Thursday, September 24, 2009

நண்பர்கள் என்று நம்பியவர்கள்....

‘உன்னைப் போல் ஒருவன்’ படம் குறித்த விமர்சனத்தை எழுதியவுடன் பல தரப்புகளிலிருந்தும் பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இயல்பாகப் பலரும் தத்தம் இடங்களில் பொருந்திப்போனார்கள். மேலோட்டமாக எழுதக்கூடியவர்கள், ஜாலியான பதிவுகளை எழுதியவர்கள் என்றெல்லாம் அறியப்பட்டிருந்தவர்களிடமிருந்து மூர்க்கத்தனமான எதிர்வினைகள் வெளிவந்தன. எதிர்வினைகள் என்பதை விடவும் தமக்குள் இருந்த இந்துமனோபாவத்தையும் பொதுப்புத்தி அபாயத்தையும் பார்ப்பனீயத்திற்கு ஒப்புக்கொடுத்த இயல்பையும் வெளிக்காட்டினார்கள். இது ஒன்றும் ஆச்சரியமானதில்லை. வரலாற்றின் போக்கில் நிரூபிக்கப்படும் உண்மைகள்தான். ஆனால் எதிர்பாராத இரண்டு இடங்களிலிருந்து எதிர்பாராத இரண்டு எதிர்வினைகள் வந்தன.

ஒன்று நமது ஆசிப்மீரானுடையது. செல்வேந்திரனின் பதிவில் அறத்தின் சினத்தைக் காட்டிய ஆசிப்மீரான், தன் பதிவில் எழுதியதோ அடிப்படைக்கே எதிராக இருந்தது. உன்னைப் போல் ஒருவனின் பின்னுள்ள மோசமான இந்துத்துவ அரசியலை வெளிக்கொணர்ந்த பிரதிகளை, தனக்கேயுரிய பகிடிநடையில் மோசமாகக் கிண்டலடித்திருந்தார். தமிழர்&மலையாளி பிரச்சினையாக பார்க்கலாம் என்கிற ரீதியில் ஆசிப் விமர்சனங்களை மலினப்படுத்தியிருக்கிறார்.

பகிடி என்பது எனக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் நாம் அதிகாரத்தைப் பகிடி செய்ய வேண்டுமேயல்லாது அதிகாரத்திற்கு எதிரான குரல்களையல்லவே ஆசிப்! எனது பதிவில் மூர்க்கமாய்த் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த பலரும் ஆசிப்பின் பதிவில் கும்மியடித்திருந்தார்கள் என்றால் இது யாரின் வெற்றி? ‘மனநோயாளிகளின் உலகம்’ என்கிறார். எது மனநோய்? பிரதியின் பின்னுள்ள அதிகாரத்தை விமர்சனத்துக்குள்ளாக்குவதா?

பட விமர்சனம் எழுதியபோது நிறைய நண்பர்கள் பார்ப்பனர்களாய் என்னால் அறியப்படாதவர்கள். ஆனால் அந்த விமர்சனத்திற்கு எதிராகப் பதிவுகளும் பின்னூட்டங்களும் அவதூறுகளும் கிண்டல்களும் வசைகளும் செய்தவர்களில் பாதிப்பேர் பார்ப்பனர்கள் என்பதைப் பின்னால்தான் அறிய நேர்ந்தது. சுயசாதிப்பற்று என்பது மனநோய் இல்லையா ஆசிப்? அடிமனதில் ஒளிந்திருக்கும் பெரும்பான்மைவாதம் என்பது மனநோய் இல்லையா ஆசிப்?

ஆசிப்மீரான் இப்படியான எதிர்வினை புரிந்ததற்கான காரணங்களை என்னால் அறியக்கூடவில்லை. ஒருவேளை அவர் கமலின் ரசிகராக இருக்கக்கூடும். எனக்கும்கூட தனிப்பட்ட முறையில் நடிகர், நடிகைகள் மீதான விருப்பு வெறுப்புகள் உண்டு. ஆனால் எந்த அரசியலின் மீதும் அக்கறையற்று, அறத்தின் சார்பற்று குருட்டு ரசிகனாய் இருப்பதை விட மனநோயாளியாக இருக்கவே விரும்புகிறேன். நல்லா இருங்க ஆசிப்!
&&&&&&&&&

அடுத்து நமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோழர் மாதவராஜ்.

