Wednesday, September 24, 2008

கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி 2














கவுண்டமணி குறித்த பதிவில் சில பின்னூட்டங்கள் கவுண்டமணியைச் சிலாகிப்பதாகவே அமைந்திருந்தன. எனது நோக்கம் அதுவல்ல. அவர் நகைச்சுவையில் தெரியும் வேறு சில கூறுகளைச் சுட்டிக்காட்டுவதே. ஒரு கலைஞனைச் சாதிய ரீதியாக அணுகலாமா என்பது குறித்த அதிருப்திகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியச்சமூகம் ஒரு சாதியச்சமூகம். ஒருவேளை சாதி ஒழிந்துவிட்டால் நாம் அதைப் பற்றிப் பேசுவதற்கோ சாதிய ரீதியான கட்டவிழ்ப்புகளை நிகழ்த்துவதற்கு வாய்ப்பிருக்காதுதானே ((-.

பிரபுராம் கவுண்டமணியின் நகைச்சுவையில் உள்ள ஆணாதிக்க மற்றும் அதுபோன்ற பாதகமான அம்சங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். உண்மைதான். கவுண்டமணி முழுக்க முழுக்க ஒரு எதிர்க்கலாச்சாரக்காரர் என்றோ, மாற்று அரசியலை முன்வைப்பவர் என்பதோ என் கருத்தல்ல. ( அவரே சாப்ளினையும் தாண்டியவர் கவுண்டமணி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.)மாறாகக் கவுண்டமணியைக் குறித்து அதிகம் பேசப்படாத அம்சங்களை எழுதிச் செல்லவே விருப்பம்.

அவர் தமிழ்ச்சினிமாவின் வெளி மட்டுமல்ல உள்மரபுகளையும் கவிழ்த்தவர் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்து...

தமிழ்ச்சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று தலைமை வழிபாடு, பிம்பகட்டுருவாக்கம். காத்திரமான சிந்தனையாளர் என்று பலரால் கொண்டாடப்படும் கமல் வரை இதற்கு விதிவிலக்கல்ல. உலகநாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று மற்றவர்களை வைத்துத் துதி பாடுகிற அருவெறுப்பு தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

பெரும்பாலும் இந்தக் கதாநாயகன்களின் பிம்பக்கட்டுமானத்திற்கும் புகழ்பாடுவதற்கும் அல்லைக்கைகளாகப் பெரிதும் பயன்படுத்தப்படுபவர்கள் துணைநடிகர்களும் நகைச்சுவை நடிகர்களும். இப்போது அப்பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர் விவேக். ஆனால் எனக்குத் தெரிந்தவரை கவுண்டமணி அப்படியான 'பில்டப்களை'க் கொடுப்பதில்லை. மாறாக இந்தப் பிம்ப விளையாட்டுகளைத் தலைகீழாய்க் கவிழ்த்துப்போட்டு எள்ளி நகையாடுவார்.
சேனாதிபதி திரைப்படம். சத்யராஜுக்கு இணையான பாத்திரம் விஜயகுமாருக்கு. அவர் சத்யராஜின் வீட்டுக்கு வருவார். கிட்டத்தட்ட 'இரண்டாவது கதாநாயகனான' விஜயகுமார் வரும்போது கவுண்டமணி சொல்வார், 'இவன் ஓவராப் பேசுவானே!'.

அதேபோல் ரஜினியின் 'பாபா' வெளியான காலகட்டம். ரஜினி ஒரு முக்கியமான அரசியல் தீர்மான காரணியாக மதிக்கப்பட்ட காலம். அவர் யாரை ஆதரிப்பார், யாருக்காக வாய்ஸ் கொடுப்பார் என்கிற பரபரப்புகள் ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்கள் இடையும் நிலவிவந்தது.

ரஜினியோ ப.சிதம்பரம் சாயலில் ஒருவரை, 'இவர்தான் முதல்வர்' எனப் பாபாவில் கைகாட்டுவார். ஆனால் கொஞ்சமும் தயக்கமில்லாமல் கவுண்டமணி சொல்வார், '' போயும் போயும் இந்த ..... மண்டையனா முதலமைச்சர்?'.

ரஜினி என்னும் மாபெரும் பிம்பம் குறித்தோ அவருக்குப் பொதுவெளியில் இருக்கும் அரசியல் மதிப்பு குறித்தோ கொஞ்சமும் கவலைப்படாமல் சினிமாவிலிருந்து கொண்டே அதேசினிமாவில் நிலவும் இத்தகைய போலித்தனங்களைக் காலி செய்யும் துணிச்சல் கவுண்டமணிக்கே உண்டு.

அதனாலேயோ என்னவோ ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பெருநட்சத்திரங்கள் தங்கள் படங்களில் கவுண்டமணியைத் தவிர்க்கவே செய்கின்றனர். விதிவிலக்கு சத்யராஜ் மட்டுமே. ஏனெனில் பிம்பம் பற்றிக் கவலைப்படாத இன்னொரு கவிழ்ப்பாளர் சத்யராஜ்.

( தொடரும்...)

Tuesday, September 16, 2008

கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி 1.













நாளைய தமிழ்ச்சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஏன் 'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் பெயரும் இடம்பெறலாம். ஆனால் கவுண்டமணியின் பெயர் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் விவேக்கைப் போல பகுத்தறிவு என்னும் பெயரில் இடைநிலைச்சாதிப் பார்ப்பனீயத்தைக் கடைப்பிடித்தவரல்ல கவுண்டமணி. வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் ஏதும் அறிவிக்கவில்லையெனினும் தமிழ்ச்சினிமாவின் பல மரபுகளைக் கவிழ்த்துப்போட்டவர். வெளிமரபுகளை மட்டுமல்லாது, சினிமா உள்மரபுகளையும் நொறுக்கியவர்.

'மரியாதைக்குரிய நம் கலைஞர்கள்' ஏற்க விரும்பாத பல அடித்தட்டுமக்களின் வேடங்களை ஏற்றவர். இந்த வகையில் சிவாஜியை விட அதிக வேடங்களை ஏற்று நடித்தவர் என்ற பெருமை கவுண்டமணிக்கு உண்டு. (வேலையில்லாத பட்டதாரி இளைஞன் என்னும் வேடத்தைப் பெரும்பாலும் தாண்டாத விவேக்கை 'வொயிட் காலர் காமெடியன்' எனலாம்.)

ஒரு இடையீடு : யமுனாராஜேந்திரன் குறித்த தோழர் சுகனின் விமர்சனத்தில் இப்படி ஒரு வரி :

'குமிஞ்சான்', 'குள்ளன்' என்று ஒருவரை எள்ளி நகையாடும் மனோபாவத்திடம் விவாதிப்பது மனித உணர்வுள்ள எவருக்கும் சாத்தியமில்லை. இலக்கியம் அரசியல் இவற்றின் பேரால் இத்தகைய வக்கிரங்களை எதிர்கொள்வது அவற்றிற்கு மரியாதை செய்வதுமாகாது. கவுண்டமணியின் 'கோமுட்டித் தலையா', 'நெல்சன் மண்டலோ மண்டையா' போன்ற வசவுகளுக்கும் 'குமிஞ்சான்' என்று வசைபாடும் மனநிலைக்குமுள்ள அருவருப்பான ஒப்புவமை, ஒற்றுமையைக் கவனிக்கும் ஒருவருக்கு இதுதான் கவுண்டர் கல்ச்சரோ ( கவனிக்க : Counter culture அல்ல) என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததே.




ஆக யமுனா கவுண்டர் சாதியில் பிறந்தவர், கவுண்டமணியும் கவுண்டர். எனவே கவுண்டர் கல்ச்சர். என்னே ஒரு வார்த்தை விளையாட்டு!

தனக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களை எல்லாம் இப்படியாக 'ஜாதிப்புத்தி', 'கவுண்டர் கல்ச்சர்' என்று அடையாளப்படுத்திவிடுவது எவ்வளவு எளிது? உண்மையில் கவுண்டமணி பிறப்பால் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவரல்ல, மேடைநாடகமொன்றில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் கவுண்டர், அதுவே பின்னாளில் கவுண்டமணி என்றாயிற்று என்று அறியும்போது சுகனின் உத்தி கிழிபட்டுப் போகிறது.

