Saturday, February 2, 2008

ஒரு இளம்பெண்ணுக்கு ஆபத்து!

குடும்பம் மற்றும் திருமணத்தில் தனிச்சொத்து வகிக்கும் பாத்திரம் குறித்து விரிவாய் விளக்கினார் பேராசான் ஏங்கெல்ஸ். குறிப்பாக இந்தியாவில் சாதி, திருமணத்தில் வகிக்கும் பங்கு குறித்துப் பேசினார் தேசத்தந்தை அம்பேத்கர். எல்லாவற்றுக்கும் மேலாக திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்க வேன்டும் என்றார் தோழர்.பெரியார்.

திருமணமற்ற நடைமுறையைக் கைக்கொள்ளவே எனக்கும் விருப்பம். ஒரு ஆணும் பெண்ணும் விருப்பப்படும் வரை இணைந்து வாழ்வது, இல்லையேல் பிரிந்து விடுவது என்னும் விருப்பமே என் பதின்பருவங்களிலிருந்து இருந்து வந்தது. ஆனால் நடைமுறைச் சமூக அமைப்போ அதற்கு முற்றிலும் மாறாய் உள்ளது.

லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழும் பல நண்பர்களை எனக்குச் சென்னையில் தெரியும். ஆனால் சென்னையைத் தாண்டி இது சாத்தியமாவது மிகக்குறைவே. லிவிங் டூ கெதராக வாழ்ந்தால் மிகச்சுலபமாக எங்களூரில் சொல்லிவிடுவார்கள், 'இவன் இவளை வச்சுக்கிட்டிருக்கான்'.

ஆனால் பாலியல் தேவை உள்ளிட்ட பல தேவைகளை திருமண உறவுகளுக்குள்ளேயெ தீர்க்க வேண்டிய சூழலும் இன்னமும் எதார்த்தமாயுள்ளது. ஒப்பீட்டளவில் திருமணம் என்றாலும் சாதிமறுப்புத்திருமணம் குறைந்தபட்ச உடைப்புகளைச் சாதியச்சமூகத்தில் நிகழ்த்தவல்லது என்கிற புரிதல் ஏற்பட்டது.

இதற்காகவே மூன்றுவருடங்கள் வரை திருமணத்தைத் தள்ளிப்போட்டிருந்தேன். ஆனாலும் அது அவ்வளவு சுலபமாய் நிறைவேறுவதாயில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்காய்ப் பெண் தேடும்போதுதான் சூழலின் இன்னொரு பரிணாமம் புலப்பட்டது.

விடுதலை, உண்மை போன்ற பெரியாரியக்க இதழ்களில் வரும் சாதிமறுப்புத் திருமண விளம்பரங்களில் 'மாதம் 40000 ரூபாய் சம்பாதிக்கும் பெண்ணுக்கு அதை விடக் கூடுதலாக வருமானமுள்ள' தோழர் தேவை என்கிற விளம்பரங்களே அதிகம் வருகின்றன. இதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது. பெண்களின் வருமானமும் அவர்களின் சுயச்சார்பும் அதிகரித்திருக்கிறது. ஆனால் இங்கு சாதியையும் தாண்டி திருமணத்திற்கு வர்க்கச்சூழல், அந்தஸ்து மற்றும் வருமானப்பின்னணி அனைத்தும் தீர்மானிக்கும் காரணிகளாய் மாறிப்போயுள்ளன.

மேலும் அரசு வேலை குறித்த நம்பிக்கைகளும் இன்னமும் தமிழ்மக்களிடம் தகர்ந்து போகவில்லை. ஒரு விதவைப்பெண், நான்கு வயதில் குழந்தை உள்ளது. அவரைத் திருமணம் செய்ய விரும்பியும் அவர் நான் அரசு வேலையில் இல்லை என்ற காரணத்தால் நிராகரித்து விட்டார்.

