Friday, July 11, 2008

பதில்கள் + ?கள்

கேள்விகளுக்கு நன்றி ஆடுமாடு.

1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)


முதலில் உதாரணத்தின் அடிப்படையில். முதலாவதாக அங்கு இலக்கிய மோதல் நடக்கவில்லை. சங்கரராம சுப்பிரமணியன், விக்கிரமாதித்யன், லட்சுமிமணிவண்ணன் ஆகிய மூன்று கவிஞர்களும் எழுத்ய கூட்டுக்கவிதைகள் ஈராக் மக்களுக்கு எதிரானதென்றும் ஈராக் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது என்றும் கருதிய ம.க.இ.க தோழர்கள் அவற்றிற்கெதிராக துண்டறிக்கைகளை வினியோகித்தார்கள். இலக்கியங்களுக்கெதிராகப் 'பிட்நோட்டீஸ் அடிக்கக்கூடாது' என்றோ 'புத்தகம் எழுதக்கூடாது' என்றோ சொன்னால் அண்ணாவின் 'கம்பரசத்தை'ப் பாசிசமாக அடையாளப்படுத்தலாம். ஆனால் பிரச்சினை என்னவெனில், புதிதாய் அப்போதுதான் மணமுடித்த சங்கரின் வீட்டுக்குள் புகுந்து தோழர்கள் நோட்டிஸ் வினியோகித்தது, அவரது மனைவியையை மிரளச்செய்தது, அக்கம்பக்கத்து வீட்டாரிடையே சங்கர் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்கியது என்பது இலக்கியவாதிகளின் குற்றச்சாட்டு.

கவிஞர்களிடமிருந்து மிரட்டிக் கையெழுத்து வாங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை ம.க.இ.க தோழர்களிடம் (தனிப்பட்ட முறையில் பேசும்போது) மறுத்தார்கள். சங்கர் எழுதிய கவிதைக்காக அவர் வீட்டாரைக் கலவரப்படுத்துவது என்பது தவறுதான். ஆனால் அதற்காக எழுத்தாளர்களுக்கென்று எந்த சமூகப்பொறுப்புமே தேவையில்லையா என்ன?

உங்கள் அடிப்படையான கேள்விக்கு வருவோம். 'இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா?' என்கிற கேள்வி கேட்கப்படவேண்டிய நபர்கள் ம.க.இ.க போன்ற புறச்சக்திகள் அல்ல, உண்மையில் இலக்கியவாதிகளிடம்தான் இந்தக் கேள்வி எழுப்பப்படவேண்டும். சங்கருக்கு ஆதரவாக, வன்முறைக்கு எதிர்ப்பாக இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் அதே வன்முறையைச் சக இலக்கியவாதிகளின் மீது (நேரடியாகவும், எழுத்து வழியாகவும்) செலுத்தத் தயங்கமாட்டார்கள். அதாவது எழுத்தாளனை வீடுபுகுந்து அடிப்பது, வக்கீல் நோட்டீஸ் விடுவது, போலீஸ் ஸ்டேசனில் புகார்கொடுப்பது, அடித்து உதைப்பது, செருப்பைத் தூக்கிக் காட்டுவது போன்ற அனைத்து 'உரிமைகளும்' இன்னொரு சக இலக்கியவாதிக்குத்தான் உண்டே தவிர இதில் 'அன்னியர் பிரவேசிக்க' அனுமதியில்லை. வாழ்க கருத்துச் சுதந்திரம்!

3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?

பொதுவாக நாம் இப்போது பயன்படுத்தும் 'எழுத்துத்தமிழ்' என்பது பல வட்டார வழக்குகளின் அடையாளங்களின் மீதேறி ஒற்றைப்படுத்தும் பாசிச வடிவமே. 19ம் நூற்றாண்டுப் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தால், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்டதே இந்த 'பொதுத்தமிழ்'. இந்த ஒற்றைத்துவ முயற்சிக்கு எதிராக தமிழின் பன்மைத்துவக் கூறுகளை அடையாளப்படுத்தவும், 'இங்கு தமிழ் இல்லை, தமிழ்கள்தான் உண்டு' என்று அ.மார்க்ஸ் அடிக்கடி சொல்வதைப் போல தமிழின் ஒற்றை அடையாளத்தை மறுக்கும் முயற்சியாகவே வட்டாரவழக்கின் அடிப்படையிலான இனவரைவியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய இரண்டு அம்சங்கள் வட்டாரவழக்கு என்பதும் ஒருபடித்தானதல்ல, கோவை வழக்கு என்பதில் கவுண்டர் வழக்கிற்கும் அருந்ததியர் வழக்கிற்கும் பறையர் வழக்கிற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

அதேபோல் இதுவரை கவிதைகளும் கதைகளுமே வட்டார வழக்கில் வந்திருக்கின்றனவே தவிர தமிழில் எழுதப்படும் அனைத்துக்கட்டுரைகளும் 'மய்யத்தமிழையே' பிடித்துத் தொங்குகின்றன.

4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...

