Thursday, September 24, 2009

நண்பர்கள் என்று நம்பியவர்கள்....

‘உன்னைப் போல் ஒருவன்’ படம் குறித்த விமர்சனத்தை எழுதியவுடன் பல தரப்புகளிலிருந்தும் பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இயல்பாகப் பலரும் தத்தம் இடங்களில் பொருந்திப்போனார்கள். மேலோட்டமாக எழுதக்கூடியவர்கள், ஜாலியான பதிவுகளை எழுதியவர்கள் என்றெல்லாம் அறியப்பட்டிருந்தவர்களிடமிருந்து மூர்க்கத்தனமான எதிர்வினைகள் வெளிவந்தன. எதிர்வினைகள் என்பதை விடவும் தமக்குள் இருந்த இந்துமனோபாவத்தையும் பொதுப்புத்தி அபாயத்தையும் பார்ப்பனீயத்திற்கு ஒப்புக்கொடுத்த இயல்பையும் வெளிக்காட்டினார்கள். இது ஒன்றும் ஆச்சரியமானதில்லை. வரலாற்றின் போக்கில் நிரூபிக்கப்படும் உண்மைகள்தான். ஆனால் எதிர்பாராத இரண்டு இடங்களிலிருந்து எதிர்பாராத இரண்டு எதிர்வினைகள் வந்தன.

ஒன்று நமது ஆசிப்மீரானுடையது. செல்வேந்திரனின் பதிவில் அறத்தின் சினத்தைக் காட்டிய ஆசிப்மீரான், தன் பதிவில் எழுதியதோ அடிப்படைக்கே எதிராக இருந்தது. உன்னைப் போல் ஒருவனின் பின்னுள்ள மோசமான இந்துத்துவ அரசியலை வெளிக்கொணர்ந்த பிரதிகளை, தனக்கேயுரிய பகிடிநடையில் மோசமாகக் கிண்டலடித்திருந்தார். தமிழர்&மலையாளி பிரச்சினையாக பார்க்கலாம் என்கிற ரீதியில் ஆசிப் விமர்சனங்களை மலினப்படுத்தியிருக்கிறார்.

பகிடி என்பது எனக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் நாம் அதிகாரத்தைப் பகிடி செய்ய வேண்டுமேயல்லாது அதிகாரத்திற்கு எதிரான குரல்களையல்லவே ஆசிப்! எனது பதிவில் மூர்க்கமாய்த் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த பலரும் ஆசிப்பின் பதிவில் கும்மியடித்திருந்தார்கள் என்றால் இது யாரின் வெற்றி? ‘மனநோயாளிகளின் உலகம்’ என்கிறார். எது மனநோய்? பிரதியின் பின்னுள்ள அதிகாரத்தை விமர்சனத்துக்குள்ளாக்குவதா?

பட விமர்சனம் எழுதியபோது நிறைய நண்பர்கள் பார்ப்பனர்களாய் என்னால் அறியப்படாதவர்கள். ஆனால் அந்த விமர்சனத்திற்கு எதிராகப் பதிவுகளும் பின்னூட்டங்களும் அவதூறுகளும் கிண்டல்களும் வசைகளும் செய்தவர்களில் பாதிப்பேர் பார்ப்பனர்கள் என்பதைப் பின்னால்தான் அறிய நேர்ந்தது. சுயசாதிப்பற்று என்பது மனநோய் இல்லையா ஆசிப்? அடிமனதில் ஒளிந்திருக்கும் பெரும்பான்மைவாதம் என்பது மனநோய் இல்லையா ஆசிப்?

ஆசிப்மீரான் இப்படியான எதிர்வினை புரிந்ததற்கான காரணங்களை என்னால் அறியக்கூடவில்லை. ஒருவேளை அவர் கமலின் ரசிகராக இருக்கக்கூடும். எனக்கும்கூட தனிப்பட்ட முறையில் நடிகர், நடிகைகள் மீதான விருப்பு வெறுப்புகள் உண்டு. ஆனால் எந்த அரசியலின் மீதும் அக்கறையற்று, அறத்தின் சார்பற்று குருட்டு ரசிகனாய் இருப்பதை விட மனநோயாளியாக இருக்கவே விரும்புகிறேன். நல்லா இருங்க ஆசிப்!
&&&&&&&&&

அடுத்து நமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோழர் மாதவராஜ்.

''கமலின் இந்தப்படம் முழுக்க முழுக்க இந்துத்துவா ஆதரவுப்படம் என்றும், அப்படியெல்லாம் இல்லை என்றும் ஆரம்பித்து, நீண்டு, கமல்ஹாசன் என்னும் கலைஞன் மீது அவரவர்கள் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்து இருக்கிறோம். படைப்பு குறித்த விமர்சனத்திலிருந்து, படைப்பாளி நோக்கிய விமர்சனத்திற்கு தாவி இருக்கிறோம்." என்கிறார் மாதவராஜ். படைப்பு என்பது படைப்பாளியின் துணையில்லாமலேயே அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறதா மாதவராஜ்? பிளாக் மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்காமல் துரோகால், வெட்னெஸ்டே மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற கமலின் தேர்ந்தெடுப்பிற்குப் பின் எந்த அரசியலுமே இல்லையா தோழர்? அல்லது நமது முட்டாள் நண்பர்கள் உளறுவதைப் போல் ‘‘மௌனத்திலே அரசியல் பார்க்கிறார்கள், புன்முறுவலிலே அரசியல் பார்க்கிறார்கள்’’ என்று சொல்லப் போகிறீர்களா? ‘ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் உள்ள அரசியல்’ குறித்து உங்களுக்குப் பாடம் எடுக்க நான் தயாராயில்லை.

''அரைநூற்றாண்டுக் காலம் தமிழ்ச்சினிமாவில் முக்கியப் பாத்திரமாக இருந்த ஒருவரை, சினிமா பற்றிய ஞானம் உள்ள சினிமாக் கலைஞரை, மனிதநேயமிக்க எத்தனையோ காட்சிகளை கண்முன் நிறுத்தியவரை, எத்தனையோ அற்புதமான படங்களை தமிழ்த் திரையுலகத்திற்குத் தந்தவரை சட்டென்று “ஒரு இந்துப் பாசிஸ்டு” என்று முத்திரை குத்துவது சரியல்ல. சில காட்சிகளை முன்னிறுத்தி, ஒரு கலைஞனை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுவது நல்லதல்ல. அதிலும் அவரது பிறப்பை முன்னிறுத்தி பேசுவது ஆரோக்கியமானதல்ல."

என்பது தோழரின் வாதம். சினிமா பற்றிய ஞானம் உள்ளவர் இந்துப்பாசிஸ்டாக இருக்க முடியாதா என்ன? அதை விடக்கொடுமை அந்த ‘ஞானத்தை’ பாசிசத்தை நியாயப்படுத்த பயன்படுத்துவது இல்லையா?

சில காட்சிகளை விட்டு விடுவோம், ஒட்டுமொத்தமாய் இந்த படத்தின் அரசியல் என்ன என்று நீங்கள்தான் சொல்லுங்கள், பார்ப்போம். பிறப்பின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறப்பின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதவை என்பதை எத்தனை முறை சொல்லி அலுப்பது?

