Tuesday, September 1, 2009

அந்த கொலை வீடியோக்கள் குறித்து ஷோபாசக்தி

மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது:

"கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்" என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் 4'ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்படுபவர்கள் புலிகளா அல்லது சாதாரண தமிழ் இளைஞர்களா என்பது குறித்து எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கொல்பவர்கள் இலங்கை இராணுவத்தினர் என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.

இலங்கை அரசினதும் இலங்கை இராணுவத்தினதும் ஆதரவு இணையத்தளங்களாலும் தனிநபர்களாலும் இப்போது அந்தச் சம்பவததில் கொல்லப்பட்டவர்கள் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என்றும் கொன்றவர்கள் புலிகள் என்றுமொரு பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகமும் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. எப்படியாவது என்ன பேய்க்கதையைச் சொல்லியாவது இலங்கை அரசைக் காப்பாற்றவேண்டும் என இவர்கள் துடிக்கிறார்கள்.

கொல்லப்பட்வர்கள் புலிகள் அல்ல என்பதற்கு இவர்கள் வைக்கும் மோட்டுத்தனமான வாதங்களில் ஒன்று 'புலிகள் தாடி வைப்பதில்லை, ஆனால் கொல்லப்பட்டிவர்களிற்கு தாடியிருக்கிறது' என்பதாகும். புலிகள் தாடி வைக்கமாட்டார்கள் என்று இவர்கள் எங்கே ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டடைந்தார்கள் என்பது தெரியவில்லை. புலிகளின் முதலாவது வாகனப் பொறுப்பாளருக்குப் பெயரே தாடி சிறி என்பதுதான் (அவர் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். ஆண்டு 1986 என்று ஞாபகம்) கிட்டு, திலீபன் போன்ற பிரபலங்களே அவ்வப்போது தாடி வைத்திருப்பார்கள். தாடி வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் இயக்கத்தில் கண்டிப்பான விதிகள் ஏதும் எனக்குத் தெரிந்து கிடையாது. பிரபாகரனின் தாடிவைத்த புகைப்படம் கூட பிரபலம்தான்.

சரி அப்படி ஒரு விதியிருக்கிறது என வைத்தக்கொண்டாலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு இராணுவம் ஒவ்வொரு நாளும் சவரம் செய்தா விடப்போகிறது. தாடி தன்பாட்டுக்கு வளர்ந்திருக்கும். இந்த மயிர் விவகாரத்தை வைத்து கொன்றவர்கள் இராணுவமல்ல என்று விவாதிப்பது கொலைகாரத்தனம்.

கொல்லப்பட்டவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாருக் என்பது இவர்கள் கசியவிட்டிருக்கும் இன்னொரு செய்தி. அந்தக் காட்சியில் கொல்லப்படுபவர்களின் முகங்களை அடையாளம் காண்பது மிகச் சிரமமானது அல்லது சாத்தியமற்றது. இது இன்னொரு திரிப்புத்தான் என நான் நம்புகிறேன்.அதில் கொல்லப்பட்டவர் பாருக் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜனவரியில் நடந்த சம்பவத்தை ஏன் இத்தனைநாள் கழித்து வெளிக்கொணர வேண்டும் என்பது இவர்கள் எழுப்பும் இன்னொரு முட்டாள்தனமான கேள்வி. அங்கே என்ன சினிமா சூட்டிங்கா நடைபெற்றது குறித்த காலத்தில் படப்பிடிப்பை முடித்து குறித்த காலத்தில் ரீலிஸ் செய்ய. கொலைகாரர்களில் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு எத்தனையோ கைமாறித்தான் ஊடகவியலாளர்களைச் சேர்ந்திருக்கும். 'சனல் 4' பதிவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய நாட்களை எடுத்திருக்கும். தாமதமானதிற்கு இவ்வாறான ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

புலிகள் தங்கள் சிறையிலிருந்தவர்களை நிர்வாணப்படுத்தமாட்டார்கள் என்பதோ, இழுத்துப்போய்ச் சுடமாட்டார்கள் என்பதோ என் கருத்தில்லை. தோழர்கள் இராயகரன், சரிநிகர் சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான இயக்கப் போராளிகளும் அப்பாவிச் சனங்களும் புலிகளால் இவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள்தான். 'கந்தன் கருணைப் படுகொலை' எனச் சொல்லப்படும் கொலைச் சம்பவத்தில் புலிகளிடமிருந்த சிறைக்கைதிகள் அய்ம்பத்தேழு பேர்கள் ஒரே இரவில் புலிகளால் கொல்லப்பட்டார்கள். புலிகளின் மூத்த தளபதி அருணாவின் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒன்பது இலங்கைச் சிப்பாய்கள் குமரப்பா, புலேந்திரனின் மரணத்தைத் தொடர்நது புலிகளால் இரவோடு இரவாகச் சுடப்பட்டு யாழ் பஸ்நிலையத்தில் வீசப்பட்டார்கள். புலிகளின் வரலாறு நெடுகவும் இதுபோல ஆயிரம் கொலைச் சம்பவங்களுண்டு.

