Sunday, February 24, 2008

மறந்துபோவது குறித்த சில நினைவுக்குறிப்புகள்













இந்தப் பிரதியைப் படித்து முடிப்பதற்குள் நீ உறங்கிப் போயிருக்கலாம் அல்லது என்னைக் கொலை செய்வதற்கான எரிச்சலோடு உன் கழுத்துச் சங்கிலியைக் கடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது...வழக்கம்போல் நீ போட்ட தேநீர் கருகிவிட்டதா எனப் பார்க்க அடுக்களைக்குச் சென்றிருக்கலாம் அல்லது... எப்படியாயினும் நீ இந்தப் பிரதியைப் படிக்கத் தொடங்கியிருக்கிறாய். நல்லது. - மறந்துபோவது குறித்த சில நினைவுக் குறிப்புகள் - எழுதும்போதே சிரித்துக்கொள்கிறேன் - என்ன ஒரு முரண்நகை? - "வரலாற்றில் எல்லாச் சம்பவங்களும் இருமுறை அரங்கேறுகின்றன, முதல்முறை பரிதாபகரமாகவும், மறுமுறை கேலிக்கூத்தாகவும் " - இது எத்தனையாவதுமுறை என்று எனக்கு நினைவில்லை - தாயின் முலையினின்று பாலோடு சொல்லை உறிஞ்சத்தொடங்குகிறது குழந்தை - பின் எல்லாம் சொல்லாகிறது - காதல் சொல், கலவி சொல், முத்தம் சொல், துரோகம் சொல், திருட்டு சொல், சோரம் சொல், கனவு சொல், தினவு சொல், உறவு சொல் - நீ ஒரு சொல்லிலிருந்து உன் உறவைத் தொடங்கினாய் - நான் சொன்னேன் 'இந்தச் சொல்லிற்குப் பதிலாய் என்னை நீ கொலை செய்திருக்கலாம் என்று - நெடுநாட்களுக்குப் பின் நீ அதையும் செய் - இன்னொரு சொல் மூலம் - கொலையும் சொல்லானது - ஆம் இப்படித்தான் அந்த கொலை நிகழ்ந்தது - கல்வாரியி மலையில் சொல் போல் நீண்டு வளைந்ததொரு சிலுவை சுமந்தபடி மூச்சிரைத்து சிலுவைப்பாடு தொடங்குகுறான் ஜீசஸ் - சொல்லைப் போல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது அவன் தாடி - தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நொந்து சொல்லைப்போல் கனமானதொரு பாறையை சொல்லைப் போல் கடினமான மலையுச்சிக்கு உருட்டிக்கொண்டிருக்கும் சிசிபஸ் புன்னகைக்கிறான் - வாணாள் முழுதும் யாரை விசுவாசிக்கச் சொன்னானோ அவருக்கு எதிரான அந்தச் சொற்களை உச்சரிக்கின்றன ஜீசஸின் உதடுகள் - "ஏலி லாமா சமக்தானி, ஏலி லாமா சமக்தானி" - கர்த்தரே எம்மை ஏன் கைவிட்டீர்? - கைவிடப்பட்ட சொற்களும் சொற்களால் கைவிடப்பட்டவர்களும் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள் - அசைகிறது யேசுவின் தாடி - சற்றே ஒரு அரசியல் குறுக்கீடு - சொற்கள் அர்த்தங்களைப் பிரதியிடுவதில்லை மாறாக குறியீடு செய்கின்றன என்கின்றன நவீனச்சிந்தனைகள்- சொற்களின் அதிகாரத்தைப் பண்ணிப் பண்ணி விளக்கின - எல்லா விலங்குகளுக்கும் எதிராய்க் கத்தி வீசின - குறியீடு செய்யும் சொல்லின் பெயர் ஆங்கிலத்தில் signifier என்றால் அதைக் 'குறிப்பான்' என்று மொழிபெயர்த்தன - 'குறிப்பாள்' இல்லை, பால் சாரா சொல்லில்லை - மீண்டுமொரு 'ன்' விகுதி ஆண்மய்யச் சொல்லாடல் - வரலாற்றுச் சம்பவம் அரங்கேறுகிறது பரிதாபமாய் - தமிழ்நதியின் வலைப்பக்கங்களில் வந்துபோனவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும் குறியீட்டின் பெயர் 'எண்ணுவான்' - மீண்டும் ஒரு 'ன்' விகுதி ஆண்மய்யச்சொல்லாடல்- இரண்டாவது சம்பவம் அரங்கேறுகிறது கேலிக்கூத்தாய் - கவிதைகள் புரிவதில்லை என்று சமயங்களில் நீயும் அரற்றுவதுண்டு -

