Saturday, May 15, 2010

வினவு- முகிலன் - சந்தனமுல்லை வாதங்களைத் தொடர்ந்து... தடை-தணிக்கை-தண்டனை...

சந்தனமுல்லையின் ‘முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா?’ என்கிற பதிவிற்காக எழுதப்பட்ட பின்னூட்டம். சற்றே நீண்டுவிட்டதால் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.


நன்றி முகிலனுக்கு.

அனேகமாக சுமஜ்லாவின் பர்தா பதிவு குறித்த சர்ச்சையில் நான் மற்றும் வினவு ஆகியோரின் பார்வைகள் மற்ற பதிவர்களிடமிருந்து மாறுபட்டதாக இருந்தமையால் இத்தகையதொரு பரிந்துரைப்பு எழுந்திருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் எனதோ வினவின் நோக்கமோ முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெண்ணடிமையை ஆதரிப்பதில்லை, மாறாக அதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் வெளிப்பட்ட இந்துமனோபாவப் பார்வைகளை விமர்சிப்பதும் கூடுதலாக மதங்களைக் கடந்த ஒரு ஆணாதிக்க எதிர்ப்பை வலியுறுத்துவதும்தான். முஸ்லீம் சமூகத்தில் மட்டும்தான் ஆணாதிக்கம் இருப்பதைப் போன்ற பிரமை, பெரும்பாலான ’இந்துக்களுக்கு’ இருக்கிறது. அதற்கு பர்தா என்கிற வடிவம் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்துமதம் என்பதும் ஆணாதிக்கத்தில் இஸ்லாத்துக்குச் சளைத்ததில்லை என்பதை நிறுவுவதற்காகத்தான் அவ்வளவு பாடு. இங்கேயும் கூட சந்தனமுல்லை எழுதியிருக்கும் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், பத்வா விதித்திருக்கும் தியோபந்த் முஸ்லீம் அமைப்பு, ‘டூ லேட்’தான். ஏனென்றால் இதையெல்லாம் நமது லோககுரு முன்பே சொல்லிவிட்டார். ஜெயேந்திரனோ அல்லது இந்த முஸ்லீம் அமைப்போ அடிப்படையில் ஆண்கள் அமைப்பு என்ற புரிதல் அவசியம் தேவை. சமயங்களில் அங்கு ஆண்கள் இல்லாவிட்டாலும் ஆணாதிக்கக் கருத்தியலை உள்வாங்கிக் கொண்ட பெண்களே இத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவதற்குப் போதுமானவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இந்துத்துவ அமைப்புகளின் மகளிர் அமைப்புகளைச் சொல்லலாம்.

