Monday, August 13, 2007

தமிழ்நதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்தமிழ்நதிக்கும் எனக்குமான உறவு ஒரு சின்ன மோதலிலிருந்து தொடங்கியது. அவரது பதிவொன்றிற்கு நான் இப்படியாகப் பின்னூட்டமிருந்தேன்...' உங்கள் பல பதிவுகள் சௌகார்ஜானகி படம் பார்த்ததைப் போல இருக்கிறது' என்று. அன்று இரவு ஒருமணியிருக்கும், ஒரு குறுஞ்செய்தி தமிழ்நதியிடமிருந்து என் தொலைபேசியைத் தட்டி, 'இந்தப் பின்னூட்டத்தை நான் வெளியிடத்தான் வேண்டுமா?' என வினவியது. 'வெளியிடத்தானே பின்னூட்டமிட்டேன்' என்று மறுமொழி அனுப்பினேன்.

மறுநால் காலையில் தமிழுக்குப் போன் செய்து பேசினேன். வெறுமனே வலியையும் கண்ணீரையும் முன்வைப்பதைவிடவும் அவ்விடத்தில் கொண்டாட்டத்தை முன்வைக்கவேண்டுமென்பது என்னுடைய கருத்தாகவிருந்தது. ஆனால் வாழ்க்கையைக் கொண்டாட முடியாத நிலையிலிருக்கிறோம் என்றார் தமிழ். நான் முதல்நாள் பேசிய அன்றே அவரது நெருங்கிய உறவுப்பெண் ஒருவர் தற்கொலை செய்து இறந்துபோனார். பிறகு அந்தக் கருத்தை நான் மாற்றிக்கொண்டேனா இல்லையா என்ற குழப்பம் இன்றளவிலும் தொடரும் நிலையிலும் என்னுடைய பிடிவாதம் தளர்ந்தது. தடியாலடித்து சொர்க்கத்திற்கு வழியனுப்புவதைக் கைவிடத்தொடங்கினேன்.

முதன்முதலாக தமிழ்மணப்பூங்காவில் 'பெண் - நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை' என்னும் பதிவைப்படித்துவிட்டுத்தான் தமிழ்நதியின் பக்கம் சென்றிருந்தேன். அவர் பக்கத்தில் நான் படித்த முதல் பதிவு, 'நேற்றிருந்தேன் அவ்வூரினிலே...'. நட்பின் ஆரம்பகாலங்களில் தமிழிடம் சொன்னேன், 'தமிழ், உங்களுக்குக் கவிதை எழுதவரவில்லை. ஆனால் உங்கள் உரைநடையில் கவித்துவமிருக்கிறது. தயவுசெய்து கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு உரைநடையில் கவனம் செலுத்துங்கள்' என்று. 'ஆனால் என்னுடைய நண்பர்கள் என் கவிதைகள்தான் நன்றாகவிருப்பதாகச் சொல்கிறார்கள்' என்றார் அவர். ஒருவேளை நான் படித்த ஆரம்பகாலக் கவிதைகள் அப்படி இருந்திருக்கக்கூடும்.

பிற்பாடு அவரது கவிதைகளின் அசாத்தியமான ஆளுமை பிரமிக்கவைத்தது. அவருக்கென்று ஒரு வாசகர்வட்டம் இருக்கிறது, என்னையும் சேர்த்து. அவரது ஒருசில கவிதைகள் தவிர பெரும்பாலான கவிதைகள் மொழியை வலுப்படுத்துபவையாக உள்ளன. அவரது எழுத்துக்களின் பலம் அதில் விரவியிருக்கும் உண்மைதான் என்று கருதுகிறேன். இப்போது இதேநாளில் மதுரையில் அவரது முதல் கவிதைதொகுப்பு 'சூரியன் தனித்தலையும் பகல்' பனிக்குடம் பதிப்பகத்தின் வெளீயீடாக வெளியிடப்படுகிறது.

