Thursday, March 8, 2012

ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!

சுகுணா திவாகர்
ஓவியங்கள் : இளையராஜா, சிவபாலன்

''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?''

கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப் பொசுங்கல்களுக்கு நடுவில் அவளது கண்கள் மட்டும் வெள்ளையாக அலைபாய்ந்தன.

ஜீவா மூலம்தான் கார்த்திகா எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் நவீன இலக்கியம், அரசியல் பேசித் திரிந்து டீமாக மாறியவர்கள். டீம் என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய டீம் இல்லை. நான், ஜீவா, அக்தர் உசேன், என் பெயர் கொண்ட இன்னொரு செந்தில் என்கிற கவிஞர் நவயுகன்... அவ்வளவுதான். ஓஷோ, பாலகுமாரன் என்று அலைந்து திரிந்து, ஒரு வழியாக எங்கள் இலக்கிய டீமில் வந்து இணைந்த பிறகும் ஜீவா ஒரு சாகசக்காரனாகவும் அப்பாவியாகவும் இருந்தான். இப்போது நினைத்தால் அது ஒரு வரம் என்றுதான் தோன்றுகிறது. முதல் குடி, முதல் சிகரெட்டை எங்கள் டீமுக்கு அறிமுகப்படுத்திய அவனுக்குப் பெண் நண்பிகள் கணிசம். எங்களுக்கு அது மருந்துக்கும் இல்லை. தங்கையின் திருமணத்தில் துணிச்சலாகக் குடித்துவிட்டு பந்தி பரிமாறியது, வீட்டு மொட்டை மாடியில் சிகரெட் குடித்தது, பக்கத்து வீட்டுப் பெண் கொடுத்த காதல் கடிதங்கள் எனக் கதைகதையாகச் சொல்வான். ஆனால், கார்த்திகாவின் கதை, ஜீவாவின் வழக்கமான சாகசக் கதைகளில் ஒன்று அல்ல. அது ஒரு துயரக் கதையாகவும் இன்னொருபுறம் நாங்கள் பேசிக்கொண்டு இருந்த விஷயங்களுக்குச் சவால்விடும் கதையாகவும் இருந்தது!

''அப்பாவை ரயில் ஏத்தப் போனப்போதான் இந்தப் பொண்ணைப் பார்த்தேன். அழுதுக்கிட்டு இருந்தது. சாகற முயற்சியில இருந்தது!'' என்றான் ஜீவா. அவன்தான் பேசிக்கொண்டே இருந்தான். கார்த்திகா ஒன்றும் பேசவில்லை. இறுதி வரை அப்படித்தான். நான் மெள்ள அவளை ஏறிட்டுப் பார்த்தேன். பூசினாற்போன்ற கறுத்த தேகம். அவள் கண்கள் மட்டும் வசீகரமாக இருந்தன. ''கறுத்த பெண்களுக்கு அப்படித்தான். கண்ணு அழகாகத் தெரியும். முகம் கறுப்பா இருக்கும்போது கண்ணு மட்டும் வெள்ளையா இருந்தா தனி அழகுதான்!'' என்பான் அக்தர்.

பத்தாம் வகுப்புத் தேர்வை இரண்டொரு முறை எழுதித் தேர்வாகாததால் வீட்டிலேயே இருந்துவிட்டாள் கார்த்திகா. அப்பா அரசு மருத்துவமனையின் கடைநிலை ஊழியர். அக்கா நர்ஸ். மருத்துவமனை குவார்ட்டர்ஸில் வசித்தார்கள். அதே குவார்ட்டர்ஸில் வசித்த, கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த பையனுக்கும் கார்த்திகாவுக்கும் காதல். இருவரும் வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள். மதுரையில் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். காதல், கல்யாணத்தைவிட அவனுக்கு கார்த்திகாவின் தேகம் மீதுதான் ஆர்வம். அவளுக்கோ காதல் என்பது உடலுக்கெல்லாம் அப்பாற்பட்ட, நறுமணம் வீசிக்கொண்டே அந்தரத்தில் மிதக்கும் ஏதோ ஒரு பரிசுத்தமான வஸ்து என்கிற எண்ணம். மீண்டும் மீண்டும் அவன் முயற்சிகள் தொடர, அவனிடம் சொல்லாமல்கொள்ளாமல் மதுரை யில் இருந்து பஸ் ஏறி வீட்டுக்கு ஓடிப்போனாள் கார்த்திகா!

வீடு அவளை ஏற்றுக்கொண்டாலும் அது இயல்பானதாக அமையவில்லை. வசவுகள், சந்தேகங்கள் என நாளும் ஒரு விஷப்பூச்சி கார்த்திகாவைத் தீண்டத் தொடங்கியது. குறிப்பாக, அவள் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் சமயங்களில் அந்த குவார்ட்டர்ஸ் பையன்கள் கார்த்திகாவை ஏகத்துக்கும் கிண்டல் அடித்துச் சீண்டி இருக்கிறார்கள். 'கார்த்திகா என்பவள் எப்போதும் எந்தப் பையனோடும் ஓடிப்போகத் தயாரானவள்’ என்கிற பிம்பமே அவர்களுக்குள் ஊறிப்போய் இருந்தது. வீட்டின் வசவுகள், வீட்டைச் சுற்றியான வசவுகள் அவளை ரயில் தண்டவாளங்களை நோக்கித் துரத்தியிருந்தன.

''சரிடா, நாம என்ன பண்ண முடியும்?'' என்றான் அக்தர். உண்மைதான். கார்த்திகாவை நடத்துகிற அளவுக்கு எங்கள் வீடு எங்களை மோசமாக நடத்தாவிட்டாலும், அப்படி ஒன்றும் கௌரவமாகவும் நடத்தவில்லை. அமெரிக்க வேலை, ஐ.டி., ஐந்து இலக்கச் சம்பளத்தோடு எங்கள் செட் பசங்கள் செட்டிலாகிவிட, நாங்களோ நிறப்பிரிகை, கோபிகிருஷ்ணன், மிஷல் ஃபூக்கோ என்றிருந்தோம். வீடு எங்களை அனுமதித்ததே பெருந்தன்மையாக இருக்க, கார்த்திகாவை எங்கே கூட்டிப்போவது? அப்போதுதான் தோழர் கேசவனும் ரத்னா தோழரும் நினைவுக்கு வந்தார்கள்.

தோழர்கள் கேசவனும் ரத்னாவும் சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். பெண்ணியத்தின் மீது இருவருக்கும் அபார நம்பிக்கை. ரத்னா தோழர் கிராப் வெட்டி எப்போதும் பேன்ட் சட்டைதான் அணிந்து இருப்பார். காது, மூக்கு, கழுத்து என்று எங்கும் நகை கிடையாது. 'தங்கம் என்பது மஞ்சள் பிசாசு!’ என்பார். தோழர் கேசவன் எங்களுக்கு உதாரணப் பெண்ணியவாதி. மகள் கிளாரா ஜெட்கின் பிறந்த பிறகு அவரே ஆண் கருத்தடை செய்துகொண்டார். வீட்டு வேலைகளை அவர் பகிர்ந்துகொண்டது அவர்கள் குடியிருந்த 'ஸ்டோர்’ஸில் பெண்களின் பிரதான குசுகுசுப் பேச்சாக மாறி இருந்தது. எப்போது தோழர் கேசவனை நினைத்தாலும் கைலியை ஒருக்களித்து வாசலில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருப்பதான சித்திரமே தோன்றும்.

ல்லோருக்கும் தோசை சுட்டுக்கொண்டுவந்து தந்தார் கேசவன். ரத்னா தோழர்தான் பரிவாக கார்த்திகாவிடம் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

''உங்க அப்பா மேல கேஸ் கொடுக்கலாமா?''

''வேணாம்க்கா.''

''அந்தப் பையன் மேல?''

''ஐயோ, வேணாம்க்கா.''

இப்படி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுபவளாகத்தான் இருந்தாள் கார்த்திகா. அனேகமாக ஜீவாவோடுதான் அதிகம் பேசியிருப்பாளாயிருக்கும். வீட்டுச் சுவர் முழுக்க மாட்டப்பட்டு இருந்த தலைவர்கள், போராளிகளின் புகைப்படங்கள், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் அவளது மிரட்சியை அதிகப்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், ஓயாது பேசி கிளாரா மட்டும் அவளுக்குக் கொஞ்சம் நெருக்கமாகி இருந்தாள். கார்த்திகா கிளாராவுக்குச் சில கதைகளையும் ரைம்ஸ்களையும் சொல்லிக்கொடுத்ததைப் பார்த்தபோது, அவள் இயல்புநிலைக்கு வந்துவிட்டாள் என்று திருப்தி அடைந்தோம். ''பேசிக்கிட்டு இருங்க... வந்துடறேன்!'' என்றவாறு பேன்ட் மாட்டி வெளியே கிளம்பினார் கேசவன்.

ரு மணி நேரம் கழிந்திருக்கும். கார்த்திகா டி.வி-யில் நகைச்சுவைக் காட்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். கிளாரா தூங்கியிருந்தாள். கேசவன் இரண்டு ஆண் களோடு உள்ளே நுழைந்தார். அவர்களில் தலை நரைத்த மனிதரின் கண்களில் அதிர்ச்சி அப்பியிருந்தது. இன்னோர் இளைஞனின் கண்களில் ஆத்திரம் உறைந்து இருந்தது. உள்ளே நுழைந்ததும் கார்த்திகாவை அடிக்கத் தொடங்கினான் அந்த இளைஞன். ''ஓடுகாலி நாயே... ஏண்டி மானத்தை வாங்கறே?'' என்று இரண்டொரு முறை சொல்லிக்கொண்டவனாக மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கார்த்திகா அடிகளை ஏற்றுக்கொண்டு இருந்தாள். ''என்னங்க நீங்க..? ஒரு பொம்பளைப் புள்ளைய... அதுவும் இன்னொருத்தர் வீட்லவெச்சு அடிக்கிறீங்க?'' என்று கோபத்துடன் குரலை உயர்த்தித் தடுத்தார் தோழர் கேசவன். அந்த அளவில் அவர் ஒரு பெண்ணியவாதியாக இருந்தார்!

அப்பாவோடும் அண்ணனோ டும் கிளம்பும்போது கார்த்திகா, ஜீவாவையும் கிளாராவையும் மட்டும் ஏறிட்டுப் பார்த்தவளா கக் கிளம்பிப் போனாள்.

ரண்டு மாதங்கள் கழிந்துஇருக்கும். கார்த்திகாவை நாங்கள் மறந்திருந்த நேரம். மீண்டும் கார்த்திகாவோடு வந்து சேர்ந்தான் ஜீவா. அவனது அலுவலகத்துக்கே நேரே போயிருக்கிறாள் அவள். எந்தப் பெண் அறிமுகமானாலும் தன் தொலைபேசி எண், அலுவலக முகவரி, மின் அஞ்சல் முகவரி என்று எல்லாவற் றையும் அளித்துவிடுவான் ஜீவா. இப்போது எனக்கு கார்த்திகாவின் மீது பரிதாபம் வரவில்லை. ஆத்திரம்தான் வந்தது. அவளைவிட ஜீவாவின் மீதுதான் எரிச்சல் அதிகமாக வந்தது.

''இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைடா. இந்தப் பிரச்னையை நீயாத்தான் சால்வ் பண்ணணும்!'' என்றேன் குரலை உயர்த்தி. ஜீவா மௌனமாக நின்றான். கார்த்திகா இப்போதும் எங்களை நேருக்கு நேர் பார்க்கவில்லை. ஆனால், அவள் முகத்தில் சின்ன சுணக்கம் தெரிந்தது.

''ராகவன்கிட்ட போவோம்டா!'' என்றான் இன்னொரு செந்தில்.