''நான் உட்பட பலரும் சுட்டிக்கட்டியிருக்கிற சிக்கலான கையாளல் இந்தப்படத்தில் இருக்கிறதுதான். தீவீரவாதம் என்றாலே முஸ்லீம்கள் என்னும் தோற்றத்தை இந்தப்படம் தருகிறதுதான். கமல்ஹாசன் அவர்களுக்கு இப்போது என்று இல்லை, ஹேராம் படத்திலும் ‘இந்துத்துவா’ குறித்த அவருக்கு இருக்கும் தெளிவின்மை தெரியும். குருதிப்புனலிலும் தீவீரவாதம் குறித்த கோளாறான பார்வைகள் வெளிப்படும். அதை அவரிடம் உள்ள குழப்பங்களாகவும், ஒரு சிக்கலானப் பிரச்சினையைப் புரிந்து கொள்வதில்/அணுகுவதில் ஏற்படும் மயக்கங்களாகவுமே உணர வேண்டியிருக்கிறது."

இருக்கிறதுதான், உண்மைதான் என்று தான் போடுகிற மாதவராஜிற்கு கமலின் மீதான மயக்கம் மட்டும் தெளியவில்லை. ‘ஞானம்’ உள்ளவருக்கு எங்கிருந்து குழப்பங்கள் வருகின்றன? நாத்திகராய், பகுத்தறிவுவாதியாய் இருப்பதல்ல பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின்பால் அக்கறையுள்ளவராகவும், தனது ஒரு அசைவுகூட ஆதிக்கத்திற்குத் துணைபோய் விடக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதுதானே சமூக அக்கறையுள்ள கலைஞனின் பணி? கமலின் படங்களிலும் நடவடிக்கைகளிலும் புகைமூட்டம் மாதிரியான குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இந்த குழப்பம் கமலுக்கா, நமக்கா என்பதிலும் குழப்பம் இருக்கிறது. ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் கமல் தன்னை ஒரு இந்துபாசிஸ்டாகத்தான் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

ஆனாலும் மாதவராஜிற்கு நம்பிக்கையிருக்கிறது, கமல்ஹாசனை ‘வென்றெடுத்து விட முடியும்’ என்று. வாழ்த்துக்கள் தோழர். முடிப்பதற்கு முன்பு இரண்டு விஷயங்கள்.

1. ஜெயலலிதாவையே சகித்துக்கொண்டவர்கள் நீங்கள், கமல்ஹாசனை ஏற்றுக்கொள்வது கஷ்டமா, என்ன?

2. ‘பம்பாய்’ திரைப்படத்திற்கு விழா எடுத்ததைப் போல் ‘உன்னைப் போல் ஒருவனு’க்கும் நீங்கள் விழா எடுக்காமலிருக்க அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இன்ஷா மார்க்ஸ்!

Tuesday, September 22, 2009

உன்னைப் போல் ஒருவனும் கரப்பான்பூச்சிகளும்

நீண்டநாட்களுக்குப் பிறகு எனது ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குறித்த விமர்சனம் பல்வேறு எதிர்ப்புகளையும் வசைகளையும் சந்தித்துள்ளது மகிழ்ச்சியே. நண்பர் ஜ்யோவ்ராம்சுந்தர் குறிப்பிட்டுள்ளதைப் போல் மாற்றுப்பார்வைகளையே அனுமதிக்காத மூர்க்கம் வலையுலகில் ஒரு வியாதியைப் போல் பரவியுள்ளது. முன்பு சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு எழுதிய விமர்சனங்களும் இத்தகைய நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது என்றாலும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான், வரவணையான், முத்துதமிழினி, அசுரன், ராஜாவனஜ் என்று பலரும் தீவிரமாகப் பதிவுலகில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ( அனேகமாக ரோசாவசந்த் தான் எழுதுவதை நிறுத்த தொடங்கிய காலகட்டம்) போலி டோண்டு மாதிரியான பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தபோதும் கூட குறைந்தபட்சம் மாற்றுப்பார்வைகளை ஆதரிக்கிற கணிசமான குரல்கள் இருந்தன. ஆனால் இப்போது அத்தகைய குரல்கள் குறைந்து போனது வருத்தமளிக்கிறது.

பதட்டப்படுகிற பெரும்பாலான பதிவர்கள் தங்கள் அளவில் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. கட்டமைக்கப்பட்ட அவர்களது பொதுப்புத்தி தொந்தரவுக்கு உள்ளாகிறது. கந்தசாமி படத்தை என்ன வேண்டுமானாலும் கிழிக்கலாம், விஜய்யையும் அஜித்தையும் என்ன வேண்டுமானாலும் கிண்டலடிக்கலாம், ஆனால் ஒரு அரசியல் சினிமாவின் பின்னுள்ள அரசியலைக் கட்டவிழ்க்கும்போது மட்டும் பதறிப் போகிறார்கள். ‘‘ஒரு இயக்குனர் இப்படியெல்லாம் பார்த்தா சினிமா எடுத்தார், நான் ஒரு பாமரன்தான்’’ என்று அலறுகிறார்கள். ‘‘இடைவேளையில் பப்ஸ் சூடாக இருக்கிறதா என்பதைத் தாண்டி ஏன் கவலைப்படுகிறீர்கள்?’’ என்று அங்கலாய்க்கிறார்கள்.

இது ஒரு சினிமாதான், சினிமாதான் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்பவர்கள்தான் நான் பதிவு எழுதுவத்ற்கு முன்பு ‘உன்னைப் போல் ஒருவன்’ தமிழகத்தைக் கடைத்தேற்ற வந்த படம் என்றார்கள், தார்மீகக் கோபம் என்றார்கள், ‘இந்த மாதிரியான படம்தான் வராதா என்று எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தோம்’ என்றார்கள். இப்போதும் கூட அவர்கள் விஜய்யோடும் அஜித்தோடும் கமலை ஒப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். போக்கிரியையும் உ.போ. ஒவையும் ஒப்பிடுவதை ரசிக்க மாட்டார்கள்.

போகட்டும், ஆனால் இவர்களது பார்வை சாதாரண பொதுப்புத்தி என்பதையும் தாண்டி இந்துமனோபாவத்தை ஏற்றுக்கொள்கிற, மற்றமையை விலக்கி வைக்கிற ஆபத்தான கட்டத்தை அடைவதை அவதானிக்க வேண்டும். ‘‘போங்கடா போலி செக்யூலரிஸ்ட்களா, தொப்பி போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பவர்கள், முஸ்லீம்களைத் தாஜா செய்பவர்கள், அல்லாவின் பெயரால் முஸ்லீம்கள் பல திருமணங்கள் செய்பவர்கள்’ என்னும் வகையான கருத்துக்களைத் தெரிவிப்பதிலோ அல்லது அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பிலோ மாறுபாடில்லாதவர்கள், போகிற போக்கில் பொத்தாம் பொதுவாகச் சொல்கிற விஷயம், ‘‘சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் விஷத்தை விதைக்காதீர்கள்’’.

