Monday, November 30, 2009

சாருநிவேதிதாவின் புன்னகை


''சாலையில் செல்லும் போது அந்தச் சாலையில் நீங்களும் இன்னொருவரும் மட்டுமே இருந்தால் அவரைப் பார்த்து புன்னகை புரிவது மரபு. அல்லது, ஒரு இடத்தில் காத்திருக்கிறீர்கள். அங்கே இன்னொருவர் வந்து உங்கள் அருகில் அமர்கிறார். அவரைப் பார்த்துப் புன்னகைக்கிறீர்கள். அல்லது, ஒரு பஸ்ஸில் ஏறி நடத்துனரிடம் டிக்கட் கேட்கும் போது நட்புடன் புன்னகை செய்கிறீர்கள். அல்லது... வேண்டாம். அடுத்த மனிதரைப் பார்த்து புன்னகை செய்ய இந்த உலகத்தில் ஆயிரக் கணக்கான தருணங்களும் சூழ்நிலைகளும் இருக்கின்றன. சரியா? நான் அப்படிப்பட்ட தருணங்களில் புன்னகை செய்யும் போது மற்றவர்கள் என்னை மிக விரோதத்துடனும், விநோதமாகவும், ஏதோ ஒரு காட்டுமிராண்டியைப் பார்ப்பது போலவும்தான் பார்த்திருக்கிறார்கள். எனக்கு அதன் காரணம் புரியவில்லை. நண்பர்களிடம் கேட்டபோது “பைத்தியங்கள்தான் அப்படிச் சிரிக்கும் ” என்றார்கள். எனக்கு அவர்கள் சொன்னதில் உடன்பாடு இல்லை."



சாருவின் இந்த வரிகளைப் படிக்கும்போது தானாகவே கொசுவர்த்தி பற்றவைத்து புகைந்தது. ஒரு சின்ன பிளாஷ்பேக். இந்த சம்பவம சாருவிற்கு இப்போது நினைவிருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் அப்போது எனக்கு 21 வயதுதான். சாருநிவேதிதா என்றால் எனக்கு யார் என்றே தெரியாது. சாருவிற்கும் என்னைப் பரிச்சயமில்லை. 1999 - கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டு விளிம்பில் உள்ள களியக்காவிளை என்னும் ஊரில் பறணியறத்தலவிளை என்னும் பகுதியில் இரண்டுநாட்கள் இலக்கியக்கருத்தரங்கு ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடு செய்தவர்கள் வானவில் இலக்கிய வட்டத்தினர். அவர்கள் சார்பாக ‘கேப்பியார்’ என்னும் இலக்கிய இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. இன்று தொழிலதிபர்களையும் சினிமாநட்சத்திரங்களையும் மட்டுமே தெரிந்த புதிய எழுத்தாளர்களுக்கு கேப்பியார் என்ற இதழ் பற்றி தெரியுமா என்று தெரியவில்லை. பெரியாரியம், தலித்தியம், பின்நவீனம் ஆகிய கோட்பாட்டு அடிப்படைகளைக் கொண்டு இயங்கிய இதழ். ஆசிரியர் கே.புஷ்பராஜ். அதுவே கேப்பியார். அந்த குழுவில் முக்கியமானவர் எழுத்தாளர் குமாரசெல்வா.

‘குறுவெட்டி’ போன்ற பல அற்புதமான சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்த குமாரசெல்வா போதிய அளவு கவனம் பெறாத எழுத்தாளர். அதை விட முக்கியமாய், சிங்கத்தின் குகைக்குள்ளேயே பிடரியைப் பிடித்தாட்டுவதைப் போல, சுந்தரராமசாமி கும்பலின் உள்ளொளி தகிடுதத்தங்களுக்கு எதிராய் நாகர்கோவிலில் தொடர்ச்சியாகப் போராடி வந்த தோழர்கள். கேப்பியாரும் ஜே.ஆர்.வி எட்வர்டும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காலத்தின் கோலம், சமீபத்தில் குமாரசெல்வாவின் சிறுகதைகள் காலச்சுவடு தொகுப்பாய் வந்ததைப் பார்க்க மனது வலித்தது. ஆனால் அப்போதைய நாகர்கோவில் கூட்டங்களில் காலச்சுவடு ஆதரவாளர்களாய் வந்து கச்சைகட்டுபவர்கள் லெட்சுமிமணிவண்ணனும் சங்கரராமசுப்பிரமணியனும். அவர்கள் இருவரும் இப்போது காலச்சுவடு எதிரிகள். வரலாறு வினோதமானதுதான்.