ராகவனும் தோழர்தான். முன்னாள் தோழர் என்றும் சொல்லலாம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிக்கொண்டு இருந்தவர், 'கட்சியில் ஜனநாயகம் இல்லை’ என்று வெளியேறியவர். ஒரு சின்ன

டெலிபோன் பூத் வைத்திருந்தார். எங்க ளுக்கு வார இறுதியில் குடிப்பதற்கும் இலக்கிய உரையாடல்களை நடத்துவதற்கும் அதுதான் களம். போன் அடித்த இருபதாவது நிமிடம் களத்துக்கு வந்தார் ராகவன். கண்ணாடியை மூக்குத்தண்டில் அழுத்திக்கொண்டே, ''பொண்ணு ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கே?'' என்றார்.

''ஆமாம்'' என்றேன்.

லேசாக கார்த்திகாவைப் பார்த்துப் புன்னகைத்தார். கார்த்திகாவும் புன்னகைத்ததாகத்தான் தோன்றி யது. ஒரு பழச்சாறுக் கடையில் ஐந்து பேரும் அமர்ந்திருந்தோம். ஆளுக்கு ஒரு ஜூஸ் ஆர்டர் கொடுத்துவிட்டு, எங்களிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். ''ஏதாவது ஹாஸ்டல்ல சேர்க்கலாம். ஆனா, அதுக்கான காசு கட்டணும். என்ன பண்றது?'' என்றார். யாருக்குத் தெரியும்? அவர் ஏதாவது தீர்வைச் சொல்லி விடுவார் என்பதைப் போல, மூவரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தோம்.

''ம்ம்ம்... மொத தடவை யாராவது கட்டிட்டாக்கூட, மாசா மாசம் ஃபீஸ் கட்டணும். அதுபோக, இந்தப் பொண்ணோட செலவுக்குப் பணம்?'' - ஆக, இந்தப் பிரச்னையில் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதுவும் பதில் தெரியாத கேள்விகள், மேலும், கேள்விகள் மட்டுமே இருக்கின்றன என்பது எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. இருப்பதிலேயே அதிகமாகக் குழம்பிப்போனவன் ஜீவாதான். 'அதுக்குத்தான் மொதல்லயே சொன்னேனே’ என்கிற ஒரு சின்ன சந்தோஷப் புன்னகையும் தொனியும் எனக்கு வரத் தொடங்கியிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

''சரி, என்ன படிச்சிருக்கு?'' - ராகவன் கேட்டார்.

''டென்த் ஃபெயில். மூணு அட்டெம்ப்ட்!''

சலிப்புத் தட்டியது ராகவனின் கண்களில். ''ப்ளஸ் டூ முடிச்சிருந்தாக் கூட எங்கேயாவது வேலைக்குச் சேர்த்துவிடலாம்!''

டைப்பிங், கம்ப்யூட்டர் என்று எதுவும் கார்த்திகாவுக்குத் தெரிந்திருக்க வில்லை. ஐந்து பழச்சாறுகளுக்கான பணத்தைத் தந்தவர், ''ஒரு வேலை இருக்கு... பத்து நிமிஷத்துல வந்துடறேன். அங்கே இங்கே அலைய வேணாம். ஏதாவது ஒரு இடத்துல இருங்க!'' என்று சொல்லிக் கிளம்பிப் போனார்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாகி இருக்கும். ராகவன் வருவதாகத் தெரியவில்லை. போனும் வந்தபாடு இல்லை. ஜீவாவின் முகத்தில் கலவரம் கூடிக்கொண்டுபோனது. நான்கைந்து முறை மாற்றி மாற்றி ராகவனுக்கு போன் போட்டுப் பார்த்தோம். தோழர் எடுப்பதாக இல்லை. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, அவரிடம் இருந்து போன் வந்தது. உடனடியாக கார்த்திகா வைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

நாங்கள் போனபோது ராகவனுடன் கார்த்திகாவின் அப்பாவும் அண்ணனும் நின்றிருந்தார்கள். ஜீவாவிடம் பேசி எப்படியோ கார்த்திகா அப்பாவின் தொலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார் ராகவன். இப்போது கார்த்திகா அப்பாவின் கண்களில் அதிர்ச்சிக்குப் பதிலாக அலுப்பும் சலிப்பும்தான் தெரிந்தன. எங்களை லேசாக முறைத்தவாறு நின்றான் அவள் அண்ணன். தீயணைப்பு நிலையத்தின் அருகில் கார்த்திகாவை அவள் அப்பாவுடனும் அண்ணனுடனும் இன்னொரு முறை அனுப்பிவைத்தோம். இப்போது அவள் ஜீவாவைக்கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.

மூன்று வாரங்கள் தாண்டியிருக்காது. கார்த்திகா தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வந்தது. நானும் ஜீவாவும் போயிருந்தோம். கார்த்திகாவுக்குப் பக்கத்தில் அவளது அம்மா கவலையும் கண்ணீருமாக அமர்ந்து இருந்தார். அக்கா வெளியில் போயிருக்கிறாராம். அப்பாவை யும் அண்ணனையும் காணவில்லை.

''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?''

இப்போதுதான், இந்தக் கேள்வியைக் கேட்கும்போதுதான் கார்த்திகா முழுதாக என் கண்களை நேருக்கு நேர் பார்த்தவளாகக் கேட்டாள். இல்லை, நான் அவள் வீட்டுக்கு போன் செய்யவில்லை. இன்னொரு செந்தில்தான் போன் செய்திருக்கிறான் என்பது பின்னாளில் தெரிந்தது. அவனுக்கும் இது வரை எந்தப் பெண் தோழியும் வாய்த்தது இல்லை. நட்பை உருவாக்கிக்கொள்வதன் நிமித்தம்தான், கார்த்திகாவிடம் பேசுவதற்காக போன் செய்திருக்கிறான். ஆனால், போனை எடுத்தது அவளது அக்கா. அதன் பின் வசவுகளும் சந்தேகங்களுமாக விஷப் பூச்சிகள் மேலும் மேலும் ஊரத் தொடங்கி இருக்கின்றன. அனேகமாக அவள் கண்களுக்கு அருகில் அந்தப் பூச்சிகள் வந்தபோதுதான், கார்த்திகா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து இருக்க வேண்டும்.

கார்த்திகா இறந்த செய்தி எங்களுக்குத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. அன்று இரவு நானும் ஜீவாவும் நிறைபோதையில் இருந்தோம். ஜீவாவுக்கு அழுகை தாங்க முடியவில்லை. ''ஏன் இப்படிப் பண்ணணும் கார்த்திகா?'' என்றான் அழுகையினூடாக. வார்த்தைகள் துண்டுதுண்டாகத்தான் வந்து விழுந்தன.

உண்மையில் ஜீவா மட்டும் அப்பாவி சாகசக்காரன் இல்லை. கேசவன், ரத்னா, ராகவன் என எல்லோருமே ஏதோ ஒரு வகையிலான அப்பாவி சாகசக்காரர்கள்தான். அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்? நான், அக்தர், செந்தில் என எல்லோரும்தான். வீடு மறுக்கிற ஒன்றை, வீடு விரும்பாத ஒன்றைச் செய்துகொண்டு இருக்கிற சாகசமும், மற்றவர்களிடம் இருந்து எங்களை வித்தியாசப்படுத்திக்கொள்கிற வேட்கையும்தான் நாங்கள். ஆனால், முகத்தில் அறையும் நிஜமான கேள்விகளுக்கு எங்களால் எந்தப் பதிலையும் அளிக்க முடியவில்லை. ஜீவா, நான், அக்தர், நவயுகன், கேசவன், ரத்னா, ராகவன் என சாகசக்காரர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணைக் கொலை செய்திருக்கிறோம்.

''வீட்டைவிட்டு ஓடிப்போறது, தற்கொலை செஞ்சுக்கிறது - இந்த ரெண்டு எண்ணமும் எல்லார் வாழ்க்கையிலும் ஒருமுறையாவது வந்துட்டுப் போறதுதான். ஆனா, கார்த்திகாவால் முதல் வாய்ப்பை வெற்றிகரமா நிறை வேத்த முடியலை. அதான் ரெண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுத்துட்டா.

ஆண்களால்தான் வீட்டைவிட்டு ஓடிப் போகவும் முடியும்... தற்கொலை பண்ணிக்கவும் முடியும். பொம்பளைங்களால தற்கொலை மட்டும்தான் பண்ணிக்க முடியும். ஏன்னா, ஒரு பொண்ணு வீட்டைவிட்டு ஓடிப்போறதா இருந்தாக்கூட, அவ இன்னொரு ஆம்பளையோடுதான் ஓடிப் போக முடியும்!''

இதைச் சொல்லும்போது நான் ஜீவாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை!

(நன்றி : ஆனந்த விகடன்)

Thursday, October 13, 2011

மண்ணுக்கான விடுதலை அல்ல... மக்களுக்கான விடுதலையே தேவை!



ரீ.சிவக்குமார்
படங்கள் : க.தனசேகரன்

ன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன்.

''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?''

''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.''

''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?''

''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட் டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார் கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.''

'' 'திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?''

''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளி கள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.''

''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?''

''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங் கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான்.

மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.''

''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?''

''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''

''பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?''

''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!''



Monday, September 26, 2011

மரணதண்டனை எதிர்ப்பு : ஜெயலலிதாவை வாழ்த்த வேண்டுமா, வலியுறுத்த வேண்டுமா?

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்ஷேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும், கூடங்குளம் அணு உலைப் பணிகளைத் தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான தீர்மானங்களைப் போட்டு அசத்துகிறார் ஜெயலலிதா. உண்மையிலேயே அவர் புரட்சித்தலைவிதானோ என்கிற மயக்கமும் பலருக்கு ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நன்றாகக் கவனித்துப்பார்த்தால், ஜெயலலிதாவால் நிறைவேற்றப்படும் அனைத்து தீர்மானங்களும் மத்திய அரசை வலியுறுத்துவதே தவிர, அவரது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துபவையல்ல. பந்தை மத்திய அரசின் கோல்போஸ்ட்க்குத் தள்ளுவதே ஜெயா அரசின் தீர்மானங்கள். ஆனால், சமச்சீர்க்கல்வி குறித்த அணுகுமுறை, பரமக்குடியில் தலித்துகள் மீதான துப்பாக்கிச் சூடு, நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதிநிதிகளை அனுப்புவது, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே வேட்பாளர் பட்டியலை அறிவித்தது ஆகியவை மூலம் பார்ப்பன - இந்துத்துவ - எதேச்சதிகாரப் போக்கிலிருந்து தான் இன்னும் மாறவில்லை என்பதை ஜெயலலிதா நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் மேற்கண்ட தீர்மானங்களிலேயே திருப்தி அடைந்து விடுபவர்கள் பரமக்குடி சம்பவம் போன்றவற்றில் அழுத்தமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தயங்குவதைக் காணமுடிகிறது. இந்நிலையில் முவர் மரணதண்டனையை ரத்துசெய்யக் கோரும் ஜெயலலிதாவின் தீர்மானம் குறித்து இன்னொரு பார்வையை முன்வைக்கிறது எஸ்.வி.ஆரின் நூல்..

எஸ்.வி.ராஜதுரை எழுதி சென்னை அரசியல் பள்ளியின் வெளியீடாக வந்துள்ள ‘மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் : உரத்த சிந்தனைக்காக சில கருத்துகள்’ என்னும் நூல் மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கான இன்னொரு கருவி. எஸ்.வி.ஆர் மரணதண்டனை எதிர்ப்பு உள்ளிட்ட மனித உரிமை செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொள்பவர் என்பதால் அதுதொடர்பாகச் சட்டரீதியான பல தரவுகளை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார். இந்நூலில் பல்வேறு விஷயங்கள் விளக்கப்பட்டாலும் முக்கியமானது மரணதண்டனையை ரத்து செய்வதில் மாநில அரசுக்கு உள்ள அதிகார வரம்பெல்லை குறித்தது. ‘பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கையோடு ‘குடியரசுத்தலைவரால் ஒருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு மாநில அரசு அதில் தலையிட முடியாது’ என்றும் ஜெயலலிதா கூறினார். ஆனால், இந்த வாதம் தவறானது என்பதற்குப் பல வாதங்களையும் உதாரணங்களையும் அடுக்கடுக்காக முன்வைக்கிறார் எஸ்.வி.ஆர்.

