Sunday, March 30, 2008

தோழர்.தமிழச்சி நீக்கத்தைக் கண்டிக்கிறேன்


சில தொடர்ச்சியான தனிப்பட்ட வேலைகள், பயணம் ஆகியவற்றால் இணையத்திற்கு வந்து சில நாட்களாகின்றன. ஆனாலும் சில நண்பர்கள் 'தமிழ்மணப் பரபரப்புத் தகவல்கள்' குறித்து தொலைபேசியின் மூலம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இப்பொழுதுதான் ஓரளவிற்கு முழுமையாக செய்திகளை அறியமுடிந்தது. எனவே தாமதமான எதிர்வினைக்கு நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

தோழர்கள் தமிழச்சியும் லக்கிலுக்கும் முதலில் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதைக்கண்டித்து நண்பர் ஓசைசெல்லா தானாகவே தமிழ்மணத்திலிருந்து விலகியிருக்கிறார். ஆனால் லக்கியின் சில இடுகைகள் மட்டும் நீக்கப்பட்டு அவர் தமிழ்மணத்தில் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறார். ஆக, இப்போதைக்குத் தோழர்.தமிழச்சி மட்டுமே முழுமையாகத் தமிழ்மணத்தினின்று நீக்கப்பட்டிருக்கிறார்.

தமிழச்சியின் பணிகள் குறித்து மதிப்பிட வேண்டுமானால் தமிழ்ச்சூழல் குறித்த குறைந்தபட்சப் புரிதல் அவசியம். தமிழ்ச்சமூகத்தின் ஒப்பாரும் மிக்காருமில்லாத சுயசிந்தனையாளர் தோழர்.பெரியார் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமூகப்பொதுவாழ்க்கைக்காகவே செலவழித்தவர்.

ஏறக்குறைய அரைநூற்றாண்டிற்கும் மேலாகப் பொதுவெளியில் எதிர்ப்புகளைத் தாண்டியும் இயங்கிவந்த அவரின் இடையீடுகள் முழுக்க முழுக்கப் அப்பொதுவெளியிலேயே பதிவு செய்யப்பட்டன. பெண்ணியம், எதிர்க்கலாச்சாரம் தொடங்கி தேசப்பிரிவினை, கம்யூனிச ஆதரவு வரை நம்மைப் போன்று இணையத்தளம மாதிரியான பாதுகாப்பான, அதிகமும் ஆபத்தில்லாத ஊடகங்களின் வழி இயங்கிவந்தவரோ, குறைந்தளவிலான ஒரு இலக்கியக்கூட்டத்தில் எதிர்க்கலாச்சாரம் குறித்து உரையாடியவரோ அல்ல பெரியார். திருமணவிழாக்களுக்குச் சென்று திருமணமறுப்புப் பிரச்சாரம் செய்தவர். லட்சக்கணக்கான மக்கள் கூடிய மாநாட்டில் 'ஒரு திருமணமான பெண் இன்னொரு ஆணை விரும்புவது தவறாகக் கொள்ளப்படக்கூடாது' என்று தீர்மானம் கொண்டுவந்தவர்.

இவ்வாறாகத் தம்வாழ்க்கை முழுதும் பொதுத்திறந்தவெளியிலேயே இயங்கியதால் பெரியாரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் முழுமையாகத் தொகுக்கப்பெறாத நிலையிலேயே இருக்கிறது. பெரியாரின் சிந்தனைகள் தொகுக்கப்பெறாதது தமிழ்ச்சமூகம் தனக்குத்தானே செய்துகொண்ட சுயதுரோகமும் வரலாற்றுப் பிரக்ஞையற்ற அறியாமையுமாகும்.

காங்கிரசு ஆளும் மகாராட்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையும், பவுத்ததிற்குப் புதிய அறம்சார்ந்த அரசியல்வடிவம் கொடுத்தவரும், இந்தியாவின் தலைசிறந்த அறிவுஜீவியும் சட்ட மற்றும் பொருளாதாரமேதையுமான பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக வ்ந்துள்ளன. ஆனால் திராவிடக்கட்சிகள் மாறிமாறி நாற்பதாண்டுகாலத்திற்கும் மேலாய் ஆண்டுவரும் தமிழகத்தில் பெரியாரின் எழுத்துக்கள் தொகுக்கப்பெறவில்லை.

