Saturday, June 6, 2009

அஞ்சலி - ராஜமார்த்தாண்டன்

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர்களில் ஒருவரும் இலக்கிய நட்புகளை தொகை தொகையாய்ப் பேணுபவருமான ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார். தமிழினி பதிப்பகத்திற்காக பாரதிக்குப் பிறகு தமிழின் முக்கியமான 150 கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ‘கொங்குதேர் வாழ்க்கை‘ என்னும் பெயரில் புத்தகமாய்க் கொண்டு வந்தார். அந்த 150 கவிஞர்களில் நானும் ஒருவன். அதற்காக அனுமதி கேட்பதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். அப்படித்தான் ராஜமார்த்தாண்டன் பரிச்சயம். பிறகு தினமணி அலுவலகங்களில் ஓரிருமுறை. ஒருமுறை ராயப்பேட்டை மேன்ஷனில் அவரைப் பார்க்கச் சென்றபோது இரண்டு கட்டில்கள் அவர் அறையில் இருந்தன. இரண்டு கட்டில்கள் நிறைய புத்தகங்கள். அவரோ மதுவருந்தி விட்டு தரையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். பலமணி நேரம் காத்திருந்தும் அவர் எழுவதாகத் தெரியவில்லை. அனேகமாக நான் வந்துபோனதே அவருக்குத் தெரிந்திருக்காது. ராஜமார்த்தாண்டன் தொகுத்த அந்த கவிதைத்தொகுப்பு குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. யவனிகாசிறீராம், என்.டி.ராஜ்குமார் போன்ற பல கவிஞர்களின் கவிதைகளை அவர் நிராகரித்திருந்தார் என்பதுதான் காரணம். நான் அதிகமும் அறிமுகமாகாத கவிஞன் மற்றும் காலச்சுவடிற்கு எதிராக எழுதி வந்தவன் என்றபோதும் எனது கவிதைகளை அவர் தேர்ந்தெடுத்திருந்தது அவரது நடுவுநிலைமைக்குச் சாட்சி. விக்கிரமாதித்யனைப் போலவே தமிழ்ச்சூழலில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்த ராஜமார்த்தாண்டனை இழந்தது எல்லா இலக்கிய நண்பர்களுக்குமான இழப்பு. நண்பர்களுக்கான வருத்தங்கள்.

7 comments:

அகநாழிகை said...

சுகுணா திவாகர்,
தொடர்ச்சியாக இலக்கிய நண்பர்களின் மரணம் குறித்த சேதிகளையே கேள்விப்பட நேர்வது வருத்தமானதுதான். ராஜமார்த்தாண்டனின் ‘கொங்குதேர் வாழ்க்கை‘ அரிய பணிதான். ராஜமார்த்தாண்டனின் கவிதைத் தேர்வுகள் குறித்த எதிர் விமர்சனங்கள் எழுந்ததினால் அவரது தேர்வுகள் சரியானவை அல்ல என்றாகிவிடாது. அவருக்கும் கவிதை குறித்தான அணுகலில் முன் முடிவுகள் இருந்திருக்கலாம். புதிதாக எழுதுபவர்களை ஊக்கப்படுத்துவதில் அவர் காட்டிய ஆர்வம் அதீதமானது. தினமணியில் நான் இருந்த நாட்களில் அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்போதிருந்த தயக்க மனோநிலையில் பேசியதே இல்லை. அவரது இழப்பு குறித்து வருத்தம் ஏற்படுகிறதற்கு காரணம் அவரோடு உள்ள உணர்வு ரீதியான உறவுதான்.
உணர்வினை பகிர்ந்தற்கு மிக்க நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தமிழ்நதி said...

மிக அருமையான மனிதர் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சந்தித்ததில்லை. வருத்தமாக இருக்கிறது. இனியென்ன... காலம் வழமைபோல ஓடும்:( நிறுத்துதலற்று.

ஆதவா said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது... இவ்வருடத்தில் தொடர்ச்சியாக இலக்கிய பிரமுகர்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றனர்...

அவரது உற்றார் உறவினருக்கு என் அஞ்சலிகள்

நிலாரசிகன் said...

கவிஞர்.ராஜமார்த்தாண்டனின் மறைவு பெரும் அதிர்வுகளை தருகிறது. அவரது கொங்குதேர் வாழ்க்கை மிக முக்கியமான தொகுப்பு நூல். பல கவிஞர்களை அடையாளங்காட்டியது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

அய்யகோ.. கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணமடைந்த சேதி கேட்டு வேதனையடைந்தேன்.. அன்னாருக்கு எனது அஞ்சலி..
குறைந்த நாட்கள்தான் அவர்களிடம் பழகியுள்ளேன்.. ஆனால்அவரிடம் நான் தெரிந்து கொண்டது அதிகம்
செய்தி வெளியிட்டத்தற்கு நன்றி.

வேதனையுடன்
பத்ரிநாத்

திருமாவளவன் said...

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணமான செய்தி என்னை மிகவும் துயரத்துள் வீழ்த்தியது. நம்பவே மனசு மறுக்கிறது.
கவிஞர் ராஜமார்த்தாண்டனை ஆரம்பத்தில் பெயரளவில் அறிந்திருந்தாலும் அவரது கவிதைகளை படித்துப் பார் என ஒரு ஊக்கிவிப்பைத் தந்தவர் வெங்கட் சாமிநாதன். இதன் பின் அவரது கவிதைகளை தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஈழத்து கவிதைகள் பால் வெகு அக்கறை கொண்டிருந்தார். இவர் போண்றவர்களின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு.
கடந்த ஜனவரியில் வெளியான எனது இருள்-யாழி கவிதைத் தொகுப்பில் பின் இணைப்பாக எனது கவிதைகள் தொடர்பான நீண்ட மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். வருகிற ஜனவரியில் இவரை நேரில் சந்திப்பேன் என்கிற பேராவலில் இருந்தேன்
இவ்வளவு எளிதில் காலன் அவரை கவர்வான் என எதிர் பார்க்கவில்லை.
அன்னாருக்கு தலை சாய்த்து என் அஞ்சலி.
திருமாவளவன்

லக்கிலுக் said...

அன்னாருக்கு அஞ்சலிகள்