இருக்கட்டும். கவுண்டமணி மருத்துவர் போன்ற ஏதோ ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டதுண்டு. (கவுண்டமணி குறித்த மேலதிகத்தகவல்களைத் திரட்டுவது கடினம். கவுண்டமணி தனது சினிமா வாழ்க்கையில் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள் பத்துக்குள்ளேயே இருக்கும்.)

கவுண்டமணி செந்திலை அடிப்பதும் உதைப்பதும் பலாராலும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளான ஒன்று. ஆனால் இதை வேறு வகையாய் வாசிக்க முயல்வோம்.

கூலி என்னும் படத்தில் கவுண்டமணி மில் கேன்டின் உரிமையாளர். செந்திலோ அந்தக் கேண்டினில் வேலை பார்க்கும் டீமாஸ்டர். ஒரு உரையாடலின்போது, பேச்சுவாக்கில் செந்தில் கவுண்டமணியை அடித்துவிடுவார். அவர் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும். செந்தில் சொல்வார், ''அண்ணே, நாங்கள் அடிக்கிற சாதிண்ணே, அதான் அடிச்சா உடனே ரத்தம் வந்திடுச்சு'. கவுண்டர் கேட்பார், ''நீ என்ன சாதிடா?'' செந்தில் கவுண்டரின் காதுக்குள் குசுகுசுப்பார். பிறகு கவுண்டமணி செந்திலின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிடுவார். இப்போது செந்திலின் மூக்கிலும் ரத்தம். கவுண்டர் சொல்வார், '' உங்க சாதிக்காரன் மட்டுமில்லைடா, எங்க சாதிக்காரன் அடிச்சாலும் ரத்தம் வரும்'.

இங்கு முக்கியமாய்க் கவனிக்கவேண்டிய ஒன்று, கவுண்டமணி நடத்தும் கேன்டினில் அம்பேத்கர் படமும் எம்.ஜி.ஆர் படமும் மாட்டப்பட்டிருக்கும். ( பொதுவாக எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை தலித் வாக்குவங்கியைத் தக்கவைத்துக்கொண்டவர்.) கேண்டின் உரிமையாளரான கவுண்டமணி பாத்திரம் ஒரு தலித் பாத்திரம் என்பது குறிப்பால் அறியப்படும் செய்தி. இன்னொரு முக்கியமான விஷயம், செந்தில் பிறப்பால் ஆதிக்கச்சாதியான, சாதிய வன்முறையின் குறியீடாய் முன்நிறுத்தப்படும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் கவுண்டமணியிடம் உதை வாங்குவதே சாதிய வன்மத்தைப் பழிதீர்க்கும் கணக்கு என்று ஏன் கொள்ளக்கூடாது?

( தொடரும்...)



Monday, September 8, 2008

தூமைக்கதைகள்













இதைப் படிக்கும் உங்களுக்குச் சீக்கிரம் அலுப்புத் தட்டும் நோக்கில் எழுதப்பட்ட பிரதி இது. ஒரு அலுப்போடும் சலிப்போடும் எழுதப்பட்ட இப்பிரதி எந்த வாசகி/கனையும் கவர்வதற்காக எழுதப்பட்டதில்லை. பிரதியைக் கட்டவிழ்த்தல், தலைகீழாக்குதல், நேர்கோடாக்குதல், அ ‍ நேர்கோடாக்குதல் என்கிற எவ்வித முந்தீர்மானங்களுமற்று தன் போக்கில் நகர்வதால் இப்பிரதி எந்த இலக்கிய லவடாவையும் படிக்கச்சொல்லிக் கோரவில்லை.
முதன் முதலாக தூமை என்கிற வார்த்தையை எத்தனாவது வயதில் நீ கேள்விப்பட்டிருப்பாய்? உன் பதின் பருவங்களிலாயிருக்கலாமா, எனில் நீ ஒரு நகரத்தின் யோனியில் பிறந்தவனாயிருக்கலாம். ஐந்து வயதில் அறியக்கிடைத்த பல தமிழ்வார்த்தைகளில் தூமையும் ஒன்றாக இருப்பதே ஜனநெருக்கடியும் சண்டைகள் மலிந்துகிடக்கும் பிரதேசங்களில் வாழப்பிறந்தவனாயிருப்பதன் மரபு..
அய்யாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் வரலாறு உடையதாய் அடிக்கடி பூலரிக்கப்படும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தூமை என்னும் வார்த்தை முதன்முதலாய்ப் பாவிக்கப்பட்ட தமிழ் இலக்கியம் எது? பாம்பின் படத்தையொத்த அல்குல், விம்மிப்புடைத்த முலைகள் என்றெல்லாம் விலாவரியாய் ஆராயும் சங்க இலக்கியங்கள் தூமை குறித்துப்பேசியதுண்டா? இல்லையெனில் அக்காலத் தமிழ்ப்பெருங்குடிப் பெண்களுக்கு மாதவிடாயே ஆகாமலிருந்திருக்கும் என்பது காரணமாயிருக்காது என்றே நம்பவிழைவோம். மறத்தினால் கொண்ட திறத்தினால் முறத்தினால் புலியை அடித்துத் துரத்தினாள் ஒரு தமிழ்ப்பெண் என பென்னம்பெரிய கவிமக்களும் கவிதாயினிகளும் கூறக்கேட்டிருக்கிறோம். அது கிடக்கட்டும் சபரிமலை மகரஜோதி கதை தெரியுந்தானே உனக்கு? இருநூறு ஆண்டுகளின் முன் பெண்ணின் தூமைக்குருதி வாடை கண்டு கொடியவனவிலங்குகள் வரக்கூடும் என்றஞ்சியே சபரிமலைக்குப் பெண்கள் வருவது தடைசெய்யப்பட்டதாம். நாப்கின்கள் காலத்திலும் பெண் தடுக்கப்படுவதெனின் வருடம் முழுதும் பேதியால் அல்லலுறும் அய்யப்பசுவாமிகளுக்கு யாரேனும் டிஷ்யூ பேப்பர் வாங்கித்தரல் நலம். தூமை என்னும் வார்த்தை வின்னர் என்னும் தமிழ்ப்படத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. வடிவேலுவை ஏமாற்ற பெண்வேடமிட்ட பிரசாந்த் 'தூமியக்குடிக்கி' என்று திட்டுவார். தூமையின் சுவை எப்படியானதாக இருக்கும்? தூமையைக் குடித்தவர்கள் என்று யாருமிருக்கிறார்களா? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய‌ மூத்த தூமைக்குடி தமிழ்க்குடியா என்றெல்லாம் கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியவில்லை என்று பேராசிரியர் கலாநிதி முத்துரத்தின முதலியார் கேள்விகளை 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுப்பியிருக்கிறார். கங்கை நதியே பூமிமாதாவின் தூமைதான் என்று புராணங்களிலிருந்து ஆதாரங்காட்டுகிறார் ஷ்ரிமத்ராகவாச்சாரிநரசிம்மன். அப்படியானால் அகண்டபாரதக்கனவுகளில் மிதப்பவர்களைத் தூமைக்குடிகள் என்றழைக்கலாமா என்னும் வினாக்களும் எழாமலில்லை.

( ......ம்ருடதொ)

பெண்கள் சந்திப்பு ‍ இருவேறு பார்வைகள்

பெண்கள் சந்திப்பு குறித்த கவிஞர் தமிழ்நதியின் பார்வையை இங்கு படித்திருப்பீர்கள்.

http://tamilnathy.blogspot.com/2008/08/blog-post_07.html

இரண்டாம் பார்வை எனக்கு மின்னஞ்சலில் மீராபாரதி என்னும் நண்பர் அனுப்பியது.