அவரது பிறந்தநாளன்றே அவரது கவிதைத்தொகுதி வெளியாவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி. நிச்சயமாக இந்தத் தொகுதி மூலம் தமிழின் முக்கியமான கவிஞர்களின் பெயர்ப்பட்டியலில் தமிழ்நதியின் பெயரும் இடம்பெறும் என்பது என்பது எனது பெரிய நம்பிக்கை.

எழுத்துக்களைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரியவர் தமிழ். ஒவ்வொரு தனிமனிதர்கள் மீதும் அவருக்கு தனிப்பட்ட அக்கறைகள். விருந்தினர்களை உபசரிப்பதில் அளவிடமுடியாத ஆவல், நட்பைப்பேணுவதில் கரிசனம், தான் இழந்துவிட்ட பூனைக்குட்டிகளின் வெற்றிடத்தைத் தன் அன்பால் நிரப்பிவிட பேராசைப்படும் மனசு இதுவெல்லாம் தமிழ்நதி. ஒரு மண்ணில் வீழாத முதல் மழைத்துளியைப்போலவே உண்மையானதும் ஈரமானதும் அரவணைப்பதும் அவரது இதமிக்க தோழமை.

என் பிரியத்துக்கும் பிரியமான தோழி தமிழ்நதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்வதில் மகிழ்வும் பரபரப்பும் நிரம்பியிருக்கிருக்கிறது என்னுள். happy birthday to my dearest friend.

Sunday, August 12, 2007

சீரியசாக எழுதுவது எப்படி? - கும்மிப்பதிவாளர்களின் அவசரக்கூட்டம்


சீரியசாக எழுத என்ன செய்யவேண்டும்?

குமுதம், குங்குமம், சன்டிவி போன்ற சீரியசான மீடியாக்களில் வேலைபார்த்திருக்கவேண்டும்.

- ஜெர்மானிய மானுட வரலாற்றெழுதியல் அறிஞர் டிராவுட்மேன் 'தி இன்விசிபிள் திங்கிங்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலிருந்து....


திடீரென்று தமிழ்மணம் தீவிரவாதிகளின் பிடிக்குச் சென்றுவிடுகிறதென்று வைத்துக்கொள்வோம். தீவிரம் என்றால் சீரியஸ்தானே!! சீரியஸ்பதிவுகள் மட்டுமே போடவேண்டும், சீரியசான பின்னூட்டம் மட்டுமே இடவேண்டும் என்று ஒரு அவசரச்சட்டம் அர்ஜெண்டாக அமுலுக்கு வருகிறது. இந்த நெருக்கடிநிலையைச் சமாளிக்க செந்தழல்ரவி தலைமையில் கும்மிப்பதிவாளர்களின் போர்க்காலக் கூட்டம் கூடுகிறது.. இனி......

ஓசைசெல்லா : ஹீம்... இதுவரைக்கும் 200 பதிவு போட்டிருக்கேன். இப்ப சீரியசாதான் எழுதணும்ன்னு சொன்னா என்ன பண்றது?

செந்தழல் : இதை வெளியே சொல்லாதீங்க 200 பதிவில 150 பதிவு வெறும் போட்டா மட்டும்தான். மீதி 50 போனவாரம் மட்டுமே போட்டிருக்கீங்க, பதிவர் பட்டறைக்குச் செல்லும் வழி, வெளியேறும் வழி, பக்கத்திலிருக்கும் முட்டுச்சந்துன்னு..

செல்லா : (ஆவேசமாக...) கும்மி அடிப்பது எங்கள் பிறப்புரிமை. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை பிரன்சிலிருந்து பிளாக்பெல்ட் வந்தபோதிலும் நச் கும்மி அடிக்க நமக்கு அச்சமென்பதில்லையே..

ரவி :ஆமா, இங்கெல்லாம் சவுண்ட் விடுங்க பட்டறையில் மாலன் உளறப்ப மட்டும் அமைதியாயிருந்துடுங்க.