இடுக்குகளில் இருந்து...

நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

மூளை - 1.25கிராம்
அறிவு - 0.075 மிலி கிராம்



செய்முறை :


நீ பொதுவாய் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவளில்லை. இது ஞாயிறு. வெள்ளிக்கிழமைகளில் நீ சாப்பிடுகிற மாமிசத்துணுக்கள் எப்போதேனும் பல்லிடுக்களில் சிக்கிக்கொண்டு நாள்முழுதும் அவஸ்தைப்படுத்தலாம் . எப்போதேனும் உடன்படித்த, பணிபுரிந்த ஏதேனுமொரு நண்பன் அல்லது பியை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கலாம். அவன் பெயரோ எப்படித் தொடர்பு என்பதோ உனக்கு மறந்திருக்கலாம். அவள்/ன் விடைபெற்றுப் போகும்வரையிலும்கூட. இத்தகைய அவஸ்தைகளை முன்பின்னாய்க் கலைத்துப் பார்த்தால் இந்தக் கவிதை உனக்குப் புரியலாம் -

- பிரதி தன் மய்யத்தை விட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டது - எனவே இது ஒரு விளிம்புநிலைப் பிரதி என்று சில பைத்தியக்காரர்கள் அபிப்பிராயப்படலாம் - ஆயினும் இது விளிம்புநிலைப்பிரதியில்லை - புனைவுவெளிகளில் உருண்டோடும் சொற்களைத் தொடர்ந்து சென்றால் ஒரு மலையுச்சியை அடைவாய் - அங்கு இன்னமும் சொல்லைப்போலொரு கனமான பாறையை சொல்லைப் போலொரு கனமான மலையுச்சிக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறான் சிசிபஸ் - தவறிவிழுந்த பாறை யேசுவின் தலையுச்சியில் விழ மலைமுகடுகளெங்கும் எதிரொலிக்கிறது "ஏலி லாமா சமக்தானி!"

Wednesday, February 20, 2008

அந்நியன், ஜெமோ, அம்பி




தமிழச்சி விவகாரம் தொடங்கி ஜெயமோகன் பிரச்சினை வரை என் கருத்து என்ன என்று எழுதுமாறு அவ்வப்போது சிலநண்பர்கள் சொல்லிவருகிறார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்லி 'கருத்து கந்தசாமியாக' விரும்பாததால் அதைக் கொஞ்சநாட்கள் தவிர்த்துவந்தேன். ஆனால், சமீபத்தில் நண்பர் பைத்தியக்காரன் ஜெமோ பற்றி எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் போட்டதாக நினைத்திருந்தேன். ஆனால் போட மறந்துவிட்டேன் போல. அதனால் சில 'கருத்துக்கள்'.

பைத்தியக்காரனின் பதிவில் நண்பர் ஜ்யோராம்சுந்தர் போட்டிருந்த பின்னூட்டம் இது.

'ஒரு விஷயத்தில் சிறு பத்திரிகை - பெரும் பத்திரிகை வித்தியாசம் அழிந்து வருவது தெரிகிறது '

ஆனால் சுந்தரின் இந்தக் கருத்தை நான் வன்மையாக மறுக்கிறேன். உண்மையில் அந்த வாக்கியம் இப்படி அமைந்திருக்க வேண்டும்.

