Saturday, March 7, 2009

சாருநிவேதிதாவின் 'நான்கடவுள்' விமர்சனம் - ‍‍ சில இடையீடுகள்நான் கடவுள் திரைப்படத்திற்கான ட்ரெய்லரை விட அந்த படம் குறித்த சாருவின் விமர்சனத்திற்கான டிரெய்லர்கள் அதிகநாள் ஓடியிருக்கும். நாளை, நாளை மறுநாள், அதற்கு அடுத்தநாள் என்று ஒருவழியாக வந்தேவிட்டது சாருவின் விமர்சனம். கடந்தகாலங்களில் பாலாவின் ‘நந்தா‘வையும் ‘பிதாமகனை‘யும் போட்டு வறுத்திருந்தார் சாரு. நந்தாவைத் ‘தாலியறுத்தான் கதை‘ என்று விமர்சித்த சாரு ‘நான்கடவுளுக்கு‘ அளித்துள்ள விருதோ ‘பின்நவீனத்துவப்புரட்சி‘. நந்தாவை விட ருத்ரனின் வன்முறைதான் அதிகம். ஆனால் அகோரிகளுக்கு மட்டும் ‘நரமாமிசம் சிக்ஸ்ட்டி பைவ்‘ சாப்பிடும் ‘சிறப்புரிமை’ உண்டு போலும்.

&&&&&&&&&&&&&
‘அகம் பிரம்மாஸ்மி‘ &இதனுடைய நேரடியான தமிழ்வெளிப்பாடு ‘நான் கடவுள்‘ அல்ல. (கடவுள் என்பதே தமிழ்ச்சொல் இல்லை என்பது வேறு விதயம்) ஆன்மாவிற்கும் பிரம்மத்திற்குமான தொடர்புறவு குறித்த விவாதங்களில் ஆதிசங்கரர் முன்வைத்த கருத்தாக்கமே ‘அகம் பிரம்மாஸ்மி‘. இதை எளிதாகத் தமிழில் மொழிபெயர்த்து விட முடியாது. ஏனெனில் பக்தி இலக்கியக் காலம் முன்புவரை செழுமையான அறஞ்சார்ந்த அவைதீக மரபுகளால் செழுமைப்பட்ட தமிழ்மரபில் ஆன்மா & பிரம்மம் குறித்த ‘மலச்சிக்கல்‘ தத்துவ விவாதங்கள் கிடையாது. இந்துமததின் தத்துவார்த்த அடிப்படைகளில் ஒன்றாய் நிறுத்தப்படுவது அத்வைதமும் ‘அகம் பிரம்மாஸ்மி‘யும். ‘காணும் எல்லாம் மாயை‘ என்கிற ‘சூனியவாதம்‘ வரை அதன் தத்துவ எல்லைகள் விரிகின்றன. ஆனால் இங்கொன்றை நாம் நினைவில் நிறுத்திக்கொள்வது நலம். ‘இந்து‘ மதத்தின் ‘தத்துவார்த்த‘ அடிப்படைகள் அனைத்துமே அதற்கு முன்பிருந்த அல்லது சமகாலத்திய அவைதீகத் தத்துவ மரபுகளை உட்செரித்து உருவாக்கப்பட்டவையே தவிர, அதற்கான சுயமான, பலமான தத்துவ அடிப்படைகள் கிடையாது. அவைதீக மரபின் உச்சமாய்ப் பெருஞ் செல்வாக்காய் விளங்கியவை பவுத்தமும் சமணமும். தமிழ்ச்சமூகத்தின் அறமதிப்பீடுகளும் இந்த இரு தத்துவமரபின் செல்வாக்கிலேயே பார்ப்பனீயத்தின் பேராதிக்கத்திற்கு முன்பு வரை விளங்கிவந்தன என்பதை நா.வானமாமலை, மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் தொடங்கி இன்றைய தொ.ப, ஆ.சி வரை பன்னிப்பன்னிச் சொல்லியுள்ளனர்.

