Monday, November 3, 2008

கவுண்டமணி : சர்ச்சைகளும் சால்ஜாப்புகளும் அப்பால ஜ்யோராம்சுந்தரும் நாகார்ஜுனனும்

ஒரு பிரதி வாசகனின் முன் வாசிப்பை வேண்டி நிற்கும்போதே தனக்கான விருப்பத்தைப் பொதிந்து வைத்திருக்கிறது. அது வாசிப்புக்கல்ல என்னும் பம்மாத்தையும் அடர்த்தியான கருத்தாங்களீன் ஊடே பொருண்மையான கூறுகளையும்பொதிந்து வைப்பதன் மூலம் அது புதிர்ப்பிரதியாக உருமாற்றமடைகிறது.

- ‍நியோலி பானிஹ்


'கவுண்டமணி குறித்து எழுத வேண்டும் என்று ஆசை' என்று பதிந்து ஒரு வாரமாகியிருக்கும். நண்பர் பாலபாரதியின் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது, '' எம்.ஆர்.ராதாவைப் பற்றி நீங்கள் எழுதியதைப் போல கவுண்டமணியைப் பற்றியும் எழுதுவீர்களா?'' என்று கேட்டிருந்தார். அப்போது திக்கென்றிருந்தது. ஏனெனில் ராதா குறித்து எழுதுவதைப் போல கவுண்டமணி பற்றி விரிவாக எழுதுவதற்கான தரவுகள் இல்லை. ராதா ஒரு இயக்கம் சார்ந்த ஆளுமையாக இருந்ததால் இயக்கத்தின் வரலாறு ஊடேயே ராதா குறித்த தகவல்களும் கிடைக்க ஏதுவுண்டு. ஆனால் கவுண்டமணி குறித்து அணுகுவதற்கு கவுண்டமணியின் நகைச்சுவையைத் தாண்டி ஒன்றுமில்லை. கட்டுரையின் மூன்றாம் பகுதி 'உருப்படியாய்' வந்திருப்பதாக சுந்தர் உள்ளிட்ட நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். டுவிட்டரிலும் கவுண்டமணி விவாதம் பட்டையைக் கிளப்பியதாக அறிந்தேன். வலையுலகிலும் கணிசமான அளவு.

என்றபோதிலும் இப்போதைக்குக் கவுண்டமணி குறித்த தொடரை நிறுத்தி வைக்கிறேன். ஏனெனில் இதுவரை நான் எழுதியதில் எனக்குத் திருப்தியில்லை. இன்னும் கொஞ்சமாவது உழைக்கவேண்டும். சுந்தர் சொல்லியது போல கவுண்டமணியின் நகைச்சுவைக்காட்சிகள் தொகுக்கப்பட்ட ஒளிப்பேழைகளைப் பார்க்கவேண்டும். ராஜ் வீடியோ விஷனில் கிடைக்கும். இப்போதைக்கு அதற்கு நேரமில்லை. வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒழுங்காய் உழைத்து எழுதலாம். அல்லது ரோசா வசந்த், ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாத நாராயணன் போன்ற சான்றோர்கள் யாரேனும் தொடர்ந்தாலும் நலம்.

இப்போதைக்குக் கவுண்டமணி பதிவுகள் குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்துப் பார்ப்போம். இந்த விமர்சனங்கள் என் மீதான தனிப்பட்ட தாக்குதலாகவும் மாறியது குறித்து நான் பெரிதாய்ப் பேச விரும்பவில்லை. விரும்பாததன் காரணம் நான் ஒரு பெரும்பத்திரிகையில் போய்ப் 'பம்மி'யிருப்பதனால் அல்ல. கல்லூரி முடித்த காலத்திலிருந்தே ஏதேனும் ஒரு வேலை பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். முழுநேர இலக்கியவாதியாகவோ/கலைஞன்/கலகக்காரனாகவோ வாழ்வதற்கான சூழ்நிலைகள் ஏதும் வாய்க்கவில்லை. மேலும் நான் பெரும்பத்திரிகையில் பம்மி விட்டதாக விமர்சிப்பவர்கள் உணவுக்கு முன்பு ஒருமுறையும் உணவுக்குப் பின்வு ஒருமுறையும் புரச்சி செய்வதற்கான சான்றாதாரங்களும் இல்லை. ஆனால் இந்த சர்ச்சையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம். என் மனைவி ஜெயந்தியை அவள், இவள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்ட ஒரு பதிவு. (ஏற்கனவே திருமணமான புதிதில் வந்த நள்ளிரவு தொலைபேசி மிரட்டல்களுக்கு அடுத்து இது மன உளைச்சலை ஏற்படுத்தியது) மேலும் அந்தப் பதிவு வாசகர் பரிந்துரையிலும் வந்தது. பொதுவாகத் தனிநபரைத் தாக்குகிற (அ) விமர்சிக்கிற பதிவுகள் சூடான இடுகைகளில் வருவதில் ஆச்சரியமில்லை. (என்னுடைய சில பதிவுகள் கூட அவ்வாறு வந்துள்ளன.) ''சுகுணாதிவாகருக்குச் சாமான் சிறிசா?'' என்று நீங்கள் ஒரு பதிவு எழுதினால் அது சூடான இடுகையில் வரலாம், வாசகர் பரிந்துரையிலுமா? வாழ்க வாசகர்கள் மற்றும் அவர்தம் பரிந்துரைகள்.

