Wednesday, June 10, 2009

அந்த நெருப்பு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது
இது ஒரு மீள்பதிவு. சுந்தரோடும் அய்யனாரோடும் சண்டை பிடித்துத் திரிந்த தருண இடைவெளியின்போது எழுதியது. சமயங்களில் நமது பதிவுகளைச் சிறிதுகாலத்தின் பின் வாசிக்கும்போது சில பதிவுகள் நமக்கே ஆச்சரியமூட்டுபவை. இந்த பதிவும் அப்படியான ஒன்று. நாஜி வதைமுகாமொன்றில் வதைக்கப்பட்டு மீண்ட எலிவீஸல் என்பவர் தனது அனுபவம் குறித்துப் பகிர்ந்தது தமிழினிப் பதிப்பகத்தின் வெளியீடாய் 'இரவு" என்னும் நூலாய் வந்திருந்தது. ஒவ்வொரு ப‌க்கமும் மரணத்தின் வாதையைச் சுமந்தவை. அந்த நூலைப் படித்தபோதிருந்த மனநிலையே இப்பதிவு. முன்பு இப்பதிவைப் படிக்க வாய்ப்பற்ற வாசகநண்பர்களுக்காக இம்மீள்பதிவு. மேலும் ஈழத்து வதைமுகாம்களில் தமிழர்கள் வதைபடுவதையும் இங்கு ஒப்புநோக்கலாம். இந்த பதிவு ஜ்யோவ்ராம்சுந்தருக்குச் சமர்ப்பணம்.