''கமலின் இந்தப்படம் முழுக்க முழுக்க இந்துத்துவா ஆதரவுப்படம் என்றும், அப்படியெல்லாம் இல்லை என்றும் ஆரம்பித்து, நீண்டு, கமல்ஹாசன் என்னும் கலைஞன் மீது அவரவர்கள் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்து இருக்கிறோம். படைப்பு குறித்த விமர்சனத்திலிருந்து, படைப்பாளி நோக்கிய விமர்சனத்திற்கு தாவி இருக்கிறோம்." என்கிறார் மாதவராஜ். படைப்பு என்பது படைப்பாளியின் துணையில்லாமலேயே அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறதா மாதவராஜ்? பிளாக் மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்காமல் துரோகால், வெட்னெஸ்டே மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற கமலின் தேர்ந்தெடுப்பிற்குப் பின் எந்த அரசியலுமே இல்லையா தோழர்? அல்லது நமது முட்டாள் நண்பர்கள் உளறுவதைப் போல் ‘‘மௌனத்திலே அரசியல் பார்க்கிறார்கள், புன்முறுவலிலே அரசியல் பார்க்கிறார்கள்’’ என்று சொல்லப் போகிறீர்களா? ‘ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் உள்ள அரசியல்’ குறித்து உங்களுக்குப் பாடம் எடுக்க நான் தயாராயில்லை.

''அரைநூற்றாண்டுக் காலம் தமிழ்ச்சினிமாவில் முக்கியப் பாத்திரமாக இருந்த ஒருவரை, சினிமா பற்றிய ஞானம் உள்ள சினிமாக் கலைஞரை, மனிதநேயமிக்க எத்தனையோ காட்சிகளை கண்முன் நிறுத்தியவரை, எத்தனையோ அற்புதமான படங்களை தமிழ்த் திரையுலகத்திற்குத் தந்தவரை சட்டென்று “ஒரு இந்துப் பாசிஸ்டு” என்று முத்திரை குத்துவது சரியல்ல. சில காட்சிகளை முன்னிறுத்தி, ஒரு கலைஞனை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுவது நல்லதல்ல. அதிலும் அவரது பிறப்பை முன்னிறுத்தி பேசுவது ஆரோக்கியமானதல்ல."

என்பது தோழரின் வாதம். சினிமா பற்றிய ஞானம் உள்ளவர் இந்துப்பாசிஸ்டாக இருக்க முடியாதா என்ன? அதை விடக்கொடுமை அந்த ‘ஞானத்தை’ பாசிசத்தை நியாயப்படுத்த பயன்படுத்துவது இல்லையா?

சில காட்சிகளை விட்டு விடுவோம், ஒட்டுமொத்தமாய் இந்த படத்தின் அரசியல் என்ன என்று நீங்கள்தான் சொல்லுங்கள், பார்ப்போம். பிறப்பின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறப்பின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதவை என்பதை எத்தனை முறை சொல்லி அலுப்பது?

''நான் உட்பட பலரும் சுட்டிக்கட்டியிருக்கிற சிக்கலான கையாளல் இந்தப்படத்தில் இருக்கிறதுதான். தீவீரவாதம் என்றாலே முஸ்லீம்கள் என்னும் தோற்றத்தை இந்தப்படம் தருகிறதுதான். கமல்ஹாசன் அவர்களுக்கு இப்போது என்று இல்லை, ஹேராம் படத்திலும் ‘இந்துத்துவா’ குறித்த அவருக்கு இருக்கும் தெளிவின்மை தெரியும். குருதிப்புனலிலும் தீவீரவாதம் குறித்த கோளாறான பார்வைகள் வெளிப்படும். அதை அவரிடம் உள்ள குழப்பங்களாகவும், ஒரு சிக்கலானப் பிரச்சினையைப் புரிந்து கொள்வதில்/அணுகுவதில் ஏற்படும் மயக்கங்களாகவுமே உணர வேண்டியிருக்கிறது."

இருக்கிறதுதான், உண்மைதான் என்று தான் போடுகிற மாதவராஜிற்கு கமலின் மீதான மயக்கம் மட்டும் தெளியவில்லை. ‘ஞானம்’ உள்ளவருக்கு எங்கிருந்து குழப்பங்கள் வருகின்றன? நாத்திகராய், பகுத்தறிவுவாதியாய் இருப்பதல்ல பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின்பால் அக்கறையுள்ளவராகவும், தனது ஒரு அசைவுகூட ஆதிக்கத்திற்குத் துணைபோய் விடக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதுதானே சமூக அக்கறையுள்ள கலைஞனின் பணி? கமலின் படங்களிலும் நடவடிக்கைகளிலும் புகைமூட்டம் மாதிரியான குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இந்த குழப்பம் கமலுக்கா, நமக்கா என்பதிலும் குழப்பம் இருக்கிறது. ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் கமல் தன்னை ஒரு இந்துபாசிஸ்டாகத்தான் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

ஆனாலும் மாதவராஜிற்கு நம்பிக்கையிருக்கிறது, கமல்ஹாசனை ‘வென்றெடுத்து விட முடியும்’ என்று. வாழ்த்துக்கள் தோழர். முடிப்பதற்கு முன்பு இரண்டு விஷயங்கள்.