அய்ந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், பெரியாரின் சிந்தனைகளை முன்வைத்து உரையாடவேண்டுமென்றால் அதற்கு ஆதாரமாக இருந்தவையெல்லாம் மார்க்சியப்பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர்.வே.ஆனைமுத்துவால் தொகுக்கப்பட்ட 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்' மூன்று தொகுதிகளும். திராவிடர்கழகத்தலைவர் தோழர்.கி.வீரமணியால் தொகுக்கப்பட்ட 'பெரியார்களஞ்சியம்' நூல்களுமே.

அதற்குப்பின்னரே பெரியார்திராவிடர்கழகத்தோழர்கள் முன்முயற்சியெடுத்து குடியரசுத் திரட்டு (1925 முதல்) போன்ற பல்வேறுத் தொகுப்புநூல்களைக் கொணரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். பெரியார் தலித்விரோதி, முஸ்லீம்விரோதி என்றெல்லாம் அவதூறுகள் பரப்பப்பட்டப்பட்ட சூழலில் அவ்வரசியல் நெருக்கடியின் விளைபொருளாய் திராவிடர்கழகத்தால் 'பெரியார் - ஜாதி - தீண்டாமை' பாகங்கள் வெளிவந்துள்லன.

எப்படிக் கணக்கிட்டுப் பார்க்கினும் இப்போது நம் கைவசமிருப்பது பெரியாரின் சிந்தனைகளில் கால்வாசிக்கும் குறைவே.

இந்நிலையில் நவீன அறிவியலின் விளைபொருளான இணையத்தில் பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்து ஆவணப்படுத்துவதும் குறிப்பாக அரசியல்நீக்கம் செய்யப்பட்ட, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமையாய்ப் பழக்கப்பட்ட இன்றைய இளையதலைமுறைக்கு அதைக் கொண்டு சேர்ப்பதும் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த பணி.

அத்தகையதொரு பணியைத் தானே மேற்போட்டுக்கொண்டு இயங்கியவர், இயங்கிவருபவர் தோழர்.தமிழச்சி. இதற்காகத் தமிழ்ச்சமூகம் தமிழச்சிக்குக் கடமைப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பெண்ணாயிருந்து தனிப்பட்ட அலுவல்களுக்கிடையில் பெரியாரின் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் உரைகளையும் தட்டச்சு செய்து ஏற்றுவது என்பது உண்மையில் செயற்கரிய செயலேயாகும்.

ஆனால் இப்பொழுது தோழர்.தமிழச்சி தமிழ்மணத்தினின்று நீக்கப்பட்டிருக்கிறார். அதற்குக் காரணங்களாய்ச் சொல்லப்படுவது அவர் சில 'ஆபாசமான' வார்த்தைகளைப் பயன்படுத்தினார், தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டார், விளம்பரமோகத்தோடு ஈடுபட்டார் என்பன போன்றவையாம்.

தமிழச்சியின் இன்றைய எழுத்துநடை மற்றும் முன்வைக்கும் சிந்தனைகளில் பலருக்கும் விமர்சனங்கள் இருப்பதைப்போலவே எனக்கும் விமர்சனங்களும், மறுப்பும் விலகலும் இருப்பதைப்போலவே உடன்பாடும் ஒன்றுபடும் புள்ளிகளும் இருக்கவே செய்கின்றன. அத்தகைய விமர்சனங்களை நேர்மையாக நான் என் எழுத்திலேயே பதிவு செய்துமிருக்கிறேன். தமிழச்சியும் தனது எழுத்துக்கள் குறித்து சுயவிசாரணையுடன் கூடிய பின்னூட்டமொன்றும் என் பதிவொன்றிற்கு இட்டுமிருந்தார்.

மேலும் வலைப்பக்கங்களில் என்னைவிட யாரும் தமிழச்சியைக் கிண்டலடித்திருக்கமுடியாது. ஆனாலும் இதுவரை அதற்காகத் தனிநபர்த்தாக்குதலில் இறங்கியவரல்ல தமிழச்சி. பிரச்சினை வேறு எங்கோ இருக்கிறது. மேலும் ஒருவர் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி எல்லச்சந்தர்ப்பத்திலும் எழுதமுடியாது என்கிற பாலபாடத்தைக்கூட மீண்டும் இப்போது சொல்ல நேர்ந்தால் அதைவிடச் சிறுபிள்ளைத்தனம் கிடையாது.