சரி விடுவோம். நான் சொல்ல வந்தது அதுவல்ல. எனக்கு அந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன்புவரை நவீன இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் அண்ணா, கலைஞர், வைரமுத்து, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எண்டமூரிவீரேந்திரநாத், சு.சமுத்திரம், பிரபஞ்சன். நவீன இலக்கியம் என்ற ‘நிழல் உலகத்தை’ எனக்கு 99வாக்கில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் யவனிகாசிறீராமும் செல்மாபிரியதர்சனும். எந்த வாசிப்பும் பரிச்சயமும் இல்லாமல்தான் அந்த களியக்காவிளைக் கூட்டத்திற்குச் சென்றது.

முதல்நாள் முழுக்க கள்ளும் அயல்நாட்டு மதுவும் மாட்டுக்கறியும் மீனும் இலக்கிய விவாதமும் நடு இரவில் அ.ராமசாமியை வம்பிழுத்து செல்மா போட்ட ஆட்டமுமாகப் பொழுது போனது. எனக்கு அப்போது இரண்டு ‘கெட்ட பழக்கங்கள்’ இல்லை. குடித்தும் பழகியதில்லை, வாசித்தும் நவீன கவிதை எழுதியும் பழக்கமில்லை. வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தேன். அந்த கூட்டத்திற்கு வருவார் என்று பல இளைஞர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அ.மார்க்ஸ் வரவில்லை. வந்தது பொ.வேல்சாமி மட்டுமே.

இரண்டாம்நாள் அமர்வு. அந்த மதிய அமர்வில்தான் ‘சீரோடிகிரி’ விமர்சனம். என் அருகில் வந்து அமர்ந்த நபர் அழகாய் இருந்தார். பார்த்தவுடனே பழக வேண்டும் என்பதான தோற்றம். சினேகபூர்வமான முகம். அவரை யாரென்றே தெரியாவிட்டாலும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவரும் புன்னகைத்தார். அவர் சாரு. அவரது ‘சீரோடிகிரி’ புத்தகத்தை மேடையில் விமர்சித்துக்கொண்டிருந்தார் ஒரு எழுத்தாளர். பூக்கோ தொடங்கி பல்வேறு கோட்பாடுகள் அடிப்படையில் சீரோடிகிரியை எப்படி வாசிக்கலாம், அணுகலாம் என்பதாய் இருந்தது அவரது உரை. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

திடீரென்று கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து ‘‘அதெல்லாம் இருக்கட்டும், அந்த நாவலோட கதைச்சுருக்கத்தைச் சொல்லுங்க’’ என்றார். சீரோடிகிரியைப் படித்தவர்களுக்குத் தெரியும், அது எவ்வளவு காமெடியான கேள்வி என்று. ஏனெனில் சீரோடிகிரி ஒரு நான்லீனியர் நாவல். நாவலின் கட்டமைப்பை உடைக்கும் கதையற்ற கதை. அதை மெகாசீரியலில் முன்கதைச்சுருக்கம் சொல்வதைப் போல சொல்ல முடியாது. மேடையில் பேசிக்கொண்டிருந்த விமர்சகருக்கு வந்ததே கோபம். கூட்டத்தில் ஆங்காங்கு குழப்பம். அப்போது கடுமையான விவாதத்தில் ஈடுபட்டிருந்த நபர்களில் கவர்ந்தவர் ராஜன்குறை.

பங்க் முடியும், பெர்முடாஸ§மாக வினோதமான தோற்றத்தில் ஆக்ரோஷமாக விவாதித்துக்கொண்டிருந்தார் ராஜன்குறை. அப்போதைய இலக்கியச்சூழலில் சாருவின் பெயர் ‘பெர்முடாஸ் கலகக்காரர்’ என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். ஆனால் அன்றையக் கூட்டத்தில் பெர்முடாஸ் கலகக்காரர் ராஜன்குறைதான். சாரு ஜீன்ஸ் அணிந்திருந்ததாக ஞாபகம். பிறகு, ராஜன்குறை தனது உரையைத் தொடங்கும்போது கே.ஏ.குணசேகரனின் இந்த பாடலைப் பாடினார்,

‘‘ஒரு காலத்திலே
பகல் வேளையிலே
பொதுவீதியிலே - நாங்க
நடக்கவே முடியவில்லே!
எங்க பாதம் பட்டா
பொதுவீதியெல்லாம் - தீட்டு
பட்டுவிடும் என்பதாலே! - இடுப்பிலே
துடைப்பம் கட்டிக்கொண்டால்- நாங்க
நடக்கலாம் என்கிறநிலை!

இந்த கொடுமையைச் செஞ்சது இந்துமதம் -அதைக்
குழிதோண்டிப் புதைக்கணும் அவசியம்!’’.