இப்போது நான் யாருடனுமில்லை. யாரும் இப்போது என்னுடனுமில்லை. இப்போது இருப்பதெல்லாம் எலிவீசலின் இரவு. இரவுகளைக் கொன்ற இரவு. தூக்கத்தின் மீது புரண்டெழுந்த இரவு. கனவுகளில் ஒரு மிருகத்தைப்போல் துரத்திய இரவு.எலீ இப்போது தன்னந்தனியாய் ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் தங்கை ஜிபோரா எங்கிருக்கிறாள் தெரியவில்லை. அந்த நாஜிவதை முகாமின் புகைக்கூண்டில்தான் என் அடிவயிற்று மாமிசம் எரிகிறது எலீ. இரவு, அந்த இரவு, இது வெண்ணிற இரவல்ல, ஒரு புகைமூட்டம்போல் குழம்பிய கருப்பு இரவு. அந்த கடைசி இரவில்தான் புகைவண்டியில் மிருகங்களைப் போல் மனிதர்கள் அடைக்கப்பட்டிருந்த புழுக்கமும் வியர்வையும் நிரம்பிய அந்தப்புகைவண்டியில்தான் அவள் ஓயாது குரலெழுப்பிக்கொண்டிருக்கிறாள். தீ...தீ. மோசோ கிழவன் சொன்னதில் தவறில்லை. நீ இப்போது கப்பாலாவைக் கைவிட்டிருந்தாய். உன் கடவுள் எரியும் ஒவ்வொரு சடலத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். யார்கண்டது? பிணங்களைப் புதைக்கும் வேலையை அவர் ஏற்றிருக்கக்கூடும். ஆனால் எலீ தீ எப்போதும் ஒரே திசையில் எரிவதில்லை, அது காற்றைப் போல், நதி போல், கண்ணீர் போல், முத்தம்போல் நில்லாது பரவுகிறது. நெடுநாட்களுக்குப்பின் அந்தத் தீ மய்யத்தை அடைந்தபோது அது ஒரு சிம்மாசனத்தின் தோற்றத்தை அடைந்திருந்தது. பிறகு அது ஆலிவ் இலைகளை ருசித்து உண்டது. அந்த நெருப்பு ஒரு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது. காலத்தின் மகுடிஓசையில் அது நெளிந்து நடனம் ஆடியது. அது ஒரு அழகிய நடனம் என்று சொல்வதிற்கில்லை. இப்போது பாம்பு யுகங்களின் மீது ஒரு மலைப்பாம்பைப் போல் புரண்டு எழுகிறது. பல நூற்றாண்டுகளை விழுங்கி அதன் வயிறு வீங்கியிருந்தது. முன்னொரு காலம் இந்தத் தீ அரச இலையின் வடிவத்திலிருந்தது. அதன் நிறமோ மஞ்சள். அது ஒரு மாங்கனியைப் போல் மஞ்சள்பூத்திருந்தபோது தீ இனிது, தீ இனிது. மஞ்சள். தர்மசக்கரத்தை உருட்டியபடி அரசமரத்தின்கீழ் அமர்ந்திருந்த புத்தன் மஞ்சளாடை அணிந்திருந்தான். மாசுமருவற்ற மனமுடையோரே மஞ்சளாடை உடுத்தத்தக்கவர். புத்தன் புன்னகத்தான். தீ சிரித்தது. பின்னாளிலும் புத்தன் புன்னகைத்ததாய்ச் சொல்லப்படட்து. அப்போது தீ அணுகுண்டாய் வெடித்தது யதீ, உண்மையில் புத்தன் புன்னகைக்கவில்லை. அவன் வாயில் குறி திணிக்கப்படட்து என்பதே உண்மை. பின்னும் பின்னுமான ஒரு பென்னம் பெருநாளில் தீயின் நிறம் காவிக்கு மாறியிருந்தது. குரங்கின் வாலிருந்த தீ ஒரு நூலகத்தை விழுங்கி முடித்திருந்தது. வரலாற்றின், ஞாபகங்களின் சாம்பல்களை துவராடை அணிந்த துறவியர் அள்ளிச்சென்றனர். ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்தனர். இப்போது பிக்குகளின் வாலிலிருந்த தீ புத்தனை எரித்திருந்தது. காலத்தினிடுக்குகளில் ஒரு அகதியின் ரகசியப்பாடல் போலவும், ஒரு தன்பால் புணர்ச்சியாளனின் அழைப்பு போலவும் தீ ரகசியமாய்க் கசிந்தது. தீ நாயின் நாக்கைப் போன்று சிவந்திருந்தது. இப்போது தீயின் நிறம் சிவப்பு. பாலற்று குழந்தை சப்பியதால் ஜென்னியின் மார்புகளில் வழிந்த ரத்ததைப் போல் சிகப்பு. ஜென்னி தன் இடதுமுலையை அறுத்து எறிகிறாள். தீ பரவுகிறது. பிரியத்திற்கும் பிரியமான மார்க்ஸ், தயவு செய்து உன் மேல்கோட்டைக் கழற்றாதே, குளிர் உன்னைக் கொன்றுவிடும் மார்க்ஸ்... ஒரு தீயைப் புசித்து தீயைப் பிரவசித்திருந்தாய் மார்க்ஸ். உன் நெருப்புத்துண்டுகள் நாங்கள் வாழுமிடத்திற்கு வந்து சேர்ந்தபோது அதன் வடபகுதி நீலமாகவும் தென்பகுதி கருப்பாகவுமிருந்தது. முன்னையிட்ட தீ, அன்னையிட்ட தீ, மங்கையிட்ட தீ, கொங்கையிட்ட தீ... தீ தீயோடு சேர்ந்து தீயாகிறது மதி, இப்போதும் நெருப்பின் தலை ஒரு சர்ப்பத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் மகுடியைக் கைப்பற்ற வேன்டிய வேலையிருக்கிறது நண்பர்களே. போராளிகளை உலகம் கைவிட்டிருக்கலாம். போராளிகள் உலகத்தைக் கைவிட்டதில்லை என்னும் மகாவாக்கியத்தின் அர்த்தம் தெரியும் வரை தீ மயங்கி ஆடட்டும். என் மணிக்கட்டு, தொடையெலும்பு, பச்சையாய் ஒழுகும் நிணம், 16 பற்கள், பழுப்புநிற மீசைமுடி, என அனைத்தையும் தீ தின்கிறது. ஆனாலும் தீ மடிவதில்லை நானும்கூடத்தான். இப்போதைக்கு நான் மரித்திருக்கிறேன். தீ என்னைப் புசித்து முடித்து நீ கூந்தல் அவிழ்ப்பதைப் போல சாம்பல்துகளாய் அவிழ்ந்திருக்கிறது. என் கல்லறையில் பூத்திருக்கின்றன சாம்பல்நிற மலர்கள். குட்டிம்மா, நீ கண்களை அகல விரித்துச் சிரிக்கிறாய். உன் கண்களில் உருள்கிறது சாம்பல்நிறக் கண்மணி.