1. ஜெயலலிதாவையே சகித்துக்கொண்டவர்கள் நீங்கள், கமல்ஹாசனை ஏற்றுக்கொள்வது கஷ்டமா, என்ன?

2. ‘பம்பாய்’ திரைப்படத்திற்கு விழா எடுத்ததைப் போல் ‘உன்னைப் போல் ஒருவனு’க்கும் நீங்கள் விழா எடுக்காமலிருக்க அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இன்ஷா மார்க்ஸ்!

35 comments:

கவின் மலர் said...

அன்புள்ள சுகுணா திவாகர்!

மாதவராஜ் என்ற தனிமனிதரின் கருத்துக்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் கருத்தாக நீங்கள் கருதிக் கொள்வது எப்படி என்று புரியவில்லை. தமுஎகச அந்தப் படத்திற்கு விருது கொடுக்கிறதா வசைகள் கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்! மாதவராஜை நீங்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்! அது பற்றி கவலையில்லை. அது எப்படி சரியாக தமுஎகசவைச் சேர்ந்தவர்களில் யார் பின்னூட்டம் போட்டாலும் அதை தமுஎகசவே போட்டதாக இணையத்தில் கருதிக்கொண்டு பேசுகிறீர்கள்...? தனிமனிதர்களின் கருத்துக்களை இயக்க்த்தோடு சம்பந்தப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

Anonymous said...

அன்பின் சுகுணா

இத்தனை தீவிரமாக இதனைப் பார்ப்பீர்கள் என்று நான் கருதியிருக்கவில்லை :-( மன்னிக்க. படம் குறித்த விமர்சனப்பார்வையாக இல்லாமல் வெறும் மொக்கைக்காக நான் எழுதியது உங்களது பார்வையி தீவிர விமர்சனத்துக்குள்ளாக்கப்படும் என்று நான் கருதவில்லை. வருந்துகிறேன் தோழரே! உங்களைக் கிண்டல் செய்து பார்க்கும் எண்ணமோ அல்லது விமர்சனத்தின் தீவிரத்தை திசைதிருப்பும் எண்ணமோ இல்லாமல் எழுதிய என்னுடைய வழக்கமான மொக்கைப் பதிவு அது. 'பிழைத்துப் போ' என்று விட்டு விடுங்கள்

Ashok D said...

சூடான சுவையான விவாதங்கள் ஆரம்பிக்கட்டும்.

Karthikeyan G said...

//ஆனால் எந்த அரசியலின் மீதும் அக்கறையற்று, அறத்தின் சார்பற்று குருட்டு ரசிகனாய் இருப்பதை விட மனநோயாளியாக இருக்கவே விரும்புகிறேன்//

Well said Sir!!

வால்பையன் said...

ஆனந்தவிகடன் விமர்சனத்தில் 42 மதிப்பெண்கள்!

கடைசியாக சொன்ன இன்ஸா மார்க்ஸ் இது தானா!?

மணிஜி said...

அடுத்த இன்னிங்ஸா சுகுணா?நீங்க ஃபுல் பார்மில் இருக்கிறீர்கள்..உண்மையில் உங்கள் எழுத்தின் அகலம் பிடித்திருக்கிறது..ஆனால் அந்த பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்கிறது

Unknown said...

:)

அதாவது சுகுனா, சில பேர் சிலபேரை பற்றி அவர்களின் நினைத்திருக்கும் பிம்பம் உடைந்து விடாமல் காப்பார்கள்.

அதான் நடந்துகிட்டு இருக்கு.

ஷாஜ் said...

இன்ஷா மார்க்ஸ்//// இந்த வரி தேவையற்றது

Anonymous said...

ஆசிப் அண்ணாச்சி தம்முடைய பதிவுகளில் சமூக அக்கறை மிளிர எழுதி இதுவரை படித்ததில்லை. கேலி, கிண்டல், நக்கல் இதைத் தாண்டி எதுவும் எழுதின மாதிரி தெரியவில்லை. ஆபத்தில்லாத முற்போக்கு யாவாரம் செய்பவர் என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அவரிடமிருந்து இப்படிப்பட்ட விமர்சன்ம் வந்திருப்பது ஆச்சர்யமானது அல்ல.

அர டிக்கெட்டு ! said...

