Monday, September 26, 2011

மரணதண்டனை எதிர்ப்பு : ஜெயலலிதாவை வாழ்த்த வேண்டுமா, வலியுறுத்த வேண்டுமா?

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்ஷேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும், கூடங்குளம் அணு உலைப் பணிகளைத் தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான தீர்மானங்களைப் போட்டு அசத்துகிறார் ஜெயலலிதா. உண்மையிலேயே அவர் புரட்சித்தலைவிதானோ என்கிற மயக்கமும் பலருக்கு ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நன்றாகக் கவனித்துப்பார்த்தால், ஜெயலலிதாவால் நிறைவேற்றப்படும் அனைத்து தீர்மானங்களும் மத்திய அரசை வலியுறுத்துவதே தவிர, அவரது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துபவையல்ல. பந்தை மத்திய அரசின் கோல்போஸ்ட்க்குத் தள்ளுவதே ஜெயா அரசின் தீர்மானங்கள். ஆனால், சமச்சீர்க்கல்வி குறித்த அணுகுமுறை, பரமக்குடியில் தலித்துகள் மீதான துப்பாக்கிச் சூடு, நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதிநிதிகளை அனுப்புவது, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே வேட்பாளர் பட்டியலை அறிவித்தது ஆகியவை மூலம் பார்ப்பன - இந்துத்துவ - எதேச்சதிகாரப் போக்கிலிருந்து தான் இன்னும் மாறவில்லை என்பதை ஜெயலலிதா நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் மேற்கண்ட தீர்மானங்களிலேயே திருப்தி அடைந்து விடுபவர்கள் பரமக்குடி சம்பவம் போன்றவற்றில் அழுத்தமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தயங்குவதைக் காணமுடிகிறது. இந்நிலையில் முவர் மரணதண்டனையை ரத்துசெய்யக் கோரும் ஜெயலலிதாவின் தீர்மானம் குறித்து இன்னொரு பார்வையை முன்வைக்கிறது எஸ்.வி.ஆரின் நூல்..

எஸ்.வி.ராஜதுரை எழுதி சென்னை அரசியல் பள்ளியின் வெளியீடாக வந்துள்ள ‘மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் : உரத்த சிந்தனைக்காக சில கருத்துகள்’ என்னும் நூல் மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கான இன்னொரு கருவி. எஸ்.வி.ஆர் மரணதண்டனை எதிர்ப்பு உள்ளிட்ட மனித உரிமை செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொள்பவர் என்பதால் அதுதொடர்பாகச் சட்டரீதியான பல தரவுகளை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார். இந்நூலில் பல்வேறு விஷயங்கள் விளக்கப்பட்டாலும் முக்கியமானது மரணதண்டனையை ரத்து செய்வதில் மாநில அரசுக்கு உள்ள அதிகார வரம்பெல்லை குறித்தது. ‘பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கையோடு ‘குடியரசுத்தலைவரால் ஒருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு மாநில அரசு அதில் தலையிட முடியாது’ என்றும் ஜெயலலிதா கூறினார். ஆனால், இந்த வாதம் தவறானது என்பதற்குப் பல வாதங்களையும் உதாரணங்களையும் அடுக்கடுக்காக முன்வைக்கிறார் எஸ்.வி.ஆர்.

‘மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணைமனு மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டப்பிரிவு 72 குடியரசுத்தலைவருக்கு வழங்குகிறது என்றால் அதே அதிகாரத்தைப் பிரிவு 161 மாநில ஆளுநருக்கு வழங்குகிறது. ஆனால் அதேநேரத்தில் இந்த அதிகாரங்கள் இணையான அதிகாரங்களே (Parellel power) தவிர படிநிலை அதிகாரங்கள்(Hierarchial power) அல்ல. அதாவது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியபிறகு அந்தத் தீர்ப்பில் மாநில உயர்நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது மாதிரியான அதிகாரம் அல்ல இது. எனவே குடியரசுத்தலைவர் ஒரு கருணைமனுவை நிராகரித்த பிறகும் கூட மாநில ஆளுநர் அந்தக் கருணைமனு மீது முடிவெடுக்கலாம். மேலும் குடியரசுத்தலைவரோ ஆளுநரோ இதுதொடர்பாக்ச் சுயேச்சையாக முடிவெடிக்க முடியாது, மத்திய, மாநில அமைச்சரவைகளின் வழிகாட்டுதலின்படியே எடுக்க முடியும்’ என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தும் எஸ்.வி.ராஜதுரை அதற்கு உதாரணமாக இரண்டு உச்சநீதிமன்ற முடிவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். ((MataRam vs Union of India (1981) 1SCC 107; Kehar Singh vs Union of India (1989) 1 SCC 204)

