Wednesday, June 10, 2009

அந்த நெருப்பு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது
இது ஒரு மீள்பதிவு. சுந்தரோடும் அய்யனாரோடும் சண்டை பிடித்துத் திரிந்த தருண இடைவெளியின்போது எழுதியது. சமயங்களில் நமது பதிவுகளைச் சிறிதுகாலத்தின் பின் வாசிக்கும்போது சில பதிவுகள் நமக்கே ஆச்சரியமூட்டுபவை. இந்த பதிவும் அப்படியான ஒன்று. நாஜி வதைமுகாமொன்றில் வதைக்கப்பட்டு மீண்ட எலிவீஸல் என்பவர் தனது அனுபவம் குறித்துப் பகிர்ந்தது தமிழினிப் பதிப்பகத்தின் வெளியீடாய் 'இரவு" என்னும் நூலாய் வந்திருந்தது. ஒவ்வொரு ப‌க்கமும் மரணத்தின் வாதையைச் சுமந்தவை. அந்த நூலைப் படித்தபோதிருந்த மனநிலையே இப்பதிவு. முன்பு இப்பதிவைப் படிக்க வாய்ப்பற்ற வாசகநண்பர்களுக்காக இம்மீள்பதிவு. மேலும் ஈழத்து வதைமுகாம்களில் தமிழர்கள் வதைபடுவதையும் இங்கு ஒப்புநோக்கலாம். இந்த பதிவு ஜ்யோவ்ராம்சுந்தருக்குச் சமர்ப்பணம்.