அதேபோல் பெரியாரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தோழர் ஒருவரின் மனைவியின் தங்கை. அவரும் சாதிமறுப்புத் திருமணத்திற்குச் சம்மதித்திருந்தார். ஆனால் திடீரென்று தோழர் வெளிநாடு செல்ல வேண்டிய சூழல். பெண்ணை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தேன். என்ன காரணத்தாலோ அது அவரால் இயலவில்லை. திடீரென்று எப்போதேனும் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வரும், 'தோழர் இணையத்தில் உங்கள் கட்டுரையைப் படித்தேன், நீங்கள் நண்பராயிருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்' என்று. 'அதுசரி தோழர், பெண் விவகாரம் என்னாயிற்று?' என்று நான் பதில் அனுப்ப, அவரிடமிருந்து ஒரு பதிலும் வராது. மீண்டும் மூன்றுமாதம் கழித்து, ''தோழர் இணையத்தில் உங்கள் கட்டுரையைப் படித்தேன்....' மின்னஞ்சல்கள்.

இதில் சில 'புத்திஜீவிகள்' கேட்கும் கேள்வி, 'உங்களுக்குத்தான் சாதியே இல்லையே, அப்புறமென்ன எந்த சாதியில் திருமணம் செய்தால் என்ன?' இதன் மறைமுகப்பொருள், 'உங்கள் சாதியிலேயே திருமணம் செய்துகொள்ளுங்களேன்'. முதலில் யாரும் இங்கு முழுவதுமாக சாதியைக் கடந்து விட்டோமோ என்று தெரியவில்லை.

ஆனால் சாதி குறித்த வெறுப்பும் குற்றவுணர்வும் அதைக் கடந்து வருவதற்குமான எத்தனங்களுமே நமக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம். மேலும் 'எனக்குச் சாதியே இல்லை, அதனால் என் சொந்தக்காரப் பெண்னைத் திருமணம் செய்துகொள்வேன்' என்பதை விடவும் அயோக்கியத்தனம் வேறொன்றும் கிடையாது.

இன்னொரு தோழர், திண்டுக்கல்லில் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியைச் சேர்ந்தவர், அங்கு உணவகம் நடத்திவருகிறார். கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவரிடம், இன்னொரு தோழர் சொன்னார், 'தோழருக்கு சாதி மறுப்புத் திருமணத்திற்குப் பெண்ணிருந்தால் சொல்லுங்கள்' என்று. அதற்கு அந்த தோழர் அளித்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன்.

;தோழர், இதெல்லாம் எதுக்குப் பார்க்கறீங்க? நமக்கு அனுசரணையா இருப்பாங்களான்னு பாருங்க, நாளைக்குத் திடீர்ன்னு தமிழ்த்தேசியப் புரட்சி வந்திடுச்சுன்னு வச்சுக்கங்க, நான் உணவகத்தை விட்டுட்டு புரட்சிக்குப் போயிடுவேன், மனைவி ஓட்டலைப் பார்த்துக்குவாங்கல்ல'. ஆக மொத்தம் புரட்சி வந்தால் கூட அவர் மனைவி அவர் வீட்டையும் ஓட்டலையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இப்படியாகச் சாதிமறுப்புத் திருமத்திற்குப் பெண்தேடிய அனுபவங்களை எழுதினால் ஜெயமோகன் அளவிற்கேக் கூட ஒரு நாவல் எழுதலாம். ஆனால் ஒன்றைக் குறிப்பிடுவது முக்கியம். பெரியாரியக்கங்களின் மீது நம் அனைவருக்கும் பல விமர்சனங்கள் இருந்தபோதும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைப்பதை ஒரு கடமையாகவே கருதுபவர்கள் பெரியாரியக்கங்களிலேயே அதிகமிருக்கின்றனர்.