‘குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணைமனு மீது மாநில அரசு தலையிட முடியாது’ என்பதற்கான காரணமாக ஜெயலலிதா ஒரு கடிதத்தைச் சுட்டிக்காட்டினார். 1991, மார்ச் 5 அன்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதமே அது. ஆனால் ‘இந்தக் கடிதம் என்பது நிர்வாகம் தொடர்பான ஆணையே அன்றி அரசியல் சட்டத்தைப் போல இறுதிப்படுத்தப்பட்ட அதிகாரம் அல்ல’ என்று வாதிடுகிறார் எஸ்.வி.ஆர். மேலும் இந்தக் கடிதம் எழுதப்பட்ட பின்னணியை அறிந்துகொண்டாலே மத்திய அரசின் இந்தக் கடிதம் எத்தகைய அதிகார வரம்புகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

1965ல் பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப்சிங் கெய்ரோனைக் கொலை செய்ததாகத் தயாசிங் என்பவர் கைது செய்யப்பட்டவர். 1978ல் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. 1980ல் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. அவரது கருணைமனுக்களும் ஆளுநராலும் குடியரசுத்தலைவராலும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இதற்கிடையில் பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் அமைக்கப்பட்டிருந்தது. 1988ல் தயாசிங் ஹரியானா ஆளுநருக்கு அனுப்பிய கருணைமனுவின் அடிப்படையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அலிப்பூர் சிறைக்கைதி ஒருவர் தயாசிங்கை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டி 1990ல் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதுகிறார். இதையே ரிட் மனுவாகக் கொண்டு உச்சநீதிமன்ற பெஞ்ச் தயாசிங் வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. அப்போதுதான் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் கடிதத்தை மத்திய அரசு உச்சநீதிமன்ற பெஞ்சு முன் சமர்ப்பித்தது. ‘குடியரசுத்தலைவரால் கருணைமனு நிராகரிக்கப்பட்ட பிறகு அதில் மாநில ஆளுநர் தலையிட முடியாது’ என்றும் தெரிவித்தது. ஆனால், உச்சநீதிமன்ற பெஞ்ச் அந்தக் கடிதத்தைப் பொருட்படுத்தவேயில்லை. 1991ல் தயாசிங்கின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஜெயலலிதா ‘மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்பதற்கான ஆதாரமாகச் சுட்டிக்காட்டும் கடிதத்தின் பின்னணியில் உள்ள வழக்கிலேயே மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 2000ல் கருணாநிதி ஆட்சியின்போது பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டதையே காரணமாகக் காட்டி மீண்டும் மீண்டும் ஜெயலலிதா பல்லவி பாடுவதும் சரியானது அல்ல. ஏனெனில் ‘குடியரசுத்தலைவராலும் ஆளுநராலும் கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் மாறிய சூழ்நிலைமைகள் அடிப்படையில் மீண்டும் குடியரசுத்தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் கருணைமனுக்கள் அனுப்பலாம்’ என்பதற்கும் தயாசிங்கின் வழக்கே உதாரணம். ஒருவேளை மூவரும் தங்கள் மரணதண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளாவிட்டாலும் அரசியல் சட்டப்பிரிவு 54ன்படி மாநில அரசு தண்டனையைக் குறைக்க சுயேச்சையாக முடிவெடுக்கலாம். புலவர் கலியபெருமாள் கருணைமனு அனுப்பாதபோதும் தமிழக அரசு முன்வந்து அவரது மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியதே இதற்குச் சிறந்த முன்னுதாரணம்.

