Monday, August 13, 2007

தமிழ்நதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்தமிழ்நதிக்கும் எனக்குமான உறவு ஒரு சின்ன மோதலிலிருந்து தொடங்கியது. அவரது பதிவொன்றிற்கு நான் இப்படியாகப் பின்னூட்டமிருந்தேன்...' உங்கள் பல பதிவுகள் சௌகார்ஜானகி படம் பார்த்ததைப் போல இருக்கிறது' என்று. அன்று இரவு ஒருமணியிருக்கும், ஒரு குறுஞ்செய்தி தமிழ்நதியிடமிருந்து என் தொலைபேசியைத் தட்டி, 'இந்தப் பின்னூட்டத்தை நான் வெளியிடத்தான் வேண்டுமா?' என வினவியது. 'வெளியிடத்தானே பின்னூட்டமிட்டேன்' என்று மறுமொழி அனுப்பினேன்.

மறுநால் காலையில் தமிழுக்குப் போன் செய்து பேசினேன். வெறுமனே வலியையும் கண்ணீரையும் முன்வைப்பதைவிடவும் அவ்விடத்தில் கொண்டாட்டத்தை முன்வைக்கவேண்டுமென்பது என்னுடைய கருத்தாகவிருந்தது. ஆனால் வாழ்க்கையைக் கொண்டாட முடியாத நிலையிலிருக்கிறோம் என்றார் தமிழ். நான் முதல்நாள் பேசிய அன்றே அவரது நெருங்கிய உறவுப்பெண் ஒருவர் தற்கொலை செய்து இறந்துபோனார். பிறகு அந்தக் கருத்தை நான் மாற்றிக்கொண்டேனா இல்லையா என்ற குழப்பம் இன்றளவிலும் தொடரும் நிலையிலும் என்னுடைய பிடிவாதம் தளர்ந்தது. தடியாலடித்து சொர்க்கத்திற்கு வழியனுப்புவதைக் கைவிடத்தொடங்கினேன்.

முதன்முதலாக தமிழ்மணப்பூங்காவில் 'பெண் - நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை' என்னும் பதிவைப்படித்துவிட்டுத்தான் தமிழ்நதியின் பக்கம் சென்றிருந்தேன். அவர் பக்கத்தில் நான் படித்த முதல் பதிவு, 'நேற்றிருந்தேன் அவ்வூரினிலே...'. நட்பின் ஆரம்பகாலங்களில் தமிழிடம் சொன்னேன், 'தமிழ், உங்களுக்குக் கவிதை எழுதவரவில்லை. ஆனால் உங்கள் உரைநடையில் கவித்துவமிருக்கிறது. தயவுசெய்து கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு உரைநடையில் கவனம் செலுத்துங்கள்' என்று. 'ஆனால் என்னுடைய நண்பர்கள் என் கவிதைகள்தான் நன்றாகவிருப்பதாகச் சொல்கிறார்கள்' என்றார் அவர். ஒருவேளை நான் படித்த ஆரம்பகாலக் கவிதைகள் அப்படி இருந்திருக்கக்கூடும்.

பிற்பாடு அவரது கவிதைகளின் அசாத்தியமான ஆளுமை பிரமிக்கவைத்தது. அவருக்கென்று ஒரு வாசகர்வட்டம் இருக்கிறது, என்னையும் சேர்த்து. அவரது ஒருசில கவிதைகள் தவிர பெரும்பாலான கவிதைகள் மொழியை வலுப்படுத்துபவையாக உள்ளன. அவரது எழுத்துக்களின் பலம் அதில் விரவியிருக்கும் உண்மைதான் என்று கருதுகிறேன். இப்போது இதேநாளில் மதுரையில் அவரது முதல் கவிதைதொகுப்பு 'சூரியன் தனித்தலையும் பகல்' பனிக்குடம் பதிப்பகத்தின் வெளீயீடாக வெளியிடப்படுகிறது.

அவரது பிறந்தநாளன்றே அவரது கவிதைத்தொகுதி வெளியாவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி. நிச்சயமாக இந்தத் தொகுதி மூலம் தமிழின் முக்கியமான கவிஞர்களின் பெயர்ப்பட்டியலில் தமிழ்நதியின் பெயரும் இடம்பெறும் என்பது என்பது எனது பெரிய நம்பிக்கை.