தலித் அரசியல் பேசுபவர்களில் பலர் தனக்குக் கீழுள்ள தலித் சாதிகளில் கூட திருமணம் செய்வதில்லை. இப்படியாகத்தான் நடைமுறை இருந்துவருகிறது. ஆனால் அதற்காக ஒரேடியாக சாதிமறுப்புத் திருமணம் சர்வரோக நிவாரணி என்றும் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் சாதி மறுப்புத்திருமணத்தின் மூலம் உருவாகும் குடும்பம் சாதிய அடையாளத்தைக் கடந்துபோவதற்குப் பதிலாக தந்தையின் சாதிய மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளும் அவலமும் நிகழத்தான் செய்கிறது. இடையில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவமும் - உங்களுக்குத் தெரிந்ததுதான், சாதியரீதியான அவதூறு - அதுவும்கூட சாதிமறுப்புத்திருமணத்தின் மீதான எனது தீவிரத்தை அதிகப்படுத்தியது.

எதற்கு இவ்வளவு கதை என்று கேட்கிறார்கள். வேறொன்றுமில்லை, ஒரு வழியாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமண தேதி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பெண்ணின் பெயர் ஜெயந்தி. ஜெயந்தியின் தந்தை ஒரு சாதி, தாய் வேறு சாதி. எனக்கு இத்தொடர்பு அப்பெண்ணின் சித்தியின் கணவரின் மூலம் ஏற்பட்டது. அவர் இந்த இரண்டு சாதிகளையும் சாராத இன்னொரு சாதி.

ஜெயந்தி கடைசிப் பெண், ஆண் கிடையாது. அவரின் அக்காக்கள் இருவருமே சாதிமறுப்புத் திருமணம்தான் செய்துள்ளனர். பெண் பார்க்கப்போகும் போது ஜெயந்தியிடம் தனியாகப் பேசினேன், என்ன கொடுமையென்றால் அப்பெண் தீவிர கடவுள் நம்பிக்கையாளர், நானொ இறை மறுப்பாளன். மேலும் சுனாமிக்குப் பிறகு அதிகம் பிணங்களைப் பார்த்த பாதிப்பால் ( அவர்கள் ஊர் மார்த்தாண்டம்) அசைவம் சாப்பிடுவதையே விட்டுவிட்டாராம். நானோ மாம்ச ரசிகன்.

என்றபோதும் சாதியைத் தாண்டி வருவதே முக்கியம், கடவுள்நம்பிக்கை என்பது இரண்டாம்பட்சமான, தனிநபர் உரிமை சார்ந்த பிரச்சினை என்றே நம்புகிறேன். ஆனால் இது சாதிமறுப்புத் திருமணமாக இருந்தபோதும் பெண் தலித் இல்லை. மூன்று இடைநிலைச்சாதிகளுக்குள் நடைபெறும் கலப்புத்தான்.

மேலும் இன்னொரு வருத்ததுக்குரிய அம்சம், தவிர்க்கமுடியாமல் தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும். (போகிற இடமெல்லாம் புருசனைக் காப்பாற்ற தாலி என்ன கோல்கேட்ஜெல் பாதுகாப்புவளையமா? என்று எவ்வளவு கேலி பேசியிருப்பேன்).

திருமணம் மே 25 அன்று திண்டுக்கல்லில் நடைபெறுவதாகவுள்ளது. நேரிலோ, மின்னஞ்சலிலோ, கடிதம் வழியாக, குறுஞ்செய்தி மூலமோ நண்பர்களுக்கு அழைப்பு அனுப்ப எண்ணம். வாய்ப்புள்ளவர்கள் வரலாம். இப்போதைக்கு இந்தப் பதிவின் மூலம் ஜெயந்திக்கு உங்கள் அனுதாபங்களைத் தெரிவிக்கலாம்.((-

நன்றி

பிரியங்களுடன்...

சுகுணாதிவாகர்.

51 comments:

செல்வநாயகி said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் திவாகர்!

Pot"tea" kadai said...