'ஒரு சில விசயங்களைத் தவிர சிறுபத்திரிகை - பெரும் பத்திரிகை வித்தியாசம் அழிந்துவருகிறது'.

இப்போது சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை என்பதற்கான கோடு அழிந்துகொண்டே வருகிறது. இதுபற்றி விரிவாக எழுதலாமென்றாலும் அயர்ச்சியாக இருக்கிறது. சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

பத்து வருடங்களுக்கு முன்பு வெகுஜன இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தவர்கள் எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திராசவுந்திரராஜன், புஷ்பாதங்கதுரை ..... (இந்த வரிசையில் சுஜாதாவைச் சேர்க்கமுடியாது. அவர் மத்தியதர வர்க்கத்து அசமஞ்சிகள், 'மிதவாத' சிறுபத்திரிகையாளர்கள், சயன்ஸ்பிக்சன் ரசிகர்கள் என்று பலதரப்பு வாசகர் வட்டத்தைக் கொண்டவர்.மேலும் இப்போதும் சிறுபத்திரிகைக்காரர்களைத் தாண்டித் தாக்குப்பிடித்திருப்பவர் ரமணிசந்திரன். சுவாரசியமான விசயம். ரமணி தன் படைப்புகளில் இயன்றவரை தனித்தமிழைப் பின்பற்றுவது.)

ஆனால் இப்போது குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் ராஜேஷ்குமார்களை ஜெயமோகன்களும் எஸ்.ராமகிருஷ்ணன்களும் இடம்பெயர்த்துவிட்டனர். இப்போது வெகுஜன இதழ்களின் வாசகர்கள் ஜெமோ வகையறாக்களின் படைப்புகளைப் படிக்கும் மனோநிலைக்குத் தயாரானவர்கள், அல்லது அவர்களின் மனோநிலைக்கு ஏற்ப எழுத்தாளர்களின் படைப்புகள் மாறிவிட்டன.

மேலும் ஆயிரக்கணக்கான நாவல்கள் எழுதியிருக்கும் ராஜேஸ்குமார், (10000 நாவல்கள் என்று நினைவு), ஒரு கவுன்சிலர் தேர்தலில் நின்று கூட அதிகாரத்தைச் சுவைத்தவரில்லை.

ஆனால் சிறுபத்திரிகை எழுத்தாளர்களில் இப்போது ஒருவர் எம்.எல்.ஏ, ஒருவர் எம்.பி, ஒருவர் சட்டமன்றத்க்தேர்தலில் நின்று தோற்றுபோனவர், இன்னொருவரின் பெயர் ராஜ்யசபா எம்.பிக்கான பட்டியலில் பரிந்துரையில் உள்ளது. அப்படியானால் அதிகாரமய்யங்கள் என்பவை எது, அல்லது யார்?

மேலும் ஜெமோ தன் எழுத்து பலரையும் பகிடி செய்வதாகக் குறிப்பிடுகிறார். யாராவது சௌகார்ஜானகி தமிழின் சிறந்த நகைச்சுவைநடிகை என்று சொன்னால் சொல்பவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? எப்படியோ, ஜெமோ தனது ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குப்பைகளை பின்நவீனத்துவ நாவல்கள் என்று நம்பி பேசி வருவதைப்போல, தான் செய்வது பகிடி என்று நம்பும் உரிமை அவருக்கு உண்டு.

(ஜெமோகன் வலையை நான் படிப்பதில்லை. ஆனல் அவர் வலையில் எழுதவந்தது சுற்றுச்சூழலை நேசிப்பவன் என்றவகையில் மகிழ்ச்சியே. எத்தனைக் காகிதங்கள், குப்பைகள், மரங்கள் தப்பித்தன?)


