''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?''
கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப் பொசுங்கல்களுக்கு நடுவில் அவளது கண்கள் மட்டும் வெள்ளையாக அலைபாய்ந்தன.
ஜீவா மூலம்தான் கார்த்திகா எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் நவீன இலக்கியம், அரசியல் பேசித் திரிந்து டீமாக மாறியவர்கள். டீம் என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய டீம் இல்லை. நான், ஜீவா, அக்தர் உசேன், என் பெயர் கொண்ட இன்னொரு செந்தில் என்கிற கவிஞர் நவயுகன்... அவ்வளவுதான். ஓஷோ, பாலகுமாரன் என்று அலைந்து திரிந்து, ஒரு வழியாக எங்கள் இலக்கிய டீமில் வந்து இணைந்த பிறகும் ஜீவா ஒரு சாகசக்காரனாகவும் அப்பாவியாகவும் இருந்தான். இப்போது நினைத்தால் அது ஒரு வரம் என்றுதான் தோன்றுகிறது. முதல் குடி, முதல் சிகரெட்டை எங்கள் டீமுக்கு அறிமுகப்படுத்திய அவனுக்குப் பெண் நண்பிகள் கணிசம். எங்களுக்கு அது மருந்துக்கும் இல்லை. தங்கையின் திருமணத்தில் துணிச்சலாகக் குடித்துவிட்டு பந்தி பரிமாறியது, வீட்டு மொட்டை மாடியில் சிகரெட் குடித்தது, பக்கத்து வீட்டுப் பெண் கொடுத்த காதல் கடிதங்கள் எனக் கதைகதையாகச் சொல்வான். ஆனால், கார்த்திகாவின் கதை, ஜீவாவின் வழக்கமான சாகசக் கதைகளில் ஒன்று அல்ல. அது ஒரு துயரக் கதையாகவும் இன்னொருபுறம் நாங்கள் பேசிக்கொண்டு இருந்த விஷயங்களுக்குச் சவால்விடும் கதையாகவும் இருந்தது!
''அப்பாவை ரயில் ஏத்தப் போனப்போதான் இந்தப் பொண்ணைப் பார்த்தேன். அழுதுக்கிட்டு இருந்தது. சாகற முயற்சியில இருந்தது!'' என்றான் ஜீவா. அவன்தான் பேசிக்கொண்டே இருந்தான். கார்த்திகா ஒன்றும் பேசவில்லை. இறுதி வரை அப்படித்தான். நான் மெள்ள அவளை ஏறிட்டுப் பார்த்தேன். பூசினாற்போன்ற கறுத்த தேகம். அவள் கண்கள் மட்டும் வசீகரமாக இருந்தன. ''கறுத்த பெண்களுக்கு அப்படித்தான். கண்ணு அழகாகத் தெரியும். முகம் கறுப்பா இருக்கும்போது கண்ணு மட்டும் வெள்ளையா இருந்தா தனி அழகுதான்!'' என்பான் அக்தர்.
பத்தாம் வகுப்புத் தேர்வை இரண்டொரு முறை எழுதித் தேர்வாகாததால் வீட்டிலேயே இருந்துவிட்டாள் கார்த்திகா. அப்பா அரசு மருத்துவமனையின் கடைநிலை ஊழியர். அக்கா நர்ஸ். மருத்துவமனை குவார்ட்டர்ஸில் வசித்தார்கள். அதே குவார்ட்டர்ஸில் வசித்த, கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த பையனுக்கும் கார்த்திகாவுக்கும் காதல். இருவரும் வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள். மதுரையில் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். காதல், கல்யாணத்தைவிட அவனுக்கு கார்த்திகாவின் தேகம் மீதுதான் ஆர்வம். அவளுக்கோ காதல் என்பது உடலுக்கெல்லாம் அப்பாற்பட்ட, நறுமணம் வீசிக்கொண்டே அந்தரத்தில் மிதக்கும் ஏதோ ஒரு பரிசுத்தமான வஸ்து என்கிற எண்ணம். மீண்டும் மீண்டும் அவன் முயற்சிகள் தொடர, அவனிடம் சொல்லாமல்கொள்ளாமல் மதுரை யில் இருந்து பஸ் ஏறி வீட்டுக்கு ஓடிப்போனாள் கார்த்திகா!