ஆழ்ந்த அனுதாபங்களுடன் வாழ்த்துக்கள் :))

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்..

மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. said...

காலம் கற்றுத்தரும் பாடம் அதிகம்.
போகப்போக இது புரியும்.

திருமணத்திற்க்கு பின் துனணவியிடம்
சற்றே அடக்கிவாசியுங்கள்.

மிக்க மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.

Anonymous said...

சுகுணா..

எல்லோரையும் போல்தான் நீங்களும் மாறிப்போனீர்கள். திண்டுக்கல் நண்பர் அப்படி என்ன தவறாகக் கேட்டு விட்டார். வாழ்க்கை என்பது ஒரு கணவனையும் மனைவியையும் மட்டுமே சார்ந்ததல்ல. அதற்கு மேல் குறைந்த பட்சம் குழந்தைகள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் வேளா வேளைக்க கெளரவமாகச் சாப்பிடப் பொருளாதரப் பலம் தேவை. அதைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சரி, தற்போது இறை நம்பிக்கையுடைய ஒரு பெண்ணுக்குத் தாலிகட்டப் போகிறீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையாளரைப் பொறுத்துப் போவது போல அந்த இறை நம்பிக்கையாளர் உங்களைப் பொறுத்துப் போவாரா என்பது பெரிய கேள்விக்குறி. கடைசியில் இன்னும் ஒரு ஆறு மாதத்திற்கு உங்களிடமிருந்து சில பதிவுகள் வெளிவரும். அதற்குப் பிறகு, சுகுணா திவாகர் என்ற இணையப் பிம்பம் மறைந்து போயிருக்கும். அப்படி அக்காலக் கட்டத்திற்குப் பிறகு உங்கள் பதிவுகள் தற்போது வருவது போன்ற இயல்புடன் வருமாயின் ஒன்று உங்கள் மனைவி உங்களுக்காக மாறியிருக்க வேண்டும் அல்லது நீங்கள் இல்லறப் பந்தத்திலிருந்து வெளியேறியிருக்க வேண்டும்.

நாங்கள் பார்க்கத்தானே போகிறோம். அதேசமயம் எங்கள் ஆசையும் அதுவல்ல. நீண்டகாலம் இணைந்து மணவாழ்க்கை வாழ வேண்டும் என்பதே எங்களது அவா.


மறந்துவிடப் போகிறேன்.. வாழத்துக்கள், சுகுணா.. பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ மணமார்ந்த வாழ்த்துக்கள்.

நந்து f/o நிலா said...

வாழ்த்துக்கள் சுகுனா. அனுதாபம்லாம் யாருக்கு சொல்லனும்ன்னு கொஞ்ச நாள் போனா தான் தெரியும் :P

மொதல்ல கல்யானம் பண்ணுங்க. பொண்ணு திண்டுக்கல்லா?(நான் படிச்சதெல்லாம் திண்டுக்கல்தான்) திண்டுக்கல் பொண்ணுங்க கெட்டி. இன்னும் ரெண்டு வருசத்துல பழனிக்கு மாலை போட்டு பாதயாத்திரை போவத்தான் போறீங்க. :P.ஜெயந்தி உங்கள மாத்திடுவாங்க பாருங்க

இன்னுமொறு மனம் கனிந்த வாழ்த்துக்கள் சுகுனா

Anonymous said...

Good wishes - Chandra

Anonymous said...

வாழ்த்துகள் சகோதரர் சுகுணா. தங்கள் இருவருடைய எண்ணம் மற்றும் செயல் இரண்டும் ஒன்றினைந்து இருவரின் இணை வாழ்க்கை இனிதே சிறக்க வாழ்த்துகிறேன்.

தோழமையுடன்
பெரோசுகான்

manjoorraja said...

ஜெயந்திக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு பதிலாக உங்களுக்கு தான் தெரிவிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. :)

Ayyanar Viswanath said...