Saturday, June 6, 2009

அஞ்சலி - ராஜமார்த்தாண்டன்

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர்களில் ஒருவரும் இலக்கிய நட்புகளை தொகை தொகையாய்ப் பேணுபவருமான ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார். தமிழினி பதிப்பகத்திற்காக பாரதிக்குப் பிறகு தமிழின் முக்கியமான 150 கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ‘கொங்குதேர் வாழ்க்கை‘ என்னும் பெயரில் புத்தகமாய்க் கொண்டு வந்தார். அந்த 150 கவிஞர்களில் நானும் ஒருவன். அதற்காக அனுமதி கேட்பதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். அப்படித்தான் ராஜமார்த்தாண்டன் பரிச்சயம். பிறகு தினமணி அலுவலகங்களில் ஓரிருமுறை. ஒருமுறை ராயப்பேட்டை மேன்ஷனில் அவரைப் பார்க்கச் சென்றபோது இரண்டு கட்டில்கள் அவர் அறையில் இருந்தன. இரண்டு கட்டில்கள் நிறைய புத்தகங்கள். அவரோ மதுவருந்தி விட்டு தரையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். பலமணி நேரம் காத்திருந்தும் அவர் எழுவதாகத் தெரியவில்லை. அனேகமாக நான் வந்துபோனதே அவருக்குத் தெரிந்திருக்காது. ராஜமார்த்தாண்டன் தொகுத்த அந்த கவிதைத்தொகுப்பு குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. யவனிகாசிறீராம், என்.டி.ராஜ்குமார் போன்ற பல கவிஞர்களின் கவிதைகளை அவர் நிராகரித்திருந்தார் என்பதுதான் காரணம். நான் அதிகமும் அறிமுகமாகாத கவிஞன் மற்றும் காலச்சுவடிற்கு எதிராக எழுதி வந்தவன் என்றபோதும் எனது கவிதைகளை அவர் தேர்ந்தெடுத்திருந்தது அவரது நடுவுநிலைமைக்குச் சாட்சி. விக்கிரமாதித்யனைப் போலவே தமிழ்ச்சூழலில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்த ராஜமார்த்தாண்டனை இழந்தது எல்லா இலக்கிய நண்பர்களுக்குமான இழப்பு. நண்பர்களுக்கான வருத்தங்கள்.

Thursday, June 4, 2009

வெறுப்பைக் கட்டமைக்கும் லக்கிலுக்

சமீபமாக வலையில் அதிகம் பதிவதற்கான அவகாசமும் மனநிலையுமில்லை. என்றபோதும் விடாமல் அவ்வப்போது பதிவுகளை வாசிப்பதுண்டு. ஈழப்போராட்டம் ஒரு மாபெரும் பின்னடைவைச் சந்தித்து இலங்கை அரசின் வதைமுகாம்களில் மிச்சமிருக்கும் தமிழர்கள் உயிரோடு இருக்கும் பாவத்தாலேயே ஆகக்கீழான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற தருணங்களில் கம்ப்யூட்டரும் கீபோர்டும் இருக்கிறது என்பதற்காக எழுதித்தள்ளப்படுகிற படு அபத்தங்களை வாசிக்க நேர்கையில் ஆயாசமே எஞ்சுகிறது.