கடந்த ஆகஸ்ட் மூன்றாம் திகதி பெண்களின் இலக்கிய சந்திப்பு ஒன்று டொரோன்டோவில் நடைபெற்றது. அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியதிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக எந்த ஒரு இலங்கை சார்ந்த நிகழ்வுகளுக்கும் செல்வதை தவிர்த்திருந்தேன். ஏனனில் பெரும்பாலான (பொது அரசியல்) நிகழ்வுகள் சார்பு அரசியல் தன்மை கொண்டனவாகவே இருந்தன இருக்கின்றன...ஒன்று புலிகள் சார்ந்த அரசியலாக இருக்கும் அல்லது புலிகள் எதிர்ப்பு அரசியலாக இருக்கும் அல்லது இலங்கை அரசாங்க அரசியல் சார்ந்ததாக இருக்கும். இதைவிட ஊர் ஒன்று கூடல்களும் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரசியல் சாதிய சார்புத்தன்மைகள் மறைக்கப்பட்டு பொது நிகழ்வுகளாக நடைபெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை என்பதால் பங்குபற்றுவதிலிருந்து ஒதுங்கியிருந்தேன்.

இன்றைய எனது புரிதலில் இலங்கையில் ஒரு அமைதியான சுழலை உருவாக்குவதன் மூலமும் இனங்களுக்கு இடையில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலமுமே நிலவுகின்ற இன முரண்பாடுகளுக்கு நீதியான ஆரோக்கியமான தீர்வு ஒன்றைக் காண்பதற்காக ஒரு ஆரோக்கியமான சுழலை உருவாக்க முடியும் என நம்புகின்றேன். இந்த அடிப்படையிலையே கடந்த சில மாதங்களில் நடைபெற்ற சமாதானத்திற்கான கனேடியர்கள் ஒழுங்கு செய்த இரு கூட்டங்களுக்கும் சென்றிருந்தேன். இந்த நோக்கத்துடனையே ஆகஸ்ட் 3ம் திகதி நடைபெற்ற பெண்கள் இலக்கிய சந்திப்புக்கும் சென்றிருந்தேன். மேலும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறள்ள “இலங்கையின் எதிர் காலம் என்ன” என்ற கூட்டத்திற்கும் செல்வதற்கு உள்ளேன். இது தொடர்பான சில கருத்துக்களை குறிப்புகளை இங்கு முன்வைக்க விரும்பகின்றேன்.

ஏனக்கு ஆணுக்குறிய உடல் உறுப்பு இருப்பதாலும் அதனால் பிறந்ததிலிருந்து ஆணாதிக்க கருத்தியலிலும் மனோபாவத்திலும் இச் சமூகம் என்னை ஆணாக(?) கட்டமைத்தமையாலும் பெண்கள் சந்திப்புக்கு அனுமதி இல்லை. இது பெண்ணியம் சார்ந்த கருத்தியல் பார்வையில் சரியானதாக இருக்கலாம். இது புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றே. ஏனனில் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தாலும் அதன் ஆதிக்க சக்திகளான ஆண்களாலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அது தொடர்பான பெண்களது உள்உணர்வுகளும் அதை வெளிப்படுத்தும் மொழியும் தனித்துவமானவையே. ஆணாதிக்க சிந்தனைக்குள் கட்டுண்டிருக்கும் ஆண்களால் இது புரிந்து கொள்ளப்பட முடியாதது என்பது கவலைக்கிடமானதே. ஆகவே இறுதிநாளான ஆகஸ்ட் 3ம் திகதிக்கு மட்டுமே ஆண்களுக்கு ஐனநாயக அடிப்படையில் அனுமதியும், பெண்களுடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
கலந்துரையாடலில் என் கவனத்தை ஈர்த்த சிந்தனையில் பதிந்த கருத்துக்கள் தொடர்பான எனது கருத்துக்களை இங்கு முன்வைக்கின்றேன்.

ஆரசியல் செயற்பாட்டாளர் ஐhனகி அவர்கள் பெண்கள் அதிகளவில் அரசியலில் பங்குபற்றும் பொழுதுதான் பெண்கள் தொடர்பாக நாம் விரும்பும் குறைந்த பட்ச மாற்றங்களையாவது ஏற்படுத்த முடியும் என்றடிப்படையில் தனது கருத்தை முன்வைத்தார். மேலும் அவர் கூறிய போது பெண்கள் சரி பாதியாக இருக்கும் இந்த உலகத்தில் நாடுகளில் அரசியலில் பொதுவாழ்வில் பெண்களின் பங்குபற்றல் என்பது அதன் சதவீதம் மிகவும் குறைவானதே என்றார். இது மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயம். மேலும் அரசியலிலும் பொதுவாழ்விலும் பங்குபற்றும் பெண்கள் அதிகமானோர் தம் உடலில் பெண் சார்ந்த உடல் உறுப்புக்களை மட்டும் கொண்டுள்ளதுடன் பெண்ணிய பார்வைக்கு மாறாக ஆணாதிக்க சிந்தனைப் போக்கையே பார்வையையே மனதையே இவர்கள் கொண்டுள்ளனர். இவர்களினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்காது என்பது ஆச்சரியமானதல்ல. ஏனனில் அதிகாரத்திலிருக்கும் இப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடலளவில் மட்டுமே வித்தியாசம் உண்டு. மனதளவில் சிந்தனையளவில் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே பெண்ணிய பார்வை சிந்தனை உணர்வுகள் கொண்ட பெண்களே அரசியலிலும் பொதுவாழ்விலும் அதிகளவில் ஈடுபட முன்வரவேண்டும். இதுவே ஆணாதிக்க சிந்தனை கொண்ட அரசியல் இயந்திரத்தையும் ஆண்தன்மை கொண்ட அரசியல் செயற்பாடுகளையும் பெண்ணிய வழியில் மாற்றுவதற்கு வழியை உருவாக்கும் என்றால் மிகையல்ல. ஏனனில் ;இதுவரை காலமும் ஆணாதிக்க வழிபாதையினால் நாம் கண்டது வன்முறை போர் பகையுணர்வு கொலை எதிரி துரோகி மனப்பான்மை என்பனவே. இதிலிருந்து விடுபட்டு பெண்மையின் பாதையில் இனிவரும் காலம் பயணிக்கவேண்டியது அவசியமானதாகும். இதுவே மனித இனத்தையும் இந்த பூமியையும் காப்பாற்றும்.