எனக்கு ஆசிப் மீரனை பற்றி தெரியாது ஆனா இந்த முற்போக்கு கம்பேனி பிரைவேட் லிமிடேட் பற்றி ஓரவுக்கு பரிச்சையம் உண்டு.... மொதல்ல நீங்க பேர சரியா சொல்லுங்க சுகுணா...
அது தமுஎகச ... க for கலைஞர்கள் அதாவது இவங்க கோடம்பாக்கத்துக்கு ஆள்புடிக்க போனபோது சேத்துகிட்டது..
தமிழ் வீதீல போயி இந்த முற்போக்கு எழுத்தாளர்களின் அடுத்த லேன்டிங்கே அங்கதானே...விஜய் நடத்திய உண்ணாவிரத சீனுக்கு போய் வாழ்த்து சொன்ன கம்மூனிஸ்டுகளாச்சே இவங்க போயி அன்பே சிவ அவதாரம் எடுத்து இந்தியாவுல புரட்சிய கட்டினாரே காம்ரேட் கமல்.அவர விமர்சனம் பண்ணமுடியுமா?


அதுலையும் இந்த மாதவராஜ் இருக்காறே சரியான நார்சிஸ்டு.. அவர பாராட்டி வர பின்னூட்டத்த மட்டும்தான் போடுவார், விமர்சனம் பண்ணா போடமாட்டார், சரி அது அவர் உரிமை அதுக்காக தானே உருவாக்குன பிம்பத்த பாத்து தானே மயங்குனா நியாயமா..(அரசியல்வாதி ஒருகால முன்னவச்ச மாதிரி, எம்சீயாரு பேனா புடிச்ச மாதிரி, திருமா ak47 புடிச்ச மாதிரி தன்ன ஒரு போட்டோ புடிச்சு எல்லா எடத்துலையும் போட்டத பத்தி நான் சொல்லல...)

ஏதோ இந்த படத்துல மல்லையா கெட்டப்பு கமல பாத்து இவரு மயங்கி போய் எழுதல.. அவரோட பதிவுல குறிப்பிட்ட A Wednesday படத்த நீங்க பாத்திருப்பீங்க.. (இல்லன்னா உடனே பாருங்க)அது சரியான RSS Fascist படம். இசுலாமியர்கள நேரடியா கேவலப்படுத்தர படம், அத பத்தி ஒரு வார்த்தை எழுதுனாரா..ஒரு படி மேல போயி
'''''A wednesdayவில் இந்த அமைப்பின் மீதும், அரசு மீதுமான வசனங்கள் கடுமையாய் இருக்கும். இங்கே மெல்லிய முனகலாய் மட்டுமே ஒலிக்கிறது'''''
இப்படி ஒரு பாராட்டு வேற. ஒரு வேள நம்ம காமுரேடு பாலிவுட்டுக்கு குறிவக்கிறாரோன்னு யோசிக்காதீங்க இன்னும் இருக்கு

கொஞ்ச நாளைக்கு முன்ன காஞ்சிவரம் படத்துக்கு விருது பத்தி ஆகாஓகோ பிரகாசு ராஜூன்னு எழுதியிருந்தாரு நம்ம காமுரேடு... என்னாடா அது கம்யூனிசத்த கேவலபடுத்தற படமாச்சேன்னு யோசிக்காதிங்க இன்னும் இருக்கு

அதுக்கும் முன்னால சினிமா ஈரோக்கள பத்துன பதிவுல காமுரேட் கமல் பிரகாசு ராஜூ பற்றி பெருமையா எழுதியிருந்தாரு... ஏன்யா அவன் சொந்த வாழ்க்கையில பொரம்போக்கா இருக்கான் இப்படி பாராட்டலாமான்னு யோசிக்காதிங்க..
ஏன்னா சொந்த வாழ்கை வேற அரசியல் வேற, புரட்சி பத்தி பேசலாம் அதுக்காக புரட்சி பண்ணவாமுடியும், ... அதான் சீபிஎம், அதான் தமுஎகச அதான் காம்ரேட் மாதவராஜ். இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல.. அவ்ளோதாம்பா

Jerry Eshananda said...

வழி மொழிகிறேன்.

ஜோ/Joe said...

அன்பே சிவம் படம் பற்றி இது போல (3 பதிவு இல்லையென்றாலும் குறைந்த பட்சம் ஒன்று) எழுதியிருக்கிறீர்களா ? எழுதியிருக்கிறீர்கள் என்றால் அறியத் தரவும் ..அதிலும் கமலை மத ரீதியாக கடித்து குதறியிருக்கிரீர்களா என பார்க்க ஆவலாக உள்ளேன் ..இருந்தால் ராமகோபாலனும் நீங்களும் ஒரே அணியில் நிற்பதை பார்க்கலாம் என்ரு ஒரு ஆசை தான் :)

முகவை மைந்தன் said...