எனவே வினவு மற்றும் எனது விழைவு, இது முஸ்லீம் விரோத வாதங்களாக, இந்துத்துவச் சார்பு விவாதங்களாகப் போய்விடக்கூடாது என்பதே தவிர, முஸ்லீம் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றுவது இல்லை. பெண்கள் வேலைக்குப் போவது என்பதை மத அடிப்படைவாதிகள், குறிப்பாக ஆண்கள் எதிர்ப்பதன் காரணம் மிக வெளிப்படையானது. முதலாவதாக, ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வருவது என்பதே ஆணுக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது. ‘அவள் தன் கண்காணிப்பு எல்லைக்கு வெளியே போய் விட்டாள்’ என்று கருதத் தொடங்குகிறார்கள். ‘வேலைக்குப் போவது’ என்பது வீட்டை விட்டு வெளியே வருவதன் ஒரு வடிவம் மட்டுமே. பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது, குறிப்பாக அரசியலில் பங்கெடுத்துக் கொள்வது என்கிற வடிவத்தை ஆண்கள் முடிந்தவரை தீவிரமாக எதிர்க்கிறார்கள் அல்லது அப்படி வருகிற பெண்ணின் ஒழுக்கம் குறித்து சந்தேகம் கொள்கிறார்கள். ஆக, இங்கே காஞ்சி ஜெயேந்திரன், முஸ்லீம் அமைப்பு மட்டுமில்லாது பொதுவாக அனைத்து சராசரி ஆண்களுக்குமே ஒரே மாதிரியான கருத்தோட்டம்தான். ‘வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்’ - ‘பெண்கள் வேலைக்குப் போவது ஹராம்’ - ‘பொதுவெளிக்கு வருகிற பெண் ஒழுக்கங்கெட்டவள்’ - ஒத்திசைகிற இந்த குரலிசைகளின் விகிதம் கூடக் குறைய இருந்து சுருதி பிசகலாமே தவிர பொதுவாக ஆண்மனம் என்பது வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணைச் சந்தேகிக்கவே செய்கிறது. இதன் அடிப்படையை யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். அவன் பெண்ணை மட்டும் சந்தேகிக்கவில்லை, வீட்டிற்கு அப்பால் அவள் சந்திக்க நேர்கிற தன்னைப் போன்ற ஒரு ஆணின் மீதும் அவனுக்கு நம்பிக்கையில்லை. தான் ஒரு ஆணாயிருப்பதாலேயே, அவன் பெண்ணை நம்ப மறுக்கிறான். இரண்டாவதாக வேலைக்குப் போவதன் மூலம் பெண்ணுக்குக் கிடைக்கும் பொருளாதார ரீதியான தற்சார்பும், இன்னொரு உலகத்தை அறிந்து கொள்கிற வாய்ப்புகளும், தேர்ந்து கொள்கிற சாத்தியங்களும் ஆணுக்குப் பெண்ணின் மீது அச்சத்தை ஏற்படுத்திக் கண்காணிப்பை இறுக்கச் செய்கிறது.