ஓசை : அப்ப நான் முக்கியமான விஷயமா வெளியே போயிருந்தேன்

ரவி : என்ன விஷயமா?

ஓசை : வரவணை பொட்டிக்கடையில சிகரெட் வாங்கப்போனார். அதைப் போட்டோ எடுக்கப் போனேன்.

வரவணை : உங்க அநியாயம் தாங்கலைங்க. நான் டீ குடிச்சாலும் போட்டோ எடுக்கிறீங்க. சரக்கடிச்சாலும் போட்டோ எடுக்கிறீங்க. போட்டோவைப் பார்த்துட்டு அவள் மூணுநாளாப் பேசலை (விம்முகிறார்)

லக்கிலுக் : நீங்களாவது அடிச்சீங்க. நான் சும்மா பார்ல உக்காந்திருந்தேன். அதையும் போட்டோ எடுத்துப்போட்டு என் பொண்டாட்டி எதார்த்தமா பார்த்து வீட்டில ஒரே மாத்து ( லக்கியும் கதறுகிறார். இருவரும் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.)

ரவி : அடவிடுங்கப்பா, ஏதோ மதிமுக கூட்டத்துக்கு வந்த பீல் வருது. முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இனிமேல் சீரியசாத்தான் எழுதணுமாம். விதிமுறையே கொண்டுவந்துட்டாங்க. அய்யனார் நீங்க என்ன பண்ணப்போறீங்க?

அய்யனார் : நான் தாஆஆஆஆஆஆ அப்படின்னு ஒரு கவிதை எழுதிவச்சிருக்கேன். அதைப் போடப்போறேன்.

ரவி : உங்களோட ஒரே இம்சைங்க. வாஆஆஆஆஅ, போஓஓஓஓஓஓ, ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், ஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஏதாவது எழுதிடுறீங்க. படிக்கிறவன்ல்லாம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு கொட்டாவி விடறான். சரி காயத்ரி நீங்க என்ன பண்ணப்போறீங்க?

காயத்ரி : நான் 'பிரிவின் வலி' ன்னு கவிதை எழுதியிருக்கேன்.

ரவி : இன்னாமா நீ எழுதறே, டாவடிச்சவன் எஸ்கேப்பாகித் தப்பிச்சுட்டான். நான் மெர்ஜாகி ஒரே பீலிங்கா இருக்கு. இதானே எழுதப்போற. ஆக்சுவலா அது ஒரே ஒரு கவிதைதான். ஆனா நீ வார்த்தையை மாத்தி மாத்திப் போட்டு 127 கவிதைப் பதிவு போட்டுட்டே. சரி ஒழி. பொன்ஸ் நீங்க என்னப் பண்ணப்போறீங்க?

பொன்ஸ் : நான் ஆப்பிரிக்க யானையின் உணவுமுறைகள்ன்னு ஒரு கட்டுரை நெட்ல டவுன்லோட் பண்ணிவச்சிருக்கேன். அதை வச்சு ஒப்பேத்திடுவேன்.

ரவி : அடப்பாவி, சரி தல பாலபாரதி நீங்க....?

பாலபாரதி : நான்தான் எழுதறதே இல்லையே, ஆனா பாகச பதிவுன்னு தினம் மூணுபதிவு என்னைக் கலாய்ச்சு என் போட்டோவோட வரும். எனக்கும் திருப்தியாயிருக்கும். ஆனா அதையும் தடை பண்ணிட்டாங்கே. சன்டிவில மூஞ்சியக் காட்டலைன்னு அழுத வைகோ மாதிரி ஆயிட்டேன் நான்.

பொன்ஸ் : ஏன் நீங்க சீரியசா எழுத டிரை பண்ணவேண்டியதுதானே?

பாலபாரதி : அடங்கமாட்டியாம்மா? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன். ஆனா நான் தப்பிச்சுக்கிடுவேன்.

ரவி : எப்படி?