‘மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணைமனு மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டப்பிரிவு 72 குடியரசுத்தலைவருக்கு வழங்குகிறது என்றால் அதே அதிகாரத்தைப் பிரிவு 161 மாநில ஆளுநருக்கு வழங்குகிறது. ஆனால் அதேநேரத்தில் இந்த அதிகாரங்கள் இணையான அதிகாரங்களே (Parellel power) தவிர படிநிலை அதிகாரங்கள்(Hierarchial power) அல்ல. அதாவது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியபிறகு அந்தத் தீர்ப்பில் மாநில உயர்நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது மாதிரியான அதிகாரம் அல்ல இது. எனவே குடியரசுத்தலைவர் ஒரு கருணைமனுவை நிராகரித்த பிறகும் கூட மாநில ஆளுநர் அந்தக் கருணைமனு மீது முடிவெடுக்கலாம். மேலும் குடியரசுத்தலைவரோ ஆளுநரோ இதுதொடர்பாக்ச் சுயேச்சையாக முடிவெடிக்க முடியாது, மத்திய, மாநில அமைச்சரவைகளின் வழிகாட்டுதலின்படியே எடுக்க முடியும்’ என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தும் எஸ்.வி.ராஜதுரை அதற்கு உதாரணமாக இரண்டு உச்சநீதிமன்ற முடிவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். ((MataRam vs Union of India (1981) 1SCC 107; Kehar Singh vs Union of India (1989) 1 SCC 204)

‘குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணைமனு மீது மாநில அரசு தலையிட முடியாது’ என்பதற்கான காரணமாக ஜெயலலிதா ஒரு கடிதத்தைச் சுட்டிக்காட்டினார். 1991, மார்ச் 5 அன்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதமே அது. ஆனால் ‘இந்தக் கடிதம் என்பது நிர்வாகம் தொடர்பான ஆணையே அன்றி அரசியல் சட்டத்தைப் போல இறுதிப்படுத்தப்பட்ட அதிகாரம் அல்ல’ என்று வாதிடுகிறார் எஸ்.வி.ஆர். மேலும் இந்தக் கடிதம் எழுதப்பட்ட பின்னணியை அறிந்துகொண்டாலே மத்திய அரசின் இந்தக் கடிதம் எத்தகைய அதிகார வரம்புகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

1965ல் பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப்சிங் கெய்ரோனைக் கொலை செய்ததாகத் தயாசிங் என்பவர் கைது செய்யப்பட்டவர். 1978ல் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. 1980ல் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. அவரது கருணைமனுக்களும் ஆளுநராலும் குடியரசுத்தலைவராலும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இதற்கிடையில் பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் அமைக்கப்பட்டிருந்தது. 1988ல் தயாசிங் ஹரியானா ஆளுநருக்கு அனுப்பிய கருணைமனுவின் அடிப்படையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அலிப்பூர் சிறைக்கைதி ஒருவர் தயாசிங்கை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டி 1990ல் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதுகிறார். இதையே ரிட் மனுவாகக் கொண்டு உச்சநீதிமன்ற பெஞ்ச் தயாசிங் வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. அப்போதுதான் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் கடிதத்தை மத்திய அரசு உச்சநீதிமன்ற பெஞ்சு முன் சமர்ப்பித்தது. ‘குடியரசுத்தலைவரால் கருணைமனு நிராகரிக்கப்பட்ட பிறகு அதில் மாநில ஆளுநர் தலையிட முடியாது’ என்றும் தெரிவித்தது. ஆனால், உச்சநீதிமன்ற பெஞ்ச் அந்தக் கடிதத்தைப் பொருட்படுத்தவேயில்லை. 1991ல் தயாசிங்கின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஜெயலலிதா ‘மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்பதற்கான ஆதாரமாகச் சுட்டிக்காட்டும் கடிதத்தின் பின்னணியில் உள்ள வழக்கிலேயே மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 2000ல் கருணாநிதி ஆட்சியின்போது பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டதையே காரணமாகக் காட்டி மீண்டும் மீண்டும் ஜெயலலிதா பல்லவி பாடுவதும் சரியானது அல்ல. ஏனெனில் ‘குடியரசுத்தலைவராலும் ஆளுநராலும் கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் மாறிய சூழ்நிலைமைகள் அடிப்படையில் மீண்டும் குடியரசுத்தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் கருணைமனுக்கள் அனுப்பலாம்’ என்பதற்கும் தயாசிங்கின் வழக்கே உதாரணம். ஒருவேளை மூவரும் தங்கள் மரணதண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளாவிட்டாலும் அரசியல் சட்டப்பிரிவு 54ன்படி மாநில அரசு தண்டனையைக் குறைக்க சுயேச்சையாக முடிவெடுக்கலாம். புலவர் கலியபெருமாள் கருணைமனு அனுப்பாதபோதும் தமிழக அரசு முன்வந்து அவரது மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியதே இதற்குச் சிறந்த முன்னுதாரணம்.

‘மாநில அரசாங்கமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் அது மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே மாநில அமைச்சரவை முடிவின்படி மரணதண்டனையை ரத்து செய்ய மாநில ஆளுநருக்கு உள்ள அதிகாரமும் இறையாண்மை அதிகாரம்தான்’ என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு ((2003(7)SCC 121) கூறுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள ‘வகுப்புவாதத் தடுப்பு மசோதா’ மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பதாக மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா, மரணதண்டனையைக் குறைப்பதிலும் மாநில அரசின் உரிமையை வலியுறுத்த வேண்டும். மாறாக, மத்திய அரசு எழுதியுள்ள ஒரு கடிதத்தையே அடிப்படையாக வைத்து தன் பொறுப்பையும் அதிகாரத்தையும் உரிமையையும் தட்டிக்கழிப்பது சரியல்ல என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சுட்டிக்காட்டுகிறார் எஸ்.வி.ஆர்.

எனவே உடனடியாக ஜெயலலிதா பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தானாகவே மரணதண்டனையை ரத்துசெய்யும் தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இன்று நாம் வலியுறுத்த வேண்டிய கோரிக்கை.

Friday, September 23, 2011

இவர்கள் இயற்கையின் மக்கள்!

ரீ.சிவக்குமார், படம் : கே.கார்த்திகேயன்

ந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் ரெங்கையா முருகனும் ஹரிசரவணனும். இவர்கள் இருவரும் நாட்டுப்புற ஆய்வு மாணவர்களோ, மானுடவியல் துறைப் பேராசியர்களோ அல்ல. ரெங்கையா முருகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (M.I.D.S) நூலகர். ஹரிசரவணன், ஆங்கில இலக்கியப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பழங்குடிகள் குறித்து இவர்கள் எழுதியுள்ள 'அனுபவங்களின் நிழல்பாதை’ நூல் தொ.பரமசிவன், பக்தவச்சல பாரதி போன்ற ஆய்வாளர்களிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது.

''காட்டுப் பன்றி ஒன்று கிழங்கை அகழ்ந்து தின்ற பிறகு, மிச்சம் இருக்கும் கிழங்கைப் பழங் குடிகள் தின்பதாகப் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவுகள் உள்ளன. அந்த வழக்கம் இன்றும்பழங்குடி களிடம் உள்ளது. நமது ஆதி வாழ்க்கையைத் தேடி அலையும் வேட்கைதான் எங்களைக் காடுகளை நோக்கிச் செலுத்தியது. ஆதிவாசிகள் என்றாலே நிர்வாணமாகத் திரிபவர்கள், நர மாமிசம் உண்பவர் கள், வரைமுறையற்ற பாலுறவுகொள்பவர்கள் என்ற தப்பான கற்பிதங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், உண்மையில் நாகரிகச் சமுதாயம் என்று சொல்லிக்கொள்கிற நம்மைவிட, மேம்பட்ட கலா சாரம் கொண்டவர்கள் ஆதிவாசிகள். தேவைக்கு மேல் எதையும் பயன்படுத்தாத வாழ்க்கை, அடுத்த வர் உடைமைகளை ஆக்கிரமிக்காத பேராண்மை, எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழ்வதுஆகியவை இந்தியா முழுக்கப் பரவிக்கிடக்கும் ஆதிவாசிகளின் பொதுக் குணங்கள்!'' என்று சொல்லும் ஹரிசரவண னின் வார்த்தைகளில் அடர்ந்து செறிந்த காட்டின் வனப்பையும் அருவியின் குளிர்ச்சியையும் உணர முடிகிறது.

''இயற்கை சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. ஆனால், நாகரிகம், அறிவியல், வளர்ச்சி என்ற பெயரால் நம்மால் திணிக்கப்பட்டவை அவர்களின் வாழ்க்கையையும் இயற்கையின் ஆன்மாவையும் குலைத்து இருக்கின்றன. உதாரணத்துக்கு, மத்திய இந்தியாவில் வாழக்கூடிய பழங்குடிகள், ஊட்டியில் வசிக்கும் படுகர்கள், இருளர்கள் ஆகியோரிடம் ரத்த சோகை அதிகமாகக் காணப்படுகிறது.காரணம், அவர்களது மண்ணுக்கு ஏற்ற தானியங்களை விளைவிப்பதற்குப் பதிலாக, பிரிட்டிஷ்காரர்களால் திணிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர் போன்ற காய்களை அவர்கள் விளைவித்துக்கொண்டு இருக்கிறார்கள்!'' என்ற ரெங்கையா முருகனின் வார்த்தைகளில் அவ்வளவு வருத்தம்.

'' 'போட்டிகள் நிறைந்த உலகமயச் சூழல்’ என்ற பெயரில் யாரும் யாரையும் ஏமாற்றலாம், யாரும் எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கலாம் என்கிற தப்பான உணர்வு நம்மிடையே விதைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறானது ஆதிவாசிகளின் வாழ்க்கை. ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பூஞ்சியா பழங் குடி மக்கள், தங்கள் வாழ்க்கையைத் தங்கள் எல்லைக்குள்ளேயே அமைத்துக்கொள்கின்ற னர். இத்தனைக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் என எதுவும் கிடையாது. எல்லாமே மனக் கணக்குதான். ஒரு பூஞ்சியா ஆதிவாசி தங்களது எல்லைப் பகுதியைத் தாண்டி வேறு ஒரு பகுதியில் ஒரு சுள்ளி பொறுக்கி வந்தால்கூட, அந்த பூஞ்சியா இனமே ஒன்று சேர்ந்து அவரின் வீட்டை எரித்துவிடுவார் கள். ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்றால், எல்லோரும் அவருக்கு உதவுவார்கள். விளைச் சல் அவர்களுக்குத் தனித்தனியாக இருந்தா லும் கூட்டு அறுவடைதான். 20 மூட்டை நெல் விளைவித்தவருக்கும் இரண்டு மூட்டை நெல் விளைவித்தவருக்கும் சமமாகத்தான் விளைச்சல் பகிர்ந்து அளிக்கப்படும். குஜராத் தின் டாங்கு பகுதியில் வசித்து வரும் குக்ணா பழங்குடிகளிடம் ஒரு தனியான ராமாயணம் நிலவி வருகிறது. அந்த ராமாயணத்தில் அயோத்தி, இலங்கை எல்லாமே அவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் தான் அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் சீதை சுள்ளி பொறுக்குபவள், விருந்தினர்களுக்குத் தேநீர் தயாரித்து உபசரிப்பவள். ராஜராஜ சோழன் காலம் தொடங்கி இன்றைய முதல்வர் வரை நமக்கு எழுதப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஆதிவாசிகளுக்கோ ஆயிரக் கணக்கான ஆண்டு வரலாறும் வாய்மொழி வரலாறே. அவற்றைக் கதைப் பாடல்களாகப் பாடி பல தலைமுறைகளாகக் கடத்திச் சேகரித்து வருகின்றனர். வாய்மொழி வரலாறு, அழகான கை வினைகள், காடுகளின் ஒவ்வோர் அங்குலத்தையும் அறிந்து வைத்து இருக்கிற அறிவுநுட்பம், விலங்கு களையும் பறவைகளையும் பாது காத்து இயற்கையின் சமநிலை குலையாமல் வாழ்கிற வாழ்க்கை என்று ஒவ்வோர் அம்சத்திலும் அவர்கள் நம்மை விஞ்சியே இருக் கிறார்கள்!'' என்று ஆச்சர்யத் தகவல் சொல்கிறார் ஹரி.

''ஆதிவாசிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என்பதும் தவறான புரிதலே! அந்தமானில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகள் மட்டுமே நிர்வாணமாக இருப்பார்கள். மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிப் பெண்கள் தங்கள் மார்புகளை வெறும் ஆபரணங்களால் மறைப்பதை அங்கு யாரும் வக்கிரமாகப் பார்ப்பது இல்லை. அங்கு பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும் மண விலக்கு செய்வதற்கும் முழு உரிமை உண்டு.முக்கிய மாகப் பழங்குடிகளிடத்தில் குடும்ப வன்முறை இல்லை. அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாயைக்கூட அடிப்பது இல்லை. விபசாரமும் இல்லை, பாலியல் பலாத்காரமும் இல்லை. அவ்வளவு ஏன், ஒரே ஒரு பிச்சைக்காரர்கூடப் பழங்குடிகளிடத்தில் இல்லை. மன நோயாளிகளை அவர்கள் தெய்வமாகக் கருதி, வீட்டுக்கு அழைத்து உணவும் மதுவும் கொடுத்து உபசரிக்கிறார்கள். ஆனால், நாமோ மெள்ள மெள்ள அவர்கள் பராமரிக்கும் காட்டு வளத்தைச் சுரண்டி, அவர்களின் வேர்களைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நட முயற்சிக்கிறோம். பழங்குடிகளைக் கையாள்வதில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குஜராத்தில் வசிக்கும் ரத்வா என்னும் பழங்குடிகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையின ராக அறிவிக்கப்பட்டனர். இன்றும் அங்கு ஏதாவது திருட்டு என்றால், முதலில் போலீஸ் பிடித்துச்செல்வது அவர்களையே. ரத்வாக்களின் சுவரோவியங்களில் போலீஸ் ஜீப் இடம் பெறும் அளவுக்கு மோசமான வன்முறையை நாம் நிகழ்த்தியிருக்கிறோம்!'' என்று ஆவேசமாகிறார் ரெங்கையா முருகன்.

''பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சிக்கு முன்பு போராடியவர்கள் பழங்குடிகளே. கேரளாவில் பழசிராஜாவுக்கு உதவிய வயநாடு பழங்குடிகளான குரிசேரியான், முண்டாக்கள், குந்தா த்ர்வாபோல ஏராளமான பழங்குடி மக்களின் விடுதலைப் போராட்டங்கள் ஆவணப்படுத்தப்படவே இல்லை.

உலகமயமாக்கல், வளர்ச்சி, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையில் இருந்தே அவர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். இன்று சென்னையில் வசிக்கும் வட இந்திய இளைஞர்களில் கணிச மானவர்கள் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மணிப் பூரைச் சேர்ந்த பழங்குடிகள். டெல்லியிலும் மும்பை யிலும் இருப்பதைவிட, அவர்கள் சென்னையில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால், விரிந்து பரந்த மலையைத் தங்கள் வீடாக நினைக்கும் அந்தப் பழங்குடி இளைஞன் இப்போது வசிப்பதோ வெந்து கருகும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழேதான். பிரம்ம புத்ரா நதியிலும் மலையின் தாடியென வளர்ந்து நீண்ட அருவியிலும் நீந்திக் குளித்துக் களித்த மலைமகனுக்கு இன்று குளிக்கக் கிடைப்பதோ முக்கால் பக்கெட் தண்ணீர்!'' - முடிக்கும்போது வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் வலியைப் போல இருவரின் வார்த்தைகளிலும் சோகம் சூழ்ந்து நிற்கிறது!

Saturday, May 29, 2010

லும்பினியில் புதிய கட்டுரைகள்

தமிழீழப் போராட்டமும் தமிழகமும் - அடுத்து...? - அ.மார்க்ஸ்

நாடு கடந்த தமிழீழ அரசு - ஷோபாசக்தி

இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலேப்பா! - அசாதி

ஒரு பெட்டைநாயின் கூச்சல் - லீனாமணிமேகலை

அந்தரத்தில் ’தமிழின உணர்வு’ உருவாகுமா? - புதியபோராளி பாஸ்கர்.

மேலும்...

Monday, May 17, 2010

பானுபாரதியின் (நார்வே) “பிறத்தியாள்” கவிதைத்தொகுப்பு விமர்சனம் - கலந்துரையாடல்


நாள் : 20, மே 2010, வியாழன் மாலை 6 மணி

இடம்: தேவநேயப்பாவாணர் அரங்கு ( LLA)
அண்ணா சாலை, சென்னை - 2.

பங்கேற்போர் :

வ.கீதா
அ.வெண்ணிலா
பிரபஞ்சன்
மதிவண்ணன்
சுகுணா திவாகர்
யாழினி முனுசாமி
கவின் மலர்
அமுதா

அன்புடன் அழைக்கும்
கருப்புப் பிரதிகள்

தொடர்புக்கு : 9444272500


Saturday, May 15, 2010

வினவு- முகிலன் - சந்தனமுல்லை வாதங்களைத் தொடர்ந்து... தடை-தணிக்கை-தண்டனை...

சந்தனமுல்லையின் ‘முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா?’ என்கிற பதிவிற்காக எழுதப்பட்ட பின்னூட்டம். சற்றே நீண்டுவிட்டதால் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.


நன்றி முகிலனுக்கு.

அனேகமாக சுமஜ்லாவின் பர்தா பதிவு குறித்த சர்ச்சையில் நான் மற்றும் வினவு ஆகியோரின் பார்வைகள் மற்ற பதிவர்களிடமிருந்து மாறுபட்டதாக இருந்தமையால் இத்தகையதொரு பரிந்துரைப்பு எழுந்திருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் எனதோ வினவின் நோக்கமோ முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெண்ணடிமையை ஆதரிப்பதில்லை, மாறாக அதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் வெளிப்பட்ட இந்துமனோபாவப் பார்வைகளை விமர்சிப்பதும் கூடுதலாக மதங்களைக் கடந்த ஒரு ஆணாதிக்க எதிர்ப்பை வலியுறுத்துவதும்தான். முஸ்லீம் சமூகத்தில் மட்டும்தான் ஆணாதிக்கம் இருப்பதைப் போன்ற பிரமை, பெரும்பாலான ’இந்துக்களுக்கு’ இருக்கிறது. அதற்கு பர்தா என்கிற வடிவம் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்துமதம் என்பதும் ஆணாதிக்கத்தில் இஸ்லாத்துக்குச் சளைத்ததில்லை என்பதை நிறுவுவதற்காகத்தான் அவ்வளவு பாடு. இங்கேயும் கூட சந்தனமுல்லை எழுதியிருக்கும் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், பத்வா விதித்திருக்கும் தியோபந்த் முஸ்லீம் அமைப்பு, ‘டூ லேட்’தான். ஏனென்றால் இதையெல்லாம் நமது லோககுரு முன்பே சொல்லிவிட்டார். ஜெயேந்திரனோ அல்லது இந்த முஸ்லீம் அமைப்போ அடிப்படையில் ஆண்கள் அமைப்பு என்ற புரிதல் அவசியம் தேவை. சமயங்களில் அங்கு ஆண்கள் இல்லாவிட்டாலும் ஆணாதிக்கக் கருத்தியலை உள்வாங்கிக் கொண்ட பெண்களே இத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவதற்குப் போதுமானவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இந்துத்துவ அமைப்புகளின் மகளிர் அமைப்புகளைச் சொல்லலாம்.

எனவே வினவு மற்றும் எனது விழைவு, இது முஸ்லீம் விரோத வாதங்களாக, இந்துத்துவச் சார்பு விவாதங்களாகப் போய்விடக்கூடாது என்பதே தவிர, முஸ்லீம் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றுவது இல்லை. பெண்கள் வேலைக்குப் போவது என்பதை மத அடிப்படைவாதிகள், குறிப்பாக ஆண்கள் எதிர்ப்பதன் காரணம் மிக வெளிப்படையானது. முதலாவதாக, ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வருவது என்பதே ஆணுக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது. ‘அவள் தன் கண்காணிப்பு எல்லைக்கு வெளியே போய் விட்டாள்’ என்று கருதத் தொடங்குகிறார்கள். ‘வேலைக்குப் போவது’ என்பது வீட்டை விட்டு வெளியே வருவதன் ஒரு வடிவம் மட்டுமே. பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது, குறிப்பாக அரசியலில் பங்கெடுத்துக் கொள்வது என்கிற வடிவத்தை ஆண்கள் முடிந்தவரை தீவிரமாக எதிர்க்கிறார்கள் அல்லது அப்படி வருகிற பெண்ணின் ஒழுக்கம் குறித்து சந்தேகம் கொள்கிறார்கள். ஆக, இங்கே காஞ்சி ஜெயேந்திரன், முஸ்லீம் அமைப்பு மட்டுமில்லாது பொதுவாக அனைத்து சராசரி ஆண்களுக்குமே ஒரே மாதிரியான கருத்தோட்டம்தான். ‘வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்’ - ‘பெண்கள் வேலைக்குப் போவது ஹராம்’ - ‘பொதுவெளிக்கு வருகிற பெண் ஒழுக்கங்கெட்டவள்’ - ஒத்திசைகிற இந்த குரலிசைகளின் விகிதம் கூடக் குறைய இருந்து சுருதி பிசகலாமே தவிர பொதுவாக ஆண்மனம் என்பது வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணைச் சந்தேகிக்கவே செய்கிறது. இதன் அடிப்படையை யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். அவன் பெண்ணை மட்டும் சந்தேகிக்கவில்லை, வீட்டிற்கு அப்பால் அவள் சந்திக்க நேர்கிற தன்னைப் போன்ற ஒரு ஆணின் மீதும் அவனுக்கு நம்பிக்கையில்லை. தான் ஒரு ஆணாயிருப்பதாலேயே, அவன் பெண்ணை நம்ப மறுக்கிறான். இரண்டாவதாக வேலைக்குப் போவதன் மூலம் பெண்ணுக்குக் கிடைக்கும் பொருளாதார ரீதியான தற்சார்பும், இன்னொரு உலகத்தை அறிந்து கொள்கிற வாய்ப்புகளும், தேர்ந்து கொள்கிற சாத்தியங்களும் ஆணுக்குப் பெண்ணின் மீது அச்சத்தை ஏற்படுத்திக் கண்காணிப்பை இறுக்கச் செய்கிறது.