கிடக்கட்டும். இனி விமர்சனங்கள்...

1. முதலில் சுகன் குறித்த விமர்சனம்... ஏதோ சுகனுக்கும் எனக்கும் வாய்க்கால் சண்டை போலவும், அதனாலேயே நான் அவரைச் 'சீண்டினேன்' என்பது போலவும் எழுதுவது மகா அபத்தம். ஈழப்பிரச்சினை, தலித்தியம், அதிகார மறுப்பு, எதிர் இலக்கியம், பவுத்தம், பெண்ணியம், பெரியாரின் பொருத்தப்பாடுகள் என்று நானும் சுகனும் ஒத்துப்போகும் புள்ளிகள் பல. ஷோபாசக்தியும் சுகனும் தொகுத்துள்ள 'கருப்பு', 'சனதருமப்போதினி' இரு தொகுப்புகளிலும் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. எனக்கும் சுகனுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான எந்த முகாந்திரங்களுமில்லை. ஆனால் சுகன் என் நண்பர் என்பதற்காகவே அவரை விமர்சிக்கவே கூடாது என்பது என்ன ஞாயம்? யமுனாராஜேந்திரன் குறித்த சுகனின் மொழிதலையே நான் விமர்சித்திருந்தேன்.எனக்கும் யமுனா மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக மணிரத்னம், கமல்ஹாசன் குறித்த அவரது கருத்துக்களின் மீது. 'குருதிப்புனல்' திரைப்படம் துரோகாலை விட சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது, குருதிப்புனலின் தீவிரவாதிப் பாத்திரம் ஈழப்போராளிகளைக் குறிக்கிறது என்றெல்லாம் யமுனா எழுதிக்குவித்த அபத்தங்கள் ஏராளம். ஆனால் நான் இங்கு சுகனை விமர்சித்தது ஒரே ஒரு காரணம் தொட்டு.

