
சிறுபத்திரிகைகள் மற்றும் வெகுஜனப்பத்திரிகைகளால் ‘மாற்றுசினிமாக்காரர்கள்’ என்று கொண்டாடப்படுபவர்கள் பட்டியலில் பாலா, அமீர், சேரன், சசிகுமார், தங்கர்பச்சான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் அளவிற்கு ஏனோ ஜனநாதனின் பெயர் இடம்பெறுவதில்லை. ஒருவேளை அவர் இவர்கள் அளவிற்கு தமிழ்த்தேசிய அரசியல் பேசாததாலா என்னவோ. ஆனால் தமிழின் புதிய பரிசோதனை முயற்சிகளை முன்வைப்பதிலும் அரசியல் சினிமாக்களை இயக்குவதிலும் ஜனநாதன் தனித்துவமான முன்மாதிரி என்பதே என் கருத்து.
அவரது ‘இயற்கை’ வெண்ணிற இரவுகளைத் தழுவிய காதல்சினிமாதான் என்றபோதும் ஒரு அசாதாரண அழகியல் படம் முழுவதும் கவிந்திருக்கும். கடலோர மனிதர்களின் கொண்டாட்டமும் எளியவாழ்க்கையும் இயல்பாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவரது இரண்டாவது படமான ‘ஈ’ மிக முக்கியமான அரசியல் சினிமா. மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களை மருந்துகளுக்கான பரிசோதனைக் களனாகப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்த படம். மேலும் ஒரு சேரி இளைஞனின் விளிம்புநிலை வாழ்க்கை இதற்கு முன் இவ்வளவு எதார்த்தமாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்யப்பட்டதில்லை. பார் டான்சராக வரும் முஸ்லீம் பெண், காதல் புனிதமானது என்றே சொல்லப்பட்ட தமிழ்கூறு நல்லுலக சினிமா வரலாற்றில் பணம் வாங்கி தன் காதலியை விற்க முனையும் இளைஞன், வெளிப்படையான நக்சல்பாரி போராட்ட அரசியல் என்று பல்வேறு கூறுகளை இணைத்த ஒரு அற்புதமான சினிமா. அதை விடவும் முக்கியமானது வேலுபிரபாகரன் மாதிரியான பிரச்சாரகர்கள் சினிமா என்னும் காட்சி ஊடகத்தை தெருமுனைக் கூட்டமாக மாற்றியபோது, பிரச்சாரத்தின் நெடியைக் குறைத்து அரசியலைக் கலைப்படைப்பாக மாற்றியவர் ஜனநாதன்.
ஆனால் பேராண்மை படத்தின் தோல்வியே ஜனநாதன் மேற்கண்ட அம்சத்திலிருந்து சறுக்கியது என்றுதான் நான் கருதுகிறேன். பல இடங்களில் வெளிப்படையான பிரச்சார நெடி. என்.சி.சி மாணவிகளுக்கு சரக்கு & பரிமாற்றம் & உற்பத்தி & உபரி & மூலதனம் என்றெல்லாம் கிளாஸ் எடுப்பது கொஞ்சம் ஓவர்தான். அதேபோல் போலீசு விலங்குகளால் பழங்குடி மக்களின் வீடுகளும் உடைமைகளும் தாக்கப்படும்போது, அந்த பழங்குடி பேசும், ‘‘உழைக்கும் மக்களோட சர்வதிகாரம் வந்துதான் தீரும்’’ என்கிற வசனமும் காட்சிக்கு வெளியே துருத்தி நிற்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒரு உயர்சாதிப் பெண் மலையின இளைஞன் துருவன் மீது பொய்ப்புகார் எழுதும்போது சக தோழியிடம் சொல்கிறாள், ‘‘அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி, இந்தியாவுக்கு ஒரு பாரம்பரியம் இருக்குடி’’. ஏனோ இந்த வசனம் அவ்வளவு உறுத்தலாக இல்லை. ஒரு பழங்குடி இளைஞனை ஆதிக்க சாதிக்காரர்கள், அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், தீண்டத்தகாதவனாக நடத்துகிற சாதிய மனோபாவம் குறித்த காட்சிகள் பிரச்சார வசனங்கள் இன்றி இயல்பாகவே பதிவுசெய்யப்படுகின்றன. ஆனால் அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்களை சென்சார் கத்தரித்து, ஆதிக்கசாதி மனோபாவத்தை அழகாகக் காப்பாற்றியிருக்கிறது. (இதற்காகவெல்லாம் நமது இனமான சினிமாக்காரர்கள் போராட மாட்டார்கள்)
ஆனால் படத்தின் பிரச்சினையே தோழர் மதிமாறன் சுட்டிக்காட்டுவதைப் போல ‘இந்தியத் தேசிய அரசியல்’தான். ஒரு பழங்குடி இளைஞனைக் கக்கூஸ் கழுவ வைக்க ஆசைப்பட்டு ரசிக்கும் உயர்சாதிப் பெண்ணின் ‘இந்தியப் பாரம்பரியம்’ நிறைந்த இந்தியத் தேசியம் எப்படி ஒரு பழங்குடி இளைஞனின் இந்தியத் தேசியமாகவும் இருக்க முடியும்? பழங்குடிகள் அதிகம் நிறைந்த வடகிழக்கு மாகாணங்களில் இந்திய தேசிய வெறியாட்டத்தைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?