நக்கீரனின் ‘பொறுக்கித்தனம்’ குறித்து பைத்தியக்காரன் எழுதிய பதிவு, ஈழப்போராட்டத்தில் ‘அகிம்சையின் முக்கியத்துவம்’ குறித்து சாருவும் ஜெயமோகனும் உதிர்த்த அபிப்பிராயங்கள், தமிழ்நதியின் எதிர்வினைப் பதிவு, சாருவின் மீதான விமர்சனப்பதிவுகள், சாருவை ஆதரித்த பதிவுகள் என தொடர்ந்து நேற்றோ அதற்கு முதல்நாளோ லக்கிலுக் எழுதிய ‘இப்போது வருந்துகிறோம்’ பதிவு.

கொஞ்சம் கொஞ்சமாக அபாயம் அதிகரித்து இப்போது வெறுப்புணர்வு உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே நினைக்கத்தோன்றுகிறது லக்கியின் பதிவையும் அதற்கிடப்பட்ட பின்னூட்டங்களையும் நோக்கும்போது. சாரு எழுதியிருப்பதைப் போல அகிம்சைப்போராட்டம்/ ஆயுதப்போராட்டம்தான் சரி என்றெல்லாம் கறுப்பு வெள்ளையாக பிரச்சினைகளை அணுகமுடியாது. மேலும் புலிகள் தவறு செய்திருக்கிறார்கள், இத்தகைய பாரிய தோல்விகளுக்கு புலிகள் இழைத்த தவறுகளும் ஒரு காரணம் என்பதெல்லாம் உண்மையென்றாலும் ஒரு விடுதலைப்போராட்டமே தவறு என்று சொல்வது எந்த நியாயத்தில் சேர்த்தி, அதுவும் அது பின்னடைவைச் சந்தித்திருக்கும் நேரத்தில்.

சாரு, காந்தி குறித்து எழுதிய கருத்துக்களைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக உரையாடலாம். ஆனால் ஜெயமோகன் குறித்து தமிழ்நதி எழுதியதை யாரும் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை. மீண்டும் விவாதங்கள் சாருவை ஆதரித்தும் எதிர்த்தும் சாருவை என மய்யப்படுத்தியே நிகழ்ந்தன. உண்மையில் ஜெயமோகன் ஒரு காமெடி பீஸ். அவர் சீரியசாகப் பேசுகிற பல விஷயங்கள் மிக மிக மேலோட்டமானவை. ஏதாவது உளறி, ஆனால் அது உளறல் என்று தெரியாத அளவிற்கு ‘தத்துப்பித்து தத்துவ’ முலாம் பூசுவதாலேயே அது படு பேமஸாகிவிடுகின்றன. காந்தி குறித்து ஜெமோ உதிர்த்த முத்துக்களும் அப்படியே.

உதாரணமாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான முரண் குறித்து அவர் சொல்கிற கருத்துக்கள் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் காந்தியாலேயே முன்வைக்கப்பட்டது. அம்பேத்கரால் அது பலமாக மறுக்கப்பட்டது. ‘தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமை தந்துவிட்டால் தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று காந்தி ‘கருதினாராம்’. அவருடைய நிலைப்பாடு சரியாக இருந்ததனால்தான் காங்கிரஸ் இட ஒதுக்கீடை அங்கீகரிக்கும் அளவுக்காவது இப்போதுவரை இறங்கிவந்திருக்கிறதாம்’.

அட லூசுகளா! கருதினார் என்ன கருதினார்? காந்தி வெளிப்படையாகவே சொல்லவே செய்தார், ‘‘முஸ்லீம்களும் சீக்கியர்களும் தங்களுக்கான தனிவாக்காளர்தொகுதி கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று. தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற அபத்தமான வாதத்திற்கு அம்பேத்கர் மிகத் தெளிவாகவே பதில் சொன்னார், ‘இப்போது மட்டும் என்ன வாழுகிறது?’ என்று. தனி கிணறு, தனிச்சுடுகாடு, தனி வாழ்விடம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கிவிட்டு தனி வாக்காளர் தொகுதி கேட்டால் மட்டும் ‘அய்யோ தனிமைப்பட்டுப் போய்விடுவீர்கள்’ என்று பாசாங்கு செய்வது உச்ச அயோக்கியத்தனம்!