'ரவிக்குமார் ஒரு தலித் விரோதி' என்று யமுனா சொன்னதாலேயே அவரைக் 'கவுண்டர் கல்ச்சர்' என்று சுகன் விமர்சித்திருந்தார். ரவிக்குமார் தலித் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்று யமுனா மட்டும் சொல்லவில்லை, கோகுல்நாத்காந்தி, பியூச்சர் ராதா முதலான தலித்துகளே சொல்லியிருக்கிறார்கள். அதிலும் கோகுல்நாத்காந்தி அர்பன் தலித்தோ டர்பன் தலித்தோ அல்ல. போஸ்டர் ஒட்டுவதையே தனது பிழைப்பாகக் கொண்ட கடைநிலைத் தலித். அவர் 'ரவிக்குமாரின் பொய்முகம்' என்று சிறுவெளியீடே கொண்டுவந்திருக்கிறார். அவ்வளவு ஏன், ஷோபாசக்தி - அ.மார்க்ஸ் உரையாடலில் (தீராநதி அக்டோபர் 2008) விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு ஈழத்திலுள்ள சாதிப்பிரச்சினைகளை மூடிமறைத்து தலித்துகளுக்குத் துரோகமிழைப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதனால் ஷோபாவிற்கு சாதிய முத்திரை குத்துவதோ அல்லது தலித் விரோதி என்று சொல்வதோ நியாயமா என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடுகள் உண்டு. தலித் அரசியல், தேசிய அரசியல், வர்க்க அரசியல் என்று. நமது அரசியல் நிலைப்பாடுகளில் பொருந்தி வராதவர்களின் மீது இத்தகைய அடையாளங்களைச் சுமத்தி விடலாமா என்பதே என் கேள்வி. மேலும் தமிழச்சி சுகன், சோபாசக்தி குறித்து எடுக்கும் வாந்திகளுக்கும் அதற்கும் எத்தொடர்புமில்லை. நான் ஏதோ தமிழச்சி ரசிகர் மன்றத்தின் சென்னைக் கிளை தலைவர் என்பதாகப் பாவித்து அவதூறுகளைச் சுமத்துவது நீதியாகாது. அ.மார்க்ஸ், ஷோபா, சுகன் மாத்கிரியான தோழர்களின் உழைப்பு குறித்தும் பங்களிப்புகள் குறித்தும் எந்தவித அறிவுமற்ற தமிழச்சியின் கேணத்தனமான கிறுக்கல்களுக்காக நான் சுலுவை சுமக்க ஏலாது. மேலும் 'சுகனை விமர்சிக்கக்கூடாது' என்பதோடு' இந்த குரல் நிற்கவில்லை. சுந்தரை விமர்சிக்கக்கூடாது, அய்யனாரை விமர்சிக்கக்கூடாது, பைத்தியக்காரனை விமர்சிக்கக்கூடாது என்றெல்லாம் நீள்கிறது. அவர்கள் இந்தக் கணம் வரை எனக்கும் நண்பர்களே. ஆனால் இதற்காக விமர்சிக்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்பதெல்லாம் 'சின்னப்புள்ளத்தனம்' இல்லையா? அப்படியே நான் 'சீண்டுவதாகக்' கருதினால் அதற்கு சுந்தரோ அய்யனாரோ பைத்தியக்காரனோ பதில் சொல்ல மாட்டார்களா என்ன? தனித்துவமும் சுயமரியாதையும் உள்ள இந்த நண்பர்களை ஏதோ 'யெஸ் பாஸ்' சொல்லும் அடியாட்களைப் போல பாவித்து 'விமர்சிக்காதே' என குரலெழுப்புவது எதேச்சதிகாரம் அல்லாது வேறென்ன? சுந்தரை மட்டுமல்ல, எனக்காக கச்சை கட்டிய செந்தழல் ரவி, ஓசை செல்லா, லக்கிலுக், வரவணையான், பொட்டிக்கடை சத்யா, தமிழச்சி, பெயரிலி என நான் எல்லோரையுமே பல சந்தர்ப்பங்களில் விமர்சித்திருக்கிறேன். சுகன் மீதான விமர்சனம் என்பது கட்டுரையின் தொடக்கப்புள்ளியே தவிர மய்யப்புள்ளி அல்ல.

2. கவுண்டமணியை சாதி எதிர்ப்புப் போராளியாகச் சித்தரிக்கிறேன் என்பது இன்னொரு அபத்தம். ராதாவைப் போல இயக்கம் சார்ந்த கலைஞன் அல்ல மணி. ஆனால் 'நமது கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதி காப்பாற்றும் மதம், நமது இலக்கியம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்' என்று பெரியார் சொன்னதோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். நமது சினிமா சாதி காப்பாற்றும் சினிமா. இந்த சாதி காப்பாற்றும் சினிமாவில் அதற்கு எதிரான கூறுகள் சிந்திச் சிதறிக் கிடந்தபோதும் அதைத் தொகுத்துப் பதிய வேண்டியது நமது பொறுப்பு. தமிழ்ச்சினிமாவில் அப்படித் தப்பித் தவறி அங்கொன்றும் இங்கொன்றுமாக தெறிக்கும் மாற்றுக் கூறுகளின் மீது கவனம் குவிக்க வைப்பதே என் நோக்கமல்லாது கவுண்டமணியைச் 'சினிமா அம்பேத்கர்' ஆகச் சித்தரிப்பது அல்ல.

3. கவுண்டமணி ஸ்கிரிப்டில் உள்ள வசனங்ககளையே பேசுவார் என்பது, குசேலனில் ரஜினி சொன்னதைப் போன்றதொரு அபத்தம். வெறுமனே ஸ்கிரிப்டில் இருப்பதை அப்படியே ஒப்பிப்பதற்குக் கவுண்டமணி போன்ற ஆளுமை தேவையில்லை. ஒருபுறம் கவுண்டமணி ஸ்கிரிப்டில் இருப்பதையே ஒப்பிக்கிறார் என்று குற்றம் சாட்டுவது, மறுபுறம் கவுண்டமணியின் நகைச்சுவை வக்கிரமானது என்பது... என்னவொரு முரண்பாடு?