ஆனால் உண்மையில் ஜெமோவின் காமெடியான விசயம் ஒன்றுண்டென்றால் அது 'விகடன் என்னை அவதூறு செய்கிறது' என்பதுதான். ஏனெனில், 'அவதூறு' என்னும் வார்த்தையைப் பயன்படுத்த ஜெமோவிற்கு அருகதையே கிடையாது. நொண்டிநாய், பின் தொடரும்நிழலின் குரல், தொடங்கிப் பல உதாரணங்கள் நினைவில் வருகின்றன.

ஆனால் அவதூறு, அவதூறு என்று கூச்சல் போடும் சிறுபத்திரிகைக்காரர்களைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அவதூறு செய்வதற்காகவே நடத்தப்படும் பத்திரிகை தினமலர். அதனோடு எந்த கூச்சநாச்சமுமில்லாமல், உறவு வைத்துக்கொள்ளும் இவர்களை எதாலடிப்பது?

இறுதியாக தோழர்.நாகார்ஜுனன் குறித்தும் ஜெமோ கீழ்த்தரமாக எழுதியிருந்ததாக நண்பர்கள் கூறினார்கள். நாகார்ஜுனன் ஏதோ சினிமா வசனம் எழுதிக்கொண்டிருந்தவர் அல்ல, காத்திரமான சிந்தனைகளை அறிமுகப்படுத்தியர் மட்டுமல்லாது அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் நேரடியாகக் களத்திலிறங்கிப் போராடியவரும்கூட.


ஷகீலா படங்களீல் உள்ளொளித் தரிசனங்களைத் தேடும் ஜெயமோகனுக்கு இது புரிய நியாயமில்லை. அவரை 'அம்பி' என்று கிண்டல் செய்திருக்கிறார். ஆனால் விகடனுக்கு எதிராக வந்த முதல்குரலும் நாகார்ஜுனனுடையது. இந்த ஜனநாயக உணர்விற்காக நாகார்ஜுனனுக்குத் தலைவணங்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ஜெமோ வெட்கப்படவாவது கற்றுக்கொள்ளவேண்டும்.

சில குறிப்புகள்

1. ஜெயமோகன் தன்னைப் பற்றி எழுதியிருப்பதை மறுத்து சாரு 20 பக்கங்களுக்கு மேற்பட்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால் போலிடோண்டு பிரச்சினை பற்றியும் சாரு குறிபிட்டு எழுதியிருப்பது. ஜெயமோகனைத் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியுமோ அந்தளவிற்கு போலிடோண்டுவையும் தெரியும்போல.

2. புத்தாண்டையையொட்டி விஜய் டிவியில் நடைபெற்ற 'நீயா நானா' நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், சிறுபத்திரிகைக்காரர்கள் எவ்வளவு தன்முனைப்புக்காரர்கள் மற்றும், அந்தர் பல்டி அடிப்பவர்களென்று. உதாராங்கள்: சாருவின் புத்தாண்டு சபதம், ஞாநியின் பகுத்தறிவு ஆவேசம், ரவிக்குமார் சொன்ன '2006ன் மனதைப் பாதித்த நிகழ்ச்சி'. அந்நிகழ்ச்சிக்கு சில சினிமாக்காரர்களும் வந்திருந்தார்கள். உண்மையில் அவர்கள் இயல்பாக இருந்தார்கள்.

Thursday, February 7, 2008

தமிழ்நதியின் புத்தகவிமர்சனக்கூட்டம்

கவிஞர் தமிழ்நதியின்


சூரியன் தனித்தலையும் பகல் - விமர்சனக்கூட்டம்

விமர்சன உரை

கவிஞர். தமிழ்மணவாளன்

கவிஞர். விஜயலெட்சுமி

கவிஞர். ராமசாமி

சுகுணாதிவாகர்


நாள் : 09.02.2008 சனி மாலை 5.00 மணி

இடம் : தேவநேயப்பாவாணர் நூலக அரங்கக் கட்டிடம்,
அண்ணாசாலை, சென்னை

ஒருங்கிணைப்பு : முரண்களரி இலக்கிய அமைப்பு, சென்னை.