காலங்காலமாக சாதி எதிர்ப்புப் பார்வைக்கும் அரசியலுக்கும் சாதி அரசியல் என்றும் சாதிப் பார்வை என்றுமே முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசியலை அம்பலப்படுத்துபவர்கள் நல்லிணக்கத்தைக் கெடுப்பவர்களாகவும் பிரிவினைவாதிகளாகவுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். இது நமக்குப் புதிதில்லை. ஆனால் போகிற போக்கில் ‘சமூக அக்கறை’ குறித்தெல்லாம் இவர்கள் எடுக்கிற கிளாஸ்கள்தான் நமக்குத் தாங்க முடியவில்லை, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கலாம், எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கவில்லை, எனவே எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் நண்பா, எல்லாம் ‘இங்கிருந்தே எடுக்கப்பட்டது’.

இதில் ஸ்டேண்ட் அப் காமெடியில் விடாமல் கலக்குபவர் செருப்பு புகழ் பதிவர். ஆனால் இவர்கள் போகிற போக்கில் ஏதோ உளறுகிறார்கள் என்றில்லாமல் எவ்வளவு ஆபத்தான பாசிச மனோபாவம் கொண்டவர்கள் என்பதற்கு அந்த 'ஜெர்மி பெந்தாம்’ தியரி ஒரு உதாரணம். மேலும் உதிர்க்கிற முத்துக்களைப் பாருங்கள்.

‘‘ஐம்பதாண்டு காலமாக மனித உரிமை மண்ணாங்கட்டி சமாச்சாரத்தைப் பேசி பேசி வீடு முழுக்க மூட்டைப்பூச்சிகள். பெரும்பான்மையின் பாதுகாப்பு என்கிற ஒரு காரணம் போதும் அவர்களை நசுக்கிக் கொல்வதற்கு’’

இங்கே எங்கே வந்தது ஐம்பதாண்டு? ஒருவேளை பாகிஸ்தான் உருவான காலத்திலிருந்தே முஸ்லீம்களை நாடு கடத்தியிருக்க வேண்டும் என்கிறீர்களா? ஆனால் நண்பா, இந்தியாவில் தீவிரவாததிற்கு வயது வெறும் 50 அல்ல. சாதாரண பிளேக் நோயால் பாதிக்கப்படக் கூடாது என்று எலியை அழிக்கச் சொன்ன வெள்ளைக்காரனை ‘மதத்தை அழிக்கப் பார்க்கிறான்’ என்று வன்முறையைத் தூண்டி விட்டாரே பாலகங்காதர திலகர், ‘இந்து சனாதன தருமத்தைக் காப்பாற்ற ஜார்ஜ் பஞ்சயனைச் சுட்டுக்கொல்கிறேன்’ என்று சட்டைப்பையில் கடிதம் எழுதி வைத்திருந்தானே வாஞ்சிநாதன், ‘‘முஸ்லீம்களுக்கு நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும்’’ என்று 1910ல் தீர்மானம் போட்டதே இந்துமகாசபை அந்த தீவிரவாதத்திற்கு அடுத்த வருடம் வந்தால் வயது 100 ஆகப்போகிறது.

‘‘எனக்குத் தெரிஞ்சு எந்த இந்தியனோ குறிப்பா இந்துவோ பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போயி பொது இடங்களில் குண்டு வைச்சதாகவோ, ரயில்வே ஸ்டேசன்களில் புகுந்து பச்சைக் குழந்தையிலிருந்து பூக்காரக் கிழவி வரை சுட்டுக் கொன்னதாகவோ, பாராளுமன்றத்துக்குள் புகுந்து சுட்டதாகவோ சரித்திரம் இல்லை’’ என்கிறார் திருவாளர் பத்தாம் நம்பர்.

அட முண்டமே! வாக்கெடுப்பு நடத்துகிறேன் என்று வாக்கு கொடுத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாய் ராணுவத்தை நிறுத்தி தினமும் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கிறதே உன் இந்தியா, அஸ்ஸாமில் பெண்களை இந்திய ராணுவ மிருகங்கள் சிதைத்து தீர்த்ததே, அவ்வளவு ஏன் ஈழத்தில் கடைசி இழவு விழும் வரை காத்திருந்து விட்டு எள்ளும் தண்ணியும் இறைத்து விட்டு வந்து டாட்டாவும் அம்பானியும் பிசினஸ் செய்ய சுடுகாடுகளைப் புனரமைத்துக்கொண்டிருக்கிறதே, இன்னமும் நேபாளத்தில் ரெண்டு பார்ப்பான் பிரச்சினைக்காக ஒரு ஆட்சியைக் கவிழ்த்துத் தன் தாலியறுக்கும் குணத்தைக் காட்டியதே உன் இந்தியா, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும், மேலாதிக்கம் குறித்தும், அடுத்த நாட்டில் குண்டு போடுவது குறித்தும் பேசுவதற்கு இந்திய நாய்களுக்கு யோக்கியதை இருக்கிறதா?

முதலில் இந்த ‘காமன் மேன்’ என்னும் கருத்தாக்கமே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்த காமன்மேனுக்கு 3000 முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது கோபம் வராதாம், வாழ வேண்டிய ஒரு கல்லூரிப் பெண் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும்போது கோபம் வராதாம், ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் ஒரு இனத்தின் மீது படுகொலைகள் ஏவப்படும்போது கோபம் வராதாம், பிறகு எப்போதுதான் கோபம் வருமாம்? தான் பயணிக்கிற பேருந்தில், ஓடும் ரயிலில், தக்காளி வாங்கும் மார்க்கெட்டில், முக்கிப் பேள்கிற டாய்லெட்டில் குண்டு வெடித்தால் மட்டும் கோபம் வருமாம். சக மனிதர்கள் குறித்து எந்த அக்கறையுமற்று இருப்பவனுக்குப் பெயர் காமன்மேனா, டாபர்மேனா? இந்த காமன்மேனுக்குக் குண்டு வெடிப்பதுதான் பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த குண்டையும் காமன்மேனில் தலையில் கொண்டு போய்ப் போடுங்கள், மரணபயம் போகும்.

அப்புறம் ‘தனிநபர் தாக்குதல் கூடாது’ என்கிறார்கள் நண்பர்கள். நல்லது தனிநபரைத் தாக்கக் கூடாது. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம் அல்லவா? ஈழ ஆதரவுப் பதிவர்களில் சிலர் கூட கமலின் உ.போ.ஒருவனைப் பாராட்டுகிறார்கள். இதே கமல்ஹாசன்தான் நண்பர்களே, ஈழப்பிரச்சினைக்காக திரையுலகம் நடத்திய கூட்டத்தில் ‘‘அடக்குமுறை இருக்கும் நாட்டில் தீவிரவாதம் வெடித்தே தீரும்’’ என்று ஆவேச வேடம் போட்டவர். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே கமலின் சமூக அக்கறையின் நிறம் என்ன?