4. கவுண்டமணி செட்டில் மற்ற நடிகர்களை மதிக்கமாட்டார் என்னும் குற்றச்சாட்டு பொதுப்புத்தி சார்ந்த அற்பமான குற்றச்சாட்டு. 'செட்டில் மதிப்பது' என்றால் தமிழ்ச்சினிமா உலகத்தைப் பொறுத்தவரை, கதாநாயக நடிகர்கள் செட்டில் வந்தவுடன் எழுந்து நின்று வணக்கம் போடுவது, கூஜா தூக்குவது ஆகியவைதான். இங்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சில்க்சுமிதா ஒருமுறை செட்டில் சிவாஜிகணேசன் நுழைந்தபோது கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாராம். அதைப் பார்த்து கொதிப்படைந்த சிவாஜி அதற்குப் பின் பல படங்களில் தனது படத்தில் சில்க்கைப் புறக்கணித்தாராம். பின்பு சக நடிகை ஒருவர் சில்க்கிடம் கேட்டபோதுதான், தனக்குக் கொடுக்கப்பட்ட உடை மிகவும் டைட்டாக இருந்ததாகவும் காலைக் கீழே போட்டால் மிகவும் ஆபாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தாராம். (கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட சில்க்சுமிதா குறித்த புத்தகம்). இப்படிப் பல்வேறு சிக்கல்கள் தமிழ்ச்சினிமாவில் உண்டு. பானுமதி, எம்.ஆர்.ராதா தொடங்கி கவுண்டமணி மாதிரியான கலைஞர்கள் இத்தகைய 'மரியாதைகளை' கதாநாயக நடிகர்களுக்கு வழங்குவதில்லையென்றால் அவர்களின் சுயமரியாதையைப் பாராட்டி அவர்களின் பக்கம் நிற்பதுதான் நீதியாகுமே தவிர, 'கவுண்டமணி மதிக்காததால் அவரைத் 'தட்டி' வைத்தார்கள் என்று அல்ப சந்தோசப்பட்டுக்கொள்வது' நீதியாகாது.

பெரிதாய்ப் பிலிம் காட்டப்பட்ட சீறிதர் நாராயணனின் பதிவையும் நாட்கள் கழிந்துதான் படிப்பதற்கான சூழல் வாய்த்தது. பிறகு அது ஒரு சப்ப மேட்டர் என்று தெரிந்தது.

சிறீதர் நாராயணனின் பதிவின் சாராம்சக்கூறுகள்.

1. கவுண்டமணியின் காமெடிக்கு லிமிட்டேசன்ஸ் உண்டு.

2. அவர் சந்திரபாபுவை விட பெரிய நடிகர் இல்லை.

3. இன்று வலைப்பதிவர்கள் பலர் பயன்படுத்தும் வார்த்தைகள் வடிவேலுவின் காமெடியிலிருந்தே பயன்படுத்தப்படுகிறது, கவுண்டமணியின் நகைச்சுவையிலிருந்து அல்ல.

4. வடிவேலுவின் நகைச்சுவைத்தான் 'நச்சு' இல்லாதது. கவுண்டமணியின் நகைச்சுவை மற்றவர் மனங்களைப் புண்படுத்துவது.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. கவுண்டமணிக்கு லிமிட்டேசன்கள் இருக்கிறதுதான். யாருக்குத்தான் லிமிட்டேசன்கள் இல்லை? கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவைக்குக் கூட அதற்கான லிமிட்டேசன்கள் இருக்கின்றன. ஏன், உங்களுக்கும் எனக்கும் கூட லிமிட்டேசன்கள் இல்லையா என்ன?

2. இப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக அவரவர் அபிப்பிராயங்களிலிருந்து கூறிச்செல்வது பெரிய விஷயமில்லை. சாப்ளினை விட என்.எஸ்.கே பெரிய ஆள் இல்லை,
கலைவாணரை விட சந்திரபாபு பெரிய ஆள் இல்லை, சந்திரபாபுவை விட உசிலைமணி பெரிய ஆள் இல்லை......

3. இந்த வாதம் உண்மையிலேயே பெரிய நகைச்சுவைதான். பதிவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டெல்லாம் கலைஞர்களை அளந்துவிட முடியாது. ஒருகாலத்தில் தங்கவேலுவின் 'அதான் தெரியுமே' கூற்று புகழ்பெற்றது. நாகேஷின் 'காதலிக்க நேரமில்லை', தேங்காய் சீனிவாசனின் 'டிமுக்கு டப்பா டிப்பா', கவுண்டமணியின் 'அட்ராசக்கை', இப்போது வடிவேலுவின் 'கிளம்பிட்டாய்ங்கய்யா...'. இது அந்தந்த காலத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் நடிகர்களின் மார்க்கெட் தொடர்பான விவகாரம். நமது பதிவர்கள் வடிவேலுவை மட்டுமா அதிகம் பயன்படுத்துகிறார்கள், ஷகீலாவையும் நமீதாவையும் கூடத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்? (இங்கு நான் சொல்லும் 'பய்ன்படுத்துவது' வேறு((‍ ‍ ) அதற்காக ஷ்ப்னா ஆஸ்மி, சீமா பிஸ்வாஸை விட ஷகீலாவும் நமீதாவும் தான் சிறந்த நடிகைகள் என்று சொல்வாரா சிறீதர் நாராயணன்?

