த்தான் இருக்கிறது.

தயவு செய்து எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம் சார்.

என்றும் அன்புடன்,
என்.உலகநாதன்.

கே.என்.சிவராமன் said...

அழுத்தமான, ஆழமான பார்வை. தொடர்ந்து பதிவுகளில் எழுது சுகுணா.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Ashok D said...

//சோழன் பயணம் தொடரும்’ என்றால் அது மீண்டும் வறுமையிலும் பசியிலும் மக்களை இருத்தி தாயகக் கனவிற்கான களங்களை அமைக்குமா? அந்த வன்முறையை விட என்ன மாதிரியான அடிமைத்தனத்தைத் தாயகமற்ற தன்மையில் அம்மக்கள் அனுபவித்துவிடப் போகிறார்கள்?//

பிரமாதமானா கேள்வி...(இதில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதும் புரிகிறது) உ.போ.ஒவின் விமர்சனமும் இதுவும் The Best.

//சோழராசா ஆடும் தொன்ம நடனமும் உதிரிப்பாட்டாளியான கார்த்தி ஆடும் லோக்கல் டப்பாங்குத்துவும் ஒரு புள்ளியில் ஒத்திசைவது//

குடிப்பது கூத்திடுவது இரவை (சாவையும்)கொண்டாடுவது தொன்றுதொட்டே வருவது இயல்புதானே.

Ashok D said...

என்.உலகநாதன் கூறியதை என் கூற்றாகவும் எடுத்துக்கொள்ளவும் :)

Frederick D Souza said...

I enjoyed it Sir.

Anonymous said...

நீங்கள் எப்போது/எப்போதிலிருந்து வன்முறைக்கு எதிரியாக மாறினீர்கள்.

மனிதனின் பயணம் இறப்பிற்குப் பின் தொடரும், சொர்க்கமும், நெருப்பு நரகமும் இருப்பதாக நம்புகிறார்களே. அந்த நம்பிக்கையைக் கொண்டு பூமியில் இப்படித்தான் நடக்க்க வேண்டும் என்கிறார்களே.அது உங்களுக்கு ஏற்பான கருத்தா ?.

அ.பிரபாகரன் said...

Good and Interesting review Suguna. Selva is defenitely a very important director in Tamil cinema!

Keep blogging.

Suresh ET said...

ஆயிரத்தில் ஒருவன் -- இத்துப்போன குப்பை. இதை ஒரு முறை கூட எப்படி பார்க்க முடிந்தது என்று தெரியவில்லை. மண்டையில் பாதி மயிர் போனது.

"ரீமாசென்னின் அபாரமான நடிப்பு"- என்னய்யா சொல்றீங்க? இந்தப் படத்தில் ஒருவர் கூட உருப்படியாக நடித்தாய் நினைவில்லை. ரீமா சென் அதர மோசம். ரீமாசென்னின் கதைப் பாத்திரத்திலும் எந்தப் புதுமையும் இல்லை. தமிழில் MGR காலத்திலிருந்தே 'அச்சம் மடம் நாணம்' தவிர்த்த பெண்கள் இருந்திருக்குறார்கள். அவரின் 'ஆளுமை' masculine aggressiveness'ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆண் வில்லின்/பெண் வில்லிகள் செய்யும் அதே வேலையைத்தான் இவரும் செய்கிறார். Hollywood'இலும் சரி தமிழிலும் சரி அந்தக் கதாபாத்திரத்தின் பல archetypes உள்ளன. நம்ம ஊரில் விஜயசாந்தி ஒரு popular archetype. Amazon warriors, Xena, Lara Croft (Reema Sen's closest inspiration), Charlie's Angels, prostitutes in Sin City என்று பல உதாரணங்கள் உள்ளன: http://www.whoosh.org/issue14/king.html; http://www.associatedcontent.com/article/57771/feminine_masculinity_the_rise_of_women_pg2.html?cat=38

Seductress வில்லிகள்: சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி என்று ஆரம்பித்து, போக்கிரி வில்லி வரை. ரீமா சென் காதபாதிரமும் தன் 'sexual empowerment'ஐ 'தீய' நோக்கத்தோடுதான் பயன் படுத்துகிறார். காலைப் பரப்பி புணர அழைப்பதும் ரீமா சென்னை மேலும் ஒரே கோணத்துக்குள் -- வெறுக்கத்தக்க -- இடத்திற்கு இட்டுச்செல்லும் உத்தி. நண்பன் பார்த்த திரையரங்களில் "அடியே தேவுடியா" என்று கூவி அளப்பரி செய்தார்களாம்! கமலின் முஸ்லிம் எதிர்ப்பு வசனங்கள் -- ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் -- நினைவுக்கு வருகின்றன.இது பொதுவான audience manipulation தந்திரம் தான்.

