Monday, November 10, 2008

ஜ்யோவ்ராம்சுந்தருக்கான பதில்கள்

? 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

தெரியவில்லை.

?2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஏகன். அதற்கு முன் துரை. ஜெண்டில்மேனுக்குப் பிறகு திரையரங்கில் பார்த்த அர்ஜூன் படம். அர்ஜூன் படங்களையும் விஜயகாந்த் படங்களையும் பேருந்துப் பயணங்களில் மட்டுமே பார்க்க (விபத்து?) 'நேர்வதுண்டு'. தொழில் நிமித்தம் திரையரங்கில் துரை மாதிரியான கொடுமைகளை அனுபவிக்க வேண்டி நேர்கிறது.

? 3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கள்ளக்குறுந்தகடில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம். படத்தில் இரு ஆச்சரியங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். படத்தின் முதல் காட்சியிலிருந்து பெரும்பாலான காட்சிகள் நீளமான ஷாட்கள். பொதுவாக பாலுமகேந்திராவின் 'வீடு', 'சந்தியாராகம்' மாதிரியான தமிழர்களால் ஆர்ட்பிலிம் என்று ஒதுக்கப்பட்ட படங்களில் மட்டுமே இத்தகைய நீளமான ஷாட்கள் அமைவதுண்டு. ஆனால் சுப்பிரமணியபுரம் நீளமான ஷாட்களைக் கொண்டிருந்தும் வெற்றிகரமாக ஓடியது ஒரு ஆச்சரியம். இரண்டாவது காதலையும் நட்பையும் 'கொண்டாடும்' தமிழ்ச்சினிமா உலகில் காதலி மற்றும் நண்பனின் துரோகத்தைச் சொன்ன படம். பொதுவாகத் திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் பார்க்கப்படுவது தவிர்க்கமுடியாதது. இங்கு நாயகியின் குடும்பம் பிள்ளைமார்க்குடும்பம் (வீட்டில் வ.உ.சியின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும்.) நாயகன் மற்றும் நண்பன் பரமுவின் சாதியும் அஃதே. ஆனால் கஞ்சாகருப்புவும் திருவிழாவில் பொறுப்பு வகிக்கும் அந்த மீசை பெரிசும் அனேகமாகத் தேவர் சாதியாக இருக்கலாம். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்தும் அதிகாரம் பிள்ளைமார்க் குடும்பத்திலிருந்து தேவர் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு மாறுவதனால் ஏற்படும் மன உளைச்சல், அரசியல் கட்சியில் பிள்ளைமார்ச் சாதி அதிகாரத்தைக் கைப்பற்றுதல், அதற்காகத் தன் சாதி இளைஞர்களையே அடியாட்களாகப் பயன்படுத்திக்கொள்ளுதல் என பல பார்வைகள் உற்றுநோக்கின் விரியும்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய. தமிழ்ச்சினிமாக்கள் தாக்காத தமிழர்கள் உண்டா என்ன? ஒரு காலகட்டம் வரைக்கும் சினிமாவில் தெரியும் கதாநாயகப் பிம்பனின் அசைவுகள், உடல்மொழி வரை என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்கிற மனோபாவம் இருந்தது. இந்த தாக்கம் திரையரங்கை விட்டு வெளியிலில் வந்த பின்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இப்போது அந்த தாக்கம் இருப்பதில்லை. நாயகன்களை விட நாயகிகளுக்காகவே படங்கள் பார்க்க விருப்பம். மீண்டும் மீண்டும் பார்த்த படங்கள் அனேகம். வசந்த மாளிகை, புதிய பறவை, பாட்ஷா, அமைதிப்படை, பூவிழிவாசலிலே, காதல்கொண்டேன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நான் திமுக குடும்பத்திலிருந்து வந்தவன். சின்னவயதில் டி.ராஜேந்தர் படங்களைக் குடும்பத்தோடு பார்க்கும் பழக்கம் உண்டு. (அந்த கொடுமைகள் மட்டுமல்ல, கலைஞர் வசனம் எழுதிய பாலைவன ரோஜாக்கள், நீதிக்குத் தண்டனை, ராமநாராயணன் இயக்கிய சகாதேவன்மகாதேவன், தங்கமணி ரங்கமணி படங்களையும் பார்த்ததுண்டு.) டி.ராஜேந்தர் திமுகவை விட்டு வெளியேறியது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதற்கப்புறம் பெரிய அதிர்ச்சி என்றால் கல்லூரி படிக்கும்போது சில்க்சுமிதாவின் தற்கொலை. சுமிதா என்னை ஈர்த்த நடிகை அல்ல. ஆனாலும் அவர் மீது ஏதோ கரிசனமோ அனுதாபமோ இருந்தது. ஏனென்று தெரியவில்லை. பொதுவாக நடிகைகளிடம் கேட்பதற்கென்று பத்திரிகையாளர்களிடம் சில கேள்விகள் உண்டு. கவர்ச்சியாக நடிப்பீர்களா மாதிரியான 'மாற்றம் என்பதே மாறாத ஒன்று' கேள்விகள். அதில் ஒன்று ''சினிமாவில் நடிக்கவராவிட்டால் என்ன செய்வீர்கள்?'' என்பது. ''டாக்டராகியிருப்பேன், லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகியிருப்பேன்' என்று நடிகைகளிடமிருந்து வித விதமாய்ப் பதில் வருவது வழக்கம். ஆனால் சுமிதா சொன்ன பதில், 'நக்சலைட் ஆகியிருப்பேன்' என்பது. அவரின் ஆந்திராவில் நக்சல் இயக்கத்தின் செல்வாக்கும் சுமிதாவின் இளமைக்கால வறுமையும் அவரை அப்படிச் சொல்ல வைத்திருக்கலாம். அவர சென்னையில் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதும் மக்கள் யுத்தக்குழுவிற்குப் பொருளாதார ரீதியாக உதவியாகச் செய்திகள்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?