மகாஸ்வேதாதேவியின் '1084ன் அம்மா'. மேற்கு வங்காளத்தில் பூர்சுவாவாகப் பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து போலிசாகச் சுட்டுக்கொல்லப்பட்ட ப்ரீதி என்னும் இளைஞனின் அம்மாவின் நினைவுகள், உணர்வுகள். மேட்டுக்குடியினரின் போலித்தனம், ஒரு சமூகப்போராளியைத் தாய் எப்படிப் புரிந்துகொள்கிறாள் என்பது குறித்த வேறு நோக்கு. பின்னுரையில் வ.கீதா குறிப்பிடுவதைப் போல 'துயரத்திற்கு மாற்றாய் நீதி'யை முன்வைக்கிறது நாவல்.

2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். சமீபகாலமாகச் சுய இன்பம் செய்யவில்லை.

இனி ஜமாலனுக்குச் சில கேள்விகள்

1. ராமானுஜத்தின் 'காந்தியின் உடல் அரசியல்' விமர்சனக்கட்டுரையில் (தீராநதி)சமணம் இந்துமதத்தின் ஓரங்கமாகவே மாறிப்போனதையும் அதற்கான கூறுகள் அதன் இயல்பிலேயே அமைந்துள்ளதையும் மாற்றத்தை ஏற்காத அதன் தன்மை குறித்தும் விளக்கிக் காந்தியைச் சமணமரபில் பொருத்தி நீங்கள் கூறுவது சரியானது என்றே கருதுகிறேன். அதேபோல் பெரியாரைப் பவுத்தமரபில் பொருத்திச் சொல்ல இயலுமா?

2. தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து...

3. ஆங்கிலம் தெரிந்தால்தான் பின்நவீனத்தைப் புரிந்துகொள்ள இயலுமா?

4. 'சாரு தன் பக்கத்தில் என் வலைப்பூ பற்றிக் குறிப்பிட்டதால் 10 கோடி ஹிட்ஸ் வந்தன' என்று புல்லரிக்கும் பதிவர்கள் குறித்து...

7 comments:

கே.என்.சிவராமன் said...

சுகுணா,

பதில்கள் வழக்கம் போல் உங்கள் பாணியில் இருக்கிறது. வாழ்த்துகள்.

ஒரு தகவலுக்காக...

நண்பர் ஜமாலன், ஒருமாத விடுமுறையில் இருக்கிறார்... சென்னைக்கும், கும்பகோணத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்... நடுவில் நம்மையும் சந்திப்பதாக சொல்லியிருக்கிறார்... கச்சேரி உண்டு :) எனவே 24 மணி நேரத்துக்குள் அவரால் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை...

Ayyanar Viswanath said...

பதில்கள் நன்று.மய்யத்தமிழில்லாத கட்டுரைகள் குறைவாகவே வந்திருக்கின்றன என்பது சரியாய் இருக்குமா?

ஜமாலனுக்கான கேள்விகள் விரிவான பதில்களுக்கானவை...

ஆடுமாடு said...

தெளிவான பதில்கள் சுகுணா.

//சங்கரராம சுப்பிரமணியன், விக்கிரமாதித்யன், லட்சுமிமணிவண்ணன் ஆகிய மூன்று கவிஞர்களும் எழுத்ய கூட்டுக்கவிதைகள் ஈராக் மக்களுக்கு எதிரானதென்றும் ஈராக் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது என்றும்.../

இந்த விஷயம் எனக்கு தெரியாது. உண்மையிலேயே கொச்சைப்படுத்துவதான் நோக்கமென்றால் அது கண்டிக்கத்தக்கதுதான்.

முபாரக் said...

//
மன்னிக்கவும். சமீபகாலமாகச் சுய இன்பம் செய்யவில்லை.//

நச் :-)

சுகுணாதிவாகர் said...

பைத்தியக்காரன்,

ஆம். ஜமாலனும் முன்பு என்னிடம் சென்னைக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார். பார்ப்போம், அல்லது வேறு யாரிடமாவது கேள்விகளை மாற்றிவிடுவோம்.

அய்யனார்,

/மய்யத்தமிழில்லாத கட்டுரைகள் குறைவாகவே வந்திருக்கின்றன என்பது சரியாய் இருக்குமா? /

அப்படி ஏதாவது வந்திருந்தால் எனக்குத் தெரிவியுங்களேன்.

ஜமாலன் said...

நண்பர் சுகுணாவிற்கு..

உங்கள் கேள்விகள் ஆழமானவை. தற்சமயம் நான் அலைந்து கொண்டிருப்பதால் விரிவாக எழுத இயலாது. கேள்விகளை பிறருக்கு மாற்றுங்கள். இதற்கான பதிலை எனது பதிவாக வெளியிடுகிறேன். சீக்கிரத்தில். தற்சமயம் இணையத் தொடர்பு தொடர்ந்து கிடைப்பதற்கு வாய்ப்பற்றிருப்பதால் பதில்கள் தாமதமாகலாம்.

உங்கள் பொருட்படுத்தலுக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

பொதுவான மய்யத்தமிழ் நடைமுறைக்கு வருவதால் சாதி அடையாளம் ஓரளவு மறையும் வாய்ப்பு உள்ளதே? பெயரின் மூலமே சாதி கண்டுபிடிக்கும் நம் சமூகம் உரையாடலின் மூலம் அதை எளிதில் கண்டுபிடிப்பார்களே? பழங்கள் (மாம்பழத்தில் அல்போன்சா, பங்கன பள்ளி, சேலம், ராஜபாளயம் சப்போட்டா என பல சாதிகள் இருக்கலாம்.) அவைகளுக்கு மனம் இல்லை ஆனால் மனிதர்களுக்கு உள்ளதே?