இரண்டாவது விடயம் யாழினி எனப்படும் நிவேதா அவர்கள் முன்வைத்தது. அதாவது ஆதி காலங்களிலிருந்து மரபு வழியாக கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்ற பெண் பெண்மை என்ற பாத்திரம் தொடர்பானது. ஓவ்வொரு காலங்களிலும் அக் கால சுழ்நிலைகளுக்கு ஏற்பவும் தம் தேவைகளுக்கு ஏற்பவும் தம் மரபுகளிலிருந்தும் புனை கதைகளிலிருந்தும் பெண்ணையும் அவர்கள் பண்புகளை மீள மீள் வடிவமைத்துவந்துள்ளனர் என்றார். இதில் நாம் சில விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். முதலாவது பெண்களின் இயல்பான அதாவது இயற்கையான இயல்புகளுடன் வாழும் பெண்கள். இவ்வாறான பெண்களை இன்றை சமூகங்களில் காண்பது அரிதே. ஏனனில் பெண்கள் ஆண்டாண்டு காலமாக பிறப்பிலிருந்து மட்டுமல்ல கருவறையிலிருந்தே ஆணாதிக்க பார்வைக்கு உட்பட்டே கட்டமைக்கப்பட்டு அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறான பெண்களையே நாம் இன்று அதிகமாக காணவும் சந்திக்கவும் கிடைக்கின்றது. முடிகின்றது. இப்பெண்களையே இந்த ஆணாதிக்க சமூகம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது தேவைகளுக்கு ஏற்ப கலாச்சார காவிகளாகவும் போர்முனைகளில் செயற்படும் இராணுவ விராங்கனைகளாகவும் வீட்டில் மனைவி தாய் என்ற பெயர்களில் வேலைக்காரிகளாகவும் பாலியல் இயந்திரங்களாவும் பயன்படுத்த முடிகின்றது. இவர்களுக்கு; வீரத்தாய் கற்புக்கரசி வீரவேங்கை போராளி .....இவ்வாறான சுய புகழ்பாடும பட்டங்களையும் வழங்கி இப் பெண்களை திருப்திப்படுத்துகின்றது. இப் பெண்களும் தமது அறியாமையினால் இதுவே சரியானது எனது எதிர் கேள்விகள் கேட்காது (அதற்கும் உரிமை இல்லை என்பதை அறியாது) நம்பி சொற்களால் கட்டப்பட்ட தங்க கூண்டுகளுக்குள் வாழ்கின்றனர். இன்னும் சில பெண்களே தாம் அடக்கப்பட்டுள்ளதை உணர்ந்து தம் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடுகின்றனர். இதில் இருவிதமான பெண்கள் உள்ளனர். ஒரு வகையினர் ஆணாதிக்க கருத்தியலுக்கு மாறாக ஆண்களையே எதிரிகளாக கருதி ஆண்களுடன் போட்டி போடுவது என்பதே பெண்விடுதலை எனக் கருதுகின்றனர். இவர்கள் தமது இயற்கையான பெண் இயல்புகளை மீள உள்வாங்கி வளர்ப்பதற்குப் பதிலாக ஆண் இயல்புகளை தன்மைகைளை உள்வாங்கி தம்மை ஆணாகவே மாற்றுகின்றனர். இதுவே ஆணுக்கு சரிநிகர் சமானமாக இருப்பதற்கு சரியானது எனக் கருதுகின்றனர். இவர்கள் ஆண்களின் செயற்பாடுகளுக்கு பிரக்ஞையற்று எதிர்வினையாக மட்டுமே செயற்படுகின்றனர். இவர்களும் ஆணாதிக்க கருத்தியலின் வலையில் வீழ்ந்தவர்களே. ஏனனில் இவர்களையும் இந்த ஆணாதிக்க சமூகம் பெண்விடுதலையை அடைவதற்கு வன்முறையே சரியான பாதை என நம்பவைத்து தமது ஆணாதிக்க போர்ச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இப் பெண்களும் பெண் விடுதலைப் போராளிகளாக வன்முறை பாதையில் செயற்படுபவர்களாக வலம் வருகின்றனர்.

மிகச் சில ;பெண்களே இயற்கையான பெண் இயல்புடன் வாழ்வதும் அது சார்ந்து சிந்திப்பதுமே பெண்ணிய சிந்தனை என்றும் அன்பு தாய்மை அரவணைப்பு என்பவற்றை முன்வைத்தும் செயற்படுகின்றனர். இவ்வாறன ஒரு கருத்தை மைதிலி மைத்தரி அவர்கள் முன்வைத்தார்கள். இவ்வாறான பெண்களே போருக்கும் வன்முறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் தொழிற்வாலை மற்றும் இயந்திரங்களிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களிலிருந்;து சுழல்லை பாதுகாக்கவும் தாமும் நலமுடன் வாழ்ந்து எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பூமியை அழகானதாக வழங்கவேண்டும் என்ற அக்கறையுடனும் செயற்படுகின்றனர். மேலும் இன்று பெண்கள் பெற்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் சாத்வீகமான போராட்ட முறைமைகளுக்கூடாகப் பெறப்பட்டமையே. பெண் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி தனித்து போராடியதாக வரலாறு இல்லை. பெண் சாதிய அடக்குமுறைகளுடன் ஒப்பிடும்பொழுது பிற அடக்குமுறைகளின் பாதிப்பு தாக்கம் குறைவானதே என்றால் மிகையல்ல. ஆகவே ஆண்களும் இனிவரும் காலங்களில் ஆணாதிக்க போர்குணாம்ச வன்முறைப் பாதைகளைக் கைவிட்டு பெண்மை சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் அதாவது அன்பு அரவணைப்பு தாய்மை என்பவற்றை உள்வாங்கி தமது ;உரிமைகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். இங்கு போராட்டம் என்ற சொல்லுக்குப் பதிலாக செயற்பாடு; என்பதை முன்வைத்துள்ளேன். ஏனனில் போராட்டம் என்ற சொல்லே ஆணாதிக்கமயமானது என்றால் மிகையல்ல. இதுவே ஆரோக்கியமான ஒரு சமூகத்தை மனிதர்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கான ஒரு அழகிய பூமியை உருவாக்கும் என்றால் சந்தேகமில்லை.

மேலும் பார்வதி யுpனித்தா மற்றும் ஒருவர் ஆண்களுக்கு எதிரான பெண்களின் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் அது தொடர்பான விபரங்களையும் கருத்துக்கணிப்புகளையும் முன்வைத்தனர். இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் பல கருத்துக்கணிப்புக்களில் ஆணாதிக்க செயற்பாடுகளுக்கு பெண்களும் சரியானது என ஆமோதித்திருப்பதே. இது ஆச்சரியமானதல்ல. ஏனனில் மேற் குறிப்பிட்ட படி ஆண்கள் பெண்கள் அனைவரும் ஆணாதிக்க கருத்தியலை உள்வாங்கி அதைச் சரி என நம்பி வளர்க்கப்பட்டவர்கள். அதன் வழி வாழ்பவர்கள். இங்கு ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் உறவுகள் அதன் செய்பாட்டு தன்மைகள் மற்றும் பாலியல் உறவுகள் செயற்பாடுகள் தொடர்பான கருத்துரங்குகளும் அறிவூட்டல்களும் தொடர்ச்சியாக பல இடங்களில் நடைபெறவேண்டும் என்பது முக்கியமானது. நான் ஒரு ஆணாக பிற்போக்கு கருத்துக்களாலும் பாலியல் உணர்வுகளை அடக்கியும் வளர்க்கப்பட்டவன் என்றடிப்படையில் ஆணாதிக்கமில்லாத ஒரு ஆணாக வளர்வதில் செயற்படுவதில் வாழ்வதில் உள்ள நடைமுறை கஸ்டங்களை பிரச்சனைகளை முரன்பாடுகளை நாள்தோரும் எதிர்கொள்கின்றேன். புhலியல் ரீதியாக பெண்களை பயன்படுத்தும் ஆண்களில் பலர் ஆணாதிக்கத்தினதும் அது சார்ந்த சமூகத்தினதும் பலிக் கடாக்களே. ஒருவகையில் ஆண்களும் பெண்களும் இந்த ஆணாதிக்க சமூகத்தால் உருவாக்கப்பட்ட நோயாளிகளே. இவர்களது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முனைவதோடு பாலியல் உணர்வுகளின் அடக்குமுறையால் ஏற்ப்பட்ட மனநோய்க்கும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குணப்படுத்தப்படவேண்டியவர்களே. பெண்களைப் போல் ஆண்களும் ஆணாதிக்க சமூகத்தால் கட்டுண்டு வளர்க்கப்பட்டவர்களே. ஆணால் ஆண்கள் அதிகாரத்தை அனுபவிக்கின்றனர். பேண்கள் அதன் அதிகாரத்தின் அடக்குமுறையை அனுபவிக்கின்றனர். ஆக ஆணும் பெண்ணும் ஆணாதிக்க சிந்தனையால் செயற்பாடுகளால் அடக்கப்பட்டு வாழபவர்களே. இவர்கள் இருவருமே இதிலிருந்து விடுபடுவதே பெண்விடுதலையை மட்டுமல்ல ஆண் விடுதலையையும் சாத்தயமாக்கும். நிச்சயமாக இதற்கான பாதை பெண்ணிய பாதையாகவே இருக்கவேண்டும்.