சமீபத்தில் இரண்டு மூன்று விழாக்களில் ராஜன்குறையைப் பார்த்தபோது அவரது பங்க் முடி, பழைய தோற்றம், இளமைத்துடிப்பு எல்லாம் காணாமல் போயிருந்தன. அந்த கூட்டத்தில் அறிமுகமான இன்னொரு நபர் மதுரை மோகன். ஒரு மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் பணிபுரிந்து பின்பு அதிலிருந்து விலகிய மோகன் மனச்சிதைவுக்கு உள்ளாகியிருந்தார்.

மதுரையில் புத்தகக்கடை நடத்திவந்த மோகன், கஞ்சாவிற்கு அடிமையாகியிருந்தார். கஞ்சாவும் மதுவும் இலக்கியமும்தான் மோகனுக்குப் போதை. பழகியபிறகு மோகனைச் சந்திக்கும்போதெல்லாம் கைகளைப் பற்றி, ‘‘சிவா, நல்லாயிருக்கீங்களா?’’ என்பார். அது சாதாரணமான நலம் விசாரிப்பாக இருக்காது. முதல்முதல் பார்க்கிற பரவசமும் அளவுக்கு அதிகமான கரிசனமும் பதட்டமும் கொண்டதாக இருக்கும் அந்த கைகுலுக்கலும் விசாரிப்பும். அய்ந்து வருடங்களுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார் மோகன். அந்த மோகன்தான் அன்று களியக்காவிளையில் குடி மற்றும் கஞ்சா போதையில் அரற்றிக்கொண்டிருந்தார்.

நாங்கள் நிகழ்ச்சி முடித்து ஊருக்குக் கிளம்பிய நேரத்தில் மோகனின் அரற்றல் இன்னும் அதிகமானது. ஒரு குழந்தையைப் போல அரற்றிக்கொண்டிருந்த மோகனை ஒரு தாயைப் போல தேற்றிக்கொண்டிருந்தவர் சாருநிவேதிதா. எல்லாம் முடிந்து எங்களை வழியனுப்பும்போது, சாருநிவேதிதா என்னைப் பார்த்துக் கேட்டார், ‘‘என்னைப் பார்த்து சிரிச்சீங்களே, என்னைத் தெரியுமா? எப்படி புன்னகைத்தீங்க?’’. ‘‘தெரியவில்லை’’ என்றேன்.

15 comments:

யுவகிருஷ்ணா said...

உங்கள் அனுபவம் வாசிக்கும் ஒவ்வொருவரின் அனுபவமாய் மாறி போகிறது. எப்போதாவதாவது இதுபோல எழுதலாம் தானே?

Ashok D said...

:)

ஒளிவெள்ளத்தில் க‌திர‌வ‌ன் said...

சுகுணாதிவாகர்..

கடந்த கால நிகழ்வுகளை அசைபோடுதல் எப்போதுமே சுவையானதுதான். அதனை மற்றவர்களுக்கு சொல்வது, எழுதுவது என்பது சுவாரசியமானதாக மாறக்கூடியதே.
ஆனால் ஒரு நிகழ்வினை பற்றி சொல்லும்போது யாரையாவது புகழ்ந்து சொல்வதும் அல்லது தான் அந்த அணியினர் எனக்காட்டிக்கொள்ளுமிதமான பதிவுகள் பதியப்படுவது தமிழ் இலக்கியவாதிகள் எடுத்துவரும் அன்றைய இன்றைய நிலைப்பாடு.

ஆனால் கட்டுடைக்கிறேன் கசக்கிபுழிகிறேன் என மார்த்தட்டும் உங்களை போன்றோரிடம் இதை எதிர்பார்க்கவில்லை. நீங்களும் நானும் ஒருவிசயத்தில் ஒத்துபோனோம் அது இயக்குனராய் இருந்து தோழராக மாறி இன்று தமிழராகவும் நாளை போராளியாகவும் அதற்கடுத்தநாள் புரட்சியாளராகவும் உருவெடுக்கிற சீமானின் தேவர் விஜ்யம் நிகழ்வில்.

சரி. விசயத்திற்கு வருவோம். களியாக்காவிளை நிகழ்ச்சியில் அன்பின் வடிவம் ஆண் தெரசா சாருவை பற்றி பாதியை எழுதிவிட்டால் எப்படி.. அன்புகுழந்தை சாரு இரவு செய்த அன்பு லூட்டிகளை பற்றி யாரும் உங்களுக்கு சொல்லவில்லையா..இரவு அவர் தங்கியிருந்த அறையில் அவரின் வரம்புமீறலால் தான் ஏற்பாடு செய்யும் கடைசி இதுதான் என குமாரசெல்வா நொந்துபோனதை உங்களுக்கு சிறீராம் செல்மா போன்ற உங்கள் நண்பர்கள் சொல்லவில்லையா.

இப்போது ஒன்றும் மோசமில்லை. கேட்டுவிட்டு பதியுங்கள் காத்திருக்கிறோம்.

