Wednesday, March 17, 2010

அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன்


அ.மார்க்சின் ‘புத்தம் சரணம்’, ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ புத்தக வெளியீட்டு விழா. அ.மாவின் ‘முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு’ குறித்த சிறு புத்தகம் குறித்து நான் பேசினேன். ’புத்தம் சரணம்’ புத்தகத்தை வெளியிட்டு பேராசிரியர்.பெரியார்தாசன் பேசினார். பொதுவாக பவுத்தத்தைத் தழுவ விரும்புவர்களுக்கு இரண்டு விதமான மனத்தடைகள் இருக்கும், ஒன்று பவுத்தத்தைத் தழுவினாலும் இட ஒதுக்கீடு கிடைக்குமா, இன்னொன்று மாமிசம் சாப்பிடுவதைத் தொடர முடியுமா என்பதைக் குறிப்பிட்ட பெரியார்தாசன், ஆனால் பவுத்தத்தில் இரண்டிற்குமே சிக்கல் இல்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். பவுத்தத்தைப் பொறுத்தவரை, நாம் விருந்தினராக ஒரு வீட்டிற்குப் போகிறோம், அப்போது நமக்குத் தயாரிக்கப்பட்ட உணவு அசைவமாக இருந்தால் அதைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் நமக்குத் தெரிந்தே அசைவ உணவைத் தயாரித்துச் சாப்பிடக்கூடாது. இதைக் குறிப்பிட்ட பெரியார்தாசன் இரண்டு உணவுமுறைக்குமான வித்தியாசங்கள் குறித்துப் பேசும்போது இஸ்லாத்தில் உள்ள ‘ஹலால்’ முறை குறித்தும் குறிப்பிட்டார். ‘ஹலால்’ என்றால் என்ன என்று அவர் கேட்டபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் விளக்கினார்கள். அப்போது பெரியார்தாசன், தன் வழக்கத்துக்கே உரிய நையாண்டித்தனத்தோடு, ‘”அதெல்லாம் சரி, நீங்க சொல்ற விஷயம்ல்லாம் சாகப்போற ஆட்டுக்குத்தெரியுமா?” என்று கமெண்ட் அடித்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட த.மு.மு.க நண்பர்களுக்கு முகம் சுருங்கிவிட்டது.

பேராசிரியர்.பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை அறிந்தபோது இந்த சம்பவம்தான் நினைவில் வந்தது. பெரியாரிக்கத்தைச் சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க, தனித்துவமிக்க ஆளுமை பெரியார்தாசன். பொதுவாக அவர் எந்த நிறுவனங்களுக்குள்ளும் அவ்வளவாக அகப்பட மாட்டார். எனக்கு நினைவு தெரிந்து திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்து தோழர்.கோவை.ராமகிருஷ்ணன், திராவிடர்கழகம் (ஆர்) என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் கூட்டப்படும் தி.க - ஆர் கூட்டங்களில் முக்கியப் பேச்சாளரே பெரியார்தாசன்தான். ராமகிருஷ்ணனை விட கூட்டம் ஆவலாக எதிர்பார்ப்பது பெரியார்தாசனின் பேச்சைத்தான். மணிக்கணக்கில் பேசும் பெரியார்தாசனின் பேச்சின் பலமே வழமையான திராவிட இயக்க மேடைபாணியிலிருந்து விலகிய எளிமையான ‘மெட்ராஸ் பாஷை’ பேச்சும் அது முழுவதும் நிரம்பி வழியும் நகைச்சுவையும்தான். திராவிடர்கழக மேடைகளில் மட்டுமில்லாது பல்வேறு திரைப்பட விழா மேடைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் தனித்துவமாய் நிற்கும் பெரியார்தாசனின் உரைகள். பெரியார்தாசனின் பேச்சு பலத்தைச் சரியாய்ப் பயன்படுத்திக்கொண்ட இன்னொரு அமைப்பு மக்கள் கலை இலக்கியக்கழகம்.

ஜெயேந்திரன் கைதை ஒட்டி நடைபெற்ற கூட்டங்கள், சேதுசமுத்திரத்திட்டத்துக்கு எதிராய் வேதாந்தி கலைஞரின் தலைக்கு விலை வைத்ததைக் கண்டித்து நடந்த கூட்டங்கள் என ம.க.இ.க மேடைகளில் பெரியார்தாசனின் பேச்சுக்குக் கூட்டத்திடமிருந்து ஆவலான எதிர்பார்ப்பு உண்டு. வெறுமனே பேச்சு என்றில்லாமல் பெரியார்தாசன் அழகாய்ப் பாடும் திறனும் வாய்ந்தவர். தமிழின் பக்தி இலக்கியங்கள் தொடங்கி சுப்ரபாதம் வரை பெரியார்தாசன் பாடிக்காட்டி விமர்சிப்பார். வெறுமனே தொழில்முறைப் பேச்சாளர் என்றில்லாமல் பெரியார், அம்பேத்கர், பவுத்தம் குறித்த விரிவான வாசிப்பு அவரிடம் உண்டு.

