Monday, November 30, 2009

சாருநிவேதிதாவின் புன்னகை


''சாலையில் செல்லும் போது அந்தச் சாலையில் நீங்களும் இன்னொருவரும் மட்டுமே இருந்தால் அவரைப் பார்த்து புன்னகை புரிவது மரபு. அல்லது, ஒரு இடத்தில் காத்திருக்கிறீர்கள். அங்கே இன்னொருவர் வந்து உங்கள் அருகில் அமர்கிறார். அவரைப் பார்த்துப் புன்னகைக்கிறீர்கள். அல்லது, ஒரு பஸ்ஸில் ஏறி நடத்துனரிடம் டிக்கட் கேட்கும் போது நட்புடன் புன்னகை செய்கிறீர்கள். அல்லது... வேண்டாம். அடுத்த மனிதரைப் பார்த்து புன்னகை செய்ய இந்த உலகத்தில் ஆயிரக் கணக்கான தருணங்களும் சூழ்நிலைகளும் இருக்கின்றன. சரியா? நான் அப்படிப்பட்ட தருணங்களில் புன்னகை செய்யும் போது மற்றவர்கள் என்னை மிக விரோதத்துடனும், விநோதமாகவும், ஏதோ ஒரு காட்டுமிராண்டியைப் பார்ப்பது போலவும்தான் பார்த்திருக்கிறார்கள். எனக்கு அதன் காரணம் புரியவில்லை. நண்பர்களிடம் கேட்டபோது “பைத்தியங்கள்தான் அப்படிச் சிரிக்கும் ” என்றார்கள். எனக்கு அவர்கள் சொன்னதில் உடன்பாடு இல்லை."சாருவின் இந்த வரிகளைப் படிக்கும்போது தானாகவே கொசுவர்த்தி பற்றவைத்து புகைந்தது. ஒரு சின்ன பிளாஷ்பேக். இந்த சம்பவம சாருவிற்கு இப்போது நினைவிருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் அப்போது எனக்கு 21 வயதுதான். சாருநிவேதிதா என்றால் எனக்கு யார் என்றே தெரியாது. சாருவிற்கும் என்னைப் பரிச்சயமில்லை. 1999 - கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டு விளிம்பில் உள்ள களியக்காவிளை என்னும் ஊரில் பறணியறத்தலவிளை என்னும் பகுதியில் இரண்டுநாட்கள் இலக்கியக்கருத்தரங்கு ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடு செய்தவர்கள் வானவில் இலக்கிய வட்டத்தினர். அவர்கள் சார்பாக ‘கேப்பியார்’ என்னும் இலக்கிய இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. இன்று தொழிலதிபர்களையும் சினிமாநட்சத்திரங்களையும் மட்டுமே தெரிந்த புதிய எழுத்தாளர்களுக்கு கேப்பியார் என்ற இதழ் பற்றி தெரியுமா என்று தெரியவில்லை. பெரியாரியம், தலித்தியம், பின்நவீனம் ஆகிய கோட்பாட்டு அடிப்படைகளைக் கொண்டு இயங்கிய இதழ். ஆசிரியர் கே.புஷ்பராஜ். அதுவே கேப்பியார். அந்த குழுவில் முக்கியமானவர் எழுத்தாளர் குமாரசெல்வா.

‘குறுவெட்டி’ போன்ற பல அற்புதமான சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்த குமாரசெல்வா போதிய அளவு கவனம் பெறாத எழுத்தாளர். அதை விட முக்கியமாய், சிங்கத்தின் குகைக்குள்ளேயே பிடரியைப் பிடித்தாட்டுவதைப் போல, சுந்தரராமசாமி கும்பலின் உள்ளொளி தகிடுதத்தங்களுக்கு எதிராய் நாகர்கோவிலில் தொடர்ச்சியாகப் போராடி வந்த தோழர்கள். கேப்பியாரும் ஜே.ஆர்.வி எட்வர்டும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காலத்தின் கோலம், சமீபத்தில் குமாரசெல்வாவின் சிறுகதைகள் காலச்சுவடு தொகுப்பாய் வந்ததைப் பார்க்க மனது வலித்தது. ஆனால் அப்போதைய நாகர்கோவில் கூட்டங்களில் காலச்சுவடு ஆதரவாளர்களாய் வந்து கச்சைகட்டுபவர்கள் லெட்சுமிமணிவண்ணனும் சங்கரராமசுப்பிரமணியனும். அவர்கள் இருவரும் இப்போது காலச்சுவடு எதிரிகள். வரலாறு வினோதமானதுதான்.