/தமிழ்மணத்திலிருப்பவர்களாகிய எங்களுக்கும் அரசியல் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் உண்டு. ஆனால் அதன் அடிப்படையில் பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டுவதும், நீக்குவதும் கிடையாது. எனவே பெண்ணியம், பெரியாரியம், இந்துத்துவம், பார்ப்பனியம் என்ற அடிப்படைகளில் தமிழ் மணத்தின் நிலைப்பாட்டை அலச வேண்டாம். வழக்கமாக ஊடகங்கள் செய்யும் இந்த அரசியல் கருத்துத் தணிக்கையிலிருந்து விடுபட்ட ஊடகமாக வலைப்பதிவுகள் வளரவேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது, அதற்காக உழைக்கிறது. /

என்கிறார் தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான நண்பர் சங்கரப்பாண்டி. நல்லது. வரவேற்கத்தக்க பன்மைத்துவத்திற்கு மதிப்பளிக்கும் அணுகுமுறை என்று மகிழும் அதேவேளையில் இந்த அ-தணிக்கை வெறுமனே கருத்துக்களுக்கு மட்டும்தானா, எழுத்து மற்றும் எழுத்துமுறைகளுக்கு இல்லையா என்கிற கேள்வியை எழுப்பவேண்டியது அவசியமாகிறது. வலதுசாரிப் பதிவுகளையும் அனுமதிக்கக்கூடிய அளவு தாராளவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழ்மணம், 'ஆபாசப்பதிவுகள்' குறித்து மட்டும் இறுக்கமான, கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது ஏன்?

மேலும் தமிழ்மணம் ஒரு வலைத்திரட்டி மட்டுமே. அதைத் தாண்டியும் கூட இணையத்தின் வேறு சிலபக்கங்களின் வழியாகவும் சிலவாரங்களுக்கு முன்புவரை ஆனந்தவிகடனில் வந்த 'வலைப்பூ அறிமுகங்கள்' வழியாகவும் பல புதிய வாசகர்கள் பதிவர்களைக் கண்டடைந்திருக்கின்றனர். எனது கட்டுரைகள் கணிசமனா இடைவெளியில் கீற்று இணையத்தில் வெளியிடப்படுவதால் கீற்றின் வழியாக வாசகர்கள் என் பக்கத்தை வந்தடைந்த அனுபவமும் எனக்கு உண்டு. மேலும் பல பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த பதிவர்களின் பக்கங்களைக் கூகுள் ரீடர்வழியாகவும் படித்துவருகின்றனர்.

எனவே தமிழ்மணம் பல்வேறு பதிவர்களின் பதிவுகளைப் பொதுவெளியில் வைப்பதன்றிப் பதிவர்களின் தெரிவுகளைத் தீர்மானிப்பது இயலாதவொன்று. உண்மையில் தமிழச்சியின் இடுகைகள் மிக மோசமானவை, கீழ்த்தரமானவை என்று கருதப்படக்கூடிய பதிவர்கள் அப்பதிவுகளைப் படிப்பதைத் தவிர்க்கும் சாத்தியங்கள் உள்ளன. மேலும் நமக்குப் பிடித்த பதிவர்கள் என்று நம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் அத்தனைப் பதிவுகளையும் கூட முழுமையாக படித்துவிடுவது சாத்தியமற்றதாயிருக்கும்போது தமிழச்சியின் எழுத்துநடைகளில் உவப்பில்லாதவர்கள் அதை விலக்கிவிட்டுப் போவது சாத்தியமில்லாததல்ல.

எப்படிப் பார்க்கினும் இது ஒரு கருத்துச்சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் கொலைசெய்யும் அநீதி. பன்மைத்துவம், நுண்ணரசியல், மற்றமைகளை அங்கீகரித்தல் போன்ற நவீனச்சிந்தனைகளின்பால் நீண்டகால மற்றும் ஆழமான வாசிப்பும் அவதானிப்பும் கரிசனமும் கொண்ட தோழர் பைத்தியக்காரன் போன்ற பதிவர்கள் கூட இத்தகைய நுண்ணதிகாரச் செயற்பாடுகள் குறித்து எவ்விதக் கேள்வியெழுப்பாமலிருப்பதும் குறைந்தபட்சம் தம் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைப் பதிவு செய்யாமலிருப்பதும் அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் ஒருசேர அளிக்கின்றன.