படத்தைப் பற்றி நீங்கள் எழுப்பியுள்ள மற்ற விமர்சனங்கள் (பெண்ணடிமை, நிலப்ப்ரபுதுவ மதிப்பீடு, இந்துத்துவ அடையாளங்கள் etc) எனக்கும் ஏற்புடையவையே.

படத்தில் வரும் பாடல்கள், அவர்கள் பேசும் விதம் (தமிழ், ஆங்கிலம் ரெண்டும்தான்), racial overtones என்று ஒட்டு மொத்தமாகப் பார்ப்பின் இது ஒரு குப்பை. Especially in its form. காட்சிக்கு காட்சி காப்பி அடித்தும் படு மாட்டமாய்ப் படமாக்கப் பட்டுள்ளது (Brave Heart, Troy, Lord of The Rings) என்று.

ஒரே வித்தியாசம், இந்திய ரானும் துப்பாக்கி ஏந்தி உள்ளது. அதுவும் semi-automatic machine guns. பிரேவ் ஹார்டைப் பார்த்து (http://www.youtube.com/watch?v=3Omk32Jq4LY) அப்புடியே "ஹோல்ட், ஹோல்ட்" என்று! டேய் வெண்ணை, அது machine gun டா. பத்தடி தூரம் வார வரைக்கும் காத்திருந்து சுட தேவை இல்ல.அப்புறம் ஏதோ 17 ம் நூற்றாண்டு பிரித்தானிய படை போல் வெட்ட வெளியில் படை எண்ணிக்கை காட்டி பயமுறுத்தவும் தேவை இல்லை (திண்டுக்கல் போலீஸ் போல மூங்கில்குச்சியில் செய்த riot shield வேறு..என்னங்கடா டேய்?). இதை நான் தர்க்கத்திற்காக சொல்லவில்லை (அது வெட்டி வேலை), எவ்வளவு சிறுபிள்ளைதனமாக படமாக்கப் பட்டுள்ளது என்பதற்காக சொல்கிறேன்.

செல்வராகவனின் மற்ற திரப் படங்கள் குறித்தும் தீவிர விமரசனங்கள் உண்டு. அவை பற்றி பிறிதொரு இடத்தில் பேசலாம்.

Radhakrishnan said...

மிகச் சிறப்பாகவும், மிகத் துல்லியமாகவும், நேர்மறையுடன் கூடிய சில எதிர்மறைகளுடன் அனுபவித்து எழுதப்பட்ட பதிவு.

மிகவும் ரசித்தேன்.

Prakash said...

சிறப்பான பார்வை சுகுனா , எழுதி கொண்டே இருங்கள்.

வால்பையன் said...

//அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அடித்தட்டு சாதியைச் சேர்ந்த //

அடிதட்டு சாதின்னா!?

அப்படி அந்த படத்தில் சொன்னா மாதிரி தெரியலையே!

கணேஷ் said...

அந்த ஏழுதடைகளை, சமகாலத்துடன் நீங்கள் பொருந்தி பார்த்தது நிஜ வலி.

உங்களின் விமர்சனம், வேறு ஒரு கோணத்தில் என்னை யோசிக்க வைக்கிறது.

திரும்பவும் ஒரு முறை படம் பார்க்க விழைகிறேன்

ஜெனோவா said...

சுகுணா சார் , நான் இதுவரையில் படித்த விமர்சனங்களுக்குள் ஆக சிறந்ததும் நடுநிலமையானதும் ...

வாழ்த்துக்கள்

ஜெனோவா said...

சுகுணா சார் , நான் இதுவரையில் படித்த விமர்சனங்களுக்குள் ஆக சிறந்ததும் நடுநிலமையானதும் ...