குண்டு வெடிக்கிறது, குண்டு வெடிக்கிறது என்று கூப்பாடு போடுபவர்களே, உலகமெங்கும் ஆயுதம் தாங்கிய குழுக்களின் வன்முறைகளை விடவும் அரச பயங்கரவாதத்தாலும் ராணுவ பயங்கரவாதத்தாலும் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம். அதுகுறித்து உங்கள் சினிமா, கலைஞானிக்கள் ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை பேசியிருப்பார்களா? அல்லது நீங்கள்தான் அதுகுறித்து என்றாவது எழுதியிருப்பீர்களா? மும்பை குண்டு வெடிப்பு பற்றி பொங்கலோ பொங்குபவர்கள் போபாலுக்காகவும் இன்னமும் கல்பாக்கத்து அணு உலைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்காகவும் பொங்குவீர்களா?

‘எல்லாம் சரிதான், அந்த கெட்டவார்த்தை மட்டும் வேண்டாமே’ என்கிறார் நர்சிம். என்ன செய்வது நர்சிம். நான் கெட்டவார்த்தை பேசுவது புதிதில்லையே. மேலும் ஒரு முஸ்லீம் பெண்ணின் மரணத்தை ஏதோ நாய்க்குட்டி செத்துப்போச்சு ரேஞ்சுக்குப் பேசும்போது என்னால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை, வெண்ணெய் போட்டு உருவி கமலுக்கு உபதேசிக்க முடியவில்லை. சென்ஷியின் பதிவைப் படித்தீர்கள்தானே, ஒரு முஸ்லீமாய் அன்னியப்படுத்தப்படும் வலி, ஒரு தலித்தாய் நிராகரிக்கப்படும் வலி இதையெல்லாம் புரிந்துகொள்ளக் கூட முயற்சிக்கா விட்டால் எனக்கு படைப்பெல்லாம் சு&&&&&&&&மயிருக்குத்தான் சமம். மற்றமையை உணர்வதே நீதி, அறம், தார்மீகம், படைப்பு, கலை. ‘ஆனாலும் நண்பா...’ என்ற உங்கள் நாகரீக இழுதல் கேட்கிறது.

விக்ரம் படத்தில் கமலின் மனைவி கொலை செய்யப்பட்டுவிடுவார். அதற்கப்புறம் கூட கமலுக்குச் ‘செட் ஆவதற்கு’ இரண்டு ‘பிகர்கள்’ இருப்பார்கள். ஆனாலும் கமல் தன் போலீஸ் மேலதிகாரியிடம் கேட்பார், ‘‘எந்த தேவடியா மகன் சார் என் பெண்டாட்டியைக் கொன்றது?’’. கதை - சுஜாதாவுடையது.

Saturday, September 19, 2009

'உன்னைப் போல் ஒருவன்' ‍ கமலின் இன்னுமொரு இந்துத்துவச் சினிமாநான் ‘வெட்னஸ்டே’ படம் பார்த்ததில்லை. ஆனால் ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படம் தந்த மன உளைச்சல் ஏராளம். வெட்னஸ் டே எப்படியிருந்தபோதிலும் அதை ரீமேக் செய்வதற்கான கமலின் தேர்வு அவரது அரசியல் சார்பைத்தான் காட்டுகிறது. இதேபோல கமல் விரும்பி ரீமேக் செய்த இன்னொரு படம் ‘குருதிப்புனல்’. இந்த படம் கோவிந்த் நிஹ்லானியின் துரோகாலை விட சிறந்த படம் என்று பாராட்டியிருப்பார் ‘ஆய்வாளர்’ யமுனாராஜேந்திரன். அ.மார்க்ஸ் குறித்து அவர் கீற்று இணையத்தில் எழுதியிருந்த கட்டுரையில் கீழ்க்கண்ட விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். (கந்தசாமி படத்தில் எல்லோரும் மரத்தில் மனு கட்டித் தொங்கவிடப்போவதைப் போல அ.மாவை அர்ச்சிக்க விரும்புபவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதும் மரமாக கீற்று மாறிவிட்டது வேறு விஷயம்). ஈழப்பிரச்சினை குறித்து அறிவு இல்லாமல் ‘உன்னதசங்கீதம்’ கதை எழுதிய சாருவின் கருத்தை எப்படி அ.மா தனது புதுவிசை இதழில் கையாளலாம் என்று கேள்வி எழுப்பியிருப்பார். ஆனால் ஈழப்பிரச்சினை குறித்து விரிவும் ஆழமும் அகலமும் தேடி ஆராய்ந்த யமுனா உதிர்த்த முத்துதான், ‘குருதிப்புனலில் போராளி பாத்திரத்தில் காட்டப்பட்டிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்’ என்று. அதற்கான ஒரு முகாந்திரத்தைக் கூட குருதிப்புனலில் தேடினால் கிடைக்காது. இது யமுனாவின் ஈழப்பிரச்சினை குறித்த அபாரமான அறிவு. இன்னொரு பக்கம் துரோகாலை விட சிறந்த படத்தில் நக்சல் போராளிகளின் வேலை போலீஸ்காரனின் பதின்பருவக் குழந்தை மீது பாலியல் இச்சை கொள்வது, அது கிடைக்காவிட்டால் இன்னொரு போலீசுக்காரனின் மனைவியைப் பாலியல் புணர்வு செய்வது. இந்தியா என்ன உலகம் முழுக்க இத்தகைய கேடு கெட்ட காரியங்களில் ஈடுபட்டு வருபவர்கள் போலீசும் ராணுவம்தான் என்பது மனித உரிமைகள் மீது ஆரம்பகட்ட அக்கறை கொணடவர்கள் கூட அறிந்த உண்மை. ஆனால் நம் ‘மார்க்சிஸ்டு சினிமா ஆய்வாளர்’ யமுனாவுக்கு மட்டும் அது சூப்பர் படம்.

போகட்டும் குருதிப்புனல் எப்படி ஒரு போலீஸ் சினிமாவோ அதேபோல்தான் இந்த உன்னைப்போல் ஒருவனும். இந்த படத்திலும் எல்லா போலீஸ்காரன்களும் நல்லவன்கள்தான். தன் மனைவியையும் ஒன்பது மாதக் குழந்தையையும் ஊருக்கு அனுப்பி விட்டு பாமைச் செயல் இழக்கும் தேசப்பணியில் ஈடுபடுபவர்கள். உயிருக்கு அஞ்சாத உத்தமர்கள். நல்லது கமல், வாச்சாத்தி தொடங்கி பத்மினி வரை இப்படியான ‘கண்ணியமான’ போலீஸ்களைத்தானே காவல்துறை சுமந்துகொண்டிருக்கிறது. படத்தில் கம்ப்யூட்டர் நிபுணர் சொல்கிறார், ‘அவர் ஒரு பிரைனிதான் மேதை அல்ல’ என்று. பிறகு கமலின் ‘தேசபக்தியை’ப் புரிந்துகொண்டு ‘அவர் மேதைதான்’ என்று ஒத்துக்கொள்கிறார். ஆனால் கமல் எவ்வளவு பெரிய மேதை என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும்.

