Wednesday, May 12, 2010

நிறப்பிரிகையின் தொடர்ச்சியாய் லும்பினி

தொண்ணூறுகளில் வெளிவந்த ‘நிறப்பிரிகை’ தமிழில் மாற்றுகள், சோசலிசக் கட்டுமானம், மனித உரிமைகள், பெரியாரியம், பின்நவீனம், தீவிரப்பெண்ணியம், தலித்தியம் ஆகியவை குறித்த உரையாடல்களைத் தொடங்கி வைத்தது. அதுகாறும் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் இடையிலிருந்த ‘உத்தப்புரம் சுவர்’ ஒன்றை உடைத்துத் தகர்த்தது. ஏராளமான ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் நிறப்பிரிகையின் மூலம் ஊக்கம் பெற்று எழுதத் தொடங்கினர். அத்தகைய நிறப்பிரிகையின் தொடர்ச்சியாக ‘லும்பினி’ என்னும் இணையதளத்தை நண்பர்கள் ஆரம்பித்திருக்கின்றனர். சரியாகவோ, தவறாகவோ, பல விமர்சனங்களுக்கு இடையில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக தத்துவம் மற்றும் அரசியல் தளங்களில் இயங்கி வருகிற அ.மார்க்ஸ், முதன்முதலாக இணையத்திற்காக எழுதத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. (அவர் இணையத்தில் எழுதவில்லை என்பதையும் அது ஏன் என்பதையும் அவரே ‘லும்பினி’யில் விளக்கியிருக்கிறார்.) நேபாளத்தில் இந்தியாவின் விரிவாதிக்க நோக்கங்கள், மாவோயிஸ்ட்கள் சந்திக்கும் சவால்கள், மாவோயிஸ்ட்களுக்குப் பின்னால் சீனா இருப்பதான குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து ‘எகானமிக்கல் அண்ட் பொலிடிகல் வீக்லி’யின் ஆசிரியர் கவுதம் நவ்லக்காவுடன் அ.மார்க்ஸ் நிகழ்த்தியுள்ள நேர்காணலும் ரணஜித் குகாவின் எழுத்துகளைத் தழுவி, தெலங்கானா போராட்டம் குறித்து ஒரு விளிம்புநிலை ஆய்வுநோக்குக் கட்டுரை ஒன்றையும் அ.மா எழுதியிருக்கிறார். ‘இருப்பு’ என்னும் சொல்லுக்குப் பதிலாக நாகார்ஜுனன் அறிமுகப்படுத்தும் ‘உள்ளுமை’ என்னும் சொல் எவ்வாறு பொருத்தமற்றதாயும் போதாமையுடனும் இருக்கிறது என்பதை விவாதிக்கிறது ராஜன்குறையின் கட்டுரை. ‘நான் ஏன் திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறேன்?’ என்னும் ஜெயமோகனின் கட்டுரைக்கு மறுப்பாக அமைந்துள்ள பொதியவெற்பனின் கட்டுரைத் தொடர் தமிழவன் மற்றும் ஜெயமோகனுக்கு இருக்கும் ‘திராவிட இயக்க வெறுப்பு நோய்’ குறித்த மருத்துவ அறிக்கையாக அமைந்திருப்பது புது உத்தி. கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்களின் கண்டன ஒன்றுகூடல் நிகழ்வுப்பதிவும் அக்கூட்டத்தில் நடந்த கலாட்டா குறித்த விமர்சனக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் இனப்படுகொலை முடிந்து ஓராண்டு நெருங்கும் வேளையில் சிங்களப்பேரினவாதத்தின் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது ஷோபாசக்தி மற்றும் சேனனின் கட்டுரைகள். இந்திய வணிகத்திலிருந்து தலித்துகள் விலகியிருக்கிற/விலக்கி வைக்கப்பட்டிருக்கிற அவலம் குறித்து ஆராய்கிறது யவனிகாசிறீராமின் கட்டுரை. செல்மாபிரியதர்சனின் படைப்புலகம் குறித்த ரசூலின் கட்டுரை, ரமேஷ்பிரேதன், த.அகிலன். கொற்றவை, லீனாமணிமேகலை, கு.உமாதேவி , இசை, தர்மினி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. 80களில் கொங்கு வட்டாரத்தில் புழக்கத்திலிருந்த ‘பத்து ரூபாய்க்கு இரண்டு தீக்குச்சியை எரிய வைத்து பெண்ணின் நிர்வாணத்தை ரசிப்பது’ என்னும் பழக்கம் குறித்து நுட்பமாக விவரிக்கிறது ஸ்நேகிதனின் சிறுகதை. இளங்கோகிருஷ்ணனின் ‘நீலப்பூ’ சிறுகதை ஒரு குறியீட்டுக்கதை. எல்லாவற்றுக்கும் மேலாக ‘நிறப்பிரிகை’ இதழ்கள் இணையத்தில் ஏற்றப்பட்டிருப்பது கோட்பாட்டு விவாதங்களைத் தொடர்ந்து செல்ல உதவும் என்று நம்புகிறேன். ஒரு கனமான காலாண்டிதழைப் போலவே ‘லும்பினி’ அமைந்திருப்பது உவப்பு நல்குகிறது. வெறுமனே எதிர்வினைகள், பரபரப்புக் கட்டுரைகள் வெளியிடும் இணையதளங்களிலிருந்து விலகி, காத்திரமான சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது, விவாதிப்பது ஆகியவற்றை ‘லும்பினி’ தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர்கள் ஷோபாசக்தி, வசுமித்ர மற்றும் சி.மீனா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இணையதள முகவரி www.lumpini.in

1 comment:

Ashok D said...

பகடியும் கலந்திருந்தால் நன்று...