அன்புடன்.
கதிரவன்

வால்பையன் said...

இன்னும் பல மோகன்கள் இருக்குறாங்க!

பகிரத்தான் மனசு கஷ்டமா இருக்கு!

சுகுணாதிவாகர் said...

கதிரவன்,

நீங்கள் யாரென்று தெரியவில்லை. களியக்காவிளையில் சாரு செய்த 'இரவு அத்துமீறல்கள்" குறித்து எனக்கு ஒன்றும் தெரியவில்லையே. அதை நீங்களே எழுதலாமே.

நர்சிம் said...

மிக நல்ல நடையில் சூழலுக்குள் இட்டுச்சென்ற இந்த பதிவு மிகப் பிடித்திருந்தது.

ரவி said...

குட் கோயிங்.............

ஒளிவெள்ளத்தில் க‌திர‌வ‌ன் said...

யாரென்று தெரியவில்லை. களியக்காவிளையில் சாரு செய்த 'இரவு அத்துமீறல்கள்" குறித்து எனக்கு ஒன்றும் தெரியவில்லையே. அதை நீங்களே எழுதலாமேயே. அதை நீங்களே எழுதலாமே//

பரவாயில்லை சுகுணா இத்தனை தகவல்கள் தெரிந்திருக்கும் உங்களுக்கு அந்த விஷயம் தெரியாது என நீங்கள் சொல்வதை நான் நம்பிவிட்டேன்.

இதன் வேறுமுகத்தைத்தான் சுந்தரராமசாமி குழு பண்றாள்

சுகுணாதிவாகர் said...

தோழர்,

உண்மையிலேயே எனக்கு அப்போது இலக்கியவாதிகள் குறித்த விபரம் தெரியாது.

வால்பையன் said...

//பண்றாள் //

சிலேடையை ரசித்தேன்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

interesting!

கவுச்சி said...

சுகுணா,

நிச்சயமாக உங்களிடமிருந்து இப்படியொரு அபத்தமான பதிவை எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கான எதிர்வினை எழுதியுள்ளேன். 'சுகுணாதிவாகர், அடுத்த நர்சிமா நீங்கள்?'. படியுங்கள்.

Kavin Malar said...

நீங்கள் சொல்லியிருப்பது போல் அந்தப் பாடல் கே.ஏ.ஜியின் பாடல் அல்ல. தலித் சுப்பையா எழுதிய பாடல். கே.ஏ.ஜி அதை மேடைகளில் பாடினார். அவர் மூலமாகவே ”தொட்டாலே ஒட்டிக்கிடுமா..?” என்ற அந்தப் பாடல் என் போன்றவர்களுக்கு அறிமுகம் ஆனது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். வாசிப்பவர்கள் அது ஏதோ கே.ஏ.ஜி யே எழுதிய பாடல் என்று நினைத்துக் கொள்வார்கள்.

Anonymous said...

****அந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன்புவரை நவீன இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது***

****உண்மையிலேயே எனக்கு அப்போது இலக்கியவாதிகள் குறித்த விபரம் தெரியாது***

இப்ப மட்டும் என்னவாம்? ஏன்யா இந்தா பில்ட்-அப்பு? முன்னயும் வெத்து இப்பவும் வெத்துதானே?

Xavier said...

1997 வரை கேப்பியாரின் களியக்காவிளைக்கு அருகே நடக்கும் ( பனங்காலையில்) வாராந்தர இலக்கியக் கூட்டங்களில் அடியேனும் உண்டு. குமார செல்வா எனும் செல்வகுமார், திளாப்பு – ஜேடிஆர், என வெளிச்சத்துக்கு வெகு அருகில் இருந்தும் இருட்டாகவே இருக்கும் ஏராளமானோர் அந்த குழுவில் உண்டு. புஷ்பராஜ் அந்த இதழை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடத்தினார் என்பதெல்லாம் தனிக் கதை. குமரி மாவட்ட இலக்கியவாதிகளைப் போல ஏழ்மையிலும் இலக்கியம் செய்பவர்கள் எங்கெல்லாம் உண்டென்று தெரியவில்லை. இலக்கியத்தை வளர்க்க மாட்டை விற்பதும், மரங்களை விற்பதுமெல்லாம் அங்கு சகஜம். சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது கேப்பியார் குழுவில் இருந்த ஒரு நண்பர் ஒரு சிறுகதைத் தொகுப்பை நீட்டினார். பெயர் “செம்புலவருணி” அவர் அந்த நூலை வெளியிட பட்ட கஷ்டத்தை ஒரு நாவலாகவே எழுதலாம்… ம்ம்.. திரும்பிப் பார்த்தல் சுகமானது, வலித்தாலும் கூட…