இந்த சினிமா ஒரு பச்சைப் பார்ப்பானால் எடுக்கப்பட்ட கேடுகெட்ட இந்துத்துவச் சினிமா என்பதற்கு சாட்சி, மூன்று இஸ்லாமிய ‘தீவிரவாதிகளையும்’ ஒரு இந்து ஆயுதவியபாரியையும் வேனில் அழைத்துவரும் காட்சி. ‘தான் தீவிரவாதியானதற்கான காரணத்தை விவரிக்கிறார், ஒரு முஸ்லீம்’. அவரது ‘மூன்றுமனைவிகளுள்’ ஒருவர் பெஸ்ட் பேக்கரி கொலையில் கொல்லப்பட்டவர். அதற்குப் பழிவாங்கத்தான் அவர் கோவையிலே குண்டுவைத்தார். கேட்கிறவன் கேணக்கூ...வா இருந்தா அக்காரவடிசிலில் அமிர்தம் வடியுதுன்னு சொல்றவர்கள்தானடா நீங்கள்! பெஸ்ட்பேக்கரி கொலை நடந்தது 2002ல். கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது 1998ல். இதுதான் கமலின் மேதமை. என்ன சொல்ல வருகிறீர்கள் கமல்? ‘துலுக்கன்கள் எல்லாம் டைம் மிஷின்ல பின்னல் போய் பழிவாங்க குண்டு வைப்பாங்க’ன்னா?

மணிரத்னம் படம் உட்பட பல இந்துத்துவா சினிமாவில் கூட ஒரு பேலன்ஸ் செய்வதற்கு முஸ்லீம்கள் சார்பாக சில நியாயங்கள் சொல்லப்படும். ஆனால் இந்த படத்தில் அதற்கான வாய்ப்பையும் மறுத்து தான் எவ்வளவு மோசமான பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார் கமல். சொல்லப்படும் ஒரே நியாயம் ‘பெஸ்ட் பேக்கரி கொலைச்சம்பவம்’. அதற்கு அருகில் இருக்கும் இந்து ஆயுத வியாபாரி சொல்வான், ‘‘அதான் மூணு பொண்டாட்டியில ஒண்ணுதானே போச்சு, மீதி ரெண்டு இருக்கில்ல’’. தியேட்டரில் சிரிக்கிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கமலஹாசா? அந்த ‘இந்து ஆயுத வியாபாரி’ ஒரு அப்பாவி. ஆயுத வியாபாரம் செய்வதைத் தாண்டி அவனுக்கு வேறு எந்த கிரிமினல் நோக்கமும் கிடையாது.

ஆனால் முஸ்லீம் ‘தீவிரவாதிகள்’, கொலை வெறி தலைக்கு ஏறியவர்கள், மத வெறியர்கள், அது மட்டுமல்ல, தன்னோடு ஒரு முஸ்லீம் ஜீப்பில் உடன் வராதபோதும் அவனுக்குத் துரோகம் செய்யத் தயங்காதவர்கள். அப்புறம் நம் ‘மேதை’ கமலின் கருத்துப்படி ‘மூணு பெண்டாட்டி வைத்துக்கொள்பவர்கள்’. இதோடு மட்டும் கமலின் பார்ப்பன வன்மம் அடங்கவில்லை. நாலு தீவிரவாதிகளையும் அழைத்துச் செல்லும் இரண்டு போலீஸ் அதிகாரிகளில் ஒருவன் ஆரிப் என்னும் முஸ்லீம் அதிகாரி. அப்போது இன்னொரு போலீஸ் அதிகாரியை அழைத்து மோகன்லால் கூறுகிறார், ‘‘ஆரிப் மேல ஒரு கண்ணு வச்சிக்க’. ‘‘யாரை அவங்களோட அனுப்பிச்சிருக்கீங்க?’’ என்று காமன்மேன் கமல் கேட்கும்போது, மோகன்லால் ஆரிப்பின் பெயரைச் சொல்ல, லேசாக முறுவலித்தபடி யோசனையில் ஆழ்கிறார் ‘காமன்மேன் கமல்’. அர்த்தம்... ‘போயும் போயும் துலுக்கனையும் கூட அனுப்பிச்சிரூக்கீங்களேடா’.

போலீஸ் ஸ்டேசனுக்குக் கமல் வந்த அடையாளத்தை ஏட்டு மோகன்லாலிடம் விவரிக்கும்போது சொல்கிறார், ‘‘அவர் தாடி வச்சிருந்தாரு, கையில வெங்கடாசலபதி பை வச்சிருந்தாரு’. உடனே மோகன்லால் கேட்கிறார், ‘‘அப்புறம் என்ன சிலுவை போட்டிருந்தாரா?’’. ஆக மொத்தம் மூன்று மதங்களுக்கான அடையாளம் வெங்கடாச்சலபதி & இந்து, சிலுவை & கிறிஸ்தவன், தாடி & முஸ்லீம். தாடி வைத்தவனை எல்லாம் முஸ்லீமாகவும் முஸ்லீமை எல்லாம் தீவிரவாதியாகவும் காட்டுகிற குறியீட்டுக் காட்சி மிகவும் நுட்பமாக தன் இந்துத்துவ அரசியலை நிறுவிக்கொள்கிறது.

சரி, இந்த ‘காமன் மேன்’ எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்றால், ‘தீவிரவாதத்தைத் தீவிரவாதத்தால் எதிர்க்கிறாராம்’. ங்கோத்தா, இதைத்தானேடா அவனும் செஞ்சான்? ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் பார்த்து வலையுலகில் முதன்முதலாக வந்த விமர்சனத்தில் ஒருவர், ‘மும்பையிலே குண்டு வெடிச்சா தமிழன் கவலைப்படறதில்லை’ என்னும் கமலின் வசனத்தை தமிழ்த்தேசிய நோக்கில் கடுமையாக விமர்சித்திருந்தார். ( கமல் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்பதைப் போல இருந்தது அந்த பதிவு. மற்றபடி தமிழர்களைக் கமல் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதில் அவருக்கு ஒரு கருத்துமாறுபாடும் இருக்காது என்பது வேறு விஷயம்.) ஆனால் அதோடு கமல் விடவில்லை, கமல் சொல்லும் ‘தீவிரவாதம்’, மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு, ஸ்ரீபெரும்புதூர் வரை நீள்கிறது. ஆக கமலின் காமன்மேன் விடுதலைப்புலிகளின் ‘தீவிரவாதத்தையும்’ எதிர்ப்பவர்தான்.