ஜெயமோகன் வாதப்படியே இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் ‘தனிமைப்பட்டு விட மாட்டார்களா’ என்ன? ஆக, இந்த மாதிரியான பிரதிவாதங்கள் எல்லாம் பல தசாப்தங்களுக்கு முன்பே நடந்து முடிந்த சமாச்சாரங்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகளே தெரியாமல் ‘பி.தொ.நி.கு’ என்று ஒரு குப்பையை எழுதுவது, காந்தி, சேகுவாரா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஆர்யா, சூர்யா என்று சகட்டுமேனிக்கு அபிப்பிராயங்களைக் கழிந்து செல்வது என இப்படியான முட்டாள்தனங்கள் நிகழ்வதற்கு ஜெமோ மட்டுமே காரணமில்லை. படிக்கிற வாசகி/கன் கூமுட்டையாக இருந்தால் ஜெமோ என்ன வேண்டுமானாலும் உளறலாம்தானே!. தனக்கு நன்கு தெரிந்த விஷயத்தில் ஜெயமோகன் உளறத்தொடங்கும்போது மிக எளிதாக அம்பலப்பட்டுப்போகிறார்.

ஜெயமோகனின் வக்கிரமும் அபத்தமும் கடைசியாக செத்துப்போன கமலாதாஸ் சுரையாவையும் விடவில்லை. ‘அவர் கறுப்பாக, குண்டாக, அவலட்சணமாக இருந்ததால்தான் பாலியல் பற்றி எழுதினார்’ என்பது ஜெமோவின் ‘கண்டுபிடிப்பு’. கமலாதாஸ் குறித்த கட்டுரையில்கூட இஸ்லாம் குறித்த வெறுப்பைக் கக்கியுள்ளார் பாருங்கள். கமலாதாஸ் இஸ்லாத்திற்கு மாறியதும், இறுதிக்காலத்தில் அதிலிருந்து வெளியே வர விரும்பியதும் பலரும் அறிந்ததுதான். ‘‘எனக்கு மதம் அலுத்துப்போச்சு’ என்றுகூட கமலாதாஸ் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறக்கூடாது என்று ‘ரகசியமாக’ மிரட்டல்கள் வந்ததாலேயே அவர் மறுமதம் மாறவில்லையாம்! ‘இந்துக்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள், ஆனால் இஸ்லாமியர்களோ கொடூரமானவர்கள்’ என்று சொல்லாமல் சொல்கிறார் ஜெமோ. ‘ரகசியமாக’ மிரட்டப்பட்டது ஜெயமோகனுக்கு மட்டும் எப்படி தெரியவந்தது என்று தெரியவில்லை.

ஆக இத்தகைய வெறுப்பின் மனநிலை இப்போது லக்கிலுக்கிற்கும் ‘பிரமாதமாக’ கைகூடி வந்திருக்கிறது. முஸ்லீம்களுக்குப் பதிலாக ஈழத்தமிழர்கள் என்று வெறுப்பின் இடம் மட்டும் மாறியிருக்கிறது. ‘ராஜீவ்காந்தி கொலையின்போது திமுக கொடிக்கம்பங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன, திமுகவினர் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அதனால் அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு’ என்று சின்னப்புள்ளத்தனமாக வரலாற்றின் கணிதத்தைச் சமன் செய்கிறார் லக்கி. அதை விட மோசம் ஈழத்தமிழர்கள் x இந்தியத்தமிழர்கள் என்கிற மோசமான முரணையும் அவரது எழுத்துக்கள் கட்டமைக்கின்றன.

ராஜிவ் கொலையின்போது நிகழ்ந்த வன்முறைகளும் காலித்தனங்களும் தமிழகம் நன்கு அறிந்ததுதான். அதற்காக ஒரு இனப்படுகொலையின்போது வாளாவிருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை. லக்கியின் வாதங்களையே ஒத்துக்கொண்டால் கூட, லக்கி மனச்சாட்சிப்படி பதில் சொல்லட்டும். அந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட திமுககாரர்கள்தானா இப்போது அதிகாரத்தின் ருசியை அனுபவித்துக்கொண்டிருக்கிறப்பவர்கள்?