4. முதலில் புண்படுத்துவது, இழிவுபடுத்துவது என்பது சார்பைப் பொறுத்ததே. எம்.ஆர்.ராதா கூட 'பக்தர்கள், இந்துக்கள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களை' இழிவுபடுத்தினார், புண்படுத்தினார் என்று ஒரே வரியில் புறங்கையால் துடைத்தெறிந்துவிட முடியும். ஆனால் அது சரியான ஆய்வு அல்ல. கவுண்டமணியின் நகைச்சுவைகளில் பிரச்சினைகளே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. நிறத்தை இழிவுபடுத்தும் (இத்தனைக்கும் கவுண்டமணியும் கறுப்புதான்), ஊனமுற்றவர்களை இழிவுபடுத்தும் மணியின் நகைச்சுவைகளை நானும் ஏற்பதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அவரின் நகைச்சுவையையே 'வக்கிரம்' என்று முத்திரை குத்துவதை மறுக்கிறேன்.

தமிழ்ச்சினிமாவில் இருக்கும் அத்தனை நச்சுகளும் எல்லா அம்சங்களிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும். இதற்குக் கவுண்டமணி மட்டும் விலக்கல்ல. வடிவேலுவின் நகைச்சுவையில் நச்சு இல்லை, மற்றவர் மனங்களைப் புண்படுத்தவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை. வடிவேலுவின் 'அவனா இவன்' காமெடி ஓரினச்சேர்க்கையாளர்களை அசிங்கப்படுத்தவில்லையா? 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் வரும் மும்பை சிவப்பு விளக்கு காமெடி திருநங்கைகளைக் கொச்சைப்படுத்தவில்லையா? உச்சமாக 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் இடம்பெறும் 'துபாயில் கக்கூஸ் கழுவும்' ஜோக் மலமள்ளும் அருந்ததியர்களை இழிவுபடுத்தவில்லையா?

சிறீதர்நாராயணனைப் பொறுத்தவரை கவுண்டமணியைச் சார்லிசாப்ளினோடு ஒப்பிட்டு விட்டார்களே என்கிற கோபம். அந்த வாதத்தை நானே மறுத்திருக்கிறேன். சாப்ளினுக்கான அளவுகோல்கள் வேறு. கலைவாணர், கவுண்டமணி, சந்திரபாபு, வடிவேலு என்று இந்த கலைஞர்கள் அனைவருக்குமான அளவுகோல்கள் வெவ்வேறு வகையானவை. சிறீதருக்குக் கோபம் சாப்ளினால் வந்தது என்றால் வேறு இடத்திலிருந்து வந்த கோபம், நான் எதை எழுதினாலும் அதை மூர்க்கத்தனமாக மறுக்க வேண்டும் என்ற குருட்டு ஆவேசம் காரணம்.

இனி ஜ்யோராம் சுந்தர் சினிமா குறித்து முன்வைத்திருக்கும் கேள்வி விளையாட்டுக்குள் புகுந்து மேலும் சில வித‌யங்கள் குறித்து உரையாடுவோம்.

(தொடரும்...)

1. 'அப்பால் ஜ்யோராம்சுந்தரும்...' என்று போட்டிருந்தால் இது இலக்கியப்பிரதியாகியிருக்கும். ஆனால் இது அப்பாலதான்.

2. ரஜினி அடுத்த படத்தில் பேச வேண்டிய பஞ்ச் டயலாக்...?

வரும்...ஆனா.... வராது.

3. பதிவின் தொடக்கத்திலுள்ள கூற்றை மொழிந்த நியோலி பானிஹ் யார்?

1) லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் 2) பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளர் 3) ஜெனீவாவைச் சேர்ந்த மொழியியலாளர் 4) போஸ்ட் மார்க்சிஸ்ட்

விடை 33ம் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில்.


14 comments:

Sridhar Narayanan said...

சுகுணா,

//சிறீதருக்குக் கோபம் சாப்ளினால் வந்தது என்றால்//

கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதவில்லை என்றுதான் நினைக்கிறேன். 'பிலிம்' காட்டவும் நான் விழையவில்லை.

எனது பொதுவான அபிப்ப்ராயத்தை சொல்லியிருந்தேன். அது பொதுபுத்தி சார்ந்ததாகவும் இருக்கலாம். நான் மறுக்கவில்லை.

//பதிவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டெல்லாம் கலைஞர்களை அளந்துவிட முடியாது.//

அப்படி பொதுமைபடுத்த நினைக்கவில்லை. காளி என் ரத்தினம் தொடர்ந்து நேற்றைய 'சகலை' சந்தானம்வரை பலர் திரைஉலகில் தனித்திறமையோடுதான் இருக்கிறார்கள். கவுண்டமணிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. ஆனால் சமீபகாலத்தில் வடிவேலு போன்றோரின் நகைச்சுவையின் ஈர்ப்பு எல்லா மட்டத்திலும் அதிகரித்திருக்கிறது என்று எனது பார்வையில் சொல்லியிருந்தேன்.

//நிறத்தை இழிவுபடுத்தும் (இத்தனைக்கும் கவுண்டமணியும் கறுப்புதான்), ஊனமுற்றவர்களை இழிவுபடுத்தும் மணியின் நகைச்சுவைகளை நானும் ஏற்பதில்லை.//

நன்றி! அவர் பெருமளவில் பெயர் பெற்ற படங்களில் முக்கியமாக கூட நடிகர் செந்தில் நடித்திருப்பார். செந்திலின் பாத்திரத்தைவிட அவரின் முட்டாள்தனத்தை, நிறத்தை, உருவ அமைப்பை வைத்துதான் பெரும்பாலும் கவுண்டரின் நகைச்சுவை இருக்கும்.

சத்யராஜோடு அவர் நடித்த காமெடி காட்சிகளை நானும் ரசித்திருக்கிறேன். ஆனால் versatility குறைவாக இருப்பது உண்மைதான்.

//சாப்ளினுக்கான அளவுகோல்கள் வேறு. கலைவாணர், கவுண்டமணி, சந்திரபாபு, வடிவேலு என்று இந்த கலைஞர்கள் அனைவருக்குமான அளவுகோல்கள் வெவ்வேறு வகையானவை.//

இதுவே நானும் சொல்ல நினைத்தது. கவுண்டமணி ஹீரோக்களை மிஞ்சும் ஆளுமை உள்ளவர் என்றபோது சந்திரபாபு, எம்.ஆர். ராதா உதாரணங்கள் தவிர்க்க முடியாதவை என்றே நினைக்கிறேன். மிகவும் versatile என்று சொல்லப்படும் நாகேஷ் கூட அவ்வளவு ஆளுமையோடு இருந்ததில்லை.

லக்கிலுக் said...

கவுண்டமணி குறித்த உங்களது மாறுபட்ட பார்வை ஏகப்பட்ட அதிர்வுகளை கிளப்பியிருக்கின்ற அதே நேரத்தில் இதற்காக நீங்கள் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கப்பட்டது அநியாயம்

தமிழ் மொழி, தமிழ் சமூகத்தில் கருணாநிதியின் பங்களிப்பு குறித்த உங்களது தொடரை ஆவலோடு எதிர்நோக்குகிறேன். இதுகுறித்து ஒருமுறை மப்பில் நீங்கள் ஏதோ பேசியதாக ஞாபகம்!

நீங்கள் போடுவது சண்டையா? கலகமா? விமர்சனமா? என்ன எழவோ... படிக்க சொல்லுக்கு சொல் சுவாரஸ்யமாக இருப்பதால் சுகுணா திவாகருக்கு ஜே!

தமிழச்சி said...

//அ.மார்க்ஸ், ஷோபா, சுகன் மாத்கிரியான தோழர்களின் உழைப்பு குறித்தும் பங்களிப்புகள் குறித்தும் எந்தவித அறிவுமற்ற தமிழச்சியின் கேணத்தனமான கிறுக்கல்களுக்காக நான் சுலுவை சுமக்க ஏலாது.//

சுகுணா என்னுடைய அறிவைப்பற்றி நீங்கள் கணிப்பதற்கு யார்?


நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களின் உழைப்புகள் தமிழ்நாட்டில் இருக்கும் விதத்திற்கும் பிரான்சில் இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது. என்னுடைய அறிவையும், புரிதலையும் நீங்கள் கணிக்கத் தேவையில்லை.
விளாவரியாக விளக்கமாக சாட்சியங்களுடன் எழுதப்பட்ட பதிவுகளும், பிரான்ஸ் நாட்டு போலீஸ் கண்காணிப்பில்
இருப்பவர்களுக்கும், வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவதற்கு என்னுடைய அறிவைப் பற்றி குறைகூறத் தேவையில்லை. நீங்கள் குறிப்பிடும் ஆட்கள் மூலம் உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் வேறு. எனக்கு கிடைத்த அனுபவங்கள் வேறு. இரண்டையும் குழப்பிக் கொண்டு கேணத்தனமாக உளற வேண்டாம்.

Pot"tea" kadai said...