வீடு அவளை ஏற்றுக்கொண்டாலும் அது இயல்பானதாக அமையவில்லை. வசவுகள், சந்தேகங்கள் என நாளும் ஒரு விஷப்பூச்சி கார்த்திகாவைத் தீண்டத் தொடங்கியது. குறிப்பாக, அவள் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் சமயங்களில் அந்த குவார்ட்டர்ஸ் பையன்கள் கார்த்திகாவை ஏகத்துக்கும் கிண்டல் அடித்துச் சீண்டி இருக்கிறார்கள். 'கார்த்திகா என்பவள் எப்போதும் எந்தப் பையனோடும் ஓடிப்போகத் தயாரானவள்’ என்கிற பிம்பமே அவர்களுக்குள் ஊறிப்போய் இருந்தது. வீட்டின் வசவுகள், வீட்டைச் சுற்றியான வசவுகள் அவளை ரயில் தண்டவாளங்களை நோக்கித் துரத்தியிருந்தன.
''சரிடா, நாம என்ன பண்ண முடியும்?'' என்றான் அக்தர். உண்மைதான். கார்த்திகாவை நடத்துகிற அளவுக்கு எங்கள் வீடு எங்களை மோசமாக நடத்தாவிட்டாலும், அப்படி ஒன்றும் கௌரவமாகவும் நடத்தவில்லை. அமெரிக்க வேலை, ஐ.டி., ஐந்து இலக்கச் சம்பளத்தோடு எங்கள் செட் பசங்கள் செட்டிலாகிவிட, நாங்களோ நிறப்பிரிகை, கோபிகிருஷ்ணன், மிஷல் ஃபூக்கோ என்றிருந்தோம். வீடு எங்களை அனுமதித்ததே பெருந்தன்மையாக இருக்க, கார்த்திகாவை எங்கே கூட்டிப்போவது? அப்போதுதான் தோழர் கேசவனும் ரத்னா தோழரும் நினைவுக்கு வந்தார்கள்.
தோழர்கள் கேசவனும் ரத்னாவும் சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். பெண்ணியத்தின் மீது இருவருக்கும் அபார நம்பிக்கை. ரத்னா தோழர் கிராப் வெட்டி எப்போதும் பேன்ட் சட்டைதான் அணிந்து இருப்பார். காது, மூக்கு, கழுத்து என்று எங்கும் நகை கிடையாது. 'தங்கம் என்பது மஞ்சள் பிசாசு!’ என்பார். தோழர் கேசவன் எங்களுக்கு உதாரணப் பெண்ணியவாதி. மகள் கிளாரா ஜெட்கின் பிறந்த பிறகு அவரே ஆண் கருத்தடை செய்துகொண்டார். வீட்டு வேலைகளை அவர் பகிர்ந்துகொண்டது அவர்கள் குடியிருந்த 'ஸ்டோர்’ஸில் பெண்களின் பிரதான குசுகுசுப் பேச்சாக மாறி இருந்தது. எப்போது தோழர் கேசவனை நினைத்தாலும் கைலியை ஒருக்களித்து வாசலில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருப்பதான சித்திரமே தோன்றும்.
எல்லோருக்கும் தோசை சுட்டுக்கொண்டுவந்து தந்தார் கேசவன். ரத்னா தோழர்தான் பரிவாக கார்த்திகாவிடம் விசாரித்துக்கொண்டு இருந்தார்.
''உங்க அப்பா மேல கேஸ் கொடுக்கலாமா?''
''வேணாம்க்கா.''
''அந்தப் பையன் மேல?''
''ஐயோ, வேணாம்க்கா.''