பவுத்தத்திற்கு மக்கள் செல்வாக்கு, குறிப்பாக சாதியத்தால் விளிம்பில் தள்ளப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் செல்வாக்கு பெருகியபோது ‘உருவானதுதான்‘ அத்வைதம். பௌத்தமும் சமணமும் கடவுளையும் ஆன்மாவையும் மறுத்த நெறிகள். ஆனால் அத்வைதமோ ஆன்மாவிற்கும் பிரம்மத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிப் பேசியது. சிக்கலான ‘தத்துவ விவாதங்களிலோ‘ மய்யப்படுத்தப்பட்ட சாராம்சவாதத்திலோ சிக்காமல் நடைமுறை சார்ந்த, சுயேச்சையான அற மதிப்பீடுகளை முன்வைத்தது பவுத்தம். கடவுளின் இடத்தில் அறத்தை வைத்தது பவுத்தம். ஆனால் அறத்தினிடத்தில் அகத்தையும் பிரம்மத்தையும் வைத்தது அத்வைதம். அறஞ்சார்ந்து இயங்கியதாலேயே பவுத்தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை முன்வைக்க முடிந்தது. ஆனால் எல்லா ஆன்மாக்களிலும் பிரம்மத்தைக் காண முடிந்த ஆதிசங்கரரால் ‘சதுர்வர்ணம் ஏன் பேதத்தையும் தீண்டாமையையும் கட்டமைத்தது?‘ என்கிற கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை. பவுத்தம் முன்வைத்த சமத்துவத்தினிடத்திற்காகத்தான் ஆதிசங்கரர் ‘ஆன்மாவுக்கும் பிரம்மத்திற்கான இடைவெளிக் கோடுகளை‘ அழித்தார். ஆதிசங்கரரே ‘கள்ள பவுத்தன்‘ என்று சனாதனிகளால் சந்தேகிக்கப்பட்டவர். ஆனாலும் அத்வைதம் பார்ப்பனீயத்தில்தான் முடிந்தது. அதனால்தான் இன்று சங்கரரின் வாரிசாக இருள்நீக்கிசுப்பிரமணியமே எஞ்சி நிற்கிறார்.

அதேபோல் பவுத்தமும் சமணமும் பிறவிச்சுழற்சியில் நம்பிக்கை கொண்டவை. சமணத்தைப் பொறுத்தவரை ‘முக்தி‘ என்பதே பிறப்பின் சங்கிலியை அறுப்பது. அதுவே பரிநிர்வாணம். அம்பேத்கர் ‘பவுத்தமும் தம்மமும்’ நூலில் பவுத்தத் தத்துவத்தின் மீதான அடிப்படைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். ‘பவுத்தம் ஆன்மாவை மறுக்கிறது. ஆன்மாவே இல்லையென்னும்போது மறுபிறவி மட்டும் எப்படி சாத்தியம்?’. இங்குதான் அம்பேத்கர் புத்தருக்கும் அவரின் முதன்மைச் சீடரான ஆனந்தருக்கும் இடையிலான உரையாடலின் அடிப்படையில் மறுபிறவி என்பதை அறிவியல்பூர்வமாக விபரிக்கிறார். மனித உடலில் உள்ள பௌதீகப்பொருட்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிரபஞ்சத்தில் மறுசுழற்சிக்கு உள்ளாவதையே பவுத்தம் மறுபிறவி என்கிறது என்பது அம்பேத்கரின் துணிபு.

பவுத்தத்தின் மறுபிறவிக்கோட்பாட்டை இன்னொருவகையிலும் புரிந்துகொள்ளலாம். அவரவருக்கான வினையின் பயன்களை அவரவர்களே அனுபவிக்க வேண்டும். எனவே அவரின் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டியது அவரே. இங்கு தீர்மானகரமான சக்தி என்பது சுயேச்சையான தன்மதிப்பீடுகள்தானே தவிர புறத்திலிருந்து தருவிக்கப்பட்ட மதிப்பீடுகள் அல்ல. இதனாலேயே ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்‘ என்கிற பயம் நிலைநாட்டப்பட்டது. ஏனெனில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’. ஆனால் வைதீகநெறியோ இந்த அனைத்து வினைப்பயன்களையும் ஒரு ‘பரிகாரத்தின்’ மூலம் தீர்த்துவிட முடியும் என்றது. இந்த பரிகாரத்திற்கான தரகர்களே பூசாரிகள். கோவில் என்னும் அதிகார மய்யமும் பார்ப்பனப் பூசாரிகள் என்னும் அதிகாரத் தரகர்களின் இருப்பும் வலிமையாக உறுதிசெய்யப்பட்டன.