ஆனால் இந்த விவாதத்தில் பின்னூட்டமிட்டிருக்கிற முஸ்லீம் ஆணாகிய ஷர்புதீனின் கருத்து எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. ஒருகாலத்தில் அட்டைப்படத்திலிருக்கிற நடிகை சீதாவின் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதே கண்டிப்புக்கு உரியதாக இருந்தது. ஆனால் இன்று வீட்டோடு ‘மானாட மயிலாட’
பார்க்கிறோம். ஒரு காலத்தில் தமிழ்த்திரையில் கன்னத்தில் முத்தமிடுகிற காட்சி வரும்போது கூட தங்கள் குழந்தைகளைத் திரையரங்கு இருக்கைக்குக் கீழே தலையை அழுத்துகிற பெற்றோர்கள் இருந்தார்கள். இப்போது உதட்டோடு உதடு பொருத்துகிற முத்தக்காட்சிகள் தமிழ்ச்சினிமாக்களில் சாதாரணம். இதை முஸ்லீம்களும் குடும்பத்தோடு பார்க்கத்தான் செய்கிறார்கள். ஆக கலாச்சாரம்-தணிக்கை-கண்டிப்பு மாதிரியான விஷயங்களுக்கு மாறாக சமூகச்சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தை மத அடிப்படைவாதிகளாலோ கலாச்சார அடிப்படைவாதிகளாலோ தடுத்துவிட முடியாது என்பதோடு அந்த சமூகச்சூழல் மாற்றங்கள் அவர்களுக்கும் சில நன்மைகளை விளைவிக்கத்தான் செய்கின்றன. ஆக, சமூகச்சூழல் மாறும்போது தணிக்கை மற்றும் தண்டனைகளை மாற்றிக்கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் சுதந்திரத்தின் எல்லைகளை நீட்டிக்கிறார்கள். ஆனால், பிடியைப் பத்திரமாக இறுக்கிக்கொள்கிறார்கள். இது ஒன்றும் புரிவதற்கு அவ்வளவு கஷ்டமானது அல்ல. சபரிமலைக்கு மாலை போடுவதற்கு மதுவையும் புகையையும் தவிர்ப்பது என்பது ஒரு காலத்தில் அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் மதுவை விலக்குவதைப் போல புகையை விலக்குவது அவ்வளவு எளிதானதில்லை என்பதால், ‘சிகரெட் மட்டும் பிடித்துக்கொள்ளலாம்’ என்று ‘விதி’ தளர்த்தப்பட்டது. (சில இடங்களில் தனிக்குவளையில் மதுவும் அருந்தலாம் என்கிற ‘சிறப்பு மது தரிசனச் சலுகையும்’ உண்டு.) எப்படியிருந்தபோதும் கண்காணிப்பு-சுதந்திரம், தணிக்கை-மீறல், தண்டனை-எதிர்ப்பு என்கிற எதிர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. சுதந்திர விருப்பம், மீறல் மற்றும் எதிர்ப்பின் வெளி அதிகமாகிக் கொண்டே போகும்போது கண்காணிப்பு-தண்டனை-தணிக்கையை வலியுறுத்துகிற அடிப்படைவாதிகள் சட்டகங்களையும் வலைகளையும் தூக்கிக்கொண்டு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்று அடிப்படையில் முஸ்லீம் சமூகம் குறித்து பொதுவெளியில் நடக்கிற பெரும்பாலான விவாதங்கள் முஸ்லீம் சமூகங்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் அல்லது அரைகுறைப் புரிதல்களுடன் தான் நடைபெறுகின்றன. பர்தா, பத்வா, தாலிபான்கள் என்கிற தாங்கள் அறிந்த சில விஷயங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக ‘முஸ்லீம் பெண்ணடிமைத்தனம்’ குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிற பெரும்பாலானோரைத்தான் காண முடிகிறது. சந்தனமுல்லை பதிவில் நாஸியா என்னும் முஸ்லீம் பெண் சொல்வதைப் போல இந்த ‘பத்வா’க்களைப் பெரும்பாலான முஸ்லீம்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. திண்டுக்கல்லில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தோடு இணைந்து பல கூட்டங்களை நடத்தியபோது, அந்த அமைப்பின் நகரச்செயலாளராக இருந்த முஸ்லீம் இளைஞர் ஒரு தகவலைச் சொன்னார், ‘இஸ்லாத்தில் இசை என்பதே ஹராம்’ என்றார். உண்மையில் இது எனக்கு விளங்கவில்லை. அப்படியானால் நாகூர் அனிபா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இறுதிக்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மைக்கேல் ஜாக்சன் வரை என்ன செய்யலாம்? எனக்குப் பாங்கோசையே அற்புதமான இசையாக இருக்கும். சமயங்களில் அரபுச்சேனல்களில் அரபுமொழி கேட்டுக்கொண்டிருப்பேன். அது செய்தியா, தொழுகையா, என்ன நிகழ்ச்சி என்று தெரியாவிட்டாலும் அரபுமொழி உச்சரிக்கப்படும் விதமே ஒரு இசையாய் இருக்கும். அப்படியானால் இசையை ‘ஹராம்’ என்று சொன்ன அந்த முஸ்லீம் நண்பரின் கருத்தை என்ன சொல்வது?

இதுமாதிரியான விஷயங்களுக்கு முதலில் இஸ்லாமியக் கலாச்சாரத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். அவர்களுடன் ஊடாடி உரையாடத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம் சமூகம் ஒரு மூடுண்ட, இறுக்கமான சமூகம் என்கிற கருத்து நம் அனைவருக்குமே இருக்கிறது. (இதில் முற்போக்காளர்களும் அடக்கம்). இது நம்மைப் பல தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்கிறது என்று கருதுகிறேன்.

எப்படி இருந்தபோதிலும் நான் இதுவரை சந்தனமுல்லையின் பதிவுகளைப் படித்ததில்லை. ஆனால் நண்பர் பா.ராஜாராம், ‘சந்தனமுல்லை பதிவில் என்னைக் குறித்தும் ஒரு குறிப்பு பின்னூட்டம் இருப்பதாகத்’ தெரிவித்ததை ஒட்டி படிக்க நேர்ந்தது. நல்ல குறிப்பிடத்தக்க நடை. இறுதியாக இந்த விஷயத்தையும் நண்பர்கள் முடிந்தால் யோசிக்க வேண்டுகிறேன். முஸ்லீம் சமூகம் இறுக்கமான பிற்போக்குச் சமூகம், முஸ்லீம் பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்கிற பொதுக்கருத்து நம் எல்லோரிடமும் இருக்கிறது. அது முற்றுமுழுக்க பொய் அல்லது தவறான கருத்து என்றும் சொல்லி விட முடியாது. ஆனால் ஷகீலா, மும்தாஜ், குஷ்பு என்று தமிழ்ச்சினிமாவின் கவர்ச்சிப்பிம்பங்களாக இட்டு நிரப்பப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லீம் பெண்களே.