ஆனால் நான் இங்கு பேச வருவது தேசிய இனப்பிரச்சினைகளையோ மொழிவாரி தேசியத்தையோ கூட அல்ல. அம்பேத்கர் மொழிவாரித் தேசியங்களை ஆதரித்தவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் ‘மய்யப்படுத்தப்பட்ட மத்திய அரசு’ என்னும் கருத்தாக்கத்தை ஆதரித்தவரும்கூட. ‘மொழிவாரித் தேசியம் அல்லது அதிக அதிகாரம் வாய்ந்த மாநில அரசு என்னும்போது அங்கு இயல்பாகவே சிறுபான்மையினராகிப் போகும் தலித்துகளை இவ்விரண்டும் கீழாகவே நடத்தும்’ என்னும் அம்பேத்கரின் அச்ச உளவியலிலிருந்தே நாம் இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அம்பேத்கர் ஒரு இந்திய அளவிலான ஒன்றிணைப்பை வலியுறுத்தியபோதும் அது காங்கிரசு மற்றும் இந்துத்துவவாதிகள் முன்வைத்த பார்ப்பன இந்து தேசியத்திற்கு முற்றிலும் மாறாகவும் எதிராகவும் இருந்தது. ராமன், வினாயகன் தொடங்கி பாரதமாதா வரையிலான இந்திய தேசிய இந்துத்துவக் குறியீடுகளை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே துருவன் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக இந்தியத் தேசியத்தை நிராகரிக்க வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. ஏனெனில் தமிழ்த்தேசியம் என்பதும் இதுவரை மலைவாழ் மக்களை விலக்கி வைக்கிற மய்யப்படுத்தப்பட்ட அரசியலே. குணா என்னும் தமிழ்த்தேசிய ‘அறிஞர்’ படுகரை அன்னியர் என்று சொல்லி, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கச் சொல்லி எழுதியவர். ஆனால் இங்கு கேள்வியே துருவனின் இந்தியத் தேசியம், ‘தேசப் பாதுகாப்பு, அன்னியச் சதி’ என்கிற வழக்கமான ஆளும் வர்க்கப் பல்லவியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே என்பதுதான். பாகிஸ்தானுக்குப் பதிலாக அமெரிக்கா என்று மாற்றி விட்டால் அது மார்க்சியம் ஆகி விடுமா என்ன?
எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, அதுவும் இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்போகிறது?. அது மான்சோன்டாவின் துணையுடன் மரபணுக் கத்திரிக்காயைக் கொண்டு வர தீவிர முயற்சியில் இருக்கும்போது, ஜனநாதனின் இந்த கரு அபத்தமானதாகத் தோன்றவில்லையா? மேலும் செயற்கைக் கோள், அணு ஆயுதச் சோதனை, ராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்கிக் குவித்தல் ஆகியவற்றிற்கு தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை எடுத்துத்தானே அரசு செலவு செய்கிறது? தமிழக அரசால் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட 12,000 கோடி ரூபாயைச் செலவழிக்காமலே பல துறைகள் திருப்பி அனுப்பி விட்டதாக கூறுகிறது சமீபத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை. இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து அணுகும்போதுதான் பேராண்மை முன்வைக்க விரும்பும் மார்க்சிய அரசியலும் இந்திய தேசபக்தியும் ஒன்றுடன் ஒன்று இணையாமல் விலகி மிதக்கின்றன.
மேலும் தேசபக்தி என்பதை ஒத்துக்கொண்ட இந்திய மார்க்சிய லெனினியக்குழுக்களும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலையீட்டை மறுப்பதாகவும் இந்தியாவில் உள்ள அடித்தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாகவுமே தேசபக்தியை விளக்குகின்றனர். கருவேல மரத்தை இந்தியாவிற்குள் பரப்பி செயற்கை விதைகள் இந்திய விவசாய நிலங்களை மலடாக்குவது குறித்த ஆதங்கத்தில் இத்தகைய பார்வைகள் தெரிகின்றன. ஆனால் பின் அது பாதுகாப்பை முன்னிட்ட தேசபக்தி, வல்லரசு என்றெல்லாம் பெருங்கதையாடல்களை முன்வைக்கும்போது மார்க்சியத்திலிருந்து விலகி நிற்கிறது.
