Tuesday, March 30, 2010

19:8:18 நீதியின் தலைகீழ் விகிதங்கள்


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய இயலாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. 1991, ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட நளினிக்கு இன்னும் இரண்டு மாதங்களைக் கடந்தால் 19 ஆண்டுகள் சிறைவாழ்க்கை முழுமையாகிறது. ‘14 ஆண்டுகள் ஆயுள்தண்டனை’ என்கிற நடைமுறை கூட நளினியின் விஷயத்தில் காலாவதியாகி விட்டது. நளினியை விடுதலை செய்வது குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அறிவுரைக்குழு, ‘நளினியை விடுதலை செய்ய பரிந்துரைக்கும்” என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ‘அதிக நாட்கள் அவர் சிறையில் இருக்கத் தேவையில்லை’ என்று உயர்நீதிமன்றத்தில் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் இப்போது ஆலோசனைக் குழுவின் பரிந்துரையோ அதற்கு மாறாய் உள்ளது. ராஜீவ் கொலை வழக்கிற்குப் பின்னால் கிட்டத்தட்ட அய்ந்து பிரதமர்களை இந்தியா சந்தித்து விட்டது. காங்கிரஸ் ஒருமுறை உடைந்து விட்டது. காங்கிரசின் கூட்டணிகளும் மாறிவிட்டன. ராஜிவ் கொலைக்குக் காரணமானதாகச் சொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. 20 ஆண்டுகாலத்திற்கும் மேலாய் விளங்கி வந்த தமிழர்களின் அரச நிர்வாகம் அழிக்கப்பட்டு ‘இலங்கை அரசின் இறையாண்மை’ நிலைநாட்டப்பட்டு விட்டது. என்றாலும் 19 ஆண்டுகளாய் சிறையில் குடும்பத்தினரை விட்டு வாடிக்கொண்டிருக்கும் நளினிக்கு விடுதலை கிடைப்பதாய் இல்லை. சிறையில் உள்ள கைதிகளை தண்டனைக்காலத்திற்கு முன்பே விடுதலை செய்யும் அதிகாரம், மாநில அரசுகளுக்கு உண்டு. அதற்கான பல உதாரணங்களைச் சொல்லலா. கடந்துபோன அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி கைதிகளைத் தமிழக அரசு விடுவித்தது அண்மைய சான்று. ஆனால் அந்த கருணை நளினிக்கு வழங்கப்படவில்லை. மேற்கண்ட உரிமையைச் சுட்டிக்காட்டி ‘’அரசியல் அமைப்புச் சட்டம் 161 பிரிவின்படி தமிழக அரசு நளினியை விடுதலை செய்ய பரிந்துரைக்கலாம்” என்று வாதிட்டிருக்கிறார் நளினிதரப்பு வழக்கறிஞர். ஆனால் அரசுத்தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் நளினி - பிரியங்கா சந்திப்புக்குப் பிறகுதான் இந்திய அரசு இலங்கையின் இனப்படுகொலையை நடத்துவதில் தீவிரமாய் முன்நின்றது என்ற யூகமும் தமிழ்த்தேசியர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே அவர்களும் இனி நளினி விடுதலையில் ஆர்வம் காட்டுவார்களா என்று தெரியவில்லை. நளினி விடுதலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு, சட்டம் ஒழுங்கிற்குப் பாதிப்பு ஏற்படும் நளினி விடுதலையை மறுத்து, பல காரணங்களை அடுக்கியுள்ளது. அவற்றில் ஒன்று, “ நளினி விடுதலை ஆனால் நளினியின் தாயார் வீட்டில்தான் தங்கப்போகிறார் என்று தெரியவருகிறது. நளினியின் தாய் வசிக்கும் ராயப்பேட்டை வீட்டைச் சுற்றிலும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளும் அமெரிக்க துணைத்தூதரகமும் அமைந்துள்ளன” என்பதும் உண்டு. இனி நளினியின் தாய் அந்தமான் தீவுகள், அபுகிரைப், குவாண்டனோமாவில் தன் குடியிருப்பை மாற்றினால் நளினி விடுதலை ஆகும் வாய்ப்பு உண்டு போலும்.
2002 பிப்ரவரியில் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லீம்கள் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகளை ஒட்டி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழு நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தியுள்ளது. இதுவும் கூட தீஸ்தா சேதல்வாத் போன்ற மனித உரிமைப் போராளிகளின் தீவிர போராட்டங்களுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகியது. ஆனால் ‘குஜராத் மாநிலத்தில் இந்த விசாரணை நடத்தக்கூடாது’ என்ற அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒன்பதுமணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த மோடி, ‘’அரசியல் சட்டத்திற்கு மேலானவர்கள் யாருமில்லை. எனக்கு எதிராக குற்றம் சாட்டியவர்களின் முகத்தில் கரி பூசவே விசாரணைக்கு வந்தேன்” என்று பஞ்ச் டயலாக் அடித்துள்ளார். இந்த ஆணவத்தின் காரணம் நாம் அறியாததா?