பாலா : நான் கமெண்ட் போடுறதை நீங்கக் கவனிச்சதில்லையா? யாராவது வேலைமெனக்கிட்டு கமெண்ட் போட்டுவச்சிருப்பான். அதைக் காபி பேஸ்ட் பண்ணி ரிப்பீட்டே அப்படின்னு எழுதிடுவேன். அவ்வளவுதான். யாராவது சீரியசாப் பதிவுபோட்டுட்டா அதைக் காபி பேஸ்ட் பண்ணிடுவேன். அதை என் பிளாக்கில போட்டுட்டு கீழே ரிப்பீட்டுன்னு எழுதிட வேண்டியதுதான். அப்புறம் நானும் சீரியஸ் பதிவாளர்தான்.

ரவி : ஆஹா, இப்படித்தான் நீங்க குப்பை கொட்டிக்கிட்டிருக்கீங்களா? குசும்பன் நீங்க என்ன பண்ணப்போறீங்க?

குசும்பன் : எனக்கு சீரியசா எழுதறதில ஒரு பிரச்சினையுமில்லை. ஆனா ஒரே ஒரு சந்தேகம்.....

ரவி : என்ன?

குசும்பன் : சீரியஸ்ன்னா என்ன?

ரவி : கிழிஞ்சது கிருஷ்ணகிரி. சீரியஸ்ன்னா என்னப்பா? (பாலபாரதியைக் கேட்கிறார். அவர் முழிக்கிறார். எல்லோருமே முழிக்கிறார்கள். அப்போது வரவணைக்கு பொட்டிக்கடை சத்யாவிடமிருந்து போன் வருகிறது.)

வரவணை : (சத்யாவிடம்) சீரியசா எழுதறதுன்னா என்ன?

சத்யா : அதுவா? படிக்கும்போதே பேதியாகணும், கொஞ்சம் சத்தமா படிச்சா பக்கத்துல இருக்கிறவங்க ஒருமாதிரிப் பார்க்கணும். தப்பித்தவறிக்கூட படிக்கிறவன் சிரிச்சுடவே கூடாது. தொடர்ந்து மூணுவருசம் படிச்சா முப்பதுவயதில ஹார்ட் அட்டாக் வந்து செத்துடணும். எழுத்தெல்லாம் தமிழ்ல்ல தான் இருக்கும். ஆனா படிச்சா வேற மொழியில படிக்கிற பீலிங் வரணும். ஒண்ணும் பிரச்சினையில்லை. பின்நவீனத்துவத்தில நான்லீனியர் ரைட்டிங்ன்னு ஒண்ணு இருக்கு. சம்பந்தா சம்பந்தமில்லாம இருக்கணும். அவ்வளவுதான்.

வரவணை : அப்ப ஆளுக்கு ஒரு வரி சொல்வோம். அப்புறம் எல்லாத்தையும் சேர்த்துப் போட்டுட்டா தலையும் புரியாம வாலும் புரியாம சீரியஸ் பதிவாயிடும்.

ரவி : சரி, ஆளுக்கு ஒரு லைன் சொல்லுங்க நான் எழுதிக்கறேன், தருமி நீங்க சொல்லுங்க.

தருமி : 1976ல் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் இட்லியும் ஆமைவடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது எம்ஜி ஆர் போனார்.

ரவி : நீங்க மொழி படத்து பாஸ்கர் மாதிரியே இருக்கீங்க. எப்பதான் 1976- அய் விட்டு வரப்போறீங்களோ? உண்மைத்தமிழன், நீங்க சொல்லுங்க.

உண்மைத் : இனிய வலைமக்களே, திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோவிலில் நீர்மோர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். இந்த திராவிட அரசியல்வாதிகள்தான் நீர்மோரில் தண்ணீரை அதிகம் ஊற்றிக் கெடுத்துவிட்டார்கள்.துக்ளக் ...