‘மாநில அரசாங்கமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் அது மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே மாநில அமைச்சரவை முடிவின்படி மரணதண்டனையை ரத்து செய்ய மாநில ஆளுநருக்கு உள்ள அதிகாரமும் இறையாண்மை அதிகாரம்தான்’ என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு ((2003(7)SCC 121) கூறுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள ‘வகுப்புவாதத் தடுப்பு மசோதா’ மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பதாக மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா, மரணதண்டனையைக் குறைப்பதிலும் மாநில அரசின் உரிமையை வலியுறுத்த வேண்டும். மாறாக, மத்திய அரசு எழுதியுள்ள ஒரு கடிதத்தையே அடிப்படையாக வைத்து தன் பொறுப்பையும் அதிகாரத்தையும் உரிமையையும் தட்டிக்கழிப்பது சரியல்ல என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சுட்டிக்காட்டுகிறார் எஸ்.வி.ஆர்.

எனவே உடனடியாக ஜெயலலிதா பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தானாகவே மரணதண்டனையை ரத்துசெய்யும் தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இன்று நாம் வலியுறுத்த வேண்டிய கோரிக்கை.

1 comment:

Anonymous said...

இதே வாதங்களை முன்வைத்தே பியுசில் தமிழ்நாடு கிளையின் செயலர் முனைவர் வி.சுரேஷ் முதல்வருக்கு கடிதமெழுதினார்.மத்திய அரசோ அல்லது சு.சாமி போன்ற யாரோ மாநில அரசு மரண தண்டனையை குறைக்க முடியாது,அதிகாரமில்லை என்று வாதிட்டால் அல்லது வழக்குத் தொடர்ந்தால் நிலைமை சிக்கலாகும்.தீர்ப்பில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டால் என்ன செய்வது.
இதைத் தெரிந்தே ஜெயலலிதா அந்த முடிவை எடுக்கவில்லை.

இந்த அதிகாரத்தை பயன்படுத்தி கருணாநிதி ஏன் மரணதண்டனையை குறைக்கவில்லை.அப்போது (2006-2011) அம்மூவரும் அவ்வாறு கோரினார்களா.அப்போது எஸ்.வி.ராஜதுரை என்ன செய்து கொண்டிருந்தார்.

மூவரும் தூக்கில் போடப்படக் கூடும் என்றவுடன் மரணதண்டனை ஒழிப்பு இயக்கம் என்று தீடீரென ஒன்று முளைப்பது என்பதெல்லாம் வேடிக்கையாக இல்லையா.எந்த ஒரு தெளிவான திட்டமும் சிந்தனையும் இன்றி எதையாவது எழுதுவோம் அல்லது எதையாவது செய்வோம் என்ற அணுகுமுறைதான் இருக்கிறது.

சு.சாமி என்கிற ஒரு நபர் வழக்குப் போட்டால் அதை எதிர்த்து நளினியின் தண்டனை குறைப்பு/விடுதலை நியாயமானது, மாநில அரசு அதைச்
செய்யமுடியும் என்று ஒரு பெரும் இயக்கம் நடத்தாதவர்கள் இப்போது தூக்கு தண்டனை நிறைவேறிவிடும் என்ற அச்சத்தில் எதையெதையோ செய்கிறார்கள்.நளினின் விடுதலைக் கோரிக்கையை நிராகரித்தது யார். மாநில அரசு. அத்துடன் அந்தக் கோரிக்கையை கைவிட்டுவிட்டார்கள்.
அப்போது எந்த ஒரு கிளர்ச்சி/இயக்கம் அதை வைத்து செய்யாமல் வெறும் கையெழுத்து இயக்கம்,முதல்வரை சந்த்தித்து மனு கொடுப்பது என்றுதான்
செயல்பட்டார்கள்.சு.சாமி வழக்கு தொடர்ந்தால் அதில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கூட கோரவில்லை.

இடைக்காலத் தடை,பின்
மேல்முறையீடு என்று ஆன பின் மரணதண்டனை ஒழிப்பு பற்றி பேசவே மாட்டார்கள்.மூப்பனார் பேரவை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்
கோருகிறார்கள்.அது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளது.
அப்படி மாற்றப்பட்டால் என்ன செய்வீர்கள்.

ஜெயலலிதாவை குறை கூறி பயனில்லை,கோளாறுகள் உங்கள் தரப்பில் இருக்கிறது.