தோழமையுடன்

சுகுணாதிவாகர்.

14 comments:

எம்.எம்.அப்துல்லா said...

சொல்ல இன்னும் நிறைய இருக்கு சுகுணாண்னா.

ஷர்புதீன் said...

எனது கருத்தையும் கையாண்டதற்கு நன்றி!

வருங்காலத்தில் ( 2025 ) எனது மகள் அரக்கால் சட்டை அணிவது சாதரணமானதாக தெரிவதற்கு இன்று (2010) அரக்கால் டவுசரோடு பலர் அலைவதுதான் காரணம் , அதை பற்றிய/குறித்து பேசினால் இன்றய பெண்கள் , 1998 பற்றி கருத்து கேட்பார்கள்., இவ்வாறு தொடர்ந்து போய் கொண்டிருக்கும்., இப்ப நாம்/நான் என்ன செய்ய ????
--

Ashok D said...

உணமையில் பெண் எனப்படுபவள் ஆணைவிட புத்திக்கூர்மையும் மனவலிமையும் மிக்கவள்.

நிற்க! பெண் வீட்டில் கணவன் குழந்தைகளுக்கு உணவு தயாரித்தல், வீட்டை சுத்தப்படுத்துதல், பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல் இப்படி பல வேலைகளுக்கும் இடையே கிளை பறப்பும் வேலைகளும் அதிகமே. அதை ஒரு ஆணால் பெருமையாய் ஒரு காலும் செய்யமுடியாது.(உதவியா இருக்கலாம் அவ்வளவே)

அலுவலக வேலை என்பது ஒன்றையே தொடர்ந்து செய்வது அதற்கு புத்திக்கூர்மையும் மனவலிமையும் தேவையில்லை. அது ஆண்களுக்கே லாய்க்கு.

உடனே பெண்னை வீட்டு வேலை செய்யசொல்லவது பெணணடிமைதனம் என்று சொல்லிக்கொண்டு வராதீர்கள்.

நான் சொல்வது என்னவென்றால் ஆண் வேலைக்கு போவதும் பெண் வீட்டை கவனித்துக்கொள்ளுதலுமே சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

//வீட்டிற்கு அப்பால் அவள் சந்திக்க நேர்கிற தன்னைப் போன்ற ஒரு ஆணின் மீதும் அவனுக்கு நம்பிக்கையில்லை. தான் ஒரு ஆணாயிருப்பதாலேயே, அவன் பெண்ணை நம்ப மறுக்கிறான்//
பதிவில் அப்பட்டமான உண்மையான வரி.


பின்னூட்டம் சீரியஸாக இருப்பதால் ஒரு சின்ன ஜோக்.

நீங்கள் சித்தப்ஸ்(பா.ரா) கவிதைகளை விகடனுக்கு அனுப்பி தேறியதை பளிஷ் பண்றாங்களாமே.. அவரை விட நான் நன்றாக எழுதுவேன்.. அவர் ’அன்பு ஒரு கிலோ... மக்கா 1/2 கிலோ’ன்னு தானே எழுதறார். நம்மள கொஞ்சம் கவனிக்கறது... அப்புறம் ஜோக் முடிஞ்சுபோச்சு எல்லாம் எழுந்து வீட்டுக்கு போங்க.

ரவி said...

ஒப்பீட்டளவில் இந்து பெண்ணடிமைத்தனத்தைவிட முஸ்லிம் பெண்ணடித்தனம் குறைவு ஆகவே வெரிகுட் என்பதைப்போல இருக்கிறதே ?

நேசமித்ரன் said...

சுகுணா திவாகர் சார்

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்ன்னு தோணுது

நன்றி

Anonymous said...