தி.க ராமகிருஷ்ணன் கூட்டங்களில் அவர் சிறப்புப் பேச்சாளராக இருந்தாலும் மற்றவர்களைப் போல மேடையில் அமர மாட்டார். எப்போதும் கூட்டத்துக்கு இடையிலேயே சிகரெட் பிடித்துக்கொண்டு திரிவார். அவர் கருப்புச்சட்டை போட்டும் நான் பார்த்ததில்லை. இப்படியாக ஒரு சுதந்திர மனிதராகத் திரிந்த பெரியார்தாசனுக்கு ‘பேச்சுக்கட்டணம் விஷயத்தில் கறார் ஆனவர்’ என்ற ‘கெட்ட பெயரும்’ உண்டு. அம்பேத்கரின் ‘பவுத்தமும் தம்மமும்’ நூலைத் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்தது பெரியார்தாசன்தான். மேலும் பவுத்தம் குறித்தும் அம்பேத்கர் குறித்தும் பல்வேறு தலித் இயக்க மேடைகளில் பரப்புரை செய்த பெருமையும் பெரியார்தாசனுக்கு உண்டு.

சேஷாசலம் என்ற பெயரைக் கொண்ட அவர் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, பெரியார் ஒரு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்தாராம். அப்போது அவருக்காக வரவேற்புக்கவிதை வாசித்தபோது ‘பெரியார்தாசன்’ என்ற பெயரில் எழுதினாராம். ஆனால் அப்போது அவர் பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக உள்வாங்கியவராக இல்லை. இது ஜீ தொலைக்காட்சி சுதாங்கனின் நேர்காணலில் அவரே கூறியது. பெரியார்தாசன் பவுத்தத்துக்கு மாறியபிறகு ‘சித்தார்த்தன்’ என்று பெயரை மாற்றி வைத்துக்கொண்டாலும் அதைப் பெரிதாக எங்கும் அடையாளப்படுத்தியதாகத் தெரியவில்லை. இடையில் அவர் மனவியல் சார்ந்த புத்தகங்களை எழுதும்போது ‘நல்மனப் பெரியார்தாசன்’ என்ற பெயரிலும் எழுதிக்கொண்டிருந்தார்.

பெரியார்தாசன் மீது பலருக்கு அபிமானம் இருப்பதைப் போலவே அவர் மீது கடுமையான விமர்சனங்களும் உண்டு. அதிலொன்று மேலே நான் சொன்னதைப் போல ‘அவர் பேச்சை வணிகமாக்குகிறார்’ என்பது. அவர் மீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டு ‘ராஜராஜனின் நியுமராலஜி ஆதரவாளராக மாறிவிட்டார்’ என்பது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜராஜனின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார்தாசனும் இடம் பெற்றார். ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம், ‘அப்படி என்னதான் அதில இருக்குன்னு பார்க்கத்தான் போனேன்’. அதிலொன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அவரும் அதற்குப் பின் நியுமராலஜியை ஆதரித்துப் பேசியதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பின் தஞ்சையில் ம.க.இ.க நடத்திய ‘தமிழ் மக்கள் இசைவிழா’வில் பெரியார்தாசன் முழுக்க முழுக்க ராசிக்கற்கள், நியுமராலஜியைக் கண்டித்தும் கிண்டலடித்துமே பேசினார். பலபேருக்குத் தெரியாத ரகசியம், ‘பெயரியல் பேராசான்’ ராஜராஜனே முன்னாள் திராவிடர்கழகத்துக்காரர். ஆனால் பெரியார்தாசன் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களின் மேடைகளில் பயிற்சிப் பேச்சாளராக பங்குபெற்றதை நானே கவனித்திருக்கிறேன். சமீபகாலமாக அவர் பெரியார், அம்பேத்கர் குறித்துப் பேசியதை விட சுயமுன்னேற்றம், மனநலம் ஆகியவை குறித்துப் பேசியதுதான் அதிகம்.

இப்போது பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவி அப்துல்லாவாக மாறியது குறித்து தமிழக நாத்திகர்களுக்கு, குறிப்பாக பெரியாரிஸ்ட்களுக்கு இரண்டு வித சிக்கல்கள் ஏற்படும். மதமாற்றத்தை அம்பேத்கரும் பெரியாரும் உறுதியாக ஆதரித்தவர்கள். அம்பேத்கர் மதமாற்றத்திற்கு பவுத்தத்தை முன்மொழிந்தபோது பெரியார் இஸ்லாத்தைப் பரிந்துரை செய்தார். தான் ‘அனேக காரியங்களில் இஸ்லாத்தைக் கடைப்பிடித்து வருகிறவன்’ என்றும் ‘ஆனால் அதற்கான அடையாளங்கள் தேவையில்லை’ என்றும் கூட சொன்னார். அப்படியானால் பெரியார்தாசனின் மதமாற்றம் என்பதும் பெரியாரின் வழியின்பட்டதுதானே? ஆனால் தமிழகத்தில் நாத்திகம் பேசுபவர்களின் அய்கானாக நிறுத்தப்பட்டவர்களில் பெரியார்தாசனும் ஒருவர். அப்படியானால் இது இறைமறுப்புக் கொள்கைக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்று சொல்லலாமா?