ஆனால் புலிகளின் கொலைச் செயல்களை முன்வைத்து இலங்கை இராணுவத்தின் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதோ பூசிமெழுக முயற்சிப்பதோ தாடி போன்ற அற்ப சந்தேகங்களைக் கிளப்பி இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்க முயல்வதோ சின்னத்தனமான அரசியல். இன்று இலங்கை இராணுவத்தின் கைகளில் ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் பொதுமக்களும் மீள்வதற்கு வழியேயின்றிச் சிக்கியிருக்கும் தருணத்தில் இதுபோன்ற சின்னத்தனங்கள் ஏற்கனவே இனவெறியில் ஆடிக்கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகவேயிருக்கும். இராணுவத்தால் எத்தனை புலிப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், எத்தனைபேர்கள் சரணடைந்துள்ளார்கள் என்ற தகவல்களை இராணுவம் இதுவரை வெளியிட மறுக்கிறது. இராணுவத்திடம் சிக்கியிருப்பவர்களும் இவ்வறே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுவார்கள் என்ற நிலையிருக்கும்போது இத்தகைய நியாயமற்ற சந்தேகங்கள் அந்தக் கொலைகளை ஊக்குவிப்பதாகவும் விரைவுபடுத்துவதாகவுமே இருக்கும்.

இராணுவத்தின் கொலைச் செயல்களை எந்தவிதமான ஆதாரங்களுமின்றி புலிகளின் தலையில் சுமத்தும் வேலையை அரசு ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. சனாதிபதியோ அல்லது இராணுவத் தளபதியோ 'இலங்கை இராணுவம் கண்ணியமானது' எனச் சொல்லும் செய்திகளை இவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.

இலங்கை இராணுவத்தின் 'கண்ணியத்திற்கு' ஒன்றா இரண்டா சாட்சியங்களுள்ளன. வந்தாறுமூலை, குமுதினி, செம்மணி, அல்லைப்பிட்டி, முள்ளிவாய்க்கால் என்று எண்ணற்ற கூட்டுப் படுகொலைகளை இலங்கை அரசு செய்தது. எது குறித்தும் இதுவரை நீதி விசாரணைகள் ஏதுமில்லை. பொது மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதிமுகாம்கள், கோயில்கள் என்று எத்தனை இடங்களின் மேல் குண்டுகள் வீசப்பட்டன. பொக்கணையில் நிவாரணப் பொருட்களைப் பெற வரிசையில் நின்ற அகதிகள்மீது குண்டு பொழிந்து கொன்ற கண்ணியத்துக்குரிய இராணுவமல்லாவா அது. 'சனல் 4'ல் ஒளிபரப்பான கொலைகளைப் போல ஆயிரக்கணக்கான கொலைகளைச் செய்து முடித்த இராணுவம்தான் இலங்கை இராணுவம். வெலிகடயிலும் பிந்தனுவெவயிலும் சிறைப்பட்டிருந்த கைதிகளை கொலை செய்த அரசுதான் இலங்கை அரசு.

இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி 'தேனி' போன்ற அரசு சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிசத்தின் ஊடக முகங்கள். அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானிட நேயத்தையும் கொலை மறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.

10 comments:

யுவகிருஷ்ணா said...

தலைப்பில் ஷோபாசக்தியை தவிர்த்திருக்கலாம். அதற்காகவே நிறைய பேர் இப்பதிவை வாசிக்காமலேயே நேராக பின்னூட்டப்பெட்டிக்கு வந்துவிடுவார்கள் :-)

iniyavan said...

//கொல்லப்பட்வர்கள் புலிகள் அல்ல என்பதற்கு இவர்கள் வைக்கும் மோட்டுத்தனமான வாதங்களில் ஒன்று 'புலிகள் தாடி வைப்பதில்லை, ஆனால் கொல்லப்பட்டிவர்களிற்கு தாடியிருக்கிறது' என்பதாகும்//

கொல்லப்பட்டது யாராயிருந்தால் என்ன? போனது மனித உயிர்கள்? யார் அந்த உரிமையை அவர்களுக்கு கொடுத்தார்கள்.

//அங்கே என்ன சினிமா சூட்டிங்கா நடைபெற்றது குறித்த காலத்தில் படப்பிடிப்பை முடித்து குறித்த காலத்தில் ரீலிஸ் செய்ய//

ரொம்ப சரியா சொன்னீங்க சார்.

//ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.//

உண்மைதான். பார்த்தபின் மூன்று நாள் எதுவும் செய்ய முடியவில்லை.

சுகுணாதிவாகர் said...

என்ன செய்ய லக்கி, நம் ஆட்களின் ஒவ்வாமை வியாதி அப்படி!

sugan said...

இந்த நிமிடம்வரை பிரபாகரன் உயிருடன்தான் இருப்பதாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.
நேற்றும் சிவாஜிலிங்கம் அவர் உயிருடன் தான் இருப்பதாக இந்துமக்கள் கட்சி கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
நிலைமைகளை அவதானிக்கும் ஒருவருக்கு ஒரு சிறுதுளி சந்தேகம் பிரபாகரன் உயிருடன் தப்பி எங்காவது இருந்தாலும் இருக்கக்கூடும் என்று தோன்றுவது இயல்புதானே! தோன்றாதென்று எப்படிச்சொல்லமுடியும்.

ஆனால் செந்தில்வேல் அவர்களின் இனிஒரு பேட்டியில்
'பிரபாகரன் ஆயுதம் ஏந்திய அமிர்தலிங்கம் என்றும் அமிர்தலிங்கம் ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்'
என்றும் கூறியவிடத்து செந்தில்வேலே துணிந்து இப்படி இப்போது கூறுகிறார்,ஆகவே பிரபாகரன் இறந்துதான் இருக்கவேண்டும் என்று நான் ஒரு முடிவிற்கு வரலாமா?
உடனடியாக முடிவிற்குவரக்கூடியவாறு உண்மைகளும் சூழ்நிலைகளும் இப்போது இல்லை,அதற்கு கால அவகாசம் தேவையாக இருக்கிறது.

இப்படி ஒரு பதிவைப்பார்த்தபோது நானும் அனைத்து தளங்களையும் உளாவினேன்.
அதில் நிதர்சனம்.நெற் இல் ரகுமான் ஜான் மேற்கண்டவாறு பின்னூட்டம் ஒன்றை இட்டிருந்தார்.
நமது ரகுமான் ஜான் தான் அவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு எனக்கு தொடர்புகளின் வலையமைப்பு பெரிதில்லை.
ஆகவே அதற்கும் வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்பதான ஒரு சந்தேகம் இருப்பது தவறா!
இந்தநிமிடம்வரை ரகுமான் ஜானை தொடர்புகொள்ள முயற்சித்துவருகிறேன்.
நமது 100வீதம் 200 வீதம் அரசியல் சரிகளை இப்படியான படுகொலை ஆவணங்களுக்கு வலுச்சேர்க்க பிரயோகிப்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
இரண்டுபகுதியினருமே இதுவும் செய்வார்கள், இதற்கு மேலேயும் செய்திருக்கிறர்கள்.
நாம் அரசியல்வாதிகள் இல்லை.
புரொபசனல் கொலைகாரர்கள் போலவே "புரொபசணல் கொலை கண்டிப்பாளர்கள்" இல்லை.

இப்போது ஜனவரியில் கொல்லப்பட்ட மற்றவர்கள் யார்?

பாரூக் இப்போது எங்கே?
இப்படியான கேள்விகளுக்குமேலாய் இப்படியான படுகொலை நடக்கும்நேரத்தில் அக்கொலைகளுக்கு உடந்தையாய் இருந்துவிட்டு ,அதில் பங்கு கொண்டுவிட்டு, அதைப்படம் எடுத்து வினியோகிக்கும் நுட்பம், மெக்கானிசம் நமக்கு எதைச்சொல்லவருகிறது?

சிலமாதங்களுக்கு முன்னர் நமது நண்பர் ஒருவருடன் விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் கூறினார்.
தான் புலிகளை ஏற்றுக்கொண்ட சிங்கள இளைஞர்களை புலிகளிடம் அனுப்பியதாகவும் அத்தனை சிங்கள இளைஞர்களும் கொழும்பில் குண்டுவைத்தாகவும் அதில் பலரை அரசு கைதுசெய்துள்ளதாகவும் கூறினார்.
அவர்கள் தன்னை போட்டுக்கொடுத்ததால் தான் இனி இலங்கைக்குப் போகமுடியாதெனக் கூறினார்.

இப்படியான குழப்பமான சூழலில் எல்லாவற்றிற்கும் உரிய வாய்ப்புகளை சந்தேகிக்காமல் நம்மை அரசியல் சரியானவர்களாக நிறுவுவது சுலபம்தானே.
நீயும் பிழை நீயும் பிழை என்று நீதிபதி தானத்தில் அமர்ந்து சுலபமாக தீர்ப்புச்சொல்லமுடியும்.
அப்படி ஒரு சந்தேகத்தை தெரிவிக்கப்போனால் நாம் கொலைகாரர்களுக்கு ஆதரவாக மாறிவிட்டோம் கொலை மறுப்பு 'அரசியலை'க் கைகழுவிவிட்டோம்.
அநியாயத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று எப்படிச்சொல்லமுடியும் அன்ரனி!