210l இப்படி பத்வா கொடுப்பது காமெடியாக இல்லையா?.
இந்-துக்களிடம் பத்வா தொல்லை இல்லையே.அதையாவது ஒப்புக் கொள்விர்களா.சாதி பஞ்சாயத்துகள் உண்டு அவை அனைத்து இந்-துக்களுக்கும் செல்லாது. காமகோடி மடம இப்படி பத்வா கொடுப்பதில்லை. உடைக் கட்டுப்பாடு இல்லை.இந்-து பெண்கள் கோயில்களுக்கு போகிறார்கள் தடை இல்லை. முஸ்லிம் பெண்கள் அப்படி மசூதிகளுக்கு போக முடிகிறதா.அதை விடுங்கள், பூர்விக சொத்தில் சம பங்கு உண்டா. ஏன் சார் இல்லை. இந்-துப் பெண்ணுக்கு உள்ள சட்ட உரிமைகள் அவர்களுக்கு இல்லையே ஏன் என்று சொல்வீர்களா.

Anonymous said...

//யோபந்த் முஸ்லீம் அமைப்பு, ‘டூ லேட்’தான். ஏனென்றால் இதையெல்லாம் நமது லோககுரு முன்பே சொல்லிவிட்டார்.//

லோககுரு இஸ்லாம் மதத்தை விட வயதில் முதியவரா?! தியோபந்த் முஸ்லீம் அமைப்பு குரான் மற்றும் hadithகளில் இருக்கிறதைத்தான் சொல்ல முடியும். இஸ்லாம் மதத்தில் bidaவிற்கு அனுமதி இல்லை.

//இந்த ‘பத்வா’க்களைப் பெரும்பாலான முஸ்லீம்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.//

அப்போ லோககுரு சொன்னதை எவ்வளவு பேர் கேட்டார்கள்?!

நீங்கள் சொல்வதை பார்த்தால் சொல்லில் ஒன்றும் குற்றமில்லை. எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே முக்கியம். அப்போது லோககுரு சொன்னபோது ஏன் எகிரி குதிதீர்கள்? இப்போது பம்முவது என்?

நேர்மை அற்று போய் விட்டீர்கள்.

நெத்தியடி முஹம்மத் said...

அன்புள்ள சுகுணாதிவாகர்,
///இதுமாதிரியான விஷயங்களுக்கு முதலில் இஸ்லாமியக் கலாச்சாரத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். அவர்களுடன் ஊடாடி உரையாடத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம் சமூகம் ஒரு மூடுண்ட, இறுக்கமான சமூகம் என்கிற கருத்து நம் அனைவருக்குமே இருக்கிறது. (இதில் முற்போக்காளர்களும் அடக்கம்). இது நம்மைப் பல தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்கிறது என்று கருதுகிறேன்////.--- கருதவல்லாம் வேண்டாம்...அதுதான் நூறு சத உண்மை...

இஸ்லாமிய ஆணுக்கு உண்டான கடமை :

பொருளீட்டி குடும்பத்தை காப்பாற்றுவது மற்றும் குடும்பத்தாருக்கான அனைத்து அத்தியாவச செலவுகளுக்கும் பொறுப்பேற்பது(உணவு,உடை,இருப்பிடம்,மருத்துவம் கல்வி,பிரயாணம்,தருமம்,பண்டிகை செலவுகள்...)

இஸ்லாமிய பெண்ணுக்கு உண்டான கடமை:

குடும்ப பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்ட்டினுள் வேலைகள்....

இருவரும் தமக்குண்டான கடமையிலிருந்து தவறாதபடி, ஆண், பெண்ணின் வேலையையும் பெண் ஆணின வேலையையும் செய்து கொள்வது இஸ்லாத்தில் தவறில்லை. இது நிச்சயமாக இருவருக்கும் ஒரு 'எக்ஸ்ட்ரா பர்டன்' என்பதில் ஐயம இல்லை.