வாழ்த்துக்கள்

நிலாரசிகன் said...

விரிவான அற்புதமான விமர்சனம்

Prosaic said...

இதுவரை நான் படித்த விமர்சனங்களிலேயே மிகவும் தரமான ஒன்று இது. உங்கள் எல்லா கருத்துக்களோடு ஒத்துப்போக முடிகிறது, ஒன்றைத்தவிர. செல்வராகவனின் முந்தைய படங்களை விட இந்தப்படம் தரத்தில் தாழ்ந்ததாகவே எனக்குப்படுகிறது. அவரது அனுபவமின்மையே காரணமாக இருக்க வேண்டும்.

அதேபோல, சோழ பாண்டிய குறியீடுகள் தேவையற்றவை மட்டுமல்ல, கதையில் ஒரு அபத்த உணர்வை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

நம்பி.பா. said...

சுகுணா,
விரிவான விமர்சனம், இந்த விமர்சனத்தை செல்வராகவன் படிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

//செல்வராகவன் படத்தின் கதைநாயகன்கள் எப்போதும் ஓரநிலைத்தொகுதி சார்ந்தவர்கள், பாலியல் குறித்த விழைவை வெளிப்படையாக வெளிப்படுத்துபவர்கள். கதைநாயகிகள் வழமையான தமிழ்ப்பெண்மையிச்ன் அடிப்படைகளாய்க் கட்டப்பட்ட அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இன்னபிற குணாம்சங்களைக் கடந்தவர்கள்...// நூறு சதவிகிதம் தெளிவான வார்த்தைகள்.

//அதிகாரத்தின் மீதான பெருவிருப்பமும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் மட்டுமே கொண்ட அந்த ‘தாயகம் மீளும் கனவிற்கு‘ச் சிறப்புகளோ நியாயப்பாடுகளோ இல்லை. சோறற்று நீரற்று வாழ்ந்தாலும் போரற்று வாழ விரும்பா வன்முறை மனோபாவமே அது.// முழுப் புனைவாக கதையை சொல்லமுடியாதென்பதால் கொஞ்சம் நிகழ்வுகளையும் சேர்த்தே செல்வராகவன் படமாக்கியிருக்கிறார் - இது சோழ, சேர பெயர்த்தேவைகளிலும், ஈழப்போர் சாயலிலும் செல்வராகவனை நிறுத்தியிருந்திருக்கலாம்.

சிறு திருத்தம் - இது செல்வராகவனின் ஐந்தாவது படம்.

அன்புடன்,
நம்பி.பா.

நந்தா said...

தலைவரே கலக்கி இருக்கிறீர்கள். நல்லதோர் பார்வை சுகுணா. பைத்தியக்காரனை விட்டு உங்களுக்கு ஓர் உம்மா கொடுக்கச் சொல்ல வேண்டும்.

Unknown said...

வந்திட்டீரா திரும்பவும்.

இன்னும் ஆ.ஒ. பார்க்கவில்லை. இப்போதைக்குப் பார்க்கும் எண்ணமும் இல்லை. செல்வராகவனின் முன்னைய படங்களில் இருந்த சில குறியீடுகளால் (கவனிக்க: முழுப் படங்களாலும் அல்ல) அவர் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருக்கிறது. பார்ப்போம் நேரம் கிடைத்தால் ஆ.ஒ. வை.செல்வா ஈழம் சம்பந்தப்பட்ட குறியீடுகளை மிகவும் தாமதமாகவும் அவசர அவசரமாகவும் புகுத்தியிருப்பதாலேயே ஆ.ஒ. மக்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம் போல் தோன்றுகிறது. படத்தைப் பார்க்காமல் எதையும் சொல்ல விரும்பவில்லை.