இப்போது நான் யாருடனுமில்லை. யாரும் இப்போது என்னுடனுமில்லை. இப்போது இருப்பதெல்லாம் எலிவீசலின் இரவு. இரவுகளைக் கொன்ற இரவு. தூக்கத்தின் மீது புரண்டெழுந்த இரவு. கனவுகளில் ஒரு மிருகத்தைப்போல் துரத்திய இரவு.எலீ இப்போது தன்னந்தனியாய் ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் தங்கை ஜிபோரா எங்கிருக்கிறாள் தெரியவில்லை. அந்த நாஜிவதை முகாமின் புகைக்கூண்டில்தான் என் அடிவயிற்று மாமிசம் எரிகிறது எலீ. இரவு, அந்த இரவு, இது வெண்ணிற இரவல்ல, ஒரு புகைமூட்டம்போல் குழம்பிய கருப்பு இரவு. அந்த கடைசி இரவில்தான் புகைவண்டியில் மிருகங்களைப் போல் மனிதர்கள் அடைக்கப்பட்டிருந்த புழுக்கமும் வியர்வையும் நிரம்பிய அந்தப்புகைவண்டியில்தான் அவள் ஓயாது குரலெழுப்பிக்கொண்டிருக்கிறாள். தீ...தீ. மோசோ கிழவன் சொன்னதில் தவறில்லை. நீ இப்போது கப்பாலாவைக் கைவிட்டிருந்தாய். உன் கடவுள் எரியும் ஒவ்வொரு சடலத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். யார்கண்டது? பிணங்களைப் புதைக்கும் வேலையை அவர் ஏற்றிருக்கக்கூடும். ஆனால் எலீ தீ எப்போதும் ஒரே திசையில் எரிவதில்லை, அது காற்றைப் போல், நதி போல், கண்ணீர் போல், முத்தம்போல் நில்லாது பரவுகிறது. நெடுநாட்களுக்குப்பின் அந்தத் தீ மய்யத்தை அடைந்தபோது அது ஒரு சிம்மாசனத்தின் தோற்றத்தை அடைந்திருந்தது. பிறகு அது ஆலிவ் இலைகளை ருசித்து உண்டது. அந்த நெருப்பு ஒரு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது. காலத்தின் மகுடிஓசையில் அது நெளிந்து நடனம் ஆடியது. அது ஒரு அழகிய நடனம் என்று சொல்வதிற்கில்லை. இப்போது பாம்பு யுகங்களின் மீது ஒரு மலைப்பாம்பைப் போல் புரண்டு எழுகிறது. பல நூற்றாண்டுகளை விழுங்கி அதன் வயிறு வீங்கியிருந்தது. முன்னொரு காலம் இந்தத் தீ அரச இலையின் வடிவத்திலிருந்தது. அதன் நிறமோ மஞ்சள். அது ஒரு மாங்கனியைப் போல் மஞ்சள்பூத்திருந்தபோது தீ இனிது, தீ இனிது. மஞ்சள். தர்மசக்கரத்தை உருட்டியபடி அரசமரத்தின்கீழ் அமர்ந்திருந்த புத்தன் மஞ்சளாடை அணிந்திருந்தான். மாசுமருவற்ற மனமுடையோரே மஞ்சளாடை உடுத்தத்தக்கவர். புத்தன் புன்னகத்தான். தீ சிரித்தது. பின்னாளிலும் புத்தன் புன்னகைத்ததாய்ச் சொல்லப்படட்து. அப்போது தீ அணுகுண்டாய் வெடித்தது யதீ, உண்மையில் புத்தன் புன்னகைக்கவில்லை. அவன் வாயில் குறி திணிக்கப்படட்து என்பதே உண்மை. பின்னும் பின்னுமான ஒரு பென்னம் பெருநாளில் தீயின் நிறம் காவிக்கு மாறியிருந்தது. குரங்கின் வாலிருந்த தீ ஒரு நூலகத்தை விழுங்கி முடித்திருந்தது. வரலாற்றின், ஞாபகங்களின் சாம்பல்களை துவராடை அணிந்த துறவியர் அள்ளிச்சென்றனர். ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்தனர். இப்போது பிக்குகளின் வாலிலிருந்த தீ புத்தனை எரித்திருந்தது. காலத்தினிடுக்குகளில் ஒரு அகதியின் ரகசியப்பாடல் போலவும், ஒரு தன்பால் புணர்ச்சியாளனின் அழைப்பு போலவும் தீ ரகசியமாய்க் கசிந்தது. தீ நாயின் நாக்கைப் போன்று சிவந்திருந்தது. இப்போது தீயின் நிறம் சிவப்பு. பாலற்று குழந்தை சப்பியதால் ஜென்னியின் மார்புகளில் வழிந்த ரத்ததைப் போல் சிகப்பு. ஜென்னி தன் இடதுமுலையை அறுத்து எறிகிறாள். தீ பரவுகிறது. பிரியத்திற்கும் பிரியமான மார்க்ஸ், தயவு செய்து உன் மேல்கோட்டைக் கழற்றாதே, குளிர் உன்னைக் கொன்றுவிடும் மார்க்ஸ்... ஒரு தீயைப் புசித்து தீயைப் பிரவசித்திருந்தாய் மார்க்ஸ். உன் நெருப்புத்துண்டுகள் நாங்கள் வாழுமிடத்திற்கு வந்து சேர்ந்தபோது அதன் வடபகுதி நீலமாகவும் தென்பகுதி கருப்பாகவுமிருந்தது. முன்னையிட்ட தீ, அன்னையிட்ட தீ, மங்கையிட்ட தீ, கொங்கையிட்ட தீ... தீ தீயோடு சேர்ந்து தீயாகிறது மதி, இப்போதும் நெருப்பின் தலை ஒரு சர்ப்பத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் மகுடியைக் கைப்பற்ற வேன்டிய வேலையிருக்கிறது நண்பர்களே. போராளிகளை உலகம் கைவிட்டிருக்கலாம். போராளிகள் உலகத்தைக் கைவிட்டதில்லை என்னும் மகாவாக்கியத்தின் அர்த்தம் தெரியும் வரை தீ மயங்கி ஆடட்டும். என் மணிக்கட்டு, தொடையெலும்பு, பச்சையாய் ஒழுகும் நிணம், 16 பற்கள், பழுப்புநிற மீசைமுடி, என அனைத்தையும் தீ தின்கிறது. ஆனாலும் தீ மடிவதில்லை நானும்கூடத்தான். இப்போதைக்கு நான் மரித்திருக்கிறேன். தீ என்னைப் புசித்து முடித்து நீ கூந்தல் அவிழ்ப்பதைப் போல சாம்பல்துகளாய் அவிழ்ந்திருக்கிறது. என் கல்லறையில் பூத்திருக்கின்றன சாம்பல்நிற மலர்கள். குட்டிம்மா, நீ கண்களை அகல விரித்துச் சிரிக்கிறாய். உன் கண்களில் உருள்கிறது சாம்பல்நிறக் கண்மணி.

4 comments:

எம்.எம்.அப்துல்லா said...

அட :)

லக்கிலுக் said...

படித்து முடித்ததுமே பன்றிக்காய்ச்சல் வந்தது மாதிரி இருக்கிறது :-)

KARTHIK said...

இரவு புத்தகத்த படிக்கும் போது life is beautiful படம் தான் நினைவுல வந்து போனது.
யூதனுக்கு அடுத்தபடியா த்மிழன் தான் உலகத்துல அதிக துன்பம் அனுபவிச்சிருப்பான்.சோழகன்,ஈழன்......

நர்சிம் said...

//இப்போதும் நெருப்பின் தலை ஒரு சர்ப்பத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் மகுடியைக் கைப்பற்ற வேன்டிய வேலையிருக்கிறது நண்பர்களே. போராளிகளை உலகம் கைவிட்டிருக்கலாம். போராளிகள் உலகத்தைக் கைவிட்டதில்லை என்னும் மகாவாக்கியத்தின் அர்த்தம் தெரியும் வரை தீ மயங்கி ஆடட்டும்//

என்ன சொல்வதென்றே தெரியவில்லை... வரிகளில் வார்த்தைகளின் ஆளுமை.