விஷயம் இப்படி இருக்க, வீட்டில் ஆயா, சமையல் காரர், வேலைக்காரர் என்று சகலமும் இருந்தால், தன் கடமையிலிருந்து பெண்கள் ரொம்ப சுலபமாக பொருளீட்ட வெளிக்கிளம்பி விடலாம். இச்சூழ்நிலையில், அவளின் சம்பளத்திலிருந்து-அது கோடி ரூபாயாகிணும்- ஒரு ஒத்தை ரூபாயை கூட அவள் விருப்பமின்றி கணவன் தனக்காகவோ, குடும்பத்திர்காகவோ, செலவழிக்க நிர்பந்திக்க முடியாது...!!!???

மனைவி தானாக இறக்கப்பட்டு செய்தால்தான் உண்டு...

இது ஒருபுறமிருக்க... இன்றைய சூழ்நிலையில் பெண்கள், பல்வேறு ஆணாதிக்க பாலின வன்கொடுமைக்கு மத்தியில் வெளியில் வேலை பார்ப்பது என்பது கத்தியில் நடப்பது போல...! தனக்கு கடமை இல்லாத ஒன்றிற்காக எதற்கு அம்புட்டு ரிஸ்க் எடுக்க வேண்டும்? அதேநேரம், பெண்களுக்கு படு பயங்கர பாதுகாப்பு நிலவும் சமுதாயம், சட்டம், அரசு இருந்தால் இஸ்லாமிய பெண்கள் வெளியே கிளம்பி பொருளீட்ட தயங்குவதே இல்லை. இதற்கு மிகச்சரியான உதாரணம்: சவூதி அரேபியா. பல அரபிகளின் வீடுகளில் இந்தோனேஷியா 'கத்தாமாக்கள்' (வேலைப்பென்மணி) இருக்க, தன் கடமையிலிருந்து விடுபட்ட ஏராளமான அரபி குடும்பப்பெண்மணிகள் போருளீட்டுவதை அறிந்து கொள்ளுங்கள்.

///இதுமாதிரியான விஷயங்களுக்கு முதலில் இஸ்லாமியக் கலாச்சாரத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும்.///---என்று தெளிவாக சொல்லிவிட்டு இசை பற்றி சொதப்பி வைத்துள்ளீர்கள். இசை என்பது வாத்தியக்கருவிகளால் உண்டாவது. அது இல்லாமல் எழுப்பப்படும் பாங்கு ஓசை தடை லிஸ்டில் வராது. இசையற்ற ராகம் அல்லது பாடல்கள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.அவ்வளவு ஏன், கொட்டடிப்பது, பறையடிப்பது, முரசடிப்பது போன்ற சாதாரண இசைக்கருவிகள் பண்டிகை நாட்களில் இஸ்லாத்தில் அனுமதிக்கப்ப்ட்டவையே...

வருங்காலத்தில் ஷர்புதீனின் மகள் அரைக்கால் டவுசர் போடுவது சாதாரணம் என்றால், மகன் போதை மருந்து உண்பதும் சாதாரணம் தான்... அரைக்கால் டவுசர் போடும் மகளின் மகள் விபச்சாரம் செய்வது சாதாரனமாகிவிடலாம்... அதனாலெல்லாம் இஸ்லாம் வளைந்து கொடுத்துவிடாது... வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு சரியான சட்டதிட்டங்களை கொண்ட மார்க்கம். இதனை கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் முஸ்லிம்கள். இதனை கடைபிடிக்காதவர்கள் அதற்கு உதாரணம் ஆக முடியாது. பல கொலைகள் செய்த ஹிட்லர் வாழ்ந்த காலத்திலும் அவரின் ஜெர்மானிய அரசு சட்டத்தில் கொலை புரிதல் தண்டனைக்குரிய குற்றமாகத்தான் இருந்தது. மாற்றப்படவில்லை என்பதை கவனத்தில் கொண்டால் குழப்பம் வராது.

தேவுபந்து சொல்வதெல்லாம் இஸ்லாம் ஆகாது. குரானும், நபியின் வாழ்க்கை முறையும்தான் நமக்கு இஸ்லாம். அதன்படி நபியின் மனைவியர் சம்பாதித்துள்ளனர்;அந்த சமுதாயத்து பல பெண்களும்தான். முஸ்லிம்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இந்த பத்வாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனால், அவர்களின் எதிரிகள் தான் குழம்பிப்போய் உள்ளனர். இன்னும் எத்தனை இடுகைகள், பின்னூட்டங்கள் வருமோ....

nagoreismail said...