//இன்ஷா மார்க்ஸ்!//

அல்லான்ற அரபிச் சொல்லுக்கு கடவுள்னு பொருள். அப்ப மார்க்சை கடவுள்ன்றீங்களா?

//‘ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் உள்ள அரசியல்’ குறித்து உங்களுக்குப் பாடம் எடுக்க நான் தயாராயில்லை.//

நம்ம மாதவராஜ் இப்படி எழுதிட்டரேன்னு எனக்கும் வருத்தமா இருக்கு தோழர். அவர் இப்படி எழுதறதுக்கு பின்னாடி என்ன அரசியல் இருக்கும்னு நினைக்கிறீங்க?

Anonymous said...

//பட விமர்சனம் எழுதியபோது நிறைய நண்பர்கள் பார்ப்பனர்களாய் என்னால் அறியப்படாதவர்கள்./
யாரு என்ன ஜாதின்னு தெரிந்து கொண்டு தான் அடுத்த வேலையா? இந்த லட்சணத்துல ஜாதி ஒழிப்பு பேச்சு வேற

ஜோ/Joe said...

////இன்ஷா மார்க்ஸ்!//

அல்லான்ற அரபிச் சொல்லுக்கு கடவுள்னு பொருள். அப்ப மார்க்சை கடவுள்ன்றீங்களா?//

என்ன கொடுமை முகவை மைந்தன் இது?

'இன்ஷா அல்லா' என்றால் இறைவனுக்கு சித்தமானால் என பொருள் . 'இன்ஷா மார்க்ஸ்' என்றால் 'மார்க்ஸ்-க்கு சித்தமானால்' -ன்னு பொருள்.

ஹொக்காலஹோளி said...

மாதவராஜ், ஆசிப் போன்றவர்களின் முற்போக்கு முகமூடியும் கிழித்தெறியப்பட்டது மகிழ்ச்சி. குறிப்பாக செருப்பு பதிவர் இதுவரை போலியாக அவருக்கு அவரே கட்டமைத்து வைத்திருந்த அறிவுஜீவி பிம்பத்தை அணுகுண்டு போட்டு சிதற அடித்ததற்கு வாழ்த்துக்கள். திருவாளர் செருப்பு போன்றவர்கள் தங்களை இலக்கிய பிடுங்கியாக தாங்களே அறிவித்துகொண்டு, அதற்கு சாட்சியாக எனக்கு பாஸ்கர் சக்தியை தெரியும். ரமேஷ் வைத்யாவை தெரியும் என்று பில்டப் கொடுத்து வந்தார்கள். செருப்பை செருப்பாலேயே பாஸ்கர் சக்தி அடிக்கும் சூழலை தாங்கள் ஏற்படுத்தி தந்திருக்கிறீர்கள். நன்றி திவாகர்.

Anonymous said...

when all you have is an hammer, everything will start looking like a nail.
உங்களிடம் இருப்பது சுத்தியல் மட்டுமே என்றால், எல்லாமே ஆணியாகத்தான் தெரியும். உங்களிடம் இருப்பது மாற்றுபார்வை மட்டும்தான் என்றால், படமும் இப்படிதான் தெரியும்.

Anonymous said...

//ஆசிப் அண்ணாச்சி தம்முடைய பதிவுகளில் சமூக அக்கறை மிளிர எழுதி இதுவரை படித்ததில்லை. கேலி, கிண்டல், நக்கல் இதைத் தாண்டி எதுவும் எழுதின மாதிரி தெரியவில்லை. ஆபத்தில்லாத முற்போக்கு யாவாரம் செய்பவர் என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம்.//

ரொம்பச் ச்ரியாச் சொன்னீங்க அண்ணாச்சி :-) தெரிஞ்சதைத்தானுங்களேஎ செய்ய முடியும் :-) உலக அரசியலோ வாசிப்பனுபவமோ சுயசிந்தனையோ இல்லாதவன் எப்ப்டி முற்போக்க்கு வியாபாரம் செய்ய முடியும்? அதைச் செய்யும் வியாபரிக்ள் நிறைந்திருப்பதால் பெரும்பாலும் அதீத உணர்ச்சிவசப்படலுக்கு ஆளாகாமல் மொக்கைகளிலேயே காலத்தைக் கழித்து விடுகிறேன் அதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது

உண்மை said...

"அடிமனதில் ஒளிந்திருக்கும் பெரும்பான்மைவாதம் என்பது மனநோய் இல்லையா ஆசிப்?"