இப்போது ‘நான்கடவுள்‘ படத்தை அவதானியுங்கள். பவுத்த, சமணக் கோட்பாடுகளின் படி மறுமையிலிருந்து உங்களுக்கு யாரும் விடுதலை அளித்துவிட முடியாது, பரிநிர்வாணம்தான் ஒரே வழி, இதற்கு நல்லொழுக்கம், நற்சிந்தனை என கடுமையான அறஞ்சார்ந்த பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஆனால் ‘நான்கடவுளிலோ‘ ருத்ரன் மாதிரியான அகோரிகளே உங்களுக்கு ‘இம்மையில் மோட்சத்தையும் மறுமையிலிருந்து விடுதலை‘யையும் அளித்துவிடுவார்கள். இதைவிட உட்சபட்ச வன்முறை அதிகாரத்திற்கு எதிராக நிற்பதற்குத் திராணியற்ற பாவப்பட்ட ஜீவன்களுக்கும் ‘விடுதலை’ வழங்கி விடுவார் ருத்ரன். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே, இது ‘நான் கடவுளா‘? ‘நானே கடவுளா?’.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இவ்வளவு விரிவான விளக்கத்திற்கும் சாருநிவேதிதாவிற்கும் என்ன சம்பந்தம்? சாருவின் ‘கடவுளும் நானும்‘ புத்தகத்தைச் சமீபத்தில் படித்தேன். சாருவின் சிறந்த படைப்புகளில் ஒன்று. நான் இன்றளவும் நாத்திகன்தான். ஆனாலும் சாருவின் அந்த புத்தகம் பிடித்திருந்தது. சாரு இறைநம்பிக்கையாளராக மாறுவது பிரச்சினையானதில்லை. இறைநம்பிக்கை என்பது தனிமனிதத் தேர்வே. ஆனால் இந்தியச் சாதியச் சமூகத்தில் கடவுள் என்பதே ‘சாதி காப்பாற்றும் கடவுளாக’ இருப்பதுதான் பிரச்சினை. சாரு இறைநம்பிக்கையாளராக இருந்தபோதும் வலதுசாரி நிலைப்பாட்டை எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. சாதிவெறி கொண்ட நாத்திகர்களும் உண்டு. வள்ளலாரைப் போல சாதிஎதிர்ப்பு இறைநம்பிக்கையாளர்களும் உண்டு. ஆனால் இந்திய ஆன்மீகம் என்றபெயரில் இந்துத்துவத்தில் விழாமல் இருப்பதில் எச்சரிக்கை தேவை. தன்னை ஒரு இறைநம்பிக்கையாளராக அறிவித்த பிறகு என்னை மாற்றிய சிந்தனையாளர் பெரியார் என்று பேசும் துணிவும் நேர்மையும் சாருவிடம் பிடித்த அம்சம். அறமும் அன்பும் மட்டுமே ஆன்மீகத்தின் மதிப்பீடுகள் எனில் பவுத்தமே இந்தியாவின் ஆகச்சிறந்த ஆன்மீகம். பெரியாரைக் கூட ‘ஆன்மீகவாதி’ எனலாம். இப்போது சாருவிடம் ஒரு கேள்வி நீங்கள் பேசுகிற ஆன்மீகம் ஆதிசங்கரரின் ஆன்மீகமா? பவுத்தத்தின் அறஞ்சார்ந்த நெறியா?
&&&&&&&&&&&&&&&&&
‘நான்கடவுள்’ திரைப்படம் அதிகாரத்தால் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையை விபரிக்கிறது என்று சாரு நெக்குருகுவதைப் பார்த்தால் அவர் ‘ஏழாம் உலகம்’ நாவலைப் படித்ததில்லையோ என்னும் அய்யம் வலுக்கிறது. ஏனெனில் நான்கடவுளில் வரும் பிச்சைக்காரரின் வாழ்க்கை, ‘மகாலெட்சுமி & ஜோதிலெட்சுமி’ மாதிரியான ‘பின்நவீனத்துவப் பகிடி’ வரை பெரும்பாலான காட்சிகள் ‘ஏழாம் உலகம்’ நாவலிலிருந்து அப்படியே கையாளப்பட்டவையே. அகோரி ருத்ரன் மட்டுமே பாலாவின் பாத்திரம். (நியாயப்படி பார்த்தால் கதை : ஜெயமோகன் & பாலா என்றுதானிருக்க வேண்டும். ஆனால் அது ஜெயமோகன் சுயமரியாதை தொடர்பான விசயம் என்பதால் அதிகமும் இங்கு விவாதிக்கத் தேவையில்லை). ‘நான்கடவுள்’ ஒரு பின்நவீனத்துவப் படம் என்று ஒத்துக்கொண்டால் காலச்சுவடு கண்ணனை ஆதரிக்கிற துரதிர்ஷ்டம் சமீபத்தில் சாருவுக்கு நேர்ந்ததைப் போல ஜெயமோகனையும் ’பின்நவீனத்துவ எழுத்தாளர்’ என்று ஒத்துக்கொள்கிற ‘அவலமும்’ நேர்ந்திருக்கும்.