வாய்ப்புள்ளவர்கள் வரவும்!!!

Saturday, February 2, 2008

ஒரு இளம்பெண்ணுக்கு ஆபத்து!

குடும்பம் மற்றும் திருமணத்தில் தனிச்சொத்து வகிக்கும் பாத்திரம் குறித்து விரிவாய் விளக்கினார் பேராசான் ஏங்கெல்ஸ். குறிப்பாக இந்தியாவில் சாதி, திருமணத்தில் வகிக்கும் பங்கு குறித்துப் பேசினார் தேசத்தந்தை அம்பேத்கர். எல்லாவற்றுக்கும் மேலாக திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்க வேன்டும் என்றார் தோழர்.பெரியார்.

திருமணமற்ற நடைமுறையைக் கைக்கொள்ளவே எனக்கும் விருப்பம். ஒரு ஆணும் பெண்ணும் விருப்பப்படும் வரை இணைந்து வாழ்வது, இல்லையேல் பிரிந்து விடுவது என்னும் விருப்பமே என் பதின்பருவங்களிலிருந்து இருந்து வந்தது. ஆனால் நடைமுறைச் சமூக அமைப்போ அதற்கு முற்றிலும் மாறாய் உள்ளது.

லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழும் பல நண்பர்களை எனக்குச் சென்னையில் தெரியும். ஆனால் சென்னையைத் தாண்டி இது சாத்தியமாவது மிகக்குறைவே. லிவிங் டூ கெதராக வாழ்ந்தால் மிகச்சுலபமாக எங்களூரில் சொல்லிவிடுவார்கள், 'இவன் இவளை வச்சுக்கிட்டிருக்கான்'.

ஆனால் பாலியல் தேவை உள்ளிட்ட பல தேவைகளை திருமண உறவுகளுக்குள்ளேயெ தீர்க்க வேண்டிய சூழலும் இன்னமும் எதார்த்தமாயுள்ளது. ஒப்பீட்டளவில் திருமணம் என்றாலும் சாதிமறுப்புத்திருமணம் குறைந்தபட்ச உடைப்புகளைச் சாதியச்சமூகத்தில் நிகழ்த்தவல்லது என்கிற புரிதல் ஏற்பட்டது.

இதற்காகவே மூன்றுவருடங்கள் வரை திருமணத்தைத் தள்ளிப்போட்டிருந்தேன். ஆனாலும் அது அவ்வளவு சுலபமாய் நிறைவேறுவதாயில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்காய்ப் பெண் தேடும்போதுதான் சூழலின் இன்னொரு பரிணாமம் புலப்பட்டது.

விடுதலை, உண்மை போன்ற பெரியாரியக்க இதழ்களில் வரும் சாதிமறுப்புத் திருமண விளம்பரங்களில் 'மாதம் 40000 ரூபாய் சம்பாதிக்கும் பெண்ணுக்கு அதை விடக் கூடுதலாக வருமானமுள்ள' தோழர் தேவை என்கிற விளம்பரங்களே அதிகம் வருகின்றன. இதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது. பெண்களின் வருமானமும் அவர்களின் சுயச்சார்பும் அதிகரித்திருக்கிறது. ஆனால் இங்கு சாதியையும் தாண்டி திருமணத்திற்கு வர்க்கச்சூழல், அந்தஸ்து மற்றும் வருமானப்பின்னணி அனைத்தும் தீர்மானிக்கும் காரணிகளாய் மாறிப்போயுள்ளன.

மேலும் அரசு வேலை குறித்த நம்பிக்கைகளும் இன்னமும் தமிழ்மக்களிடம் தகர்ந்து போகவில்லை. ஒரு விதவைப்பெண், நான்கு வயதில் குழந்தை உள்ளது. அவரைத் திருமணம் செய்ய விரும்பியும் அவர் நான் அரசு வேலையில் இல்லை என்ற காரணத்தால் நிராகரித்து விட்டார்.