இது அப்படியே உங்களூக்கும் பொருந்திப்போவது ஆச்சரியம்தான். 90% மக்கள் ஒரு 3% மக்களை ஒட்டு மொத்தமாக ப்ராண்ட் பண்ணுவதை என்னவென்று சொல்லுவது??

பெரும்பான்மைவாதம் பற்றி நீங்கள் பேசுவது காமெடிதான்.. எனகென்னவோ ஹிட்லர் ஹிரோஷிமாவிற்கு கண்ணீர் விட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது..

PRABHU RAJADURAI said...

"புரட்சி பத்தி பேசலாம் அதுக்காக புரட்சி பண்ணவாமுடியும், ..."

:-))

ரவி said...

அடிச்சு ஆடுங்க !!!

Pot"tea" kadai said...

கமலுக்கு நன்றி. சுகுணாவைத் தொடர்ச்சியாக மூனு பதிவு எழுத வைத்ததுக்கு.

***

ராசா, வூட்டு முகவரிய கொஞ்சம் தனிமடல்ல அனுப்பி வெக்க முடியுமா? பிளீஸ்! இந்த தரம் ஏமாத்தாம பார்ஸல் பண்ண்டறேன்.

அந்த கருமாந்திரத்தை ரெண்டுதரம் படிச்சும் புரியலை. உனக்கே அனுப்பி வெச்சுடறேன்.

உம்பர்த்தோவே போற்றி போற்றி

Anonymous said...

இன்ஸா மார்க்ஸா?எந்த மார்க்ஸ்? காரல் மார்க்ஸா அல்லது அ.மார்க்ஸா?

உங்களுக்கு அ.மார்க்ஸை ரொம்ப பிடிக்கும்னாங்க..அதுக்காக இப்படியா?

வினவு said...

பார்ப்பன இந்துமதவெறியின் பாசிசக் கருத்துக்கள் 'இந்துக்களின்' பொதுப்புத்தியில் விஷம் போல ஏற்றப்பட்டிருக்கும் சூழலில் கமலின் இந்தப்படம் இன்னும் அதிகமாக நஞ்சை சினிமா எனும் வலிமையான ஊடக்த்தின் மூலம் ஏற்றுகிறது.

இந்தப்படத்தின் கருவை அது சொல்ல வந்த செய்தியைக்கூட புரிய முடியாத அளவிற்கு பொதுப்புத்தி மட்டுமல்ல 'முற்போக்கு' புத்தியும் தரம் தாழ்ந்தே இருக்கிறது. சிவசேனா செய்த கலவரம், படுகொலைகளை மறைத்து ஒரிரு ஆண்டுகளுக்குள் வரலாற்றையே புரட்டி கலவரத்திற்கு இரு மதத்தாரும் காரணம் என்று பம்பொய் படமெடுத்த மணிரத்தினத்திற்கு பாராட்டு விழா நடத்திய இந்த 'முற்போக்கு' தண்டங்கள் கமலுக்கு ஞான ஒளியைச்சுழல விட பிரயத்தனம் செய்வதுதான் விமரிசனத்திற்குரியது.

சமூக அறிவு இல்லாமல் படம் பார்க்கும் பாமர ரசிகனைக்கூட உண்மையை எடுத்துச் சொல்லி புரியவைத்துவிட முடியும். ஆனால் அறிவு இருப்பது போல வார்த்தைகளை கொட்டியவாறு வேடமிடும்'முற்போக்கு'களுக்கு மட்டும் புரியவைப்பதற்கு நாம் கடுமையாக போராட வேண்டும்.

தொடர்ந்து இந்தப்படத்தின் உண்மையை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் எடுத்தியம்பும் சுகுணாவுக்கு வாழ்த்துக்கள்.

நேரமிருந்தால் வினவிலும் இந்தவிமர்சனங்களைப் பற்றி எழுதுகிறோம்.

Anonymous said...

எப்படியோ போலி டோண்டு விசயத்துல இருந்து கவனத்த திசை திருப்பியாச்சு. மேட்டர் ஓவர்.

Unknown said...