இப்படி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுபவளாகத்தான் இருந்தாள் கார்த்திகா. அனேகமாக ஜீவாவோடுதான் அதிகம் பேசியிருப்பாளாயிருக்கும். வீட்டுச் சுவர் முழுக்க மாட்டப்பட்டு இருந்த தலைவர்கள், போராளிகளின் புகைப்படங்கள், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் அவளது மிரட்சியை அதிகப்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், ஓயாது பேசி கிளாரா மட்டும் அவளுக்குக் கொஞ்சம் நெருக்கமாகி இருந்தாள். கார்த்திகா கிளாராவுக்குச் சில கதைகளையும் ரைம்ஸ்களையும் சொல்லிக்கொடுத்ததைப் பார்த்தபோது, அவள் இயல்புநிலைக்கு வந்துவிட்டாள் என்று திருப்தி அடைந்தோம். ''பேசிக்கிட்டு இருங்க... வந்துடறேன்!'' என்றவாறு பேன்ட் மாட்டி வெளியே கிளம்பினார் கேசவன்.
ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். கார்த்திகா டி.வி-யில் நகைச்சுவைக் காட்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். கிளாரா தூங்கியிருந்தாள். கேசவன் இரண்டு ஆண் களோடு உள்ளே நுழைந்தார். அவர்களில் தலை நரைத்த மனிதரின் கண்களில் அதிர்ச்சி அப்பியிருந்தது. இன்னோர் இளைஞனின் கண்களில் ஆத்திரம் உறைந்து இருந்தது. உள்ளே நுழைந்ததும் கார்த்திகாவை அடிக்கத் தொடங்கினான் அந்த இளைஞன். ''ஓடுகாலி நாயே... ஏண்டி மானத்தை வாங்கறே?'' என்று இரண்டொரு முறை சொல்லிக்கொண்டவனாக மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கார்த்திகா அடிகளை ஏற்றுக்கொண்டு இருந்தாள். ''என்னங்க நீங்க..? ஒரு பொம்பளைப் புள்ளைய... அதுவும் இன்னொருத்தர் வீட்லவெச்சு அடிக்கிறீங்க?'' என்று கோபத்துடன் குரலை உயர்த்தித் தடுத்தார் தோழர் கேசவன். அந்த அளவில் அவர் ஒரு பெண்ணியவாதியாக இருந்தார்!
அப்பாவோடும் அண்ணனோ டும் கிளம்பும்போது கார்த்திகா, ஜீவாவையும் கிளாராவையும் மட்டும் ஏறிட்டுப் பார்த்தவளா கக் கிளம்பிப் போனாள்.
இரண்டு மாதங்கள் கழிந்துஇருக்கும். கார்த்திகாவை நாங்கள் மறந்திருந்த நேரம். மீண்டும் கார்த்திகாவோடு வந்து சேர்ந்தான் ஜீவா. அவனது அலுவலகத்துக்கே நேரே போயிருக்கிறாள் அவள். எந்தப் பெண் அறிமுகமானாலும் தன் தொலைபேசி எண், அலுவலக முகவரி, மின் அஞ்சல் முகவரி என்று எல்லாவற் றையும் அளித்துவிடுவான் ஜீவா. இப்போது எனக்கு கார்த்திகாவின் மீது பரிதாபம் வரவில்லை. ஆத்திரம்தான் வந்தது. அவளைவிட ஜீவாவின் மீதுதான் எரிச்சல் அதிகமாக வந்தது.
''இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைடா. இந்தப் பிரச்னையை நீயாத்தான் சால்வ் பண்ணணும்!'' என்றேன் குரலை உயர்த்தி. ஜீவா மௌனமாக நின்றான். கார்த்திகா இப்போதும் எங்களை நேருக்கு நேர் பார்க்கவில்லை. ஆனால், அவள் முகத்தில் சின்ன சுணக்கம் தெரிந்தது.
''ராகவன்கிட்ட போவோம்டா!'' என்றான் இன்னொரு செந்தில்.
ராகவனும் தோழர்தான். முன்னாள் தோழர் என்றும் சொல்லலாம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிக்கொண்டு இருந்தவர், 'கட்சியில் ஜனநாயகம் இல்லை’ என்று வெளியேறியவர். ஒரு சின்ன
டெலிபோன் பூத் வைத்திருந்தார். எங்க ளுக்கு வார இறுதியில் குடிப்பதற்கும் இலக்கிய உரையாடல்களை நடத்துவதற்கும் அதுதான் களம். போன் அடித்த இருபதாவது நிமிடம் களத்துக்கு வந்தார் ராகவன். கண்ணாடியை மூக்குத்தண்டில் அழுத்திக்கொண்டே, ''பொண்ணு ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கே?'' என்றார்.