‘ஏழாம் உலகம்’ நாவல் படிக்காமல் ‘நான் கடவுள்‘ படம் மட்டும் பார்த்தவர்களுக்காக...

படத்தில் வரும் மலையாள வில்லன் கதாபாத்திரம் நாவலில் ஒரு கம்யூனிஸ்ட். அவனைப் பொறுத்தவரை ‘பழனிக் கோயில் தைப்பூசத்தில் காவடி எடுத்து ஆடுவதும், புரட்சியும் ஒன்றே. இரண்டுமே மாஸ் ஹிஸ்டீரியா’. அந்த கதாபாத்திரம் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய எந்த நியாயமும் நாவலின் கட்டமைப்பில் இல்லை. கம்யூனிஸ்ட் மலையாளியின் உருப்படிகள் என்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான குறியீடே. ஆனால் ஒருபோதும் பண்டாரத்தை ( படத்தில் தாண்டவன் பாத்திரம்) ஒரு இந்து இயக்க உறுப்பினனாகப் படைக்க ஜெயமோகனுக்கு மனம் வராது. இப்படியாக கம்யூனிச எதிர்ப்பும் ஜெயமோகனின் மனவக்கிரமும் நிறைந்த குப்பைதான் ‘ஏழாம் உலகமே’ தவிர அது விளிம்புநிலைப் பாலாறும் தேனாறும் ஓடும் பின்நவீனத்துவ நாவல் எல்லாம் கிடையாது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சாதாரண எம்.ஜி.ஆர், ரஜினி படக்காட்சி போல இருப்பதாக சாரு எழுதியிருக்கிறார். அந்த சண்டைக்காட்சி மட்டுமல்ல, பூஜாவைக் காப்பாற்றும் ஆர்யாவும் பழைய எம்ஜியார் நாயகப்பிம்பத்தின் மறுவார்ப்பே. இன்னொன்றையும் இங்கு நாம் மனங்கொள்ள வேண்டும். வடநாட்டு இடுகாட்டில் நடம் புரியும் ருத்ரனையும் ‘தென்னாட்டுடைய சிவனையும்‘ ஒரே கடவுளாக இந்துமதம் ‘உருவாக்கப்பட்டபோது‘ கட்டமைக்கப்பட்டது. (இதற்கான முயற்சிகள் பக்திக்காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டதற்கான சாட்சிகள் காரைக்காலம்மையார் பாடல்கள்.) அதேபோல் வடநாட்டு அகோரிகளையும் நமது சித்தர்களையும் ஒரே மாதிரியாகச் சமப்படுத்தி விட முடியாது. பவுத்த, சமணத்துறவிகள் வெறுமனே துறவு வாழ்க்கையோடு ஒதுங்கிவிடாமல் கலை, இலக்கியம் சார்ந்த முயற்சிகளிலும் அறஞ்சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டவர்கள். அஜந்தா, எல்லோரா ஓவியம் தொடங்கி நன்னூல் வரை அத்தனையும் அவைதீகத்துறவிகளின் அருட்கொடை. தமிழுக்கான இலக்கண நூல்கள் அத்தனையும் அவர்கள் போட்ட பிச்சை. போலவே சித்தர்கள் பாலாவின் அகோரிகளைப் போல் ‘காஞ்சா’ குடித்துவிட்டு வெறுமனே மோனத்தில் ஆழ்ந்தவர்கள் கிடையாது. பல அரிய மருத்துவ நூல்களைப் பங்களித்ததோடு மட்டுமில்லாது ‘பறைச்சி ஆவதேதடா? பனத்தி ஆவதேதடா? இறைச்சி எலும்பிலும் இலக்கம் இட்டிருக்குமோ?’ என்று சாதியமைப்பிற்கு எதிராய்க் கலகக்குரல் எழுப்பியவர்கள். ஆனால் படத்தில் பாலாவின் ருத்ரனோ அடிக்கடி பொசுக், பொசுக்கென்று ஆசனம் போட்டு அமர்வதைப் பார்த்தால் வித்தைக்காரன்தான் நினைவிற்கு வருகிறதே தவிர ஞானமில்லை. இன்னும் சொல்லபோனால் இன்று மத்தியதர வர்க்கத்திடம் பணக்காரச் சாமியார்கள் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் யோகா, ஆசனம் ஆகியவற்றை உருவாக்கியதே அவைதீக மரபுதான். புத்தர், மகாவீரர் என்று எல்லா சிலைகளும் தியானத்தில், ஆசனத்தில். எந்த இந்துக்கடவுள் ‘பொத்திக்கொண்டு’ உட்கார்ந்தது?
&&&&&&&&&&&&&&&&&&