சுகுணா, ஏன் இவ்வளவு எழுதற உங்களுக்கு இது முடியலையா ;)))) அரசியல் தொடர்பான கட்டுரைகள் எடுத்து வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை... ஒடுக்கப்பட்டவர்களின் வலி அவர்களுக்குத்தான் தெரியும், பொத்தாம் பொதுவாக பேசுகிறீர்கள் க்ளாஸ் எடுக்கிறேன் என்று சொல்வதெல்லாம் சரி நண்பரே. வலி என்பது பொது. அதை உணர சிறுபான்மையினராக இருந்தால் தான் முடியும் என்பது சரியல்ல. ஓரொண் ஒண்ணு என்று நீங்கள் சொல்வது புரியவில்லை, ஏனெனில் தமிழில் கற்றவில்லை, மேலும் கணக்கென்றால் எமக்கு எப்போதும் பிணக்குத்தான். மற்றமையை நாங்கள் உணரவே செய்கிறோம், அதைப் பற்றி பேசும்போதும் எழுதும் போதும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறோம். இந்த நிராகரிப்பும் வலிதானே? யாகாராவாயினும் நாகாக்க, என்று சொன்னவர் உங்களுக்கு முட்டாள். அப்படித்தானே?


//கட்டமைக்கப்பட்ட அவர்களது பொதுப்புத்தி தொந்தரவுக்கு உள்ளாகிறது.// யாரும் யாருடைய புத்தியையும் கட்டமைக்க முடியாது, சுயபுத்தி எல்லோருக்கும் இருக்கும் தோழர். எதுவும் ஒரு எல்லை வரைதான். நேரம் இருக்கும் போது இதை வாசித்துப் பாருங்கள் http://umashakthi.blogspot.com/


கவிதை இருக்கவே செய்கிறது ஆற்றுப்படுத்த, கவலை வேண்டாம் அன்பின் தோழரே ;)))

Anonymous said...

உமாஷக்தியின் பின்னூட்டம் கட்டற்ற காமெடி. இப்படியே பின்னுங்கள் உமாஷக்தி.

Anonymous said...

தனிமனிதர்களின் கருத்துக்களை இயக்க்த்தோடு சம்பந்தப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

அய்யா கவின், இதுவும் தனிப்பட்ட கருத்தா அல்லது உங்கள் இயக்கத்தின் கருத்தா?

இது உங்கள் இயக்கத்தின் கருத்து என்றால், அந்த இயக்கத்தில் உங்களுடைய ரோல் என்ன?

கமலின் பார்ப்பன-இந்து வெறி திரைப்படம் குறித்து உங்களது இயக்கத்தின் கருத்து என்ன?

தயவு செய்து தெரியப்படுத்தவும்.

Anonymous said...

enna uma shakthi,

indha pudungi ungalukku baghil solluma enna ... oorunu onnu ... oorunnu rendu kathukunga ... vinavu puratchin pudangiga kittayaum keetu theringukunga ... indha puraratchi pudangikkuki avanga vakkalathu vaanguranga ... idhe ma ka ida aakal dindukkalukku poyi idhe suguna enda oodu vathi companyiyila veela senji evvalavu sambajicharu ... evvaluvu panatha than annan perla vattikku vittaru appadeendaradum visaariiuchu sonna nalla irukkum
appurani
madappanikki
pullamar suguna
badhil solvara?

அது சரி(18185106603874041862) said...

//
படைப்பு என்பது படைப்பாளியின் துணையில்லாமலேயே அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறதா மாதவராஜ்?
//

இல்லை...நிச்சயமாக இல்லை....அதுவும் கமல்ஹாசன் என்கிற போது மிக மிக நிச்சயமாக இல்லை... தன் படத்தின் உருவாக்கத்தில் கமல்ஹாசனின் ஆளுமையை எவரும் குறைவாக மதிப்பிட்டு விடமுடியாது...

ஆனால், கமல்ஹாசன் பொலிட்டிக்கல்லி கரெக்ட் என்ற நிலையை விட்டு வெளி வந்தவன்...

//
பிளாக் மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்காமல் துரோகால், வெட்னெஸ்டே மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற கமலின் தேர்ந்தெடுப்பிற்குப் பின் எந்த அரசியலுமே இல்லையா தோழர்?
//

குருதிப் புனல் ஒரு சாதாரண போலீஸ் ஆஃபிஸர் எப்படி தீவிரவாததிற்கு துணை போகிறான் என்று சொல்ல வந்த படம்....அவனும் ஆசாபாசங்களுக்கும், மிரட்டலுக்கும், பயத்துக்கும் அடிமையான சாதாரண மனிதன் தான் என்று சில/பல‌ போலீஸ்காரர்களின் மறுபக்கத்தை காட்ட விரும்பிய படம்....

//
ன்பது தோழரின் வாதம். சினிமா பற்றிய ஞானம் உள்ளவர் இந்துப்பாசிஸ்டாக இருக்க முடியாதா என்ன? அதை விடக்கொடுமை அந்த ‘ஞானத்தை’ பாசிசத்தை நியாயப்படுத்த பயன்படுத்துவது இல்லையா?
//

சினிமா ஞானத்திற்கும் பாசிஸ்டாக இருப்பதற்கும் சம்பந்தமில்லை....உண்மை! ஆனால், எது பாசிசம் என்பதற்கு உங்கள் வரையறை என்ன?? அந்த பாசிஸத்தை நிலை நிறுத்த குண்டு வைப்பவர்கள் யார்??