இறுதியாக அனைத்து தமிழ் நிகழ்வுகளையும் போல் இந்த நிகழ்வும் புலி சார்பு மற்றும் புலி எதிர்ப்பு என்ற பிரிவினர்களால் அல்லது ஆயுத போராட்ட சார்பு அல்லது ஆயுத வன்முறை வழி போராட்ட எதிர்ப்பு என்ற பிரிவினர்களால் முரண்பட்டு பிளவுண்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஏன்னைப் பொறுத்தவரை இன்று புலிகள் முன்னெடுக்கும் போராட்டம் ஆணாதிக்க சாதிய மத வாத கருத்தியலுக்கு உட்பட்டே நடைபெறுகின்றது. இங்கு பெண்களும் சாதியால் அடக்கப்பட்டவர்களும் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆணாதிக்க பார்வையிலமைந்த வன்முறை பாதையில் பயன்படுத்தப்பட்டே வருகின்றனர். இவர்களது செயற்பாடுகளும் வழிமுறைகளும் எந்தடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாததே. இவ்வாறு புலிகளின் செயற்பாடுகளை மறுப்பதானது எந்தவகையிலும் இலங்கை அரசாங்கம் தமிழ் பேசும் மனிதர்கள்; மீது மேற்கோள்ளும் அடக்குமுறைகளையும் சாதாரண சிங்களம் பேசும் மனிதர்களை பயன்படுத்ததி போர் மூலமாக அழிப்பதை அடக்குவதை நியாயப்படுத்தி விடாது. நியாயப்படுத்தி வுpடக்கூடாது. ஏனனில் கொழும்பிலருந்து வந்த ஒருவர் கேட்ட கேள்வி மிக முக்கியமானது அனைவரும் கவனத்தில் எடுத்து செயற்படவேண்டிய ஒன்று. அதாவது “புலிகள் தவறு ஏனின் அதற்கு மாற்றாக புலம் பெயர்ந்து செயற்படுகின்ற மனிதர்கள், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில என்ன செய்துள்ளார்கள்”. இந்தக் கேள்விக்கு யார் விடை கூறப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது கடந்த 27 தடவைகள் தமது நேரங்களை செலவளித்து பணத்தைச் செலவளித்து சந்தித்து தம் கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடிய தமிழ் பேசும் “பெண்கள் சந்திப்பு” விடை கூறுவார்களா?
என்ன செயற்பாடுகளை இதுவரை முன்னெடுத்துள்ளது?

இனிமேலும் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள்; இலங்கையில் நடைபெறும் ஆணாதிக்க வழிப்பட்ட இலங்கை அரசின் போருக்கு எதிராக என்ன செய்யப்போகின்றோம்?
அதிகளவு பெண்கள் பயன்படுத்தப்படும் புலிகளின் வன்முறை போராட்ட வழிமுறைகளுக்கு எதிராக அல்லது மாற்றாக என்ன செய்யப்போகின்றோம்.?
இந்தடிப்படையில் சிந்தித்து இனிமேலும் செயற்படாது விடுவோமாயின் புலிகளின் போராட்டம் சில வேளை வெல்லலாம்! ஆரசாங்கம் சில வேளை தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி கொள்ளலாம்! ஆனால் இவை ஒன்றும் தமிழ் பேசும் பெண்கள் குழந்தைகள் உட்பட எந்த மனிதர்களது விடுதலையும் சாத்தியமாக்காது என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய ஒரு கசப்பான சோகமான ஒரு உண்மையாகும்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற உள்ள “இலங்கையின் எதிர் காலம் என்ன” என்ற தலைப்பில் சமாதானத்திற்கான கனேடியர்களும் மற்றும் சில அமைப்புகளும் ஒழுங்கு செய்கின்ற கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவர்கள் ஏற்கனவே இரு கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர். இவ்வாறான கலந்துரையால்கள் முக்கியமானவையே. சுpல கருத்தியல்ரீதியான தெளிவுகளைப் பெறுவதற்கு புதிய கருத்துக்களை தகவல்களை அறிவதற்கு அவசியமானவையே. ஆரம்ப கூட்டத்தில் கனடிய அரசியல் வாதிகள் கலந்து கொண்டார்கள். அரசாங்கம் பிழை என்றார்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றனர். இக் கருத்தே இவர்களுக்குப் பாதுகாப்பானது. ஆவர்கள் தம் கருத்தை கூறி எழுந்து போகும் பொழுது பலர் அவர்கள் பின்னால்; வால் போல் எழுந்து சென்றனர். ஏதற்காக? தீர்வு எதையும் கொண்டு சென்றாரா? யாருக்குத் தெரியும்? இரண்டாவது நிகழ்வு பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கலந்துரையாடப்பட்டது. இது இவர்களது ஆய்வுகளுக்குப் பயன்படலாம். கனடிய அரசியல் வாதிகள் இன்மையால் பங்குபற்றியோரும் முதலாவதை விட குறைவானவர்களாகவே இருந்தனர். இப்பொழுது மூன்றாவது கூட்டம். ஆனால் சமாதானத்தை நோக்கிய செயற்பாடு என்பது இக் கால் இடைவெளிகளில் பூச்சியமானதாகாவா அல்லது எவ்வாறு இருந்தது இருக்கின்றது.

ஆரசியல்வாதிகள் கல்விமான்கள் கருத்தாளர்கள் ஆய்வாளர்கள் தம் சார்புக்கருத்துக்களை கூறிச் செல்வார்கள். இது மட்டும் இலங்கையில் சமாதானத்தை கொண்டுவரப்போவதில்லை. இலங்கையின் எதிர் காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. முhறாக,

இலங்கை அரசு முன்னெடுக்கும் போரை நிறுத்துவதற்கு உரிமைகளை மறுத்தமைக்கு என்ன செய்தோம்?
புலிகளின் வன்முறை, சுய தற்கொலை, ஐனநாயக மறுப்பு பாதயை மாற்றுவதற்கு அல்லது மாற்றாக என்ன செய்தோம்?
சுமாதானத்திற்கான கனடியர்கள் என்ன செய்தோம்?
பேண்கள் சந்திப்பு என்ன செய்தோம்?
புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் என்ன செய்தோம்?

புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து புலிகளுக்கு சார்பாகவும் எதிராகவும் கதைப்பதும் அரசாங்கத்திற்கு வால் பிடிப்பதும் கஸ்டமான விடயமல்ல. இவை எதுவும் இலங்கையில வாழும் தமிழ் சிங்களம் பேசும் மனிதர்களுக்கு விடுதலையையோ உரிமைகளையோ பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. ஆகவே மேற்குறிப்பிட்ட மனிதர்களின் ஆரோக்கியமான அமைதிக்கான சமாதானத்திற்கான ஒன்றுபட்ட கூட்டுறவான “அமைதியை அமைதியுடாக பெறும்” செயற்பாடே இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும். இது நிச்சயமாக பெண்ணிய கருத்தினடிப்படையில் முன்னெடுக்கப்படும் பெரும்பான்மை பெண்கள் பங்குற்றும் செய்றபாடு ஒன்றின் மூலமே சாத்தியமானதாகும். இதுவே, “இலங்கையில் வாழும் மனிதர்களுக்கு நம்பிக்கையை வழங்கும்”.

தோடர்ச்சியான கலந்துரையாடல்கள் மட்டுமல்ல பொது இடங்களில் இலங்கை துர்துவரலயங்களின் முன்பான போரை நிறுத்துவதற்கும் உரிமைகளை மதிப்பதற்குமான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் அமைதியான செய்ற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது மிக மிக அவசியமானதாகும்.

பி.கு. நான் ஒரு சாதாண ஆண் மனிதர். மாற்றம் என்பது என்னளவிலையே ஏற்படாதபோது பிறரிடம் வெளியில் எவ்வாறு மாற்றத்தை எதிர்பார்ப்பது. ஆமைதி ஒவ்வொரு மனிதரிலிருந்தும் அவர்களது இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும அல்லவா பிறக்க வேண்டும். என்னிலிருந்து எப்பொழுது இந்த அமைதி உருவாகும்?


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍எனதேயான சில கருத்துக்கள்...

1. இரு பார்வைகளில் ஏதேனுமொன்றுடன் ஒத்துப்போக வேண்டுமென்ற அவசியம் எனக்கோ உங்களுக்கோ இல்லை. வேறு வேறு பார்வைகளைக் கிடைமட்டத்தில் வைப்பதன் மூலம் வாசகி/கன் தனக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ள விழைகிறேன்.