ஆனால் என்னைப் பொறுத்துவரை பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதும் கடைப்பிடிக்க வேண்டியதுமான விஷயங்களில் நாத்திகமும் ஒன்றுதானே தவிர அதுவே முழுமையானதல்ல. ஒரு முழுமையான நாத்திகன் மோசமான ஆணாதிக்கவாதியாகவோ சாதிவெறியனாகவோ இருந்து விடுவதும் உண்டு. கடவுள் நம்பிக்கை என்பது தனிமனிதத் தேர்வு. அப்துல்லாவாக மாறியது பெரியார்தாசனுக்கான சுதந்திரம். கடவுளின் இடத்தில் அறவியல் மதிப்பீடுகளை முன்வைத்து வாழ்வியல் நடைமுறையாக மாற்றத் தெரிந்தவர்களுக்குக் கடவுளும் மதமும் தேவையில்லை. ஆனால் பெரியார்தாசனுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்.

ஆனால் எனக்குப் பெரியார்தாசனிடம் சில கேள்வி உண்டு. நான் அவரின் பேச்சுகளின் ரசிகன் என்ற முறையில் அவரது எல்லா நிகழ்ச்சிகளையும் பெரும்பாலும் பார்த்துவிடுவேன், சமீபத்தில் அவர் விஜய் டி.வியில் பங்குபெறும் ‘வாங்க பேசலாம்’ உட்பட. ‘தான் எட்டாண்டுகளாக இஸ்லாத் குறித்து ஆராய்ந்து வந்ததாகவும் பத்தாண்டுகளாகவே இஸ்லாத்துக்குச் சேரும் முடிவில் இருந்ததாகவும்’ பெரியார்தாசன் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் அவரது சமீபகால பேச்சுக்கள் வரை இல்லை. தனது பேச்சு வல்லமையை இஸ்லாத்தைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அது வெறுமனே மார்க்க உரைகளோடு நின்று விடுமா, அல்லது அவரது வழக்கமான சமூக விமர்சனங்களும் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லீம் அடையாளத்தில் இருந்துகொண்டு இந்து மதம் குறித்தும் சாதி குறித்தும் அப்துல்லாவால் விமர்சிக்க முடியாது என்பது முள்ளாய் உறுத்தும் நடைமுறை எதார்த்தம். பெரியாருக்கு இருந்த சிக்கலும் அதுதான். மேலும் இப்போது பெரியார்தாசன் இந்து மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவவில்லை, அவர் பவுத்தத்திலிருந்து விலகியே இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார். அப்படியானால் பவுத்தம் குறித்த அவரது பார்வைகள் குறித்தும் அவர் விளக்க வேண்டும்.

எப்படியிருந்தபோதும் என்னைப் பொறுத்தவரை இந்துமதத்தில் பிறந்த ஒருவர் எந்த மதத்திற்குப் போனாலும் வரவேற்கத்தக்கதே. அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்!

35 comments:

நிலாரசிகன் said...

பல விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரை. பெரியார்தாசன் அருமையான மனிதர்.

Anonymous said...

'எப்படியிருந்தபோதும் என்னைப் பொறுத்தவரை இந்துமதத்தில் பிறந்த ஒருவர் எந்த மதத்திற்குப் போனாலும் வரவேற்கத்தக்கதே'

நீங்கள் இன்னும் ஏன் இந்துப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களுடைய மதம் எது என்று ஆவணங்களில்
குறிப்பிட்டிருக்கிறீர்கள்.மதம் என்ற கேள்விக்கு மதம் சாரதவன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களா. இந்துவாக பிறந்து ஆணாதிக்கவாதியாக இருப்பவன் முஸ்லீமாக மாறி ஆணாதிக்கவாதியாக இருப்பதையும் வரவேற்பீர்களா.
பிற மதங்களில் பிறந்தவர்கள் இந்துவாக மாறுகிறார்களே அதை என்ன சொல்வீர்கள்.

Ashok D said...

//கடவுளின் இடத்தில் அறவியல் மதிப்பீடுகளை முன்வைத்து வாழ்வியல் நடைமுறையாக மாற்றத் தெரிந்தவர்களுக்குக் கடவுளும் மதமும் தேவையில்லை//

//என்னைப் பொறுத்தவரை இந்துமதத்தில் பிறந்த ஒருவர் எந்த மதத்திற்குப் போனாலும் வரவேற்கத்தக்கதே. //

இரு கருத்துகளிலும் எனக்கு எதிர் கருத்துயிருப்பினும் படிப்பவனை தலையாட்டிவிடும் விதமாகவும், ஒரு மலையை சர்வசாதரணமாக தாண்டிச் செல்லும் சாதுர்யமும் உங்களுக்கு இருக்கிறது.

ஒரு மனிதன் ஒரு மததிலிருந்து வேறு மதத்திற்கு மாறுகிறான் என்பது அவன் தனிப்பட்ட விடயம். அது பற்றி பொதுவில் பேசக்கூடாதெனினும் சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி.

மதம் என்பது தன்னை உணர்தலுக்கு வழி செய்யவேண்டும். தன்னை அறிந்தவனுக்கு அறவியல் மதிப்பீடுகள் தானாய் புரியும் அது வாழ்வியலில் சிறப்பாய் பிரதிபலிக்கும் என்பது இந்த மனிதனின் பார்வை.

priyamudanprabu said...

இதுவரை இந்து மததை அவர் விமர்சித்ததை வெகுவாக நான் ரசித்து இருக்கிறேன்(மத எதிர்பாலன் என்ற முறையில்)

இப்போ இஸ்லாமை விமர்சனம் செய்ய முடியுமா அவரால்??