மிசா, தடா, ராஜீவ் கொலையை ஒட்டி நிகழ்ந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது அரசின் ஒடுக்குமுறையைச் சந்தித்தவர்கள் இவர்கள்தானா லக்கி இப்போது திமுகவின் உள் மற்றும் வெளி பதவிகளை நிரப்பிக்கொண்டிருப்பவர்கள்? ஒரு ஊழல்மயப்பட்ட தலைமுறை அதிகாரத்தை ருசிப்பதற்காகத்தான் கடந்த தலைமுறையின் தியாகங்கள் பலியாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது திமுக தலைமையால் மீண்டும் மீண்டும் தியாகங்கள் ‘சொல்லப்படுகின்றனவே’ தவிர மதிக்கப்படுவதில்லை. திமுக தனக்கான எல்லா அடிப்படைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறது. அதன் உச்சம் ஈழப்பிரச்சினை என்பதைக் கொஞ்சமும் மனச்சாட்சியுள்ள திமுககாரன் அறிவான். ஈழத்தமிழர்கள் மீதான லக்கியின் இத்தகைய பதிவுகள் ஒரு மோசமான பாசிச மனநிலையைக் கட்டமைக்கும் தன்மை வாய்ந்தவை. தான் சார்ந்திருக்கிற கட்சிக்கு இருக்கக்கூடிய ‘இக்கட்டுக்களையும்’, ‘நிர்ப்பந்தங்களையும்’ வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக மாற்றிப்போட்டு நியாயப்படுத்துவது நீதியாகாது.

இந்திராகாந்தி கொலையையட்டி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்குக் காரணம் யார் என்பதை சீக்கியர்கள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள் என்பதன் சாட்சியம்தான் அந்த கனத்த சப்பாத்து. ஆனால் ‘ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொலைகாரர்களாக்கிய’ ஜெயின்கமிஷன் அறிக்கையையும் அதைக் காரணமாய் வைத்து திமுக ஆட்சியைக் கலைக்க வைத்த காங்கிரசையும் நோக்கித்தான் லக்கியின் கோபம் திரும்பியிருக்க வேண்டும். அல்லது அத்தகைய மோசமான நிலைப்பாடுகளை மேற்கொண்ட காங்கிரசுடன் உறவைத் தொடர்வதற்காக எத்தகைய சமரசங்களையும் மேற்கொள்ளத் தயாராயிருக்கும் தன் கட்சித்தலைமையின் மீது திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அது அநியாயமாக ஈழத்தமிழர்கள் மீதான வெறுப்பை உற்பத்தி செய்கிறது.

நண்பர் லக்கிக்கு, சில அபத்தமான நிகழ்வுகளை, (ஈழப்போராட்டத்தின் பின்னடைவிற்குப் பிறகு, மிக மிகச் சமீபத்தில் நிகழ்ந்தவை) எந்த மேற்கத்திய அறிஞரின் பெயர் உதிர்த்தலுமின்றி, செய்தித்தாள்களில் இருந்தே வரிசைக்கிரமமாக முன்வைக்கிறேன். கணக்கு சரியாகிறதா என்று பாருங்கள்.

1. ‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாது’ சென்று கருணாநிதி பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார்.

2. இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தான் வாக்களித்தது மட்டுமில்லாமல், இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளையும் அணிதிரட்டுகிறது.

3. ‘மாநிலச்சுயாட்சிக்காகப் பாடுபடுவதுதான் தன் பிறந்தநாள் செய்தி’ என்று அறிவிக்கிறார் மு.கருணாநிதி.

முத்தமிழே நீ வாழ்க! மூவேந்தே நீ வாழ்க! வாழ்க!
குளிர்மதியே நீ வாழ்க! குறள்வழியே நீ வாழ்க! வாழ்க!

சுபம்