ரவி : அய்யா நிறுத்துங்கய்யா, சுகுணா, பட்டறை பத்தி மூணு பாராவில ஒரு பதிவு போட்டா நீங்க பின்னூட்டமே ஏழு பாராவில போடுறீங்க. நீங்க சொன்னதில பாதிதான் எழுதுவேன். அய்யனார் நீங்க....

அய்யனார் : துபாயில் பாரில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த சந்தியாவுக்கு முலைகள் துருத்திக்கொண்டிருந்தன.

ரவி : ஏம்பா, அந்தம்மாவுக்குத்தான் பிரெஸ்ட்கேன்சர்ன்னு போனமாசமே எடுத்துட்டாங்களே, நீ விடமாட்டியா, காயத்ரி நீங்க சொல்லுங்க..

காயத்ரி : நீ சென்ற பாதையைத் திரும்பிப்பார்க்கிறேன். கவிதை எழுத உட்கார்கிறேன் வெறும் காற்றுதான் வருது.

ரவி : பொன்ஸ்...

பொன்ஸ் : ஆனை ஆனை அழகர் ஆனை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை.

ரவி ; இது ஒண்ணாங்கிளாஸ் பாடம்மா. இதைத்தான் நீங்க நெட்ல டவுன்லோட் பண்ணி வச்சிருக்கீங்களா, தலையெழுத்து, தல நீங்க சொல்லுங்க.

பாலபாரதி : ரிப்பீட்டே...

ரவி : எல்லாம் எழுதியாச்சு இப்ப இதெல்லாம் சேர்த்துட்டா சீரியசான பதிவாயிடுமா?

வரவணை : ஊஹீம். குணா படத்துல 'கண்மனி அன்போடு' பாட்டில 'மானே பொன்மானே' போடுற மாதிரி அங்கங்க வெளிநாட்டு அறிஞர்கள், சினிமா டைரக்டர்கள், ஓவியர்கள் பேரெல்லாம் போடணும்.

ரவி : சரி, அப்ப நீங்களே ரெடிபண்ணுங்க.

வரவணை : (தயார்செய்து வாசிக்கிறார்.)

1976ல் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் பெர்க்மென் இட்லியும் ஆமைவடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது எம்ஜி ஆர் கோட்டைமாரியம்மன் கோவிலில் போர்ஹேக்கு நீர்மோர் ஊற்றிக்கொண்டிருந்தார். பாரில் டான்சாடிக்கொண்டிருந்த வான்காவுக்கு முலைகள் துருத்திக்கொண்டிருந்தன. பீத்தோவனின் பியானோவில் வெறும் காற்றுதான் வருது. மார்க்யெஸீம் உம்பர்ட்டோ ஈகோவும் காஸ்ட்ரோவோடு ஒரு வெண்ணிற இரவில் மது அருந்திக்கொண்டிருந்தபோதுதான் காப்காவின் கரப்பான்பூச்சி ஒரு கவிதையாக உருமாற்றம் அடைந்தது இப்படியாக...ஆனை ஆனை அழகர் ஆனை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை. இந்தக் கவிதை வரிகள் தொன்ம மனங்களில் புதைந்திருக்கும் விலங்குணர்வையும் ஆதிவேட்கை மனோபாவத்தையும் ஒருசேரப்பிரதிபலிப்பதாக ' த டெக்சுவல் ரிவிவ்யூ' பத்திரிகையில் விமர்சனம் எழுதிய இஹாப்ஹாசனும் ஃபெலிக்ஸ்கட்டாரியும் ஒருசேர எழுதிய விமர்சனக்கட்டுரையின் தலைப்பு 'ரிப்பீட்டே...'.

ரவி : சூப்பர் சூப்பர் ஒருத்தனுக்கும் ஒரு இழவும் விளங்காது. சரி, இந்தப் பதிவுக்கு தலைப்பென்ன?

வரவணை : விமர்சனப்பிரதிகளின் இயங்குமுறை குறித்த அ- நேர்கோட்டு எழுதுமுறைமையிலான அ -தர்க்க நோக்கு