சரி விடுவோம். நான் சொல்ல வந்தது அதுவல்ல. எனக்கு அந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன்புவரை நவீன இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் அண்ணா, கலைஞர், வைரமுத்து, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எண்டமூரிவீரேந்திரநாத், சு.சமுத்திரம், பிரபஞ்சன். நவீன இலக்கியம் என்ற ‘நிழல் உலகத்தை’ எனக்கு 99வாக்கில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் யவனிகாசிறீராமும் செல்மாபிரியதர்சனும். எந்த வாசிப்பும் பரிச்சயமும் இல்லாமல்தான் அந்த களியக்காவிளைக் கூட்டத்திற்குச் சென்றது.

முதல்நாள் முழுக்க கள்ளும் அயல்நாட்டு மதுவும் மாட்டுக்கறியும் மீனும் இலக்கிய விவாதமும் நடு இரவில் அ.ராமசாமியை வம்பிழுத்து செல்மா போட்ட ஆட்டமுமாகப் பொழுது போனது. எனக்கு அப்போது இரண்டு ‘கெட்ட பழக்கங்கள்’ இல்லை. குடித்தும் பழகியதில்லை, வாசித்தும் நவீன கவிதை எழுதியும் பழக்கமில்லை. வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தேன். அந்த கூட்டத்திற்கு வருவார் என்று பல இளைஞர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அ.மார்க்ஸ் வரவில்லை. வந்தது பொ.வேல்சாமி மட்டுமே.

இரண்டாம்நாள் அமர்வு. அந்த மதிய அமர்வில்தான் ‘சீரோடிகிரி’ விமர்சனம். என் அருகில் வந்து அமர்ந்த நபர் அழகாய் இருந்தார். பார்த்தவுடனே பழக வேண்டும் என்பதான தோற்றம். சினேகபூர்வமான முகம். அவரை யாரென்றே தெரியாவிட்டாலும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவரும் புன்னகைத்தார். அவர் சாரு. அவரது ‘சீரோடிகிரி’ புத்தகத்தை மேடையில் விமர்சித்துக்கொண்டிருந்தார் ஒரு எழுத்தாளர். பூக்கோ தொடங்கி பல்வேறு கோட்பாடுகள் அடிப்படையில் சீரோடிகிரியை எப்படி வாசிக்கலாம், அணுகலாம் என்பதாய் இருந்தது அவரது உரை. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

திடீரென்று கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து ‘‘அதெல்லாம் இருக்கட்டும், அந்த நாவலோட கதைச்சுருக்கத்தைச் சொல்லுங்க’’ என்றார். சீரோடிகிரியைப் படித்தவர்களுக்குத் தெரியும், அது எவ்வளவு காமெடியான கேள்வி என்று. ஏனெனில் சீரோடிகிரி ஒரு நான்லீனியர் நாவல். நாவலின் கட்டமைப்பை உடைக்கும் கதையற்ற கதை. அதை மெகாசீரியலில் முன்கதைச்சுருக்கம் சொல்வதைப் போல சொல்ல முடியாது. மேடையில் பேசிக்கொண்டிருந்த விமர்சகருக்கு வந்ததே கோபம். கூட்டத்தில் ஆங்காங்கு குழப்பம். அப்போது கடுமையான விவாதத்தில் ஈடுபட்டிருந்த நபர்களில் கவர்ந்தவர் ராஜன்குறை.

பங்க் முடியும், பெர்முடாஸ§மாக வினோதமான தோற்றத்தில் ஆக்ரோஷமாக விவாதித்துக்கொண்டிருந்தார் ராஜன்குறை. அப்போதைய இலக்கியச்சூழலில் சாருவின் பெயர் ‘பெர்முடாஸ் கலகக்காரர்’ என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். ஆனால் அன்றையக் கூட்டத்தில் பெர்முடாஸ் கலகக்காரர் ராஜன்குறைதான். சாரு ஜீன்ஸ் அணிந்திருந்ததாக ஞாபகம். பிறகு, ராஜன்குறை தனது உரையைத் தொடங்கும்போது கே.ஏ.குணசேகரனின் இந்த பாடலைப் பாடினார்,

‘‘ஒரு காலத்திலே
பகல் வேளையிலே
பொதுவீதியிலே - நாங்க
நடக்கவே முடியவில்லே!
எங்க பாதம் பட்டா
பொதுவீதியெல்லாம் - தீட்டு
பட்டுவிடும் என்பதாலே! - இடுப்பிலே
துடைப்பம் கட்டிக்கொண்டால்- நாங்க
நடக்கலாம் என்கிறநிலை!