''ஆமாம்'' என்றேன்.
லேசாக கார்த்திகாவைப் பார்த்துப் புன்னகைத்தார். கார்த்திகாவும் புன்னகைத்ததாகத்தான் தோன்றி யது. ஒரு பழச்சாறுக் கடையில் ஐந்து பேரும் அமர்ந்திருந்தோம். ஆளுக்கு ஒரு ஜூஸ் ஆர்டர் கொடுத்துவிட்டு, எங்களிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். ''ஏதாவது ஹாஸ்டல்ல சேர்க்கலாம். ஆனா, அதுக்கான காசு கட்டணும். என்ன பண்றது?'' என்றார். யாருக்குத் தெரியும்? அவர் ஏதாவது தீர்வைச் சொல்லி விடுவார் என்பதைப் போல, மூவரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தோம்.
''ம்ம்ம்... மொத தடவை யாராவது கட்டிட்டாக்கூட, மாசா மாசம் ஃபீஸ் கட்டணும். அதுபோக, இந்தப் பொண்ணோட செலவுக்குப் பணம்?'' - ஆக, இந்தப் பிரச்னையில் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதுவும் பதில் தெரியாத கேள்விகள், மேலும், கேள்விகள் மட்டுமே இருக்கின்றன என்பது எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. இருப்பதிலேயே அதிகமாகக் குழம்பிப்போனவன் ஜீவாதான். 'அதுக்குத்தான் மொதல்லயே சொன்னேனே’ என்கிற ஒரு சின்ன சந்தோஷப் புன்னகையும் தொனியும் எனக்கு வரத் தொடங்கியிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.
''சரி, என்ன படிச்சிருக்கு?'' - ராகவன் கேட்டார்.
''டென்த் ஃபெயில். மூணு அட்டெம்ப்ட்!''
சலிப்புத் தட்டியது ராகவனின் கண்களில். ''ப்ளஸ் டூ முடிச்சிருந்தாக் கூட எங்கேயாவது வேலைக்குச் சேர்த்துவிடலாம்!''
டைப்பிங், கம்ப்யூட்டர் என்று எதுவும் கார்த்திகாவுக்குத் தெரிந்திருக்க வில்லை. ஐந்து பழச்சாறுகளுக்கான பணத்தைத் தந்தவர், ''ஒரு வேலை இருக்கு... பத்து நிமிஷத்துல வந்துடறேன். அங்கே இங்கே அலைய வேணாம். ஏதாவது ஒரு இடத்துல இருங்க!'' என்று சொல்லிக் கிளம்பிப் போனார்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாகி இருக்கும். ராகவன் வருவதாகத் தெரியவில்லை. போனும் வந்தபாடு இல்லை. ஜீவாவின் முகத்தில் கலவரம் கூடிக்கொண்டுபோனது. நான்கைந்து முறை மாற்றி மாற்றி ராகவனுக்கு போன் போட்டுப் பார்த்தோம். தோழர் எடுப்பதாக இல்லை. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, அவரிடம் இருந்து போன் வந்தது. உடனடியாக கார்த்திகா வைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.
நாங்கள் போனபோது ராகவனுடன் கார்த்திகாவின் அப்பாவும் அண்ணனும் நின்றிருந்தார்கள். ஜீவாவிடம் பேசி எப்படியோ கார்த்திகா அப்பாவின் தொலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார் ராகவன். இப்போது கார்த்திகா அப்பாவின் கண்களில் அதிர்ச்சிக்குப் பதிலாக அலுப்பும் சலிப்பும்தான் தெரிந்தன. எங்களை லேசாக முறைத்தவாறு நின்றான் அவள் அண்ணன். தீயணைப்பு நிலையத்தின் அருகில் கார்த்திகாவை அவள் அப்பாவுடனும் அண்ணனுடனும் இன்னொரு முறை அனுப்பிவைத்தோம். இப்போது அவள் ஜீவாவைக்கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.