வெறுமனே கவிதை எழுதுவது, சமையற்குறிப்புகள் எழுதுவது, மொக்கைத் திரைப்படங்களுக்கு அதைவிடவும் மொக்கையாக விமர்சனங்கள் எழுதுவது என்றே பல பெண்பதிவர்கள் இயங்கிவரும் நிலையில் இந்த வெளிகளைத் தாண்டி சில சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்து சரியாகவோ தவறாகவோ கருத்தினைத் துணிச்சலாகப் பதிவுசெய்பவர் தமிழச்சி. ஆனால் அவரது எழுத்க்துநடைக்காவே அவரை 'காபரே டான்சர்' என்று பெயரிலி விமர்சித்து எழுதியுள்ளதாக அறிகிறேன். (ஆனால் அந்த இடுகையை நான் படிக்கவில்லை. நண்பர்கள் சுட்டி அனுப்பினால் உதவியாக இருக்கும்.)

இத்தகைய மோசமான ஆண்மய்யத்திமிரை எந்தப் பெண்பதிவர்களும் விமர்சிக்காததும் கண்டிக்காததும் அதிர்ச்சியையும் சுயவெட்கத்தையுமே கையளிக்கிறது.

பெயரிலி தன் வயது மற்றும் வாசிப்பிற்குச் சம்பந்தமில்லாதவகையிலான இத்தகைய அறிவுகெட்ட உளறல்களை நிறுத்தவேண்டும். தமிழச்சியிடம் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் தமிழ்மணம் நிர்வாகமும் வருத்தம் தெரிவித்து தமிழச்சியை மீண்டும் தமிழ்மணத்தில் இணைப்பது மட்டுமல்லாது எதிர்காலத்தில் பதிவர்கள் தொடர்பாக இத்தகைய ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக, தமிழச்சிக்கும் எனக்கும் அரசியல்ரீதியாக ஒன்றுபடக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன என்பதால் மட்டுமே தமிழச்சி நீக்கத்தைக் கண்டிக்கவில்லை, மாறாக நேசகுமார், அரவிந்தன்நீல்கண்டன், ஜடாயு போன்ற இந்துத்துவச்சார்புப் பதிவர்கள் நீக்கப்பட்ட / விலகியபோதும்கூட அதைக் கண்டித்திருக்கிறேன் என்பதை இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.

Monday, March 24, 2008

மக்கள் தொலைக்காட்சியில் எனது நேர்காணல்

நாளை (25 -03- 2008 ) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியின் 'தமிழ்க்கூடல்' நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒளிபரப்பாகிறது. மீண்டும் அந்நேர்காணல் இரவு 11 மணியளவில் மறு ஒளிபரப்பாகிறது. வாய்ப்புள்ளவர்கள் பார்க்கவும்.