ஆகா..அருமை...சூப்பரு.

***

உண்மையிலேயே நிதான்மாக எழுதப்பட்ட பதிவு. நன்று!

***
அப்பால...எப்போ எயுத போற மாமு?

Unknown said...

நல்ல பதிவு. ரசித்தேன்.

நான் விவாதங்களில் நுழைய விரும்பவில்லை .
தமிழ் சினிமா காமெடியை பற்றி சில பொதுவான கருத்துக்கள்

1.மணி - பழைய படங்களில் இருக்கும் புத்திசாலித்தனம் இப்போது இல்லை .காரணம் டைரக்டர் சுந்தரராஜன் நல்ல காமெடி எழுத்தாளர் (மணி-செந்தில்) பின்னாளில் வந்த மணி-சத்யராஜ் சூப்பர் காமெடி. மற்றும் சில சிறந்த காமெடிகள் இருந்தது.எனக்கு பிடித்து "எட்டு பட்டி ராசா " "பிறந்தேன் வளர்ந்தேன் "


அதற்கு பிறகு ............ குறைகள்

1. " ஆமா இவரு பெரிய ...ஜமிந்தார் /டாட்டா /பிர்லா /ஜனாதிபதி/புஸ்ஸு(புஷ்)/கர்ம வீரரு/சூப்பர் ஸ்டாரு /இசை ஜானி " போன்ற அடிக்கடி வரும் அறுவை காமடிகள்.
காமடியே இல்லாமல் கையையும் காலையும் ஆட்டுவது .

2. காட்டு கடத்தல் காமெடி (ஆரம்பித்தவர் தேங்காய்.கேமராவை 90 டிகிரியில் பார்த்து பேசுவார்)

3.பழைய படங்களில் அடுத்தவர்களை மட்டம்தட்டும் காமடி இருக்காது . அவர் புகழுக்கு வந்தவுடன் செய்த காமெடிகளில் அடுத்தவர்களை மட்டம்தட்டும் காமெடி உற்று பார்த்தால் தெரியும் .(ஏன்டா ...நாராயணா ...?)

பொதுவாக ...... காமெடிகளில் ஒரு எடுப்பு , தொடுப்பு, முடிப்பு இருக்க வேண்டும் அதுவும் .முடிப்பு ரொம்ப ஷார்ப் ஆக இருத்தல் அவசியம் .(கிணற்றில் பாடி கிடக்கிறது)
பாடியை எடுத்து செந்தில் முன் காட்டி ஒரு முழி முழித்தவுடன் (அல்லது வசனம் இல்லாமல் ஒரு எட்டி உதை ...) காட்சி முடிந்தால் ஷார்ப் . முடியாமல் காமடிக்கு கோனார் நோட்ஸ் போட்டு ஒரு வசனம் உண்டு என்று நினைக்கிறேன். இதே மாதிரி
இது மாதிரி வடிவேல் டி கடையில்(பெஞ்ச்) விழுவர் .ஷார்ப்பாக முடியாமல் கோனார் நோட்ஸ் போட்டு ஒரு வசனம் உண்டு. ஷர்ப்புக்கு நல்ல உதாரணம் "கல்யாணம்தான் ..." என்று பாடி கைது செய்வது , "உங்க விட்டுல டாக்டர் " வடிவேலு பெண் பார்க்கும் காமெடி .ஷார்ப்பாக முடிப்பது சத்தியமாக மேல்தட்டு காமெடி இல்லை.

Anonymous said...

பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4345:2008-11-04-12-01-35&catid=74:2008&Itemid=76

வால்பையன் said...

நகைச்சுவை நடிகர்கள் பற்றிய இந்த பதிவில் நடிகர் விவேக் பெயர் வரவே இல்லையே!
ஒருவேளை இது அது பற்றிய பதிவு இல்லையா?
நான் தெரியாமல் வந்து மாட்டிகிட்டேனா

குழலி / Kuzhali said...

கெட்ட வார்த்தையில் வெரைட்டி தேடிய சுகுணா இவ்ளோதானா?

http://kuzhali.blogspot.com/2008/11/blog-post.html

Anonymous said...

http://kuzhali.blogspot.com/2008/11/blog-post_05.html

தன்னைதானே அறிவுஜீவியாகவும், அதிமேதாவியாகவும் பெருமையடித்து கொள்ளும் குழலி எவ்வளவு அபத்தமாக உளறியிருக்கிறார் என்று பார்க்கவும்.