மணிரத்னம் - ரகுமான் வருகையின் போது இசைவடிவங்கள் மாறியது. அப்புறம் டி.டி.எஸ். திரையரங்கில் புதிய அனுபவமாக இருந்தது. முதன்முதலாக சென்னையில் ஐநாக்ஸ் திரையரங்கிற்குப் போனபோது போஸ்டர் கூட ஒட்டாமல் ஒரு தியேட்டர் இருப்பது சாத்தியமா என்று ஆச்சரியப்பட்டேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய வண்ணத்திரை கிசுகிசுக்கள் தொடங்கி சிறுபத்திரிகை இதழ்களின் சினிமா கட்டுரைகள், சினிமா தொடர்பான புத்தகங்கள் என்று.

7. தமிழ்ச்சினிமா இசை?

ம்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?


இந்திய சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை. உலக சினிமாக்கள் பார்த்துண்டு. சில்ட்ரன் ஆப் ஹெவன், பை சைக்கிள் தீவ்ஸ், சர்க்கிள், அகிரோ குரோசாவாவின் 'டிரீம்ஸ்' என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சினிமா நண்பர்கள் சில பேர் பழக்கம் உண்டு. அதுபோக, ஒருமுறை 'சீன்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. (இதைச் சினிமா அனுபவத்தில் சேர்த்துக்கொள்ளலாம்தானே!)அப்புறம் அனிமேஷன் படங்களுக்கான ஸ்கிரிப்ட் உதவி செய்ததுண்டு. பிடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் செய்வதற்கு விருப்பம் உண்டு. ஆனால் தமிழ்ச்சினிமா மேம்படவெல்லாம் அது மயிரளவும் உதவாது என்றுதான் கருதுகிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், பாலா, மிஷ்கின், செல்வராகவன் என்று நம்பிக்கையூட்டும் இளம் இயக்குனர்கள் இருப்பதனால் பல ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்றுதான் நம்புகிறேன். 80களில் பெரிய அலைகளை ஏற்படுத்திய பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா ஆகியோரின் காலம் முடிந்து இது புதிய அலைக்காலம். நிச்சயம் நல்ல சினிமாக்கள் நிறைய வரும். ஆனால் வெளிப்படையாக அரசியல் பேசுகிற யாரும் தமிழ்ச்சினிமாவில் மாற்றத்தை ஏற்பத்தவில்லை. அதேபோல் ஷங்கர், மணிரத்னம் மாதிரியான வலதுசாரி இயக்குனர்கள் புதிய தொழில்நுட்பங்களைத் தமிழ்ச்சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதற்குப் பயன்படுவார்களே தவிர பயப்படும்வகையில் இவர்களுக்கான எதிர்காலம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நாட்டாமை, கண்ணீர்க்குடும்பம் கன்றாவிகளைச் சுமக்கும் நிலப்பிரபுத்துவச் சினிமாக்களும் ஜெயிக்கப்போவதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர்கள் தாமாகவே புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குப் போய்வார்கள் ((-. தம்பி படத்தின் நூறாவது நாள் விழாவில் பாலுமகேந்திரா பேசியது நினைவுக்கு வருகிறது. ''தமிழர்களுக்கு இசை என்றால் அது சினிமா இசை, கவிதை என்றால் அது சினிமா பாடல், பேஷன் என்றால் நடிகர்களின் உடைகள்''. நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. ஸ்கைலாபு, ஒய் டூ கே மாதிரியான பதில்கள் தெரியாத, குழப்பமான, 'ஜீவாதாரப்' பிரச்சினைதான். சினிமா இல்லாத தமிழர்களின் வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியவில்லை.

அழைக்கும் 5 பேர்கள்

1. பொட்டிக்கடை சத்யா.
2. தமிழ்நதி
3. பைத்தியக்காரன்
4. பாமரன்
5. வரவணையான்.

( கமர்சியல் பிரேக்)

1 comment:

முரளிகண்ணன் said...

பல இடங்களில் இது மாதிரி (கோவில் உரிமை விட்டு கொடுத்தல் ) நடந்துள்ளது. அதை மிக சரியாக பதிவு செய்திருந்தார் இயக்குனர். வ உ சி படம் மட்டுமல்ல பெயர்களும் (சோமு, சிதம்பரம்), கலெக்டர் ஆபிஸ் வேலை என பல குறியீடுகளுடன் அமைக்கப்பட்டு இருந்தது.