கிளைமாக்ஸ் காட்சியில் கமல் கண்ணீர் வடித்த வசனம் பேசும்போது எதையாவது தூக்கி சொருகலாமா என்றிருக்கிறது. இதில் தேவையில்லாமல் கரம்சந்த் காந்தியையும் இழுத்திருக்கிறார். பாகிஸ்தான் பிரிவினை தனக்கு உவப்பு இல்லை என்றபோதும் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்க வேண்டிய நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர் கரம்சந்த். ஆனால் நீங்கள்...? செப்டம்பர் 11 தாக்கலே முஷ்ரப் ஏற்பாடு செய்தது என்று காட்டுகிற ஒரு டி.வி சேனலை, அதில் உள்ள நீரஜா என்னும் பார்ப்பனத் தொகுப்பாளினியைத் தேர்ந்தெடுத்து நீதி சொல்கிறீர்கள். ஒரு காட்சியில் கமல் கேட்கிறார், ‘மகாத்மா காந்தியைத் தெரியுமா, அவர் பெயரைச் சொல்ல உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?‘ என்று. கமல் தன் பின்புறத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

அப்புறம் படத்தின் தமாஷான இடம் (குரூர நகைச்சுவை) ஒரு பெண்ணின் பிறப்புறப்பு சிதைக்கப் பட்டதற்காக ‘காமன் மேன்’ கண்ணீர் சிந்துவது. உண்மையிலேயே ‘காமன் மேன்’ கண்ணீர் சிந்தியிருந்தால், இஸ்லாமியத் தீவிரவாதமும் வந்திருக்காது, நரேந்திரமோடியும் இன்னொரு முறை முதல்வர் ஆகியிருக்க மாட்டான். இந்த ‘காமென் மேன்’ கயர்லாஞ்சி தொடங்கி இந்தியக் கிராமங்களில் தலித் பெண்கள் உடல் சிதைக்கப்பட்டபோது எவர் மயிற்றை பிடுங்கிக்கொண்டிருந்தார் என்று சொல்ல முடியுமா கமல்?

படத்தில் முஸ்லீம்கள், ஈழக்குழுக்கள் மட்டும் அவமானப்படுத்தபடவில்லை. மனித உரிமைகளும் கூட. என்கவுண்டர் செய்வதில் தப்பில்லை, ஒரு போலீஸ்காரன் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அடித்து நொறுக்கலாம் என்றெல்லாம் கொஞ்சமும் இரக்கமில்லாமல் முன்மொழியும் கமல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மனித உரிமையை வலியுறுத்துகிறார். அது எந்த இடம் என்றால், கமல்ஹாசனின் பெயர் வாக்காளர்பட்டியலில் பெயர் இல்லாதது. இந்த காமன்மேன் என்பவனே ஆதிக்கக்கருத்தியலாலும் பொதுப்புத்தியாலும் கட்டமைக்கப்பட்ட தன்னிலைதான். இவனுக்கு எல்லாம் எந்த மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது.

ஒருவேளை இந்த காட்சிகள் வழியாகக் கூட இது இந்துத்துவ சினிமா என்று தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக படத்தின் கடைசி வசனம் இப்படியாக முடிகிறது, ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’. உடனே ஸ்ருதிஹாசனின் இசையில் பாடல் தொடங்குகிறது, ‘சம்பவமாமி யுகே’. போங்கடா பாப்பாரப் பாடுகளா!

ஒருவேளை வெட்னஸ்டே படத்தில்தான் அத்தனைப் பிரச்சினைகள் என்றே வைத்துக்கொள்வோம். அந்த மலத்தைக் கொஞ்சம்ன் கொஞ்சமாக உருட்டி நம் வீட்டு வாசலுக்குக் கொண்டு வரும் கமல் என்ன மலவண்டா? படத்தில் கமல்ஹாசன் பாத்திரத்திற்குப் பெயர் இல்லை, மத அடையாளம் இல்லை, என்ன வேலை செய்கிறார் என்பதற்கான தகவல்கள் இல்லை, இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பெண்களுக்கே உரித்ததாக, கமலின் மனைவிக்கு முகமும் இல்லை. ஆனால் ஒன்றே ஒன்று இருக்கிறது. அது பூணூல்.

Tuesday, September 1, 2009

அறிஞர் அண்ணாவும் தம்பி பிரபாகரனும் கடைசிவரை பாம்பை வெளியே எடுக்காத தமிழவனும்

‘அண்ணா உருவாக்கிய தமிழரசியல்’ என்ற பேராசிரியர் தமிழவனின் கட்டுரையை தீராநதி ஆகஸ்ட் 2009 இதழில் படிக்க நேர்ந்தது. இது கட்டுரையின் நான்காம் பாகம். முதல் மூன்று பாகங்களைப் படிக்கும் கெடுவாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. கட்டுரையின் இரண்டாம் பத்தியிலேயே தமிழவனின் அதிரடி ஸ்டேட்மெண்ட் ஒன்று.

‘அண்ணாதுரை அவர்கள் சந்தேகமில்லாமல் தமிழர்களின் வரலாற்றில் புதிய அரசியல் தன்மையைக் கொண்டு வந்தார். இன்று பிரபாகரனையும் அப்படி பார்க்கலாம்.’ எனவே அண்ணாவின் தமிழரசியல் மற்றும் பிரபாகரனின் தமிழரசியலுக்கும் உள்ள கருத்தியல் அடிப்படைகள் குறித்து தமிழவன் பேசுவார் என்று கருதி கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தேன். (ஏற்கனவே நீ நான் என்றெல்லாம் பாடம் நடத்தி தமிழ் அறிவுலகைக் கதிகலங்க வைத்தவராயிற்றே!) ஆனால் நான்கு பக்கங்கள் உள்ள இந்த கட்டுரையில் இரண்டரை பக்கம் வரை தமிழவன் பாம்பை வெளியே எடுக்கவேயில்லை. சரி, அந்த இரண்டரை பக்கத்திலும் தமிழவன் அப்படி என்னதான் வித்தை காட்டியிருக்கிறார் என்று பார்த்தால் அதுவும் பிஸ்கோத்துதான்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் ஏன் அண்ணா ‘திராவிட’ பெயரையே சுமந்து திரிந்தார், கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் திராவிட அரசியலில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்று வழக்கமான கதைதான். சரி நம் அறிவுஜீவிகள் சமையல் குறிப்பு, ஜாதகக் கட்டம், சங்கக்கவிதை, லத்தீன் அமெரிக்க கவிதை, கிரேக்க புராணம், குறுக்கெழுத்துப்போட்டி, ஆயா பாயா தயாரித்த கதையெல்லா எழுதி விட்டுத்தானே மேட்டருக்கு வருவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். அப்போதுதான் அண்ணா பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது குறித்து எழுதியிருந்த எழுத்தில்தான் தமிழவனின் நகைச்சுவை உணர்வை அறிய நேர்ந்தது.