ஆனால் இந்த விவாதத்தில் பின்னூட்டமிட்டிருக்கிற முஸ்லீம் ஆணாகிய ஷர்புதீனின் கருத்து எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. ஒருகாலத்தில் அட்டைப்படத்திலிருக்கிற நடிகை சீதாவின் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதே கண்டிப்புக்கு உரியதாக இருந்தது. ஆனால் இன்று வீட்டோடு ‘மானாட மயிலாட’
பார்க்கிறோம். ஒரு காலத்தில் தமிழ்த்திரையில் கன்னத்தில் முத்தமிடுகிற காட்சி வரும்போது கூட தங்கள் குழந்தைகளைத் திரையரங்கு இருக்கைக்குக் கீழே தலையை அழுத்துகிற பெற்றோர்கள் இருந்தார்கள். இப்போது உதட்டோடு உதடு பொருத்துகிற முத்தக்காட்சிகள் தமிழ்ச்சினிமாக்களில் சாதாரணம். இதை முஸ்லீம்களும் குடும்பத்தோடு பார்க்கத்தான் செய்கிறார்கள். ஆக கலாச்சாரம்-தணிக்கை-கண்டிப்பு மாதிரியான விஷயங்களுக்கு மாறாக சமூகச்சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தை மத அடிப்படைவாதிகளாலோ கலாச்சார அடிப்படைவாதிகளாலோ தடுத்துவிட முடியாது என்பதோடு அந்த சமூகச்சூழல் மாற்றங்கள் அவர்களுக்கும் சில நன்மைகளை விளைவிக்கத்தான் செய்கின்றன. ஆக, சமூகச்சூழல் மாறும்போது தணிக்கை மற்றும் தண்டனைகளை மாற்றிக்கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் சுதந்திரத்தின் எல்லைகளை நீட்டிக்கிறார்கள். ஆனால், பிடியைப் பத்திரமாக இறுக்கிக்கொள்கிறார்கள். இது ஒன்றும் புரிவதற்கு அவ்வளவு கஷ்டமானது அல்ல. சபரிமலைக்கு மாலை போடுவதற்கு மதுவையும் புகையையும் தவிர்ப்பது என்பது ஒரு காலத்தில் அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் மதுவை விலக்குவதைப் போல புகையை விலக்குவது அவ்வளவு எளிதானதில்லை என்பதால், ‘சிகரெட் மட்டும் பிடித்துக்கொள்ளலாம்’ என்று ‘விதி’ தளர்த்தப்பட்டது. (சில இடங்களில் தனிக்குவளையில் மதுவும் அருந்தலாம் என்கிற ‘சிறப்பு மது தரிசனச் சலுகையும்’ உண்டு.) எப்படியிருந்தபோதும் கண்காணிப்பு-சுதந்திரம், தணிக்கை-மீறல், தண்டனை-எதிர்ப்பு என்கிற எதிர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. சுதந்திர விருப்பம், மீறல் மற்றும் எதிர்ப்பின் வெளி அதிகமாகிக் கொண்டே போகும்போது கண்காணிப்பு-தண்டனை-தணிக்கையை வலியுறுத்துகிற அடிப்படைவாதிகள் சட்டகங்களையும் வலைகளையும் தூக்கிக்கொண்டு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்று அடிப்படையில் முஸ்லீம் சமூகம் குறித்து பொதுவெளியில் நடக்கிற பெரும்பாலான விவாதங்கள் முஸ்லீம் சமூகங்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் அல்லது அரைகுறைப் புரிதல்களுடன் தான் நடைபெறுகின்றன. பர்தா, பத்வா, தாலிபான்கள் என்கிற தாங்கள் அறிந்த சில விஷயங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக ‘முஸ்லீம் பெண்ணடிமைத்தனம்’ குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிற பெரும்பாலானோரைத்தான் காண முடிகிறது. சந்தனமுல்லை பதிவில் நாஸியா என்னும் முஸ்லீம் பெண் சொல்வதைப் போல இந்த ‘பத்வா’க்களைப் பெரும்பாலான முஸ்லீம்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. திண்டுக்கல்லில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தோடு இணைந்து பல கூட்டங்களை நடத்தியபோது, அந்த அமைப்பின் நகரச்செயலாளராக இருந்த முஸ்லீம் இளைஞர் ஒரு தகவலைச் சொன்னார், ‘இஸ்லாத்தில் இசை என்பதே ஹராம்’ என்றார். உண்மையில் இது எனக்கு விளங்கவில்லை. அப்படியானால் நாகூர் அனிபா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இறுதிக்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மைக்கேல் ஜாக்சன் வரை என்ன செய்யலாம்? எனக்குப் பாங்கோசையே அற்புதமான இசையாக இருக்கும். சமயங்களில் அரபுச்சேனல்களில் அரபுமொழி கேட்டுக்கொண்டிருப்பேன். அது செய்தியா, தொழுகையா, என்ன நிகழ்ச்சி என்று தெரியாவிட்டாலும் அரபுமொழி உச்சரிக்கப்படும் விதமே ஒரு இசையாய் இருக்கும். அப்படியானால் இசையை ‘ஹராம்’ என்று சொன்ன அந்த முஸ்லீம் நண்பரின் கருத்தை என்ன சொல்வது?

இதுமாதிரியான விஷயங்களுக்கு முதலில் இஸ்லாமியக் கலாச்சாரத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். அவர்களுடன் ஊடாடி உரையாடத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம் சமூகம் ஒரு மூடுண்ட, இறுக்கமான சமூகம் என்கிற கருத்து நம் அனைவருக்குமே இருக்கிறது. (இதில் முற்போக்காளர்களும் அடக்கம்). இது நம்மைப் பல தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்கிறது என்று கருதுகிறேன்.

எப்படி இருந்தபோதிலும் நான் இதுவரை சந்தனமுல்லையின் பதிவுகளைப் படித்ததில்லை. ஆனால் நண்பர் பா.ராஜாராம், ‘சந்தனமுல்லை பதிவில் என்னைக் குறித்தும் ஒரு குறிப்பு பின்னூட்டம் இருப்பதாகத்’ தெரிவித்ததை ஒட்டி படிக்க நேர்ந்தது. நல்ல குறிப்பிடத்தக்க நடை. இறுதியாக இந்த விஷயத்தையும் நண்பர்கள் முடிந்தால் யோசிக்க வேண்டுகிறேன். முஸ்லீம் சமூகம் இறுக்கமான பிற்போக்குச் சமூகம், முஸ்லீம் பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்கிற பொதுக்கருத்து நம் எல்லோரிடமும் இருக்கிறது. அது முற்றுமுழுக்க பொய் அல்லது தவறான கருத்து என்றும் சொல்லி விட முடியாது. ஆனால் ஷகீலா, மும்தாஜ், குஷ்பு என்று தமிழ்ச்சினிமாவின் கவர்ச்சிப்பிம்பங்களாக இட்டு நிரப்பப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லீம் பெண்களே.

தோழமையுடன்

சுகுணாதிவாகர்.

Wednesday, May 12, 2010

நிறப்பிரிகையின் தொடர்ச்சியாய் லும்பினி

தொண்ணூறுகளில் வெளிவந்த ‘நிறப்பிரிகை’ தமிழில் மாற்றுகள், சோசலிசக் கட்டுமானம், மனித உரிமைகள், பெரியாரியம், பின்நவீனம், தீவிரப்பெண்ணியம், தலித்தியம் ஆகியவை குறித்த உரையாடல்களைத் தொடங்கி வைத்தது. அதுகாறும் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் இடையிலிருந்த ‘உத்தப்புரம் சுவர்’ ஒன்றை உடைத்துத் தகர்த்தது. ஏராளமான ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் நிறப்பிரிகையின் மூலம் ஊக்கம் பெற்று எழுதத் தொடங்கினர். அத்தகைய நிறப்பிரிகையின் தொடர்ச்சியாக ‘லும்பினி’ என்னும் இணையதளத்தை நண்பர்கள் ஆரம்பித்திருக்கின்றனர். சரியாகவோ, தவறாகவோ, பல விமர்சனங்களுக்கு இடையில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக தத்துவம் மற்றும் அரசியல் தளங்களில் இயங்கி வருகிற அ.மார்க்ஸ், முதன்முதலாக இணையத்திற்காக எழுதத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. (அவர் இணையத்தில் எழுதவில்லை என்பதையும் அது ஏன் என்பதையும் அவரே ‘லும்பினி’யில் விளக்கியிருக்கிறார்.) நேபாளத்தில் இந்தியாவின் விரிவாதிக்க நோக்கங்கள், மாவோயிஸ்ட்கள் சந்திக்கும் சவால்கள், மாவோயிஸ்ட்களுக்குப் பின்னால் சீனா இருப்பதான குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து ‘எகானமிக்கல் அண்ட் பொலிடிகல் வீக்லி’யின் ஆசிரியர் கவுதம் நவ்லக்காவுடன் அ.மார்க்ஸ் நிகழ்த்தியுள்ள நேர்காணலும் ரணஜித் குகாவின் எழுத்துகளைத் தழுவி, தெலங்கானா போராட்டம் குறித்து ஒரு விளிம்புநிலை ஆய்வுநோக்குக் கட்டுரை ஒன்றையும் அ.மா எழுதியிருக்கிறார். ‘இருப்பு’ என்னும் சொல்லுக்குப் பதிலாக நாகார்ஜுனன் அறிமுகப்படுத்தும் ‘உள்ளுமை’ என்னும் சொல் எவ்வாறு பொருத்தமற்றதாயும் போதாமையுடனும் இருக்கிறது என்பதை விவாதிக்கிறது ராஜன்குறையின் கட்டுரை. ‘நான் ஏன் திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறேன்?’ என்னும் ஜெயமோகனின் கட்டுரைக்கு மறுப்பாக அமைந்துள்ள பொதியவெற்பனின் கட்டுரைத் தொடர் தமிழவன் மற்றும் ஜெயமோகனுக்கு இருக்கும் ‘திராவிட இயக்க வெறுப்பு நோய்’ குறித்த மருத்துவ அறிக்கையாக அமைந்திருப்பது புது உத்தி. கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்களின் கண்டன ஒன்றுகூடல் நிகழ்வுப்பதிவும் அக்கூட்டத்தில் நடந்த கலாட்டா குறித்த விமர்சனக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் இனப்படுகொலை முடிந்து ஓராண்டு நெருங்கும் வேளையில் சிங்களப்பேரினவாதத்தின் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது ஷோபாசக்தி மற்றும் சேனனின் கட்டுரைகள். இந்திய வணிகத்திலிருந்து தலித்துகள் விலகியிருக்கிற/விலக்கி வைக்கப்பட்டிருக்கிற அவலம் குறித்து ஆராய்கிறது யவனிகாசிறீராமின் கட்டுரை. செல்மாபிரியதர்சனின் படைப்புலகம் குறித்த ரசூலின் கட்டுரை, ரமேஷ்பிரேதன், த.அகிலன். கொற்றவை, லீனாமணிமேகலை, கு.உமாதேவி , இசை, தர்மினி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. 80களில் கொங்கு வட்டாரத்தில் புழக்கத்திலிருந்த ‘பத்து ரூபாய்க்கு இரண்டு தீக்குச்சியை எரிய வைத்து பெண்ணின் நிர்வாணத்தை ரசிப்பது’ என்னும் பழக்கம் குறித்து நுட்பமாக விவரிக்கிறது ஸ்நேகிதனின் சிறுகதை. இளங்கோகிருஷ்ணனின் ‘நீலப்பூ’ சிறுகதை ஒரு குறியீட்டுக்கதை. எல்லாவற்றுக்கும் மேலாக ‘நிறப்பிரிகை’ இதழ்கள் இணையத்தில் ஏற்றப்பட்டிருப்பது கோட்பாட்டு விவாதங்களைத் தொடர்ந்து செல்ல உதவும் என்று நம்புகிறேன். ஒரு கனமான காலாண்டிதழைப் போலவே ‘லும்பினி’ அமைந்திருப்பது உவப்பு நல்குகிறது. வெறுமனே எதிர்வினைகள், பரபரப்புக் கட்டுரைகள் வெளியிடும் இணையதளங்களிலிருந்து விலகி, காத்திரமான சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது, விவாதிப்பது ஆகியவற்றை ‘லும்பினி’ தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர்கள் ஷோபாசக்தி, வசுமித்ர மற்றும் சி.மீனா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இணையதள முகவரி www.lumpini.in

Thursday, April 1, 2010

அங்காடித்தெருவை முன்வைத்து சில அரசியல் உரையாடல்கள்


பொதுவாக என்கவுண்டர் சினிமா ஸ்பெஷலிஸ்ட் கௌதம் வாசுதேவ்மேனனின் சினிமாக்கள் எனக்கு உவப்பானவையல்ல. ஆனால் அவரது ‘விண்ணைத்தாண்டி வருவாயா‘ எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ரசிக்கக்கூடிய படமாக இருந்தது. கிட்டத்தட்ட இதே கதையமைப்பைக் கொண்ட இன்னொரு படம் ‘முன்தினம் பார்த்தேனே’. ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடந்து போகும் காதல் அனுபவங்களை தமிழ்ச்சினிமாவின் வழக்கமான கதை சொல்லல் முறையிலிருந்து மாறுபட்டுச் சொன்ன படம். குறிப்பாக ஐ.டி வாழ்க்கை, பெண் சினேகிதிகள், டிஸ்கோத்தே, பப் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு இளைஞன், முதல் காதல் தோல்விக்குப் பிறகு இரண்டாவது பெண்ணைக் காதலிக்கிறான், ஆனால் அந்த இரண்டாவது காதலிக்கு ஒரு முன்னாள் காதல் இருக்கக்கூடாது என்று நினைக்கிற ஒரு பழமைவாத மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தது ‘முன்தினம் பார்த்தேனே‘.

ஆனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களும் சரி, ‘முன்தினம் பார்த்தேனே’ காதலர்களும் சரி புழுதி நிறைந்த தெருக்களில் ஒரு காட்சியில் கூட கால்வைக்காதவர்கள். காபிஷாப்பில் ஆரம்பித்து காபிஷாப்பில் முடிகிற காதல் அவர்களது காதல். ஆனால் கொளுத்துவேலை செய்பவர்களோடு நடைபாதையில் படுக்க, போலீஸின் தொந்தரவிலிருந்து தப்பிக்கும் மார்க்கமாக காலில் மண்ணைப் பூசி, நடைபாதை விபத்துக்களில் சிக்கிக்கொள்பவர்கள் ‘அங்காடித்தெரு‘ காதலர்கள். விண்ணைத்தாண்டி வருவாயாவில் த்ரிஷாவுடனான காதல், வலி, பிரிவு, ஊடல், இனம்புரியாத மயக்கம், குழப்பம் என தலா ஒவ்வொரு உணர்வுகளுக்கும் ஒவ்வொரு பாடல் ஃபாரினில் சென்று நடனமாடுவார் சிம்பு. ‘முன்தினம் பார்த்தேனே‘ கதாநாயகனும் அஃதே. ஆனால் ‘அங்காடித்தெரு‘ காதலர்களின் ஒரே ஒரு டூயட் ‘உன் பேரைச் சொல்லும்போதே‘ கூட மூடிக்கிடக்கும் ரங்கநாதன் தெரு, செந்தில்முருகன் ஸ்டோர்ஸ் கதவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. இந்தவகையில் அங்காடித்தெரு எனக்கு முக்கியமான படமாகத் தெரிகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒழிந்து விட்டதாய்க் கருதப்பபடும் கொத்தடிமை முறையின் நவீன முகம், பண்டிகை நாட்களில் குவியும் மக்கள் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி நசுங்கும் கடைப் பணியாட்களின் சின்னச் சின்ன உணர்வுகள், அத்தனை நெரிசலுக்கு இடையிலும் கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றிக்கொள்ளும் ரசவாதம் தெரிந்த எளிய மனிதர்கள் என்று வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் ‘அங்காடித்தெரு’ எந்தளவுக்கு முக்கியமான படம் என்பதை அழகியல்பூர்வமாக பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

சின்னச்சின்ன பாத்திரங்களின் வழி விரியும் நுட்பமான உணர்வுகள் குறித்தும் காட்சிப்படுத்தப்படும் வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை குறித்தும் கூட பதிவுகள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. இன்னமும் சிலநாளைக்கேனும் தன் பாதிப்பின் தடயத்தை அழியவிடாமல் பார்த்துக்கொள்வதில் ‘அங்காடித்தெரு‘ என்னும் கலைப்படைப்பு வெற்றிபெற்றிருக்கிறது. நவ்வாப்பழம் விற்பவரிடம் உலகசதியையும் கேரள உணவுவிடுதி தொழிலாளர்களிடம் அலட்சியமனோபாவத்தையும் கண்டுபிடித்து தரிசித்து அம்பலப்படுத்திய ஜெயமோகன், இந்த படத்திற்கு உரையாடல் எழுதாமலிருந்தால், ‘சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களின் வாடிக்கையாளர்கள் மீது அக்கறையற்ற அலட்சியம்’ குறித்து ஒரு கட்டுரை நமக்குக் கிடைத்திருக்கும். இடைவேளைகளில் விற்கப்படும் பாப்கார்ன் போல போல்பாட் கொலைகள், மாவோவின் தவறுகள், ஸ்டாலினின் சதிகள் குறித்த விக்கிபீடியா இணைப்புகளுடன் கூடிய கே.ஆர்.அதியமான் மற்றும் நோ போன்றோரின் பின்னூட்டங்களும்கூட கிடைத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்காடித்தெருவின் உரையாடல் ஜெயமோகனுடையது. படத்தின் பெரும்பகுதி பலமாக ஜெயமோகனின் உரையாடல்கள் அமைகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். நீண்டநாளைக்குப் பிறகு திரைப்பட வசனங்களுக்காகப் பார்வையாளரின் கைதட்டல்களைப் பெற்ற படமாக அங்காடித்தெரு அமைந்ததை இரண்டுமுறை பார்த்தபோதும் கவனிக்க முடிந்தது. ‘அங்காடித்தெரு’ குறித்த பல உணர்வுபூர்வமான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த படம் எனக்கு எழுப்பிய இரண்டு அரசியல் கேள்விகளின் பக்கம் நகரலாம் என்று தோன்றுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்களாய்க் கருதப்பட்டவர்கள் எனில் காணத்தகாதாவர்களாய்க் கருதப்பட்டவர்கள் நாடார்கள். இன்னமும் ஆதிக்கசாதி முதியவர்களிடம் பேசினால், ‘சாணாப்பய‘ என்னும் அருவெறுக்கத்தக்க சாதியத்திமிர் எச்சங்கள் வார்த்தைகளாய் வந்துவிழுவதை நீங்கள் அவதானிக்கலாம். ஆனால் தற்போதைய நாடார்கள் நடைமுறையில் சாதி இழிவைக் கடந்துவந்து விட்டார்கள். சாதி இழிவை ஒழிக்க இட ஒதுக்கீடு, மதமாற்றம், நிலங்களைக் கைப்பற்றல் என பல்வேறு சாத்தியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடார்கள் இவை எதையும் கைக்கொள்ளாமலே வணிகத்தின் மூலமும் காமராஜர் என்கிற ஒரு அரசியல் அடையாளத்தின் மூலமுமே இதைக் கடந்து வந்திருக்கிறார்கள். இத்தகைய எளியவழி குறித்து நண்பர் ஒருவர் விவாதித்துக்கொண்டிருந்தார், ‘தலித்துகளும் வணிகத்தைக் கைப்பற்ற வேண்டும்’ என்பது அவரது கருத்து. ஆனால் நாடார்கள் எல்லாம் வணிகர்களாகவும் முதலாளிகளாகவும் மாறிவிட்டார்கள் என்கிற பிரமையை இந்த படம் உடைக்கிறது என்பது முக்கியமானது.

திருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட காடுகளில் வாழ்க்கையைத் தொலைத்துள்ள நாடார்கள் குறித்து அதிகம் தமிழ்ப்பொதுவெளியில் பேசப்பட்டதில்லை. நாடார்கள் என்றால் ஆதித்தனார், காமராஜர், சரத்குமார் என்றே பிம்பங்கள் நீள்கின்றன. இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து. ‘‘இங்கே வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் இல்ல, எச்சிக்கைய உதறினா ஆயிரம் காக்கா’’ என்கிறார் அண்ணாச்சி. ஆனால் உண்மையில் அண்ணாச்சியின் நோக்கம் சுயசாதியைச் சுரண்டலுக்குப் பயன்படுத்திக்கொள்வதே. இந்த படத்தின் காட்சிப்படுத்தலின் பிரதான குறைகளாக இரண்டைச் சொல்லலாம். தொழிலாளர்கள் மீதான வன்முறை மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்னும் வாதம், செந்தில்முருகன் ஸ்டோர்ஸை விட்டு அனுப்பப்பட்டால் சென்னையில் எங்கும் வேலை கிடைக்காது என்னும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பம். ஆனால் இரண்டாவது விஷயத்தில் நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, இத்தகைய கடைகளில் வேலைக்குச் சேர்வதற்கு முன்னால் சான்றிதழ்கள் வாங்கி வைக்கப்படும் என்பது. இது படத்தின் ஒரே ஒரு காட்சியில் போகிறபோக்கில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இது கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டிய விஷயம். கொத்தடிமைகளாய் நடத்தப்படும் திருநெல்வேலி நாடார் இளைஞர்களின் மீதான வன்முறை, பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்கள், சான்றிதழ் பறிப்புகள், தற்கொலைகள் குறித்து நாடார்சங்கங்கள் போராட முன்வராது என்பதுதானே அண்ணாச்சிகளின் தொடர்ச்சியான ஒடுக்குமுறை தைரியத்திற்கான காரணம்.

இரண்டாவதாக முதலீட்டியத்தின் உண்மையான முகம் எவ்வளவு கோரமானது என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நிலப்பிரபுத்துவத்தை விட முதலீட்டியத்தை முற்போக்கானதாகவும் ஆசுவாசம் அளிக்கக் கூடியதாகவும் பார்த்தது மார்க்சியம். குறிப்பாக பாட்டாளி வர்க்கம் என்னும் சுயேச்சையான வர்க்கத்தை உருவாக்கியதன் மூலம் முதலீட்டியம் தன் அழிவைத் தானே விரைவுபடுத்தியது என்பது மார்க்சியத்தின் கருத்து. நிலப்பிரபுத்துவத்தின் கொத்தடிமை நுகத்தடியிலிருந்து முதலீட்டிய சமூகத்தில் உழைக்கும் மக்கள் சில எளிய உரிமைகளைப் பெற்றனர். சங்கம் அமைக்கும் உரிமை, வரையறுக்கப்பட்ட எட்டுமணிநேர வேலைநேரம், போனஸ் போன்றவைகளை அடைவதற்கு பாட்டாளி வர்க்கம் சிந்திய ரத்தம் கொஞ்ச, நஞ்சமல்ல. சிகாகோ வீதிகளில் உழைக்கும் தொழிலாளர்கள் சிந்திய ரத்தம்தான் மேதினம் என்னும் சிவப்பு அடையாளமாய்ப் பூத்தது.

ஆனால் நவீன முதலீட்டியச் சமூகத்தில் இத்தகைய உரிமைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். ரங்கநாதன் தெரு மட்டுமில்லாமல் திருப்பூர் மற்றும் சிவகாசி தொழிற்சாலைகளும் கூட நிலப்பிரபுத்துவக் கொத்தடிமைத்தனத்தையே முதலீட்டியமாக மாற்றும் வித்தை தெரிந்தவை. இன்றைய உலகமயமாக்கல் சூழல் தொழிலாளர்களைப் பணிப்பாதுகாப்பு அற்றவர்களாகவும் அமைப்பற்றவர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களின் மேம்படுத்தப்பட்ட நவீன வடிவங்களாகத்தான் ஐ.டி ஊழியர்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களைப் போலவே இவர்களுக்கும் ஏ.சியும் அக்செஸ் கார்டும், அடையாள அட்டைகளும் உண்டு. அதேபோலவே அவர்களைப் போலவே இலக்கற்ற வேலைநேரமும் உண்டு. தொழிற்சங்கங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மந்திரச் சொல்லடுக்கு உதிரியாக்கப்பட்ட தொழிலாளர்களையே உற்பத்தி செய்கிறது. முதலீட்டியம் இப்போது நவீன தொழில்நுட்பங்களுடனான நிலப்பிரப்புத்துவத்துக்குத் திரும்பி விட்டதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இது வெறுமனே சரவணா ஸ்டோர்ஸிலும் ஐ.டி நிறுவனங்களிலும் மட்டும் உள்ள நிலைமை அல்ல, அரசின் மனோபாவமே இப்படியாக மாறியிருக்கிறது என்பதன் அடையாளம்தான் டாஸ்மாக் ஊழியர்கள். ‘அரசு வேலை’ என்கிற ஆர்வத்தில் வேலையில் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களின் இன்றைய நிலை என்ன? இலக்கற்ற வேலை நேரம், ஷிப்ட் இல்லை, தொழிற்சங்கங்களை அங்கீகரித்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சு வார்த்தை நடத்துவதில்லை. காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரையிலான 12 மணிநேர வேலைநேரத்தை அரசே அங்கீகரிக்கிறது, வழக்கமான அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இல்லை. ஆனால் டாஸ்மாக் வருமானத்தின் மூலம் அரசு ஈட்டும் வருவாய் அபரிதமானது.