எழுத்துக்களைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரியவர் தமிழ். ஒவ்வொரு தனிமனிதர்கள் மீதும் அவருக்கு தனிப்பட்ட அக்கறைகள். விருந்தினர்களை உபசரிப்பதில் அளவிடமுடியாத ஆவல், நட்பைப்பேணுவதில் கரிசனம், தான் இழந்துவிட்ட பூனைக்குட்டிகளின் வெற்றிடத்தைத் தன் அன்பால் நிரப்பிவிட பேராசைப்படும் மனசு இதுவெல்லாம் தமிழ்நதி. ஒரு மண்ணில் வீழாத முதல் மழைத்துளியைப்போலவே உண்மையானதும் ஈரமானதும் அரவணைப்பதும் அவரது இதமிக்க தோழமை.

என் பிரியத்துக்கும் பிரியமான தோழி தமிழ்நதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்வதில் மகிழ்வும் பரபரப்பும் நிரம்பியிருக்கிருக்கிறது என்னுள். happy birthday to my dearest friend.

14 comments:

Ayyanar Viswanath said...

தமிழ்நதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூரியன் தனித்தலையும் பகலுக்கும்

வரவனையான் said...

என் அன்பிற்குரிய சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எனது சென்ற பிறந்தநாளின் போது என் வீட்டில் இருந்து கொண்டாட முடியவில்லை. அந்த மனக்குறையை போக்கி தன் வீட்டில் என் வீட்டினைப்போல் விருந்தளித்து மகிழ்ந்தார். நினைக்கும் போதெல்லாம் இனிக்கும் நிகழ்வு அது

மலைநாடான் said...

சுகுணா!

தமிழ்நதி பற்றிய உங்கள் குறிப்புக்கள் நன்றாகவுள்ளன. நட்புக்குப் பெருமைசேர்க்கும் உங்கள் பதிவுக்கு நன்றி.

தமிழ்நதிக்கு!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி!

பொன்ஸ்~~Poorna said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நதியக்கா..

சின்னக்குட்டி said...

தமிழ்நதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இந்த சின்னக்குட்டியும் தெரிவித்து கொள்கிறான்

சுந்தர் / Sundar said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் , தமிழ் .

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் நதி...

பாலராஜன்கீதா said...

தமிழ்நதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

தென்றல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தமிழ் நதி!

இப்னு ஹம்துன் said...

தமிழ்நதிக்கு என் வாழ்த்துகளும்.

சுகுணா,
இரசனைகள் மாறுபடுவது நலமே.

தமிழ்நதி said...

நான் ஊரிலே இல்லாத சமயத்திலே ஏதேதோ நடந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சி மற்றும் கவிதை வாசிப்பை முன்னிட்டு மதுரைக்குச் சென்று நேற்றிரவே திரும்பிவந்தேன். வந்து பார்த்தால் சுகுணா திவாகர் 'வாழ்த்து'ப் பாடியிருக்கிறார். நண்பர்களே! என் மீதுள்ள அதீதமான நட்பின் காரணமாக சுகுணா அளவுக்கதிகமாக என்னைப் புகழ்ந்திருக்கிறார். நீங்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதிகாக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:) வாழ்த்திய நண்பர்களுக்கும் வாழ்த்தாமல் உள்ளுக்குள் வசைபாடியவர்களுக்கும் எனது நன்றி:) எது எவ்வாறு இருப்பினும் சுகுணாவின் பதிவை வாசிக்கும்போது அழுகை வந்ததற்குக் காரணம் வழக்கமான கவலைகள் அல்ல. நன்றி.

பங்காளி... said...

தமிழ்நதி....
இனிவரும் நாட்கள்
இனிதாயும்,செறிவாயும்
அமைய வாழ்த்துக்கள்

பங்காளி...

மஞ்சூர் ராசா said...

உங்களை போலவே அவரது ஒரு கவிதையை விமர்சித்து எழுதும் போது குறுந்தொகை, நற்றிணையை முதலில் படியுங்கள் என்று சொல்லி பிறகு அதையே அவரும் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு எழுதி இப்படியாக நட்பும் வளர்ந்தது. சமீபத்தில் அவரது வீட்டில் சந்தித்ததும் அவரது உபசரிப்பும் மறக்க முடியாத அனுபவம்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்நதி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழ்நதி!
நல்லா இருங்க!