2. மீராபாரதி எனக்குத் தனி மின்னஞ்சலில் அனுப்பியதுதான் என்றபோதும் அது பலருக்கும் அனுப்பப்பட்ட குழு மின்னஞ்சல் என்பதால் பொதுப்பார்வைக்காகவும் பகிர்தலுக்குமானதே என்னும் புரிதலின் அடிப்படையிலேயே பொதுவெளியில் முன்வைக்கிறேன்.

3. மீராபாரதி ஒரு ஓஷோ பற்றாளர். அவரது வலைத்தளத்தில் 'புரட்சிகர இயக்கத்திலிருந்து விலகியது ஏன்?'' என்று ஒரு பதிவெழுதியிருக்கிறார். அவர் பங்குபற்றியது தேசிய இன விடுதலை இயக்கமா, நக்சல்பாரி இயக்கமா, மய்யநீரோட்ட இடதுசாரி இயக்கமா என்பது குறித்த விபரங்களை அறியேன். என்றபோதும் ஏதேனுமொரு குறிப்பான அரசியல் பார்வையோடு இயங்கிருக்கிறார் என்பது என் புரிதல்.

4. தமிழ்நதியின் பதிவில் அய்யனார், பதிவு குறித்த பிரக்ஞை எதுவுமில்லாமலே தொடர்பின்றி ஒரு பெண்பதிவர் குறித்து இட்டுள்ள பின்னூட்டம் அவரது அரசியல் அரைகுறை அறிதலையும் ஆணாதிக்கத்திமிரையுமே காட்டுகிரது.

Wednesday, August 6, 2008

தூங்கும்போது காலாட்டுதல்












நீண்டநாட்களாகி விட்டன. இன்னும் மூன்று மாதங்கள் எழுதாமலிருந்தால் தங்கமணி, ரோசாவசந்த் வரிசையில் 'மூத்த வலைப்பதிவர்கள்' பட்டியலில் சேர்வது உறுதி. நிறைய பதிவர்கள் புதிதாக எழுத ஆரம்பித்திருத்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான செய்திதான் என்றபோதும் பெரிதும் ஆழமற்ற இடுகைகளே அதிகம் தென்படுகின்றன. சினிமாச்செய்திகளுக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. ம.க.இ.க, பெரியார் திராவிடர் கழகம் போன்ற மாற்று இயக்கத்தோழர்களின் பதிவுகளும் குறைந்துவருகின்றன. சிறுபத்திரிகை மாதிரி எழுத்துப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் இதில் வருந்துதற்குரிய விஷயங்கள் இரண்டு. 'கலக்கப்போவது யாரு' அசத்தப்போவது யாரு' கோவை குணா, ரோபோ சங்கர் வகையறாக்களைப் போல, ரமேஷ் பிரேம், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனைப் பாவனை செய்யும் மிமிக்ரி கலைஞர்கள் பதிவர்களாக மாறியிருப்பது ஒரு சோகமெனில், நடைமுறை சார்ந்த அரசியல் குறித்த அவதானமோ அக்கறை இவர்களிடம் துளியும் இருப்பதாய்த் தெரியவில்லை. பொத்தாம்பொதுவாக இடதுசார்பு அரசியல்தான் எங்களுடையது என்று சொல்லிக்கொண்டாலும் கூட 90 களுக்குப் பின் உலகமயமாக்கல் நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் நுழைத்திருக்கும் பாரியத்தாக்கங்கள், இன்னமும் உத்தபுரம் போன்ற பகுதிகளில் பேய்ப்பல் காட்டிச்சிரிக்கும் சாதித்திமிர் இவையெல்லாம் குறித்துப் பின்நவீனப்பூசாரிகளிடமிருந்து ஒரு எழுத்தும் வருவதில்லை. போரடிக்கும் லெக்சர்களும் எழுதிப்பழகும் உத்திகளுமே நவீன வலைப்பதிவு எழுத்துக்களாய் மீளவும் மீளவும் வைக்கப்படுகின்றன. இவற்றினின்று விலகிச் சமீபமாய் என்னைக் கவர்ந்த பதிவர் 'வினவு'. பெரிய ஆர்ப்பாட்டம், பின்நவீனத்துவ டிரெய்லர்கள் எதுவுமின்றி இயல்பாக எழுதுகிறார். குறிப்பாக் ஜெயமோகனும் நாவல்பழமும் குறித்த பதிவு ஜெமோவின் வர்க்கச்சார்பைத் தோலுரிக்கிறது. இந்தியாடுடே முஸ்லீம்களுக்கு எதிராய் வெளியிட்டுள்ள சிறப்பிதழ் குறித்து வினவு மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது துயரளிக்கிறது.

----------------------------

வலைப்பதிவுலகப் பரபரப்புச் செய்திகளை வாசிக்க நேரமில்லை. முதலாவதாகப போலி பிரச்சினை ஒருவழியாக முடிவிற்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாக விடாதுகருப்பு பக்கத்தில் மூர்த்தி எழுதிய கடிதம் மட்டும் படிகக நேர்ந்தது. அப்புறம் பெயரிலி அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணியதாக அறிகிறேன். அதுகுறித்தும் முழுதாக ஏதும் தெரியாது. என்றாலும் ஒருநாள் கூகுளில் என் பெயரிட்டுத் தேடியபோது ஒரு அனானிப்பின்னூட்டத்தை வாசிக்க நேர்ந்தது. நான் எனக்கு எதிரான பின்னூட்டங்களை மட்டுறுத்திவிடுவதாகவும் ஆனால் கருத்துச்சுதந்திரம் குறித்துப் போலிக்கூச்சல் போடுவதாகவும் நண்பர் ஒரு வர் எழுதியிருந்தார். திருமணத்திற்குப் பின்னும்கூட 'உன் மனைவியை ஒழுத்ததைக் கதையா எழுதுவியாடா' என்று வந்ததைக்கூட வெளியிட்டிருக்கிறேன். எனவே இத்தகைய குற்றச்சாட்டுகளில் உள்ள அபத்தங்களை நினைத்து சிரிக்க மட்டுமே ஏலும். முன்பு நான் எல்லாவகையான பின்னூட்டங்களையும் வெளியிட்டுக்கொண்டுதானிருந்தேன், அப்பின்னூட்டங்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்றபோதிலும்கூட கருத்துச்சுதந்திரம் என்பதால். ஆனால் பின்னாளில் அத்தகைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். கடைசியாக என் பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம் கூட அவ்வாறாக வலையுலகிற்குத் தொடர்பில்லாத வேறுசில மனிதர்களைப் பற்றி அபத்தமும் ஆதாரமற்றதுமான அவதூறுகளைச் சுமந்துவந்தது. எனன செய்ய? எச்சில் இலைகளைக் குப்பைத்தொட்டிகளில்தானே எறியவேண்டும்!
--------------------------------------

தோழர் தமிழச்சி 'வெளியிட வேண்டாம் என்று ஒரு பின்னூட்டத்தை எழுதியிருந்தார். நீண்டநாட்களாக வெளியிடாமலும் ஆனால் அழிக்காமலும் வைத்திருந்தேன். இந்த எச்சில் இலை பதட்டத்தில் தவறிப்போய் வெளியிட்டுவிட்டேன். உடனடியாகச் சுதாரித்து அழித்தும்விட்டேன். அது மொத்தம் என் வலைப்பக்கத்தில் இருந்ததே மூன்று முதல் அய்ந்துநிமிடங்கள்தானிருக்கும். ஆனால் அதற்குள் அந்தப் பின்னூட்டத்தை வைத்து சர்ச்சை உருவானதாக அறிகிறேன். அது எப்படி இருபத்துநாலுமணிநேரமும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார முடிகிறது என்று தெரியவில்லை. உண்ணவும் மலங்கழிக்கவும் தேவையற்ற தேவர்களாயிருக்கக்கூடும்.