ஜெயந்திக்கு அனுதாபங்களை நேரிலேயே தெரிவித்து விடுகிறேன்..:)

வினையூக்கி said...

வாழ்த்துக்கள் சுகுணாதிவாகர்.

லிவிங் ஸ்மைல் said...

நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்வார்

காதல்ன்றது, பப்ளிக் டாய்லெட் மாதிரி வெளிய நிக்கிறவன் உள்ள போகணும்னு துடிப்பான். உள்ளப் போனவன் எப்படா வெளிய வருவோம்னு துடிப்பான். கல்யாணம் கூட அப்படித்தான்.


இருந்தாலும் வாழ்க்கைக்கு துணை மிக மிக அவசியம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. இரு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

கையேடு said...

வாழ்த்துக்கள் திரு. சுகுணாதிவாகர்..

TBCD said...

நீங்க சொல்ல வந்தது விளங்குகிறது என்றாலும், லிட்டரலாக அர்த்தம் எடுத்தால், மேலான சாதி, கீழ்ந்த சாதி என்று ஒன்று இருப்பதாக அர்த்தம் தொனிக்கிறது. இதை வேறு மாதிரியாக சொல்லியிருக்கலாமோ...
///
தலித் அரசியல் பேசுபவர்களில் பலர் தனக்குக் கீழுள்ள தலித் சாதிகளில் கூட திருமணம் செய்வதில்லை. இப்படியாகத்தான் நடைமுறை இருந்துவருகிறது.
///

வாழ்த்துக்கள்...சுகுணா திவாகர்
வாழ்த்துக்கள்...ஜெயந்தி.

Osai Chella said...

சுகுணாவுக்கு கண்ணாலமா? கொக்கமக்கா.. பின்னூட்டமெல்லாம் பத்தாது... பதிவே போட்டுவிடுகிறேன்! ஜெயந்திக்கு எனது வாழ்த்துக்கள்! ஆமா செல்போன் யூஸ் ஆகுதா சுகுணா?!! :-)

PRABHU RAJADURAI said...

ஆக நீங்களுமா?

சுகுணாதிவாகர் said...

என்ன ராஜதுரை, 'யூ டூ புருட்டஸ்' மாதிரி கேக்கறீங்களே?

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் சுகுணா

Anonymous said...

Anuthabangal! :)

thiru said...

சுகுணா,

அன்புடன் இனிய வாழ்த்துக்கள்! எங்கள் ஊருக்கு வரப்போறீங்க :)

Anonymous said...

அப்பறமா ரெண்டாவது ரவுண்டு ஓடுச்சாமே... நல்லா இருங்கய்யா :-)

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள் சுகுணா. ரிசப்ஷனை சென்னையில் வைக்கும் உத்தேசம் உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

இராம.கி said...

கொடுமை, சனியன் என்ற வெளிப்பாடுகளோடு கலந்து இளக்காரமாய் நீங்கள் எழுதியிருக்கும் இந்தப் பதிவை திரு. ஜெயந்தி படித்துச் செரித்து கொள்ள முடியும் என்று எண்ணுகிறீர்களா? அந்தப் பெண்ணுக்கும் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்காதா? பெண்ணியச் சிந்தனை பற்றி விடாது பேசிக் கொண்டே, இப்படி ஒரு ஆண் நோக்குப் பதிவா? ஒரு புரிந்துணர்வு, நிதானம் வேண்டாமா?

எந்த ஒரு செய்தியையும் உடனிருப்போருக்குச் சொல்லுவதில் ஒரு முறை இருக்கிறது. அது கலகக் காரராய் இருந்தாலும் செய்ய முடியும்.

இருந்தாலும், திரு.ஜெயந்திக்கும், உங்களுக்குமான என் வாழ்த்துக்கள். வாழ்க்கையைக் கூடிய விரைவில் பட்டு அறிந்து கொள்ளுவீர்கள்.