பதிவுக்கு வெளியே:
//ஒருவேளை சேரப்பேரரசு இப்படியான ஈழத்தமிழ் பேசினால்கூட பரவாயில்லை, மலையாளத்திற்கும் ஈழத்தமிழுக்குமான ஒற்றுமைகள் பல உள்ளன//
இது தொடர்பான சந்தேகங்கள் எனக்கும் இருக்கின்றன. மலையாளமும் நாங்கள் பாவிக்கிற பல வார்த்தைகளும் ஒத்துப்போவதுண்டு. (எடா..எடே, எண்ட மோனே... என்ர மோனை) அதே போல் சில உணவுப்பழக்க வழக்கங்களும் (குழாப் புட்டு... குழல் பிட்டு), தேங்காய்கள் என்று பல. நான் வாழ்ந்த பிரதேச அடையாளங்களை வைத்துப் பார்க்கும்போது நாங்கள் சேர நன்னாட்டின் எச்சங்களோ என்ற சந்தேகம் வருவதுண்டு. ஆனாலும் வரலாறு தெரியாமல் உளறக்கூடாது என்பதால் பொத்திக்கொண்டே இருக்கிறேன்... இருப்பேன்.

பா.ராஜாராம் said...

நானும் இந்த படம் பார்த்தேன் சுகுணா.

வெறும் v.c.d.இல்.இவ்வளவு நுனுக்கமான பார்வை அதில் வாய்க்கவில்லை.ஆனால்,பொத்தாம் பொதுவாக "வக்காளி நம்ம மனுஷங்கதானா"என்று இருந்தது.

அதன் வீச்சை இவ்வளவு அருமையாக இங்கு பார்க்கிறேன்.

இது கலை.அதை சொன்னதிற்கு நன்றி.

Arun Nadesh said...

அன்புள்ள சுகுணா,

உங்கள் விமர்சனத்தை படிக்க படிக்க, யாரோ நெஞ்சை பிழந்து ஈரல் குலையை பிடித்து உலுக்குவது போல் உணர்ந்தேன்!! படம் பார்த்த போது ஏற்பட்ட அதே உணர்வு! உங்கள் விமர்சனம், பதிவுகளில் புழங்கும் தரங்கெட்ட விமர்சன குப்பைக்கிடங்கில் கண்டெடுத்த ஒரே முத்து. உங்கள் பதிவுகளை இதுவரை மௌனமாக ரசித்து வந்திருக்கிறேன். ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை. இந்த பின்னூட்டத்தின் கரணம் உங்கள் "இனி எழுத போவதில்லை" என்ற அறிவுப்பு. தொடர்ந்து எழுதுங்கள் please !

அருண்

SurveySan said...

அருமையான அலசல்.

விஷ்ணுபுரம் சரவணன் said...

அன்புமிக்க சுகுணா..

ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்ததும் நானும் நண்பர் கண்ணகனும் பேசிக்கொண்ட பலவிஷயங்கள் உங்களின் பதிவிலிருப்பது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருகின்றன.
இப்படம் குறித்த விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும் வரவேற்கவும் பாராட்டவும் தகுந்த படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஏழு தடைகள் குறித்த உங்களின் ஒப்பீடு சரியானது. ஒரு திரைப்படம் வெறும் மூன்று மணிநேரக்கடத்தல் இல்லை என்பதை இயக்குனரும் பார்வையாளனும் உணரும் இடம் இது.


வாழ்த்துக்கள்

விஷ்ணுபுரம் சரவணன்

நர்சிம் said...

மிகச் சிறந்த பதிவு பாஸ் இது. எனக்கு மிகப் பிடித்திருந்தது.

மணிஜி said...

சுகுணா நேற்று நான் சென்சார் செய்யப்படாத பிரதி பார்த்தேன். உங்களையும் அழைத்தேன். மிக அருமையான நடையில் விமர்சனம் ரசித்தேன்.நேற்றும் நீங்கள் பார்த்திருந்தால் இன்னொரு கோணமும் தென்பட்டிருக்கும்.நன்றி சுகுணா

Kumky said...

சுகுணா....,

நீங்களுமா...

விபரீதமான சித்திரத்தின் வழி வரைந்தவனின் குழப்பங்களுக்கு விளக்கம் இந்தளவு தேவைதானா....

இதற்காக இவ்வளவு மெனக்கெட்டு ....?

இது செல்வாவுக்கே புதிதாக தோன்றலாம்....

சுகுணாதிவாகர் said...

வால்பையன்,

7ஜி ரெயின்போ காலனியில் நேரடியான அப்படியான அடையாளப்படுத்தல் இல்லையென்றாலும் சில குறிப்புகள் இருக்கும்.