‘அங்காடித்தெரு’ என்னும் சினிமா வேண்டுமானால் ரங்கநாதன் தெரு ஊழியர்களைக் குறித்ததாய் இருக்கலாம். ஆனால் முதலீட்டியத்தின் கொடூரக் கரங்கள் அங்காடித்தெருக்களைத் தாண்டியும் நுழையும் வலிமை பெற்றவை.

Tuesday, March 30, 2010

19:8:18 நீதியின் தலைகீழ் விகிதங்கள்


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய இயலாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. 1991, ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட நளினிக்கு இன்னும் இரண்டு மாதங்களைக் கடந்தால் 19 ஆண்டுகள் சிறைவாழ்க்கை முழுமையாகிறது. ‘14 ஆண்டுகள் ஆயுள்தண்டனை’ என்கிற நடைமுறை கூட நளினியின் விஷயத்தில் காலாவதியாகி விட்டது. நளினியை விடுதலை செய்வது குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அறிவுரைக்குழு, ‘நளினியை விடுதலை செய்ய பரிந்துரைக்கும்” என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ‘அதிக நாட்கள் அவர் சிறையில் இருக்கத் தேவையில்லை’ என்று உயர்நீதிமன்றத்தில் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் இப்போது ஆலோசனைக் குழுவின் பரிந்துரையோ அதற்கு மாறாய் உள்ளது. ராஜீவ் கொலை வழக்கிற்குப் பின்னால் கிட்டத்தட்ட அய்ந்து பிரதமர்களை இந்தியா சந்தித்து விட்டது. காங்கிரஸ் ஒருமுறை உடைந்து விட்டது. காங்கிரசின் கூட்டணிகளும் மாறிவிட்டன. ராஜிவ் கொலைக்குக் காரணமானதாகச் சொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. 20 ஆண்டுகாலத்திற்கும் மேலாய் விளங்கி வந்த தமிழர்களின் அரச நிர்வாகம் அழிக்கப்பட்டு ‘இலங்கை அரசின் இறையாண்மை’ நிலைநாட்டப்பட்டு விட்டது. என்றாலும் 19 ஆண்டுகளாய் சிறையில் குடும்பத்தினரை விட்டு வாடிக்கொண்டிருக்கும் நளினிக்கு விடுதலை கிடைப்பதாய் இல்லை. சிறையில் உள்ள கைதிகளை தண்டனைக்காலத்திற்கு முன்பே விடுதலை செய்யும் அதிகாரம், மாநில அரசுகளுக்கு உண்டு. அதற்கான பல உதாரணங்களைச் சொல்லலா. கடந்துபோன அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி கைதிகளைத் தமிழக அரசு விடுவித்தது அண்மைய சான்று. ஆனால் அந்த கருணை நளினிக்கு வழங்கப்படவில்லை. மேற்கண்ட உரிமையைச் சுட்டிக்காட்டி ‘’அரசியல் அமைப்புச் சட்டம் 161 பிரிவின்படி தமிழக அரசு நளினியை விடுதலை செய்ய பரிந்துரைக்கலாம்” என்று வாதிட்டிருக்கிறார் நளினிதரப்பு வழக்கறிஞர். ஆனால் அரசுத்தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் நளினி - பிரியங்கா சந்திப்புக்குப் பிறகுதான் இந்திய அரசு இலங்கையின் இனப்படுகொலையை நடத்துவதில் தீவிரமாய் முன்நின்றது என்ற யூகமும் தமிழ்த்தேசியர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே அவர்களும் இனி நளினி விடுதலையில் ஆர்வம் காட்டுவார்களா என்று தெரியவில்லை. நளினி விடுதலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு, சட்டம் ஒழுங்கிற்குப் பாதிப்பு ஏற்படும் நளினி விடுதலையை மறுத்து, பல காரணங்களை அடுக்கியுள்ளது. அவற்றில் ஒன்று, “ நளினி விடுதலை ஆனால் நளினியின் தாயார் வீட்டில்தான் தங்கப்போகிறார் என்று தெரியவருகிறது. நளினியின் தாய் வசிக்கும் ராயப்பேட்டை வீட்டைச் சுற்றிலும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளும் அமெரிக்க துணைத்தூதரகமும் அமைந்துள்ளன” என்பதும் உண்டு. இனி நளினியின் தாய் அந்தமான் தீவுகள், அபுகிரைப், குவாண்டனோமாவில் தன் குடியிருப்பை மாற்றினால் நளினி விடுதலை ஆகும் வாய்ப்பு உண்டு போலும்.
2002 பிப்ரவரியில் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லீம்கள் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகளை ஒட்டி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழு நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தியுள்ளது. இதுவும் கூட தீஸ்தா சேதல்வாத் போன்ற மனித உரிமைப் போராளிகளின் தீவிர போராட்டங்களுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகியது. ஆனால் ‘குஜராத் மாநிலத்தில் இந்த விசாரணை நடத்தக்கூடாது’ என்ற அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒன்பதுமணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த மோடி, ‘’அரசியல் சட்டத்திற்கு மேலானவர்கள் யாருமில்லை. எனக்கு எதிராக குற்றம் சாட்டியவர்களின் முகத்தில் கரி பூசவே விசாரணைக்கு வந்தேன்” என்று பஞ்ச் டயலாக் அடித்துள்ளார். இந்த ஆணவத்தின் காரணம் நாம் அறியாததா?
ராஜீவ் கொலை நடந்த ஓராண்டிற்குள் 1992, டிசம்பர் 6 அன்று இந்துத்துவவாதிகளால் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட லிபரன் கமிஷன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங் ஆகியோருக்கு இருந்த பங்கை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசு காட்டிய ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கைக்கூட லிபரன் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது பாபர் மசூதி இடிப்பு குறித்து ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கிலும் அத்வானியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அஞ்சுகுப்தா, “பாபர்மசூதி இடிப்பு அத்வானி, உமாபாரதி போன்றோரின் ஆணையின் பேரிலேயே நடந்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார். நாளை ரேபரேலி தீர்ப்பின் அடிப்படையிலும் அத்வானி மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான உறுதிகள் எதுவுமில்லை. 18 ஆண்டுகால விசாரணைகளே அத்வானி மீது ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதபோது எட்டாண்டுகாலத்திற்குப் பிறகான விசாரணைகள் தன்னை எதுவும் செய்யாது என்பதுதான் மோடியின் நம்பிக்கைக்குக் காரணம். பாபர் மசூதி இடிப்பு வழக்கின் குற்றவாளி அத்வானிதான் கடந்த தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் என்றால் குஜராத் இனப்படுகொலை குற்றவாளி மோடிதான் பா.ஜ.கவின் அடுத்த பிரதமர் வேட்பாளர். நளினி விடுதலையை எதிர்க்கும் சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள்தான் மோடிக்கு ‘வளர்ச்சிக்கான முதல்வர்’ என்று புகழாரம் சூட்டுகின்றனர். மத அடிப்படைவாதப் பாசிசமும் உலகமயமாக்கலும் இணையும் புள்ளியாக மோடி இருக்கிறார். அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங், மோடி மீது முகம் திருப்பாத நீதிதான் நளினியின் மீது தன் கோரமுகத்தைக் காட்டுகிறது.
இத்தகைய நீதி பாரபட்சம் என்பது நீதித்துறை மற்றும் அதிகார அமைப்புகளிடம் மட்டுமில்லை. அதிகாரத்தை எதிர்த்து இயங்குபவர்களிடம் உண்டு என்பது வேதனை உண்மை. இலங்கை அரசின் இனப்படுகொலைகளை எதிர்த்துத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிற, காங்கிரஸ் மய்ய அரசை விமர்சித்து வருகிற வைகோதான், இந்திராகாந்தி கொலைக்குப் பின்னான சீக்கியர்களின் மீதான காங்கிரஸ் குண்டர்களின் வன்முறையை முன்வைத்து மோடியின் குஜராத் இனப்படுகொலைகளைப் பாராளுமன்றத்தில் நியாயப்படுத்திப் பேசினார் என்பதை நாம் மறந்து விடுவதிற்கில்லை. ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்காய் ‘மரணதண்டனை ஒழிப்பு இயக்கம்’ கட்டுபவர்கள் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்வழக்கு போடப்பட்ட அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் குறித்து வாய்திறப்பதில்லை. முஸ்லீம் இளைஞர்களுக்காய்க் குரல் கொடுக்கும் முஸ்லீம் இயக்கங்கள் நளினியின் விடுதலை குறித்து அக்கறை காட்டுவதில்லை. இலங்கை இறுதிப்போரின் போது தமிழர்களின் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகளையும் போருக்குப் பின் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் துயரங்களையும் சமீபத்தில் இலங்கை இனவாத அரசால் தமிழர்களின் பெருமிதச் சின்னமான திலீபன் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதையும் குறித்து வட இந்தியாவில் தலித் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், பழங்குடி அமைப்புகள், முஸ்லீம் அமைப்புகள் பேசுவதில்லை. இலங்கை முள்வேலி முகாம்கள் குறித்து பேசும் தமிழர்களாகிய நாம் இன்னமும் வீடு திரும்ப இயலாத நிலையில் முகாம்களில் வாழும் இரண்டரைலட்சம் குஜராத் முஸ்லீம்கள் குறித்தோ சட்டீஸ்கர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஆதிவாசிகள் குறித்தோ பேசுவதுமில்லை, அதுகுறித்த தகவல்களும் நமக்குத் தெரியாது. எல்லா ஒடுக்குமுறை அரசாங்கங்களும் மேலும் மேலும் மக்களை அடைக்க முகாம்களைத் திறந்துகொண்டே உள்ளன. தேசமே முகாம்கள் ஆகின்றன. ஆனால் நாம் பிரிந்து நிற்கிறோம். நீதி பிளவுபட்டுள்ளது.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்னும் சொல்வழக்கு இந்தியாவில் உண்டு. ஆனால் கீழ்வெண்மணிப் படுகொலைகள், திண்ணியத்தில் மலம் ஊட்டப்பட்ட வழக்கு, பாபர் மசூதி இடிப்பு, தாமிரபரணிப் படுகொலைகள், பெஸ்ட் பேக்கரி வழக்கு, போபால் விஷவாயு கொடூரம் என இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குமான நீதி என்பதே தாமதிக்கப்பட்டதாயும் மறுக்கப்பட்டதாயும்தான் உள்ளது என்பது கொடும்நிஜம்.

Tuesday, March 23, 2010

பெரியாரும் லீனாமணிமேகலையும்

வெறுமனே அரசியல் தளங்களில் மட்டுமில்லாது கலாச்சாரத் தளங்களில் பெரியார் உண்டுபண்ணிய அதிர்வுகள் முக்கியமானவை. இன்றும் நாம் பேசத் தயங்குகிற, பொதுவெளியில் பதிவு செய்ய முடியாதென கருதப்படுகிற கருத்துக்களை 1927லிருந்து ஒருவர் இந்தியாவில் பேசி வந்திருக்கிறார் என்றால் அது பெரியார் ஒருவரேதான். எல்லா விஷயங்களிலும் முற்போக்காக இருக்க விரும்புபவர்கள் கூட கலாச்சார அம்சங்களில் சற்று பின்வாங்க நேர்கிற துயரத்தையும் காண்கிறோம். ’இளைய தலைமுறை கெட்டு விடக்கூடாது, ஆபாசக்கவிதைகள்’ எழுதக் கூடாது ’என்று சோ கால்ட் பெரியாரிஸ்ட்கள் இந்துத்துவ டப்பிங் பேசுகிற நகைச்சுவைக்காட்சிகளையும் கண்டுகளிக்கிறோம். ஒரு உண்மையான பெரியாரிஸ்ட் இந்நிலையில் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதற்கான அடையாளமாக பெரியாரியலை வாழ்வியல் நடைமுறையாய் மாற்ற எத்தனிக்கும் தோழர். அதிஅசுரனின் பதிவை இங்கு பதிகிறேன். ‘திருமணத்துக்கு முன்னான பாலுறவு தவறில்லை’ என்று சொன்ன குஷ்புவுக்கு எதிராகக் கலாச்சாரப் பாசிஸ்ட்கள் போராட்டங்கள் நடத்தியும் வழக்கு பதிந்தும் அழிச்சாட்டியம் பண்ணியதை நாமறிவோம். இப்போது குஷ்புவின் கருத்தை ஆதரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கொண்டாடும் விதமாகவும் இந்த பதிவை அர்த்தம் கொள்ளலாம்.