அன்புடன்,
இராம.கி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இப்போதுதான் இதைப் படித்தேன். மனம் நிறைந்த வாழ்த்துகள் சுகுணா.

Anonymous said...

Congratulations Suguna Diwakar. May God Almighty bless you with whatever you want in your married life.

A Friend.

Anonymous said...

வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

முன்னர் ஒரு சில சண்டைப் பதிவு,பின்நவினத்துவம் போன்ற எனக்குப் புரியாத விசயங்களைக் காணும் போது சில வரிகளுடன் ஓடி விடுவேன்.முழுதாகப் படித்து உங்கள் மனஓட்டங்களைப் புரிந்து கொண்ட பதிவு இது.நிதர்சனத்துடன் எழுதியுள்ளீர்கள்.வாழ்க வளமுடன்.

Unknown said...

புது நண்பர்கள், புது இடம் ..போன்றவை ஒரு புத்துணர்ச்சியைத் தருவதுபோல இந்த புது உறவு உங்களுக்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கும்.

மனம் நிறைந்த வாழ்த்துகள்!!

********

// தவிர்க்கமுடியாமல் தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும். //

:-)))

முன்,பின்,பக்கவாட்டு நனீனத்துவங்கள்,பெரியாரியம்,...பல இசங்கள்.....

கூடி வாழும் சமுதாய வாழ்வில் சமரசங்களே வாழ்க்கை.புனைவாக எழுத முடியும் , புனைவில் வாழ முடியாது.

****

திருமணம் ஒரு ஒப்பந்தம். நான் திருமணம் ஆனவன்/ள் என்பதை ஒரு அடையாளத்தின்மூலம் ஆணும் பெண்ணும் மற்றவர்களுக்கு தெரிவிப்பது அவசியம். அந்த அடையாளம் தாலியாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.அல்லது தாலியைத் தவிர எல்லாம் ஓ.கே என்றும் இல்லை. பரஸ்பரம் ஏற்றுக் கொண்ட அடையாளம் போதும்.

நீங்கள் என்ன அடையாளம் ஏற்றுக் கொள்ளப்போகிறீர்கள்?

***
சாதி மறுப்பு திருமணங்கள் என்று சொன்னாலும் அவர் இன்ன சாதி, அவர் அக்கா இன்ன சாதி, அவர் மாமா இன்ன சாதி என்று இன்னும் தெரியத்தருகிறார்கள்.சாதி மறுப்புக் கொள்கை?...

நீங்களாவது உங்கள் குழந்தைகளின் திருமணத்தில் உங்களின் சாதியைச் சொல்ல வேண்டாம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்பதையும் அறிவேன். என்ன செய்ய ... சின்னஞ்சிறு கதைகள் பெசி இந்த வாழ்வைக் கடப்போம் :-)

வரவனையான் said...

நண்பா ! அன்பு மணக்கும் முத்தங்களுடன் வாழ்த்துக்கள்.


ஒரு பதிவே போட்டுருக்கிறேன் என் புலம்பலை

http://kuttapusky.blogspot.com/2008/02/continues.html

பாரதி தம்பி said...

வாழ்த்துக்கள் நண்பா..

ஆடுமாடு said...

வாழ்த்துகள் சுகுணா.

Unknown said...

எனதினிய திருமண நல்வாழ்த்துக்கள் சுகுணா மற்றும் ஜெயந்திக்கு.

உண்மைத்தமிழன் said...

கிழிஞ்சது.. அறிமுகப் படலமே இந்த லட்சணத்துலயா..?

வாழ்க்கையையும் பின்நவீனத்துல ஒண்ணுன்னு நினைக்காதீங்க சாமி..

அது எந்தக் கட்டுடைப்புக்குள்ளும் அடங்காதது..

நல்ல விஷயத்தையெல்லாம் நல்லவிதமா சொல்லிப் பழகுங்க..