‘பிரிவினையைக் கைவிடும்போது அது ஒரு தந்திரோபாயம் என்றுதான் கட்சி கூறியது என்று சார்லஸ் ரியர்ஸன் அந்தோணி என்ற அமெரிக்க ஆய்வாளர் கூறுகிறார். திமுக பற்றிய முனைவர் பட்ட ஆய்வேட்டை சார்லஸ் ரியர்ஸன் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்கும்போது இக்கருத்து அந்த ஆய்வேட்டில் இருந்தது’ என்கிறார் தமிழவன். அண்ணா தமிழ்ச்சமூகத்தின் முக்கியமான அரசியல் ஆளுமை. நாற்பதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி ‘கோரிக்கைதான் கைவிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன’ என்று அண்ணா குறிப்பிட்டதைக் கருணாநிதியே பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் இதைச் சொல்வதற்கு தமிழவனுக்கு டோக்ரா மோக்ரா கம்பெனியிலிருந்து ஆள் வர வேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண நிகழ்வைக் கூட பல பெயர்களைப் போட்டு எப்படி நம் அறிவுஜீவிகள் மிரட்டுகிறார்கள் என்பதற்குத் தமிழவனின் இந்த பாம்பு ஒரு உதாரணம். அதுசரி, நம் சிந்தனையாளர்கள் சிவகாசி ஜெயலட்சுமி பற்றிய கட்டுரையைக் கூட கிரேக்கப் புராணத்திலிருந்துதானே ஆரம்பிப்பார்கள்.!

அதோடு விட்டாரா தமிழவன்? ‘கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் மோகன்குமாரமங்கலம் துணையுடன் திராவிடக் கட்சியை இரண்டாகப் பிளப்பதற்கு இந்திராகாந்தி துணிகிறார்’ என்று அடுத்த காமெடிக்குண்டைச் சளைக்காமல் வீசுகிறார். மோகன்குமாரமங்கலம் கம்யூனிஸ்ட் சிந்தனையாளராம்! அப்படியானால் ஆன்டனிகிராம்ஷி, அல்தூசரையெல்லாம் தமிழவன் எப்படி குறிப்பிடுவார் என்று தெரியவில்லை. 34ம் வட்ட சி.பி.எம் கவுன்சிலர் முத்துசாமி கூட தமிழவனுக்கு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்தான் போலும்.
இப்படி தானே பல காமெடிகளை நிகழ்த்தியும் ஆறுமுகநாவலரின் தமிழரசியலையும் அண்ணாவின் தமிழரசியலையும் விவஸ்தைகெட்டதனமாக முடிச்சு போடும் தமிழவன்தான் ‘அண்ணாவை இப்படித்தான் உயிரோட்டமுள்ள மதிப்பீடுகள் அணுகும். அண்ணாவுக்கு மூக்குப்பொடி கொடுத்தவர் யார் யார் என்று தரங்கெட்ட ஆராய்ச்சிகள் வரக்கூடாது’ என்று மற்றவர்களை வேறு கண்டிக்கிறார்.

இப்படியான காமெடி ஷோவின் இறுதியில் விட்டகுறை தொட்டகுறையாக அண்ணாவும் பிரபாகரனும் சங்க இலக்கிய வீரமும் மார்க்ரெட் ட்ராவிக். பீட்டர் ஷால்க் என்ற வெள்ளைக்கார ஆய்வாளர்களும் என அதகளம் பண்ணியிருக்கிறார். அண்ணா ஒரு அரசியல் வகைப்போக்கை உருவாக்கியதைப் போலவே பிரபாகரனு ஒரு அரசியல்வகைப்போக்கை உருவாக்கினார் என்பது உண்மைதான். இன்றளவும் பல தமிழர்களிடத்தில் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைதான் பிரபாகரன். தமிழர்களின் சுயமரியாதைக்கும் வீரத்திற்கும் குறியீடாகக் கருதப்படுபவர் பிரபாகரன்.

ஆனால் அன்ணாவின் அரசியல் ஒரேநேரத்தில் அறிவு மற்றும் உணர்வுத்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. அண்ணா காலத்திய அறிவு மய்யங்கள் இரண்டு. தேசியத்தையும் பார்ப்பனீயப்பிரதிகளையும் ஒன்றிணைத்த பார்ப்பன அறிவு மய்யம். சைவ வேளாளப் பிரதிகள் வழியே பார்ப்பன எதிர்ப்பு & தமிழ்ப்பெருமிதத்தை முன்வைத்த வெள்ளாள அறிவு மய்யம். அண்ணா பார்ப்பனப் பிரதிகளை எதிர்த்தது மட்டுமில்லாது சைவப்பிரதிகளிலிருந்து விலகிய தனக்கேயான தமிழ்ப்பெருமிதத்தைக் கட்டமைத்து வெற்றி கண்டவர். அண்ணா கம்பராமாயணத்தை மட்டுமல்ல, பெரியபுராணத்தையும் எரிக்கச் சொன்னவர். கருணாநிதி தூக்கிப்பிடித்த கண்ணகியும் குண்டலகேசியும் பவுத்த சமணப்பிரதிகளில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் என்பவை கவனத்திற்கொள்ளத்தக்கது. அதேநேரத்தில் பெரியார் முன்வைத்த கருத்துருவங்களிலிருந்தும் விலகியே அண்ணா தனக்கான தமிழ் அரசியலைக் கட்டமைத்தார்.

மேலும் அண்ணா முன்வைத்த திராவிடநாடு கருத்தாக்கம் மற்றும் தமிழர் வரையறை எவ்வளவு நெகிழ்வுத்தன்மை வாய்ந்தன்மை, தேசியத்தைப் பாசிசமாக மாற்றாமல் காப்பாற்ற முனைந்தவை என்கிற ஆய்வுகளை ஏற்கனவே நிறப்பிரிகை முன்வைத்திருக்கிறது. ஆனால் பிரபாகரன் கட்டமைத்த தமிழ்த்தேசியம் எத்தன்மை வாய்ந்தது, அதற்கும் அண்ணா கட்டமைத்த தேசியத்திற்குமான கருத்தியல் ஒற்றுமைகள் மற்றும் விலக்கங்கள் குறித்து தமிழவன் எழுதியிருந்தால் அது உருப்படியான ஒரு ஆய்வாக இருந்திருக்கும். ஆனால் பிரபாகாரன் பற்றி யாராவாது கோக்ரான் மேக்ரான் வெள்ளைக்காரர் கொல்மபியா பல்கலைக்கழகத்தில் ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க வேண்டுமே. அதுவரை தமிழவன் காத்திருக்க வேண்டுமல்லவா?

அந்த கொலை வீடியோக்கள் குறித்து ஷோபாசக்தி

மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது:

"கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்" என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் 4'ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்படுபவர்கள் புலிகளா அல்லது சாதாரண தமிழ் இளைஞர்களா என்பது குறித்து எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கொல்பவர்கள் இலங்கை இராணுவத்தினர் என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.

இலங்கை அரசினதும் இலங்கை இராணுவத்தினதும் ஆதரவு இணையத்தளங்களாலும் தனிநபர்களாலும் இப்போது அந்தச் சம்பவததில் கொல்லப்பட்டவர்கள் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என்றும் கொன்றவர்கள் புலிகள் என்றுமொரு பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகமும் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. எப்படியாவது என்ன பேய்க்கதையைச் சொல்லியாவது இலங்கை அரசைக் காப்பாற்றவேண்டும் என இவர்கள் துடிக்கிறார்கள்.