அருமை..!

“‘இஸ்லாத்தில் இசை என்பதே ஹராம்’ என்றார்.”
“அப்படியானால் இசையை ‘ஹராம்’ என்று சொன்ன அந்த முஸ்லீம் நண்பரின் கருத்தை என்ன சொல்வது?”

- சார், நீங்கள் நாகூர் ரூமி அவர்கள் எழுதிய ‘கற்காலம்’, ‘இசையும் இறைவனும்’ போன்ற கட்டுரைகளை படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்

“இந்த ‘பத்வா’க்களைப் பெரும்பாலான முஸ்லீம்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.”

- சரியாக எழுதியிருக்கிறார்கள், ஒரு காலத்தில் ஷவரில் குளிப்பதையே பித்அத் (இஸ்லாத்தில் இல்லாத புதுமை)என்றார்கள்.

”ஆனால் ஷகீலா, மும்தாஜ், குஷ்பு என்று தமிழ்ச்சினிமாவின் கவர்ச்சிப்பிம்பங்களாக இட்டு நிரப்பப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லீம் பெண்களே.”

- உண்மை தான்..
நடிகைகளில் உதாரணம்: ‘ஜீனத் அமான், பர்வீன் பாபி, மதுபாலா, மீனா குமாரி, நர்கீஸ், வஹிதா ரஹ்மான், ஃபரீதா ஜலால், ஜரீனா வஹ்ஹாப், ஆயிஷா டாக்கியா என்று நிறைய பேர் இருக்கிறார்கள்...

தமிழ் நாட்டில் கவர்னராக ஒரு பெண்மணி இருந்தார்களே அவர்கள் கூட முஸ்லீம் தானே..

ஈரானில் பெண்களுக்காக பெண்களாலேயே நடத்தப்படுகின்ற பத்திரிக்கை ‘மஹ்ஜுபாஹ்’. இன்னும் ராணுவத்திலும், சிவில் டிஃபென்சான ஃபயர் செர்வீஸிலும் வேலை பார்க்கிறார்கள்.

பங்களாதேஷ் நாட்டில் ஜொஹ்ரா பேகம் காஜி என்பவரை போன்று எத்தனையோ புகழ் பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

இங்கே சிங்கப்பூரிலே, என்னுடைய ஜுரோங் ஜிஆர்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப் என்பவரும் ஒரு முஸ்லீம் பெண்மணி தான்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...

தமிழன்-கறுப்பி... said...

:) சொல்ல இன்னும் நிறைய இருக்கு,

Anonymous said...

//எனக்குப் பாங்கோசையே அற்புதமான இசையாக இருக்கும். சமயங்களில் அரபுச்சேனல்களில் அரபுமொழி கேட்டுக்கொண்டிருப்பேன். அது செய்தியா, தொழுகையா, என்ன நிகழ்ச்சி என்று தெரியாவிட்டாலும் அரபுமொழி உச்சரிக்கப்படும் விதமே ஒரு இசையாய் இருக்கும்.//

இதில் அரபு மொழிக்கு பதில் வேறு ஏதேனும் புனித மொழியை இட்டு நிரப்பினால் அது ’_____த்வம்’ என்று அறியப்படும். நீங்கள் எழுதினால் எல்லாம் முற்போக்குதான்.

சீக்கிரம் அரபி கற்றுக் கொண்டு சவூதிக்கு சென்று அப்துல்லாவாக மாறி உங்கள் வளையத்தை முடித்துக் கொள்ளவும். நல்ல ஒப்பந்தமாக அமைந்தால் நிறைய லாபம்தான்.

Unknown said...