இதுதான் முதல் 'மண்டகப்படி'.. இன்னும் நிறைய இருக்கு மவனே..!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

அருண்மொழி said...

வாழ்த்துக்கள்.

K.R.அதியமான் said...

////என்ன கொடுமையென்றால் அப்பெண் தீவிர கடவுள் நம்பிக்கையாளர், நானொ இறை மறுப்பாளன். மேலும் சுனாமிக்குப் பிறகு அதிகம் பிணங்களைப் பார்த்த பாதிப்பால் ( அவர்கள் ஊர் மார்த்தாண்டம்) அசைவம் சாப்பிடுவதையே விட்டுவிட்டாராம். நானோ மாம்ச ரசிகன்.////

இதுதான் விதி எனப்படுவது. சூப்பர்.

வாழ்த்துக்கள்.

An old saying :

'No matter how much ever a man doubts his wife's judgement, he never questions her choice of husband' !!

nagoreismail said...

நானும் எனது மனைவியும் 20 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இருந்தோம், அதன் பிறகு திருமணம் செய்து கொண்டோம் - ஹென்னி யங் மேன்
உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்

thiru said...

சுகுணா,

மனிதக்குழுக்களுக்குள் உறவுகளை முறைப்படுத்த உருவாக்கப்பட்ட வாழ்க்கைமுறை, 'திருமணம்' என்று புனிதப்படுத்தப்பட்ட நிறுவனமாகி விட்டது. சந்ததியை பரப்ப, சொத்திற்கு வாரிசாக பிள்ளை பெற்று தர 'பெண்டாள' தரும் 'லைசென்ஸ்' சடங்குகளாக திருமணங்கள் இருக்கின்றன. 'வாரிசு' ஆணாக இருக்க வேண்டும். குழந்தைகளில்லாவிட்டால் மீண்டும் பெண்ணிற்கே சுமை. சாதி, மதம் மட்டுமல்ல தனது வர்க்கத்திற்குள் தான் திருமணம். இது தான் நமது திருமணங்களின் நிலை. இதனால் திருமணம் என்னும் 'நிறுவனம்' மீது எரிச்சல் தான் வருகிறது.

ஆணாதிக்க, வர்க்க சிந்தனையினால் திருமணங்களில் பெரும்பாலும் உறவின் அர்த்தமும், நோக்கமும் சிதைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை மாற்ற பெரும் கலாச்சார புரட்சியே அவசியமாகிறது.

யாரோடு வாழ்வது என்பதை தீர்மானிக்கும் உரிமை வாழப்போகிற இருவரிடமும் மட்டுமில்லை. சுற்றி இருக்கும் பெற்றோர், உறவுகள், சமூகம் இவை அனைத்தும் சேர்ந்தே தீர்மானிக்கிறது. யாரோடு வாழ ஒப்பந்தம் செய்துகொள்ள போகிறீர்களோ அவர்களது அனுபவம், சிந்தனை, பழக்கம், சூழல் அனைத்தும் வேறுபட்டதாக இருக்கும் போதே தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம்.

புரட்சி/கலகம் இவற்றை நேரம் கூறிப்பிட்டு செயல்படுத்த முடியுமா? தொடர் செயல்பாடுகளது விளைவில் தானே மாற்றம் பிறக்க இயலும். திருமணம் செய்யும் பெண் இயக்கங்களது செயல் தாக்கமும், சிந்தனையும் கிடைக்க வாய்ப்புகள் பெற்றவரா என்ன? சிந்திக்க, செயல்பட வாய்ப்புகள் கிடைக்கும் போது அவர்களது நிலைபாடுகளிலும் மாற்றம் வரலாம் இல்லையா?

இராம.கி அய்யாவின் இந்த வரிகள் உண்மை நிலையை பிரதிபலிப்பவை.