கொல்லப்பட்வர்கள் புலிகள் அல்ல என்பதற்கு இவர்கள் வைக்கும் மோட்டுத்தனமான வாதங்களில் ஒன்று 'புலிகள் தாடி வைப்பதில்லை, ஆனால் கொல்லப்பட்டிவர்களிற்கு தாடியிருக்கிறது' என்பதாகும். புலிகள் தாடி வைக்கமாட்டார்கள் என்று இவர்கள் எங்கே ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டடைந்தார்கள் என்பது தெரியவில்லை. புலிகளின் முதலாவது வாகனப் பொறுப்பாளருக்குப் பெயரே தாடி சிறி என்பதுதான் (அவர் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். ஆண்டு 1986 என்று ஞாபகம்) கிட்டு, திலீபன் போன்ற பிரபலங்களே அவ்வப்போது தாடி வைத்திருப்பார்கள். தாடி வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் இயக்கத்தில் கண்டிப்பான விதிகள் ஏதும் எனக்குத் தெரிந்து கிடையாது. பிரபாகரனின் தாடிவைத்த புகைப்படம் கூட பிரபலம்தான்.

சரி அப்படி ஒரு விதியிருக்கிறது என வைத்தக்கொண்டாலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு இராணுவம் ஒவ்வொரு நாளும் சவரம் செய்தா விடப்போகிறது. தாடி தன்பாட்டுக்கு வளர்ந்திருக்கும். இந்த மயிர் விவகாரத்தை வைத்து கொன்றவர்கள் இராணுவமல்ல என்று விவாதிப்பது கொலைகாரத்தனம்.

கொல்லப்பட்டவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாருக் என்பது இவர்கள் கசியவிட்டிருக்கும் இன்னொரு செய்தி. அந்தக் காட்சியில் கொல்லப்படுபவர்களின் முகங்களை அடையாளம் காண்பது மிகச் சிரமமானது அல்லது சாத்தியமற்றது. இது இன்னொரு திரிப்புத்தான் என நான் நம்புகிறேன்.அதில் கொல்லப்பட்டவர் பாருக் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜனவரியில் நடந்த சம்பவத்தை ஏன் இத்தனைநாள் கழித்து வெளிக்கொணர வேண்டும் என்பது இவர்கள் எழுப்பும் இன்னொரு முட்டாள்தனமான கேள்வி. அங்கே என்ன சினிமா சூட்டிங்கா நடைபெற்றது குறித்த காலத்தில் படப்பிடிப்பை முடித்து குறித்த காலத்தில் ரீலிஸ் செய்ய. கொலைகாரர்களில் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு எத்தனையோ கைமாறித்தான் ஊடகவியலாளர்களைச் சேர்ந்திருக்கும். 'சனல் 4' பதிவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய நாட்களை எடுத்திருக்கும். தாமதமானதிற்கு இவ்வாறான ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

புலிகள் தங்கள் சிறையிலிருந்தவர்களை நிர்வாணப்படுத்தமாட்டார்கள் என்பதோ, இழுத்துப்போய்ச் சுடமாட்டார்கள் என்பதோ என் கருத்தில்லை. தோழர்கள் இராயகரன், சரிநிகர் சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான இயக்கப் போராளிகளும் அப்பாவிச் சனங்களும் புலிகளால் இவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள்தான். 'கந்தன் கருணைப் படுகொலை' எனச் சொல்லப்படும் கொலைச் சம்பவத்தில் புலிகளிடமிருந்த சிறைக்கைதிகள் அய்ம்பத்தேழு பேர்கள் ஒரே இரவில் புலிகளால் கொல்லப்பட்டார்கள். புலிகளின் மூத்த தளபதி அருணாவின் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒன்பது இலங்கைச் சிப்பாய்கள் குமரப்பா, புலேந்திரனின் மரணத்தைத் தொடர்நது புலிகளால் இரவோடு இரவாகச் சுடப்பட்டு யாழ் பஸ்நிலையத்தில் வீசப்பட்டார்கள். புலிகளின் வரலாறு நெடுகவும் இதுபோல ஆயிரம் கொலைச் சம்பவங்களுண்டு.

ஆனால் புலிகளின் கொலைச் செயல்களை முன்வைத்து இலங்கை இராணுவத்தின் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதோ பூசிமெழுக முயற்சிப்பதோ தாடி போன்ற அற்ப சந்தேகங்களைக் கிளப்பி இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்க முயல்வதோ சின்னத்தனமான அரசியல். இன்று இலங்கை இராணுவத்தின் கைகளில் ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் பொதுமக்களும் மீள்வதற்கு வழியேயின்றிச் சிக்கியிருக்கும் தருணத்தில் இதுபோன்ற சின்னத்தனங்கள் ஏற்கனவே இனவெறியில் ஆடிக்கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகவேயிருக்கும். இராணுவத்தால் எத்தனை புலிப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், எத்தனைபேர்கள் சரணடைந்துள்ளார்கள் என்ற தகவல்களை இராணுவம் இதுவரை வெளியிட மறுக்கிறது. இராணுவத்திடம் சிக்கியிருப்பவர்களும் இவ்வறே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுவார்கள் என்ற நிலையிருக்கும்போது இத்தகைய நியாயமற்ற சந்தேகங்கள் அந்தக் கொலைகளை ஊக்குவிப்பதாகவும் விரைவுபடுத்துவதாகவுமே இருக்கும்.

இராணுவத்தின் கொலைச் செயல்களை எந்தவிதமான ஆதாரங்களுமின்றி புலிகளின் தலையில் சுமத்தும் வேலையை அரசு ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. சனாதிபதியோ அல்லது இராணுவத் தளபதியோ 'இலங்கை இராணுவம் கண்ணியமானது' எனச் சொல்லும் செய்திகளை இவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.

இலங்கை இராணுவத்தின் 'கண்ணியத்திற்கு' ஒன்றா இரண்டா சாட்சியங்களுள்ளன. வந்தாறுமூலை, குமுதினி, செம்மணி, அல்லைப்பிட்டி, முள்ளிவாய்க்கால் என்று எண்ணற்ற கூட்டுப் படுகொலைகளை இலங்கை அரசு செய்தது. எது குறித்தும் இதுவரை நீதி விசாரணைகள் ஏதுமில்லை. பொது மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதிமுகாம்கள், கோயில்கள் என்று எத்தனை இடங்களின் மேல் குண்டுகள் வீசப்பட்டன. பொக்கணையில் நிவாரணப் பொருட்களைப் பெற வரிசையில் நின்ற அகதிகள்மீது குண்டு பொழிந்து கொன்ற கண்ணியத்துக்குரிய இராணுவமல்லாவா அது. 'சனல் 4'ல் ஒளிபரப்பான கொலைகளைப் போல ஆயிரக்கணக்கான கொலைகளைச் செய்து முடித்த இராணுவம்தான் இலங்கை இராணுவம். வெலிகடயிலும் பிந்தனுவெவயிலும் சிறைப்பட்டிருந்த கைதிகளை கொலை செய்த அரசுதான் இலங்கை அரசு.

இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி 'தேனி' போன்ற அரசு சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிசத்தின் ஊடக முகங்கள். அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானிட நேயத்தையும் கொலை மறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.