KANTHANAAR said...

உங்கள் கருத்தை நான் ஏற்க வில்லை... முதலில் பெரியாரின் அழுத்தம் திருத்தமான விசயமே நாததிகம்தான்.. கடவுள் இல்லை என்று அடித்துச் சொன்ன ஒரே இந்தியத் தலைவர் அவர் ஒருவர்தான்.. அதுதான் அவர் கவர்ச்சியே.. நடிப்புக்கு சிவாஜி எப்படியோ அதைப் போல... ஆனால் சமீபத்திய பெரியார்தாசன் சொன்ன (அவர் நேரடி பேட்டி) சொற்கள் பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது.. கடவுள் இருக்கிறார் என்கிறார்... ஆக அரசியல் தத்துவார்த்த ரீதியாக இது பெரும் சருக்கல் என்பதே எனது துணிபு..
கந்தசாமி

Anonymous said...

அ.மார்க்ஸைப் பொறுத்தவரை அவரும் இப்படி ஓர் முடிவை எடுக்கும் நிலையில் தயங்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் நான் கேள்விப்படுகிறேன். அதுவும்கூட நல்லதே.
http://www.jeyamohan.in/?p=6795
இது உண்மையா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடவுள் மறுப்பாளராக இருந்த கண்ணதாசன் ,அர்த்தமுள்ள இந்து மதமெனச் சொல்லி ஆத்மீகத் தொண்டாற்றவில்லையா? அப்படி பெரியார் தாசன் அர்த்தமுள்ள இஸ்லாம் என எழுதலாம்.
இவர் நன்கு பேசும் எழுதும் ஆற்றல் மிக்கவர். எழுதி விட்டுப் போகட்டுமே.

பெரியார் தாசன் கடவுளை மறுத்து, இப்போ கடவுள் இருக்கிறார். என்கிறார். இனி இல்லையென்று
அவர் வாழும் காலத்தில் சொல்லமாட்டார் என்பதற்கு என்ன? உத்தரவாதம்.
அத்துடன் இவர் கடவுள் இல்லையென்றதாலோ; இப்போ இருப்பதென்பதாலோ ;எந்த மதத்திலும் பெரிய
மாற்றம் வரப்போவதில்லை.
ஆனால் அவர் வாழ்வில் இதனால் சுபீட்சம் வரின் பொறாமையின்றி மகிழ்வேன்.

சுகுணாதிவாகர் said...

ஜெயமோகன் கூடிய விரைவில் துப்பறியும் நாவல் எழுதுவார் என்று கேள்விப்படுகிறேன். ))-

ராம்ஜி_யாஹூ said...

உங்களின் கட்டுரை எழுதும் முறை மிக அருமை, ஆனால் உங்கள் கருத்துக்களோடு நானும் கந்தசாமி போலவே முரண் படுகிறேன்.

பெரியார்தாசன், உங்களுக்கு எல்லாம் தெரிந்த பழகிய நபர் என்பதால் பெரும்பான்மையானோர் இதை கண்டிக்க வில்லை என நினைக்கிறேன்.

நானும் பல கட்சிகள், இலக்கியம், பொது மேடை பேச்சுக்கள் கேட்டு இருக்கிறேன் (திராவிடர் கழகம் கூடங்கள் போனது இல்லை),

நீங்கள் சொன்னது போல பெரியார் தாசன் அந்த அளவு சிறப்பு பேச்சாளரா என்று தெரிய வில்லை. என் பட்டியலில் உள்ள சிறந்த மேடை பேச்சாளர்கள்- வைகோ, கலைஞர், வலம்புரி ஜான், கா. காளிமுத்து, விடுதலை விரும்பி போன்றோரே.
என் போன்ற சாமானியனுக்கு இவரை பாரதிராஜா சினிமா வந்த பிறகு தான் தெரிய வரும்.

ஒரு வாதத்திற்கு கேட்கிறேன், பெரியார் தாசன் கிறித்துவ மதத்திற்கு மாறி இருந்தால் அது தவறாக இருக்குமா, பெரியார் அறிவுறுத்திய இஸ்லாம் அல்லாமால், கிறித்துவ மதத்திற்கு/ சீக்கிய மதத்திற்கு இவர் மாறி இருந்தால், உங்கள் கருத்து என்ன.

Unknown said...

arumai piramatham
nathigan yeathaium pesalam
muslim? yes; sariyana keilvi

வால்பையன் said...

ராஜராஜனின் கண்டுபிடிப்பில் எதோ ஒன்று இருக்கிறது தொலைகாட்சியில் பேசியது இன்னும் என் நினைவில் இருக்கிறது!

பெயர் மாற்றினாலும் தன்னம்பிக்கை கூடும் என்று நாகூசாமல் பேசியவர், அவர் எந்த மதத்துக்கு போனாலும் யாருக்கும் கவலையில்லை தான், ஆனால் தன் மதமே உலகில் பெரிது, சிறந்தது என பேச ஆரம்பிக்கும் போது அவரும் மத தீவிரவாதி ஆகிறார்!