‘நான்கடவுள்‘ திரைப்படம் உலகத்தரம் என்னும் ஏணியில் ஏறமுடியாமல் பாலாவின் டவுசரைப் பிடித்து இழுத்தது இளையராஜாவின் இசைதான் என்ற சாருவின் கருத்தை விவாதிக்கும் அளவு எனக்கு இசையறிவு கிடையாது. ஆனால், ‘பிச்சைப்பாத்திரம்’ பாடல் குறித்த சாருவின் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரி. கையிழந்து, காலிழந்து, தன் உடலையே பிச்சைப்பாத்திரமாக்கிக் கொண்டவர்களைப் பார்க்கும்போதும், அதன்பின்னுள்ள சமூக வன்முறை குறித்து யோசிக்கும்போதும் ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக இவ்வுலகியற்றியான்’ என்ற வள்ளுவனின் அறச்சீற்றமோ அல்லது படத்திலே விக்கிரமாதித்யன் பேசும் ‘புளுத்தி, கடவுள் ஒரு தேவடியாப்பையன்’ என்கிற கோபமோதான் வரவேண்டும். ஆனால் அந்த பாட்டில் நடப்பது என்ன? ‘பாத்திரம் என்னிடத்தில், அதன் சூத்திரம் உன்னிடத்தில்’, ‘பொருளைத் தேடும் பொருளற்ற வாழ்வு’ என்று பணக்கார நாய்களிடம் பேசவேண்டிய அசட்டுப் பிசட்டுத் தத்துவ மசிர்கள் எல்லாம் இழப்பதற்கு ஏதுமற்ற பிச்சைக்காரர்கள் குறித்த பாடலில் பாடப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு கேள்வி, பசித்தவர்க்கு முன்னான இந்த புளித்த ஏப்பம் யாருடையது. இளையராயாவுடையதா, பாலாவுடையதா?