//
பிறப்பின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறப்பின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதவை என்பதை எத்தனை முறை சொல்லி அலுப்பது?
//

மொக்கையான வாதம்! அந்த குறிப்பிட்ட கருத்து பிறப்பின் அடிப்படையில் அல்ல, இப்படித் தான் இன்றைய நிலை இருக்கிறது என்ற நிகழ்கால சூழ்நிலையின் அடிப்படையிலும் இருக்கலாம், தேவர் மகனில் வந்தது போல!

yohesh said...

vinavin karuthai valimoligiren. vinavil innum kathirama vimarisanthai yethir parthen. thozhargal time kidaicha yeluthikiren yendru sonathu sattru yemattrame. kandippaga yelutha vendum. by yogesh

அ சொ said...

Mariyathaikuria Suguna Diwakar avargalukku,
Unnai pol oruvan..perithaga oru pathipai ennul err padutha villai...en nanbargalum ethey karuthai than kurinargal. Common man adipadaiyaga vaithu mathavan,seeman naditha "evano Oruvan" padam erpaduthiya oru karuthai kooda ep padam erpadutha villai endre karuthukiren. evano oruvan thiraipada vimarsanam nengal eluthinirgala endru enaku teriavillai,enathu vendugol..nenge enthe iru thiraipadathaiyum opitu ungal karthukalai eduthuraikumaru ketu kolgiren - Arun

kanagu said...

ungal valaipadhivil naan padikkum mudhal padhivu ithu...

ennai porutha varai oru padathai padamaga paarpathai vituvitu naam ulsendru paarthomeyaanal ithu pol aayiram prechanaikalai kaana mudiyum...

kamal oru nalla kalaignan... avar sevai ethuvum seiyavillai kalaiulagathirku.. avar paniayai avar sirappaga seikirar..
avalave..

oru vishayam mattum solli kolla virumbukiren.. yaaraum avarkalathu samugathai vaithu pothupaduthaatheerkal... muslim kalidan athai than seikirom... athaye vituvida vendum enum podhu... paarppanarkal endru neengal meendum podhupaduthuvathu... nalathai vida theemaiyaiye vilaivikkum...

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் சார்

Anonymous said...

உங்கள் விமர்சனங்களைப் படித்தேன். மிக வெளிப்படையாகத் திட்டியிருந்தீர்கள். மிகச் சரியான விமர்சனம்.

நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. 'Wednesday' படம் பார்த்தேன். அதுவே சுமாரான படம் தான். கமல் அதை எடுக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே நினைத்தேன் கமல் தன் 'தேசபக்தி'ச் சட்டையை மாட்டிக்கொள்ளப் போகிறார் என்று.

டிரெய்லரில் அவர் வரிக்கு வரி "போராளிகள்" என்று சொன்னபோதே எனக்கு கடும் எரிச்சல். தமிழ்நாட்டில் 'போராளிகள்' என்ற வார்த்தையுடன் தொடர்புடைய ஒரே ஆட்கள் விடுதலைப் புலிகள் தான். ஆக அவர்களுக்கு எதிராக அவர் செய்த அரசியல் தான் இந்தப் படம்.

இன்று விஜய் டி.வியில் கமலுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. அதில் பங்கேற்ற ஒரு பெண் அப்படியே கமலைக் கட்டிப்பிடித்து அழுவேன் என்று அழுகிறார். இன்னொருவர் பம்பாய் இரயில்வே ஸ்டேஷனில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நேராகப் பார்த்தவர். அவரும் அழுதார். இவர்கள் மாதிரி 'காமன்மென்' எப்படி தீவிரவாதப் போராட்டங்களை மதிப்பிடுவார்கள். 'பயங்கரவாதம்' என்றுதானே.

இப்படி எளிதில் தங்களை பொதுமக்களிடமிருந்து தனிமைப் படுத்திக்கொள்ளும் செயலை தீவிரவாதிகள் செய்யாமலிருப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. அதிகாரத்தின் மீதான வெறுப்பு மக்களின் மேல் காட்டப்படும்போது அதிகாரங்கள் அந்த மக்களை தீவிரவாதிகளின் போராட்டத்திற்கு எதிராக எளிதில் திருப்பிவிடமுடியும்.

அதைத்தான் இந்தப்படமும் செய்திருக்கிறது.