பின் நவீனம் பற்றி நான் ,அய்யனார், சுந்தர் ஆகியோர் அறிவதற்கு முன்னமே தன் தொப்புளுக்குக்கீழே முடிவளர்ந்துவிட்டதாகவும் பெயரிலிரி அண்ணை எழுதியிருந்தாராம். வாழ்க பின்நவீனத்துவத்தாத்தா பெயரிலி அண்ணை!
----------------------------------

இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் கருத்துரிமைக்கான போராட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
------------------------------------------------

ஒருவழியாக மன்மோகன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவை அய்ந்தாண்டுகள் நிலையாக ஆண்ட முதல் பார்ப்பனரல்லாத பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால் சீக்கியச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மன்மோகனாக இருந்தாலும், மாயாவதி மாதிரியான தலித் பிரதமராக இருந்தாலும் இடதுசாரிகளானாலும் அமெரிக்க அடியாட்களாய் மாறுவார்களின்றி வேறில்லை. மாவோயிஸ்ட்களின் அரவணைப்பிலிருக்கும் நேபாளம் என்ன செய்யப்போகிறதென்று பார்ப்போம்.
-------------------------------------
இனி வாரம் ஒருமுறையாவது எழுதவேண்டும். தீவிர இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப்படாத சினிமாக்காரர்கள் குறித்து எழுத எண்ணம். முதலாவதாக கவுண்டமணி குறித்து எழுத ஆசை.‌
+ = &

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

Friday, July 11, 2008

பதில்கள் + ?கள்

கேள்விகளுக்கு நன்றி ஆடுமாடு.

1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)


முதலில் உதாரணத்தின் அடிப்படையில். முதலாவதாக அங்கு இலக்கிய மோதல் நடக்கவில்லை. சங்கரராம சுப்பிரமணியன், விக்கிரமாதித்யன், லட்சுமிமணிவண்ணன் ஆகிய மூன்று கவிஞர்களும் எழுத்ய கூட்டுக்கவிதைகள் ஈராக் மக்களுக்கு எதிரானதென்றும் ஈராக் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது என்றும் கருதிய ம.க.இ.க தோழர்கள் அவற்றிற்கெதிராக துண்டறிக்கைகளை வினியோகித்தார்கள். இலக்கியங்களுக்கெதிராகப் 'பிட்நோட்டீஸ் அடிக்கக்கூடாது' என்றோ 'புத்தகம் எழுதக்கூடாது' என்றோ சொன்னால் அண்ணாவின் 'கம்பரசத்தை'ப் பாசிசமாக அடையாளப்படுத்தலாம். ஆனால் பிரச்சினை என்னவெனில், புதிதாய் அப்போதுதான் மணமுடித்த சங்கரின் வீட்டுக்குள் புகுந்து தோழர்கள் நோட்டிஸ் வினியோகித்தது, அவரது மனைவியையை மிரளச்செய்தது, அக்கம்பக்கத்து வீட்டாரிடையே சங்கர் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்கியது என்பது இலக்கியவாதிகளின் குற்றச்சாட்டு.

கவிஞர்களிடமிருந்து மிரட்டிக் கையெழுத்து வாங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை ம.க.இ.க தோழர்களிடம் (தனிப்பட்ட முறையில் பேசும்போது) மறுத்தார்கள். சங்கர் எழுதிய கவிதைக்காக அவர் வீட்டாரைக் கலவரப்படுத்துவது என்பது தவறுதான். ஆனால் அதற்காக எழுத்தாளர்களுக்கென்று எந்த சமூகப்பொறுப்புமே தேவையில்லையா என்ன?

உங்கள் அடிப்படையான கேள்விக்கு வருவோம். 'இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா?' என்கிற கேள்வி கேட்கப்படவேண்டிய நபர்கள் ம.க.இ.க போன்ற புறச்சக்திகள் அல்ல, உண்மையில் இலக்கியவாதிகளிடம்தான் இந்தக் கேள்வி எழுப்பப்படவேண்டும். சங்கருக்கு ஆதரவாக, வன்முறைக்கு எதிர்ப்பாக இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் அதே வன்முறையைச் சக இலக்கியவாதிகளின் மீது (நேரடியாகவும், எழுத்து வழியாகவும்) செலுத்தத் தயங்கமாட்டார்கள். அதாவது எழுத்தாளனை வீடுபுகுந்து அடிப்பது, வக்கீல் நோட்டீஸ் விடுவது, போலீஸ் ஸ்டேசனில் புகார்கொடுப்பது, அடித்து உதைப்பது, செருப்பைத் தூக்கிக் காட்டுவது போன்ற அனைத்து 'உரிமைகளும்' இன்னொரு சக இலக்கியவாதிக்குத்தான் உண்டே தவிர இதில் 'அன்னியர் பிரவேசிக்க' அனுமதியில்லை. வாழ்க கருத்துச் சுதந்திரம்!

3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?

பொதுவாக நாம் இப்போது பயன்படுத்தும் 'எழுத்துத்தமிழ்' என்பது பல வட்டார வழக்குகளின் அடையாளங்களின் மீதேறி ஒற்றைப்படுத்தும் பாசிச வடிவமே. 19ம் நூற்றாண்டுப் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தால், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்டதே இந்த 'பொதுத்தமிழ்'. இந்த ஒற்றைத்துவ முயற்சிக்கு எதிராக தமிழின் பன்மைத்துவக் கூறுகளை அடையாளப்படுத்தவும், 'இங்கு தமிழ் இல்லை, தமிழ்கள்தான் உண்டு' என்று அ.மார்க்ஸ் அடிக்கடி சொல்வதைப் போல தமிழின் ஒற்றை அடையாளத்தை மறுக்கும் முயற்சியாகவே வட்டாரவழக்கின் அடிப்படையிலான இனவரைவியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய இரண்டு அம்சங்கள் வட்டாரவழக்கு என்பதும் ஒருபடித்தானதல்ல, கோவை வழக்கு என்பதில் கவுண்டர் வழக்கிற்கும் அருந்ததியர் வழக்கிற்கும் பறையர் வழக்கிற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

அதேபோல் இதுவரை கவிதைகளும் கதைகளுமே வட்டார வழக்கில் வந்திருக்கின்றனவே தவிர தமிழில் எழுதப்படும் அனைத்துக்கட்டுரைகளும் 'மய்யத்தமிழையே' பிடித்துத் தொங்குகின்றன.

4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...

மகாஸ்வேதாதேவியின் '1084ன் அம்மா'. மேற்கு வங்காளத்தில் பூர்சுவாவாகப் பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து போலிசாகச் சுட்டுக்கொல்லப்பட்ட ப்ரீதி என்னும் இளைஞனின் அம்மாவின் நினைவுகள், உணர்வுகள். மேட்டுக்குடியினரின் போலித்தனம், ஒரு சமூகப்போராளியைத் தாய் எப்படிப் புரிந்துகொள்கிறாள் என்பது குறித்த வேறு நோக்கு. பின்னுரையில் வ.கீதா குறிப்பிடுவதைப் போல 'துயரத்திற்கு மாற்றாய் நீதி'யை முன்வைக்கிறது நாவல்.

2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். சமீபகாலமாகச் சுய இன்பம் செய்யவில்லை.

இனி ஜமாலனுக்குச் சில கேள்விகள்

1. ராமானுஜத்தின் 'காந்தியின் உடல் அரசியல்' விமர்சனக்கட்டுரையில் (தீராநதி)சமணம் இந்துமதத்தின் ஓரங்கமாகவே மாறிப்போனதையும் அதற்கான கூறுகள் அதன் இயல்பிலேயே அமைந்துள்ளதையும் மாற்றத்தை ஏற்காத அதன் தன்மை குறித்தும் விளக்கிக் காந்தியைச் சமணமரபில் பொருத்தி நீங்கள் கூறுவது சரியானது என்றே கருதுகிறேன். அதேபோல் பெரியாரைப் பவுத்தமரபில் பொருத்திச் சொல்ல இயலுமா?

2. தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து...

3. ஆங்கிலம் தெரிந்தால்தான் பின்நவீனத்தைப் புரிந்துகொள்ள இயலுமா?