Unknown said...

///பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது. ///

புரிந்து கொள்வார்களா???

சுகுணாதிவாகர் said...

சுகன்

நீங்கள் சொல்கிற பல விஷயங்கள் குறித்து எனக்கு தெரியாது. எல்லோருக்கும் ஈழப்பிரச்சினையிலும் இறுதிப்போரிலும் ஏராளமான கேள்விகள் உள்ளன. எல்லோரும் அவரவருக்கான சாத்தியங்களை முன்வைக்கிறார்கள். ஆனால் எல்லாவித கொலைகளையும் நாம் எதிர்க்கத்தான் வேண்டும் என்பது எனது கருத்து.

கவின் மலர் said...

//புரொபசனல் கொலைகாரர்கள் போலவே "புரொபசணல் கொலை கண்டிப்பாளர்கள்" இல்லை.//

தோழர் சுகன்! எப்படி உங்களால் இப்படிப் பேச முடிகிறது? மானுடம் என்பது என்ன? யார் செய்தாலும் கொலைதான் தோழரே! நீங்கள் முன்னெடுத்த அரசியலுக்கு முரணாக இருக்கிறது உங்கள் கூற்று!

//அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானிட நேயத்தையும் கொலை மறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். //

ஷோபாசக்தியின் இந்தக் கருத்தோடு முழுமையாக உடன்பட வேண்டியிருக்கிறது.

sugan said...

இனிய கவின்மலர்!
நலந்தானே!

மானுட தர்மத்தினதும் மனித நேசிப்பினதும் அடிப்படையே சகமனிதரை நேசித்தல்தான்!
வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலார் மரபின் தெளிவும் ஞானமும் அது.

மயிற்பீலியால் தான் போகும் பாதையை விலத்தி பவ்வியமாக நடந்துபோகும்
சமணத்துறவின் வழியும் காதையும் காண்க!
இங்கு அது பிரச்சனையல்ல!

நமக்குத்தெரிந்த தோழர் ஒருவர் கொல்லப்பட்டதாக (அந்த வீடியோவில் ஒரு படம் வருமே தாடிவைத்து பாரூக்!)
ஒரு தகவல் வருகிறது!
அவர் புலிகளால் கடத்திச்செல்லப்பட்டவர்!
அப்படிப்பட்ட நேரத்தில் எனக்கு அதற்கான வாய்ப்புகளும் இருக்கக்கூடும் என்பதாக ஒரு சந்தேகத்தை தோழமையோடு பகிரப்போனால் இப்படியா?

உங்களுக்குத்தெரியாது!
இங்கே ஒரு கூட்டம் கண்டிக்க இருக்கிறது என்பதற்காகவே அதை அரசியல் ஆதாயத்திற்காகப்பயன்படுத்தலாம் என்று அதற்காகவே கொலை செய்யும்
சமூகம் நமது!
முப்பதாண்டுகளாக நடந்துவரும் கொலையில் அதிர்ச்சி கண்டனம் எதிர்ப்பு இவை கடந்து சலிப்பும் வெறுப்பும் இறுக்கமான கைப்பான மெளனமும் இன்னும்கூட சிலருக்கு இருக்கக்கூடும்!

அதை 'நல்லவர்களின் மெளனத்தோடு' நாம் சமப்படுத்த முடியாது.

Anonymous said...

//கருணாநிதி தூக்கிப்பிடித்த கண்ணகியும் குண்டலகேசியும் பவுத்த சமணப்பிரதிகளில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் என்பவை கவனத்திற்கொள்ளத்தக்கது.//

கலைஞர் குண்டலகேசியைப் பற்றி எழுதிய நூல் அல்லது கதை-வசனம் எழுதிய திரைப்படம் இருந்தால் அருள் கூர்ந்து குறிப்பிடவும். படிக்க/பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி.

கவின் மலர் said...

//மானுட தர்மத்தினதும் மனித நேசிப்பினதும் அடிப்படையே சகமனிதரை நேசித்தல்தான்!
வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலார் மரபின் தெளிவும் ஞானமும் அது.

மயிற்பீலியால் தான் போகும் பாதையை விலத்தி பவ்வியமாக நடந்துபோகும்
சமணத்துறவின் வழியும் காதையும் காண்க!//


அன்பையும் கருணையயும் போதித்த பௌத்தத்தின் பின்னால் ஒளிந்து கொண்டல்லவா அங்கே எல்லாம் நடக்கின்றன?