ராஜீவ் கொலை நடந்த ஓராண்டிற்குள் 1992, டிசம்பர் 6 அன்று இந்துத்துவவாதிகளால் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட லிபரன் கமிஷன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங் ஆகியோருக்கு இருந்த பங்கை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசு காட்டிய ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கைக்கூட லிபரன் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது பாபர் மசூதி இடிப்பு குறித்து ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கிலும் அத்வானியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அஞ்சுகுப்தா, “பாபர்மசூதி இடிப்பு அத்வானி, உமாபாரதி போன்றோரின் ஆணையின் பேரிலேயே நடந்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார். நாளை ரேபரேலி தீர்ப்பின் அடிப்படையிலும் அத்வானி மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான உறுதிகள் எதுவுமில்லை. 18 ஆண்டுகால விசாரணைகளே அத்வானி மீது ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதபோது எட்டாண்டுகாலத்திற்குப் பிறகான விசாரணைகள் தன்னை எதுவும் செய்யாது என்பதுதான் மோடியின் நம்பிக்கைக்குக் காரணம். பாபர் மசூதி இடிப்பு வழக்கின் குற்றவாளி அத்வானிதான் கடந்த தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் என்றால் குஜராத் இனப்படுகொலை குற்றவாளி மோடிதான் பா.ஜ.கவின் அடுத்த பிரதமர் வேட்பாளர். நளினி விடுதலையை எதிர்க்கும் சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள்தான் மோடிக்கு ‘வளர்ச்சிக்கான முதல்வர்’ என்று புகழாரம் சூட்டுகின்றனர். மத அடிப்படைவாதப் பாசிசமும் உலகமயமாக்கலும் இணையும் புள்ளியாக மோடி இருக்கிறார். அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங், மோடி மீது முகம் திருப்பாத நீதிதான் நளினியின் மீது தன் கோரமுகத்தைக் காட்டுகிறது.
இத்தகைய நீதி பாரபட்சம் என்பது நீதித்துறை மற்றும் அதிகார அமைப்புகளிடம் மட்டுமில்லை. அதிகாரத்தை எதிர்த்து இயங்குபவர்களிடம் உண்டு என்பது வேதனை உண்மை. இலங்கை அரசின் இனப்படுகொலைகளை எதிர்த்துத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிற, காங்கிரஸ் மய்ய அரசை விமர்சித்து வருகிற வைகோதான், இந்திராகாந்தி கொலைக்குப் பின்னான சீக்கியர்களின் மீதான காங்கிரஸ் குண்டர்களின் வன்முறையை முன்வைத்து மோடியின் குஜராத் இனப்படுகொலைகளைப் பாராளுமன்றத்தில் நியாயப்படுத்திப் பேசினார் என்பதை நாம் மறந்து விடுவதிற்கில்லை. ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்காய் ‘மரணதண்டனை ஒழிப்பு இயக்கம்’ கட்டுபவர்கள் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்வழக்கு போடப்பட்ட அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் குறித்து வாய்திறப்பதில்லை. முஸ்லீம் இளைஞர்களுக்காய்க் குரல் கொடுக்கும் முஸ்லீம் இயக்கங்கள் நளினியின் விடுதலை குறித்து அக்கறை காட்டுவதில்லை. இலங்கை இறுதிப்போரின் போது தமிழர்களின் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகளையும் போருக்குப் பின் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் துயரங்களையும் சமீபத்தில் இலங்கை இனவாத அரசால் தமிழர்களின் பெருமிதச் சின்னமான திலீபன் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதையும் குறித்து வட இந்தியாவில் தலித் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், பழங்குடி அமைப்புகள், முஸ்லீம் அமைப்புகள் பேசுவதில்லை. இலங்கை முள்வேலி முகாம்கள் குறித்து பேசும் தமிழர்களாகிய நாம் இன்னமும் வீடு திரும்ப இயலாத நிலையில் முகாம்களில் வாழும் இரண்டரைலட்சம் குஜராத் முஸ்லீம்கள் குறித்தோ சட்டீஸ்கர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஆதிவாசிகள் குறித்தோ பேசுவதுமில்லை, அதுகுறித்த தகவல்களும் நமக்குத் தெரியாது. எல்லா ஒடுக்குமுறை அரசாங்கங்களும் மேலும் மேலும் மக்களை அடைக்க முகாம்களைத் திறந்துகொண்டே உள்ளன. தேசமே முகாம்கள் ஆகின்றன. ஆனால் நாம் பிரிந்து நிற்கிறோம். நீதி பிளவுபட்டுள்ளது.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்னும் சொல்வழக்கு இந்தியாவில் உண்டு. ஆனால் கீழ்வெண்மணிப் படுகொலைகள், திண்ணியத்தில் மலம் ஊட்டப்பட்ட வழக்கு, பாபர் மசூதி இடிப்பு, தாமிரபரணிப் படுகொலைகள், பெஸ்ட் பேக்கரி வழக்கு, போபால் விஷவாயு கொடூரம் என இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குமான நீதி என்பதே தாமதிக்கப்பட்டதாயும் மறுக்கப்பட்டதாயும்தான் உள்ளது என்பது கொடும்நிஜம்.