இஸ்லாத்தில் பிரிவினைகள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் பெரியாரே அதனை ஆதரித்தார், நீங்க படிச்சவர், நாலும் தெரிந்தவர் நீங்களே சொல்லுங்க, இஸ்லாத்தில் பிரிவினையே இல்லையாக்கும்!

Athisha said...

நல்ல கட்டுரை.

PRABHU RAJADURAI said...

உங்களது இந்தப் பதிவினைப் படிக்கும் வரையில், இதை ஏதோ வதந்தி என்று நினைத்தேன்....ஆனால் இறைமறுப்பாளர்களுக்கு இது ஒரு பின்னடைவுதான்.

மற்றொரு கமலா சுரையாவாகப் போகிறார்.

Anonymous said...

"மற்றொரு கமலா சுரையாவாகப் போகிறார்"
:)

ராம்ஜி_யாஹூ said...

vaalpayyaan- I dont want to divert the topic but still one information.

Islaam has subdivisions as shiya, sunni, pattaani...

sheiks, wali...

Sundararajan P said...

நல்லதோர் திறனாய்வு க்ட்டுரை.

ஆனால் வெளிப்படையான பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களை உள்ளடக்கிய ஒரு மதத்திற்குள் ஒரு பகுத்தறிவாளர் (குறிப்பாக பெரியாரியவாதி எனக்கூறிக்கொண்டவர்) தஞ்சம் அடைவதை ஏற்க முடியவில்லை.

Anonymous said...

ayyo pavam periyar dhashan

விஷ்ணுபுரம் சரவணன் said...

அன்புமிக்க சுகுணாதிவாகர்..

பெரியார்தாசன் இஸ்லாத்திற்கு மாறியது அவரின் சுந்ததிரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
நீங்கள் குறிப்பிட்டருப்பதைப்போல பேச்சை வணிகமாக்கியதிலிருந்தே அவர் என்ன பேசணும் என்று அவர் முடிவுசெய்யமுடியாமல் போய்விட்டது. ராஜராஜன் நிகழ்ச்சிக்கு சென்று பெயரியலை வாழ்த்திபேசி மக இக நிகழ்ச்சியில் அதையே கிண்டலடித்து பேசுவதை அவரின் கருத்தியல் அளவுகோலாக நாம் கருதுவது அபத்தம். அவர் மேடைக்கு கீழே இருப்பவருக்கு என்ன சொன்னால் குஷியாவார்களோ அதை தயாரித்து தரும் புரோட்டா மாஸ்டராகி போய்விட்டார் என்பதாகவே அதன் பொருள்.
பெரியார் இஸ்லாத்தை முன்மொழிந்ததும், அம்பேத்காரின் மதமாற்றத்திற்கு ஆதரவு அளித்தும் பெரியார் ஏன் மதம் மாறவில்லை என்பதிலிருந்து பெரியார்தாசன் யோசித்திருக்கவேண்டும்.
பெரியார் கருத்தியலில் நாத்திகம் ஒரு கூறுதான் மறுப்பதற்கில்லை. அவர் பேசிய பல [கிட்டத்தட்ட எல்லாவற்றிருக்கும்]நாத்திகத்தை தவிர்த்து அவரால் பேசியிருக்கமுடியுமா?

பெரியார்தாசன் வணிக பேச்சாளரான பின் எம்.எல்.எம் கூட்டத்தில் அவர் பேசியதை என் நண்பன் ஒருவன் சொல்லிசொல்லி காட்டுவான். அந்த எம்.எல்.எம் மீது இவர் பேச்சிற்கு பிறகுதான் நம்பிக்கை வந்தது என்றான். அதை நம்பி தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு எம்.எல்.எம்மில் முழுநேர ஊழியனாகி அலைந்தவன் இன்று அதனாலேயே ஏமாற்றப்பட்டு சித்தாள் வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறான். [ பெரியார்தாசன் அந்த எம்.எல்.எம் குழுமத்தோடு ஒரு பங்குதாரர் என அவன் சொன்னதை நம்புவதா இல்லையா என இன்னும் குழப்பித்தானிருக்கிறேன்.

அவர் இஸ்லாத்திற்கு மாறியிருப்பதில் விமர்சிப்பதுக்கு ஒன்றுமில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கற்றுத்தேர்ந்த ஞானத்தை இஸ்லாத்தை பரப்பமாத்திரம் உபயோகிக்க போகிறார் என்பதிலிருந்து தொடங்குகிறது அவரது சறுக்கல்.

விஷ்ணுபுரம் சரவணன்.

ரவி said...

உங்களுக்கு அவரை தெரியும் என்றால், கொடுத்த காசுக்கு மட்டும் கூவுமாறு அறிவுரை சொல்லிவிடவும்..

Anonymous said...

வைதீக இந்து மதம்தான் உறுத்துகிற்து: அது பார்ப்பன மதம் என அழைக்கப்படுகிறது. அம்மதம் பிறரை பின்னுக்குத் தள்ளி பார்ப்பன்ரகளை முன்னுக்கு வைக்கிற்படியால், சுய மரியாதையைப் பேணுகின்றவர்கள் அதிலிருந்து விலகிக்கொள்கிறார்கள்.