“அது காம இச்சை” “இது மிருக இச்சை” என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகள்



தோழர் லீனா மணிமேகலை எழுதிய ஒரு கவிதை ஆபாச இலக்கியம் என்று இந்துமக்கள் கட்சியால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதை எதிர்த்து லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அழிவு வேலைக்காரன் என்ற வலைப்பூவில் பதிவு எழுதப்பட்டுள்ளது. வினவு தளத்திலும் லீனா மணிமேகலை பற்றி விமர்சித்து எழுதப்பட்டுள்ளது. தோழர் தமிழச்சியும் ஜீனியர் விகடன் இதழில் லீனா மணிமேகலையை எதிர்த்து விமர்சனம் செய்துள்ளார்.

செங்கடல் படப்பிடிப்புச் சம்பவங்கள், அஜீதன் என்பவரது குற்றச்சாட்டுக்கள் அதற்கு லீனா மணிமேகலையின் பதில்கள், சோபா சக்தியின் பழிநாணுவர் என்ற பதிவு, அதற்கு பதிலடியாக வண்டுமுருகனும் காக்டெயில் தேதைகள் என்ற பதிவு என மிகப்பெரிய விவாதங்கள் நடக்கின்றன. இவை எதைப் பற்றியும் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் எனக்குத் தெரியாத மற்றும் புரியாத நிலையில் அந்த விவாதங்களுக்குள் போகவிரும்பவில்லை.

பெரியாரின் பெண்ணுரிமை பற்றி தோழர் லீனா மணிமேகலையும் தமிழச்சியும் பேசியுள்ளனர். யார் பேசுவது பெரியாரின் பெண்ணுரிமை என்பதை முடிவுசெய்ய பெண்ணுரிமைகுறித்த பெரியாரின் கருத்துக்கள் சிலவற்றை மட்டும் இங்கு பதிவிட்டு உள்ளேன். முடிவு உங்களிடம். இவை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் நூலில் இருப்பவைதான். ஒருசில குடி அரசு இதழ்களில் உள்ளவை. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் தடைசெய்யப்பட்டுள்ள பெரியார் தி.க வின் குடி அரசு இதழ்கள் தொகுப்பு வெளிவந்தால் இது போன்ற பல விவாதங்களுக்கு முடிவு கிடைக்கும். குடி அரசு தடை நீங்கினால் அதன்பிறகு குடி அரசில் உள்ள பெண்ணுரிமை தொடர்பான இதுவரை வெளிவராத கட்டுரைகளை தோழர் பெரியாரில் பதிவிடுவேன்.

- அதி அசுரன்


மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தி யுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்.
அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற் கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந் தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவ கோடிகளின் திருப்திக் கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும்.

குடி அரசு - 17.08.1930


மக்களின் அன்பும் காதலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்ன விதமாக இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில் காதல் என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்பந்தத் திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமே யாகும். அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும் அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடைய தாயும் இருக்க வேண்டுமென்றும் அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக் கொள்ளு கின்ற மக்கள் அன்பு ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்; காதல் ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முன் வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம். ஆனால் அநுபவத்தில் உள்ள சில சவுகரிய அசவுகரியங்களை உத்தேசித்து அன்பும் காதலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க வேண்டியதாக ஏற்படலாம் என்பதை நாம் மறுக்க வரவில்லை. அன்றியும் ஒப்பந்தங்களினால் கட்டுப்பட வேண்டியதாகவும் காதல் பெருக்கால் தானாகவே கட்டுப்பட்டு விட்ட தாகவும் போனாலும் போகலாம். அம்மாதிரி நிலைமைகளில் இம்மாதிரிக் கேள்விக்கே இடமில்லை. ஆதலால் அப்படிப்பட்ட காரியங்களை அவர வர்கள் இஷ்டத்திற்கே விட்டு விட வேண்டியது அவசியமாகும்.

குடி அரசு - 12.10.1930



சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திர மும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக் குச் சிறிதும் தேவையில்லாததேயாகும்.. ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்தமற்றதே யாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாக யிருக்கலாம். ஆன போதிலுங்கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப் பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப் படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப் படா மையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும்.

மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலி ருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவை யும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூல மாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென் பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எது வென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சி களையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும். மற்றும் விபசாரம் என்பது ஒருவனு டைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப் பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத் திற்கு விரோதமல்ல

பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்துக்கும் பாதக மேற்பட்ட தாகவும் அதுவும் பிரயோகத்தில் சிறிதும் பாரபக்ஷம் உயர்வு தாழ்வு தத்துவம் கொண்ட தல்லாததாகவும் இருக்கவேண்டு மென்பதோடு எல்லாவற்றையும் விட அவை முக்கியமாக இயற்கையோடியைந்ததாகவு மிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகமுண்டு பண்ணாத தாகவுமிருக்க வேண்டும். நியாயமான என்றதினாலேயே எது நியாயம்? என்பதற்காக “தர்மசாஸ்திரங் களை”த் தேட வேண்டும் என்பது கருத்தல்ல. ( மற்றெப்படி கண்டு பிடிப்ப தென்றால் ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லப் படுவதானது பிறத்தி யானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால் அவன் முதலில் சொன்னவன் ஒப்புக்கொள்ளுகின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதேயாகும். அதாவது இருவருக்கும் ஒன்று போன்றது) அன்றியும் அறிவுக்கும் சாத்தியத்திற்கும், அநுபவத்திற்கும் ஏற்ற தாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிக்கெல்லாம் இல்லாமல் வெறும் நிர்ப்பந்தத்திற்கு நாணய மற்றதும் அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒவ்வாததானது மான விஷயங்களுக்காக வலுத்தவர்கள் தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றின படிக் கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்து கொண்டு போவதானது எவ்விதப் பயனையும் தராததோடு மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத் தனத்தையும், அறிவுத் தடையையும் தான் உண்டாக்கும்.

மனிதனின் ஜீவசுபாவம் என்னவென்றால் உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய் பசி, நித்திரை புணர்ச்சி மூன்றும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம். இந்திரியங்களின் காரணமாய்ப் பஞ்சேந்திரியங் களும் அதாவது சரீரம், வாய், கண், மூக்கு, காது ஆகியவைகளின் செயல்களையும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.

ஆகவே பொது உணர்ச்சியும் இந்திரிய செயலும் மனிதனுக்கு ஆசையை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆசையின் காரணமாய் எதையும் ஆசைப்படுவதும் அதுவும் அனேகமாய் அளவுக்கடங்காமல் மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும் சுபாவமாகவே இருக்கின்றதைப் பார்க்கின் றோம். ஆகவே உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையும் மனித னால் சாமான்யத்தில் கட்டுப்படுத்தக் கூடியதல்ல. யாராலாவது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றால் அப்படிப்பட்டவரைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. நாம் சொல்லுவதும் அவருக் குச் சம்பந்தப்பட்டதல்ல. ( அவர்கள் பல லட்சத்திற்கு ஒருவர் இருப்பார்களோ என்னமோ) அந்தப்படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும் இந்திரிய செயலையும் ஆசையை யும் கட்டுப்படுத்தும் படியானதாகக் கொள்கைகளை ஒழுக்கங் களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவாணி யாகுமா? செலாவாணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டாமா வென்று தான் கேட்கின்றோம்.

குடி அரசு - 26.10.1930

ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்க வேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும்போது நமது புருஷர் கள் இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம் முறையை இஷ்டப்ப டுபவர்கள் கையாளுவதில் எவ்விதத்தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.

புருஷன் பெண்சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண் சாதி என்பவர்களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத்தில் நமது அபிப்பிராய மாகும்.

ஆகவே, எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவ குண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமூகவிடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

குடி அரசு - 13.09.1931


காதல்

அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர வேறு ஒரு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெ னில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அநாவசியமாய் ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல் தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென் பதற்காகவேயாகும்.

ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவை கள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன் படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு நேசம் ஆசை காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு “நடப்பு வேறு” என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக் குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத் திற்காக ஏற்படுவதாகும். அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும். “அக்காதலுக்கு இணையானது உலகத் தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,

“அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்; அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒருகாலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும் பிறகு வேறு ஒருவர் இடமும் அந்தக் காதல் ஏற்படாது.

“அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விப சாரம் என்று தான் சொல்லவேண்டுமே யொழிய அது ஒருக்காலும் காதலா காது” என்றும்,

“ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது” என்று சொல்லப்படு கின்றது.

மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படு கின்றது.

ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனு போகமும் மக்களின் அனுபவஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாத வர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றோ மறைக்கின்ற வர்கள் என்றேதான் கருதவேண்டி இருக்கின்றது.

அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாரா வதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்பந்திப் பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும் அனுபவத்தை யும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவதுபோலவும், தனக்குப்பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும் அனாவசிய மாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லப்படுவது கூட இவ்வளவு பெருமை யையும் அணி யையும் அலங்காரத்தையும் கொடுத்து பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகின்றது? என்பதை யோசித்துப்பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறுபொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதின் வேறு விதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.

அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத்தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றபடி தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் பெண் சேர்க்கை-கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்க ளையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.

ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அருத்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

நிற்க இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானா கவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத் தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்த்தாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும், உருவத் தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமேதான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

இந்தப் படியும்கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண் ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் - வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கி றானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப் படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை - திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும் காதலர்கள் என்பவர்களின் மனோ பாவத்தை கவனித்தால் விளங்கா மல் போகாது.

அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போகபோக்கியத்திற்கு பயன்படுவதைக்கொண்டோ, அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவை யான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டே தான் யாரும் எந்தப் பெண் ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ளமுடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்க லாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத் துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் அல்லது வேஷ­மாத்திரத்தில் காட்டப் பட்டதாக இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லி விட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறு ஜென்மத் திலும்” இவனை விட்டுப் பிரியக் கூடாது என்று கருதிவிடுகிறாள். 4-நாள் பொருத்தபின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும், சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாகவேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும். இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்த தற்கு அல்லது தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்டகாரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன் படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக் காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.

நிற்க உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகிய வுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளா மல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தி யுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவ னிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யா கவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப் படும்படி விட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.

காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், லக்ஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லக்ஷியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங் களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிர்ப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாத தையும் அது பயன்படாததையும் காணலாம்.

ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துரவிகளாய் விட்டார்களானால் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோத மில்லையானால் ஒருவர் ஞானியாகி துரவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோத மாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்கா மல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படு வதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அதுபோலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பெலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையே யல்லவா?.

உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களை யெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனி டமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சௌகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்கொண்டே வந்தால் இது ஒத்தக் காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கி விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண் பெண் களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டு மென்று கருதி, எப்படி பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அனேகர் தங்களை பக்திவான்கள் என்று பிறர் சொல்லவேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும், பட்டை நாமம் போடுவதும் , சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவசிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்தி மான்களாகக் காட்டிக்கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேஷம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும் உண்மையான காதல் களானால் இப்படி இருப்பார்களே என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அதுபோலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தை யெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.

ஆகவே ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃரிணைப்பொருள்கள் இடத் திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக் கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவை யில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கை யும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும், மாற கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யாரி டமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.

ஆனால் அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டு வதற்காகவே இதை எழுதுகின்றோம்.

இதுவும் ஏன் எழுதவேண்டி யதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் “இது காதலல்ல” “அது காதலுக்கு விரோதம்” “அது காம இச்சை” “இது மிருக இச்சை” என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தை களை ஒருவித பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.

தோழர் பெரியார் - குடி அரசு - 18.01.1931