1. மார்வாடிக் குடும்பமான சோனியா அகர்வால் அபார்ட்மெண்டில் குடியேறிய முதல்நாள் கதைநாயகனின் தாய், ‘’புதுசா குடி வந்திருக்கறதால எதுவும் தயார் செய்திருக்க மாட்டாங்க” என்று கூஜா நிறைய காப்பி கொடுப்பார். அப்போது சிவன் படத்தின் முன்பு பூஜை செய்துகொண்டிருக்கும் சோனியாவின் தந்தை, ரவிகிருஷ்ணாவின் தாய் போனவுடன் தனது மனைவியிடம் சொல்வார், “அதைக் கீழே கொட்டிட்டு கூஜாவைக் கழுவிக் கொடுத்திடு”. இத்தனைக்கும் அவர்கள் நொடித்துப்போன மார்வாடிகள். சோனியாவின் மாமா சில பல பொருளாதார உதவிகளைச் செய்துவருவதாலேயே அவனது பாலியல் எல்லைமீறல்களை குடும்பமே அனுமதிக்கும்.

2. இருட்டில் அபார்ட்மெண்டே ‘வருஷம் 16’ திரைப்படம் பார்க்கும் காட்சி. ரவிகிருஷ்ணாவின் தங்கை என்று நினைத்து நெருக்கமாய் இருக்கும் சோனியா, வெளிச்சத்தில் ரவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் அருவெறுப்பில் வாஷ்பேஷினில் வாந்தியெடுப்பார்.

3. சோனியாவை யார் காதலிப்பது என்று மார்வாடி இளைஞனுக்கும் ரவிகிருஷ்ணாவுக்கும் பிரச்சினை வரும்போது அந்த இளைஞன் சகநண்பர்களிடம் சொல்வான், “ஏண்டா எங்கேயோ சேரியில இருக்கிறவனையெல்லாம் சேர்க்க வேணாம்ன்னு சொன்னேன், கேட்டீங்களா?”.

கும்க்கி,

என்ன பிரச்சினை?

புருனோ Bruno said...

//2. இருட்டில் அபார்ட்மெண்டே ‘வருஷம் 16’ திரைப்படம் பார்க்கும் காட்சி. ரவிகிருஷ்ணாவின் தங்கை என்று நினைத்து நெருக்கமாய் இருக்கும் சோனியா, வெளிச்சத்தில் ரவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் அருவெறுப்பில் வாஷ்பேஷினில் வாந்தியெடுப்பார்.
//

மீதி இரண்டு உதாரணங்களும் புரிகிறது

இது புரியவில்லை !!

வால்பையன் said...

1.மார்வாடிகள் பொதுவாகவே யாரோடும் புழக்கம் வைத்து கொள்ள மாட்டார்கள் என நினைத்திருந்தேன்!


2.ஆரம்பத்திலிருந்தே அவனை பிடிக்காததால் வாந்தி வந்திருக்கலாம் என நினைத்தேன்!
(மெளனராகம்-தொட்டா, பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு)


3.அதை ஒரு ஒப்பிடுதல் முறையாக நினைத்தேன்!


அப்படத்தின் நாயகன் எதிர்காலத்தின் மீது அக்கறையற்ற தான்தோன்றிதனமாக தன் மகிழ்ச்சியை மட்டுமே பிரதானமாக கொண்டவன் என நினைத்தேன். இன்றைய இளைஞர்கள் பலர் அம்மாதிரி இருப்பதால் அவர்களிடயே நல்ல ரீச்!

ஆயினும் உங்களுடயது தீர்க்கமான பார்வை!

புரட்சிக்கவி said...

சோழ பாண்டிய சேர அரசுகளைப் பற்றி எம்.ஆர்.ராதா சொன்னது : சோழ பாண்டிய சேர எல்லாருக்கும் டிப்ரன்ஸ் just 50 KMs தான். அவன் பெண்டாட்டியை இவன் தூக்கிட்டு போவான். இவன் பொண்டாட்டியை அவன் தூக்கிடு போவான். இவனுங்களுக்காக ஜனங்க அடிச்சுக்கிட்டுச் சாவானுங்க.