என்றபோதும் ஜனநாதனின் பேராண்மையை முற்றிலுமாக எதிர்மறையில் நிறுத்தி நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. பழங்குடி என்றாலே மொழி தெரியாத இளைஞன், அவனுக்கு ‘அ - அம்மா, ஆ - ஆத்தா’ என்று ஆனா ஊனா கற்றுத்தரும் கதாநாயகி என்றே பழங்குடியினர் குறித்த சித்திரங்களை உருவாக்கியுள்ள தமிழ்ச்சினிமாவில் அவர்களின் இயற்கையோடு இணைந்த இயல்பையும், ‘சுள்ளி பொறுக்கிறவனைக் கூட விடமாட்டோம்’ என்று திட்டமிட்டு அவர்களையும் காட்டையும் அழிக்கும் அதிகார எந்திரங்களையும் பதிவு செய்ததற்காக, ஆண்களிடத்தில் உறைந்திருக்கும் சாதியுணர்வு குறித்தே அதிகம் பேசப்படாத தமிழ்ச்சினிமாவில் பெண்களுக்குள்ளும் படிந்து போயிருக்கும் சாதியுணர்வை நுட்பமாகப் பதிவு செய்ததற்காக, பேராண்மை என்று பெயர் வைத்து பெண்களைக் கதைநாயகிகளாய் சாகசக்காரர்களாய் முன்வைத்ததற்காக, இறுதியில் பொன்வண்ணன் குடியரசுத்தலைவர் விருது பெறுவதுபோல் காட்சி வைத்து அதிகாரவர்க்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்ததற்காக ஜனநாதனுக்கு ரெட்சல்யூட்ஸ்!
சில குறிப்புகள்...
1. படத்தின் வடிவத்தில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்த விமர்சனம் எதுவும் பேசவில்லை. உள்ளடக்கம் குறித்தானதே. திரைக்கதை, இசை, ஜெயம் ரவியின் உழைப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு என பல விஷயங்கள் குறித்து பலரும் எழுதியிருக்கின்றனர். குறிப்பாக இதுகுறித்து கேபிள்சங்கர் எழுதியதுதான் என்னுடைய கருத்தும்.
2. தோழர் மதிமாறன் குறிப்பிட்டுள்ளதைப் போல் ஆதிக்கசாதிப் பெண் இறந்தபோது ஒலிக்கும் கந்தஷடிக்கவசத்தை அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்பது என் கருத்து. உயர்சாதிக் கடவுளால் காப்பாற்றப்படாமல் ஒரு பெண் இறந்து கிடக்கும்போது ‘காக்க காக்க’ கந்தசஷ்டிக்கவசம் ஒலிப்பது எவ்வளவு அழகான பகடி!
3. பாலிமர் தொலைக்காட்சியில் பாஸ்கி ஜனநாதனைப் ‘பேராண்மை’ தொடர்பாக நேர்காணல் செய்தார். அவரது முதல்கேள்வி, ‘‘நீங்க மயிலாப்பூரிலிருந்து வந்ததாச் சொன்னீங்க. (ஜனநாதனின் வீடோ அல்லது அலுவலகமோ மயிலாப்பூரில் இருக்கலாம்). மயிலாப்பூர்ன்னாலே ஜாலியா இருப்பாங்க. நீங்க எப்படி சீரியஸா படம் எடுக்கிறீங்க?’’. அந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஒரு நேயர் ஜனநாதனிடம் பகிர்ந்துகொண்டது, ‘ஜெயம் ரவியை நல்லா கிளாமரா காட்டியிருக்கீங்க சார். இது மாதிரி பார்த்ததே இல்லை’‘. இதையெல்லாம் பார்க்கும்போது கோபப்படாமல் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
3. மிக நுட்பமாக ‘பேராண்மை’ படத்தில் உள்ள சாதி எதிர்ப்பு அரசியல் மற்றும் அதிகார வர்க்க எதிர்ப்பு ஆகியவை நீக்கம் செய்யப்பட்டு இதை ஒரு தேசபக்திப்படமாகவே காட்சி ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பதிவுசெய்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். பேராண்மை படத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தபோதும், ‘உன்னைப் போல் ஒருவன்’ மாதிரியான படங்களின் கறையைக் கழுவுவதற்கு அவசியமானதுதான். இந்தியத் தேசியத்தை முன்வைத்தும்கூட, உன்னைப் போல் ஒருவனைக் கொண்டாடிய அளவிற்கு பேராண்மையை நமது தேசபக்த பதிவர்கூட்டம் கொண்டாடாதையும் கவனத்தில் நிறுத்துங்கள்.