Friday, March 14, 2008

அந்த நெருப்பு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்ததுஇப்போது நான் யாருடனுமில்லை. யாரும் இப்போது என்னுடனுமில்லை. இப்போது இருப்பதெல்லாம் எலிவீசலின் இரவு. இரவுகளைக் கொன்ற இரவு. தூக்கத்தின் மீது புரண்டெழுந்த இரவு. கனவுகளில் ஒரு மிருகத்தைப்போல் துரத்திய இரவு.எலீ இப்போது தன்னந்தனியாய் ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் தங்கை ஜிபோரா எங்கிருக்கிறாள் தெரியவில்லை. அந்த நாஜிவதை முகாமின் புகைக்கூண்டில்தான் என் அடிவயிற்று மாமிசம் எரிகிறது எலீ. இரவு, அந்த இரவு, இது வெண்ணிற இரவல்ல, ஒரு புகைமூட்டம்போல் குழம்பிய கருப்பு இரவு. அந்த கடைசி இரவில்தான் புகைவண்டியில் மிருகங்களைப் போல் மனிதர்கள் அடைக்கப்பட்டிருந்த புழுக்கமும் வியர்வையும் நிரம்பிய அந்தப்புகைவண்டியில்தான் அவள் ஓயாது குரலெழுப்பிக்கொண்டிருக்கிறாள். தீ...தீ. மோசோ கிழவன் சொன்னதில் தவறில்லை. நீ இப்போது கப்பாலாவைக் கைவிட்டிருந்தாய். உன் கடவுள் எரியும் ஒவ்வொரு சடலத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். யார்கண்டது? பிணங்களைப் புதைக்கும் வேலையை அவர் ஏற்றிருக்கக்கூடும். ஆனால் எலீ தீ எப்போதும் ஒரே திசையில் எரிவதில்லை, அது காற்றைப் போல், நதி போல், கண்ணீர் போல், முத்தம்போல் நில்லாது பரவுகிறது. நெடுநாட்களுக்குப்பின் அந்தத் தீ மய்யத்தை அடைந்தபோது அது ஒரு சிம்மாசனத்தின் தோற்றத்தை அடைந்திருந்தது. பிறகு அது ஆலிவ் இலைகளை ருசித்து உண்டது. அந்த நெருப்பு ஒரு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது. காலத்தின் மகுடிஓசையில் அது நெளிந்து நடனம் ஆடியது. அது ஒரு அழகிய நடனம் என்று சொல்வதிற்கில்லை. இப்போது பாம்பு யுகங்களின் மீது ஒரு மலைப்பாம்பைப் போல் புரண்டு எழுகிறது. பல நூற்றாண்டுகளை விழுங்கி அதன் வயிறு வீங்கியிருந்தது. முன்னொரு காலம் இந்தத் தீ அரச இலையின் வடிவத்திலிருந்தது. அதன் நிறமோ மஞ்சள். அது ஒரு மாங்கனியைப் போல் மஞ்சள்பூத்திருந்தபோது தீ இனிது, தீ இனிது. மஞ்சள். தர்மசக்கரத்தை உருட்டியபடி அரசமரத்தின்கீழ் அமர்ந்திருந்த புத்தன் மஞ்சளாடை அணிந்திருந்தான். மாசுமருவற்ற மனமுடையோரே மஞ்சளாடை உடுத்தத்தக்கவர். புத்தன் புன்னகத்தான். தீ சிரித்தது. பின்னாளிலும் புத்தன் புன்னகைத்ததாய்ச் சொல்லப்படட்து. அப்போது தீ அணுகுண்டாய் வெடித்தது யதீ, உண்மையில் புத்தன் புன்னகைக்கவில்லை. அவன் வாயில் குறி திணிக்கப்படட்து என்பதே உண்மை. பின்னும் பின்னுமான ஒரு பென்னம் பெருநாளில் தீயின் நிறம் காவிக்கு மாறியிருந்தது. குரங்கின் வாலிருந்த தீ ஒரு நூலகத்தை விழுங்கி முடித்திருந்தது. வரலாற்றின், ஞாபகங்களின் சாம்பல்களை துவராடை அணிந்த துறவியர் அள்ளிச்சென்றனர். ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்தனர். இப்போது பிக்குகளின் வாலிலிருந்த தீ புத்தனை எரித்திருந்தது. காலத்தினிடுக்குகளில் ஒரு அகதியின் ரகசியப்பாடல் போலவும், ஒரு தன்பால் புணர்ச்சியாளனின் அழைப்பு போலவும் தீ ரகசியமாய்க் கசிந்தது. தீ நாயின் நாக்கைப் போன்று சிவந்திருந்தது. இப்போது தீயின் நிறம் சிவப்பு. பாலற்று குழந்தை சப்பியதால் ஜென்னியின் மார்புகளில் வழிந்த ரத்ததைப் போல் சிகப்பு. ஜென்னி தன் இடதுமுலையை அறுத்து எறிகிறாள். தீ பரவுகிறது. பிரியத்திற்கும் பிரியமான மார்க்ஸ், தயவு செய்து உன் மேல்கோட்டைக் கழற்றாதே, குளிர் உன்னைக் கொன்றுவிடும் மார்க்ஸ்... ஒரு தீயைப் புசித்து தீயைப் பிரவசித்திருந்தாய் மார்க்ஸ். உன் நெருப்புத்துண்டுகள் நாங்கள் வாழுமிடத்திற்கு வந்து சேர்ந்தபோது அதன் வடபகுதி நீலமாகவும் தென்பகுதி கருப்பாகவுமிருந்தது. முன்னையிட்ட தீ, அன்னையிட்ட தீ, மங்கையிட்ட தீ, கொங்கையிட்ட தீ... தீ தீயோடு சேர்ந்து தீயாகிறது மதி, இப்போதும் நெருப்பின் தலை ஒரு சர்ப்பத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் மகுடியைக் கைப்பற்ற வேன்டிய வேலையிருக்கிறது நண்பர்களே. போராளிகளை உலகம் கைவிட்டிருக்கலாம். போராளிகள் உலகத்தைக் கைவிட்டதில்லை என்னும் மகாவாக்கியத்தின் அர்த்தம் தெரியும் வரை தீ மயங்கி ஆடட்டும். என் மணிக்கட்டு, தொடையெலும்பு, பச்சையாய் ஒழுகும் நிணம், 16 பற்கள், பழுப்புநிற மீசைமுடி, என அனைத்தையும் தீ தின்கிறது. ஆனாலும் தீ மடிவதில்லை நானும்கூடத்தான். இப்போதைக்கு நான் மரித்திருக்கிறேன். தீ என்னைப் புசித்து முடித்து நீ கூந்தல் அவிழ்ப்பதைப் போல சாம்பல்துகளாய் அவிழ்ந்திருக்கிறது. என் கல்லறையில் பூத்திருக்கின்றன சாம்பல்நிற மலர்கள். குட்டிம்மா, நீ கண்களை அகல விரித்துச் சிரிக்கிறாய். உன் கண்களில் உருள்கிறது சாம்பல்நிறக் கண்மணி.