சிலர் அதனுள் இருந்தாலும், பார்ப்பனர்களையும் அம்மதத்தையும் தாக்கி வாழ்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள்தான் பெரியார், பெரியார்தாசன், அம்பேட்கர் போன்றோர். இவர்களின் மத மாற்றம் உண்மையில் மதமாற்றமல்ல. பார்ப்பன்ர்களுக்குக் கொடுக்கும் செய்தி:

”நாங்கள் இனி உங்கள் நேர் எதிரிகள். இதுநான் வரை மறைமுகமாக்ச்செய்யப்பட்ட பார்ப்பன் தாக்கம் இனி நேர்முகமாக செய்ய்ப்படும்.”

பவுத்தம், இசுலாம் போன்ற மதங்களைக் கவசமாக வைத்துக்கொள்கிறார்கள்.

’அதுவே உண்மை மதம். இதுவே உண்மை மதம்’ ‘இந்த சாமியாரே உண்மையாக கடவுளிடம் தொடர்பு கொண்டார்’ - என்பதெலாம் சுத்த கப்சா. இவர் பவுத்தம், கிருத்துவம், இந்து என்று ஆராய்ந்தாராம். பின்னர் இசுலாமே உண்மையென தெளிந்தாராம். உலகத்தில் எத்தனை மதங்கள் இருக்கின்றன? அவற்றில் ஓரிரண்டு தெரிந்து முடிவெடுத்தால், அந்த ஓரிரண்டைத்தாண்டிய மற்றவைகள் இசுலாமை விட பெட்டர் என இவர் கண்டுபிடித்தாரா இல்லையா?

உலகத்திலுள்ள அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு வா> ஆனால் முடியாது. பின் ஏன் இந்த விளையாட்டு?

இங்கு ஒருவர் எழுதியதைப்போல நாளை இன்னொரு மத்தத்தைப்படிக்கிறார். அது பெட்டராக இருக்கிறது. உடனே அதற்குத்தாவி விடுவாரா?

பெரியார் தாசனுக்கு எந்த மதமும் கிடையாது.. அவர் செய்வது ஒரு நாடகம்.

ராஜராஜன் டாக்டரிடம் இருந்தது ‘சும்மா எப்படி இருக்கிறது?’ என்று கண்டுபிடிக்கத்தான் என்று உட்டான்ஸ் விட்ட்மாதிரி.

பெரிய பேச்சாளர் என்றெல்லாம் சொல்லமுடியாது. நானும் கேட்டிருக்கிறேன்.

அடாவடித்தமிழ், சென்னைத்தமிழ் பேசினால், ஏதோ எல்லாம் உணமையாகப் பேசுகிறார் என்றதொரு மாயை நம்மக்களிடமு உண்டு. வலபதிவுக்ளிலும் சிலர் அப்படி மாயத்தோற்றத்தை கொடுத்து ஏமாற்ற இப்படி எழுதிகிறார்கள்.

பெரியார்தாசன் is more smoke than substance!

Anonymous said...

//இந்துவாக பிறந்து ஆணாதிக்கவாதியாக இருப்பவன் முஸ்லீமாக மாறி ஆணாதிக்கவாதியாக இருப்பதையும் வரவேற்பீர்களா.//

மேலே அனானி கேட்டிருக்கும் நியாயமான எடக்குமடக்கு கேள்விக்கு பதிலளிக்காது,ஜாகா விட்டு ஜெயமோகன் துப்பறியும் நாவல் எழுதுவாரென்று இன்னொரு அனானிக்கு பதில் உரைப்பது அக்மார்க் சுகுணா திவாகர் ஸ்டைல்.

//ஒரு வாதத்திற்கு கேட்கிறேன், பெரியார் தாசன் கிறித்துவ மதத்திற்கு மாறி இருந்தால் அது தவறாக இருக்குமா, பெரியார் அறிவுறுத்திய இஸ்லாம் அல்லாமால், கிறித்துவ மதத்திற்கு/ சீக்கிய மதத்திற்கு இவர் மாறி இருந்தால், உங்கள் கருத்து என்ன.// அதுக்கு இவர்கள் அவரை ரவுண்டு கட்டி அடித்திருப்பார்கள். கூடவே ஆபிரகாமிலிருந்து, மோசேசு தொட்டு ஏசு வரை இழுத்து ஒரு கட்டுரை போட்டு கிறிஸ்துவ மதத்தை ஒரு பிடிபிடித்திருப்பார்கள். அப்புறம் சீக்கியம் என்றால் குருநாநக்கிற்கும் ஆப்பு உண்டு

சிங்காரம் said...

மனித மனம் ஒரு குரங்கு. தனிமனிதன் உரிமையை விவாதிக்க நான் விரும்பவில்லை

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com


(Pls ignore if you get this mail already

Happy Smiles said...

மிகவும் அழகாக விமர்சித்து உள்ளீர் நண்பரே.
பெரியார் தாசன் என்ற ஒருவரை நான் அறிந்து கொண்டதே அவர் திராவிட கழகத்தின் மீது கொண்டிருந்த பற்றினால் தான். பெரியாரை பற்றி அவர் பேசியதால் தான், நான் அவர் பேசியதை ரசித்தேன் மற்றபடி அவர் பேச்சிற்காக அல்ல.