4. 'சாரு தன் பக்கத்தில் என் வலைப்பூ பற்றிக் குறிப்பிட்டதால் 10 கோடி ஹிட்ஸ் வந்தன' என்று புல்லரிக்கும் பதிவர்கள் குறித்து...

Thursday, July 10, 2008

கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!

நேற்று மதியம் நண்பர் ஜ்யோராம்சுந்தரின் 'காமக்கதைகள்' பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன். (சுந்தர் முழுமையாக த.மணத்திலிருந்து நீக்கப்படவில்லை என்று நம்புகிறேன்.) சுந்தரிடம் பேசியபோது இதுகுறித்த முன்னறிவிப்பு மின்னஞ்சல்கள் தனக்கு எதுவும் தமிழ்மணத்திலிருந்து அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பின்போது தோழர்.பைத்தியக்காரன், 'தமிழ்மணம் ஒரு பதிவரை எந்த அடிப்படையில் நீக்குகிறது?, குறிப்பாகத் தமிழச்சி' என்று அச்சந்திப்பிற்கு வந்த தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவரான தோழர்.சங்கரப்பாண்டியனைப் பார்த்து வினவினார்.

அப்போது சங்கரப்பாண்டி, " ஒரு பதிவர் தன்னைத் தமிழ்மணத்தில் இணைக்கும்போது அளிக்கப்படும் விதிகளின் அடிப்படையிலேயே அவர் நீக்கப்படுகிறார்' என்றும் 'அவரது எழுத்துக்கள் குறித்து பெரும்பான்மையினரான பதிவர்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் வரும்போது நீக்கப்படுகிறார்' என்றும் தெரிவித்தார்.

ஆனால் பைத்தியக்காரனின் கேள்விக்கு முன்னால் ஒரு பதிவர் சுந்தருக்குத் தொடர்ச்சியான நெகட்டிவ் ரேட்டிங் விழுவது குறித்தும், வெகுஜன அபிப்பிராயம் என்ற அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடுவது சரியா என்னும் பொருள்பட ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக நானும் தமிழச்சி உள்ளிட்ட பல பதிவர்கள் வெகுஜன அபிப்பிராயத்தின் அடிப்படையில் மட்டுமே நீக்கப்படுவது என்பது எப்படிச் சரியாகும், உதாரணமாகப் பார்ப்பனியம் குறித்து ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார் என்றால், பல பார்ப்பனர்கள் அவர் குறித்து அதிகப் புகார்களை அனுப்பினால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது எப்படிச் சரியானதாக இருக்கும் என்று கேட்டேன். ஆனால் சங்கரப்பாண்டி 'தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் அந்தப் பதிவுகளைத் தான் படிப்பதாக'த் தெரிவித்தாரே தவிர, அவரளித்த பதில்கள் திருப்தியளிப்பதாயில்லை.

இப்போது சுந்தர் விவகாரத்திற்கு வருவோம். சங்கரப்பாண்டி சந்திப்பில் தெரிவித்ததைப் போல குறைந்தபட்சம் எச்சரிக்கைகளாவது சுந்தருக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும். எந்த முன்னறிவிப்புமின்றி பதிவர் நீக்கப்படுவது ஜனநாயகத்தின்பாற்பட்டதல்ல.

மேலும் வெகுஜனத்தளங்களில் எழுத விருப்பமில்லாதவர்கள்/ வாய்ப்பற்றவர்களே பெரும்பாலும் வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இது தணிக்கைமுறையினின்று தப்பிக்கும் சுதந்திரம். ஆனால் மீண்டும் அதே வலைப்பூக்களை வழக்கமான தணிக்கைமுறைகளைக் கொண்டே கழுத்தை நெறிப்பது எவ்வகையில் நீதி?

தமிழ்மணம் இதுகுறித்து தெரிவித்துள்ள விளக்கத்தில் 'தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.
'என்றும் 'தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.' என்றும் தெரிவித்துள்ளது. அப்படியானால் 'பக்தி' என்று தலைப்பிட்டு பதிவின் உள்ளே காமக்கதைகள் எழுதினால் பிரச்சினையில்லையா?

பொதுவாகவே கலைஞர்களும் எழுத்தாளர்களும் வெகுஜன அபிப்பிராயங்களுக்கும் பொதுப்புத்திக்கும் அப்பாற்பட்டவட்டவர்கள். பொதுப்புத்தியை அப்படியே பிரதிபலிக்க செய்தித்தாள் நிருபர் போதும், கலைஞர்களோ எழுத்தாளர்களோ தேவையில்லை. ஆனால் அத்தகைய எழுத்துக்களை மீண்டும் பொதுப்புத்தி அடிப்படையிலேயே மதிப்பிடுவதன் மூலம் தமிழ்மணம் 1, மாற்றுச்சிந்தனை எழுத்தாளர்களை உரையாடல் வெளியிலிருந்து அப்புறப்படுத்துகிறது அல்லது, மீண்டும் பொதுப்புத்திக்குத் தள்ளுகிறது. இது ஆரோக்கியமான எழுத்துக்களை வளர்க்காது. இங்கே இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். சுந்தர் நீக்கப்படும்போது படித்த அறிவுஜீவிகளிடமிருந்து வருகின்ற இக்கண்டனங்கள் தமிழச்சியை நீக்கப்படும்போது வராததையும் தொடர்ச்சியான கள்ளமவுனம் கடைப்பிடிக்கப்பட்டதையும் நாமறிவோம். குறிப்பாக பைத்தியக்காரன் போன்ற மாற்றுச்சிந்தனைகளை அறிமுகப்படுத்தி எம்போன்றவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பதிவர்களும் மவுனம் சாதித்தபோது அதிர்ந்த நான் நேரடியாகவும் பகிடியாகவும் ஒருமுறைக்குமேல் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால் பதிவர் சந்திப்பின்போதாவது பைத்தியக்காரன் தமிழச்சி நீக்கம் குறித்துக் கேள்வியெழுப்பினார். ஆனால் கருத்துரிமை, பன்மைத்துவம், பெண்ணெழுத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நான் நம்பும் அய்யனார், சுந்தர், ஆடுமாடு போன்ற பதிவர்கள் இதுகுறித்துச் சின்னஞ்சிறு கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாதது வருத்தத்திற்குரியதே.

நானறிந்தவரை பின்நவீனம், மாற்றுச்சிந்தனைகளை முன்னிறுத்தும்/ ஆதரிக்கும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் பொதுவெளியில் திணிக்கப்படும் கருத்தியல் மற்றும் நேரடியான வன்முறைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றியே வந்திருக்கிறார்கள்.

மொழிவிளையாட்டு என்பது, மொழியின் அதிகாரத்தைக் கேள்விகேட்கும், அதிகாரத்தை உடைக்கும் நுண்ணரசியல் செயல்பாடு என்றே நான் நம்புகிறேன். அல்லாது அது வெறுமனே வடிவம் மற்றும் உத்தி சார்ந்த எழுத்துமுறையாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுமெனில் நாம் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் வாரிசாவோமேயல்லாது வேறொன்றில்லை. அது மீண்டும் விளையாட்டுகளைப் பார்த்து ரசித்து 'பலே' போடும் மேட்டுக்குடி அழகியல் பார்வைகளையே உற்பத்தி செய்யும்.

மாற்று அரசியல்/ இலக்கியம்/ சிந்தனை, அதிகாரமறுப்பு, பன்மைத்துவம் ஆகியவற்றை முன்வைக்கும் பதிவர்தோழர்கள் இனியாவது குறைந்தபட்சம் தாமியங்கும் வெளியாகிய வலைப்புலத்தில் அமுல்படுத்தப்படும் தணிக்கைக்கு எதிராகவாவது, (தணிக்கைக்கு உட்படுத்தப்படும் பதிவர் மற்றும் அவரது எழுத்துக்கள் தனக்கு உடன்பாடில்லையென்றபோதும்)குரல் கொடுக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய கேள்வி.

தணிக்கையை மறுப்போம். கருத்துரிமைக்காய் நிற்போம். கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!