இந்த கொடுமையைச் செஞ்சது இந்துமதம் -அதைக்
குழிதோண்டிப் புதைக்கணும் அவசியம்!’’.

சமீபத்தில் இரண்டு மூன்று விழாக்களில் ராஜன்குறையைப் பார்த்தபோது அவரது பங்க் முடி, பழைய தோற்றம், இளமைத்துடிப்பு எல்லாம் காணாமல் போயிருந்தன. அந்த கூட்டத்தில் அறிமுகமான இன்னொரு நபர் மதுரை மோகன். ஒரு மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் பணிபுரிந்து பின்பு அதிலிருந்து விலகிய மோகன் மனச்சிதைவுக்கு உள்ளாகியிருந்தார்.

மதுரையில் புத்தகக்கடை நடத்திவந்த மோகன், கஞ்சாவிற்கு அடிமையாகியிருந்தார். கஞ்சாவும் மதுவும் இலக்கியமும்தான் மோகனுக்குப் போதை. பழகியபிறகு மோகனைச் சந்திக்கும்போதெல்லாம் கைகளைப் பற்றி, ‘‘சிவா, நல்லாயிருக்கீங்களா?’’ என்பார். அது சாதாரணமான நலம் விசாரிப்பாக இருக்காது. முதல்முதல் பார்க்கிற பரவசமும் அளவுக்கு அதிகமான கரிசனமும் பதட்டமும் கொண்டதாக இருக்கும் அந்த கைகுலுக்கலும் விசாரிப்பும். அய்ந்து வருடங்களுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார் மோகன். அந்த மோகன்தான் அன்று களியக்காவிளையில் குடி மற்றும் கஞ்சா போதையில் அரற்றிக்கொண்டிருந்தார்.

நாங்கள் நிகழ்ச்சி முடித்து ஊருக்குக் கிளம்பிய நேரத்தில் மோகனின் அரற்றல் இன்னும் அதிகமானது. ஒரு குழந்தையைப் போல அரற்றிக்கொண்டிருந்த மோகனை ஒரு தாயைப் போல தேற்றிக்கொண்டிருந்தவர் சாருநிவேதிதா. எல்லாம் முடிந்து எங்களை வழியனுப்பும்போது, சாருநிவேதிதா என்னைப் பார்த்துக் கேட்டார், ‘‘என்னைப் பார்த்து சிரிச்சீங்களே, என்னைத் தெரியுமா? எப்படி புன்னகைத்தீங்க?’’. ‘‘தெரியவில்லை’’ என்றேன்.

Saturday, November 14, 2009

திருக்குறள் ஒரு சைவநூலா?

சிவத்தமிழோன் என்பவர் 'திருக்குறள் ஒரு சைவசமய நூலே' என்பதாக எழுதிய பதிவிற்கான எதிர்வினை. எனவே இந்த பதிவைப் படித்துவிட்டு இங்கே வரவும்.


திருக்குறள் சமணநூல் என்பதாக மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் தொடங்கி தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் தொ.பரமசிவன் வரை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கான தரவுகளாக அவர்கள் முன்வைக்கும் தரவுகளோடு நீங்கள் குறிப்பிடும் தரவுகளை ஒப்பிடும்போது உங்கள் தரப்பு மிகவும் பலவீனமாக உள்ளது. பொதுத் தன்மையில் எழுத நேர்ந்ததால் வள்ளுவர் சிவன் பற்றிக் குறிப்பிடவில்லை என்று யூகிக்கிறீர்கள். இத்தகைய யூகங்கள் மட்டுமே ஆராய்ச்சியாகாது. மேலும் அவர் அப்படி கருதியது உங்களுக்குத் தெரிந்த அளவுக்குத் திருவள்ளுவர் உங்களுக்கு நெருக்கமானவரா என்பதையும் நான் அறியேன். சைவநெறிகள் என்று அறியப்பட்டவற்றுள் எவற்றைக் குறள் மொழிகிறது என்பதை விளக்கினால்தான் மேலும் உரையாட ஏதுவாயிருக்கும்.

/பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது. ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? /

முதலில் க.அப்பாதுரையார் எங்கு இந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்றே தெரியவில்லை. நீங்கள் இத்தகைய கட்டுரைகள் எழுதும்போது பயன்பட்ட நூல்கள் குறித்த விவரங்களைத் தந்திருக்க வேண்டும். அல்லது தொடர்புடைய இடத்திலாவது கா.அப்பாத்துரை, இந்த நூலில் இப்படி கூறுகின்றார் என்றாவது குறிப்பிட வேண்டும். நான் கா.அப்பாத்துரையாரை அதிகம் படித்ததில்லை. ஆனால் ஒருவேளை நீங்கள் சொன்னது போல்தான் கா.அ கூறியிருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியாயின் அது அப்பாத்துரையின் புரிதலில் இருக்கும் குறைபாடு. பெரியார் 'கடவுள் வாழ்த்து' குறித்த விமர்சனத்தில், 'கடவுள்' என்கிற வார்த்தை திருக்குறளின் எந்தவொரு அத்தியாயத்திலும் எந்தவொரு குறளிலும் பயன்படுத்தப் படாமையைச் சுட்டிக் காட்டுகிறார். பொதுவாக வள்ளுவர் 'அடக்கம்' என்று ஒரு அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டால் அது அந்த அத்தியாயத்தில் உள்ள ஏதேனுமொரு குறளிலாவது 'அடக்கம்' என்னும் சொல் பயன்படுத்தப்படும். ஆனால் 'கடவுள் வாழ்த்து' என்னும் அத்தியாயத்தில் ஒரு குறளில் கூட 'கடவுள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப் படாததையும் அதுமட்டுமின்றி 1330 குறள்களில் எந்தவொரு இடத்திலும் 'கடவுள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படாதையும் பெரியார் தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறார். எனவே 'கடவுள்' என்பதே திருவள்ளுவர் காலத்து வார்த்தை இல்லை என்று தர்க்கபூர்வமாக வாதிடும் பெரியார் அந்த பத்துக் குறள்களுக்கும் வைக்கப்பட்ட 'கடவுள் வாழ்த்து' என்னும் தலைப்பு பிற்கால இடைச்செருகல் என்கிறார். தர்க்கரீதியாக பெரியாரின் வாதம் சரிதான். ஆனால் நீங்களோ பெரியாரே ஏதோ இடைச்செருகல் செய்ததைப் போல் திரிக்கிறீர்கள். பெரியாரைப் பற்றிய ஆய்வே இந்த லட்சணத்தில் இருக்கும்போது

/பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். /

என்னும் உங்கள் வார்த்தைகள் குறித்து எனக்கு நல்லவிதமான அபிமானம் தோன்றவில்லை.

/நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள்./

என்று போகிற போக்கில் வேறு வெடிகுண்டுகளை வீசி விட்டுப் போகிறீர்கள். நக்கீரர், அவ்வையார் என்ற பெயர்களில் வழங்கப்பட்டவர்கள் எல்லாம் ஒரே நபர்கள் இல்லை என்பதும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல நபர்கள் என்பதும் தமிழ் இலக்கியம் குறித்த சிற்றறிவு அனுபவம் உள்ளவர்களுக்கே தெரிந்த விடயம். அவ்வையாரையே 'துணிந்து' சைவர் ஆக்கிவிட்டபிறகு

/சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது./

என்று நீங்கள் சொல்வதிலே என்ன தடை இருக்கப் போகிறது? சரி, உங்கள் கட்டுரைக்குத் துணை சேர்க்கும் 'ஆய்வுகள்' என்ன என்று பார்த்தால் ஒருபக்கம் பெரியாரும் பாரதிதாசனும் 'சொன்னதாக' கா.அப்பாத்துரை 'சொன்னதாக' நீங்கள் சொல்வது, இன்னொருபுறம் திருவாவடுதுறை ஆதினத்தின் 'ஆய்வு'. நடத்துங்கள் உங்கள் நகைச்சுவைநாடகத்தை.