அதேபோல் பெரியாரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தோழர் ஒருவரின் மனைவியின் தங்கை. அவரும் சாதிமறுப்புத் திருமணத்திற்குச் சம்மதித்திருந்தார். ஆனால் திடீரென்று தோழர் வெளிநாடு செல்ல வேண்டிய சூழல். பெண்ணை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தேன். என்ன காரணத்தாலோ அது அவரால் இயலவில்லை. திடீரென்று எப்போதேனும் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வரும், 'தோழர் இணையத்தில் உங்கள் கட்டுரையைப் படித்தேன், நீங்கள் நண்பராயிருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்' என்று. 'அதுசரி தோழர், பெண் விவகாரம் என்னாயிற்று?' என்று நான் பதில் அனுப்ப, அவரிடமிருந்து ஒரு பதிலும் வராது. மீண்டும் மூன்றுமாதம் கழித்து, ''தோழர் இணையத்தில் உங்கள் கட்டுரையைப் படித்தேன்....' மின்னஞ்சல்கள்.

இதில் சில 'புத்திஜீவிகள்' கேட்கும் கேள்வி, 'உங்களுக்குத்தான் சாதியே இல்லையே, அப்புறமென்ன எந்த சாதியில் திருமணம் செய்தால் என்ன?' இதன் மறைமுகப்பொருள், 'உங்கள் சாதியிலேயே திருமணம் செய்துகொள்ளுங்களேன்'. முதலில் யாரும் இங்கு முழுவதுமாக சாதியைக் கடந்து விட்டோமோ என்று தெரியவில்லை.

ஆனால் சாதி குறித்த வெறுப்பும் குற்றவுணர்வும் அதைக் கடந்து வருவதற்குமான எத்தனங்களுமே நமக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம். மேலும் 'எனக்குச் சாதியே இல்லை, அதனால் என் சொந்தக்காரப் பெண்னைத் திருமணம் செய்துகொள்வேன்' என்பதை விடவும் அயோக்கியத்தனம் வேறொன்றும் கிடையாது.

இன்னொரு தோழர், திண்டுக்கல்லில் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியைச் சேர்ந்தவர், அங்கு உணவகம் நடத்திவருகிறார். கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவரிடம், இன்னொரு தோழர் சொன்னார், 'தோழருக்கு சாதி மறுப்புத் திருமணத்திற்குப் பெண்ணிருந்தால் சொல்லுங்கள்' என்று. அதற்கு அந்த தோழர் அளித்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன்.

;தோழர், இதெல்லாம் எதுக்குப் பார்க்கறீங்க? நமக்கு அனுசரணையா இருப்பாங்களான்னு பாருங்க, நாளைக்குத் திடீர்ன்னு தமிழ்த்தேசியப் புரட்சி வந்திடுச்சுன்னு வச்சுக்கங்க, நான் உணவகத்தை விட்டுட்டு புரட்சிக்குப் போயிடுவேன், மனைவி ஓட்டலைப் பார்த்துக்குவாங்கல்ல'. ஆக மொத்தம் புரட்சி வந்தால் கூட அவர் மனைவி அவர் வீட்டையும் ஓட்டலையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இப்படியாகச் சாதிமறுப்புத் திருமத்திற்குப் பெண்தேடிய அனுபவங்களை எழுதினால் ஜெயமோகன் அளவிற்கேக் கூட ஒரு நாவல் எழுதலாம். ஆனால் ஒன்றைக் குறிப்பிடுவது முக்கியம். பெரியாரியக்கங்களின் மீது நம் அனைவருக்கும் பல விமர்சனங்கள் இருந்தபோதும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைப்பதை ஒரு கடமையாகவே கருதுபவர்கள் பெரியாரியக்கங்களிலேயே அதிகமிருக்கின்றனர்.