மூர்த்தி கெட்ட வார்த்தைகளில் டோண்டுவை திட்டி கொண்டிருந்தபோது வீரமணி மீட்டிங்கிலும், மாதாந்திர சந்திப்பிலும் தொடர்ந்து மூர்த்தியை சந்தித்து பேசி நட்பு பாராட்டி வந்த குழலி அறம் பற்றியெல்லாம் பேசுவது முட்டைக்கு சவரம் செய்வதுக்கு இணையானது.

நந்தா said...

//தமிழ் மொழி, தமிழ் சமூகத்தில் கருணாநிதியின் பங்களிப்பு குறித்த உங்களது தொடரை ஆவலோடு எதிர்நோக்குகிறேன். இதுகுறித்து ஒருமுறை மப்பில் நீங்கள் ஏதோ பேசியதாக ஞாபகம்!//

நீங்க எப்பவோ பேசி இருப்பதாக தெரிகிறது. முடிஞ்சா கொஞ்சம் இதுக்கும் டைம் ஒதுக்குங்க.

http://blog.nandhaonline.com

Unknown said...

நல்ல பதிவு சுகுணா.."Honest criticism is hard to take particularly from a relative, a friend, an acquintance or a stranger" Franklin P.Jones
வேறென்ன சொல்ல சுகுணா...கலீல் கிப்ரானின் வரிகள் கூட நினைவுக்கு வருகிறது "The best of men is he who blushes when you praise him and remains silent when you defame him' க்ளிஷேவா இருந்தாலும் நம்ம மொழிலல சொல்லணும்னா 'போற்றுவார் போற்ற புழுதி வாரி தூற்றுவார் தூற்ற எல்லாப் புகழும் சுகுணாவிற்கே...

உண்மைத்தமிழன் said...

சுகுணா

கவுண்டரை பற்றி நீங்கள் எழுதியது வழமை போலவே தங்களது அறிவுஜீவித்தனமாகவே உள்ளது..

நீங்கள் வடிவமைத்திருக்கும் வார்த்தைகளுக்காகவே பதிவு முழுவதையும் படிக்க முடிகிறது. நன்றிகள்..

மனைவி பெயரில் வந்த கமெண்ட்டுகள் பற்றி வருத்தப்படுகிறீர்கள். ஆனால் ஆபாச பின்னூட்டங்கள் பற்றி முன்னர் ஒரு காலம் தாங்கள் எழுதியதை இப்போது தயவு செய்து படித்துப் பார்க்கவும்.

கொலை என்பதற்குள்ளேயே கொலை முயற்சி என்கிற வார்த்தையும் அடங்கித்தான் உள்ளது.. புரிந்து கொள்ளவும்..

Anonymous said...

அ.மார்க்ஸிக்குத் திறந்த கடிதம் : அசோக்

http://inioru.com/?p=1308

நேர்மையான விமர்சனங்களை
முன் வையுங்கள். தமிழிச்சியைப் போன்ற தைரியமிக்க நேர்மையான பெண்மையை அசிங்கப்படுத்தாதீர்கள். உங்களுடைய கவிதைகளை வெளியிட்டதற்காகவும், உங்களுடைய நண்பர்கள் என்பதற்காகவும் நடந்த நிகழ்வுகள் பொய்யாகிவிடுவதில்லை. முதல் முறையாக அனானியாக எழுதுவற்கு வேதனைப்படுகின்றேன். சில சங்கடங்களை தவீர்ப்பதற்காகவும், இணைப்பை நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப்பக்கம் வரவேண்டிய சூழல்.

நன்றி
அசோக்

Anonymous said...

//கவுண்டரை பற்றி நீங்கள் எழுதியது வழமை போலவே தங்களது அறிவுஜீவித்தனமாகவே உள்ளது.. //

உன்மைதமிளா உன் அட்டகாசம் எல்லை மீறி போகிறது. கவுண்டமணி பதிவுகளில் என்னத்தை அறிவுஜீவிதனம் இருக்கு என்று உதாரணங்களோடு விளக்க முடியுமா? பொத்தாம் பொதுவாக போகிறபோக்கில் எதையோ சொல்லிவிட்டு போவதே உமக்கு பழக்கமாகிவிட்டது.

வைகோவுக்கு கடிதம் என்று நீவீர் எழுதியிருக்கும் அபத்தம் உம்மை நீரே அறிவுஜீவியாக கருதிகொண்டு எழுதியிருப்பதாக வாசகர்களுக்கு தெரிகிறது.

நீளநீளமாக எழுதினால் மட்டும் பத்தாது. உருப்படியாக எழுதவும் சிந்திக்கவும் வேண்டும். அது உம்மால் எக்காலத்திலும் முடியாது என்பதால் உருப்படியான பதிவுகளில் உம்ம அரைவேக்காடு பின்னூட்டங்களையாவது இடாமல் மூடிக்கொண்டிருக்கவும்.