Thursday, March 6, 2008

பூனைகள் விளையாடும் மதுக்கூடம்அடிக்கடி பூனைகள் வந்துபோவதன்றி வேறெந்த ரம்மியமும் அறியாத மதுவங்காடியின் மூலையிலிருந்தது தமயந்தியின் கண்ணாடியிடப்பட்ட புகைப்படம். அவள் உதடுகளில் மேய்ந்துகொண்டிருந்த சர்ப்பத்தைத் தடவியபடி வந்த பேரர் கேட்டார், " வாட் டூ யூ வாண்ட் சார்?" ஆங்கிலம் தவிர வேறெதுவும் தெரியாதென்று அடம்பிடித்த பேரரிடம் ஜப்பானிய மொழியில் ஆர்டர் செய்துவிட்டு, எங்களிடம் திரும்பிய ரோசாவசந்த், அனேகமாய்ப் பேரரின் பெயர் ரவிசீனிவாசாக இருக்கலாமென்றும் கூடுதலாய்த் தகவல் சொன்னார்.

தனக்கான கடைசி மிடறுகளை கடைசி விருந்தின் ஜீசஸைப் போல அவசரமாய்க் குடித்து, திருமணப் பத்திரிகை வைப்பதற்காய் விடைபெற்றுப்போன அய்காரஸ் பிரகாசிற்கு இப்போதுதான் திருமணம் ஆகி இருநூற்றாண்டுகளாகின்றன. அத்தகைய வழுக்கி விழும் ஒரு திரவப்பொழுதுகளிலும் தன் லேப்டாப்பில் தமிழ்மணத்தின் யோனி - மன்னிக்கவும் - சூடான இடுகைகளுக்காக 5567 பதிவுகளை அனுப்பிக்கொண்டிருந்தார் தமிழச்சி.

அதிலிருந்த யோனி வார்த்தைகளை எண்ணிப்பார்த்த அய்யனார் "மொத்தம் 5008 யோனி வருகிறது. ஒரு பெரியாரிஸ்ட் இத்தகைய இந்துத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வக்காழி இந்த யோனி நாசமத்துப்போகட்டும்" என்றான் அய்யனார். அய்யனாரிடம் பூணூலும் தன்னிடம் பிளாக்பெல்ட்டுமிருக்கிறதா என்று உறுதி செய்துகொண்ட தமிழச்சி சற்றும் மனந்தளறாமல் யோனிஜெயம் எழுததொடங்கினார்.