தலித் அரசியல் பேசுபவர்களில் பலர் தனக்குக் கீழுள்ள தலித் சாதிகளில் கூட திருமணம் செய்வதில்லை. இப்படியாகத்தான் நடைமுறை இருந்துவருகிறது. ஆனால் அதற்காக ஒரேடியாக சாதிமறுப்புத் திருமணம் சர்வரோக நிவாரணி என்றும் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் சாதி மறுப்புத்திருமணத்தின் மூலம் உருவாகும் குடும்பம் சாதிய அடையாளத்தைக் கடந்துபோவதற்குப் பதிலாக தந்தையின் சாதிய மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளும் அவலமும் நிகழத்தான் செய்கிறது. இடையில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவமும் - உங்களுக்குத் தெரிந்ததுதான், சாதியரீதியான அவதூறு - அதுவும்கூட சாதிமறுப்புத்திருமணத்தின் மீதான எனது தீவிரத்தை அதிகப்படுத்தியது.

எதற்கு இவ்வளவு கதை என்று கேட்கிறார்கள். வேறொன்றுமில்லை, ஒரு வழியாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமண தேதி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பெண்ணின் பெயர் ஜெயந்தி. ஜெயந்தியின் தந்தை ஒரு சாதி, தாய் வேறு சாதி. எனக்கு இத்தொடர்பு அப்பெண்ணின் சித்தியின் கணவரின் மூலம் ஏற்பட்டது. அவர் இந்த இரண்டு சாதிகளையும் சாராத இன்னொரு சாதி.

ஜெயந்தி கடைசிப் பெண், ஆண் கிடையாது. அவரின் அக்காக்கள் இருவருமே சாதிமறுப்புத் திருமணம்தான் செய்துள்ளனர். பெண் பார்க்கப்போகும் போது ஜெயந்தியிடம் தனியாகப் பேசினேன், என்ன கொடுமையென்றால் அப்பெண் தீவிர கடவுள் நம்பிக்கையாளர், நானொ இறை மறுப்பாளன். மேலும் சுனாமிக்குப் பிறகு அதிகம் பிணங்களைப் பார்த்த பாதிப்பால் ( அவர்கள் ஊர் மார்த்தாண்டம்) அசைவம் சாப்பிடுவதையே விட்டுவிட்டாராம். நானோ மாம்ச ரசிகன்.

என்றபோதும் சாதியைத் தாண்டி வருவதே முக்கியம், கடவுள்நம்பிக்கை என்பது இரண்டாம்பட்சமான, தனிநபர் உரிமை சார்ந்த பிரச்சினை என்றே நம்புகிறேன். ஆனால் இது சாதிமறுப்புத் திருமணமாக இருந்தபோதும் பெண் தலித் இல்லை. மூன்று இடைநிலைச்சாதிகளுக்குள் நடைபெறும் கலப்புத்தான்.

மேலும் இன்னொரு வருத்ததுக்குரிய அம்சம், தவிர்க்கமுடியாமல் தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும். (போகிற இடமெல்லாம் புருசனைக் காப்பாற்ற தாலி என்ன கோல்கேட்ஜெல் பாதுகாப்புவளையமா? என்று எவ்வளவு கேலி பேசியிருப்பேன்).

திருமணம் மே 25 அன்று திண்டுக்கல்லில் நடைபெறுவதாகவுள்ளது. நேரிலோ, மின்னஞ்சலிலோ, கடிதம் வழியாக, குறுஞ்செய்தி மூலமோ நண்பர்களுக்கு அழைப்பு அனுப்ப எண்ணம். வாய்ப்புள்ளவர்கள் வரலாம். இப்போதைக்கு இந்தப் பதிவின் மூலம் ஜெயந்திக்கு உங்கள் அனுதாபங்களைத் தெரிவிக்கலாம்.((-

நன்றி

பிரியங்களுடன்...

சுகுணாதிவாகர்.