இறைமறுப்பாளர்களுக்கு இது ஒரு பின்னடைவுதான்// இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன். இவர் இஸ்லாத்திற்கு போனதனால் அங்கே மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா? மேலும் பின்னடைவு என்று தான் சொல்லலாம். ஏனென்றால்

ஆனால் வெளிப்படையான பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களை உள்ளடக்கிய ஒரு மதத்திற்குள் ஒரு பகுத்தறிவாளர் (குறிப்பாக பெரியாரியவாதி எனக்கூறிக்கொண்டவர்) தஞ்சம் அடைவதை ஏற்க முடியவில்லை//

ஒன்று சரியாக போய்கொண்டு இருந்தால் அதை ஆதரவு செய்யலாம். அங்கேயே பல ஓட்டைகள் இருக்கும் பொது அதை ஆதரித்தால் மேலும் ஓட்டை தான் வரும்.

இதுவரை இந்து மததை அவர் விமர்சித்ததை வெகுவாக நான் ரசித்து இருக்கிறேன்(மத எதிர்பாலன் என்ற முறையில்)
இப்போ இஸ்லாமை விமர்சனம் செய்ய முடியுமா அவரால்??

பேச்சு திறமையினால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று நம்புவது மடத்தனம்.

Anonymous said...

islaam oru siranda maarkam
ulaga erudi nal handru anaivarum isalamiyaravar anbadu unmayana erai vaaku .. evar mariyadu siru vidayama

Anonymous said...

’"Bloggers, Internet users and their intelligence" என்ற தலைப்பில் ஆராய்ச்சியா.கடவுளே இந்த ஆராய்ச்சியாளர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்.

பெரியார்தாசன் அப்துல்லாகவா மாறிய பரபரப்பு அடங்கிய பின் அவர் என்ன பேச முடியும்.தமுமுக,பிஜே எதைப் பேசச் சொல்கிறார்களோ அதைப் பேசியாக வேண்டும்.மனம் போனபடி பேச முடியாது.அப்படி எதையாவது பேசி அது மார்க்க விரோதமாகப் போய்விட்டால் வீட்டு முற்றுகை, பத்வா, குடும்ப விலக்கம் (ரசூலுக்கு செய்தது போல்) என்று தொந்தரவு தருவார்கள்.அப்போது யார் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள். நிச்ச்யமாக சுகுணா திவாகரோ, அ.மார்க்ஸோ பெரியாரியவாதிகளோ அல்ல. இவர்கள் ரசூல் விவகாரத்தில் மெளனம் காத்தவர்கள்.

முன்னாள் பெ.தாசனுக்கு ஆதரவாக
இடதுசாரிகள் குரல் கொடுப்பார்கள்,
ஜெயமோகன், சூர்யதீபன் குரல் கொடுப்பார்கள்,உயிர்மை,காலச்சுவடு
குரல் கொடுக்கும். நாக்கை அடக்கி பேச, இஸ்லாமிய அமைப்புகளுக்கு அடிமை போல் இருக்க அப்துல்லாவிற்கு பயிற்சி தருகிறார்களோ என்னமோ?. MLM கூட்டங்களில் பேசுவது மார்க்க விரோதமா இல்லையா என்பதை விசாரித்து அவருக்குச் சொலலுங்கள்.

மற்றபடி எங்கிருந்தாலும் வாழ்க.

கல்வெட்டு said...

.


தீப்பொறி ஆறுமுகம் என்ற ஒருவர். தி.மு.க மேடைகளில் வெளுத்து வாங்குவார். ஜெயலலிதாவைப் பற்றி இவர் பேசாத பேச்சு இல்லை. கடைசிக் காலத்தில் அதே ஜெயலலிதாவுடன் போய் அடைக்கலம் ஆனார்.

பேசுகிறார், கூட்டம் கூடுகிறது, கைதட்டுகிறார்கள் என்பதற்காக அவருக்கு திராவிடம் பற்றிய அடிப்படையோ அல்லது அவர் எல்லாம் தெரிந்து பேசுகிறார் என்பதோ உண்மை அல்ல. கட்சியிலேயே அவருக்கு 'தனி' மரியாதைதான். கூட்டம் சேர்க்க மட்டுமே தவிர கருத்து பரப்ப அல்ல.

**

அப்துல்லாவும் அப்படித்தான் இருந்தார். ஒருமுறை இவரது மகனையும் மேடையில் ஏற்றி பேச வைத்துக் கொண்டு இருந்தார். (சென்னை கலெக்டர் நகர் ‍/ பாடிக்குப்பம் என்று நினைக்கிறேன்)

இவர் தொழில் முறைப் பேச்சாளர். அன்று பெரியார் படத்தில் நடித்தார். இன்று இஸ்லாம் படத்தில் நடிக்கிறார். ரசினி ரிக்ஷா ஓட்டியா நடித்ய்துவிட்டால் அவரை தங்கள் வர்க்கமாகப் பார்க்கும் வெகுளித்தனம்தான் இவரின் இரசிகர்களிடமும் இருந்துள்ளது. அவர் அவர் பாட்டுக்கு இடம் பார்த்து பேசிக்கொண்டே இருக்கிறார்.