7 comments:

Sundararajan said...

உரிய நேரத்தில் தேவையான விவாதம்.

நளினி விவகாரம் குறித்து விவாதிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது என்று அறிவுஜீவிகள் மவுனம் சாதிக்கும் நிலையில் மவுனத்தை உடைத்திருக்கிறீர்கள்.

எனது பதிவு விரைவில் வரும். பலரது கண்டனங்களையும், தேசத்துரோகி என்ற பட்டத்தையும் சுமக்கத் தயாராகியே இந்த பதிவை எழுதி வருகிறேன்.

யுவகிருஷ்ணா said...

தேவையான பதிவு!

நந்தா said...

அவசியமான பதிவு சுகுணா. உங்களிடமிருந்து வெளிப்பட்டிருப்பது மகிழ்ச்ச்சி.

Unknown said...

கருணாநிதி இந்த விடயத்தில் சோனியா & கோ விற்கு மறுபடியும் தமிழின தன்மானத்தை நிலை நிறுத்தி விட்டார்
என்பதை தவிர வேறென்ன.

Anonymous said...

இதுவும் ஒரு பட்டியல்.சிலர்
1)தஸ்லீமா பற்றி பேசுவதில்லை
2)இஸ்லாமிய நாடுகளில் மதச்சிறுபான்மையினர் நிலை குறித்து பேசுவதில்லை
3)காஷ்மீரில் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது பற்றி பேசுவதில்லை
4)இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசுவதில்லை
5)சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து பேசுவதில்லை
6)பாகிஸ்தான் வளர்த்து விடும் இந்திய எதிர்ப்பு அமைப்புகள் பற்றி வாய் திறப்பதில்லை
7)அவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் ரசூலை ஊர்விலக்கம் செய்தது பற்றி, அதை ஆதரிக்கும் அமைப்புகள்(உ-ம் தமுமுக) பற்றி பேசுவதில்லை.

இவையெல்லாம் செலக்டிவ் அம்னீஷியா காரணமாக பேசப்படுவதில்லை? :).

நீதியின் விகிதங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுவதுதான் இங்கு நடக்கிறது.
உங்களுக்கு சில சார்புகள் இருக்கின்றன,அது போல் நளினியை விடுதலை செய்யாதே என்று சொல்வோருக்கும் சில சார்புகள் உள்ளன.

Anonymous said...

Judiciary in India has almost become an institution that can function only with the pressure. It is no more independent as it supposed to be. Of late it has been only playing the role of maintaining the status quo except for very few instances. More importantly even after completing 19 years of jail sentence, if the State is feared of this woman, let alone justice, it personifies the incompetent security apparatus and impotent political leadership of this nuclear power. Thanks for the write up Siva. - Mani

K.R.அதியமான் said...

///இடைவேளைகளில் விற்கப்படும் பாப்கார்ன் போல போல்பாட் கொலைகள், மாவோவின் தவறுகள், ஸ்டாலினின் சதிகள் குறித்த விக்கிபீடியா இணைப்புகளுடன் கூடிய கே.ஆர்.அதியமான் மற்றும் நோ போன்றோரின் பின்னூட்டங்களும்கூட கிடைத்திருக்கும். ///

suguna,

I clearly remember during our many conversation about you confirming the 'excesses' done under Stalin and Mao. We did not differ about this vital matter. Yet, in the above para, you try to give a different picture ? what is your true view point then ? hypocrisy then ? do you then join the 'deniers' of Vinavu group ? and consider Stalin and Mao as great leaders of compassion ?

and by the way, there are hundreds of non-wiki links too. and the wiki links are not untrue or false. they provide a good introduction and starting point for many issues. you know that well, yet write here this nonsense.