//அந்தப் பெண்ணுக்கும் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்காதா? பெண்ணியச் சிந்தனை பற்றி விடாது பேசிக் கொண்டே, இப்படி ஒரு ஆண் நோக்குப் பதிவா? ஒரு புரிந்துணர்வு, நிதானம் வேண்டாமா?

எந்த ஒரு செய்தியையும் உடனிருப்போருக்குச் சொல்லுவதில் ஒரு முறை இருக்கிறது. அது கலகக் காரராய் இருந்தாலும் செய்ய முடியும்.//

தன்னைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ளும் போது அவர்களிடமும் மாற்றம் வரும். ஒருவரது கனவும், எதிர்பார்ப்பும், திட்டங்களும் மட்டுமல்ல திருமண வாழ்க்கை. இருவருக்குமானதே!

அதற்காக விதி, சதி என்று இல்லாததை நினைத்து நோகவும் அவசியமில்லை.

தாலி கட்டாமல் ஆணாதிக்கத்தின் உச்ச கொடுமைகளில் ஈடுபடவும் செய்யலாம். தாலி அடையாளம் மட்டுமே. வாழ்க்கையை எப்படி அமைக்கப் போகிறீர்கள் என்பது தான் அதை விட முக்கியமானது.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் திருமணத்திற்கு தாலி கட்ட மறுத்தார். தாலி கட்டியே ஆகவேண்டுமென பெண் வீட்டார் அடம் பிடித்தனர். நண்பர் அந்த பெண் தனக்கும் தாலி கட்டிக்கொள்ள வேண்டுமென கேட்டார். தயக்கத்தின் பின்னர் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் தாலியுடன் சடங்கு முடிந்த பின்னர் இருவருமே தாலியை கழற்றி விட்டனர். இந்த மாற்றம் அவர்களுக்குள் ஏற்பட்ட புரிதலால் வந்தது.

Anonymous said...

சீதனம் எவ்வளவு சுகுணா?

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் சுகுணா

PRABHU RAJADURAI said...

சில மணி நேரத்துக்கு முன்புதான் நண்பர் ஒருவரிடம், 'அனார்கிஸ்ட்டுன்னு நினைச்சேன்...திடுப்புன்னு திருமணம் என்கிறார்' என்று உங்களைப் பற்றி பேசிக்கொண்டிந்தேன். கலகக்காரர் என்பதுதான் சரியான வார்த்தையா?

அதுதான் நீங்களுமா என்றது :-))

இராமகி அவர்கள் கூறியதில் உண்மை இருக்கிறதல்லவா?

Sri Rangan said...

நிறைந்த வாழ்துடன்"வாழ்க-போராடுக,வளம்" பெறுக!

குழலி / Kuzhali said...

தல அப்புடி போடு.... வாழ்த்துகள்.... மகனே மாட்டுனியா?

சுந்தர் / Sundar said...

ம்ம்ம் .. ஹ்ம்ம் ...
வாழ்த்துக்கள் :))

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கள் சுகுணா.

Unknown said...

மிக்க மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.

பாண்டித்துரை said...

வாழ்த்துக்கள் சுகுணா

அரை பிளேடு said...

வாழ்த்துக்கள் சுகுணாதிவாகர்.

லக்கிலுக் said...

//என்ன கொடுமையென்றால் அப்பெண் தீவிர கடவுள் நம்பிக்கையாளர், நானொ இறை மறுப்பாளன்.//

:-((((

கொஞ்சம் லேட்டாக வாழ்த்துகள்!!

டவுசர் கிழியுது, தாவூ தீருதுக்கு இனி சரியான பொருள் உமக்கு புரியலாம்!!

Anonymous said...

வாழ்த்துகள்

Anonymous said...

இராம.கியின் கருத்தினையும் வாழ்த்தினையும் ஒத்தி எனது கருத்தும் வாழ்த்தும்.

ராஜா சந்திரசேகர் said...

வாழ்த்துக்கள்
சுகுணாதிவாகர்