"சாப்பிட்டியா, என்னது சாம்பார்சாதமா, நானும் அதான் சாப்பிட்டேன்" என்று 308வது முறையாக போனில் சொல்வதன் ஆயாசத்தோடு வந்தமர்ந்தான் சுகுணா. சற்றுப் பின்னர் வந்த ஜ்யோராம்சுந்தர் "உங்களைத் திட்டிப் போட்ட பின்னூட்டத்தை வெளியிட்டிருந்தீங்க. உங்கள் ஜனநாயக உணர்வுக்கு நன்றி" என்று கைகுலுக்கினார். பூனைகளின் வால்பட்டு சிதறியது கோப்பையொன்று. மீண்டும் மீண்டும் பூனைகளின் கால்பட்டு கோப்பைகள் உடைய வேண்டினோம். மதுவில் நனைத்த மீசைகளில் உருகிவழிந்த கவிதைத்துளியொன்றைக் கைப்பற்றிக்கொண்டது யாரென்று தெரியவில்லை.

மேற்கொண்டு கதையைத் தொடரமுடியாததற்குக் காரணம் நண்பனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. சுஜாதா இறந்ததைக் கொண்டாடிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னான். எனக்கு அதிர்ச்சியாகவும் ஆவேசமாகவுமிருந்தது. "ஒரு மரணத்தைக் கொண்டாட உனக்கு மனசாட்சியில்லையா?" என்றேன். " போன மாதம் மேற்குவங்காளத்தில 60000 கோழிகளை உயிரோடு புதைச்சது பற்றி நீ கவலைப்பட்டியா?" " அது சீக்குக் கோழிகள்" "நான் மூத்திரம்தான் அடிப்பேன், எய்ட்ஸ் நோயாளிகளைப் பரிவோடு கவனிச்சுக்கணும்னு கமலஹாசன் சொன்னாரே, அது என்னடா ங்கோத்தா?" " என்னதானிருந்தாலும் சுஜாதா ஒரு முக்கியமான எழுத்தாளர்" " அடப்போடாங்க, உலகத்தின் முதல் புலம்பெயர்ந்த குரலை, முதல் போர்வெறியின் விளைவாய் உண்டான கையறு நிலையைச் சொன்ன குரலை வக்கிரமா வசனம் எழுதினவன் எழுத்தாளன் மசுரு. அங்கவைன்னா அங்கவைக்கவான்னு கேக்கறான். சுஜாதா வாயிலதான் வைக்கணும் " என்றான்.


"உனக்கான கவிதையை நீ எழுது. உன் கவிதையை நான் ஏன் எழுதலைன்னு கேக்காத"
" அந்தத் தாயோளிங்கல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க. ஆனால், எனக்கான கவிதைய நான் எழுதினா இது கவிதையா, இல்லையான்னு வந்து தாலியறுப்பாங்கெ"
எழுத்தாளர்களையும் பிணங்களையும் மதிக்கத்தெரியாத இவன் என்ன மனிதன்? "உன்னை நினைச்சாக் கேவலமாயிருக்கு"ன்னேன்.

இப்போது தொலைபேசியைத் தாண்டியும் மதுக்கூடங்களிலும் அவன் சிரிப்பு பட்டு கோப்பைகள் உடைந்தன. பூனைகள் நடுங்கத்தொடங்கின.

"நல்லறிவை சம்யக்ஞானம் என்கிறது சமணம். மொத்தம் ஆறுவகையான ஞானங்களிருக்கின்றன. மதி ஞானம், ஸ்ருதஞானம், அவதிஞானம், மனப்பர்யஞானம், கேவலஞானம். அந்த சமண ஞானத்தைத்தான் கேவலம்ன்னா இழிவானதுன்னு மாத்தினது உன் மொழி. புத்தவிகாரை விகாரமாச்சு. ஆயிரம் வருசமா செத்தது அறம். நீ சுஜாதா செத்ததுக்காக கவலைப்படறே."

பார்ப்பனக்கறை படிந்த சொற்களின் மீது பூனைகளின் மூத்திரம் நிறைவதாக.

உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத்து
அலகிலாத அளந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்கு
இலகு மாமலர்ச் சேவடி ஏத்துவம்.


திணை : சாவும் சாவு நிமித்தமும், துறை : சென்னை தி.நகர், வடக்குபோக்ரோடில் அமைந்துள்ள ஜி.ஆர்.டி ஓட்டலின் எதிர்ப்புறமுள்ள ஒரு அரசு மதுக்கூடம்.