**

//பெரியார் இஸ்லாத்தைப் பரிந்துரை செய்தார். தான் ‘அனேக காரியங்களில் இஸ்லாத்தைக் கடைப்பிடித்து வருகிறவன்’ என்றும் ‘ஆனால் அதற்கான அடையாளங்கள் தேவையில்லை’ என்றும் கூட சொன்னார். அப்படியானால் பெரியார்தாசனின் மதமாற்றம் என்பதும் பெரியாரின் வழியின்பட்டதுதானே? //

எப்படீங்க இப்படி எல்லாம்?

பெரியாருக்கு உண்மையில் இஸ்லாம் பற்றி என்ன தெரிந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர் சொல்லிவிட்டார் என்றால் எதையும் செய்யலாம் என்றால் , பகுத்தறிவு என்பது ? கால பூரா அந்த மனுசன் பகுத்து அறி என்றார். இன்று அவரின் சொம்புகள் ,ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு .... இதும் "பெரியாரின் வழியின்பட்டதுதானே?" என்று சொல்கிறார்கள். கலைஞருக்கு கனவில் அண்ணா வருவதுபோல.


ராமரர் படத்தைக்கூட செருப்பால் அடித்தால் அது பெரியாரின்வழிதான்.எங்கே அப்துல்லாவை அவரின் புதிய மத்தில் "பெரியாரின் வழியின்பட்டதுதானே?" என்ற ஒன்றைச் செய்யச் சொல்லுங்கள்? பொதுவில் விமர்சிக்கக்கூட முடியாத ஒன்று அது. டவுசர் டங்குவாராகிவிடும்.

**

அவர்களுக்கு பிடித்ததைச் செய்கிறார். ஏன் வலிந்து "பெரியாரின் வழியின்பட்டதுதானே?" என்று விளக்கம்?

.

நல்லதந்தி said...

படத்தில் முன்னாள்.சேசாசலம், மு.பெரியார்தாசன், மு.சித்தார்த்தன், என்கின்ற இந்நாள் அப்துல்லா கையை விரித்திருக்கும் முறை எதோ தொகையைக் காட்டுவது போலிருக்கிறதே. அவ்வளவுதானா?

YUVARAJ S said...

//எப்படியிருந்தபோதும் என்னைப் பொறுத்தவரை இந்துமதத்தில் பிறந்த ஒருவர் எந்த மதத்திற்குப் போனாலும் வரவேற்கத்தக்கதே. அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்! //

இந்து மதம் மற்ற மதத்திற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. உங்கள் கருத்து வன்மையாக கண்டிக்க தக்கது.

நீ உன் சுட்டு விரலை எதை நோக்கியாவது நீட்டினால், மற்ற மூன்று விரல்கள் உன்னை நோக்கி

இருக்கும் என்பதை மறந்து விடாதே.

Unknown said...

அழகு! அருமை! நேர்த்தி!
திறனாய்வுகளின் முன்மாதிரி!
வாழ்த்துக்கள்!!

விநாயக முருகன் said...

பெரியார்தாசன் இஸ்லாத்திற்கு மாறியது அவரின் தனிப்பட்ட சுதந்திரம்.

என்னை பொறுத்தவரையில் மதமே ஒரு சாக்கடை. ஒரு சாக்கைடையிலிருந்து தப்பிக்க இன்னொரு சாக்கடையில் குதித்தால்?
என் சாக்கடை சூப்பர் ஸ்மெல். உன் சாக்கடை சகிக்கல எ‌ன்று அரசியல்வாதிகள் அடித்துக்கொள்வது போலத்தான் மதவாதிகளும் அடித்துக்கொள்கிறார்கள்

Unknown said...

பெரியார்தாசன் ஏன் மாறினார் என்பதுக்கு பதில் (குமுதத்தில்):

ஒன்றரை லட்ச ரூபாய் செலவு பண்ணி பிளைட்ல பிஸ்னஸ் கிளாஸ் புக் பண்ணி கவுருவமா போயி எறங்கினேன் !

நாளைக்கி ஏழாயிரம் ஆகற ஹோட்டல்ல முப்பதுநாள் தங்கி இருந்தேன் !

இப்படி செலவு பண்ண அவ்ர் என்ன பரம்பரை பணக்காரரா, இல்லை அவ்வளவு பணம் சம்பாதித்து விட்டாரா?

அவர் என்னவோ கொள்கையின் அடிப்படையிலோ, சுயவிருப்பத்திலோ மதம் மாறியமாதிரி தெரியவில்லை

மதி.இண்டியா said...

அடுத்து அ.மார்க்ஸ் தாவும் போது இதேபோல் சப்பை கட்டு கட்டுரை எழுதுவீகளா அல்லது பேமெண்ட் ஒத்துவந்தால் நீங்களும் தாவிடுவீங்களா?

நாலு கட்டிக்கலாம் என்பது அருமையான வசதிதானே ?

ஜாபர் அலி said...

// கடவுளின் இடத்தில் அறவியல் மதிப்பீடுகளை முன்வைத்து வாழ்வியல் நடைமுறையாக மாற்றத் தெரிந்தவர்களுக்குக் கடவுளும் மதமும் தேவையில்லை //

இந்த ஒற்றை வரி போதும் தோழரே... நன்றி.

Unknown said...

கொள்கையை பற்றி பேசும் ஐயா...
நீங்கள் முதலில் உங்கள் கொள்கை என்னவென்று தெளிவு படுத்திக் கொண்டு பேச (பின்னூட்டம் எழுத) வாருங்கள்