மூன்று வாரங்கள் தாண்டியிருக்காது. கார்த்திகா தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வந்தது. நானும் ஜீவாவும் போயிருந்தோம். கார்த்திகாவுக்குப் பக்கத்தில் அவளது அம்மா கவலையும் கண்ணீருமாக அமர்ந்து இருந்தார். அக்கா வெளியில் போயிருக்கிறாராம். அப்பாவை யும் அண்ணனையும் காணவில்லை.
''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?''
இப்போதுதான், இந்தக் கேள்வியைக் கேட்கும்போதுதான் கார்த்திகா முழுதாக என் கண்களை நேருக்கு நேர் பார்த்தவளாகக் கேட்டாள். இல்லை, நான் அவள் வீட்டுக்கு போன் செய்யவில்லை. இன்னொரு செந்தில்தான் போன் செய்திருக்கிறான் என்பது பின்னாளில் தெரிந்தது. அவனுக்கும் இது வரை எந்தப் பெண் தோழியும் வாய்த்தது இல்லை. நட்பை உருவாக்கிக்கொள்வதன் நிமித்தம்தான், கார்த்திகாவிடம் பேசுவதற்காக போன் செய்திருக்கிறான். ஆனால், போனை எடுத்தது அவளது அக்கா. அதன் பின் வசவுகளும் சந்தேகங்களுமாக விஷப் பூச்சிகள் மேலும் மேலும் ஊரத் தொடங்கி இருக்கின்றன. அனேகமாக அவள் கண்களுக்கு அருகில் அந்தப் பூச்சிகள் வந்தபோதுதான், கார்த்திகா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து இருக்க வேண்டும்.
கார்த்திகா இறந்த செய்தி எங்களுக்குத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. அன்று இரவு நானும் ஜீவாவும் நிறைபோதையில் இருந்தோம். ஜீவாவுக்கு அழுகை தாங்க முடியவில்லை. ''ஏன் இப்படிப் பண்ணணும் கார்த்திகா?'' என்றான் அழுகையினூடாக. வார்த்தைகள் துண்டுதுண்டாகத்தான் வந்து விழுந்தன.
உண்மையில் ஜீவா மட்டும் அப்பாவி சாகசக்காரன் இல்லை. கேசவன், ரத்னா, ராகவன் என எல்லோருமே ஏதோ ஒரு வகையிலான அப்பாவி சாகசக்காரர்கள்தான். அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்? நான், அக்தர், செந்தில் என எல்லோரும்தான். வீடு மறுக்கிற ஒன்றை, வீடு விரும்பாத ஒன்றைச் செய்துகொண்டு இருக்கிற சாகசமும், மற்றவர்களிடம் இருந்து எங்களை வித்தியாசப்படுத்திக்கொள்கிற வேட்கையும்தான் நாங்கள். ஆனால், முகத்தில் அறையும் நிஜமான கேள்விகளுக்கு எங்களால் எந்தப் பதிலையும் அளிக்க முடியவில்லை. ஜீவா, நான், அக்தர், நவயுகன், கேசவன், ரத்னா, ராகவன் என சாகசக்காரர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணைக் கொலை செய்திருக்கிறோம்.
''வீட்டைவிட்டு ஓடிப்போறது, தற்கொலை செஞ்சுக்கிறது - இந்த ரெண்டு எண்ணமும் எல்லார் வாழ்க்கையிலும் ஒருமுறையாவது வந்துட்டுப் போறதுதான். ஆனா, கார்த்திகாவால் முதல் வாய்ப்பை வெற்றிகரமா நிறை வேத்த முடியலை. அதான் ரெண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுத்துட்டா.
ஆண்களால்தான் வீட்டைவிட்டு ஓடிப் போகவும் முடியும்... தற்கொலை பண்ணிக்கவும் முடியும். பொம்பளைங்களால தற்கொலை மட்டும்தான் பண்ணிக்க முடியும். ஏன்னா, ஒரு பொண்ணு வீட்டைவிட்டு ஓடிப்போறதா இருந்தாக்கூட, அவ இன்னொரு ஆம்பளையோடுதான் ஓடிப் போக முடியும்!''
இதைச் சொல்லும்போது நான் ஜீவாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை!
(நன்றி : ஆனந்த விகடன்)