நல்லா எழுதிருக்கீங்க சுகுணா... எதற்கு மதத்தை ஒப்பீட்டீர்கள் என்று புரியவில்லை... :(

<<<
ஆனால் எனதோ வினவின் நோக்கமோ முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெண்ணடிமையை ஆதரிப்பதில்லை, மாறாக அதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் வெளிப்பட்ட இந்துமனோபாவப் பார்வைகளை விமர்சிப்பதும் கூடுதலாக மதங்களைக் கடந்த ஒரு ஆணாதிக்க எதிர்ப்பை வலியுறுத்துவதும்தான். முஸ்லீம் சமூகத்தில் மட்டும்தான் ஆணாதிக்கம் இருப்பதைப் போன்ற பிரமை, பெரும்பாலான ’இந்துக்களுக்கு’ இருக்கிறது.
>>>
சூப்பர் சுகுணா, இதில் இந்துக்களுக்கு என்பதை விட அனைத்து வேற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு என்று இருக்கலாம்....

<<<
பர்தா, பத்வா, தாலிபான்கள் என்கிற தாங்கள் அறிந்த சில விஷயங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக ‘முஸ்லீம் பெண்ணடிமைத்தனம்’ குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிற பெரும்பாலானோரைத்தான் காண முடிகிறது.
>>>
உண்மைதான்...

இப்படி பட்ட பத்வா விசயங்களை உங்களை போன்றவர்களின் பதிவுகள் மூலமே அறிய முடிகிறது... பொதுவா இஸ்லாத்தை பொருத்த வரை குரான் மற்றும் ஹதீஸ் தவிர மற்றவர்கள் கூறும் எல்லாம், அவர்களின் ஸ்டான்டை நிலை நிறுத்துவதற்காவே... அதாவது அரசியல் போல... ஜஸ்ட் லைக்தட் என்றுதான் போகவேண்டும், அந்த பத்வாவை வெளியிட்டவருக்கு அந்த வீட்டின் பெண்தான் சம்பாதித்து அவரை காப்பாற்றவேண்டும் என்ற நிலை வந்தால்? கண்டிப்பா பெண்ணை வேலைக்கு அனுப்பவே செய்வார். இவர்கள் எல்லாம் கூறுவதை நாங்கள் சீரீயஸாக எடுத்தால்தான் இந்த பதிவு அவசியமாக இருந்துருக்கலாம்.... ஹ்ம்ம்ம்ம்....

பெண்கள் சம்பாரிப்பது என்பது, இப்போது அவசியமான ஒன்று... வரும் காலத்தில் கண்டிப்பான ஒன்றாய் கூட இருக்காம். ஆணின் வருமானத்தை கொண்டு மட்டும் எதையும் செய்ய முடியாது.

எனக்கு என்னவோ, எப்படி அரசியலில் சுப்பரமனிசாமி கூறுவதை எப்படி எடுக்கிறோமே அப்படியே இந்த பத்வா ஆசாமிகளின் கூற்றையும் எடுக்கவேண்டும், அவர்கள் எல்லாம் ஒரு காமெடி பீஸ் அவ்வளவுதான்.

Unknown said...

<<<
வருங்காலத்தில் ஷர்புதீனின் மகள் அரைக்கால் டவுசர் போடுவது சாதாரணம் என்றால், மகன் போதை மருந்து உண்பதும் சாதாரணம் தான்... அரைக்கால் டவுசர் போடும் மகளின் மகள் விபச்சாரம் செய்வது சாதாரனமாகிவிடலாம்...
>>>
@நெத்தியடி முஹம்மத், ஏன் இப்படியெல்லாம் உதாரணம்??? இதற்கு எனது வன்மையான கண்டனம்! நீங்கள் எழுதுவதை வினவில் பார்த்துவருகிறேன், மிகவும் நன்றாய் இருக்கும்... தயவுசெய்து இப்படி உதாரணங்கள் கொடுப்பதை நிறுத்தவும்.

நட்புடன்,
மஸ்தான் ஒலி

நெத்தியடி முஹம்மத் said...

@ Mastan...

வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் மஸ்தான் பாய்.

"ஒரு முஸ்லிமின்..." என்று நான் எழுதி இருக்கலாம்தான்... ஆனால், மேலே... இப்பதிவின் இரண்டாவது கமென்ட் போட்டவர், தானே முன்வந்து ஒரு உதாரணாமாக நின்றதால் அப்படியே எடுத்தாண்டு விட்டேன்... தவறிருந்தால், மன்னிக்கவும்...